தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும் என இந்தியா கூட்டணி வலியுறுத்துவது ஏன்?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சுபாஷ் சந்திர போஸ்
- பதவி, பிபிசி தமிழ்
இந்திய மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கையின்போது தபால் வாக்குகளை முதலில் எண்ணி முடித்து முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையத்தில் திமுக உள்ளிட்ட இந்தியா கூட்டணிக் கட்சிகள் கடிதம் அளித்துள்ளன.
சென்னை மாநகராட்சி ஆணையர் தபால் வாக்குகள் இறுதியில் எண்ணப்படும் என்று பத்திரிகை செய்தி கொடுத்ததாகவும், அப்படி நடத்தாமல் தபால் வாக்குகளை முதலில் எண்ண வேண்டும் எனவும் குறிப்பிட்டு திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தல் ஆணையத்துக்கு கடிதம் ஒன்றை வழங்கியுள்ளது.
ஆனால், அப்படி எந்தவிதமான அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி தேர்தல் அதிகாரி ஒருவர் பிபிசி தமிழிடம் தெரிவித்துள்ளார்.
தற்போதைய தேர்தல் விதிகளின்படி முதலில் தபால் வாக்குகள் எண்ணிக்கை தொடங்கும். அதிலிருந்து 30 நிமிடங்கள் கழித்து மின்னனு வாக்குப்பதிவு இயந்திரத்தில்(EVM) பதிவாகியுள்ள வாக்குகள் எண்ணப்படும். இவை அனைத்தும் எண்ணப்பட்டு இறுதிச்சுற்று எட்டப்படும்போது, இரு வாக்குகளின் எண்ணிக்கையும் ஒன்று சேர்க்கப்பட்டு முழுமையான முடிவுகள் என்ன என்பது வெளியிடப்படும்.
ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய 2024 மக்களவைத் தேர்தல் ஜூன் 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக நடைபெற்று முடிவடைந்துள்ளது. ஜூன் 4ஆம் தேதி காலை 8 மணி முதல் நாடு முழுவதும் பதிவாகியுள்ள வாக்குகளை எண்ணி, தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும்.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
வாக்கு எண்ணிக்கை நடைமுறையில் திமுகவுக்கு என்ன பிரச்னை?
தற்போது இந்தத் தபால் வாக்குகள் எண்ணும் நடைமுறையில்தான் குளறுபடி இருப்பதாக திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் புகார் தெரிவித்துள்ளன.
இதுகுறித்து திமுகவின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, தேர்தல் ஆணையத்திற்குக் கடிதம் ஒன்றை வழங்கியுள்ளார்.
அதில், “சென்னை மாநகராட்சி ஆணையர் தபால் வாக்குகளை இறுதியில் எண்ண வழிகாட்டுதல்கள் வழங்கியுள்ளதாக” தெரிவித்துள்ளது திமுக.
மேலும், “தேர்தல் நடத்தை விதிகள் 1961 மற்றும் வாக்கு எண்ணிக்கைக்கான தேர்தல் ஆணைய கையேட்டின்படி, தபால் வாக்குகளை முதலில் எண்ணவும், அதற்கு 30 நிமிடம் கழித்தே இவிஎம் வாக்குகளை எண்ணத் தொடங்கவும், தபால் வாக்கு எண்ணிக்கையை வெளியிடுவதற்கு முன்பாக, இவிஎம் வாக்கு எண்ணிக்கையை வெளியிடாமல் இருப்பதை உறுதி செய்யவும்” அனைத்து தேர்தல் அதிகாரிகளுக்கும் தேர்தல் ஆணையம் வழிகாட்டுதல் வழங்க வேண்டும் என்று திமுக கோரிக்கை வைத்துள்ளது.
சமீபத்தில் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும், “தபால் வாக்குகளை இறுதியில் எண்ணும் செயலுக்குப் பின்னால் பாஜக உள்ளதாகவும், இதனால் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை மாற்ற சதி நடப்பதாகவும்” தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
தபால் வாக்குகள் முக்கியத்துவம் பெறுவது ஏன்?
தபால் வாக்கு என்பது ஒரு தொகுதியின் அரசு ஊழியர்கள், அத்தியாவசிய பணியாளர்கள், ராணுவம் உள்ளிட்ட நாட்டின் சேவைப் பிரிவுகளில் பணியாற்றுபவர்கள், இந்தியா சார்பில் வெளிநாட்டில் பணிபுரிபவர்கள் மற்றும் அவர்கள் குடும்பத்தினர் உள்ளிட்டவர்கள் நேரடியாக வாக்களிக்காமல் தபால் மூலமாக வாக்கு செலுத்தும் ஒரு நடைமுறை.
கொரோனா காலத்தில் 65 வயதுக்கு மேற்பட்டவர்கள், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் உள்ளிட்டோருக்கு இந்த முறையில் வாக்கு செலுத்த அனுமதி வழங்கப்பட்டது.
பெரும்பான்மையான மக்கள் நேரடி முறையிலேயே வாக்கு செலுத்துகிறார்கள் என்றாலும்கூட, ஒவ்வொரு தொகுதியிலும் கணிசமான அளவில் தபால் முறையில் வாக்கு செலுத்துபவர்களும் உள்ளனர்.
சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றிவாய்ப்பு தீர்மானிக்கப்படும் தொகுதிகளில் இந்த தபால் வாக்கு முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

பட மூலாதாரம், M APPAVU / X
ராதாபுரம் தேர்தல் பிரச்னை
திமுக கூட்டணிக் கட்சிகள் தபால் வாக்குகள் குறித்து கடிதம் அளித்திருக்கும் நிலையில், அதற்கு அவர்கள் எடுத்துக்காட்டாக கூறுவது ராதாபுரம் தொகுதியைதான்.
கடந்த 2016ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் ராதாபுரம் தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய சபாநாயகர் அப்பாவு போட்டியிட, அவரை எதிர்த்து அதிமுக தரப்பில் போட்டியிட்ட இன்பதுரை 49 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் அப்பாவு தரப்பிலிருந்து, தபால் வாக்குகள் எண்ணப்படவில்லை என்று உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு, அந்த வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று நீண்ட நாட்கள் நடந்தது. அதற்குள் அடுத்த தேர்தலே வந்து அதே தொகுதியில் அப்பாவு மற்றும் இன்பதுரை மீண்டும் போட்டியிட்டனர்.
இதில் அப்பாவு வென்று சட்டமன்ற உறுப்பினராகி, சபாநாயகராகவும் பொறுப்பேற்றார்.
இதேபோல், 2019ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன் சிதம்பரம் தொகுதியில் போட்டியிட்டார். இதர தொகுதிகளின் முடிவுகள் வாக்கு எண்ணிக்கை நாளிலேயே வெளியாகிவிட, அவரது தொகுதியின் முடிவு மட்டும் அடுத்த நாள் அதிகாலைதான் வெளியானது.
அதற்குக் காரணம், தபால் வாக்குகள் எண்ணப்படாமல், சிறு சலசலப்புக்குப் பிறகு மாலையில்தான் எண்ணப்பட்டு, முடிவுகள் வெளியிடப்பட்டதாக அக்கட்சியினர் ஊடகங்களுக்குப் பேட்டியளித்தனர்.
இந்தச் சம்பவங்களை சுட்டிக்காட்டியும், தேர்தல் முடிவுகளில் குளறுபடியை ஏற்படுத்துவதற்காக பாஜக இந்தச் செயலைச் செய்கிறது என்று கூறியும் திமுகவினர் இந்தக் கடிதத்தை தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பியுள்ளனர்.

பட மூலாதாரம், RS BHARATHI / X
‘தேர்தல் முடிவுகளை மாற்ற வாய்ப்புள்ளது’
பாஜகவின் தேவைகளுக்காக தேர்தல் நடைமுறைகள மாற்றியமைக்கப்படுவதாக குற்றம்சாட்டும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி திமுகவின் கோரிக்கை கடிதம் குறித்து பிபிசி தமிழிடம் பேசினார்.
அவர் கூறுகையில், “இப்படி தபால் வாக்குகளை இறுதியில்தான் எண்ணுவோம் என்றால், அதற்கு முன்பே அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி முடிவு எடுத்திருக்க வேண்டும். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை.”
“முதலில் இவிஎம் வாக்குகளை எண்ணிவிட்டு, தபால் வாக்குகளை இறுதியில் எண்ணும் பட்சத்தில் தேர்தல் முடிவுகளில் மாற்றம் வர வாய்ப்புள்ளது. இதனால் சொற்ப வாக்கு வித்தியாசத்தில் வெற்றி தீர்மானிக்கப்படும் தொகுதிகளில் குளறுபடி ஏற்பட வாய்ப்புள்ளது” என்றார்.
மேலும், “ஏற்கெனவே ராதாபுரத்திலும் பிகாரிலும் இப்படித்தான் பிரச்னை எழுந்தது. தபால் வாக்குகளை இறுதியில் எண்ணினால் வடமாநிலங்களில் அதிக பிரச்னை ஏற்படலாம்” என்கிறார் அவர்.

பட மூலாதாரம், NARAYANAN THIRUPATHY / X
“விதிப்படி தேர்தல் நடக்க வேண்டும்”
ஆனால், “இது குறித்தெல்லாம் எங்களுக்குக் கவலையில்லை. தேர்தல் விதிப்படி அனைத்தும் நடக்க வேண்டும்” என்று கூறும் அதிமுக தலைவர் ஜெயக்குமார், திமுக தங்களை நல்லவர்கள் என்று காட்டிக் கொள்வதற்காக இப்படிச் செய்வதாக விமர்சிக்கிறார்.
இதுகுறித்து பிபிசியிடம் பேசிய அவர், “திமுகவே இதுபோன்ற குளறுபடி வேலைகளை வாக்குச் சாவடிகளில் செய்யும். எனவே, திமுக, பாஜக யார் என்ன சொன்னாலும் சரி, தேர்தல் விதிகள் என்னவோ அதுபடி நடக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதேபோன்று விதிகளின்படியே வாக்கு எண்ணிக்கை நடக்க வேண்டும் என்று வலியுறுத்தும் பாஜகவின் மாநில துணைத் தலைவர் திருப்பதி நாராயணன், பாஜக மிகப்பெரிய வெற்றியைப் பெம் என்று தெரிந்து கொண்டு, பயத்தில் இதுபோன்று திமுக பேசுவதாகக் கூறுகிறார்.
அவர் பேசுகையில், ” தேர்தல் ஆணையத்துக்கு விதிமுறைகள் உள்ளன. அதன்படியே அவர்கள் செயல்படுவார்கள். எந்தவொரு கட்சியும் ஒரு குற்றச்சாட்டை வைத்தால் அதற்கு ஆதாரம் தர வேண்டும். ஆனால், அப்படி ஆதாரம் எதுவும் இன்றி காங்கிரஸ் மற்றும் திமுக முன்வைக்கும் குற்றச்சாட்டுகள், பாஜக வெற்றி பெரும் என்ற பயத்தின் வெளிப்பாடு” என்று கூறினார்.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், DMK / X
‘நாங்கள் அப்படி சொல்லவே இல்லை’
“சென்னை மாநகராட்சி ஆணையர் தபால் வாக்குகளை இறுதியில் எண்ணுவோம்’ என்று கூறியுள்ளார். எனவே, தபால் வாக்குகளை முதலில் எண்ணி, இவிஎம் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாவதற்கு முன்பே அறிவிக்க வேண்டும்” என்றுதான் திமுக தனது கடிதத்தில் கூறியுள்ளது.
இதன் உண்மைத் தன்மையை அறிந்து கொள்வதற்காக, சென்னை மாநகராட்சியின் தேர்தல் பணிகளுக்கான உச்ச அதிகாரி ஒருவரிடம் பேசினோம்.
அவர் பேசுகையில், “அதுபோன்ற எந்தவிதமான ஊடக அறிக்கையையும் நாங்கள் கொடுக்கவில்லை. தேர்தல் ஆணைய விதிகளின்படி தபால் வாக்குகள்தான் முதலில் எண்ணப்படும். அதில் எந்த மாற்றமும் இல்லை. இந்தக் கட்சிகள் கூறுவதில் உண்மை எதுவும் இல்லை” என்று கூறினார்.
மேலும், “ஏற்கெனவே திட்டமிட்டுள்ளதைப் போல காலை 8 மணிக்கு முதலில் தபால் வாக்குகள் எண்ணப்படும். அதிலிருந்து அரை மணிநேரம் கழித்தே இவிஎம் வாக்குகள் எண்ணப்படும். இறுதிச் சுற்று முடிவுகளின்போது இரண்டு முடிவுகளும் சேர்க்கப்பட்டு, இறுதி முடிவாக வெளியிடப்படும்” என்றார்.
இந்த செயல்முறை குறித்து முன்னாள் தேர்தல் ஆணையர் கோபால்சாமியி பேசுகையில், “திமுக கூறுவது போல் இவிஎம் வாக்கு எண்ணிக்கை முடிவுகளை அறிவிப்பதற்கு முன்பு தபால் வாக்கு எண்ணிக்கையை முடித்து முடிவுகளை அறிவிப்பது ஒன்றும் பெரிய விஷயம் அல்ல. சிறிது நேரம் எடுத்தாலும் கூட அதை செய்ய முடியும்” என்றார்.
அதேபோல், தபால் வாக்குகளை வைத்தெல்லாம் எந்த குளறுபடிகளும் நடக்க வாய்ப்பில்லை என்றும் கூறுகிறார் அவர்.

பட மூலாதாரம், ECITN / X
தேர்தல் ஆணைய விதிகள் என்ன சொல்கின்றன?
தேர்தல் வாக்கு எண்ணிக்கை எப்படி நடக்க வேண்டும், அதில் தபால் வாக்குகள் எப்படி எண்ணப்பட வேண்டும், இவிஎம் வாக்குகள் எப்படி எண்ணப்பட வேண்டும், முடிவுகளை எப்படி அறிவிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணைய கையேட்டில் வழிகாட்டப்பட்டுள்ளது.
- தேர்தல் நடத்தை விதி 1961, விதி 54A இன்படி, தபால் வாக்குகளின் எண்ணிக்கை தேர்தல் அதிகாரியின் முன்னிலையில் தொடங்கப்பட வேண்டும்.
- குறிப்பிடப்பட்டுள்ள நேரத்திற்கு முன்பு தேர்தல் அதிகாரியால் பெறப்படும் தபால் வாக்குகள் மட்டுமே வாக்கு எண்ணிக்கைக்கு எடுத்துக் கொள்ளப்படும்.
- வாக்கு எண்ணிக்கை மேஜையில் இருக்கும் பார்வையாளர்களுக்கு வாக்கு எண்ணிக்கையின் தொடக்கத்தில் இருக்கும் தபால் வாக்குகளின் எண்ணிக்கையைத் தெரிவிக்க வேண்டும். வாக்கு எண்ணும் அதிகாரிகளுக்கு வாக்கு எண்ணிக்கை செயல்முறையை விளக்க வேண்டும்.
- ஒவ்வொரு வாக்காகப் பிரிக்கப்பட்டு, அந்தந்த பிரதிநிதிக்கு வழங்கப்படும். அதன் முடிவுகள் படிவம் 20இல் உள்ளீடு செய்யப்பட்டு, அங்குள்ள கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் தெரிவிக்கப்படும்.
- தபால் வாக்குகள் எண்ணத் தொடங்கிய 30 நிமிடங்கள் கழித்து இவிஎம் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்படும்.
- தபால் வாக்கு எண்ணிக்கை முடியாமல் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தாலும்கூட, இவிஎம் வாக்கு எண்ணிக்கையில் எந்த இடையூறும் இல்லாமல் தொடர்ந்து நடக்கும்.
- ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் பதிவான தபால் வாக்குகள் மற்றும் இவிஎம் வாக்குகளை இறுதி முடிவுகளுக்கான படிவத்தில் நிரப்பி, முறையாகப் பரிசோதனை செய்த பிறகு தேர்தல் அதிகாரி இறுதி முடிவை அறிவிக்கலாம்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












