மக்களவைத் தேர்தல் முடிவுகள் பற்றி பிரதமர் நரேந்திர மோதி என்ன கூறினார்?
இந்திய அளவில் 290க்கும் மேற்பட்ட இடங்களில் பாஜக முன்னிலை வகித்து வரும் நிலையில் "மூன்றாவது முறையாக தேசிய ஜனநாயக கூட்டணி மீது நம்பிக்கை வைத்து வெற்றி பெற வைத்த மக்களுக்கு நன்றி" தெரிவித்துள்ளார் பிரதமர் நரேந்திர மோதி.
இதுதொடர்பாக பிரதமர் மோதி தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவில், “இந்த வெற்றியை வழங்கியுள்ள மக்களுக்குத் தலை வணங்குகிறேன். இந்த வெற்றியைச் சாத்தியப்படுத்துவதற்காக உழைத்த அனைத்து தலைவர்கள் மற்றும் தொண்டர்களுக்கும் நன்றி” என்று அவர் கூறியுள்ளார்.
மேலும், ஒடிஷாவில் பாஜக வெற்றி அடைந்ததற்கும், ஆந்திராவில் தெலுங்கு தேசம் கட்சி வெற்றி பெற்றதற்கும் தனது வாழ்த்தைத் தெரிவித்துள்ளார் பிரதமர் மோதி.
இதைத் தொடர்ந்து பாஜக அலுவலகத்தில் இருந்து நேரடியாக மக்களிடம் பேசியுள்ளார் மோதி.
அவர் பேசுகையில், வாக்களித்த அனைத்து மக்களுக்கும் நன்றி தெரிவித்ததோடு, ஒடிஷா வெற்றி குறித்தும், கேரளாவில் முதல் நாடாளுமன்ற உறுப்பினரைப் பெற்றுள்ளது குறித்தும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
“எனது அம்மாவின் மறைவிற்குப் பிறகு நடந்த முதல் தேர்தலில் நாட்டு மக்கள் அவர் இல்லாத நினைவே எனக்கு வரவிடவில்லை. இந்த நாட்டின் தாய்மார்களும், சகோதரிகளும் எனக்கு புது உத்வேகத்தை அளித்துள்ளனர்.”
தொடர்ந்து பேசிய அவர், “எந்தவொரு கட்சியும் தொடர்ந்து மூன்றாவது முறையாக இவ்வளவு பெரிய வெற்றியைப் பெறவில்லை. இந்த நாட்டு மக்கள் பாஜக மீதும், தேசிய ஜனநாயகக் கூட்டணி மீதும் நம்பிக்கை வைத்து இந்த வெற்றியை அளித்துள்ளனர். இந்த வெற்றி உலகின் மிகப்பெரிய ஜனநாயகத்தின் வெற்றி” என்று கூறினார்.
இதோடு இந்தத் தேர்தலைத் திறன்மிக்க வழியில் நடத்தி முடித்துள்ள தேர்தல் ஆணையத்திற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார் மோதி.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)













