டி20 உலகக்கோப்பை: கவலை தரும் ரோஹித், ஹர்திக் - குழப்பமான சிக்னல் தரும் இந்தியா

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், அயாஸ் மேமன்
- பதவி, கிரிக்கெட் எழுத்தாளர்
தர வரிசையில் முதல் இடத்தில் இருக்கும் இந்தியா, ’வெற்றிபெற அதிக வாய்ப்பு உள்ள’ அணியாக (favourites) ஒன்பதாவது டி20 உலகக் கோப்பை போட்டியில் நுழைகிறது.
அடுத்த நான்கு வாரங்களுக்கு அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் நடைபெறவுள்ள இந்தப் போட்டியில் இந்திய அணி, ரசிகர்கள் மற்றும் நிபுணர்களிடமிருந்து அதிக எதிர்பார்ப்புகளையும் தீவிர ஆய்வுகளையும் எதிர்கொள்ளும்.
2007 ஆம் ஆண்டு பல போராட்டங்களுக்குப் பிறகு முதலாவது உலகக்கோப்பையை வென்ற இந்தியாவால் அதன் பிறகு கோப்பையை வெல்ல முடியவில்லை. பணம், செல்வாக்கு மற்றும் திறமை இருந்த போதிலும் முக்கிய கிரிக்கெட் சாம்பியன் பட்டங்கள் இந்தியாவுக்கு எட்டாக்கனியாகவே உள்ளன.
2013 சாம்பியன்ஸ் டிராஃபிக்குப் பிறகு இந்தியா சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நடத்தும் எந்த தொடர்களிலுலும் பட்டம் வென்றதில்லை. அதன் பிறகு, மூன்று சிறந்த கேப்டன்கள் - எம்எஸ் தோனி, விராட் கோலி மற்றும் ரோஹித் ஷர்மா மற்றும் இரண்டு பிரபலமான தலைமை பயிற்சியாளர்கள் - ரவி சாஸ்திரி மற்றும் ராகுல் டிராவிட் ஆகியோர் மற்ற தொடர்களில் சிறந்த வெற்றிகளை பெற்ற போதிலும், ஐசிசி தொடர்களில் தோல்வியடைந்தனர்.
கடந்த ஆண்டு இந்தியா உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மற்றும் ஒருநாள் உலகக் கோப்பையின் இறுதிப் போட்டி ஆகிய இரண்டிலுமே ஆஸ்திரேலியாவிடம் தோல்வியடைந்தது. இந்த துரதிர்ஷ்டத்தை இந்தியா இந்த முறை முறியடிக்க முடியுமா?
நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பட மூலாதாரம், AFP
இந்திய அணித் தேர்வில் குழப்பமான சிக்னல்
2008 இல் தொடங்கப்பட்டதிலிருந்து இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்), வீரர்களின் உடல் தகுதியை மதிப்பிடுவதற்கும், இந்திய அணியின் தேர்வில் செல்வாக்கு செலுத்தும் அம்சமாகவும் இருந்துவருகிறது. டி20 போட்டிகளுக்கும், சில சமயங்களில் 50 ஓவர் ஒருநாள் உலகக் கோப்பைக்கும் இது பொருந்தும். ஐபிஎல் பந்தயங்களில் நிலவும் கடுமையான போட்டியும், அழுத்தமும் வீரர்களின் திறனையும், மன உறுதியையும் சோதிக்கிறது.
இருப்பினும் ஐபிஎல் 2024 இன் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டுள்ள டி20 உலகக் கோப்பைக்கான இந்திய அணி குழப்பமான சமிக்ஞைகளை அளிக்கிறது. ரோஹித் ஷர்மாவின் அதிரடி தொடக்க பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு முக்கியமானது. இந்த அணியில் இடம் பெற்றிருக்கும் எந்த ஒரு வீரரும் ஐபிஎல் இறுதிப் போட்டியில் விளையாடவில்லை. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கேகேஆர்) அணிக்காக விளையாடும் ரிங்கு சிங் 15 வீரர்கள் கொண்ட முக்கிய அணியில் இல்லை. ரிசர்வ் வீரர்களில் அவரும் ஒருவர். இந்திய கிரிக்கெட்டில் அடுத்த 'பெரிய சாதனையாளர்' என்று கடந்த இரண்டு ஆண்டுகளாக கூறப்பட்டு வந்த சுப்மன் கில், ரிசர்வ் வீரர்களில் ஒருவராக உள்ளார்.
விராட் கோலிக்குப் பிறகு ஐபிஎல் 2024-ல் அதிக ரன்கள் எடுத்தவர்களான ருதுராஜ் கெய்க்வாட் மற்றும் ரியான் பராக் ஆகிய இருவரும் ரிசர்வ் வீரர்களில் கூட இல்லை. சென்ற ஆண்டு நடைபெற்ற ஆசிய விளையாட்டுப் போட்டியில் கெய்க்வாட் இந்திய அணிக்கு கேப்டனாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. சமீபத்திய ஐபிஎல்லில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்திய, இந்தியாவின் 2022 டி20 உலகக்கோப்பை அணியில் இடம்பெற்றிருந்த ஹர்ஷல் படேல் மற்றும் வருண் சக்கரவர்த்தியும் புறக்கணிக்கப்பட்டுள்ளனர்.

பட மூலாதாரம், AFP
நட்சத்திர வீரர்கள் கோலி, பும்ரா
ஐபிஎல் 2024 இன் ஃபார்ம் அடிப்படையில் பல வீரர்களைச் சேர்த்தது மற்றும் குறிப்பிடத்தக்க சில புறக்கணிப்புகள், பாரம்பரிய தேர்வு முறைக்கு எதிராக கேள்விகளை எழுப்பியுள்ளது. விராட் கோலியும், ஜஸ்ப்ரீத் பும்ராவும் ஐபிஎல் போட்டிகளில் சிறப்பாக விளையாடினார்கள். போட்டியின் நடுப்பகுதியில் கோலியின் ஸ்டிரைக் ரேட் மீதான விமர்சனம் உச்சத்தில் இருந்தது. ஆனால் அதன்பிறகு அவர் அற்புதமாக பேட்டிங் செய்து சந்தேகப்பட்டவர்களை அமைதிப்படுத்தினார். முன்னணி ரன் எடுத்தவர் என்ற முறையில் அவர் கிரிக்கெட்டின் எல்லா வடிவங்களிலும் உலகின் சிறந்த பேட்ஸ்மேனாக தனது நிலையை உறுதிப்படுத்தினார்.
பும்ரா மிக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தி முதலிடத்தை பிடிக்காவிட்டாலும் (மூன்றாவது இடத்தைப் பிடித்தார்) அவர் பேட்ஸ்மேன்களை நடுங்க வைத்தார் என்பது உண்மை. அவரது பந்துவீச்சு வியக்கத்தக்க வகையில் சிக்கனமாக இருந்தது. அதாவது ஒரு ஓவருக்கு ஏழு ரன்களுக்கும் குறைவாகவே அவர் கொடுத்தார். அவர் ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி கடைசி இடத்திற்கு தள்ளப்பட்டாலும் கூட பும்ராவின் அபாரமான திறமையும், ஆட்டத்தின் எந்த கட்டத்திலும் விக்கெட்டுகளை வீழ்த்தும் திறனும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் வீரராக அவரை ஆக்கியது. கடந்த ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை வெற்றி மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு அற்புதமான டெஸ்ட் தொடரின் மூலம் பும்ரா, சம கால வேகப்பந்து வீச்சாளர்களில் நிகரில்லாதவராக திகழ்கிறார்.
நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பட மூலாதாரம், AFP
ரிஷப் பந்தின் வலுவான மறுபிரவேசம்
இந்த அணியில் கோலி மற்றும் பும்ரா போன்ற வீரர்களுக்கு ஒப்பாக நான் கருதும் ஒரே வீரர் ரிஷப் பந்த் மட்டுமே.
இது ஐபிஎல் 2024 இல் அவர் செய்த சாதனைகளின் புள்ளிவிவரங்களுக்காக அல்ல. மாறாக உயிருக்கே ஆபத்தான காயத்தில் இருந்து வெளிவந்து அவர் செய்த குறிப்பிடத்தக்க மற்றும் வலுவான மறுபிரவேசத்திற்காக. இந்த காயம் கிட்டத்தட்ட 18 மாதங்களுக்கு அவரை ஆட்டத்தில் இருந்து விலக்கி வைத்திருந்தது. இந்தியாவுக்காக பல போட்டிகளில் வெற்றியை தேடித்தந்த ரிஷப் பந்தின் சுதந்திரமான, அதிரடியான மற்றும் புதுமையான பேட்டிங் மீண்டும் திரும்பியிருப்பது உலகக் கோப்பையில் இந்திய அணிக்கு நம்பிக்கையை தருகிறது.
அதற்கு அடுத்த இடத்தில் இருக்கிறார் அதிரடி வீரர் சிவம் துபே. ஐபிஎல்-இல் சிறப்பாக செயல்பட்டு தேர்வாளர்களின் கவனத்தை ஈர்த்தார் அவர். இங்கிருந்து இந்திய அணியின் பலம் குறையத் தொடங்குகிறது. சஞ்சு சாம்சன், சூர்யகுமார் யாதவ், குல்தீப் யாதவ் மற்றும் யுஸ்வேந்திர சாஹல், ஐபிஎல் 2024 இல் நன்றாகவே விளையாடினார்கள். ஆனால் சிறப்பாக எதையும் சாதிக்கவில்லை.
மற்ற வீரர்களில் யஷஸ்வி ஜெய்ஸ்வால், ரவீந்திர ஜடேஜா மற்றும் அக்ஸர் படேல் மற்றும் இடது கை வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங் ஆகியோர் சராசரி வெற்றியை மட்டுமே பெற்றனர். பும்ராவின் முக்கிய ஜோடியான வேகப்பந்து வீச்சாளர் முகமது சிராஜ், பெரும்பாலான நேரங்களில் பின்தங்கியே இருந்தார்.

பட மூலாதாரம், AFP
இந்திய அணிக்கு கவலை தரும் ரோஹித், ஹர்திக்
ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பிட்ச்கள் (ஆடுகளங்கள்) எப்படி இருக்கும் என்பது உலகக் கோப்பையில் எல்லா அணிகளுக்கும் முக்கியமானதாக இருக்கும். ஆனால் மூன்று இடது கை சுழற்பந்து வீச்சாளர்கள் மற்றும் நிலையற்ற வேகப்பந்து வீச்சாளர்களுடன் (புதியவர்கள் கலீல் அகமது மற்றும் அவேஷ் கான் ஆகியோர் ரிசர்வ் வீரர்களாக உள்ளனர்) இந்தியாவின் பந்துவீச்சு தாக்குதலின் கூர்மை குறைவாகவே இருக்கும் என்று தோன்றுகிறது. கேப்டன் ரோஹித் ஷர்மா மற்றும் துணை கேப்டன் ஹர்திக் பாண்டியாவின் மோசமான ஐபிஎல் ஃபார்ம்தான் முக்கிய கவலை. மும்பை இந்தியன்ஸில் கேப்டன்சி மாற்றத்தால் எழுந்த சர்ச்சை அணியின் ஒற்றுமையை பாதித்தது.
தொடக்க பேட்ஸ்மேனாக ரோஹித்தின் அதிரடி பேட்டிங் இந்தியாவின் வெற்றிக்கு இன்றியமையாததாக இருக்கிறது. இது ஒருநாள் உலகக் கோப்பையில் நிரூபணமானது. பினிஷர், வேகப்பந்து வீச்சாளர் மற்றும் சிறந்த பீல்டர் என பாண்டியாவின் ஆல்ரவுண்டர் திறமையும் முக்கியமானது. பாண்டியா தனது ஆட்டத்திறமையின் உச்சத்தில் இல்லாமல் இருப்பது அணியின் சமநிலையை சீர்குலைக்கக் கூடும்.
நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பட மூலாதாரம், Getty Images
டி20 உலகக்கோப்பை யாருக்கு?
இந்தியாவின் தேர்வாளர்கள் நெருக்கடி காலத்திட்டம் உட்பட எல்லா விஷயங்களிலும் கவனம் செலுத்துவதில் பெரும்பாலும் வெற்றி பெற்றுள்ளனர் என்பதை இங்கே நாம் கவனத்தில் கொள்ளவேண்டும்.
பல நட்சத்திர வீரர்கள் கேள்விக்குரிய ஃபார்மில் இருந்தாலும், இந்திய கிரிக்கெட்டில் உள்ள திறமையின் ஆழம் இதை சாத்தியமாக்குகிறது.
ஐபிஎல் இந்திய வீரர்களுக்கு ஒரு சோதனைக் களமாகவும், உலகெங்கிலும் உள்ள (பாகிஸ்தான் தவிர) சிறந்த டி20 வீரர்களுக்கு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் இடமாகவும் உள்ளது. இந்த ஐபிஎல் சீசனில் பரபரப்பை உருவாக்கிய பல வீரர்கள் தங்கள் நாட்டிற்காக களம் இறங்கத் தயாராக உள்ளனர்.
நடப்பு சாம்பியனான இங்கிலாந்து, இரண்டு முறை சாம்பியனான மேற்கிந்திய தீவுகள் மற்றும் கடந்த ஆண்டு முதல் வெற்றிகளைக் குவித்து வரும் ஆஸ்திரேலியாவும் சாம்பியன் பட்டத்திற்கான முக்கிய போட்டியாளர்களில் அடங்குவார்கள்.
உலகக் கோப்பையின் முந்தைய 8 சீசன்களில், பாகிஸ்தான் மற்றும் இலங்கை உட்பட ஆறு வெவ்வேறு நாடுகள் சாம்பியன் ஆயின. கிரிக்கெட்டின் இந்த வடிவத்தில் எந்த ஒரு அணியும் வெற்றிபெறக் கூடும் என்பதை இது அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.

பட மூலாதாரம், AFP
பாகிஸ்தானுக்கு எதிரான ஆதிக்கத்தை தக்க வைக்குமா இந்தியா?
ஆப்கானிஸ்தான் போன்ற வலுவாக போராடக் கூடிய அணிகள், வெள்ளை-பந்து கிரிக்கெட்டில் அதிக அனுபவம் வாய்ந்த அணிகளை வீழ்த்த முடியும். ஒருநாள் உலகக் கோப்பையில் ஆப்கானிஸ்தான் இதை செய்து காட்டியது. இந்த உலகக் கோப்பை போட்டியின் வெற்றியாளரைக் கணிப்பது சிரமம் என்பது மட்டுமல்ல, முற்றிலும் முட்டாள்தனமானதும் கூட. எல்லா அணிகளும் தங்கள் உச்ச திறனுடன் விளையாட வேண்டும்.
லீக் சுற்றில் இந்தியாவும், பாகிஸ்தானும் ஒரே குழுவில் இடம் பெற்றுள்ளன. ஜூன் 9 ஆம் தேதி நடைபெறவுள்ள இந்த இரண்டு பரம எதிரிகளுக்கு இடையேயான போட்டி, கிரிக்கெட் வரலாற்றில் "முன்னெப்போதும் இருந்திராத மிகப்பெரிய" போட்டியாகக் கருதப்படுகிறது. உலக அளவில் 200 கோடிக்கும் அதிகமான பார்வையாளர்களை இந்தப் பந்தயம் ஈர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இரு அணிகளுமே தோல்வியை விரும்பாது. ஆனால் கடந்த பல ஆண்டுகளாக ஐசிசி போட்டிகளில் (ODI மற்றும் T20) பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றிகளை குவித்துள்ள இந்தியா, இந்தப் போட்டியில் வெற்றி பெறுவதைத் தாண்டி தங்கள் பார்வையை செலுத்த வேண்டும். பாகிஸ்தானை வீழ்த்துவது ஒரு படிக்கல் மட்டுமே. உலகக் கோப்பையை வெல்வதே முந்தைய இழப்புகளுக்கு ஈடுசெய்வதாக இருக்கும்.
நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












