மக்களவைத் தேர்தல் முடிவுகள்: ஆட்சியமைக்க கட்சிகளின் அடுத்தடுத்த நகர்வுகள் என்னென்ன?

மக்களவைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை: தற்போதைய நிலவரம் என்ன?

பட மூலாதாரம், Getty Images

இந்தப் பதிவைப் பார்க்க ஜாவா ஸ்கிரிப்ட் உடன் கூடிய நவீன பிரௌசர் மற்றும் சீரான இணைய இணைப்பு தேவை.

முடிவுகள் இன்னும் வரவில்லை.
ஆட்சியமைக்க 272 இடங்கள் தேவை
முடிவுகள் இன்னும் வரவில்லை.
அண்மைத் தகவலைப் பார்க்க பக்கத்தைப் புதுப்பிக்கவும்

தேர்தல் முடிவுகள் நேற்று வெளியான நிலையில், அடுத்த ஆட்சி அமைவது தொடர்பான பல்வேறு நிகழ்வுகள் இந்திய அரசியல் அரங்கில் நடைபெற்றுவருகின்றன. பாஜக தலைமையிலான கூட்டணி, காங்கிரஸ் தலைமையிலான 'இந்தியா' கூட்டணியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் இங்கே வழங்கப்படுகின்றன.

இன்று பிரதமர் நரேந்திர மோதி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இதில், நடைபெற்றுவரும் 17வது மக்களவையை கலைக்க மோதி பரிந்துரைத்ததாக, ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது. இந்த மக்களவை, ஜூன் 16 அன்றுடன் முடிவுக்கு வருகிறது.

இதையடுத்து, பிரதமர் மோதி குடியரசு தலைவர் மாளிகையில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை மத்திய அமைச்சர்கள் குழுவுடன் சந்தித்து, தன் ராஜினாமா கடிதத்தை அளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட திரௌபதி முர்மு, புதிய அரசாங்கம் பொறுப்பேற்கும் வரை பிரதமராக தொடருமாறு மோதியை கேட்டுக்கொண்டார். இதைத்தொடர்ந்து, மோதி காபந்து பிரதமராக நீடிப்பார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

‘பிரதமர் பதவியேற்பு நிகழ்வுக்கு செல்வது குறித்து முடிவு செய்யவில்லை’

நடிகர் ரஜினிகாந்த்

பட மூலாதாரம், RAJINIKANTH / X

தேசிய ஜனநாயகக் கூட்டணியின் தலைவராக நரேந்திர மோதியை கூட்டணிக் கட்சித் தலைவர்கள் ஒருமனதாகத் தேர்ந்தெடுத்ததாக ஏ.என்.ஐ செய்தி முகமை தெரிவித்துள்ளது.

இதற்கிடையே தமிழகம் மற்றும் ஆந்திராவில் அமோக வெற்றி பெற்றுள்ள "எனது நண்பர்கள் ஸ்டாலின் மற்றும் சந்திர பாபு நாயுடுவுக்கு வாழ்த்துகள்" என்று பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியுள்ளார் நடிகர் ரஜினிகாந்த்.

மேலும், மூன்றாவது முறையாக மத்தியில் ஆட்சியமைக்க இருக்கும் பிரதமர் மோதி அவர்களுக்கும் எனது பாராட்டுகள் என்று தெரிவித்தார் அவர்.

அதேபோல், பிரதமர் பதவியேற்பு விழாவுக்குச் செல்வீர்களா என்று கேட்கப்பட்டபோது, அதுகுறித்து இன்னும் முடிவெடுக்கவில்லை என்றும் கூறினார் அவர்.

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம், ANI

‘நிதிஷ்குமார் பிகாருக்கு சிறப்பு அந்தஸ்த்தை வாங்கித்தர வேண்டும்’

மக்களவைத் தேர்தல் 2024

பட மூலாதாரம், ANI

தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தனது ஆதரவை தெரிவித்துள்ள நிதிஸ் குமார், கண்டிப்பாக பிகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்தை வாங்கித் தர வேண்டும் என்று கூறியுள்ளார் தேஜஸ்வி யாதவ்.

செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய தேஜஸ்வி யாதவ், “நிதிஷ்குமார் தான் கிங் மேக்கர் என்றால் அவருக்கு இதுதான் நல்ல வாய்ப்பு. பிகாரின் நீண்ட கால கோரிக்கைகளான மாநில சிறப்பு அந்தஸ்து கோரிக்கை மற்றும் நாடு முழுவதும் சாதிவாரி கணக்கெடுப்பு ஆகியவற்றை மத்திய அரசைக் கொண்டு சாத்தியப்படுத்த வேண்டும்” என்று கூறினார்.

மேலும், “முதல்முறையாக மோதியின் மேஜிக் முடிவுக்கு வந்துள்ளது. தனிப்பெரும்பான்மைக்கு வெகுதூரத்தில் உள்ளனர். இரண்டு முக்கிய கூட்டணி கட்சிகள் இல்லாமல் அவர்களால் ஆட்சியமைக்கவே முடியாது” என்று கூறினார் அவர்.

பாஜக தனித்து 240 தொகுதிகளிலும், கூட்டணியாக 292 இடங்களிலும் வென்றுள்ளது. இந்நிலையில் ஆந்திராவில் வெற்றி பெற்ற சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சி மற்றும் பிகாரின் நிதிஷ்குமார் ஆகியோர் ஆதரவோடு பாஜக மீண்டும் மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பது உறுதியாகியுள்ளது.

சீனா

பட மூலாதாரம், @MFA_CHINA

நரேந்திர மோதியின் வெற்றி குறித்து சீனா கூறியது என்ன?

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றுள்ளதற்கு சீனா சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீன வெளியுறவுத்துறையின் செய்தித்தொடர்பாளர் மாவோ நிங், “மக்களவைத் தேர்தலில் வென்றுள்ள மோதி மற்றும் அவரது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாழ்த்துக்கள். ஆரோக்கியமான மற்றும் நிலையான இந்தியா - சீனா உறவை எதிர்பார்க்கிறோம்” என்று கூறியுள்ளார்.

மோதி மீது ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

ஜெய்ராம் ரமேஷ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஜெய்ராம் ரமேஷ்

தொடர்ந்து மூன்றாவது முறையாக ஆட்சியமைப்பது குறித்து பாஜக தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தொடர்ந்து மூன்று முறை வெற்றி பெற்று ஆட்சியமைத்ததுடன் நரேந்திர மோதியை ஒப்பிட்டு அவர்கள் பேசிவருகின்றனர். இதனை காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் விமர்சித்துள்ளார்.

இதுதொடர்பாக, ஜெய்ராம் ரமேஷ் தன்னுடைய எக்ஸ் சமூக ஊடக பக்கத்தில், “1962-ல் இருந்து ஒரு அரசாங்கம் தொடர்ந்து மூன்று முறை தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று காபந்து பிரதமர் தனது சுருங்கிய மார்பைத் தட்டிக்கொண்டு பெருமை பேசுகிறார்.

1952 தேர்தலில் 364 இடங்களையும், 1957 தேர்தலில் 371 இடங்களையும் 1962 தேர்தலில் 361 இடங்களையும் வென்று நேரு பிரதமரானார் என்ற வரலாற்றை, திரித்துக் கூறுவதில் எவ்வளவு வல்லவராக இருந்தாலும் மாற்றி எழுத முடியாது. 2024 தேர்தலில் நரேந்திர மோதி 240 இடங்களை பெற்றுள்ளார். இது அவருக்கு எதிராக வழங்கப்பட்ட பெரிய தீர்ப்பு. ஆனால், அவர் இந்த தீர்ப்பை சீர்குலைக்கும் நோக்கத்தில் உள்ளார்” என்றார்.

அண்ணாமலை கூறியது என்ன?

கே. அண்ணாமலை

பட மூலாதாரம், @ANNAMALAI_K TWITTER

படக்குறிப்பு, கே. அண்ணாமலை

தமிழகத்தில் மொத்தம் உள்ள 39 தொகுதிகளையும் திமுக கைப்பற்றியுள்ளது. பாஜக கூட்டணி தோல்வியடைந்த நிலையில், அக்கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை, சென்னை கமலாலயத்தில் இன்று செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.

அப்போது, “பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணி பெரிய சரித்திரத்தைப் படைத்துள்ளது. முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேருவைப் போன்று மூன்றாவது முறையாக தொடர்ந்து ஆட்சியமைக்கும் சாதனையை நிகழ்த்துக் காட்டியுள்ளார் நரேந்திர மோதி.

தமிழக வாக்காளர்களுக்கு நன்றி. பாஜகவுக்கு சில மாநிலங்களில் எதிர்பார்த்த இடங்கள் கிடைக்கவில்லை.

தமிழகத்தில் பாஜக வளர்ந்திருக்கிறது என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இது எங்களுக்கு தோல்வி அல்ல. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பாக இங்கிருந்து எம்.பி.க்களை அனுப்பி வைக்க வேண்டும் என்ற இலக்கு எங்களுக்கு இருந்தது. அந்த இலக்கை அடைய முடியாததில் வருத்தமே. ஆனால், வாக்கு சதவீதம் அதிகரித்திருக்கிறது. மக்கள் ஆதரவு அளித்திருக்கின்றனர்.

அடுத்து வரும் தேர்தல்களில் வெற்றி வேட்பாளர்களை நாடாளுமன்றத்திற்கு அனுப்புவோம். என்ன தவறு நிகழ்ந்தது என்பதை ஒருவாரத்தில் பரிசீலிப்போம். எத்தனையோ இடங்களில் இதுவரை பெறாத வாக்குகளை வாங்கியிருக்கிறோம். பணம் கொடுக்காமல் இந்த வாக்குகளை வாங்கியிருக்கிறோம்” என்றார்.

மேலும், “மக்களின் தீர்ப்பை தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம். மக்கள் யோசித்துத்தான் தீர்ப்பு வழங்குவார்கள். இங்கு வெற்றிபெற்றுள்ள திமுக கூட்டணி எம்.பிக்கள் மத்திய அரசுடன் இணைந்து பணியாற்ற ஒத்துழைப்பு அளிப்போம். திமுக தலைமையிலான கூட்டணிக்கு வாழ்த்துகள். இரண்டாவது முறையாக பெரிய வெற்றியை அக்கூட்டணி பெற்றுள்ளது” என கூறினார் அண்ணாமலை.

இந்திய நாடாளுமன்றத்தில் மொத்தமுள்ள 543 இடங்களில் அறுதிப் பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை. ஆனால், ஆளும் பாரதிய ஜனதா கட்சியால் அதை எட்ட முடியவில்லை. பாஜக மட்டும் 240 இடங்களையே பிடித்திருக்கிறது.

இதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் தெலுங்கு தேசம் 16 இடங்களையும் சிவ சேனாவின் ஷிண்டே பிரிவு 7 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களையும் ராஷ்ட்ரிய லோக் தளம் 2 இடங்களையும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையும் பெற்றுள்ளன. மற்ற சிறிய கட்சிகள் ஆறு இடங்களையும் பெற்றுள்ளன.

பாஜக ஆட்சியமைக்க கூட்டணி கட்சிகளின் தேவை என்பதால் அக்கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு முக்கியத்துவம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, 12 இடங்களை பிடித்த நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் மற்றும் 16 இடங்களை பிடித்த சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் கட்சியும் தேர்தல் முடிவுகளை தொடர்ந்து என்ன முடிவெடுக்க உள்ளன என்பது முக்கியமாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறவுள்ளது. இதற்காக கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லிக்கு வந்த வண்னம் உள்ளனர்.

ஆந்திராவில் 16 மக்களவை இடங்களை பிடித்த சந்திரபாபு நாயுடு, டெல்லிக்கு புறப்படுவதற்கு முன்னதாக ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சி குறித்து செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அப்போது, "உங்களுக்கு எப்போதும் (ஊடகங்கள்) செய்திகள் வேண்டும். இந்த நாட்டில் பல்வேறு அரசியல் மாற்றங்களை நான் சந்தித்துள்ளேன். நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியில் உள்ளோம். கூட்டணி கட்சிகளின் கூட்டத்தில் பங்கேற்க செல்கிறேன்" என்றார்.

சந்திரபாபு நாயுடு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சந்திரபாபு நாயுடு

'இந்தியா' கூட்டணியின் கூட்டம்

இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி 99 இடங்களையும் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களையும் தி.மு.க. 22 இடங்களையும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 9 இடங்களையும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 7 இடங்களையும் சிபிஎம், ஆர்.ஜே.டி. ஆகியவை தலா 4 இடங்களையும் மற்ற கட்சிகள் இணைந்து 19 இடங்களையும் பிடித்துள்ளன. மொத்தமாக அக்கூட்டணி 234 இடங்களை வென்றுள்ளன.

'இந்தியா' கூட்டணி கட்சி தலைவர்களின் கூட்டம் இன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளதாக, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக 'இந்தியா' கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் டெல்லிக்கு வருகை தந்தவண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், இக்கூட்டத்தில் கலந்துகொள்வதற்காக தேசியவாத காங்கிரஸ் கட்சியின் (சரத்பவார் அணி) தலைவர் சரத்பவார் டெல்லிக்கு வந்துள்ள நிலையில் செய்தியாளர்களை சந்தித்தார்.

அப்போது, நேற்று தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், பாஜக கூட்டணியில் உள்ள ஐக்கிய ஜனதா தளம் கட்சியின் தலைவர் நிதிஷ் குமார் மற்றும் தெலுங்கு தேசம் கட்சியின் தலைவர் சந்திரபாபு நாயுடுவை தொடர்புகொண்டு சரத்பவார் பேசியதாக வெளியான தகவலை அவர் மறுத்தார்.

"நான் அவர்களிடம் பேசமாட்டேன். 'இந்தியா' கூட்டணியின் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டால் நான் பேசுவேன். இப்போது அவர்களிடம் நான் பேசவில்லை" என்றார், சரத்பவார்.

சரத் பவார்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சரத் பவார்

பதவி விலக முன்வந்த தேவேந்திர பட்னாவிஸ்

மகாராஷ்டிராவில் பாஜக குறைவான இடங்களை பெற்றதற்கு பொறுப்பேற்கும் வகையில் தனது பதவியை ராஜினாமா செய்வதற்கு அம்மாநில துணை முதலமைச்சர் தேவேந்திர பட்னாவிஸ் முன்வந்துள்ளார்.

தேவேந்திர பட்னாவிஸ்

பட மூலாதாரம், ANI

நடந்து முடிந்த மக்களவை தேர்தலில் மகாராஷ்டிராவில் காங்கிரஸ் 13 இடங்களையும் அதன் கூட்டணி கட்சிகளான சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) 9 இடங்களையும் தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார் அணி) எட்டு இடங்களையும் வென்றுள்ளது.

பாஜக 9 இடங்களை மட்டுமே வென்றுள்ளது. அதன் கூட்டணி கட்சியான சிவசேனா (ஏக்நாத் ஷிண்டே) ஏழு இடங்களிலும் தேசியவாத காங்கிரஸ் (அஜித்பவார்) ஒரு இடத்திலும் வெற்றி பெற்றுள்ளது.

இந்நிலையில், துணை முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு கட்சிப் பணியாற்ற விரும்புவதாக தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக பேசிய அவர், “மகாராஷ்டிராவில் பாஜகவின் தோல்விக்கு நான் தான் முழு காரணம். அதை நான் ஏற்றுக்கொள்கிறேன். நான் தோல்வியைக் கண்டு ஓடும் நபர் அல்ல. கட்சியை ஒருங்கிணைத்து மக்களிடம் செல்வதற்கான புதிய உத்தியை நாங்கள் தயாரிப்போம்” என்றார்.

மாலத்தீவு அதிபர் கூறியது என்ன?

மாலத்தீவு அதிபர் முகமது முய்சு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு

நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி 292 இடங்கள் பெற்றதற்கு, மாலத்தீவு அதிபர் முகமது முய்சு பிரதமர் நரேந்திர மோதிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

முய்சுவுக்கு நன்றி தெரிவித்துள்ள நரேந்திர மோதி, மாலத்தீவு இந்தியாவின் முக்கிய கூட்டாளி என கூறினார்.

“2024 மக்களவை தேர்தலில் வெற்றி பெற்றதற்கு பிரதமர் மோதி தலைமையிலான பாஜகவின் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வாழ்த்துகள்" என, முய்சு சமூக ஊடகமான எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

“இருநாடுகளின் வளர்ச்சிக்காக இணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்கியுள்ளேன்” என அவர் கூறியுள்ளார்.

இதற்கு நன்றி தெரிவித்துள்ள பிரதமர் மோதி, “மாலத்தீவு இந்தியாவின் அண்டை நாடு மற்றும் முக்கியமான கூட்டாளி. இரு நாடுகளுக்கிடையேயான உறவை பலப்படுத்துவதற்காக எங்களின் முயற்சிகள் இருக்கும்” என தெரிவித்துள்ளார்.

முகமது முய்சு மாலத்தீவு அதிபரானதிலிருந்து இரு நாடுகளுக்கிடையே பதற்றம் அதிகரித்தது.

அதிபரானவுடன் மாலத்தீவிலிருந்து தங்கள் துருப்புகளை திரும்ப பெறுமாறு இந்தியாவை முய்சு கேட்டுக்கொண்டார்.

இந்தாண்டின் தொடக்கத்தில் மாலத்தீவு அமைச்சர்கள் பிரதமர் மோதி குறித்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து, அவர்கள் அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டனர்.

2024 மக்களவைத் தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி நேற்று நடைபெற்றது. இறுதி முடிவுகளின் அடிப்படையில், பாஜக கூட்டணி 292 இடங்களிலும், எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 234 இடங்களிலும் வென்றுள்ளன.

வாரணாசி தொகுதியில் பிரதமர் மோதி வெற்றி பெற்றுள்ளார். காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி தான் போட்டியிட்ட ரே பரேலி, வயநாடு தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளார்.

தமிழ்நாட்டில் கோயம்புத்தூர், நீலகிரி, வட சென்னை, தென் சென்னை, மத்திய சென்னை, சிதம்பரம், திருச்சிராப்பள்ளி, சிவகங்கை, மதுரை, விருதுநகர், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது.

தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணியில் போட்டியிட்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணியும், அதிமுக கூட்டணியில் தேமுதிமு சார்பில் விருதுநகர் தொகுதியில் போட்டியிடும் விஜய பிரபாகர் ஆகியோர் முன்னிலையில் இருந்தனர்.

தமிழ்நாட்டில் திமுக வெற்றி பெற்றுள்ளதை அக்கட்சியினர் கொண்டாடினர்.

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

மக்களவைத் தேர்தல் முடிவுகளை பிபிசி தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் தெரிந்துகொள்ளலாம். பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனல் மூலமாகத் தகவல்களைப் பெற இங்கே கிளிக் செய்யவும்.

மக்களுக்கு நன்றி தெரிவித்து பிரதமர் மோதி உரை

இந்திய அளவில் 290க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில் "மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி" தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.

இதுதொடர்பாக பிரதமர் மோதி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “இந்த வெற்றியை வழங்கியுள்ள மக்களுக்குத் தலை வணங்குகிறேன். இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்துவதற்காக உழைத்த அனைத்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.

மேலும், ஒடிஷாவில் பாஜக வெற்றி அடைந்ததற்கும், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றதற்கும் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோதி.

இதைத் தொடர்ந்து பாஜக அலுவலகத்தில் இருந்து நேரடியாக மக்களிடம் பேசியுள்ளார் மோதி.

அவர் பேசுகையில், வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, ஒடிஷா வெற்றி குறித்தும், கேரளாவில் முதல் நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றுள்ளது குறித்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

“எனது அம்மாவின் மறைவிற்குப் பிறகு நடந்த முதல் தேர்தலில் நாட்டு மக்கள் அவர் இல்லாத நினைவே எனக்கு வரவிடவில்லை. இந்த நாட்டின் தாய்மார்களும், சகோதரிகளும் எனக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளனர்.”

தொடர்ந்து பேசிய அவர், “எந்தவொரு கட்சியும் தொடர்ந்து மூன்றாவது முறையாக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்த நாட்டு மக்கள் பாஜக மீதும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதும் நம்பிக்கை வைத்து இந்த வெற்றியை அளித்துள்ளனர். இந்த வெற்றி உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வெற்றி” என்று கூறினார்.

இதோடு இந்தத் தேர்தலைத் திறன்மிக்க வழியில் நடத்தி முடித்துள்ள தேர்தல் ஆணையத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் மோதி.

தேர்தல் முடிவுகள் பற்றி ராகுல் காந்தி கூறியது என்ன?

மக்களவைத் தேர்தல் முடிவுகளை பிரதமர் மோதிக்கு எதிரான மக்களின் தீர்ப்பு என்று காங்கிரஸ் கட்சி கூறியுள்ளது. செய்தியாளர்களைச் சந்தித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இது அவரது தார்மிக மற்றும் அரசியல் ரீதியிலான தோல்வி" என்று கூறினார்.

மக்களின் இந்தத் தீர்ப்பு அரசியல் சாசனத்தைக் காப்பதற்கு உதவியிருக்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார். மக்கள் மோதியைப் புறக்கணித்து விட்டனர் என்றும் அவர் பேசினார்.

“அரசியலமைப்பு சட்டத்தைக் காப்பாற்றுவதே எங்களின் போராட்டமாக இருந்தது. மக்கள், கூட்டணி கட்சியினர், காங்கிரஸ் தலைவர்கள், கட்சி தொண்டர்கள் ஆகியோருக்கு மனதின் ஆழத்திலிருந்து நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார் ராகுல் காந்தி.

மேலும், “பங்குச்சந்தையில் அதானி நிறுவன பங்குகளை நீங்கள் கவனிக்க வேண்டும். மோதியை மக்கள் அதானியுடன் நேரடியாக இணைத்துப் பார்க்கின்றனர். இருவருக்கும் ஊழல்களில் நேரடி உறவு உள்ளது. எங்களுக்கு நரேந்திர மோதி, அமித் ஷா வேண்டாம் என மக்கள் கூறுவதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன” என்றார்.

ராகுல் காந்தி

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் முடிவுகள் பற்றி மம்தா பானர்ஜி கூறியது என்ன?

பிரதமர் நரேந்திர மோதி உடனடியாக பதவி விலக வேண்டும் என, மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.

தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய மம்தா பானர்ஜி, “பிரதமர் மோதிக்கு பெரும்பான்மை இடங்கள் கிடைக்கவில்லை என்பது எனக்கு மகிழ்ச்சியாக இருக்கிறது. அவர் நம்பகத்தன்மையை இழந்துவிட்டார். எனவே, அவர் உடனடியாக பதவி விலக வேண்டும். ஏனெனில், இந்த முறை (தேர்தலில்) 400 இடங்களை தாண்டி வெற்றி பெறுவோம் என அவர் கூறியிருந்தார்” என்றார்.

 நட்சத்திர வேட்பாளர்களின் நிலை

தமிழ்நாடு: 40/40 வெற்றி குறித்து மு.க.ஸ்டாலின் கூறியது என்ன?

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் திமுக - காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணி 40க்கு 40 இடங்களையும் வென்றுள்ள நிலையில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பத்திரிகையாளர்களைச் சந்தித்துள்ளார்.

அதில் அனைத்துக் கட்சியினருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்ட ஸ்டாலின், பிரதமர் மோதிக்கு எதிரான அலை வீசுவதை இந்தத் தேர்தல் முடிவுகள் காட்டுவதாகக் கூறியுள்ளார்.

மேலும், “தங்களுக்கு யாருமே எதிரிகள் இல்லை என்று பாஜக ஒரு பிம்பத்தைக் கட்டமைத்தது. ஆனால் தற்போதோ ஆட்சியமைக்கப் பெரும்பான்மை இடங்களைக்கூட பெற முடியாத நிலைக்கு பாஜக தள்ளப்பட்டது” என்று கூறியுள்ளார்.

மு.க.ஸ்டாலின்

பட மூலாதாரம், Getty Images

“சமீபத்தில்கூட கருத்துக்கணிப்பு என்ற பெயரில் பாஜக உளவியல் தாக்குதலை ஏற்படுத்தியது. ஆனால், அத்தகைய பாஜகவின் பணபலம், அதிகார துஷ்பிரயோகம் மற்றும் ஊடக பரப்புரை அனைத்தையும் கடந்து இந்தியா கூட்டணி பெற்றுள்ள இந்த வெற்றி வரலாற்றுச் சிறப்புமிக்கது.”

தொடர்ந்து பேசிய அவர், இந்தத் தேர்தலில் பாஜகவின் கனவு பலிக்கவில்லை என்றும், அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கும் அனைத்து முயற்சிகளையும் திமுக முன்னெடுக்கும் என்றும் கூறினார்.

அதேபோல் பிரதமர் பதவிக்கு முன்னிறுத்தப்படுவீர்களா என்ற கேள்வி கேட்கப்பட்டபோது, “என்னுடைய உயரம் எனக்குத் தெரியும். ஏற்கெனவே பலமுறை இதற்குப் பதில் அளித்துவிட்டேன். அதுபற்றிப் பிறகு பேசலாம்” என்று கூறினார்.

நாடாளுமன்ற தேர்தல் 2024

‘பாடமும் படிப்பினையும் கிடைத்துள்ளது’ – எடப்பாடி பழனிசாமி

“நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் எதிர்பார்த்தது போலவே, அதிகார பலமும், பண பலமும், பொய்ப் பிரசார பலமும் அறத்திற்கு அப்பாற்பட்ட சூழ்ச்சி பலமும் மிகுந்தவர்களுக்குச் சாதகமாக வந்துள்ளன,” அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், அதிமுகவுக்கு வாக்களித்த வேட்பாளர்களுக்கும் கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த மக்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக்கொண்டுள்ள அவர், “இந்தத் தேர்தல் முடிவு நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும் படிப்பினையும் கிடைத்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக மகத்தான வெற்றி பெறும்,” என்றும் கூறியுள்ளார்.

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

காஷ்மீர்: சிறையிலிருந்தவாறே வெற்றிபெற்ற ‘பொறியாளர் ரஷீத்’

‘பொறியாளர் ரஷீத்’

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்ததாக கூறப்படும் வழக்கில் கைது செய்யப்பட்ட ரஷீத் 2019ஆம் ஆண்டு முதல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்

2024 மக்களவைத் தேர்தலில், காஷ்மீரில் பயங்கரவாதச் செயல்களுக்கு நிதியுதவி அளித்த வழக்கில் 2019 முதல் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் 1,00,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது அனைவரையும் ஆச்சரியப்பட வைத்துள்ளது.

‘பொறியாளர் ரஷீத்’ என்று அழைக்கப்படும் ஷேக் அப்துல் ரஷீத், காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றுள்ளார். ‘ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சியைச்’ சேர்ந்த முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவை அவர் தோற்கடித்துள்ளார்.

"புறக்கணிக்க முடியாத ஒன்றை ஏற்றுக்கொள்ள வேண்டிய தருணம் இது என்று நான் நினைக்கிறேன். வடக்கு காஷ்மீரில் வெற்றி பெற்ற பொறியாளர் ரஷீத்துக்கு எனது வாழ்த்துகள்" என்று தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டிருந்தார் உமர் அப்துல்லா.

ஒரு தனித்துவமான தலைவர் என்று விவரிக்கப்படும் ரஷீத், அவரது சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துகளுக்காகவும் அறியப்படுகிறார்.

அவர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். எனவே அவரது மகன் தான் அவர் சார்பாக பிரசாரம் செய்தார். பிராந்தியத்தின் இளைஞர்களை ஒருங்கிணைத்து அவரது மகன் நடத்திய ரோட்ஷோக்கள் ஆயிரக்கணக்கான மக்களை ரஷீத்தின் பக்கம் ஈர்த்தது.

தமிழ்நாட்டின் 39 மக்களவைத் தொகுதிகள்

மதுரை மருத்துவக் கல்லூரி
படக்குறிப்பு, மதுரை மருத்துவக் கல்லூரியில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவு செய்யப்பட்ட வாக்குகள் எண்ணும் பணி நடைபெற்று வருகிறது.

ஏழு கட்டங்களாக நடந்த இந்த மக்களவைத் தேர்தலில், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முதல் கட்டத்திலேயே தேர்தலைச் சந்தித்தது. தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளிலும் புதுச்சேரியில் உள்ள ஒரு தொகுதியிலும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்குப் பதிவு நடந்தது.

தமிழ்நாட்டில் 39 தொகுதிகளில் 950 வேட்பாளர்கள் களம் கண்டனர். தமிழ்நாட்டிலேயே அதிகபட்சமாக கரூர் தொகுதியில் 54 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். மாநிலத்திலேயே குறைவாக நாகப்பட்டினம் தொகுதியில் 9 வேட்பாளர்கள் போட்டியிட்டனர்.

தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணி என்ற பெயரில் தி.மு.க., காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, ம.தி.மு.க., கொங்கு நாடு மக்கள் தேசியக் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் ஓரணியில் போட்டியிட்டன.

அ.தி.மு.க. கூட்டணியில் புதிய தமிழகம், எஸ்.டி.பி.ஐ., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் இணைந்து தேர்தலைச் சந்தித்தன.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் பாரதிய ஜனதா கட்சியுடன் பாட்டாளி மக்கள் கட்சி, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி, அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம், இந்திய ஜனநாயகக் கட்சி, புதிய நீதி கட்சி, இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழகம், தமிழக மக்கள் முன்னேற்றக் கழகம், ஓ. பன்னீர்செல்வம் அணி ஆகியவை இணைந்து தேர்தலைச் சந்தித்தன.

இவை தவிர, நாம் தமிழர் கட்சி 40 தொகுதிகளிலும் தனித்து போட்டியிட்டது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)