காவிரி டெல்டாவில் கவனம் ஈர்க்கும் வேட்பாளர் - விவசாயிகளிடையே திரளும் ஆதரவு வாக்குகளாக மாறுமா?

- எழுதியவர், சாரதா வி
- பதவி, பிபிசி தமிழ்
“நானும் டெல்டாகாரன் தான்” என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் சட்டமன்றத்தில் கூறியிருந்தார். கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் நிலக்கரி சுரங்களை ஏலமிடும் மத்திய அரசின் திட்டம் குறித்து பேசுகையில் அவர் இப்படி கூறினார்.
"நான் ஒரு விவசாயி” என்று பச்சைத்துண்டை தலையில் கட்டிக் கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமியின் போஸ்டர்களில் இடம்பெறுகிறார். வாக்கு சேகரிப்பின் போது, சேற்றில் இறங்கி வேலை செய்யும் வேட்பாளர்களை ஒவ்வொரு தேர்தலிலும் காண முடிகிறது.
தமிழ்நாட்டில் 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் 950 வேட்பாளர்களில், மத்திய இணை அமைச்சர் எல். முருகன், கோவை திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமார் உட்பட 150 பேர் தங்களை விவசாயி என தேர்தல் பிரமாண பத்திரத்தில் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில் தான், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கம் சார்பில் ஒரு விவசாயி தஞ்சாவூர் தொகுதியில் சுயேச்சையாக களத்தில் உள்ளார்.

‘விவசாயிகளுக்காக களத்தில் இறங்கியுள்ளேன்’
என். செந்தில்குமார், தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் பி.ஆர்.பாண்டியனின் ஆதரவுடன் தஞ்சாவூர் தொகுதியில் கப்பல் சின்னத்தில் போட்டியிடுகிறார். இவர் தஞ்சாவூர் மாவட்டம் காவலூரை சேர்ந்தவர். ஏற்கனவே சுயேச்சையாக போட்டியிட்டு, காவலூர் ஊராட்சி ஒன்றியத் தலைவராக உள்ளார்.
நான்கு ஏக்கர் நிலத்தில் விவசாயம் பார்க்கும் அவர், 25 ஆண்டுகளாக பால் வியாபாரம் செய்து வருகிறார். 2005ஆம் ஆண்டு வரை மூன்று பேருந்துகள் சொந்தமாக இயக்கி வந்துள்ளார்.
தஞ்சாவூர் நகரத்திலிருந்து 4 கி.மீ தூரத்தில் களிமேட்டில், பிரசாரத்துக்கு இடையில், தனது குழுவினருடன் சற்று இளைப்பாறிக் கொண்டிருந்த அவரை சந்தித்தோம். விவசாயிகளின் அடையாளமாகிவிட்ட பச்சை துண்டை தோளில் மாட்டிக் கொண்டு முகத்தில் புன்னகையுடன் கைகூப்பி வரவேற்றார்.
“இந்த ஆண்டு, குறுவைக்கு மட்டுமே காவிரி நீர் கிடைத்தது. சம்பாவுக்கு கிடைக்கவில்லை. அதனால் பல ஆயிரம் ஏக்கர் நிலம் தரிசாக கிடக்கின்றன. இங்கே பாருங்கள்” என பேருந்து நிறுத்தத்துக்கு அருகில் இருந்த காய்ந்து போன பயிர்கள் எரிக்கப்பட்டதைக் காண்பிக்கிறார்.
“ஆழ்துளை கிணறுகளிலிருந்து நீர் எடுக்க முடிந்த விவசாயிகள் மட்டுமே பயிர் செய்கிறார்கள். காவிரியின் நீரை நம்பியிருந்தவர்களுக்கு இதுதான் நிலை” என்கிறார்.
இந்த ஆண்டு காவிரி நீரை கடைமடைக்கு கொண்டு வர தங்கள் சங்கம் எடுத்த முயற்சிகளால் பேராவூரணி, பட்டுக்கோட்டை பகுதிகளில் வாக்காளர்களிடம் தங்களுக்கு ஆதரவு இருப்பதாக கூறுகிறார்.
டெல்லி விவசாயிகள் போராட்டத்தின் போது, சுக்ரிவன் சிங் என்ற இளைஞர் துப்பாக்கிச் சூட்டில் இறந்த சம்பவம் மக்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்றும் கூறுகிறார்.
“எங்கள் சங்கம் தொடங்கி 15 ஆண்டுகள் ஆகியுள்ளன. இதுவரை எந்தக் கட்சியுடனும் கூட்டணி வைத்தது இல்லை. தேர்தலில் போட்டியிட்டதில்லை. மாநில அரசும் மத்திய அரசும் விவசாயிகளை தொடர்ந்து வஞ்சிக்கிறது என்ற ஆதங்கம் தான் எங்களை களத்தில் இறங்க செய்தது. எங்கள் பிரச்னைக்கு நாங்களே தேர்தலில் குரல் கொடுக்க வேண்டும் என்று முடிவு செய்துவிட்டோம்” என்றார்.
‘மேகதாதுவில் அணை கட்ட விடக் கூடாது’

பட மூலாதாரம், Getty Images
இந்த தேர்தலில் வெற்றி பெற்றால், மேகதாதுவில் அணை கட்ட விடக் கூடாது, தமிழ்நாட்டில் ராசி மணல் அணை கட்டுவோம், விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்துவோம் என்கிறார் செந்தில்குமார்.
மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு இப்பகுதியில் கோபத்தை ஏற்படுத்தியிருப்பதை காண முடிகிறது. “இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், மேகதாதுவில் அணை கட்டுவோம் என்று கர்நாடக காங்கிரஸ் கூறுகிறது. அதே போல இந்தியா கூட்டணி வெற்றி பெற்றால், மேகதாதுவில் அணை கட்ட விட மாட்டோம் என திமுக ஏன் கூறுவதில்லை?
ஒகேனக்கலில் காவிரி ஆற்றின் குறுக்கே ராசி மணல் அணை கட்டினால், டெல்டா மட்டுமல்ல, காவிரி நீரை பயன்படுத்தும் 28 மாவட்டங்களும் செழிப்பாகும். 1964ஆம் ஆண்டு இதற்கான அடிக்கல் நாட்டப்பது. அதன் பின் ஆட்சியில் இருந்த இரு திராவிடக் கட்சிகளும் ஒன்றுமே செய்யவில்லை” என்று குற்றம் சாட்டுகிறார்.
“கார்பரேட்டுகளுக்கு பல லட்சம் கோடி ரூபாய் கடன் தள்ளுபடி செய்கிறது அரசு. நாடு முழுவதும் உள்ள விவசாயிகளின் கடன்கள் ஒரு லட்சம் கோடி தான் இருக்கும். அதை ஏன் தள்ளுபடி செய்வதில்லை?”என்று கேள்வி எழுப்புகிறார்.
மேலும், “தாத்தா ஆட்சியை கொடுப்போம் என்று கூறுகிறார் உதயநிதி ஸ்டாலின். தந்தையின் ஆட்சி என்ன ஆனது?” என்கிறார் செந்தில்குமார்.
‘வேட்பு மனுவை நிராகரிக்க பார்த்தார்கள்’

தேர்தலில் போட்டியிடுவது அவ்வளவு சுலபமான காரியம் இல்லை என்று சொல்லும் செந்தில்குமார். “எங்கள் வேட்பு மனுவை நிராகரிக்க பார்த்தார்கள். கடைசி நேரத்தில் எங்கள் வழக்கறிஞர் உதவியுடனே விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட்டது.
இந்த தொகுதியில் என்னுடன் சேர்த்து எட்டு சுயேச்சைகள் போட்டுயிடுகிறார்கள். அவர்கள் யாரும் பிரசாரம் செய்யவில்லை. ஆனால் நாங்கள் சடங்குக்காக போட்டியிடவில்லை. இந்த தேர்தல் எங்களுக்கு முக்கியமானது.
எனவே தான் பெரிய கட்சிகளுக்கு நிகராக பிரசாரம் செய்ய அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்கிறோம். ஊடக கவனம் எதுவும் இல்லாமல் நேரடியாக மக்களை சந்தித்து வருகிறோம். பிரசாரத்துக்கு தெரிந்தவர்களின் வாகனங்களையே பயன்படுத்துகிறோம். பிரசார வேன் ஒன்று மட்டும் தான் வாடகை” என்கிறார்.
தனது மதிய ஓய்வை முடித்து விட்டு, மீண்டும் பிரசாரம் செய்ய ஆதரவாளர்களுடன் புறப்பட்டார்.
செந்தில்குமாரை ஆதரித்து பல்வேறு மாவட்டங்களிலிருந்து விவசாயிகள் வந்து ஆதரவு தெரிவிக்கின்றனர். சென்னை, திருவள்ளூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், ஏற்காடு என பல்வேறு பகுதிகளிலிருந்தும் பலரும் ஆதரவு தந்து பிரசாரம் செய்கின்றனர்.
பிரசாரத்தில் பங்கேற்று வந்த நாகப்பட்டினத்தை சேர்ந்த மூத்த விவசாயி ராமதாஸ், “எங்கள் நாடாளுமன்ற தொகுதி வேறு. எனக்கு இங்க ஓட்டு கிடையாது. ஆனால் விவசாயிகளின் பிரதிநியாக அவர் போட்டியிடுகிறார். எனவே ஆதரவு தருவதற்காகவும், பிரசாரம் செய்வதற்காகவும் வந்துள்ளோம்.
இந்த பகுதியில் சரியான சாலைகளே கிடையாது. இங்கு எல்லாம் எந்த அரசியல்வாதியும் வந்து வாக்கு கேட்பதில்லை. கிராமம் கிராமாக எங்களால் முடிந்த வரை செல்கிறோம்.” என்றார்.
‘2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் போட்டி’

செந்தில்குமாரை களத்தில் நிறுத்தியுள்ள தமிழ்நாடு காவிரி விவசாயிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர், பி.ஆர்.பாண்டியன், “தமிழ்நாடு நில ஒருங்கிணைப்பு சட்டம் விவசாயிகளின் ஒப்புதல் இல்லாமலே நிலத்தை கையகப்படுத்த அனுமதிக்கிறது. ஏரி, குளங்களை தனியாரிடம் கொடுக்கலாம், தேவைப்பட்டால் ஆற்றை திசை திருப்பலாம்.
இந்த சட்டம் வந்த பிறகு தான் நெய்வேலியில் பரவனாறு 7 கி.மீ தூரம் திசை திருப்பப்பட்டது. தேர்தல் களத்தில் நாங்களே இறங்க வேண்டிய சூழல் வந்துவிட்டது. வரும் 2026 சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.” என்றார்.
களத்தில் மற்றொரு கூட்டணிக்கு ஆதரவாக இருக்கும் வழக்கறிஞர், “இது நல்ல முயற்சி. விவசாயிகள் சார்பாக போட்டியிடுபவரை சிறுமைப்படுத்தக் கூடாது. நாங்கள் வேறு கட்சிக்கு ஆதரவு அளித்து வருகிறோம். அதனால் வெளிப்படையாக எதுவும் பேச முடியாது” என்றார்.
தஞ்சாவூர் தொகுதியில் திமுக கூட்டணி சர்பாக முரசொலி, அதிமுக கூட்டணி சார்பாக தேமுதிகவின் சிவநேசன், பாஜகவின் என். முருகானந்தம், நாம் தமிழர் கட்சியின் ஹூமாயுன் கபீர் போட்டியிடுகின்றனர்.
திமுக தலைவர் கருணாநிதியின் பிறந்த ஊரான திருவாரூரை உள்ளடக்கிய இந்த நாடாளுமன்ற தொகுதி பல ஆண்டுகளாக திமுகவின் கோட்டையாக தான் உள்ளது.
பேருந்து நிறுத்தத்தில் மழைக்காக தனது குடும்பத்துடன் ஒதுங்கியிருந்த கேசவன், நம்மிடம் தனது ஆதங்கத்தை தெரிவித்தார், “இந்த இடமே சுடுகாடு மாதிரி இருக்கு. இரண்டாவது போகம் பண்றதுக்கு தண்ணி இல்ல, ஆள் கிடைக்கல. ஆடு மாடுக்கு கூட தண்ணி இல்ல. நாங்க பல தலைமுறையா விவசாயம் பண்ணிட்டு வருகிறோம்.
எங்க அப்பா தினமும் எழுந்து பயிர் வந்திருக்கா வந்திருக்கான்னு பாத்துட்டு நொந்து போய் இருக்காரு. எனக்கு 10 ஏக்கர் நிலம் இருக்கு. எனக்கு இந்த ஆண்டு ஐந்து லட்சம் ரூபாய் இழப்பு. தனியார் பள்ளிகளில் படித்துக் கொண்டிருந்த பிள்ளைகளை தற்போது காசு இல்லாததால அரசுப் பள்ளிக்கு அனுப்புகிறோம்” என்றார்.
வேட்பாளர் செந்தில்குமார் எடுத்துக் கூறும் கருத்துகளுக்கும், எழுப்பும் கேள்விகளுக்கும் ஆதரவு உள்ளது. ஆனால் இவை வாக்குகளாக மாறுமா என்பது தான் கேள்வி.
"விவசாயிகள், அடிதட்டு மக்கள் என அனைத்தும் மக்களும் எங்களுக்கு ஆதரவு தருகிறார்கள். நேற்று திடீரென 200 பேர் வந்து சால்வை, துண்டு அணிவித்து ஆதரவு தெரிவித்தனர். இதுபோன்ற வரவேற்பு எங்களுக்கு நிச்சயமாக உள்ளது” என நம்பிக்கையுடன் கூறுகிறார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












