மோதி, யோகி ஆகியோருக்கு மக்களவைத் தேர்தல் முடிவுகள் சொல்லும் செய்தி என்ன?

- எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
இந்தியாவில் இரண்டு முறை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி, 2024ஆம் ஆண்டுத் தேர்தலில் 240 இடங்களையே பிடித்திருக்கிறது. இந்தியா கூட்டணி கடுமையான போட்டியைத் தந்தாலும், ஆட்சியைப் பிடிக்கும் பெரும்பான்மையை நெருங்கவில்லை. இந்தத் தேர்தல் முடிவுகள் உணர்த்துவதென்ன?
மொத்தமுள்ள 543 இடங்களில் அறுதிப் பெரும்பான்மைக்கு 272 இடங்கள் தேவை. ஆனால், ஆளும் பாரதிய ஜனதா கட்சியால் அதை எட்ட முடியவில்லை. இதன் கூட்டணிக் கட்சியான ஐக்கிய ஜனதா தளம் 12 இடங்களையும் தெலுங்கு தேசம் 16 இடங்களையும் சிவ சேனாவின் ஷிண்டே பிரிவு 7 இடங்களையும் மதச்சார்பற்ற ஜனதா தளம் 2 இடங்களையும் ராஷ்ட்ரிய லோக் தளம் 2 இடங்களையும் அஜித் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி ஒரு இடத்தையும் பெற்றுள்ளன. மற்ற சிறிய கட்சிகள் ஆறு இடங்களையும் பெற்றுள்ளன.
இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சி 99 இடங்களையும் சமாஜ்வாதி கட்சி 37 இடங்களையும் தி.மு.க. 22 இடங்களையும் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா 9 இடங்களையும் சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் கட்சி 7 இடங்களையும் சிபிஎம், ஆர்.ஜே.டி. ஆகியவை தலா 4 இடங்களையும் மற்ற கட்சிகள் இணைந்து 19 இடங்களையும் பிடித்துள்ளன.
2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க. 282 இடங்களைப் பெற்றது. 2019ஆம் ஆண்டு தேர்தலில் 303 இடங்கள் அக்கட்சிக்குக் கிடைத்தன. தேர்தல் பிரசாரங்களின்போது பா.ஜ.கவின் மூத்த தலைவர்கள், தே.ஜ.கூட்டணி 400 இடங்களைப் பிடிக்கும் எனக் கூறிவந்த நிலையில், ஒட்டுமொத்தமாக 292 இடங்களே அந்தக் கூட்டணிக்குக் கிடைத்திருப்பதும் பா.ஜ.கவுக்குத் தனிப் பெரும்பான்மை கிடைக்காததும் ஒரு பின்னடைவாகத்தான் பார்க்கப்படுகிறது.
டெல்லியில் பா.ஜ.கவின் தலைமையகத்தில் தொண்டர்களிடம் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, தங்களுடைய எதிர்க்கட்சிகள் ஒட்டுமொத்தமாக இணைந்தும்கூட, பா.ஜ.க. மட்டும் தனியாக பெற்ற எண்ணிக்கையில் இடங்களைப் பிடிக்க முடியவில்லை எனக் குறிப்பிட்டவர், மூன்றாவது முறையாகவும் தே.ஜ.கூ. ஆட்சியமைக்கும் என்று அறிவித்தார்.
அப்படி பா.ஜ.க. தலைமையில் ஆட்சி அமையும் பட்சத்தில், ஐக்கிய ஜனதா தளம், தெலுங்கு தேசம் கட்சி ஆகியவற்றின் பங்கேற்புடன்தான் அந்த ஆட்சி அமைய முடியும். செவ்வாய்க் கிழமையன்று தேர்தல் முடிவுகள் முழுமையாக வெளியாகாத நிலையில், ஆட்சி அமைப்பது தொடர்பான பேச்சுவார்த்தைகள் புதன் கிழமையன்று தீவிரமடையலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

பட மூலாதாரம், Getty Images
இந்தியா கூட்டணி ஆட்சியமைக்க முயற்சி செய்யுமா?
காங்கிரஸ் தனியாக 99 இடங்களையும் இந்தியா கூட்டணி சுமார் 230 இடங்களை மட்டுமே பிடித்திருக்கும் நிலையில், அந்தக் கூட்டணி ஆட்சியமைக்கும் முயற்சிகளை மேற்கொள்ளாது என்றே எதிர்பார்க்கப்படுகிறது.
தேர்தல் முடிவுகள் வெளிவந்துகொண்டிருந்த செவ்வாய்க் கிழமையன்று மாலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான மல்லிகார்ஜுன கார்கே, சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் செய்தியாளர்களைச் சந்தித்தனர்.
"அமித் ஷா தேவையில்லை, மோதி தேவையில்லை என இந்தத் தேர்தல்கள் சொல்லியிருக்கின்றன. உத்தரப் பிரதேச மக்கள் ஒரு ஆச்சரியத்தை நிகழ்த்தியிருக்கிறார்கள். இருக்கும் அச்சுறுத்தலைப் புரிந்துகொண்டு, இந்திய மக்கள் அரசியலமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றியிருக்கிறார்கள்" என்று குறிப்பிட்டார் ராகுல் காந்தி.
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நிதிஷ் குமாரைக் குறிக்கும் வகையில் உங்களுடைய முந்தைய கூட்டாளிகளுடன் பேசுவீர்களா என செய்தியாளர்கள் கேள்வியெழுப்பியபோது, "எங்களுடைய கூட்டணிக் கட்சிகளுடன் பேசாமல், இதைப் பற்றிச் சொல்ல முடியாது. இந்தியா கூட்டணியின் கூட்டம் நாளை இருக்கிறது. இந்தியா என்ன முடிவெடுக்கிறதோ, அதன்படி நடப்போம்" என்று பதிலளித்தார்.
ஆகவே, எந்த சமன்பாட்டில் பாரதிய ஜனதா கூட்டணி ஆட்சியமைக்கப் போகிறது, இந்தியா கூட்டணியின் நிலைப்பாடு என்ன என்பதெல்லாம் புதன்கிழமை மாலைக்குள் ஓரளவுக்குத் தெளிவாகலாம்.
தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் வாய்ப்புகள் அதிகமாக உள்ள நிலையில், பல மாநிலங்களில் இந்தக் கூட்டணி அதிர்ச்சி தரத்தக்க முடிவுகளைப் பெற்றுள்ளது. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில்.
2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் மட்டும் இருந்து பா.ஜ.கவுக்கு 71 எம்.பிக்கள் கிடைத்தனர். எஸ்.பிக்கு ஐந்து எம்பிக்களும் காங்கிரசிற்கு 2 எம்.பி.க்களும் கிடைத்தனர். 2019ஆம் ஆண்டில், தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு 64 இடங்கள் கிடைத்தன. காங்கிரஸ் ஒரே ஒரு இடத்தில் மட்டும் வெற்றிபெற்றது.
ஆனால், இந்த முறை அந்த மாநிலம் மிகப் பெரிய அதிர்ச்சியை பா.ஜ.கவிற்குத் தந்திருக்கிறது. மொத்தமுள்ள 80 இடங்களில் பா.ஜ.கவுக்கு 33 இடங்களே கிடைத்திருக்கின்றன. எஸ்.பிக்கு 37 இடங்களும் காங்கிரசிற்கு 6 இடங்களும் கிடைத்திருக்கின்றன.
ராமர் கோவில் கட்டப்பட்ட அயோத்தி நகரை உள்ளடக்கிய ஃபைசாபாத் தொகுதியில் மூன்று முறை பா.ஜ.கவின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்ற லல்லு சிங், சமாஜ்வாதி கட்சியின் அவதேஷ் பிரசாதிடம் தோற்றுப்போனார்.
தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள் அனைத்திலுமே உத்தரப் பிரதேசத்தில் இருந்து பா.ஜ.கவுக்கு 70 இடங்கள் கிடைக்கும் என்றே கூறப்பட்டது. ஆனால், செவ்வாய்க்கிழமை வாக்கு எண்ணிக்கை துவங்கியதுமே நடப்புச் சித்திரம் வேறு விதமாக இருக்கிறது என்பது புரிந்துவிட்டது.
இந்த முறை பா.ஜ.க. 400 இடங்களைப் பிடிக்க வேண்டும் என இலக்கு வைத்தபோதே, பெரும் எண்ணிக்கையிலான இடங்களைப் பிடிக்க உத்தரப் பிரதேசத்தையே அக்கட்சி நம்பியிருந்தது. ஆனால், அப்படி நடக்கவில்லை.
மொத்தமுள்ள 80 தொகுதிகளில் சமாஜ்வாதி கட்சி 62 இடங்களில் போட்டியிட்டு 37 இடங்களிலும் காங்கிரஸ் 17 இடங்களில் போட்டியிட்டு ஆறு இடங்களிலும் வென்றது. அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, நேரு குடும்பத்திற்கு நெருக்கமானவராக அறியப்பட்ட கிஷோரி லால் ஷர்மாவிடம் தோற்றுப்போனார்.

பட மூலாதாரம், Getty Images
மோதியை சோதித்த வாரணாசி
அதிர்ச்சி தரும் விதமாக பிரதமர் மோதியே வாரணாசி தொகுதியில் ஆரம்பத்தில் பின்னடைவைச் சந்தித்தார். கடந்த முறை சுமார் 4.80 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றிபெற்ற மோதி, இந்த முறை சுமார் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்திலேயே வெற்றிபெற்றார்.
இந்த முறை தேர்தல் பிரசாரத்தில் சமாஜ்வாதி கட்சியும் காங்கிரசும் வறுமை, விவசாய பிரச்னை, அரசியலமைப்பு சட்டத்தை ஆளும் கட்சி பலவீனப்படுத்துவது ஆகியவற்றை முக்கிய பிரச்னைகளாகப் பேசினர். இட ஒதுக்கீடு குறித்தும் பிரசாரத்தில் குறிப்பிடப்பட்டது. இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய பா.ஜ.க. முயற்சிப்பதாக குற்றம்சாட்டப்பட்டது. இந்திய ராணுவத்தில் அக்னிவீர் திட்டத்தின் கீழ் ஆட்களை சேர்ப்பது குறித்தும் இரு கட்சிகளும் பேசின.
உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. 33 இடங்களையே பெறுவதென்பது பிரதமர் மோதிக்கு மட்டுமல்ல முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கும் கெட்ட செய்தி என்கிறார் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளரான ஷரத் பிரதான்.
"உத்தரப் பிரதேசத்தில் பா.ஜ.க. 50 இடங்களையாவது பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மோதி மற்றும் அமித் ஷாவின் ஆணவத்தை மக்கள் நிராகரித்திருக்கிறார்கள் என்பதையே முடிவுகள் காட்டுகின்றன. மோதி வலுவானால், அரசியலமைப்புச் சட்டம் அபாயத்திற்குள்ளாகும் என ஜனநாயகத்தின் மீது நம்பிக்கையுள்ள சாதாரண மக்களையும் தலித்துகளையும் பிற்படுத்தப்பட்டோரையும் நம்பச் செய்வதில் எதிர்க்கட்சிகள் வெற்றிபெற்றிருக்கின்றன" என்கிறார் அவர்.
அதேபோல, இந்த முறை பட்டியலினத்தைச் சேர்ந்தவர்கள் மாயாவதிக்கு வாக்களிக்காமல் இந்தியா கூட்டணிக்கு வாக்களித்ததையும் அவர் சுட்டிக்காட்டுகிறார். பா.ஜ.க. ஆட்சியில் நீடித்தால் இட ஒதுக்கீடு பலவீனப்படுத்தப்படும் என்ற எண்ணம் பட்டியலினத்தவரிடம் ஆழமாகப் பதிந்துவிட்டது; இதனால், வழக்கமாக மாயாவதிக்கு வாக்களிக்கும் ஜாதவ்கள் இந்த முறை இந்தியா கூட்டணிக்கு வாக்களித்தனர் என்கிறார் ஷரத் பிரதான்.
இது முதலமைச்சர் யோகிக்கு எப்படிப் பாதகமாகும்?
"அமித் ஷாவும் நரேந்திர மோதியும் விரும்பினால், உத்தரப் பிரதேசத்தின் தோல்விக்கான பழியை யோகி மீது சுமத்தி அவரை முதல்வர் பதவியிலிருந்து நீக்க முடியும். உத்தரப்பிரதேசத்தில் தன்னைவிட பெரிய தலைவர் இல்லை எனக் கருதுகிறார் யோகி. தேர்தல் முடிவுகள் அதைப் பொய்யாக்கியிருக்கின்றன. ஸ்மிருதி இரானி தோற்கடிக்கப்பட்டது மோதியின் தோல்விதான். மோதியின் பாணியில் இரானியைத் தோற்கடித்தார் ராகுல். ஒரு சாதாரண தொண்டரை வைத்து ஸ்மிருதி இரானியைத் தோற்கடித்தது, ராகுலின் மிகச் சிறந்த வியூகம்" என்கிறார் அவர்.
"ராமர் அரசியல் எடுபடவில்லை"

பட மூலாதாரம், DEBAJYOTI CHAKRABORTY/NURPHOTO VIA GETTY IMAGES
அகில இந்திய அளவில் பா.ஜ.கவுக்கு இடங்கள் குறைந்ததற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார், மூத்த பத்திரிகையாளரான கார்த்திகேயன்.
"2014ஆம் ஆண்டு தேர்தலில் வளர்ச்சியை முன்வைத்து பிரசாரம் செய்தார் மோதி. 2019ஆம் ஆண்டுத் தேர்தலின்போது தேசப் பாதுகாப்பை முன்வைத்தார். பத்தாண்டுகள் கழிந்துவிட்ட நிலையில் தங்களது சாதனைகளை முன்வைக்காமல், மதத்தின் அடிப்படையில் மக்களைப் பிளவுபடுத்தி, வெறுப்புப் பிரசாரத்தின் மூலமாக வாக்குகளை வாங்கிவிட முடியும் என நினைத்தார்."
"ஆனால், இந்தப் பத்தாண்டுகளில் ஏற்பட்ட பிரச்னைகள் குறிப்பாக, வேலைவாய்ப்பின்மை, விலைவாசி உயர்வு போன்றவை மக்களைக் கடுமையாகப் பாதித்திருக்கிறது. மேலும், பா.ஜ.கவின் ஆணவப்போக்கும் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்தது. குறிப்பாக மகாராஷ்டிர மாநிலத்தில் இரண்டு கட்சிகளை உடைத்து அதன் மூலம் ஆதாயம் பெறலாம் என நினைத்தார்கள்."
"ஆனால், மக்கள் அதனை நிராகரித்து உத்தவ் தாக்கரேவையும் ஷரத் பவாரையும் ஆதரித்திருக்கிறார்கள். தவிர, தனி மனிதரை முன்னிறுத்தும் போக்கையும் வெறுப்புப் பிரசாரத்தையும் இந்தியாவில் மக்கள் நிராகரித்திருக்கிறார்கள். ராமபக்தர்களுக்கும் ராமரின் துரோகிகளுக்கும் இடையிலான தேர்தல் என்ற யோகியின் பேச்சை மக்கள் ஏற்கவில்லை. அத்தியாவசிய பிரச்னைதான் பெரிதாகத் தெரிந்திருக்கிறது" என்கிறார் கார்த்திகேயன்.
பா.ஜ.கவுக்கு ஆச்சரியமளித்திருக்கும் மற்றொரு மாநிலம் மகாராஷ்டிரா. இந்த மாநிலத்தில் எதிர்பார்த்ததைவிட குறைவான இடங்களே பாஜக கூட்டணிக்கு கிடைத்திருக்கின்றன. 2019 மக்களவைத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணி 41 இடங்களைக் கைப்பற்றியது. அவர்களில் 23 பேர் பா.ஜ.கவையும், 18 பேர் சிவசேனாவையும் சேர்ந்தவர்கள். என்.சி.பி. 4 இடங்களிலும், 25 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் ஒரு இடத்திலுமே வெற்றிபெற்றன.
மாறிய ராகுல் இமேஜ்

பட மூலாதாரம், Getty Images
ஆனால், இந்த முறை எல்லாம் மாறிப் போனது. 15 இடங்களில் போட்டியிட்ட காங்கிரஸ் 13 இடங்களைக் கைப்பற்றியிருக்கிறது. சில விஷயங்களை இதற்குக் காரணமாகச் சொல்கிறார் காங்கிரசின் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினரும் மூத்த பத்திரிகையாளருமான குமார் கேட்கர். ஒன்று, ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை யாத்திரை. இந்த யாத்திரையை ஊடகங்கள் புறக்கணித்தாலும், இது ராகுல் காந்தியின் இமேஜை மாற்றியதோடு, மக்களை காங்கிரசில் மீண்டும் இணையவைத்தது என்கிறார் அவர்.
அதேபோல, தங்களை முன்னிறுத்திக் கொள்ளாமல் இந்தியா கூட்டணியை காங்கிரஸ் உருவாக்கியதும் மிக முக்கியமானது என்கிறார் அவர்.
இதற்கடுத்தபடியாக, அரசியல் சாசனம் ஆபத்தில் இருப்பதாகவும், பா.ஜ.கவுக்கு பெரும்பான்மை கிடைத்தால், அரசியல் சாசனம் பாதிக்கப்படும் என்று ராகுல் காந்தியும் இந்தியா கூட்டணியின் தலைவர்களும் பிரசாரம் செய்தது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது என்கிறார் மகாராஷ்டிராவைச் சேர்ந்த மூத்த பத்திரிகையாளர் ஹேமந்த் தேசாய்.
இது தவிர, காங்கிரஸ் தனது தேர்தல் அறிக்கையில் விவசாயிகள் பிரச்னை, கிராமப்புறம் மற்றும் நகர்ப்புறங்களில் வேலையில்லா திண்டாட்டம், விலைவாசி உயர்வு போன்றவற்றை பொது வாக்காளர்களிடம் கொண்டு செல்வதில் வெற்றி பெற்றது. குறிப்பாக விதர்பா மற்றும் மராத்வாடாவில் இந்தப் பிரச்னைகள் காங்கிரசிற்குச் சாதகமாக அமைந்தன.
இதன் காரணமாக, இந்தியா கூட்டணிக்கு மகாராஷ்டிராவில் கிட்டத்தட்ட 30 இடங்கள் கிடைத்தன. மகாராஷ்டிராவிலும் உத்தரப் பிரதேசத்திலும் ஏற்பட்ட பின்னடைவு, பா.ஜ.கவுக்கு தேசிய அளவிலான பின்னடைவாக அமைந்துவிட்டது.
இந்நிலையில், தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளத்துடனான கூட்டணி எப்படி அமையும்?
"தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றின் அடிப்படைச் சித்தாந்தத்திற்கும் பா.ஜ.கவின் சித்தாந்தத்திற்கும் இடையே பெரிய இடைவெளி இருக்கிறது. எந்த அளவுக்கு அவர்கள் ஒத்துப்போக முடியும் என்பதைப் பார்க்க வேண்டும். அவர்கள் கூட்டணி மாறினாலும் அதற்காக அவர்களைக் குறைசொல்ல முடியாது" என்கிறார் கார்த்திகேயன்.
'கூட்டணி உதவியுடன் ஆட்சி அமைத்தால், ஒரே நாடு - ஒரே தேர்தல், தொகுதிகளை மறு வரையறை செய்வது போன்றவற்றை பா.ஜ.கவால் முன்னெடுத்துச் செல்ல முடியுமா என்பது மற்றொரு கேள்வி. "370வது பிரிவு நீக்கம், ராமர் கோவில் கட்டுவது போன்ற வெகு சில விஷயங்களைத் தவிர, அவர்களால் கடந்த பத்தாண்டுகளில் தாங்கள் சொன்ன எதையும் செய்ய முடியவில்லை. ஆகவே வரும் நாட்களிலும் எதையும் செய்வதற்கான வாய்ப்புகள் குறைவு" என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.
இவற்றைத் தாண்டி, இன்னொரு விஷயத்தைச் சுட்டிக்காட்டுகிறார் அவர். அதாவது தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியமைப்பது உறுதியாகிவிட்ட நிலையில் எதிர்க்கட்சிகளாக அமரவிருக்கும் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், தி.மு.க., போன்றவை அடுத்த ஐந்தாண்டு காலத்திற்குத் தீவிரமாக அரசியல் செய்ய வேண்டும் என்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












