தமிழ்நாட்டில் தேர்தல் கருத்துக் கணிப்புகள் எந்த அளவுக்கு சரியாக இருந்துள்ளன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஒவ்வொரு தேர்தலை ஒட்டியும் கருத்துக் கணிப்புகளும் வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கணிப்புகளும் வெளியாகின்றன. தமிழக அளவில் இந்தக் கருத்துக் கணிப்புகள் எந்த அளவுக்கு சரியாக இருக்கின்றன?
தேர்தல்களின் போது வாக்காளர்களின் மன நிலை என்ன என்பது குறித்தும் முக்கியப் பிரச்னைகள் குறித்து மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பது குறித்தும் கருத்துக் கணிப்புகளை மேற்கொள்வது உலகம் முழுவதுமே உள்ள நடைமுறைதான். ஆனால், இந்தியா போன்ற மிகப் பெரிய நாட்டில் இது போன்ற கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டு, அதன் அடிப்படையில் மக்கள் என்ன நினைக்கிறார்கள் என்பதை சரியாகவும் துல்லியமாகவும் சொல்வது அவ்வளவு சுலபமான காரியமில்லை.
இந்தியாவில் ஆரம்ப கால தேர்தல்களில் காங்கிரஸ் கட்சியே பெரும் ஆதிக்கம் செலுத்தியதால், அந்தத் தருணத்தில் தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்பு, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு பற்றி ஆர்வம் காட்டப்படவில்லை. இருந்தபோதும் இந்தியாவில் ஆரம்ப காலத்தில் இதுபோன்ற கருத்துக் கணிப்புகளை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் ஒப்பினியன் (Indian Institute of Public Opinion - IIPO) என்ற நிறுவனமே மேற்கொண்டது. 1957, 1962, 1967 ஆகிய மூன்று தேர்தல்களிலும் இந்த நிறுவனம் கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டது.
ஆனால், ஒவ்வொரு கட்சியும் எத்தனை சதவீத வாக்குகளைப் பெறும் என்ற விவரங்கள் மட்டுமே இந்தக் கருத்துக் கணிப்புகளில் வெளிப்பட்டனவே தவிர, ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் கிடைக்கும் என்ற விவரங்கள் இடம்பெறவில்லை என தனது தி வெர்டிக்ட் (The Verdict) நூலில் குறிப்பிடுகிறார், இதுபோன்ற கருத்துக் கணிப்புகளின் முன்னோடியான பிரணாய் ராய்.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பட மூலாதாரம், Getty Images
பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதற்குப் பிறகு 1960களில் ரஜினி கோத்தாரியால் உருவாக்கப்பட்ட சிஎஸ்டிஎஸ் என்ற அமைப்பு கருத்துக் கணிப்புகளை நடத்தியது. 1967, 1971ல் தேர்தல்களுக்குப் பிறகு இந்தக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டன. 1980ல் ஐஐபிஓவுடன் இணைந்து தேசிய அளவில் கருத்துக் கணிப்புகளையும், தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளையும் சிஎஸ்டிஎஸ் மேற்கொண்டது.
இதே தருணத்தில், தில்லி பொருளாதாரப் பள்ளியில் படித்த பிரணாய் ராயும் அஷோக் குமார் லஹிரியும் இதேபோல ஒரு கருத்துக் கணிப்பை மேற்கொண்டு, அதனை ஒரு பிரபல இதழில் வெளியிடலாம் என யோசித்தனர். இந்த யோசனையோடு, மாதமிரு முறையாக வெளிவந்துகொண்டிருந்த இந்தியா டுடே இதழை அணுகினர். அந்த இதழின் உரிமையாளரும் ஆசிரியருமான அருண் பூரி அதற்கு ஒப்புக்கொள்ளவே, 1980, 1984 ஆகிய இரு தேர்தல்களின்போதும் கருத்துக் கணிப்புகள் மேற்கொள்ளப்பட்டு, இந்தியா டுடே இதழில் வெளியிடப்பட்டன. இந்த இரு தேர்தல்களிலுமே காங்கிரஸ் கட்சிக்கே பெரும் வெற்றி கிடைக்கும் என கணிக்கப்பட்டிருந்தது என நூலில் குறிப்பிடுகிறார் பிரணாய் ராய். அதே சமயம், ஆந்திரப் பிரதேசம், தில்லி ஆகிய இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவைத் தேர்தல்கள் குறித்த கணிப்பில் ஆந்திர மாநிலம் குறித்த கணிப்பு தவறாகப் போனதையும் குறிப்பிடுகிறார் பிரணாய் ராய்.
1984ற்குப் பிறகு, தமிழ்நாட்டில் கருத்துக் கணிப்புகள் பரவலாக நடக்கத் துவங்கின. புதிதாக வெளிவந்திருந்த தராசு வார இதழ், மாநிலம் முழுவதும் தங்களது நிருபர்களை வைத்து கருத்துக் கணிப்புகளை நடத்தி, முடிவுகளை வெளியிட்டது. எம்.ஜி.ஆரின் மரணத்திற்குப் பிறகு 1989ல் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டபோது, தராசு வெளியிட்ட கருத்துக் கணிப்பில் தி.மு.க. வெற்றிபெறும் என்பது சரியாக கணிக்கப்பட்டிருந்தது.
இந்தத் தேர்தலின்போது ஆனந்த விகடன் இதழ், வாக்குச் சீட்டு போன்ற ஒன்றை தங்கள் இதழுடன் இணைத்து வாசகர்களுக்கு அனுப்பி அதன் மூலம் கருத்துக் கணிப்பு ஒன்றை மேற்கொண்டது. அந்தக் கருத்துக் கணிப்பின் முடிவுகளும் சரியாகவே இருந்தன.

பட மூலாதாரம், Getty Images
1991ஆம் ஆண்டு தேர்தலின்போது, இந்தியா டுடே இதழ் தேசிய அளவில், மார்க் நிறுவனத்துடன் இணைந்து கருத்துக் கணிப்பு ஒன்றை நடத்தியது. மாநில அளவில், செய்தியாளர்கள் அளித்த கருத்துகளின் அடிப்படையில், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. வெல்லும் என கணிக்கப்பட்டது. தேர்தலுக்கு சற்று முன்பாக, முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியும் தமிழ்நாட்டில் கொல்லப்பட, அ.தி.மு.க. மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது. கருத்துக் கணிப்பில் கூறப்பட்டதைவிட அதிக இடங்களை அ.தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி வென்றது.
1996ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, ஆட்சியிலிருந்த ஜெயலலிதா அரசு மீது கடுமையான அதிருப்தி இருந்ததாலும் தி.மு.க. - தமிழ் மாநில காங்கிரஸ் கூட்டணியாலும் அந்தக் கூட்டணியே வெற்றிபெறும் என்பது எளிதில் கணிக்கக் கூடியதாக இருந்தது. இந்தியா டுடேயுடன் இணைந்து பிரணாய் ராயும் தோராப் சுபாரிவாலாவும் நடத்திய கருத்துக் கணிப்பில் அ.தி.மு.க. குறைந்தது 11 இடங்களையும் அதிகபட்சமாக 37 இடங்களையும் பிடிக்கும் என கணிக்கப்பட்டது. ஆனால், அ.தி.மு.க. வெறும் 4 இடங்களை மட்டுமே பெற்றது.
1991, 1996 ஆகிய இரு தேர்தல்களின்போதும் தராசு கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டது. அதன் முடிவுகள் சரியாகவே அமைந்தன என்கிறார் அந்த இதழின் ஆசிரியரான 'தராசு' ஷ்யாம்.
2001ஆம் ஆண்டுத் தேர்தலைப் பொறுத்தவரை, தூர்தர்ஷன், ஜீ டிவி ஆகியவற்றுக்காக டி.ஆர்.எஸ். நிறுவனம் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பை மேற்கொண்டது. அந்தக் கருத்துக் கணிப்பில் அ.தி.மு.க. 125 இடங்களையும் தி.மு.க. 105 இடங்களையும் வெல்லும் என கணிக்கப்பட்டது. இந்தியா டுடே- ஓ.ஆர்.ஜி. மார்க் கருத்துக் கணிப்பும் அ.தி.மு.கவுக்கு 120 - 130 இடங்களையும் தி.மு.கவுக்கு 105-115 இடங்களையும் கணித்தது. தமிழ்நாட்டில் தொங்கு சட்டமன்றம் ஏற்படலாம் என்றும் கூறியது. ஆனால், அந்தத் தேர்தலில் அ.தி.மு.க. மிகப் பெரிய வெற்றியைப் பெற்றது. அ.தி.மு.க. மட்டுமே 132 இடங்களை பிடித்ததோடு, அந்தக் கூட்டணி 196 இடங்களை கைப்பற்றியது. தி.மு.க. 31 இடங்களை மட்டுமே பெற்றது.

பட மூலாதாரம், Getty Images
2006ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் தி.மு.கவுக்கு பெரும் வெற்றி கிடைக்கும் என சுட்டிக்காட்டின. சிஎன்என் - ஐபிஎன் மற்றும் தி ஹிந்து இணைந்து நடத்திய கருத்துக் கணிப்பில் தி.மு.க. கூட்டணி 157 - 167 இடங்களைப் பிடிக்கும் எனத் தெரியவந்தது. அ.தி.மு.க. 64- 74 இடங்களைப் பிடிக்கும் எனவும் கூறப்பட்டது. ஒரு வார இதழ் நடத்திய தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு தி.மு.க. கூட்டணிக்கு 200க்கும் மேற்பட்ட இடங்கள் கிடைக்கும் எனக் கூறியது. ஆனால், தேர்தல் முடிவுகள் வெளியானபோது ஆச்சரியம் காத்திருந்தது. தி.மு.க. கூட்டணி 163 இடங்களைப் பிடித்தாலும், தி.மு.க. தனித்து ஆட்சி அமைக்கும் அளவுக்கான இடங்களைப் பெறவில்லை. 96 இடங்கள் மட்டுமே அக்கட்சிக்குக் கிடைத்தன. அ.தி.மு.க. கூட்டணி 69 இடங்களைப் பிடித்தது.
2011ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, ஹெட்லைன்ஸ் டுடே, சிஎன்என் ஐபிஎன், ஏசியா நெட், ஸ்டார் நியூஸ் போன்றவை மேற்கொண்ட கருத்துக் கணிப்புகள் தி.மு.க., அ.தி.மு.க. ஆகிய இரு கட்சிகளுக்கும் சமமான அளவில் இடங்கள் கிடைக்கும் என்றே கணித்தன. நியூஸ் எக்ஸ் - சி ஓட்டர் மட்டும் தி.மு.கவுக்கு மிகக் குறைவான இடங்களைக் கணித்தது. ஆனால், இந்தத் தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணி 203 இடங்களைப் பிடித்தது. தி.மு.க. கூட்டணியால் வெறும் 31 இடங்களை மட்டுமே பிடிக்க முடிந்தது.
2016ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் முடிந்த பிறகு, பல நிறுவனங்கள் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகளை மேற்கொண்டன. இந்தியா டுடே, நியூஸ் நேஷன், நியூஸ் எக்ஸ், ஏபிபி நீல்சன் ஆகியவற்றின் தேர்தலுக்குப் பிந்தைய கணிப்புகள் தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் என இந்தக் கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன. சி ஓட்டர், ஸ்பிக் நியூஸ் ஆகியவை மட்டுமே அ.தி.மு.க. ஆட்சியைப் பிடிக்கும் எனக் கூறின. ஆனால், தேர்தல் முடிவுகள் அ.தி.மு.கவுக்கு சாதகமாகவே வந்தன.
2021 சட்டமன்றத் தேர்தலைப் பொறுத்தவரை, பத்துக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கருத்துக் கணிப்புகளை மேற்கொண்டன. தேர்தலுக்குப் பிந்தைய அனைத்து கருத்துக் கணிப்புகளுமே தி.மு.க. கூட்டணியே வெல்லும் எனக் கணித்தன. அந்தக் கணிப்புகள் உண்மையாகவே அமைந்தன.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பொதுவாக தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளைவிட, வாக்குப் பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளே நிஜமான முடிவுகளுடன் அதிகம் ஒத்துச்செல்லும் என்கிறார் பிரணாய் ராய். அதேபோல, சாதாரணமான தேர்தல்களைவிட, ஏதாவது அலை வீசும் தேர்தல்கள்தான் கருத்துக் கணிப்புகளுக்கு சாதகமாக அமையும் என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
மூத்த பத்திரிகையாளர் ஷ்யாமைப் பொறுத்தவரை, தற்போது வெளியாகும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கணிப்புகள், தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளின் நீட்சியாகவே இருக்கின்றன என்கிறார். "தராசு இதழில் வாக்குப்பதிவுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகளை மேற்கொள்ளும்போது, 20 தொகுதிகளைத் தேர்வுசெய்து, அந்த 20 தொகுதிகளிலும் வாக்குச் சாவடிக்கு வெளியில் நின்று வாக்களித்துவிட்டு வருபவர்களிடம் அவர்கள் எந்தக் கட்சிக்கு வாக்களித்தார்கள் என்ற கருத்தைப் பெற்று, முடிவுகளை வெளியிட்டோம். ஆனால், இந்த முறை 2004க்குப் பிறகு தடை செய்யப்பட்டுவிட்டது. இப்போது யாரும் வாக்குச் சாவடிக்கு வெளியில் நின்று வாக்காளர்கள் கருத்தைப் பெற முடியாது. வீடுவீடாகச் சென்றோ, தொலைபேசி மூலமாகவோதான் அதைச் செய்ய முடியும். அப்படியிருக்கும்போது, இப்போது வெளியாகும் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளின் துல்லியத்தைச் சொல்வது கடினம்" என்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












