தருமபுரி: காட்டில் வாழ்ந்தோர் வீடுகளை இடித்த வனத்துறை, நில உரிமை கோரும் மக்கள் - பிபிசி தமிழ் கள ஆய்வு

- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் அருகே, வனப்பகுதியில் வசித்த குடும்பத்தினரை வெளியேற்ற இரு வீடுகளை வனத்துறையினர் அடித்து நொறுக்கிய சம்பவம் பெரும் சர்ச்சையைக் கிளப்பியுள்ளது. இப்படிச் செய்வதற்கு வனத்துறைக்கு உரிமை உள்ளதா? மக்கள் வெளியேற மறுப்பது ஏன்?
தருமபுரி மாவட்டம் ஒகேனக்கல் பகுதியில், வனத்துறை மற்றும் காவல்துறையினர் இணைந்து சமீபத்தில், இரண்டு வீடுகளின் ஓடுகளை உடைத்தனர். அப்போது, அந்த வீட்டின் பெண்கள் தற்கொலை செய்ய முயன்றபோது அவர்களைத் தடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி, தமிழ்நாடு அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்தச் சம்பவம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கம், "2021 முதலே காப்புக் காட்டில் வசிப்போருக்கு காலி செய்யுமாறு நோட்டீஸ் வழங்கியதாகவும் அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வனத்துறை அதிகாரம் உள்ளது எனவும்" தெரிவித்தார்.
‘இது தி.மு.க அரசின் அதிகாரத்தினுடைய கோரதாண்டவம்’ என, எதிர்கட்சித் தலைவரும் அ.தி.மு.க பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி, பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை உள்படப் பல அரசியல் தலைவர்கள் கண்டனத்தைப் பதிவு செய்திருந்தனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், "மூன்று தலைமுறைகளுக்கு மேலாக காட்டிற்குள் வசிப்பவர்களுக்கு அங்கேயே வாழ்வதற்கான உரிமையைப் பெற்றுத் தர தமிழ்நாடு அரசு முழு முயற்சி எடுக்கும்," என்றார்.
உண்மையில் அங்கு என்ன நடந்தது, வீடுகள் இடிக்கப்பட்டது ஏன் என்பதை அறிய பிபிசி தமிழ் கள ஆய்வு மேற்கொண்டது.
நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
காவிரி ஆற்றங்கரையில் 200 குடும்பங்கள்

தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே காவிரி ஆற்றின் இருபுறமும் வனப்பகுதியும், சில இடங்களில் காப்புக்காடும் உள்ளது. காவிரி ஆற்றுக்கு ஒரு பக்கம் கர்நாடக மாநில கட்டுப்பாட்டிலும், மறுபக்கம் தமிழ்நாடு வனத்துறை கட்டுப்பாட்டிலும் உள்ளது.
இதில், தமிழ்நாடு வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில், பென்னாகரம் அடுத்த ஒகேனக்கல் தொடங்கி, எடத்திட்டு, வேப்பமரத்து கொம்பு, ஏமனூர், சிங்காபுரம், மணல் திட்டு உள்ளிட்ட கிராமங்களில், 200க்கும் மேற்பட்ட மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த மக்கள் வசிக்கின்றனர்.
இவர்களில் ஒகேனக்கல் பகுதியில் வசித்த இரண்டு குடும்பங்களை, காட்டினுள் ஆக்கிரமிப்பு செய்து வசிப்பதாகக் கூறிய வனத்துறையினர், வீடுகளை இடித்துள்ளனர்.
‘வீட்டையும், பொருட்களையும் உடைத்துவிட்டார்கள்’

இடிக்கப்பட்ட வீடுகளில் ஒன்றில் வசிப்பவரான 70 வயதான லட்சுமி பிபிசி தமிழிடம் பேசியபோது, "திருமணமானது முதல் பல ஆண்டுகளாக இங்குதான் வசித்து வருவதாக" கூறினார்.
"ஆற்று நீர் குறையும்போது ஆற்றுப்படுகையில் மிளகாய், காய்கறி சாகுபடி செய்வோம். வனத்துறையினர் எங்களை இரண்டு ஆண்டுகளாக விவசாயம் செய்யவும் விடுவதில்லை. எனது மகன் ஒகேனக்கலில் பரிசல் ஓட்டியும், மீன் பிடித்தும்தான் குடும்பத்தை நடத்துகிறார். இதுதான் எங்கள் வாழ்வாதாரம்,” என்றார்.
தங்கள் வீட்டைக் காலி செய்யுமாறு வனத்துறையினர் நோட்டீஸ் வழங்கி வந்ததாகவும் வீட்டைக் காலி செய்ய 10 நாட்கள் அவகாசம் வழங்குமாறு கேட்டிருந்த நிலையில், அதற்குள் வீட்டை அடித்து நொறுக்கியதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
சம்பவத்தன்று நடந்ததை விளக்கிய லட்சுமி, “அன்று வீட்டில் அனைவரும் வேலைக்குச் சென்றிருந்தபோது நானும், வீட்டருகே இரு பெண்களும் மட்டுமே இருந்தோம். 15க்கும் மேற்பட்ட பெண் போலீசார், வனத்துறை என 50க்கும் மேற்பட்டோர் எங்கள் வீட்டை இடித்தனர். சிறிது சிறிதாகச் சம்பாதித்து சேர்த்த சோலார் விளக்குகள், பாத்திரங்கள் என அனைத்து பொருட்களையும் உடைத்துச் சேதப்படுத்தி விட்டனர்,’’ என்கிறார்.
‘‘நான் எவ்வளவு தடுத்தும் அநியாயமாக வீட்டையும், பொருட்களையும் உடைத்துவிட்டனர். நான் என் மகனுக்கு செல்போனில் அழைத்து தகவல் சொல்ல முயன்றபோது, என் செல்போனை பறித்துவிட்டனர். தகவல்கூடச் சொல்ல முடியவில்லை,’’ என வருத்தத்துடன் தெரிவித்தார்.
’70 ஆண்டுகளாக இங்கு வசிக்கிறோம் எப்படிக் காலி செய்வது?’

மேட்டூர் அணை கட்டப்பட்டதில் இருந்தே, இப்பகுதியில் வசித்து வருவதாகத் தெரிவிக்கிறார், வீடு சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட மீன்பிடித் தொழிலாளி கிருஷ்ணன்.
நம்மிடம் பேசிய கிருஷ்ணன், ‘‘தாத்தா காலத்தில் இருந்தே இங்கு விவசாயம் செய்து மீன் பிடித்து வாழ்ந்து வருகிறோம். 1934இல் மேட்டூர் அணை கட்டப்பட்டது. அணை கட்டுமானம் தொடங்கிய போதிருந்தே இங்கு வந்துவிட்டோம். காவிரி ஆற்றுப்படுகையில் சுமார் 90 ஆண்டுகளாகப் பல தலைமுறையாக வசித்து வருகிறோம். எனக்கு சாதிச் சான்று, ஆதார் முதற்கொண்டு பல ஆவணங்கள் இங்குதான் உள்ளது,’’ என்கிறார் அவர்.
காட்டிற்குப் பாதிப்பு, யானைகளுக்கு பாதிப்பு எனக் கூறி தங்களைக் காலி செய்யுமாறு வனத்துறை நோட்டீஸ் வழங்குவதாகக் கூறும் கிருஷ்ணன், "வீரப்பன் காலத்தில்கூட, நாங்கள் ஒரு சிறு குச்சி வெட்டியதாகவோ, வேட்டையாடிதாகவோ எங்கள் மீது ஒரு வழக்கும் இல்லை,’’ எனவும் தெரிவிக்கிறார்.
‘மழையில் நனைந்தே இரவைக் கழித்தோம்’

அன்று வீடு இடிக்கப்பட்டபோது எதிர்கொண்ட பாதிப்புகள் குறித்து விளக்கிய கிருஷ்ணன், "வேலை முடிந்து திரும்பியபோதுதான் வீடு இடிக்கப்பட்ட தகவல் கிடைத்தது. நான் வந்து பார்த்தபோது வீட்டில் ஓடுகள் உடைக்கப்பட்டு, சுவர்கள் சேதமடைந்து சிதைந்த குருவிக்கூடு போல் இருந்தது," என்றார்.
தனது தாயும் அருகிலிருந்த வேறொரு பெண்ணும் வீடுகள் இடிக்கப்பட்டபோது சில பொருட்களை மீட்டுப் பாதுகாத்து வைத்திருந்ததாகவும் கூறுகிறார் அவர்.
‘‘நான் வீட்டை அடைந்து சில நிமிடங்களில் மழை வந்தது. அன்று மழையில் என்ன செய்வதெனத் தெரியாமல் பொருட்களைக் காக்க முடியாமல், வயதான தாய் மற்றும் குழந்தைகளுடன் மழையில் நனைந்தபடியே இரவைக் கழித்தோம். அடுத்த நாள் தார்பாலின் மூலம் கொட்டகை அமைத்தோம், பல பொருட்கள் சேதமடைந்துவிட்டன,’’ எனத் தெரிவித்தார் கிருஷ்ணன்.
‘வாழ்வாதாரமே இந்தப் பகுதியில்தான் உள்ளது’

மீன் பிடிப்பது, சீசன் காலகட்டங்களில் ஒகேனக்கலில் பரிசல் ஓட்டுவது ஆகியவற்றைத் தவிர தனக்கு வேறு வேலை தெரியாது எனவும் கவலை தெரிவிக்கிறார் கிருஷ்ணன்.
‘‘விவசாயம் மட்டுமே எங்களுக்குத் தெரியும். இங்கிருந்து 30 கி.மீ. தொலைவில் பென்னாகரம் பகுதியில் வீட்டு மனை பட்டா வழங்குவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவிக்கிறது. எங்கள் வாழ்வாதாரமே இங்கிருக்கும் நிலையில் அங்கு சென்று என்ன செய்வது?"
"எங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க, எங்களை இங்கேயே வாழவிட வேண்டும்,’’ என்ற கோரிக்கையையும் அவர் முன்வைக்கிறார்.
’மூன்று தலைமுறைகளுக்கு மேலாக உள்ளோம்’

அப்பகுதியில் பாதிப்பைப் பதிவு செய்த நாம், பரிசல் மூலம் காவிரி ஆற்றில் சில கிலோமீட்டர் பயணித்து, இரண்டு கிராமங்களுக்குச் சென்றோம்.
வேப்பமரத்துக் கொம்பு கிராமத்திற்கு நாம் வந்ததை அறிந்து, எங்களைக் காண வந்த 80 வயதான ராஜம்மாள், பார்த்ததும் கண் கலங்கி அழத் துவங்கினார்.
தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டு பேசிய ராஜம்மாள், ‘‘என் மாமியார்-மாமனார் காலத்தில் இருந்தே இங்குதான் வசிக்கிறோம். எங்களால் யாருக்கும் எந்த கலாட்டாவும் இல்லை. மிளகாய், காய்கறி சாகுபடி செய்வோம். ஆடு, மாடு மேய்த்து, மீன் பிடித்து குழந்தைகளை வளர்க்கிறோம், அவ்வளவுதான் எங்களுக்குத் தெரிந்தது,’’ எனக் கூறி தங்கள் வீடுகளைக் காண்பித்து அழுதார்.
மீண்டும் பேசத் துவங்கிய ராஜம்மாள், ‘‘இந்த இரண்டு ஆண்டுகளாகத்தான் வீட்டைக் காலி செய்யச் சொல்கிறார்கள். எங்களை விவசாயம் செய்யவும் வனத்துறை அனுமதிப்பது இல்லை,’’ என்றார்.
‘எங்கள் வாழ்வாதாரத்தை பறிக்கிறார்கள்’

ராஜம்மாள் வீட்டின் அருகிலுள்ள செல்வி, தமிழ்நாடு அரசு தங்களைக் காக்காமல் வாழ்வாதாரத்தைப் பறிப்பதாகக் குற்றம் சாட்டுகிறார்.
நம்மிடம் பேசிய செல்வி, ‘‘இங்கு ஆண்களைப் போலவே பெண்களும் மீன் பிடிப்பார்கள். இரு பெண்களாக இணைந்து வலைபோட்டு மீன் பிடித்து விற்போம். இதுதான் எங்கள் வாழ்வாதாரம், மீன் பிடிப்பதைத் தவிர வேறு எதுவுமே தெரியாது."
"தமிழ்நாடு அரசு எங்கள் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் வகையில் இங்கிருந்து வெளியேறச் சொல்கிறார்கள். பென்னாகரத்தில் வீடு தருவதாகச் சொல்கிறார்கள். அங்கிருந்து தினமும் வந்து மீன் பிடித்துச் செல்வது நடக்காத விஷயம். எங்கள் வாழ்வாதாரத்தை அரசு காக்கவில்லை, தற்போது வனத்துறை எங்கள் வீடுகளையும் இடிக்கிறார்கள். நாங்கள் இங்கிருந்து நகரமாட்டோம்,’’ என உறுதியாகத் தெரிவிக்கிறார் அவர்.
வனத்தில் குடியிருக்க பழங்குடி அல்லாதோருக்கு உரிமை உள்ளதா?

இந்த மக்களுக்கு பட்டா பெற்றுத் தரும் பணியில் ஈடுபட்டுள்ள, சென்னை உயர்நீதிமன்ற வழக்குரைஞர் சுப.தென்பாண்டியனிடம் பிபிசி தமிழுக்காகப் பேசினோம்.
‘‘வனத்தில் பழங்குடியினர் அல்லாத சமூகத்தினர் வசித்து வந்தாலும் அவர்களுக்கு அங்கேயே வசிப்பதற்கான உரிமை உள்ளது. வன உரிமைச் சட்டம் 2006இல் இதை தெளிவாக விளக்கியுள்ளனர்," என்று விளக்குகிறார் சுப.தென்பாண்டியன்.
"டிசம்பர் 13, 2005க்கு முன்பு, மூன்று தலைமுறையாக யார் காட்டில் வசித்து, காட்டையோ அல்லது காட்டு நிலத்தையோ வாழ்வாதாரமாகக் கொண்டவர்கள், காட்டில் வசிக்க உரிமை பெற்றவர்கள் என வன உரிமைச் சட்டம் கூறுகிறது."
அதோடு, இந்தச் சட்டத்தின் கீழ் ஒரு தலைமுறை என்பது 25 ஆண்டுகள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும் அந்த அடிப்படையில், தருமபுரி காவிரி ஆற்றுப் படுகையில் உள்ள இந்த மக்கள் அங்கு வாழும் உரிமையைப் பெற்றவர்கள் எனவும் கூறுகிறார் தென்பாண்டியன்.
இந்த உரிமையைப் பெற்றுத்தர சட்டப் போராட்டம் நடத்தி வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
‘சட்டப் போராட்டம் நடத்த உள்ளோம்’
பிபிசி தமிழிடம் பேசிய, ஐந்தாவது அட்டவணைக்கான ஆதிவாசிகள் அமைப்பின் மாநில அமைப்பாளர் ரெங்கநாதன், ‘‘மூன்று தலைமுறைகளாக உள்ளோம் என்பதை நிரூபித்தால்தான் தற்போது வசிக்கும் பகுதியிலேயே தொடர்ந்து வசிக்கும் உரிமையைப் பெற முடியும்," என்று தெரிவித்தார்.
ஆனால், இதை நிரூபிக்க ஆவணங்களைத் திரட்டி சமர்பிப்பதுதான் பெரிய சவாலாக உள்ளது எனவும் ஆங்கிலேய ஆட்சியில் மதராஸ் மாகாண வரைபடங்களில், காவிரி ஆற்றுப் படுகையில் இந்த கிராமங்கள் இருந்த ஆவணங்களைப் பெற்றுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.
"இதை வைத்தும், ஒவ்வொரு கிராமத்தில் உள்ள மூத்த குடிமக்களின் ஒப்புதல் கடிதத்தை வைத்தும் உரிமையைப் பெறப் போராடி வருகிறோம்,’’ என்கிறார் ரெங்கநாதன்.
வீட்டை இடித்த வனத்துறையினர் மீது போலீஸில் வழக்குப் பதிவு செய்ய புகார் கொடுத்துள்ளதாகவும் சட்டப்படி போராடி உரிமையைப் பெறுவோம் என்றும் கூறுகிறார் ரெங்கநாதன்.
வனத்துறையின் விளக்கம் என்ன?

வீடுகள் இடிக்கப்பட்டது ஏன் என்பது குறித்து, தருமபுரி மாவட்ட வன அலுவலர் ராஜாங்கத்திடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டது.
பிபிசி தமிழிடம் பேசிய ராஜாங்கம், ‘‘2021ஆம் ஆண்டில் இருந்தே, காவிரி ஆற்றங்கரையோரம் காப்புக்காட்டில் வசிப்பவர்களுக்கு வீடுகளைக் காலி செய்யக் கோரி நோட்டீஸ் வழங்கி வருகிறோம். சட்டப்படி பார்த்தால் அவர்கள் வனத்தை ஆக்கிரமித்துள்ளனர். அந்த ஆக்கிரமிப்புகளை அகற்ற வனத்துறைக்கு அதிகாரம் உள்ளது," என்றார்.
பல முறை நோட்டீஸ் வழங்கியும் அவர்கள் வீடுகளைக் காலி செய்யாமல் விட்டதால்தான் இரண்டு வீடுகளைக் காலி செய்துள்ளதாகவும், இதற்கு முன்பும் இதுபோன்ற நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறுகிறார் ராஜாங்கம்.
"மூன்று தலைமுறையாக இருப்பவர்களுக்கு காட்டில் வசிக்க உரிமை உள்ளபோது எதற்காக காலி செய்ய வேண்டும்?" என்ற கேள்வி எழுப்பப்படுவது குறித்துக் கேட்டபோது, ‘‘மூன்று தலைமுறைக்கு மேல் காட்டில் வசிக்கும் பழங்குடி அல்லாதோர் அங்கேயே வசிக்க உரிமை உள்ளது. ஆனால், அவர்கள் தாங்கள் 75 ஆண்டுகளாக வசிக்கிறோம் என்பதற்கான ஆதாரங்களை உள்ளாட்சி அமைப்பில் காண்பித்தே பட்டா வாங்கிக் கொள்ளலாம். பட்டா வாங்கியோரை நாங்கள் வெளியேற்ற மாட்டோம். ஆனால், பெரும்பாலானோரிடம் ஆதாரங்கள் இல்லை,’’ என்றார் அவர்.
வீடுகள் இடிக்கப்பட்டது மற்றும் பெண் தாக்கியதாக எழுந்த குற்றச்சாட்டு குறித்து, வனத்துறை செயலாளர் சுப்ரியா சாஹுவிடம் பிபிசி தமிழ் விளக்கம் கேட்டபோது, ‘‘இந்த விவகாரம் அரசியல் ரீதியிலும் பெரிய சர்சையைக் கிளப்பியுள்ளதால், இதுகுறித்துத் தன்னால் விளக்கம் அளிக்க முடியாது. சட்டப்படிதான் வனத்துறை செயல்பட்டுள்ளது,’’ என்று தெரிவித்தார்.
வனத்துறை அமைச்சர் சொல்வது என்ன?
இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு வனத்துறை அமைச்சர் மதிவேந்தன், ‘‘மூன்று தலைமுறைக்கு மேலாக அங்கு வசிப்பவர்களுக்கு அங்கேயே வாழ்வதற்கான உரிமையைப் பெற்றுத்தர தமிழ்நாடு அரசு முழு முயற்சியை மேற்கொள்ளும். அப்படி அங்கேயே வாழும் உரிமை பெற முடியாதவர்களுக்கு, வாழ்வாதாரம் பாதிக்காத வகையில் அருகிலேயே வீடுகள் கட்டித்தர ஏற்பாடு செய்யப்படும்,’’ என்றார்.
மேலும் தொடர்ந்த அமைச்சர் மதிவேந்தன், ‘‘மக்கள் உரிமையைக் காக்க முயற்சிகளை மேற்கொள்கிறோம். அதேநேரம், அவர்களில் யாராவது வனத்தில் உரிய அனுமதியின்றிக் குடியேறியிருந்தால் அது சட்டப்படி தவறுதான், அதையும் நாம் கருத்தில் கொள்ளவேண்டும். மக்களின் பிரச்னைக்குத் தீர்வுகாண நான் அந்தக் கிராமங்களுக்கு நேரில் ஆய்வு செய்ய உள்ளேன்,’’ எனவும் தெரிவித்தார்.
காட்டுக்குள் நில உரிமை பெறும் தகுதி யாருக்கெல்லாம் உண்டு?
இந்திய வன உரிமைச்சட்டம் 2006, பழங்குடியினர் அல்லாத சமூகங்கள் எவ்வாறு வனவாசிகளாகக் கருதப்படுவார்கள், எவ்வாறு வனத்தில் வாழும் உரிமையைப் பெறுவார்கள் என்பதைக் குறிப்பிட்டுள்ளது. அந்தச் சட்டத்தின்கீழ்,
- பழங்குடிச் சமூகங்கள் இயல்பாகவே காடுகளுக்குள் வாழும் உரிமையைப் பெறுவார்கள்
- அவர்கள் போக "மற்ற பாரம்பரிய வனவாசிகள்" என்ற தலைப்பின் கீழ், காட்டிற்குள்ளான நில உரிமைகள் அங்கீகாரத்தை விளக்கப்பட்டுள்ளது.
- பழங்குடியினர் அல்லாத எந்தவொரு சமூகத்தைச் சார்ந்த நபரோ அல்லது கூட்டாக வாழும் ஒரு சமூகமோ, டிசம்பர் 13, 2005க்கு முன்பாக காட்டில் 3 தலைமுறைகளாகக் குடியிருந்து, காட்டையோ அல்லது காட்டை ஒட்டிய பகுதியையோ வாழ்வாதாரமாகக் கொண்டவர்களாக இருந்தால், அவர்கள் காட்டிற்குள் நில உரிமை பெறத் தகுதியுடையவர்கள். மேலும் அவர்கள் வனவாசிகளாக கருதப்படுவார்கள்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












