கோவை மக்களை சாதி ரீதியாக அணி திரட்டுவது சாத்தியமா? - பிபிசி கள ஆய்வு

கோயம்புத்தூர்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டின் மேற்கு மாவட்டங்களில் ஒன்றான கோயம்புத்தூர், இந்த நாடாளுமன்றத் தேர்தலில் மிகவும் கவனிக்கப்படும் தொகுதிகளில் ஒன்றாக மாறியிருக்கிறது. நீண்ட காலமாகவே கோயம்புத்தூரும் அதனை ஒட்டியுள்ள மாவட்டங்களும் பா.ஜ.கவுக்கு சாதகமாக இருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.

இந்தத் தேர்தலில் பா.ஜ.கவின் மாநிலத் தலைவர் அண்ணாமலையும் இந்தத் தொகுதியில் போட்டியிடுகிறார். ஆகவே, இந்தத் தொகுதியின் தேர்தல் முடிவு, பல்வேறு விஷயங்களை தீர்மானிக்கும் நிலையில் இருக்கிறது.

கோவை நாடாளுமன்றத் தொகுதியில் கோவை வடக்கு, கோவை தெற்கு, சிங்காநல்லூர், பல்லடம், கவுண்டம்பாளையம், சூலூர் ஆகிய ஆறு சட்டமன்றத் தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த ஆறு தொகுதிகளில் ஐந்து தொகுதிகள் அ.தி.மு.க. வசம் உள்ளன. கோவை தெற்கு தொகுதி மட்டும் பா.ஜ.க. வசம் உள்ளது.

கோயம்புத்தூரில் அ.தி.மு.க., தி.மு.க., பா.ஜ.க. என கடுமையான மும்முனைப் போட்டி நிலவுகிறது. அரசியல் கட்சிகளின் பிரச்சாரங்களைத் தாண்டி இந்தத் தொகுதியில் ஆதிக்கம் செலுத்தும் வேறு விஷயங்கள் என்னென்ன?

மும்முனைப் போட்டியில் கோவை

ஏழு முறை இடதுசாரிகள் வென்ற தொகுதி

இந்த நாடாளுமன்றத் தொகுதியில் ஏழு முறை இடதுசாரிகளும், ஆறு முறை காங்கிரஸ் கட்சியும், தி.மு.கவும் பா.ஜ.கவும் தலா இரண்டு முறையும் அ.தி.மு.க. ஒரு முறையும் வெற்றிபெற்றுள்ளன.

பொதுவாகவே இடதுசாரிகளுக்கு செல்வாக்குள்ள தொகுதியாக கருதப்பட்டாலும், கடந்த இருபத்தைந்தாண்டுகளில் பா.ஜ.கவின் செல்வாக்கும் இந்தத் தொகுதியில் அதிகரித்து வந்திருக்கிறது.

ஜவுளித் தொழிற்சாலைகள், நூற்பாலைகள், விசைத்தறி கூடங்கள், உதிரிபாக தொழிற்சாலைகள், பம்ப் தொழிற்சாலைகள், வாகன உதிரி பாகங்கள் என தமிழ்நாட்டின் தொழிற்கூடமாக இருக்கும் இடம் கோயம்புத்தூர். அதேபோல, கல்வி நிறுவனங்களுக்கும் மிகப் பெரிய மருத்துவமனைகளுக்கும் பஞ்சமில்லாத ஊராகவும் கோவை இருக்கிறது.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் இங்குள்ள தொழிற்துறை கடுமையான பிரச்னைகளைச் சந்தித்து வருகிறது. குறிப்பாக, ஜிஎஸ்டி வரி விதிப்பு செயல்படுத்தப்படும் விதம், பண மதிப்பிழப்பு நடவடிக்கை ஆகியவை இங்குள்ள தொழில்துறை மீது கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது.

அதேபோல, போக்குவரத்து நெரிசல், குடிநீர் பிரச்சனை போன்ற உள்ளூர் பிரச்னைகளும் தேர்தலில் முக்கிய தாக்கத்தை செலுத்துகின்றன.

மும்முனைப் போட்டியில் கோவை

தொழில்துறையில் உள்ள பிரச்னைகள்

கோயம்புத்தூரில் உள்ள பல்வேறு தொழில்துறையினரிடம் தேசிய கட்சிகளுக்கு ஆதரவான மனநிலையே உள்ளது. இந்த முறை சக்தி வாய்ந்த தேசிய கட்சியாக பா.ஜ.க. பிரச்சாரத்தை முன்னெடுத்துவரும் நிலையில், பலரது கவனமும் அந்தக் கட்சியின் மீது திரும்பியிருக்கிறது. இருந்தபோதும் ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படும் விதம் பல சிறு குறு தொழில்துறையினரை பாதித்திருப்பதை பல தரப்பினரும் சுட்டிக்காட்டுகிறார்கள்.

"இப்போது ஜிஎஸ்டி நடைமுறைப்படுத்தப்படுவதில் பல இடைஞ்சல்கள் உள்ளன. எங்கள் பில்லில் சிறிய தவறு இருந்தாலும் தொந்தரவு செய்கிறார்கள். அதை நிறுத்த வேண்டும். புதிதாக தொழிற்சாலைகளைத் துவங்கச் சொல்கிறார்கள். ஆனால், இருக்கும் தொழிலகங்களையே நடத்த முடியவில்லை. ஆர்டர்களே இல்லை. சிறு குறு தொழில்துறையில் வட இந்தியா கடுமையான போட்டியை ஏற்படுத்தியிருக்கிறது."

"நமக்கான மூலப்பொருட்கள் அங்கிருந்துதான் வர வேண்டியிருக்கிறது. அதனை இங்கு கொண்டுவர செலவு செய்ய வேண்டியிருக்கிறது. பிறகு, உற்பத்தி செய்யப்பட்ட பொருட்களை கொண்டுசேர்க்கவும் செலவுசெய்ய வேண்டியிருக்கிறது. ஆனால், அங்கிருப்பவர்களுக்கு அந்த பிரச்னை இல்லை."

"ஆகவே, அவர்களால் குறைந்த செலவில் இந்த வேலைகளைச் செய்ய முடிகிறது. இதற்கு ஒரு தீர்வு உடனடி தேவையாக இருக்கிறது. இல்லாவிட்டால் தொழில்செய்வது கடினம்" என்கிறார் கோசிமா அமைப்பின் முன்னாள் தலைவரான லோகநாதன்.

ஆனால், இவரைப் பொறுத்தவரை பிசினஸ் - பிசினஸ் உற்பத்தியில் ஈடுபடுபவர்களுக்கு ஜிஎஸ்டியால் பெரிய பாதிப்பு இல்லை என்கிறார். மேலும், மத்திய அரசு சிறு குறு தொழில்துறைக்கு பல திட்டங்களை அறிவித்தாலும், அவர்கள் விதிக்கும் விதிமுறைகளால் அவற்றைப் பயன்படுத்த முடிவதில்லை. வரவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இந்த விஷயத்தில் உதவிசெய்தால் நன்றாக இருக்கும் என்கிறார் லோகநாதன்.

இந்தியாவின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறு குறு மத்திய தொழில்துறையின் பங்களிப்பு கிட்டத்தட்ட 30 சதவீதம் அளவுக்கு இருந்தாலும் மத்திய அரசு, இந்தத் துறைக்குப் போதுமான ஊக்கத்தை அளிப்பதில்லை என்கிறார் கோசியா அமைப்பின் தலைவரான ரவீந்திரன்.

கோயம்புத்தூர் மோட்டார் பம்ப் உற்பத்திக்கு பெயர்போன நகரம் என்றாலும், கடந்த சில ஆண்டுகளில் கோவையின் சந்தை பங்களிப்பு வெகுவாக குறைந்திருப்பதைச் சுட்டிக்காட்டுகிறார் இவர்.

"கடந்த பத்தாண்டுகளில் இந்தத் துறை பெரும் பின்னடைவைச் சந்தித்திருக்கிறது. பம்ப் தொழிலைப் பொறுத்தவரை, எங்கள் சந்தை பங்களிப்பு குறைந்திருக்கிறது. லாபம் குறைந்திருக்கிறது. மற்றொரு பக்கம் சிறிய நூற்பாலைகள் மூட வேண்டிய நிலையில் இருக்கின்றன. ஏற்கனவே உற்பத்தித் துறையில் இருப்பவர்களுக்கே லாபம் இல்லாததால், விரிவாக்கம் செய்ய வாய்ப்பே இல்லை. அப்படியே செய்வதாக இருந்தாலும் வேறு தொழில்களில் தான் முதலீடு செய்கிறார்கள். எங்களுடைய பரம்பரையைச் சேர்ந்தவர்களே எங்கள் தொழிலுக்கு வருவார்களா என்ற நிலை இருக்கிறது."

போட்டி காரணமாக லாபம் குறைந்திருப்பதாக வைத்துக் கொள்ளலாம் என்றாலும் அரசின் போதிய ஆதரவு இல்லை என்கிறார் ரவீந்திரன்

"கொரோனாவுக்கு அடுத்து மூலப் பொருட்களின் விலை இரு மடங்கு உயர்ந்தது. இதனால் பலத்த இழப்பு ஏற்பட்டது. ஆகவே ஒரு விலை கண்காணிப்பு அமைப்பை உருவாக்கி, அதில் எங்களைப் போன்றவர்களை நியமித்து மூலப் பொருட்களின் விலையை கண்காணிக்கவேண்டும் என்கிறோம். ஆனால், சந்தையை கட்டுப்படுத்த முடியாது என்கிறார்கள்."

"ஆகவே, கோவை பின்தங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆகவே சிறுகுறு தொழில்துறையின் வளர்ச்சி மோசமாக இருக்கிறது. ரியல் எஸ்டேட், கல்வி நிறுவனங்கள் போன்றவற்றில்தான் எல்லோரும் முதலீடு செய்கிறார்கள். சிறு குறு தொழில்துறையை பொருளாதாரத்தின் முதுகெலும்பு என்று ஒப்புக்கொள்கிறது அரசு. 2025இல் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியில் சிறுகுறு தொழில்துறையின் பங்களிப்பை 50 சதவீதமாக்குவோம் என்கிறார் நிதின் கட்கரி."

"ஆனால், எம்எஸ்எம்இயில் 95 சதவீதம் பேர் மைக்ரோ தொழில்துறையிலும் 4.5 சதவீதம் பேர் சிறு தொழில்துறையிலும் தான் உள்ளனர். வெறும் அரை சதவீதத்தினர் தான் மத்திய தர தொழில்துறையில் இருக்கிறார்கள்."

"ஆகவே, மைக்ரோ தொழில்துறையில் உள்ள 95 சதவீதத்தில் 20 சதவீதத்தை சிறு தொழில் துறைக்கும் அதிலிருந்து ஒரு சதவீதத்தை மத்தியதர தொழில்துறைக்கும் கொண்டு வருவோம் என இலக்கு வைத்தால் ஏற்கெனவே உள்ளவர்களுக்கு பலன் கிடைக்கும்" என்கிறார் ரவீந்திரன்.

மும்முனைப் போட்டியில் கோவை

ஜிஎஸ்டி வரி முறையில் பல குழப்பங்களும் நடைமுறைச் சிக்கல்களும் இருப்பதாகவும் கூறுகிறார் இவர். உதாரணமாக, மின்சார பம்ப்களுக்கு ஒரு குறிப்பிட்ட சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. ஆனால், ரயில்வேக்கு பொருட்களை உற்பத்தி செய்து கொடுத்தால், அந்தப் பொருட்களுக்கு குறைவான ஜிஎஸ்டியே விதிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ரயில்வேக்கு பம்ப்களை உற்பத்தி செய்தால், அதற்கான ஜிஎஸ்டியை கட்ட வேண்டும் என்கிறது அரசு. ஆனால், ரயில்வே பொருட்களுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டியை மட்டும்தான் தங்களால் அளிக்க முடியும் என்கிறது ரயில்வே. ஆகவே, இந்த வரி இடைவெளியை உற்பத்தியாளர்கள் சுமக்க வேண்டியிருக்கிறது என்கிறார் ரவீந்திரன்.

"இது போன்ற குழப்பங்களுக்கு ஒரு குழுவை நிர்ணயித்து அவற்றை சரிசெய்ய வேண்டும்" என்கிறார் அவர்.

கோயம்புத்தூரில் உள்ள தொழில்துறையினருக்கு மூலப் பொருட்களை வாங்குவதில் பல பிரச்னைகள் இருக்கின்றன. மூலப் பொருள் சந்தையில் நிலவும் விலை ஏற்ற இறக்கங்கள் உற்பத்தியாளர்களைக் கடுமையாக பாதிக்கின்றன. வரவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதற்கு ஒரு தீர்வைக் காணவேண்டும் என்கிறார்கள் தொழில்துறையினர்.

"எங்களுடைய நீண்ட நாள் கோரிக்கை மூலப் பொருள் கிடங்கு வங்கி. இந்தத் திட்டத்தை அரசின் ஆதரவுடன் செயல்படுத்தலாம் என்றாலும் செயல்படுத்த முடியவில்லை. அரசு அளிக்கும் கடன் வெளியில் கிடைப்பதைவிட, கூடுதல் வட்டிக்குத்தான் கிடைக்கிறது. இப்போது தொழில்துறை அமைப்புகள் சேர்ந்து சின்ன அளவில் செய்கிறோம்.

நமக்குக் கிடைக்கக்கூடிய மூலப்பொருள் விலைக்கும் வட மாநிலங்களில் இருப்பவர்களுக்குக் கிடைக்கும் மூலப் பொருட்களின் விலைக்கும் இடையில் பெரிய வித்தியாசம் இருக்கிறது. கிட்டத்தட்ட பத்து சதவீதம் வித்தியாசம் இருக்கிறது. காரணம், அடிப்படை பொருட்களை அங்கே உற்பத்தி செய்கிறார்கள்.

அந்த மூலப் பொருட்களை பெரிய அளவில் வாங்கினால் மட்டுமே அந்த விலை வித்தியாசத்தை சரிசெய்ய முடியும். அப்படி பெரிய அளவில் வாங்கி வைக்க, குறிப்பிட்ட அளவில் மூலதனம் தேவைப்படும். வைத்துக்கொள்ள இடம் தேவைப்படும்.

அதற்காக குறைந்த வட்டியில், முதலீட்டுத் தொகை ஒன்றைக் கடனாக அரசு தரலாம். அப்படிச் செய்தால் இங்குள்ள பத்து - பதினைந்து தொழில்துறையினர் பயனடைவார்கள். வரவிருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர் இதற்கு முக்கியத்துவம் தரவேண்டும்" என்கிறார் இந்திய பம்ப் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவரான கே.வி கார்த்திக்.

மும்முனைப் போட்டியில் கோவை

விசைத்தறி தொழிலில் இருக்கும் சிக்கல்கள்

இதுபோன்ற பெரிய தொழிற்துறைகள் மட்டுமல்ல, விசைத்தறி போன்ற தொழில்களும் பெரும் சிக்கலில் இருப்பதாக சொல்கிறார்கள் அதில் ஈடுபட்டிருப்பவர்கள்.

"கோவை, திருப்பூர் மாவட்டங்களில் 2 லட்சத்திற்கு மேற்பட்ட விசைத்தறிகள் இருக்கின்றன. இந்தத் தொழில் கடந்த நான்கைந்து ஆண்டுகளாக கீழ் நோக்கிப் போய்க்கொண்டிருக்கிறது. நாங்கள் உற்பத்தி செய்யும் துணி விற்பனையாவதில்லை என்று கூறி, உற்பத்தியாளர்கள் எங்களுக்கு பாவு நூல் தருவதில்லை. ஒப்பந்தம் செய்த கூலியையும் சரிவர தருவதில்லை. இதனால் நஷ்டத்தில் இருக்கிறோம். வரும் நாடாளுமன்ற உறுப்பினர் எங்களுடைய விசைத்தறிகளை நவீன விசைத்தறிகளாக மாற்ற அரசுகளிடம் இருந்து 50 சதவீத மானியம் கொடுத்தால் புதிய ரக துணிகளை நெய்ய ஏதுவாக இருக்கும்." என்கிறார் கோவை - திருப்பூர் மாவட்ட கூலிக்கு நெசவுசெய்யும் விசைத்தறி உரிமையாளர்கள் சங்க பொருளாளர் பூபதி.

"கோவை, திருப்பூர் மாவட்டங்களில் இந்த மாவட்டங்களில் இரண்டரை லட்சம் தறிகள் இருந்தன. அதில் சுமார் 25,000 - 30,000 தறிகள் பழைய இரும்பாக உடைக்கப்பட்டுவிட்டன. நாங்கள் விவசாயத்தில் இருந்து விசைத்தறிக்கு மாறினோம். ஆனால், இப்போது இதிலும் லாபம் இல்லை. பெரிய நவீன தறிகளோடு போட்டியிட முடியாமல் எங்களுக்கு நஷ்டம் ஏற்படுகிறது. வரும் உறுப்பினர் மத்திய அரசிடம் பேசி எங்கள் கோரிக்கையை நிறைவேற்றித் தர வேண்டும்" என்கிறார் அவர்.

பல தொழில்துறையினருக்கு மின்கட்டணம் மற்றொரு சுமையாக இருக்கிறது.

"அரசு ஆயிரம் யூனிட் மின்சாரம் இலவசமாகத் தந்தாலும் எங்களுடைய செலவில் மூன்றில் ஒரு பங்கு மின்சாரச் செலவாகத்தான் இருக்கிறது. எங்களுடைய விசைத்தறி கூடங்கள் மேலேயே சோலார் பேனல் அமைத்து, நாங்களே மின் உற்பத்தி செய்ய முழுமையான மானியமோ, 75 சதவீத மானியமோ அளித்தால் எங்கள் பாதிப்பு குறையும்” என்கிறார் பூபதி.

மும்முனைப் போட்டியில் கோவை

கோவை கலவரத்தை நினைவுபடுத்தும் முயற்சிகள்

இதுபோன்ற பிரச்சனைகள் தவிர, அரசியல் ரீதியான சமூக ரீதியான விவகாரங்களும் தேர்தல் முடிவுகளைத் தீர்மானிக்கும் நிலையில் இருக்கின்றன. கோயம்புத்தூரில் 1990களின் இறுதியில் நடந்த மதக் கலவரம், அதைத் தொடர்ந்த குண்டு வெடிப்புகள் ஆகியவை அந்தப் பகுதியையே பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கின. இப்போதுள்ள இளைஞர்களுக்கு அதன் தாக்கம் ஏதும் கிடையாது என்றாலும், தொடர்ந்து அதனை நினைவுபடுத்தும் முயற்சிகள் நடப்பதாக சிலர் கருதுகின்றனர்.

"கோவை கலவரம் நடந்து 25 ஆண்டுகளாகிவிட்டன. அதன் தாக்கம் இப்போது சுத்தமாக இல்லை. ஆனால், அதனை தொடர்ந்து நினைவூட்டும் வேலையை சில இயக்கங்களும் கட்சிகளும் செய்துவருகின்றன. தேர்தலில் தி.மு.கவும் அ.தி.மு.கவும் கடுமையாகப் போட்டியிட்டாலும் அவர்கள் இதைப்பற்றி பேசுவதேயில்லை. ஆனால், இதை திரும்பத் திரும்ப நினைவூட்டுவதன் மூலமாக கணிசமான வாக்குகளைப் பெற்றுவிட முடியும் என பா.ஜ.க. நினைக்கிறது. இருந்தாலும் இதற்கு பலன் கிடைக்காது. இப்போதுள்ள இளைஞர்களுக்கு அந்தக் கலவரம் குறித்தோ, அதன் பாதிப்பு குறித்தோ தெரிந்திருக்க வாய்ப்பில்லை." என்கிறார் கோவையைச் சேர்ந்த வழக்கறிஞரும் எழுத்தாளருமான அ. கரீம்.

"கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள்கூட, இனிமேல் கலவரம் வேண்டாம், அமைதியான கோவைதான் தேவை என்று நினைக்கிறார்கள். ஆகவே பழைய நினைவுகளைக் கிளறினாலு்ம அதனால் அரசியல் ஆதாயம் கிடைக்கும் வாய்ப்பு மிகக் குறைவு" என்கிறார் அவர்.

தமிழ்நாட்டின் பிற பகுதிகளைச் சேர்ந்தவர்களுக்கு கோவையின் அரசியல், மற்ற பகுதிகளில் இருந்து மாறுபட்டது என்ற எண்ணம் இருக்கிறது. ஆனால், அது உண்மையல்ல என்கிறார் எழுத்தாளர் முருகவேள்.

"மற்ற பகுதிகளைவிட இந்தப் பகுதியில் பா.ஜ.கவுக்கு ஒன்றிரண்டு சதவீத வாக்குகள் அதிகமாக கிடைக்கலாம். மற்றபடி, வேறு மாற்றம் இருப்பதாகத் தெரியவில்லை. எல்லாப் பகுதிகளைப் போலவேதான் இங்கேயும் இருக்கிறது. பா.ஜ.கவைப் பொறுத்தவரை, அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கு சமமாகவோ, அவர்களைவிட பெரிதாகவோ ஆகிவிட்டதாகத் தெரியவில்லை" என்கிறார் அவர்.

மும்முனைப் போட்டியில் கோவை

பட மூலாதாரம், K.Annamalai/X

படக்குறிப்பு, கோவையில் பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை போட்டியிடுகிறார்.

சாதி ரீதியான அணிதிரட்டல்

அதேபோல, கோயம்புத்தூரில் சாதி சார்ந்து வாக்காளர்களை அணிதிரட்ட முடியும் என்ற கருத்து பலரிடம் இருந்தாலும் அதுவும் உண்மையில்லை என்கிறார்கள் இப்பகுதியைச் சேர்ந்தவர்கள்.

"எனக்குத் தெரிந்து சாதி ரீதியான அணிதிரட்டல் கோவையில் வெற்றிபெற்றதே கிடையாது. ஆனால், அதற்கான முயற்சிகள் நடந்துகொண்டேயிருக்கும். இந்தத் தேர்தலில்கூட சாதிய அமைப்புகள் கூட்டம் போட்டு, குறிப்பிட்ட வேட்பாளருக்கு ஆதரவளிப்பதாக சொல்கிறார்கள். ஆனால், ஒரு சாதி அமைப்பு கூட்டம் போட்டு, அந்த வேட்பாளரை ஆதரவளிப்பதாக சொன்னதால் மட்டுமே, அந்த சாதியைச் சேர்ந்த எல்லோரும் அந்த வேட்பாளருக்கு ஒட்டு போட்டுவிட மாட்டார்கள்." என்கிறார் சமூக ஆர்வலரான கணேஷ்.

சமீபத்தில் 'பிராமின்ஸ் ஃபார் அண்ணாமலை' என்ற பெயரில் ஒரு அமைப்பு கூட்டம் நடத்தி, இதேபோல ஆதரவு திரட்டியது. ஆனால், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களிடம் பேசியபோது, எல்லா சமயங்களிலும் இதுபோல நடக்கும். ஆனால், அவர்கள் சொல்பவர்களுக்கு நாங்கள் வாக்களிக்க மாட்டோம். நாங்கள் அமைதியை விரும்புகிறோம் என்று சொன்னார்கள். எந்த சமூகமுமே இங்கே சாதி ரீதியான வாக்குகளை பெற சாத்தியமில்லை" என கணேஷ் கூறுகிறார்.

இதே கருத்தையே எதிரொலிக்கிறார் அ. கரீம். "கோவையைப் பொறுத்தவரை சாதி ரீதியாக அணி திரட்டுவதையும் அதனை வைத்து வாக்கு சேகரிப்பதையும் நாமக்கல், ஈரோட்டில் செய்வதைப்போல செய்துவிட முடியாது. சில பகுதிகளில் சாதி ரீதியான ஒருங்கிணைப்பு நடக்கும். ஆனால், அது வாக்காக மாறும் வாய்ப்புகள் குறைவு" என்கிறார் கரீம்.

முந்தைய தேர்தலுக்கும் இந்தத் தேர்தலுக்கும் இடையில் பல வித்தியாசங்கள் இருக்கின்றன.

"கோவை இதுவரை சந்தித்த தேர்தல்களிலேயே இது ஒரு வித்தியாசமான தேர்தல். கடந்த தேர்தல்களில் தி.மு.கவும் அ.தி.மு.கவும்தான் அதிகமாக பணத்தைச் செலவழிப்பார்கள். ஆனால், 1977க்குப் பிறகு முதல் முறையாக, இந்த இரு கட்சிகளையும் தாண்டி வேறு ஒரு கட்சியால் பெரிய அளவில் பணத்தைச் செலவழிக்க முடிகிறது." என்கிறார் கணேஷ்.

"அதேபோல, இந்த முறை மக்கள் பல இடங்களிலும் அரசியல் குறித்து பேசுகிறார்கள். ஏன், தி.மு.க., ஏன் அ.தி.மு.க., ஏன் பா.ஜ.க. என பேசுகிறார்கள். இதற்கு முன்பு இப்படி இருந்ததில்லை."

"இந்த முறை மும்முனை போட்டி நிலவுகிறது என்பதில் சந்தேகமில்லை. ஆனால், இது திடீரென நடக்கவில்லை. 1998, 99இல் இருந்து இதுதான் நிலைமை. பா.ஜ.கவைப் பொறுத்தவரை அவர்கள் கூட்டணியில் நின்றால்கூட தனியாக தங்கள் பலத்தை வளர்த்துக்கொண்ட இடமாக கோவையைச் சொல்லலாம். கூடுதலாக இப்போது பாஜகவின் சட்டமன்ற உறுப்பினரும் இருக்கிறார். ஆகவே, இந்த முறை போட்டி கடுமையாக இருக்கும்" என்கிறார் கணேஷ்.

மும்முனைப் போட்டியில் கோவை

பட மூலாதாரம், KamalHaasan/X

படக்குறிப்பு, கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாருக்கு வாக்கு சேகரித்த மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன்.

கோவை மக்களின் வாக்குகள் யாருக்கு?

இந்தத் தொகுதியில் மூன்று கட்சிகளுக்குமே சாதகமான அம்சங்களும் பாதகமான அம்சங்களும் இருக்கின்றன என்கிறார் முருகவேள்.

"ஆளுங்கட்சியாக இருப்பது தி.மு.கவுக்கு சாதகமான அம்சம். மேலும், ஆயிரம் ரூபாய் உரிமைத் தொகை அளித்தது, பெண்களுக்கு கட்டணமில்லா பேருந்து போன்றவையும் சாதகமாக உள்ளன. அதேபோல, அ.தி.மு.கவுக்கு சாதகமான அம்சங்களும் உள்ளன. வீட்டு வரி உயர்வு, தண்ணீர் பிரச்சனை போன்றவற்றால் தி.மு.க. மீது ஏற்பட்டிருக்கும் அதிருப்தி அந்தக் கட்சிக்கு சாதகமாக இருக்கும். பல தொகுதிகளில் அ.தி.மு.கவினர்தான் சட்டமன்ற உறுப்பினர்களாகவும் இருக்கிறார்கள். ஆனால், ஆட்சியில் இல்லாமல் இருப்பது அந்தக் கட்சிக்கு பாதகமான அம்சம்."

"மேலும், எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா போன்ற கவர்ச்சிகரமான தலைவர்களும் இல்லை. ஆகவே தன் கட்டமைப்பை வைத்துத்தான் அக்கட்சி சண்டைபோட வேண்டியிருக்கிறது. இதற்கு, அடுத்த இடத்தில் அண்ணாமலை இருக்கிறார். காரணம், அவர்கள் கடுமையாக வேலை செய்கிறார்கள். ஊடகங்களில் தாங்கள்தான் சக்திவாய்ந்தவர்கள் என்பதாக பிம்பத்தை உருவாக்கியிருக்கிறார்கள்" என்கிறார் முருகவேள்.

ஆகவே கோவை யாருக்கு வாக்களிக்கும்? கோவை அமைதிக்குத்தான் வாக்களிக்கும் என்று சொல்கிறார் கணேஷ். "இது தொழில் நகரம். நகரம் அமைதியாக இருந்தால்தான் தொழில் வளர்ச்சி அடையும்.

மும்முனைப் போட்டியில் கோவை

பட மூலாதாரம், SingaiGRamachandran/X

படக்குறிப்பு, கோவையில் அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரன் போட்டியிடுகிறார்.

இங்கே மத ரீதியான சண்டைகள் நடக்கும்போது முதலில் பாதிக்கப்படுவது தொழில்துறைதான். அதிலிருந்தெல்லாம் மீண்டு வந்திருக்கிறது கோவை. ஆகவே அந்த அமைதி குலைந்துவிடக்கூடாது என்றுதான் எல்லாத் தரப்பினரும் விரும்புகிறார்கள்" என்கிறார் அவர்.

கோயம்புத்தூரில் தி.மு.க. சார்பில் கணபதி ராஜ்குமாரும், அ.தி.மு.க. சார்பில் சிங்கை ராமச்சந்திரனும், பா.ஜ.க. சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலையும் போட்டியிடுகின்றனர்.

பிரதமர் நரேந்திர மோதி, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் இந்தத் தொகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டிருக்கின்றனர். ஆகவே, இந்தத் தேர்தலின் முடிவு அரசியல் கட்சிகளில் மட்டுமல்ல, நகரத்தின் மீதும் வலுவான தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)