சிறையில் இருந்தபடி முன்னாள் முதல்வரை தோற்கடித்தவர் - 3 வெற்றிகரமான சுயேச்சைகளின் மாறுபட்ட கதை

பட மூலாதாரம், Getty Images
நடந்து முடிந்திருக்கும் 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் பல சுவாரசியங்களையும் ஆச்சரியங்களையும் கொடுத்திருக்கிறது.
‘மோதி அலையால்’ பெரும் வெற்றி பெறும் என்று கருத்துக் கணிப்புகள் கூறிய நிலையில், பா.ஜ.க, தனித்து ஆட்சியமைக்கத் தேவையான இடங்களைப் பெறவில்லை.
கருத்துக்கணிப்புகளில் 100-150 இடங்களையே பெறும் என்று கூறப்பட்ட எதிர்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 234 இடங்களைப் பெற்றுள்ளது.
அதேபோல், பல நட்சத்திர வேட்பாளர்களும் தோல்வியடைந்திருக்கின்றனர். உத்தரப் பிரதேசத்தின் அமேதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, தமிழகத்தின் கோயம்புத்தூரில் மாநில பாஜக தலைவர் கே. அண்ணாமலை என்று இந்தப் பட்டியல் நீள்கிறது.
அதேசமயம், எதிர்பாராத வகையில் சில சுயேச்சைகள் வெற்றி பெற்றிருக்கின்றனர். அவர்களில் சிலர் தற்போது சிறையில் இருக்கிறார்கள்.
யார் இவர்கள்? எந்தத் தொகுதிகளில் இருந்து வென்றனர்? அவர்கள் எப்படி பரப்புரை செய்தனர்?
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பிலும்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
காலிஸ்தான் ஆதரவாளர் அம்ரித்பால் சிங்
பஞ்சாப் மாநிலம் கடூர் சாஹிப் தொகுதியில் போட்டியிடும் காலிஸ்தான் ஆதரவாளரான அம்ரித்பால் சிங் 1.9 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
அம்ரித்பால் சிங் தற்போது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் அசாம் மாநிலம் திப்ருகர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
தான் தேர்தலில் போட்டியிடுவதன் நோக்கம் குறித்து அம்ரித்பால் சிங், ‘பஞ்சாப் மாநிலத்தின் பிரச்னைகளை முன்னுரிமை அடிப்படையில் நாடாளுமன்றத்தில் எடுத்துரைக்கப் போவதாகச்’ சொன்னார்.
தேர்தல் முடிவுகள் குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அம்ரித்பால் சிங்கின் தந்தை தர்செம் சிங், "எங்களிளின் மிகப்பெரிய போராட்டம் போதைப்பொருளுக்கு எதிரானதாக இருக்கும்," என்றார். அம்ரித்பால் சிறையிலிருப்பது குறித்து கேட்டபோது, அவரை அரசு விடுதலை செய்ய வேண்டும் என்றார். அம்ரித்பாலுக்கு ஆதரவளித்த அனைத்து மக்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்தார்.
அம்ரித்பால், மக்களிடம் சொன்ன விஷயங்களை நிறைவேற்றுவார் என்று அவரது தாயார் பல்விந்தர் கவுர் செய்தியாளர்களிடம் கூறினார்.

தேர்தல் பரப்புரை எப்படி நடந்தது?
அம்ரித்பாலுக்காகப் பரப்புரை மேற்கொள்ள அவரது ஆதரவாளர்கள் பல குழுக்களை அமைத்திருந்தனர்.
சிரோமணி அகாலிதளத்தின் (அமிர்தசரஸ்) பொதுச்செயலாளர் ஹர்பால் சிங் பலேர் இந்தக் குழுக்களை அமைத்தார். ஒவ்வொரு குழுவிலும் 21 இளைஞர்கள் சேர்க்கப்பட்டனர். அவர்கள் வீடு வீடாகச் சென்று அம்ரித்பாலுக்காக பரப்புரை செய்தார்கள்.
இதில் சுவாரசியமான விஷயம் என்னவென்றால், இந்தக் குழுக்களை அமைத்த ஹர்பால் சிங் பலேர், அவரது கட்சியான சிரோமணி அகாலிதளத்தால் கடூர் சாஹிப் தொகுதியின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால், அம்ரித்பால் சிங் அதே தொகுதியில் போட்டியிடுவதாக அறிவித்த உடனேயே ஹர்பால் சிங் பலேர் தனது வேட்புமனுவை வாபஸ் பெற்றார்.
அம்ரித்பால் சிங்கிற்கு பெண்கள் குழுக்கள் வீடு வீடாகச் சென்று வாக்கு கேட்டனர். கிராமப்புறங்களில் அம்ரித்பால் சிங்கின் போஸ்டர்கள் ஆம் ஆத்மி, காங்கிரஸ், பாரதிய ஜனதா, சிரோமணி அகாலி தளம் போன்ற கட்சிகளின் போஸ்டர்களுக்குக் குறைவின்றிக் காணப்பட்டன.
தேர்தல் பேரணிகளை ஏற்பாடு செய்யும் பொறுப்பு பீபி பரம்ஜித் கவுர் கல்தா என்பவரிடம் கொடுக்கப்பட்டது.
பிபிசி பஞ்சாபி சேவையிடம் பேசிய அவர், "முக்கியமாக மனித உரிமைகள் அடிப்படையில் அம்ரித் பால் சிங்கைத் தேர்ந்தெடுப்பதற்காக நாங்கள் போராடுகிறோம். பஞ்சாப் தற்போது போதைப்பொருளின் பிடியில் உள்ளது. அம்ரித் பால் சிங் போதைப்பொருளுக்கு எதிராக பிரசாரம் செய்தார். ஆனால் அரசாங்கம் அவரைக் கைது செய்துள்ளது," என்றார்.

பட மூலாதாரம், ANI
யார் இந்த அம்ரித்பால் சிங்?
30 வயதான அம்ரித்பால் சிங், காலிஸ்தான் ஆதரவாளர். சீக்கியர்களுக்கென தனி தேசம் உருவாக வேண்டும் என்பதே இந்த இயக்கத்தின் நோக்கம்.
ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே என்னும் சீக்கிய போதகரை பார்த்து உத்வேகம் அடைந்தவர் அம்ரித்பால் சிங். சீக்கியர்களுக்கென தனி தேசம் வேண்டுமென கூறி வந்த ஜர்னைல் சிங் பிந்த்ரன்வாலே, 1984ஆம் ஆண்டு ‘ப்ளூ ஸ்டார்’ என்னும் இந்திய ராணுவ நடவடிக்கையால் கொல்லப்பட்டார்.
அவருடைய லிங்க்டு இன் கணக்கு (LinkedIn profile), அம்ரித்பால் சிங் ஒரு மெக்கானிக்கல் இஞ்சினியர் என்று கூறுகிறது. பஞ்சாப்பில் உள்ள ஒரு பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருக்கும் இவர், கார்கோ கம்பெனியில் ஆப்ரேஷனல் மேனேஜராக பணிபுரிந்து இருக்கிறார் என்றும் அதன் தகவல்கள் கூறுகிறது.
“வாரிஸ் பஞ்சாப் டி” (பஞ்சாப்பின் வாரிசுகள்) என்ற அமைப்பின் தலைவராக அம்ரித்பால் சிங் 2022-ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டார். பஞ்சாபில் நிலவும் தண்ணீர் தட்டுப்பாடு, போதைப்பொருட்கள் அதிகரிப்பு போன்ற பிரச்னைகளுக்கு, சீக்கியர்களுக்கென தனி தேசமே தீர்வு என்ற அவரது கருத்துகள் அனைத்தும் இதற்கு முன்னதாக பிந்த்ரன்வாலே கூறியவை.

பட மூலாதாரம், ANI
2022-ஆம் நவம்பர் மாதம் அம்ரித்பால் சிங், ஒரு நீண்ட மத ஊர்வலத்தை மேற்கொண்டார். பஞ்சாபில் போதை பொருள் பயன்பாட்டை குறைப்பதற்கும், சாதி ரீதியாக நிலவி வரும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் இந்த ஊர்வலம் மேற்கொள்ளப்பட்டது.
அம்ரித்பால் சிங்கின் ஆதரவாளர்கள் 2023-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் துப்பாக்கிகள், வாள்களுடன் பஞ்சாப் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட சம்பவம் இந்தியா முழுவதிலும் பெரும் அதிர்வலையை கிளப்பியது. அம்ரித்பால் சிங்கின் கூட்டாளியான லவ்பிரீத் சிங் என்பவரை விடுவிக்க வலியுறுத்தி நடத்தப்பட்ட இந்த போராட்டத்தை அடுத்து, அம்ரித்பால் சிங் குறித்தும், அவரது காலிஸ்தான் பிரிவினை கோரிக்கை தொடர்பாகவும் விவாதங்கள் சூடுபிடித்தன.
ஒரு மாத தேடுதல் வேட்டையின் முடிவில் 2023-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அப்ரித்பால் சிங்கை பஞ்சாப் காவல் துறையினர் கைது செய்தனர்.

பட மூலாதாரம், Getty Images
காஷ்மீரில் வென்ற ‘என்ஜினியர் ரஷீத்’
காஷ்மீரில் பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு நிதியுதவி வழங்கியதாகக் கூறப்பட்ட வழக்கில் 2019-ஆம் ஆண்டு முதல் சிறையில் இருக்கும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஷேக் அப்துல் ரஷீத், 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது அனைவரையும் திகைக்க வைத்திருக்கிறது.
அவர் காஷ்மீரின் பாரமுல்லா தொகுதியில் இருந்து போட்டியிட்டார்.
‘என்ஜினியர் ரஷீத்’ என்று அழைக்கப்படும் ஷேக் அப்துல் ரஷீத், ஜம்மு காஷ்மீர் நேஷனல் கான்ஃபான்ஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் முதல்வர் உமர் அப்துல்லாவைத் தோற்கடித்து, சுயேச்சை வேட்பாளராக பாரமுல்லா தொகுதியில் வெற்றி பெற்றிருக்கிறார்.
இதுகுறித்து தனது எக்ஸ் சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்ட உமர் அப்துல்லா, "தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொள்ள வேண்டிய நேரம் இது என்று நான் நினைக்கிறேன். வடக்கு காஷ்மீரில் வெற்றி பெற்ற பொறியாளர் ரஷீத்துக்கு வாழ்த்துகள்," என்று கூறினார்.

பட மூலாதாரம், Getty Images
ரஷீத் பெரும்பாலும், ஊகிக்க முடியாத செயல்களைச் செய்யக்கூடிய ஹலைவர் என்று விவரிக்கப்படுகிறார். அவரது சர்ச்சைக்குரிய அரசியல் கருத்துக்களுக்காகவும் அவர் பரவலாக அறியப்படுகிறார்.
தற்போது, அவர் டெல்லியில் உள்ள திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். அவரது மகன் தான் அவர் சார்பாக தேர்தல் பரப்புரை செய்தார். தனது தந்தை சார்பாக, அவர் ஆயிரக்கணக்கான மக்களை ஈர்த்து, பிராந்திய இளைஞர்களை ஒருங்கிணைத்து, பல பேரணிகளை ஏற்பாடு செய்திருந்தார்.

பட மூலாதாரம், Facebook/Sarabjeet Singh Khalsa
சுயேச்சையாக வென்ற இந்திரா காந்தி கொலையாளியின் மகன்
பஞ்சாப் மாநிலம் ஃபரித்கோட் தொகுதியில் சுயேச்சை வேட்பாளரும், இந்திரா காந்தி கொலையாளியின் மகனுமான சரப்ஜீத் சிங் கல்சா வெற்றி பெற்றுள்ளார்.
ஃபரித்கோட்டில் தனது பலமான போட்டியாளரான ஆம் ஆத்மி கட்சியின் கரம்ஜித் சிங் அன்மோலை எதிர்த்து 70,053 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுள்ளார்.
தனது வெற்றியைப் பொதுமக்களுக்கு அர்ப்பணித்த அவர், தனது பரப்புரைக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்தார்.
‘ஆபரேஷன் புளூஸ்டார்’ ஆண்டு விழாவை முன்னிட்டு ஜூன் 7-ஆம் தேதி வரை இந்த வெற்றியை கொண்டாட வேண்டாம் என்றும் அவர் தனது ஆதரவாளர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தனது தேர்தல் பரப்புரையின்போது, 2015-ஆம் ஆண்டு சீக்கிய வேதமான குரு கிரந்த் சாஹிப் இழிவுபடுத்தப்பட்ட சம்பவத்தையும், அதைத் தொடர்ந்து நடந்த கொலை சம்பவங்களையும் பற்றிய பிரச்னையை அவர் எழுப்பினார். பஞ்சாபில் போதைப்பொருள் பிரச்னை, தண்டனைக் காலம் முடிந்முடிந்தும் சிறையில் இருக்கும் சீக்கிய கைதிகள் பற்றிய பிரச்னையையும் அவர் எழுப்பினார்.
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியைக் கொலை செய்த இருவரில் ஒருவரான பியாந்த் சிங்கின் மகன் தான் சரப்ஜீத் சிங் கல்சா. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தியின் பாதுகாவலர்களாக இருந்த பியாந்த் சிங் மற்றும் சத்வந்த் சிங் ஆகியோர் இந்திரா காந்தியை 1984-ஆம் ஆண்டு அக்டோபர் 31-ஆம் தேதி, அவரது இல்லத்தில் வைத்துச் சுட்டுக் கொன்றனர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












