துபாயில் ரூ.10 லட்சம் கோடியில் 300 செயற்கைத் தீவுகளை உருவாக்கும் கனவுத் திட்டம் - முழு பார்வை

பட மூலாதாரம், Getty Images
கடந்த நூற்றாண்டின் தொடக்கத்தில், ஐக்கிய அரபு அமீரகம் ஆடம்பரமான செயற்கை தீவுகளை உருவாக்குவதற்கான லட்சிய திட்டம் ஒன்றை தொடங்கியது.
நீண்ட காலத்திற்கு முன்பே டிடி காக்கா ஏரியில் செயற்கை தீவுகள் இருந்தன ஐக்கிய அரபு அமீரகத்தின் திட்டம் ஒரு புரட்சிகரமான ஒன்று இல்லை என்றாலும், இந்த திட்டம் உலகம் முழுவதும் கவனத்தை ஈர்த்தது.
இந்த திட்டங்களில் 'தி வேர்ல்ட்' (The World) திட்டம் மிகவும் லட்சியகரமானது. இது சுமார் 300 செயற்கைத் தீவுகளைக் கொண்ட தீவுக்கூட்டமாகும். உலக வரைபடங்களில் காணப்படும் ஏழு கண்டங்களின் வடிவத்தின் மறு உருவாக்கம் இது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் (யுஏஇ) ஷேக் முகமது பின் ரஷித் அல் மக்தூம் என்பவரால் 2003 ஆம் ஆண்டு இந்தத் திட்டம் தொடங்கப்பட்டது.
இந்த திட்டத்தின் கவர்ச்சிகரமான பகுதி என்னவென்றால், பிரிட்டன், அமெரிக்கா, கிரீன்லாந்து மற்றும் சோமாலியா வரை இந்த நாடுகளின் வடிவிலான தீவுகளில், வாங்குபவர்கள் தங்களுக்குப் பிடித்ததைத் தேர்ந்தெடுக்கலாம்.
பத்து லட்சம் கோடி ரூபாய்க்கும் மேலான முதலீட்டில் 32.1 கோடி கனமீட்டர் மணல் மற்றும் 38.6 கோடி டன் கற்களைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இந்த தீவுகளில் உலகப் பணக்காரர்கள் ஆடம்பரமான வீடுகளைக் கட்டலாம்.
"யுஏஇ அதன் முக்கிய வருமான ஆதாரமான எண்ணெயைச் சார்ந்திருப்பதைக் குறைக்கக் கண்டறிந்த ஒரு வழி ரியல் எஸ்டேட் வணிகமாகும்" என்று நியூகேஸில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும், 'எ ஜர்னி இன்டூ தி எரா ஆஃப் ஆர்ட்டிஃபிஷியல் ஐஸ்லேண்ட்ஸ்’ எனும் புத்தகத்தின் ஆசிரியருமான அலாஸ்டயர் பொன்னெட் பிபிசியிடம் கூறினார்.
“நைஜீரியாவும் செயற்கைத் தீவுகளை உருவாக்கும் மாதிரியை நகலெடுத்துள்ளது. ஆனால் அதில் சில வெற்றிகளும், சில தோல்விகளும் உண்டு,'' என்றார்.
யுஏஇ எதிர்பார்த்தபடி செயற்கை தீவுகளின் வணிகம் நன்றாக நடக்கவில்லை என்று தெரிகிறது.

பட மூலாதாரம், Getty Images
"இது உலகின் மிகப்பெரிய கைவிடப்பட்ட திட்டங்களில் ஒன்றாகும்" என்று இணையதளம் ஒன்று தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் தொடங்கி 21 ஆண்டுகள் கடந்துவிட்டன. இரண்டு தீவுகள் மட்டுமே முழுமையாக கட்டப்பட்டன. வானத்திலிருந்து பார்த்தால், உலக வரைபட வடிவிலான இத்தீவுகளின் பெரும்பகுதி பாலைவனத் தீவுகள் போலத் தெரிகிறது.
“வடிவமைக்கப்பட்ட திட்டங்கள் முழுமையாக நிறைவேற்றப்படவில்லை. "தி வேர்ல்ட்"-இல் காணப்பட்ட அனைத்து தீவுகளும் பணிகள் தொடங்கிய பின்னர் மணல் திட்டுகளாக காட்சியளிக்கின்றன" என்று அந்த இணையதளம் சுட்டிக்காட்டுகிறது.
இத்திட்டத்தை மீண்டும் தொடர்வது இன்னும் நிச்சயமற்றதாக உள்ளது. இத்திட்டத்தில் உருவாக்கப்பட்ட செயற்கை தீவுகளில் 60 சதவீதம் விற்பனையாகி விட்டது. இத்தீவுகளை விற்கும் பணியில் ஈடுபட்டுள்ள டெவலப்பர்கள் தங்கள் பணி திட்டமிட்டபடி தொடரும் என்று கூறுகிறார்கள். ஏற்கனவே இந்த தீவுகள் அழிந்து வருவதற்கான அறிகுறிகள் தென்படுவதாக என்று பல ஆய்வுகள் காட்டுகின்றன.
அற்புதமான இந்த திட்டம் 'பேய் வளாகமாக' மாறியது எப்படி?
தி பாம் மற்றும் தி வேர்ல்ட்

பட மூலாதாரம், Getty Images
1999 இல், ஐக்கிய அரபு அமீரகம் தன்னை ஒரு நவீன, சர்வதேச நாடாக உலகுக்கு அறிமுகப்படுத்தியது.
அதே ஆண்டு பர்ப் அல் அராப் (Burb Al Arab) ஹோட்டல் திறக்கப்பட்டது. இது உலகளவில் ஆடம்பரம் என்ற கருத்தாக்கத்தை மறுவரையறை செய்தது.
அதே ஆண்டில், யுஏஇ ஷேக் அல் மக்தூம் "தி பாம் ஜூமேரா” (The Palm Jumeirah) திட்டத்தை அறிவித்தார். பனை மர வடிவில் செயற்கைத் தீவுகளைக் கொண்ட இந்த வளாகத்தில் குடியிருப்பு வீடுகளும், ஹோட்டல் வளாகமும் கட்டப்படும் என்றார்.
இந்த செயற்கைத் தீவுகளின் விற்பனை நன்றாக இருந்தது, இதேமாதிரியான பல திட்டங்களை வடிவமைக்க இது வழிவகுத்தது.
2003 ஆம் ஆண்டில், அல் மக்தூம் "தி வேர்ல்ட்" தயாரிப்புக்கு அனுமதி அளித்தார். இது, துபாய் கடற்கரையில் கட்டப்பட்ட 300 தீவுகளின் வலையமைப்பான ‘பாம் ஜூமேரா’வின் வெற்றியை பிரதிபலிக்கிறது.
"இந்த திட்டத்தில் அதிக ஆர்வம் உள்ளது. இது ‘தி வேர்ல்ட்’ என்று அழைக்கப்படும் தீவுகளின் கூட்டமாகும்” என்றார் அலாஸ்டயர் பொன்னெட்.
இந்த திட்டம் மிகவும் விரிவானது, அதே நேரத்தில் எளிமையானது. 300 செயற்கைத் தீவுகளைக் கொண்ட உலகத்தை உருவாக்குவதும், செல்வந்தர்கள் அவர்கள் விரும்பியதைச் செய்வதற்கு ஒரு சிறிய உலகத்தை உருவாக்குவதும் இந்த திட்டத்தின் குறிக்கோள்.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
“ஒவ்வொரு தீவிலும் மேற்கொள்ளப்படும் திட்டங்களும் அற்புதமானவை. ஒரு சீன கோடீஸ்வரர் தனது தீவில் ஷாங்காய் ஸ்கைலைனை அமைக்க திட்டமிட்டுள்ளார். அதன் முக்கிய சின்னமான ஷாங்காய் கோபுரத்தையும் இது உள்ளடக்கும்,” என்று கார்டியன் நிருபர் ஆலிவர் வைன்ரைட் நினைவு கூர்ந்தார்.
“ஓபுலன்ஸ் ஹோல்டிங்ஸ் என்ற நிறுவனம் சோமாலியா போன்ற வடிவிலான தீவை வாங்கியது. இது ஒரு கடல் குதிரை போல வடிவமைக்கப்பட்டது மற்றும் தீவுவாசிகள் தங்கள் பால்கனியில் இருந்து கோல்ஃப் பந்துகளை அடிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது" என்று வைன்ரைட் கூறினார்.
உண்மையில் இரண்டு தீவுகள் மட்டுமே இதுவரை முடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் ஒன்று கிரீன்லாந்தின் வடிவத்தில் உள்ளது. அதில் ஒரு மாதிரி வீடு நிறுவப்பட்டுள்ளது. இந்த திட்டத்தில் உள்ள அனைத்தும் அனைவருக்கும் தெரியும். குடியிருப்புப் பகுதிகள் மட்டுமல்லாமல், ஓய்வு விடுதி மற்றும் உணவகங்களையும் இது உள்ளடக்கியது.
ஃபார்முலா ஒன் உலக சாம்பியனான மைக்கேல் ஷூமேக்கருக்கு இந்த வீடு பரிசாக வழங்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images
2008-ல் ஏற்பட்ட நிதி நெருக்கடி இந்த திட்டத்தை பாதித்தது.
வீடு வாங்க முடிவு செய்திருந்த பலருக்கு வீடு வாங்க பணம் இல்லாமல் போய்விட்டது.
ஆனாலும், இத்திட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. எனினும், அதில் பெரிய முன்னேற்றம் இல்லை.
"தி வேர்ல்ட் திட்டத்தில் உள்ள மிகப்பெரிய பிரச்னை என்னவென்றால், இத்திட்டத்திற்கு ‘தி பாம்’ திட்டத்தைப் போல துபாயுடன் நேரடி தொடர்பு இல்லை. இந்த தீவுகளில் ஒன்றிலிருந்து மற்றொன்றுக்கு கார்கள் செல்வதற்கு பாலங்கள் எதுவும் இல்லை," என்கிறார் பொன்னெட்.
தற்போது, இந்த திட்டத்தை உருவாக்கிவரும் நக்கீல் பிராப்பர்டீஸ் நிறுவனம், 'தி வேர்ல்ட்' திட்டம் தொடரும் என்று பல சந்தர்ப்பங்களில் அறிவித்தது. ஆனால் இதை தொடர தேவையான நிதிக்காக காத்திருப்பதாக அந்நிறுவனம் கூறுகிறது.
மற்ற திட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images
"தி வேர்ல்ட்" திட்டத்தில் முன்னேற்றம் இல்லாததால், துபாயின் ரியல் எஸ்டேட் வணிகம் நன்றாக இல்லை என்று அர்த்தம் இல்லை.
தற்போது பாம் ஜூமேரா மற்றும் பிற செயற்கை தீவுகளில் 4 ஆயிரம் வீடுகள் உள்ளன. அவற்றில் 25 ஆயிரம் பேர் வசிக்கின்றனர். டஜன்கணக்கான ஹோட்டல்கள் மற்றும் பிற சிறப்பு இடங்களும் தொடர்ந்து செயல்படுகின்றன.
இந்தத் திட்டம் இதுவரை சிறப்பாகச் செயல்பட்டாலும், நகர்ப்புற வளர்ச்சிக்கான இடத்தை உருவாக்க செயற்கைத் தீவுகளைக் கட்டுவது ஆபத்தானது.
“கடல் மட்டம் உயர்வது செயற்கைத் தீவுகளின் வணிகத்தை ஆபத்தில் ஆழ்த்துகிறது. ஆனால் துபாய் ஒரு விஷயத்தில் தனித்துவத்தைக் காட்டி வருகிறது. ஆபத்துகளை எதிர்கொள்ள துபாய் தயங்குவதில்லை. அது விலை உயர்ந்ததாக இருந்தாலும் சரி" என்கிறார் பேராசிரியர் பொன்னெட்.
பாம் ஜுமேரா, தி வேர்ல்ட் மற்றும் டெய்ரா தீவு போன்ற மற்ற வளாகங்களின் கட்டுமானப் பணிகள் நிதிப் பற்றாக்குறையால் முடங்கியுள்ளன. இவற்றை கட்டுவதால் சுற்றுச்சூழல் மாசுபடுவதாக விமர்சனங்கள் உள்ளன.
இந்த திட்டம் சுற்றுச்சூழலுக்கு உகந்ததல்ல என்று கிரீன்பீஸ் எனும் சூழலியல் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. செயற்கைத் தீவுகளை நிர்மாணிப்பது அமீரக கடற்கரையில் உள்ள பவளப்பாறைகளுக்கு கடுமையான அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்று அது கூறுகிறது.
சுற்றுச்சூழலின் கண்ணோட்டத்தில், திட்டத்தின் கட்டுமானத்தால் கடல் சுற்றுச்சூழல் அமைப்புகள் பாதிக்கப்பட்டுள்ளதாக டெவலப்பர் நக்கீல் பிராப்பர்டீஸ் ஒப்புக்கொண்டுள்ளது. திட்டத்தின் கட்டுமானத்தின் போது சேதமடைந்த பவளத் தீவுகளை மீண்டும் கட்டியெழுப்ப கடல் உயிரியலாளர்கள் நிபுணர் குழு நியமிக்கப்படும் என்று அந்நிறுவனம் கூறுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












