நீலகிரி: ஆ.ராசா - எல்.முருகன் கடும் போட்டிக்கு நடுவே அதிமுக வேட்பாளருக்கு உற்சாகம் தருவது எது?

- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் உள்ள நாடாளுமன்றத் தொகுதிகளிலேயே நீலகிரி தொகுதி மிகவும் வித்தியாசமான ஒரு தொகுதி. நிலவியல், இனவியல், பரப்பளவு என பல்வேறு விதங்களில் வேட்பாளர்களுக்கும் தேர்வு செய்யப்படும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கடுமையான சவாலை முன்வைக்கும் தொகுதி இது.
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியில் பவானிசாகர் (தனி), உதகமண்டலம், கூடலூர் (தனி), குன்னூர், மேட்டுப்பாளையம், அவினாசி (தனி) ஆகிய ஆறு தொகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்த ஆறு தொகுதிகளும் கோயம்புத்தூர், நீலகிரி, ஈரோடு, திருப்பூர் என நான்கு மாவட்டங்களில் பிரிந்து கிடக்கின்றன.
அதேபோல, உயர்ந்த மலைப் பகுதிகள், அணுகுவதற்கே மிகுந்த முயற்சி தேவைப்படக் கூடிய கிராமங்கள், அடர்த்தியான வனப்பகுதிகள், போக்குவரத்து நெரிசல் மிகுந்த சமவெளிப் பகுதி என பல்வேறு விதமான நிலப்பரப்பும் இந்தத் தொகுதிக்குள் உண்டு.
ஒரு நாடாளுமன்றத் தொகுதியின் ஒரு பகுதியில் வெயில் சுட்டெரித்துக் கொண்டிருக்கும்போது, மற்றொரு பகுதியில் வசிப்பவர்கள் குளிரில் நடுங்கிக் கொண்டிருக்கும் விசித்திரம் இந்தத் தொகுதிக்கு மட்டுமே உண்டு.
காடு, மலை, சமவெளிப் பகுதி என பலவிதமான பரந்த நிலப்பரப்பைக் கொண்டிருக்கும் இந்த நீலகிரித் தொகுதியில் போட்டியும் கடுமையாகவே இருக்கிறது. நீலகிரி தேர்தல் களத்தில் முக்கியப் பிரச்னைகள் எதிரொலிக்கின்றனவா? யாருக்கு வெற்றி வாய்ப்பு இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images
எட்டு முறை காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதி
நீலகிரி நாடாளுமன்றத் தொகுதியைப் பொறுத்தவரை, எட்டு முறை காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதி இது. தி.மு.க. மூன்று முறையும் அ.தி.மு.க., பா.ஜ.க. ஆகியவை தலா இரண்டு முறையும் வெற்றிபெற்ற தொகுதி இது.
இந்த ஆறு சட்டமன்றத் தொகுதிகளில் உதகமண்டலம், குன்னூர் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளில் தி.மு.க. கூட்டணியைச் சேர்ந்தவர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். கூடலூர், மேட்டுப்பாளையம், அவினாசி, பவானிசாகர் ஆகிய தொகுதிகளில் அ.தி.மு.கவைச் சேர்ந்தவர்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக உள்ளனர்.
2009ஆம் ஆண்டில் இந்தத் தொகுதி தனித் தொகுதியாக மாற்றப்பட்டது. அப்போதிலிருந்து இந்தத் தொகுதியில் தி.மு.கவின் சார்பில் ஆ. ராசா போட்டியிட்டு வருகிறார். 2009ல் ஆ. ராசா வெற்றிபெற்ற நிலையில், நிலச்சரிவு ஏற்பட்டபோது, அவர் அந்தப் பகுதியில் தங்கியிருந்து பணியாற்றியது அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது.
ஆனால், 2014 2ஜி விவகாரம், தேர்தலில் முக்கியப் பிரச்சனையாக முன்வைக்கப்பட்டதால், அவர் அ.தி.மு.கவின் சி. கோபாலகிருஷ்ணனிடம் தோல்வியைத் தழுவினார். 2019ல் மீண்டும் போட்டியிட்ட ஆ. ராசா வெற்றிபெற்றார்.
இந்த முறை, தி.மு.கவின் சார்பில் ஆ. ராசாவே மீண்டும் போட்டியிடுகிறார். அ.தி.மு.கவின் சார்பில் முன்னாள் சபாநாயகர் தனபாலின் மகனான டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன் களத்தில் இறங்கியிருக்கிறார். பா.ஜ.கவின் சார்பில் தற்போதைய மாநிலங்களவை உறுப்பினரும் மத்திய இணையமைச்சருமான எல். முருகன் போட்டியிடுகிறார்.

‘மத்திய அரசின் சாதனைகளை முன்வைத்து பிரசாரம்’
எல். முருகனைப் பொறுத்தவரை நீண்ட காலமாக இந்தத் தொகுதியில் பணியாற்றி வருகிறார். அவர் தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணைத் தலைவராக இருந்த காலகட்டத்தில் தொடர்ந்து இந்தப் பகுதிக்கு வருவதும் கட்சி நிகழ்ச்சிகளில் கலந்துகொள்வதுமாக இருந்தார்.
கடந்த இரண்டு ஆண்டுகளாக, அடிக்கடி இங்கு வருகை தர ஆரம்பித்தார் எல். முருகன். அப்போதிலிருந்தே, இந்தத் தொகுதியில் அவர் பா.ஜ.கவின் சார்பில் போட்டியிடுவது உறுதி எனப் பேசப்பட்டது.
ஆனால், நாடாளுமன்றத் தேர்தலுக்கு சற்று முன்பாக அவர் மாநிலங்களவை உறுப்பினராக நியமிக்கப்பட்டதும், அவர் நீலகிரித் தொகுதியில் போட்டியிடவில்லையோ என்ற சந்தேகம் எழுந்தது. ஆனால், விரைவிலேயே அவர் நீலகிரியில் போட்டியிடுவது உறுதிசெய்யப்பட்டது.
தான் நீண்ட காலமாக பணியாற்றிவந்த தொகுதி என்பதால் மிகுந்த உற்சாகத்துடன் களத்தில் இறங்கியிருக்கிறார் எல். முருகன். மலைப்பகுதியில் உள்ளடங்கிய கிராமங்களுக்கும் சென்று பேசுகிறார். அவருடைய பேச்சில், ஜல் ஜீவன் திட்டம், பிரதமரின் வீடு வழங்கும் திட்டம், சமையல் எரிவாயு இணைப்புகள் ஆகியவற்றை மத்திய அரசின் சாதனைகளாக முன்னிறுத்திப் பேசுகிறார்.
சத்தியமங்கலம் வனப்பகுதியில் ஒரு உள்ளடங்கிய கிராமத்தில் பிரசாரத்திற்கு நடுவில் பிபிசியிடம் பேசிய எல். முருகன், தான் இந்தத் தொகுதிக்கென பல திட்டங்களை வைத்திருப்பதாகச் சொன்னார்.
"இது பிரச்னைகளுக்குக் குறைவில்லாத பகுதி. இதற்கு முன்பு உறுப்பினர்களாக இருந்தவர்கள், இந்தப் பகுதியைப் பற்றி ஒரு தொலைநோக்குப் பார்வையே இல்லாமல் இருந்தார்கள். பெரும்பாலானவர்கள் விவசாயத்தை மட்டுமே நம்பியே வாழ்கிறார்கள்.
இந்தப் பகுதியில் காட்டுப் பன்றி தொல்லை அதிகமாக இருக்கிறது. கர்நாடகா, கேரளாவில் அவற்றை சுடுவதற்கு அனுமதி இருக்கிறது. அதற்கு இங்கே அனுமதி இல்லை. அந்த அனுமதியை சட்டப்படி வாங்கிக் கொடுக்க முடியுமா என்று பார்ப்பேன்.
அதேபோல, யானைகளுக்கும் மனிதர்களுக்கும் மோதல் இருந்து வருகிறது. இதற்கு ஒரு தீர்வு வேண்டும். கர்நாடக மாநிலத்தில், பழைய ரயில்வே பாதைகளை எடுத்து விவசாய நிலங்களுக்கு வேலி அமைக்கிறார்கள். அதைப் போலச் செய்தால் இந்தப் பகுதியில் விவசாய நிலங்களைப் பாதுகாக்க முடியும்.
மேட்டுப்பாளையத்தில் போக்குவரத்து நெரிசல் பெரிய பிரச்னையாக இருக்கிறது. ஆகவே ஒரு பை பாஸ் சாலை அமைத்து, அதனை சேலம் சாலையோடு இணைக்க வேண்டும் என நினைக்கிறார்கள். இதையெல்லாம் நாங்கள் மட்டும்தான் செய்ய முடியும்" என்கிறார் அவர்.

‘தேசியப் பிரச்னைகளை மையப்படுத்தி பிரசாரம்’
ஆனால், தி.மு.க. வேட்பாளரான ஆ. ராசாவின் பிரசாரத்தில் தேசிய அளவிலான பிரச்னைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். விலைவாசி உயர்வு, வேலையில்லாத் திண்டாட்டம், பா.ஜ.க ஆட்சியில் ஜனநாயக அமைப்புகள் முடக்கப்படுவது ஆகியவை குறித்துப் பேசுகிறார். பிபிசியிடம் பேசிய அவர், அதுதான் தனது வியூகம் என்றும் தெரிவித்தார்.
"எனது பிரசாரத்தில் தேசியப் பிரச்னைகளை மையப்படுத்தித் தான் பேசுகிறேன். இந்தத் தேர்தல் இந்தியாவை காப்பாற்றுவதற்கான, இந்தியாவின் அரசியல் சட்டத்தைக் காப்பதற்கான தேர்தல். அரசியலமைப்புச் சட்டம் இல்லையென்றால் இங்கே ஜனநாயகம் இருக்காது, அரசியலமைப்புச் சட்டம் இல்லையென்றால் மத நல்லிணக்கம் இருக்காது.
அரசியலமைப்புச் சட்டம் இல்லையென்றால் இது ஒரு இறையாண்மை உள்ள நாடாக இருக்காது. குரங்கு கையில் கிடைத்த பூமாலையைப் போல இந்தியா இருக்கிறது. எனவே இந்தியாவைக் காப்பாற்றுவோம் என முதலமைச்சர் முழங்கியிருக்கிறார். அதுதான் பிரசாரத்தில் எங்கள் முழக்கமாகவும் இருக்கிறது" என்கிறார் அவர்.
காங்கிரஸ், இடதுசாரிகளும் ஆ. ராசாவுக்கு ஆதரவாக தீவிரமாக களமிறங்கியிருப்பதால், அவர் தரப்பு மிகுந்த உற்சாகமாக இருக்கிறது.

அ.தி.மு.க. வேட்பாளர் டி. லோகேஷ் தமிழ்ச்செல்வனைப் பொறுத்தவரை தனது பிரசாரத்தில் எடப்பாடி கே. பழனிசாமி முதலமைச்சராக இருந்தபோது செய்த சாதனைகளைச் சொல்வது, முதலில் தி.மு.கவைத் தாக்குவது, பிறகு பா.ஜ.கவைக் குறிவைப்பது என்று பேசுகிறார்.
"ஆ. ராசா, எல். முருகன் ஆகிய இருவருமே நாடாளுமன்ற உறுப்பினர்கள். ஏதாவது செய்து கொடுத்துவிட்டு வாக்கு கேட்டால் பரவாயில்லை. எதுவுமே செய்யாமல் வாக்கு கேட்கிறார்கள். அதனால், எல்லா இடங்களிலும் எனக்குத்தான் வரவேற்பு இருக்கிறது.
10 வருடங்கள் ஆ. ராசா இந்தத் தொகுதியில் எம்.பியாக இருந்திருக்கிறார். அவரால் எந்த ஒரு மத்திய அரசு திட்டத்தையாவது இங்கே கொண்டுவர முடிந்ததா? அதெல்லாம் இப்பகுதி மக்களிடம் பெரிய குமுறலாக இருக்கிறது" என்கிறார் அவர்.
‘சுற்றுச்சூழல் சீரழிவு’
இந்த மூன்று பேர் தவிர, நாம் தமிழர் கட்சியின் சார்பில் ஜெயக்குமாரும் களத்தில் இருக்கிறார். இந்த விரிந்து பரந்த தொகுதியில், பல பிரச்னைகள் இருக்கின்றன. நீலகிரி மலை அடிவாரத்தில் அமைந்திருக்கும் மேட்டுப்பாளையம் தொகுதி போக்குவரத்தில் மூச்சுத் திணறுகிறது.
இந்தப் பகுதியில் ஒரு வெளிவட்டச் சாலை அமைக்க வேண்டுமென்பது இந்தப் பகுதி மக்களின் நீண்ட காலக் கோரிக்கையாக இருக்கிறது. அதனைத் தாண்டி நீலகிரி மலையில் ஏறினால், சுற்றுலாப் பயணிகள் வந்து குவிவதால், மூச்சுத் திணறிப் போயிருக்கிறது அந்த மலைப்பகுதி.
"இந்தப் பகுதியில் பெரிய அளவில் வேலைவாய்ப்புகள் கிடையாது என்பதால், ஊட்டி மிகப்பெரிய அளவில் சுற்றுலாவை நம்பித்தான் இருக்கிறது. ஆனால், சுற்றுலா வளர்ச்சி என்ற பெயரில் சுற்றுச்சூழலை மொத்தமாக சீரழித்துவிட்டார்கள்.
இந்த மலைப் பகுதியில் மிகப்பெரிய அளவில் கட்டடமயமாக்கல் நடந்துகொண்டிருக்கிறது. இதனை முறைப்படுத்த மாஸ்டர் பிளான் கொண்டுவரப்பட்டது. ஆனால், அதையெல்லாம் மீறி, கட்டடங்கள் கட்டப்பட்டுக் கொண்டிருக்கின்றன. வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் இங்கே மிகப் பெரிய அளவில் நிலங்களில் முதலீடு செய்கிறார்கள். மரங்கள் வெட்டப்பட்டு, மழை குறைந்துவிட்டது. பேரிடர்களும் நடக்க ஆரம்பித்துவிட்டன.
2009இல் ஏற்பட்ட பேரிடரில் 49 பேர் உயிரிழந்தார்கள். இருந்த போதும் இது இன்னமும் தொடர்ந்து கொண்டிருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு முடிவு வரவேண்டும்" என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த சமூக ஆர்வலரான ஜனார்த்தனன்.

பட மூலாதாரம், Getty Images
சுற்றுலாவை மட்டுமே நம்பி இருக்கும் நீலகிரி
ஊட்டி நகரத்தைப் பொறுத்தவரை, போக்குவரத்து நெரிசல் மிக மோசமாக இருக்கிறது. குறிப்பாக ஏப்ரல், மே, ஜூன் போன்ற சுற்றுலா சீஸன்களில் பல தருணங்களில் வாகனங்கள் மலைப் பாதைகளில் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்படுகிறது. அதைத் தாண்டி நகரத்திற்குள் நுழைந்தால், எல்லாச் சாலைகளும் நிரம்பி வழிகின்றன. உள்ளே நுழையும் வாகனங்கள் நிற்பதற்கு சரியான பார்க்கிங் வசதிகளும் கிடையாது.
இவை தவிர, நீலகிரி மலைப் பகுதியில் விளையும் விளை பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காததும் ஒரு நீண்ட காலப் பிரச்னையாக இருக்கிறது. பசுந்தேயிலைக்கான விலை உயர்த்த வேண்டும், இங்கு விளையும் காய்கறிகளுக்கு ஒரு குறிப்பிட்ட விலையை நிர்ணயம் செய்யவேண்டும் போன்றவற்றை இங்குள்ள விவசாயிகள் கோரிக்கையாக முன்வைக்கிறார்கள்.
"பசுந்தேயிலையை நம்பித்தான் இங்கு நிறையப் பேர் இருக்கிறோம். அதற்கு நிரந்தரமான விலை கிடைப்பதில்லை. ஒரு கிலோ பசுந்தேயிலைக்கு இரண்டு ரூபாய் அதிகரித்துத் தரச்சொல்லி நடத்திய போராட்டத்தில் காவல்துறை தாக்குதலுக்கு உள்ளானது தான் மிச்சம். நீலகிரியில் விளையும் பூண்டு, கேரட், முட்டைக்கோஸ், பசுந்தேயிலை போன்றவற்றுக்கும் நிரந்தர விலையை நிர்ணயித்துத் தர வேண்டும்" என்கிறார் நுந்தலா பகுதியைச் சேர்ந்த விவசாயியான பீமன்.
நீலகிரி மலைப் பகுதியில் சுற்றுலா, விவசாயம் ஆகியவற்றை விட்டால் வேறு வேலை வாய்ப்புகள் இடையாது. இங்கிருந்த ஹிந்துஸ்தான் ஃபோட்டோ ஃபிலிம்ஸ் தொழிற்சாலையும் மூடப்பட்டுவிட்ட நிலையில், வேலைவாய்ப்புக்கு ஏதாவது செய்துதர வேண்டும் என்ற கோரிக்கையும் இருக்கிறது.
சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ் தாயகம் திரும்பிய தமிழர்கள் அதிகம் வசிக்கும் பகுதி இது. அவர்களில் பலர் இன்னமும் தொழிலாளர்களாகவே இருக்கும் நிலையில், வீடு வசதி போன்றவற்றைச் செய்துதர வேண்டும் என்கிறார்கள். பொதுவாகவே, கூடலூரில் செக்ஷன் 17 பிரிவு நிலத்திற்கு பட்டா கிடைப்பதில் பிரச்னை, குடிநீர் பிரச்னை ஆகியவையும் குறிப்பிடத்தக்க பிரச்னைகளாக இருக்கின்றன.
தி.மு.கவைப் பொறுத்தவரை, கூட்டணி பலம், ஆ. ராசாவின் செல்வாக்கு, மத்தியில் 10 ஆண்டுகளாக ஆட்சியில் இருக்கும் அரசின் மீதான அதிருப்தி ஆகியவற்றை நம்பி களத்தில் இறங்கியிருக்கின்றனர். அதேபோல, தாயகம் திரும்பிய தமிழர்களின் வாக்குகளும் தங்களுக்குக் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கிறது தி.மு.க.
படுகர் இன மக்களின் வாக்குகள் யாருக்கு?
பா.ஜ.கவைப் பொறுத்தவரை, உள்ளடங்கிய மலைப் பகுதிகளில் தங்கள் பிரசாரத்திற்கு நல்ல பலன் கிடைக்கும் என நம்புகிறது. அதேபோல, இங்கு குறிப்பிடத்தக்க எண்ணிக்கையில் வசிக்கும் படுகர் இன மக்களும் தங்களுக்கு பெருவாரியாக வாக்களிப்பார்கள் என அக்கட்சி கருதுகிறது. இந்த நாடாளுமன்றத் தொகுதிக்குட்பட்ட சட்டமன்ற தொகுதிகள் ஆறில், நான்கு தங்கள் வசம் இருப்பதால், வெற்றி நிச்சயம் என்று உற்சாகமாக இருக்கிறார் அ.தி.மு.கவின். டி. லோகேஷ் தமிழ்ச்செல்வன்.
ஆனால், பா.ஜ.க. மிகத் தீவிரமாக இந்தத் தொகுதியில் பணியாற்றியிருப்பதால், போட்டி மிகக் கடுமையாக இருக்கும் என்கிறார் இந்தப் பகுதியைச் சேர்ந்த வழக்கறிஞரான கே. விஜயன்.
"இங்கே தி.மு.க., காங்கிரஸ் போன்றவை வலுவாக இருக்கின்றன. ஆகவே கூட்டணிக் கணக்குகளை வைத்து அவர்கள் உற்சாகமாக இருக்கலாம். ஆனால், பா.ஜ.க. கடுமையாக பணியாற்றுகிறது. ஒன்றும் இல்லாத இடத்தில் இடதுசாரிகள் தங்கள் கட்சியை கட்டமைக்க எப்படி வேலை பார்ப்பார்களோ, அதைவிட பல மடங்கு கடுமையாக பா.ஜ.கவினர் வேலை செய்கிறார்கள்.
ஆகவே, வாக்கு சதவீதத்தை நம்பி களமிறங்கும் கட்சிகள் கவனமாக இருக்க வேண்டும். வெறும் புள்ளிவிவரக் கணக்கு இந்தத் தொகுதியில் கைகொடுக்காது" என்கிறார் விஜயன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












