2024 மக்களவைத் தேர்தல் முடிவுகள்: தமிழ்நாட்டில் நட்சத்திர வேட்பாளர்களின் நிலை என்ன?

ஏழு கட்டங்களாக நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை (ஜூன் 04) நடைபெற்றது.
பாஜக கூட்டணி 292 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது, எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணி 234 இடங்களை வென்றுள்ளவென்றுள்ளது.
அதேபோல, தமிழ்நாட்டில் திமுக கூட்டணி மொத்தம் உள்ள 39 இடங்களையும் வென்றுள்ளது. புதுச்சேரியின் ஒரு தொகுதியில் காங்கிரஸ் கட்சி வென்றுவென்றுள்ளது.
தமிழ்நாட்டின் தேர்தல் களத்தில் திமுக, பாஜக மற்றும் அதிமுக கூட்டணியின் சார்பாகப் போட்டியிட்ட நட்சத்திர வேட்பாளர்களின் நிலை என்ன என்பது குறித்து இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கே. அண்ணாமலை

பட மூலாதாரம், Facebook
தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை, முதலில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறினார். பின்னர் தலைமை அறிவித்தால் போட்டியிடுவேன் எனக் கூறியிருந்தார்.
அவர் கோவையில் போட்டியிடுவதை கடைசி நேர சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தது பாஜக. திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்த பிறகே, அண்ணாமலை அங்கு போட்டியிடுவதாக பாஜக அறிவித்திருந்தது. தமிழகத்தில் பாஜக இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இரண்டு தொகுதிகளில் ஒன்று கோவை.
கடந்த 1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புக்குப் பிறகு தற்போதைய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கு போட்டியிட்டு, வெற்றி பெற்றிருந்தார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கிலிருந்து வானதி சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கோவை பாஜகவுக்கு முக்கியமான தொகுதியாகக் கருதப்படுகிறது. எனவே அந்தத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு இல்லாவிட்டாலும், பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழகத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இருக்கும் என பாஜக நினைத்தது.
கோவை தொகுதியில்தமிழ்நாடு பாஜக தலைவர் கே. அண்ணாமலை, முதலில் தேர்தலில் போட்டியிட மாட்டேன் என்று கூறினார். பின்னர் தலைமை அறிவித்தால் போட்டியிடுவேன் எனக் கூறியிருந்தார். அவர் கோவையில் போட்டியிடுவதை கடைசி நேர சஸ்பென்ஸ் ஆக வைத்திருந்தது பாஜக. திமுகவும் அதிமுகவும் வேட்பாளர்களை அறிவித்த பிறகே, அண்ணாமலை அங்கு போட்டியிடுவதாக பாஜக அறிவித்திருந்தது. தமிழகத்தில் பாஜக இதுவரை நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்டிருந்த இரண்டு தொகுதிகளில் ஒன்று கோவை. கடந்த 1998ஆம் ஆண்டு கோவை குண்டுவெடிப்புக்குப் பிறகு தற்போதைய ஜார்கண்ட் ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணன் அங்கு போட்டியிட்டு, வெற்றி பெற்றிருந்தார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் கோவை தெற்கிலிருந்து வானதி சீனிவாசன் தேர்ந்தெடுக்கப்பட்ட நிலையில், கோவை பாஜகவுக்கு முக்கியமான தொகுதியாகக் கருதப்படுகிறது. எனவே அந்தத் தொகுதியில் அண்ணாமலை போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு இல்லாவிட்டாலும், பாஜகவின் வாக்கு சதவீதம் தமிழகத்தில் அதிகரிப்பதற்கான வாய்ப்பாக இருக்கும் என பாஜக நினைத்தது. கோவை தொகுதியில் திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் 5,68,200 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அண்ணாமலை 4,50,132 வாக்குகள் பெற்று 1,18,068 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவி, இரண்டாம் இடத்தை அடைந்தார்.
தமிழிசை சௌந்தரராஜன்

பட மூலாதாரம், Facebook
தமிழிசை சௌந்தரராஜன் மக்களவைத் தேர்தலில் போட்டியிட வேண்டும் என்பதில் பாஜக தலைமை மிகவும் தீவிரமாக இருந்தது. எனவே அவர் வகித்து வந்த தெலங்கானா மாநில ஆளுநர் பதவியையும் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் பதவியையும் ராஜினாமா செய்யச் சொல்லியிருந்தது கட்சித் தலைமை.
சென்னை, அவர் ஏற்கெனவே போட்டியிட்ட நகரம் என்பதாலும், பாஜக மாநிலத் தலைவராக இருந்தபோது, சென்னை நகர மக்களிடமும், இளைஞர்களிடமும் நெருங்கிப் பழகியவர் என்பதாலும், பாஜக தலைமை அவருக்கு தென் சென்னை தொகுதியை வழங்கியது.
தடாலடியான அரசியல் பாணி இல்லாதவர், சாதி, மதரீதியாக சர்ச்சைக்குரிய கருத்துகளைப் பொதுவெளியில் பகிரங்கமாகத் தெரிவிக்காதவர் என்ற பிம்பமும் இவருக்கு உண்டு.
தென் சென்னை தொகுதியி, 290683 வாக்குகள் பெற்று இரண்டாம் இடம் பிடித்தார். திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் 516628 வாக்குகள் பெற்று 2,25,945 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.
விஜய பிரபாகரன்

பட மூலாதாரம், DMDK
அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் தேமுதிக சார்பாக விருதுநகர் தொகுதியில் களம் கண்டார், மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகன் விஜய பிரபாகரன்.
விஜயகாந்த் மறைந்த சில மாதங்களில் நடைபெற்ற இந்த மக்களவைத் தேர்தலில், விஜயகாந்த் பிறந்த ஊரான ராமானுஜபுரம் விருதுநகர் தொகுதியில் இருப்பதால் இங்கு தேமுதிக சார்பாக விஜய பிரபாகரன் களமிறக்கப்பட்டார். தேர்தல் பிரசாரங்களிலும் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது.
இத்தொகுதியில் 3,80,877 வாக்குகளை பெற்று தோல்வியடைந்தார் விஜய பிரபாகரன். 3,85,256 வாக்குகள் பெற்று காங்கிரசின் மாணிக்கம் தாகூர் வெற்றி பெற்றார். இத்தொகுதியில் பாஜக சார்பில் களமிறக்கப்பட்ட மற்றொரு நட்சத்திர வேட்பாளரான ராதிகா சரத்குமார் 1,66,271 வாக்குகளை பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.
ஏ சி சண்முகம்

பட மூலாதாரம், Facebook
புதிய நீதிக் கட்சியின் தலைவர் ஏ.சி.சண்முகம் பாஜக கூட்டணியில் தாமரை சின்னத்தில் வேலூரில் போட்டியிட்டார்.
கடந்த முறை அதிமுக கூட்டணியில் இருந்த அவர், தன்னை எதிர்த்து நின்ற திமுக அமைச்சர் துரைமுருகனின் மகன் கதிர் ஆனந்திடம் வெறும் 8,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி வாய்ப்பை இழந்தார்.
அதிமுகவில் இருந்து பாஜக அணிக்கு வந்த அவருக்கு இந்த முறை சீட் வழங்கி தாமரை சின்னத்தில் போட்டியிட வைத்தது. இது வெற்றி தோல்வி என்பதைத் தாண்டி பாஜகவுக்கு சாதகமானதாகவே பார்க்கப்பட்டது.
கல்வி நிலையங்கள் நடத்தி வரும் ஏ.சி சண்முகம், நடிகர் ரஜினிகாந்துக்கு நெருக்கமானவராக அறியப்படுகிறார்.
வேலூர் தொகுதியில் 3,52,990 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார் ஏ.சி.சண்முகம். திமுக வேட்பாளர் கதிர் ஆனந்த் 5,68,692 பெற்று 215,702 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
கனிமொழி

பட மூலாதாரம், Facebook
கடந்த முறை தூத்துக்குடியில் போட்டியிட்டு 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற கனிமொழி, தூத்துக்குடி தொகுதியின் முதல் பெண் நாடாளுமன்ற உறுப்பினரானார்.
கடந்த ஐந்து ஆண்டுகளில் திமுகவின் ஆதரவுடன், தூத்துக்குடிக்கான திட்டங்கள் மற்றும் முதலீடுகள் கொண்டு வரப்பட்டன. சமீபத்தில், வின்ஃபாஸ்ட் மின்வாகன உற்பத்தி ஆலை தூத்துக்குடியில் அமைக்கப்பட்டது.
ஏற்கெனவே இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக இருந்த கனிமொழி டெல்லி வட்டாரங்களில் கணிசமான செல்வாக்கைக் கொண்டவர்.
கடந்த தேர்தலில் 3.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற அவர், கட்சியின் துணைப் பொதுச் செயலாளரானார்.
தூத்துக்குடி தொகுதியில் 5,40,729 வாக்குகள் பெற்று வெற்றி பெற்ர் கனிமொழி. இரண்டாம் இடத்தில் அதிமுகவின் சிவசாமி வேலுமணி 1,47,991 வாக்குகவாக்குகள் பெற்று தோல்வியை தழுவினார்.
நயினார் நாகேந்திரன்

பட மூலாதாரம், Facebook
திருநெல்வேலி தொகுதியில் பாஜக சார்பாகப் போட்டியிட்டார் நயினார் நாகேந்திரன்.
பாஜகவுக்கு மாநிலத்தில் உள்ள நான்கு சட்டமன்ற உறுப்பினர்களில் ஒருவரில் இவரும் ஒருவர். 2021ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு வரை அதிமுகவில் இருந்திருந்தாலும்கூட, நெல்லை தொகுதியில் பாஜக வேட்பாளராக நின்று இவரால் வெற்றிபெற முடிந்தது.
இதற்கு தொகுதி மக்களிடம் அவர் கொண்டிருந்த தனிப்பட்ட செல்வாக்குதான் முக்கியக் காரணம். இதனால் இம்முறை மக்களவைத் தொகுதிக்கான வாய்ப்பை அவருக்கு வழங்கியது பாஜக மேலிடம்.
ஆனால், நயினார் நாகேந்திரன் 3,36,676 வாக்குகள் பெற்று தோல்வியை தழுவியுள்ளார். இவருக்கு போட்டியாக களமிறங்கிய காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் ராபர்ட் ப்ரூஸ் 5,02,296 வாக்குகள் பெற்று 165,620 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
ஆ. ராசா

பட மூலாதாரம், Facebook
தனித்தொகுதியான நீலகிரியில் ஏற்கெனவே மூன்று முறை வெற்றி பெற்ற ஆ.ராசா, இந்த முறை மீண்டும் அதே தொகுதியில் இருந்து போட்டியிட்டார்.
தொகுதியில் நல்ல செல்வாக்கு பெற்ற ஆ.ராசாவுக்கு மீண்டும் சீட் வழங்கப்பட்டதில் ஆச்சர்யம் இல்லை. ஆனால் இதற்கு மற்றொரு காரணமும் இருந்தது.
பாஜக அந்தத் தொகுதியில் நேரடியாகப் போட்டியிடும் என்பதும் அந்தத் தொகுதியில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் நிறுத்தப்படுவார் என்பதும் எதிர்பார்க்கப்பட்டதே.
தனது கோட்டையாக இருக்கும் நீலகிரியில் பாஜக வேட்பாளர் ஒருவரை வீழ்த்துவது கடினமானதாக இருக்காது என்பதால், அங்கு நன்கு பரீட்சயமான ஆ.ராசாவையே மீண்டும் வேட்பாளராக நிறுத்தியது திமுக.
இந்நிலையில் திமுக எதிர்பார்த்தபடியே 4,73,212 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார் ஆ.ராசா. இவரை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் எல். முருகன் 2,32,627 வாக்குகள் பெற்று வெற்றி வாய்ப்பை இழந்தார்.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
சௌமியா அன்புமணி

தமிழ்நாட்டின் வடமேற்கு மாவட்டங்களில் ஒன்றான தருமபுரி, மாநிலத்தின் மிகவும் பின்தங்கிய தொகுதிகளில் ஒன்று. வாழப்பாடி ராமமூர்த்தி, தம்பிதுரை, கே.வி. தங்கபாலு, அன்புமணி ராமதாஸ் போன்ற முக்கியத் தலைவர்கள் போட்டியிட்டு வெற்றிபெற்ற தொகுதி என்பதால், எப்போதுமே கவனிக்கப்படும் தொகுதியாகவும் இருந்து வந்திருக்கிறது.
இங்கு பா.ஜ.க - பா.ம.க கூட்டணியின் சார்பில் சௌமியா அன்புமணி போட்டியிட்டார்.
சௌமியா அன்புமணி பிரசாரத்திற்குச் செல்லும் இடங்களில், பெண்களிடம் அவருக்கு நல்ல வரவேற்பு இருந்தது. மாவட்டத்தின் உள்ளடங்கிய கிராமங்களுக்கும் சென்று, அங்கிருப்பவர்களிடம் வேலைவாய்ப்பு, குடிநீர் பிரச்னைக்கான தீர்வு, டாஸ்மாக்கை மூடுவது போன்றவற்றை வாக்குறுதியாக அளித்து வாக்கு சேகரித்தார் சௌமியா அன்புமணி. இவருக்காக, கட்சித் தலைவர் அன்புமணி ராமதாசும் களத்தில் வாக்கு சேகரித்தார்.
இந்நிலையில், 4,11,367 வாக்குகள் பெற்று சௌமியா அன்புமணி வெற்றிவாய்ப்பை இழந்துள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளர் ஏ.மணி அவரைவிட 21,300 வாக்குகள் அதிகமாக, ஒட்டுமொத்தமாக 4,32,667 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார்.
டிடிவி தினகரன்

பாஜக கூட்டணியில் இணைந்த அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இரண்டு தொகுதிகளில் போட்டியிடும் என்று முடிவு செய்யப்பட்டது.
தேனி தொகுதியில் 1998இல் அதிமுக வேட்பாளராகப் போட்டியிட்டு நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டார் டிடிவி தினகரன். பின்பு மாநிலங்களவை உறுப்பினராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தேனி தொகுதியில் உள்ளூர் சமூகத்தின் செல்வாக்கும் டிடிவி தினகரனுக்கு இருந்தது. அவருக்கு எதிராக திமுக சார்பில் களம் கண்ட தங்க தமிழ்ச்செல்வன் அமமுகவின் முன்னாள் முக்கிய நிர்வாகி ஆவார்.
இரவு 11 மணி நிலவரப்படி, 2,92,668 வாக்குகள் பெற்று தோல்வியடைந்தா டிடிவி தினகரன். திமுக வேட்பாளர் தங்க தமிழ்ச்செல்வன் 5,71,493 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












