சிறையில் இருந்தவாறே அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் போட்டியிட முடியுமா?

டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், மார்க் ஷியா
    • பதவி, பிபிசி செய்திகள்

அமெரிக்க அரசியலில் முன்னெப்போதும் இல்லாத வகையில், ஒரு குற்றத்திற்காக தண்டிக்கப்பட்ட முதல் முன்னாள் அமெரிக்க அதிபர் என்ற பெயரைப் பெற்றுள்ளார் டொனால்ட் டிரம்ப்.

வியாழன் அன்று மன்ஹாட்டன் நீதிமன்றத்தில் டிரம்பை குற்றவாளியாக அறிவிக்க காரணமான 34 குற்றங்களில், சிறைத்தண்டனைக்கான வாய்ப்புகள் குறைவு என்பதை பெரும்பாலான நிபுணர்கள் ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனால் ஒருவேளை நிலைமை மோசமானால், அதாவது அவருக்கு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டால், டிரம்ப் அதிபர் வேட்பாளராக நீடிக்க முடியும் என்பதுடன், அமெரிக்க அதிபர் தேர்தலிலும் சிறையில் இருந்தவாறே போட்டியிடவும் முடியும்.

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

வெள்ளை மாளிகை

பட மூலாதாரம், Getty Images

தண்டனை பெற்ற ஒருவர் எப்படி அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும்?

ஜார்ஜ் வாஷிங்டன் 1789இல் அமெரிக்காவின் முதல் அதிபரானார், அதன் பின்னர் அதிபர் வேட்பாளருக்கான சட்டப்பூர்வ தகுதி விதிகள் மாறவில்லை.

யுனிவர்சிட்டி காலேஜ் லண்டனில் அமெரிக்க வரலாற்றின் பேராசிரியராக பணியாற்றிய இவான் மோர்கன் பிபிசியிடம் பேசுகையில், “அதிபர் வேட்பாளராக இருப்பதற்கான அடிப்படைத் தகுதிகள் அவர்கள் அமெரிக்காவில் பிறந்து இருக்க வேண்டும், மேலும் ஒரு குறிப்பிட்ட வயதைக் கடந்திருக்க வேண்டும் (35 வயதுக்கு மேல்). அதனால்தான் ஒபாமா உண்மையில் அமெரிக்கக் குடிமகனா இல்லையா என்ற விவாதம் அப்போது எழுந்தது” என்கிறார்.

உள்நாட்டுப் போருக்குப் பிறகு, அமெரிக்காவிற்கு எதிரான கிளர்ச்சியில் ஈடுபட்டவர்களைத் தடுத்து நிறுத்த வேண்டும் என்ற நோக்கத்தில், அதிபர் வேட்பாளர் 14 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கியிருக்க வேண்டும் என்ற விதியும் அமல்படுத்தப்பட்டது.

இருப்பினும், டொனால்ட் டிரம்பிற்கு எதிராக இந்த விதியைப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை உச்ச நீதிமன்றம் நிராகரித்துள்ளது. ஆனால் தண்டனை பெற்ற ஒருவர் வெள்ளை மாளிகைக்கு போட்டியிட எந்த தடையும் இல்லை.

பேராசிரியர் மோர்கன் கூறுகையில், "புரட்சியில் இருந்து பிறந்தது தான் அமெரிக்கா. முடியாட்சிக்கு எதிரான நடவடிக்கைகளுக்காக சிறையில் அடைக்கப்பட்ட எவரும் அதிபர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தகுதியற்றவர்கள் என்று கூறுவதற்கான சாத்தியம் அப்போது இருந்திருக்கலாம்." என்கிறார்.

1787-இல் அமெரிக்க அரசியலமைப்பை உருவாக்கிய மாநாட்டில் பங்குபெற்ற தலைவர்கள் எவரும் ஆங்கிலேயர்களால் சிறையில் அடைக்கப்படவில்லை, இருப்பினும் சிலருக்கு சிறை செல்வதற்கான வாய்ப்புகள் இருந்தன.

"புரட்சி வெற்றியடையவில்லை என்றால், அவர்கள் முடியாட்சிக்கு எதிரான கிளர்ச்சிக்காக குற்றவாளிகளாகவும் அறிவிக்கப்பட்டிருப்பார்கள்" என்று அவர் கூறுகிறார்.

இதனால் தான் யார் அதிபராகலாம் என்பதில் அரசியலமைப்பை இயற்றியவர்கள் பல கட்டுப்பாடுகளை விதிக்கவில்லை. இந்த கொள்கை காரணமாக தான் மூன்று வேட்பாளர்கள் சிறையிலிருந்தவாறே அதிபர் தேர்தலுக்கான பிரசாரத்தை மேற்கொண்டனர்.

யூஜின் வி டெப்ஸ்

யூஜின் வி டெப்ஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டெப்ஸ் முதன்முதலில் 1894இல் சிறையில் அடைக்கப்பட்டார்

"சிறையில் இருந்தவாறே அதிபர் தேர்தலில் போட்டியிட்டவர்களில், 1920இல் போட்டியிட்ட யூஜின் டெப்ஸ் மிக முக்கியமான வேட்பாளர்", என்கிறார் பேராசிரியர் மோர்கன்.

டெப்ஸ் முதன்முதலில் 1894-இல் சிறையில் அடைக்கப்பட்டார். ஒரு தொழிற்சங்கத் தலைவராக, ஒரு ரயில் நிறுவனத்திற்கு எதிரான வேலைநிறுத்தத்திற்கு அவர் தலைமை தாங்கினார். ரயிலை மறித்ததற்காக குற்றவாளி என அறிவிக்கப்பட்டார்.

ராணுவம் இந்த வேலைநிறுத்தத்தை முறியடித்தது. டெப்ஸ் ஆறு மாதங்கள் சிறையில் இருக்க வேண்டியிருந்தது. இந்த அனுபவம் அவரது அரசியல் பார்வையை பெரிதும் பாதித்தது.

"அவர் 20ஆம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அமெரிக்காவின் சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினரானார். 1904, 1908, 1912 மற்றும் 1920-இல் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார்” என பேராசிரியர் மோர்கன் கூறுகிறார்.

டெப்ஸ் 1900ஆம் ஆண்டிலும் அதிபர் தேர்தலில் போட்டியிட்டார், ஆனால் சோசியல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பாக தேர்தலில் போட்டியிட்டார்.

"1912இல் ஜனநாயகக் கட்சியின் உட்ரோ வில்சன், குடியரசுக் கட்சியின் வில்லியம் ஹோவர்ட் டாஃப்ட், முற்போக்கு வேட்பாளர் மற்றும் குடியரசுக் கட்சியின் முன்னாள் அதிபர் தியோடர் ரூஸ்வெல்ட் ஆகியோருடன் டெப்ஸ் என நான்கு முனைப் போட்டி நிலவியது." என்கிறார் பேராசிரியர் மோர்கன்.

டெப்ஸ் தேர்தலில் மிகவும் வலுவாகப் போட்டியிட்டு தோராயமாக 10 லட்சம் வாக்குகளைப் பெற்றார், அதாவது மொத்த வாக்குகளில் 6%, இது அமெரிக்காவில் ஒரு சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் பெற்ற அதிக வாக்குகள் ஆகும்.

"ஆனால், முதலாம் உலகப் போரின் போது, ​​அமெரிக்க வாக்காளர்கள் தாங்கள் தேசபக்தியின் அடிப்படையில் போரை ஆதரிக்க வேண்டுமா அல்லது முதலாளித்துவப் போராக அதை எதிர்க்க வேண்டுமா என்று யோசித்தார்கள்?" என்கிறார் பேராசிரியர் மோர்கன்.

ஆனால் டெப்ஸ் போரை கடுமையாக விமர்சித்தார். அமெரிக்கர்கள் அதில் சேரக்கூடாது என தொடர்ந்து வலியுறுத்தினார்.

தொடர்ந்து விவரித்த பேராசிரியர் மோர்கன், "1918-இல், போர் கிட்டத்தட்ட முடிந்துவிட்டது, ஆனால் போர் வரைவை எதிர்க்க அமெரிக்க மக்களுக்கு அழைப்பு விடுத்தார் டெப்ஸ்" என்கிறார்.

அவர் தேசத்துரோக குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு ஏப்ரல் 1919-இல் சிறைக்கு அனுப்பப்பட்டார். சிறையில் இருந்தபோது அடுத்த ஆண்டு தேர்தலில் போட்டியிட்டார். இருப்பினும், சிறையில் அவரது உடல்நிலை மோசமடைந்து, 1926-இல் அவர் இறந்தார்.

லிண்டன் லாரௌச்

லிண்டன் லாரௌச்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1940களில், ஒரு இடசாரியாக லாரௌச்சின் அரசியல் வாழ்க்கை தொடங்கியது

லிண்டன் லாரௌச் பல்வேறு காரணங்களுக்காக சிறையில் இருந்தவாறு அதிபர் பதவிக்கு போட்டியிட்டார். 1976 முதல் 2008 வரை, ஒவ்வொரு தேர்தலிலும், ஜனநாயகக் கட்சி வேட்பாளராகவோ அல்லது வேறு ஏதேனும் கட்சியின் வேட்பாளராகவோ, அவரது பெயர் வாக்குச் சீட்டில் தொடர்ந்து இடம்பெற்று வந்தது.

ஒரு இடசாரியாக லாரௌச்சின் அரசியல் வாழ்க்கை 1940களில் தொடங்கியது, ஆனால் 1970களில் அவர் வலதுசாரிகள் பக்கம் சாய்ந்தார்.

அவரது விசித்திரமான உலகக் கண்ணோட்டத்தின் அடிப்படையில், குறைந்த வரிகள் மற்றும் ஜனரஞ்சக வாக்குறுதிகளுடன் ஒரு அரசியல் இயக்கத்தை உருவாக்கினார் லாரௌச். ஆனால் அதில் 2,000 பேருக்கு மேல் இல்லை.

அமெரிக்கா தனது சொந்த குடிமக்களை உளவு பார்ப்பதை கடுமையாக விமர்சித்தவர் லாரௌச்.

வியக்கத்தக்க வகையில் 1986-இல், இல்லினாய்ஸ் மாநிலத்தில் முக்கிய பதவிகளுக்கான ஜனநாயகக் கட்சியின் நியமனங்களில் லாரௌச் ஆதரவு வேட்பாளர்கள் வெற்றி பெற்றதாக பேராசிரியர் மோர்கன் கூறுகிறார். இதன் மூலமாக அவர்கள் அதிக நன்கொடைகளையும் பெற்றனர்.

பேராசிரியர் மோர்கனின் கூற்றுப்படி, "அது எவ்வளவு தொகை என்பது ஒருபோதும் வெளியே வராது. ஆனால் சிலர் அதை 200 மில்லியன் டாலர்கள் என்று மதிப்பிடுகின்றனர். இந்த நிதியின் மூலம் உள்ளாட்சி, மாநில மற்றும் காங்கிரஸ் தேர்தல்களில் நிறைய செலவு செய்தார்கள், ஆனால் மிகக் குறைந்தளவிலான வெற்றியைத் தான் பெற்றார்கள்”.

1989-ஆம் ஆண்டில், அவர் அஞ்சல் மோசடிக்காக குற்றவாளி என்று அறிவிக்கப்பட்டு, 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார்.

பின்னர் 1992-இல் தேர்தல் வந்தது. லாரௌச் அதில் பங்கேற்க விரும்பினார். சில மாநிலங்களில் அவரது பெயரும் வாக்குச்சீட்டில் இடம்பெற்றது. அவர் மொத்த வாக்குகளில் 0.1% அல்லது 27000 வாக்குகளைப் பெற்றார்.

பின்னர் அவரது தண்டனை குறைக்கப்பட்டு 1994ஆம் ஆண்டு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டார். இதன் பின்னர் 1996, 2000, 2004 மற்றும் 2008-ஆம் ஆண்டு அதிபர் தேர்தல்களிலும் அவர் போட்டியிட்டார்.

நிதி திரட்டும் திறமையும், தேர்தல்களில் நிலைத்தன்மையும் இருந்தும் அவரால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்த முடியவில்லை.

லிண்டன் லாரௌச் 2019 இல் இறந்தார்.

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

ஜோசப் ஸ்மித்

ஜோசப் ஸ்மித்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மார்மோனிசத்தை (Mormonism) நிறுவிய ஜோசப் ஸ்மித், 1844இல் சிறையில் சுட்டுக்கொல்லப்பட்டார்.

ஜோசப் ஸ்மித் 1830-இல் மார்மோனிசத்தை (Mormonism) நிறுவினார். இது கத்தோலிக்க, புராட்டஸ்டன்ட் மற்றும் ஆர்த்தடாக்ஸ் தேவாலயங்களில் இருந்து வேறுபட்டது. இயேசு கிறிஸ்துவை மையமாகக் கொண்டது.

அவர் தனது இயக்கத்திற்குள் பலதார மணம் செய்யும் நடைமுறையையும் அறிமுகப்படுத்தினார்.

"அமெரிக்காவின் முக்கிய மதிப்புகளுக்கு இது ஒரு அச்சுறுத்தலாக பார்க்கப்பட்டது. பலதார மணம் உலகின் மிக மோசமான குற்றமாக கருதப்பட்டது. ஸ்மித்துக்கு 20 மனைவிகள் இருந்ததாக கூறப்படுகிறது” என்கிறார் பேராசிரியர் மோர்கன்.

ஸ்மித் அமெரிக்காவின் மாசசூசெட்ஸைச் சேர்ந்தவர், ஆனால் அவரைப் பின்பற்றுபவர்களுக்கான ஒரு பாதுகாப்பான இடத்தைத் தேடி, இல்லினாய்ஸுக்கு வந்து சேர்ந்தார்.

1940-களில், மார்மோன்கள் மிசிசிப்பி நதிக் கரையில் தங்களுக்கான சொந்த நகரத்தை நிறுவினர், அங்கு அவர்கள் அமைதியாக வாழவும் பிரார்த்திக்கவும் முடியும் என நம்பினர்.

ஸ்மித் மேயராக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஒரு மார்மன் போராளிப் படையையும் உருவாக்கினார். பலதார மணமுறை காரணமாக, அவர் மிகவும் பிரபலமடைந்தார். எனவே அவருக்கு பல எதிரிகள் உருவாகினர்.

ஸ்மித் தனக்கு எதிராக எழுதிய செய்தித்தாள்களின் அச்சு இயந்திரங்களை அழிக்க தனது போராளிகளுக்கு உத்தரவிட்டார். கடைசியில் அவர் சிறை செல்ல அதுவே காரணமாக அமைந்தது.

அவர் 1844 தேர்தல்களில் சீர்திருத்தக் கட்சியின் வேட்பாளராக இருந்தார். அந்தக் கட்சி பலதார மணத்தை ஊக்குவித்தது. ஒவ்வொரு மனிதனும் கடவுள் என்ற ஸ்மித்தின் கருத்துகளை பிரசாரம் செய்தது. எனவே அவரது கருத்துகளால் அவரது எதிரிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரித்தது.

சிறைக்கு வெளியே ஒரு கும்பல் அவரைத் தாக்கியது. பின்னர் சிறையில் அவர் மறைந்திருந்த கட்டடத்தில் வைத்து அவர் சுட்டுக் கொல்லப்பட்டார். ஆனால் 1844 தேர்தலில் சீர்திருத்தக் கட்சி மாற்று வேட்பாளரை அறிவிக்கவில்லை.

டொனால்டு டிரம்ப்

பட மூலாதாரம், REUTERS/JANE ROSENBERG

எனவே அமெரிக்க வரலாற்றில் சிறையில் இருந்தவாறே அதிபர் தேர்தலில் போட்டியிட்ட மூன்று அதிபர் வேட்பாளர்கள் உள்ளனர், மேலும் நான்காவதாக ஜோசப் மால்டோனாடோ-பாசேஜ் என்பவர் நவம்பர் மாதம் நடைபெறவுள்ள தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளார்.

ஜோயி எக்ஸோடிக் (Joe Exotic) என்று அழைக்கப்படும் இந்த ஜோசப், நெட்ஃபிளிக்ஸ் ஆவணப்படமான 'டைகர் கிங்' படத்தின் நட்சத்திரம். 2020ஆம் ஆண்டில் ஜனநாயகக் கட்சி சார்பாக அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விருப்பம் தெரிவித்திருந்தார்.

விலங்குகளைக் கொடுமைப்படுத்துதல் மற்றும் தொழில் போட்டியாளர் என்பதால் மற்றொரு மிருகக்காட்சிசாலையின் உரிமையாளரைக் கொலை செய்ய சதி செய்தது ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் 20 வருட சிறைத்தண்டனை அனுபவித்து வருகிறார்.

சிறைக்குச் சென்றாலும் செல்லாவிட்டாலும், டிரம்பின் நிலைமை மிகவும் தனித்துவமானதாக இருக்காது, ஆனால் சிறையில் இருந்து அதிபர் தேர்தலில் போட்டியிடும் மிக முக்கியமான நபராக அவர் இருக்கலாம்.

அவர் சிறையில் அடைக்கப்படாவிட்டாலும், வட அமெரிக்காவுக்கான பிபிசி நிருபர் ஜான் சுட்வொர்த் கூறியது போல, “பிளவுபட்ட தேசத்தின், 50 சதவீத மக்கள் ஒரு குற்றவாளியை அதிபர் வேட்பாளராகக் கொண்டிருப்பார்கள்”.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)