மோதிக்கு சிக்கல் தரக்கூடிய சந்திரபாபு, நிதிஷ் கோரிக்கைகள் - ஓர் அலசல்

பட மூலாதாரம், ANI
தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள பல கட்சிகளுடன் பா.ஜ.க-வுக்கு சித்தாந்த ஒற்றுமை இல்லை.
இப்படிப்பட்ட நிலையில், சந்திரபாபு நாயுடு, நிதீஷ் குமார், சிராக் பாஸ்வான் போன்ற கூட்டாளிகளை ஒற்றுமையுடன் வைத்திருந்து நரேந்திர மோதி எப்படி பிரதமர் நாற்காலியில் நீடிக்கப் போகிறார் என்ற கேள்விகள் எழுந்துள்ளன.
இதில் முறையே 16 மற்றும் 12 இடங்களில் வெற்றி பெற்ற ஐக்கிய ஜனதா தளம் (ஜே.டி.யு), தெலுங்கு தேசம் கட்சி (டி.டி.பி) ஆகியவை முக்கியமானவை.
இருப்பினும் 7 தொகுதிகளை வென்றுள்ள சிவசேனையின் ஏக்நாத் ஷிண்டே பிரிவும், ஐந்து இடங்கள் உள்ள லோக் ஜனசக்தி ராம்விலாஸ் பாஸ்வான் (எல்.ஜே.பி) பிரிவும், உத்தரப் பிரதேசத்தில் 2 இடங்களில் வென்று நாடாளுமன்றத்தில் நுழைந்த ராஷ்டிரிய லோக்தளம் (ஆர்.எல்.டி) ஆகியவையும் பா.ஜ.க-வுக்கு முக்கியமானவை.
இதில் சிவசேனையைத் தவிர இந்த கட்சிகளுடன் பா.ஜ.க-வின் உறவு அவ்வளவு சுமுகமாக இருந்ததில்லை.
ஜே.டி.யு-வும், தெலுங்கு தேசம் கட்சியும் கடந்த காலங்களில் பா.ஜ.க-வின் கூட்டணிக் கட்சிகளாக இருந்துள்ளன. சில விஷயங்களில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அவை விலகின.
அதே நேரத்தில் எல்.ஜே.பி-யின் பிளவுக்குப் பிறகு சிராக் பாஸ்வானின் கிளர்ச்சிக்குழு என்.டி.ஏ-வின் ஒரு பகுதியாக மாறியது. ஆர்.எல்.டி தலைவர் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் சேருவதற்கு முன்பு இந்தியா கூட்டணியில் இடம்பெறுவதாக இருந்தார்.
இத்தகைய சூழ்நிலையில் இந்தக்கட்சிகள் அனைத்தையும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஒன்றாக வைத்திருப்பது மோதிக்கு சவாலாக இருக்கக்கூடும். பா.ஜ.க அக்கட்சிகளின் கோரிக்கைகளுக்கு அடிபணிய வேண்டியிருக்கும் என்றும் கூறப்படுகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
புதன்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயக கூட்டணியின் கூட்டத்துக்குப் பிறகு இதன் அறிகுறிகள் தெரியத்தொடங்கியுள்ளன. ஜே.டி.யு தலைவர் கே.சி தியாகி வியாழனன்று அக்னிவீர் திட்டத்தை மறுபரிசீலனை செய்வது பற்றி பகிரங்கமாகப் பேசினார்.
ஆனால் கருத்து வேறுபாடுகள் இருக்கக்கூடிய ஒரே விஷயம் இதுவல்ல. நிதீஷ், நாயுடு இருவருமே பிகார் மற்றும் ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கோரி வருகின்றனர்.
இந்த அரசியல் கட்சிகள் தங்களுக்கு ஒரு கேபினட் அமைச்சர் பதவியை கோரி வருவதாகவும் ஊடகங்களில் பேச்சு அடிபடுகிறது.
பா.ஜ.க-வுக்கும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் உள்ள அதன் கூட்டணிக் கட்சிகளுக்கு இடையே எந்தெந்த விஷயங்களில் கருத்து வேறுபாடுகள் ஏற்படக்கூடும்?

பட மூலாதாரம், ANI
அக்னிவீர் மறுபரிசீலனை கோரிக்கை
ஆட்சி அமைப்பதற்கு முன்பே என்.டி.ஏ-வில் அங்கம் வகிக்கும் ஜே.டி.யு மற்றும் லோக் ஜன்சக்தி கட்சி ராம்விலாஸ் பிரிவு ஆகிய இரண்டுமே அக்னிவீர் திட்டம் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ளன.
"அக்னிவீர் திட்டம் தொடர்பாக வாக்காளர்களின் ஒரு பகுதியினரிடையே அதிருப்தி உள்ளது. பொதுமக்கள் கேள்வி எழுப்பியுள்ள அந்தக் குறைபாடுகள் நீக்கப்பட வேண்டும் என்று எங்கள் கட்சி விரும்புகிறது," என்று ஜே.டி.யு செய்தித் தொடர்பாளர் கே.சி.தியாகி, ஏ.என்.ஐ செய்தி முகமையிடம் தெரிவித்தார்.
ஆனால், "நிபந்தனையற்ற ஆதரவு அளித்துள்ளோம்," என்று முன்னதாக கே.சி.தியாகி கூறியிருந்தார்.
எல்.ஜி.பி தலைவர் சிராக் பாஸ்வான் NDTV-யிடம் பேசும்போது, "எனக்குத் தெரியாது. ஆனால் யாராவது கேள்வி எழுப்பியிருந்தால், விவாதம் நடத்தக்கூடிய ஒரு தளத்தை என்.டி.ஏ அளிக்கும். எதுபற்றியும் பேசுவதற்கு தான் தயாராக இருப்பதாக பிரதமர் மோதி கூறியுள்ளார்,” என்று தெரிவித்தார்.
"இளைஞர்களுடன் நேரடியாகத் தொடர்புடையது என்பதால் இது மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும் என்று நானும் நினைக்கிறேன். இந்தத் திட்டம் இளைஞர்களுக்கு எந்த அளவிற்கு உதவி செய்கிறது என்பதைப் பார்க்க வேண்டும். இந்தத் திட்டம் இளைஞர்களுக்குப் பயனளிக்கிறது என்றால், இது தொடர வேண்டும். இல்லையெனில் இது தொடர்பான ஆலோசனைகள் பற்றி சிந்திக்கவேண்டும்," என்று அவர் மேலும் கூறினார்.
கே.சி.தியாகியின் அறிக்கைக்குப் பிறகு பிகார் துணை முதல்வரும், பா.ஜ.க தலைவருமான சம்ராட் செளத்ரியிடம் செய்தியாளர்கள் அதுபற்றிக்கேட்டபோது, "ராஜ்நாத் சிங் இது குறித்து அறிக்கை அளித்துள்ளார். மறு ஆய்வு பற்றி அவர் குறிப்பிட்டிருக்கிறார்,” என்று பதில் அளித்தார்.
காங்கிரஸ் தலைவர் தீபேந்திர ஹூடா தனது அறிக்கையில், "நாடு முழுவதுமே இதற்கு எதிராக உள்ளது. ஜே.டி.யு கூறியது சரி என்று நான் நினைக்கிறேன். அக்னிவீர் திட்டம் உடனடியாக முடிவுக்கு வர வேண்டும். ஆனால் முதலில் ஆட்சி அமையட்டும்," என்றார்.
ராணுவத்தில் வீரர்களைச் சேர்ப்பதற்கான 'அக்னிபத் திட்டத்தை' மத்திய அரசு 2022-ஆம் ஆண்டு ஜூன் 14-ஆம் தேதி கொண்டு வந்தது. இது பல எதிர்ப்புகளைச் சந்தித்தது. இத்திட்டத்தின் கீழ் ராணுவத்தில் சேரும் இளைஞர்களில் 75% பேர் நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு திரும்பி அனுப்பப்படுவார்கள். மீதமுள்ள 25% பேர் ராணுவத்தில் பணிபுரியும் வாய்ப்பைப் பெறுவார்கள்.
இந்தத் திட்டம் 'ராணுவம் மற்றும் இளைஞர்களின் தேசபக்தியை அவமதிக்கும் செயல்' என்றும், தனது அரசு ஆட்சிக்கு வந்தால் அக்னிவீர் திட்டம் கிழித்து குப்பை தொட்டியில் போடப்படும் என்றும் சமீபத்தில் தேர்தல் பிரச்சாரத்தின் போது, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியிருந்தார்.

பட மூலாதாரம், Getty Images
சாதிவாரிக் கணக்கெடுப்பு
சமீப காலமாக சாதிவாரி கணக்கெடுப்பு விஷயமும் தலை தூக்கியுள்ளது. தனது கட்சி இந்த விவகாரத்தை தொடர்ந்து எழுப்பும் என்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.தியாகி தெளிவுபடுத்தினார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், "நாட்டில் எந்தக் கட்சியும் சாதிவாரி கணக்கெடுப்பை மறுக்கவில்லை. பிகார் வழி காட்டியுள்ளது. அனைத்துக்கட்சி பிரதிநிதிக் குழுவைச் சந்தித்தபோது, பிரதமரும் இதை எதிர்க்கவில்லை. எனவே சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது காலத்தின் தேவை. நாங்கள் இதற்காகத் தொடர்ந்து பணியாற்றுவோம்,” என்றார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் பிகாரில் நிதீஷ் குமார் தலைமையிலான அரசு, சாதிவாரிக் கணக்கெடுப்பு விவரங்களை வெளியிட்டது. மாநில அரசு தனது சொந்த வளங்களைக் கொண்டு சாதி அடிப்படையிலான மக்கள் தொகை கணக்கெடுப்பை நடத்தியதாக அவர் கூறியிருந்தார்.
அப்போது பிகாரில் ஜே.டி.யு, ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் கூட்டணி ஆட்சி இருந்தது. பிகாரில் பா.ஜ.க-வைத் தவிர எல்லாக் கட்சிகளும் இந்தக் கணக்கெடுப்பைக் கோரின.
ஆனால் இந்த ஆண்டின் தொடக்கத்தில் இந்தியா கூட்டணியுடனான தனது உறவை ஜே.டி.யு முறித்துக் கொண்டபோது, ராகுல் காந்தி சாதிவாரிக் கணக்கெடுப்பு நடத்தியதன் பெருமையை தனதாக்கிக்கொள்ள விரும்புவதாக நிதீஷ் குமார் குற்றம் சாட்டினார்.
பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து
பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்ற கோரிக்கை நீண்ட காலமாக நிதீஷ்குமாரின் செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக உள்ளது.
பிகாருக்கு சிறப்பு மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று மத்திய அரசைக்கோரும் தீர்மானத்தை கடந்த ஆண்டு அவரது அமைச்சரவை நிறைவேற்றியது.
இந்த விஷயம் குறித்துப்பேசிய கே.சி.தியாகி, "பிகார் சிறப்பு மாநில அந்தஸ்து பெற வேண்டும் என்பதே எங்கள் விருப்பம். இது மக்களுக்கு நன்மை அளிக்கக்கூடியது. சிறப்பு மாநில அந்தஸ்து இல்லாமல் பிகாரின் வளர்ச்சி சாத்தியமற்றது," என்று கூறினார்.
பொது சிவில் சட்டம் பற்றிய விவாதம்
மீண்டும் ஆட்சிக்கு வந்தால் பொது சிவில் சட்டம் (Uniform Civil Code) அமல்படுத்தப்படும் என்று பா.ஜ.க தனது தேர்தல் அறிக்கையில் கூறியிருந்தது. ஆனால் இப்போது அதைச் செய்வது அவ்வளவு எளிதாக இருக்காது.
"நாங்கள் இதற்கு எதிரானவர்கள் அல்ல. சட்ட ஆணையத் தலைவருக்கு கடிதம் எழுதி இதை தெரிவித்துள்ளோம்,” என்று பொது சிவில் சட்டம் குறித்து ஜே.டி.யு தலைவர் கே.சி.தியாகி குறிப்பிட்டார்.
"ஆனால், முதலமைச்சராக இருந்தாலும் சரி, பல்வேறு அரசியல் கட்சிகளாக இருந்தாலும் சரி, பல்வேறு சமயங்களை சேர்ந்த பிரிவினராக இருந்தாலும் சரி, சம்மந்தப்பட்ட எல்லா தரப்பினரிடமும் பேசி இதற்கு தீர்வு காண வேண்டும்,'' என்று அவர் மேலும் தெரிவித்தார்.
சந்திரபாபுவின் கோரிக்கைகள் என்னவாக இருக்கும்?

பட மூலாதாரம், ANI
தெலுங்கு தேசம் கட்சியின் பொதுச் செயலர் நாரா லோகேஷ் அளித்த நேர்காணல் எகனாமிக் டைம்ஸ் நாளேட்டில் வெள்ளிக்கிழமை வெளியானது.
"நாங்கள் நிபந்தனையின்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியை ஆதரிக்கிறோம். ஆனால் ஆந்திர பிரதேசத்தின் வளர்ச்சிக்கு நாங்கள் உதவியை எதிர்பார்க்கிறோம்," என்று அவர் கூறியிருந்தார்.
ஆந்திரா புதிதாக உருவான மாநிலம், அதற்கு உதவி தேவை என்றார் அவர்.
"அமராவதியைத் தலைநகராக உருவாக்குவது, போலாவரம் அணை திட்டத்தை நிறைவேற்றுவது போன்ற, ஆந்திராவை பிரிக்கும் போது அளித்த வாக்குறுதிகளை அரசு நிறைவேற்ற வேண்டும்,” என்று அவர் கூறினார்.
அமராவதியின் வளர்ச்சி என்பது வளர்ச்சியைப் பரவலாக்குவதுடன் தொடர்புடையது என்று அவர் குறிப்பிட்டார்.
மத்திய அரசின் 'செயல்திறனுடன் இணைக்கப்பட்ட திட்டங்களில்’ ஆந்திராவுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று நம்புவதாகவும் அவர் கூறினார்.
"எலக்ட்ரானிக்ஸ் மற்றும் ஆட்டோமோடிவ் துறையின் மையமாக ஆந்திராவை உருவாக்க விரும்புகிறோம். இதற்காக ஒரு கட்டமைப்பை உருவாக்க பணியாற்றிவருகிறோம். இதில் மத்திய அரசின் உதவியை நாடுகிறோம்,” என்று நாரா லோகேஷ் தெரிவித்தார்.
2018-ஆம் ஆண்டில் தெலுங்கு தேசம் கட்சி தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேறியது. மாநிலத்துக்குச் சிறப்பு அந்தஸ்து மற்றும் நிதி உதவி அளிக்கப்படாதே இதற்குக் காரணம்.
2014-ஆம் ஆண்டு ஆந்திர பிரதேசம், ஆந்திரா மற்றும் தெலங்கானா மாநிலங்களாக பிரிக்கப்பட்டது. 2014 முதல் 2016 வரை மோதிக்கும் சந்திரபாபு நாயுடுவுக்கும் இடையே இது தொடர்பாக 16 சந்திப்புகள் நடந்துள்ளன.
ஆனால் 28 மாநிலங்களுக்கு தான் பொறுப்பு என்றும், 14-வது நிதிக்குழுவின் கீழ் அவ்வாறு செய்ய இயலாது என்றும் மத்திய அரசு கூறியது. இதனால் கோபமடைந்த சந்திரபாபு நாயுடு கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்தார்.
எல்.ஜே.பி எந்த கோரிக்கைகளை முன்வைக்கும்?

பட மூலாதாரம், ANI
2021-இல் ராம் விலாஸ் பாஸ்வான் காலமான பிறகு, சிராக் பாஸ்வான் மற்றும் அவரது சித்தப்பா பசுபதி பாரஸ் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரிக்கத் துவங்கின. கட்சியில் ஏற்பட்ட பிளவுக்குப் பிறகு, பசுபதி பாரஸ் என்.டி.ஏவில் இணைந்தார். சிராக் பாஸ்வான் என்டிஏவில் இருந்து பிரிந்தார்.
இந்த ஆண்டு மார்ச் மாதம் பிகாரில் தேசிய ஜனநாயக கூட்டணியின் தொகுதி பங்கீட்டில் பசுபதி குமார் பாரஸ் பிரிவுக்கு ஒரு இடம் கூடக்கிடைக்கவில்லை. இதனால் கோபமடைந்த அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து வெளியேற முடிவு செய்தார். மறுபுறம், சிராக் பாஸ்வான் மீண்டும் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் நுழைந்தார்.
வியாழனன்று, எல்.ஜே.பி ராம்விலாஸ் பாஸ்வான் பிரிவுத் தலைவர் சிராக் பாஸ்வான், சாதிவாரியான கணக்கெடுப்பு குறித்து NDTV-யிடம் பேசுகையில், "கட்சியின் நிலைப்பாடு தெளிவாக உள்ளது. அதை கட்டாயம் செய்ய வேண்டும். நாட்டில் பல திட்டங்கள் சாதியின் அடிப்படையில் உருவாக்கப்படுகின்றன. எனவே அரசிடம் இந்த தரவுகள் கட்டாயம் இருக்க வேண்டும். நாங்கள் இதை ஆதரிக்கிறோம்,” என்றார்.
பிகாருக்கான சிறப்பு அந்தஸ்து குறித்துப்பேசிய அவர், "கண்டிப்பாக சிறப்பு மாநில அந்தஸ்து கிடைக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். நிதி ஆயோக் உருவான பிறகு இதற்காக பல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதில் மாற்றங்கள் செய்தால் இது சாத்தியமாகும்,” என்று குறிப்பிட்டார்.

ஏக்நாத் ஷிண்டே என்ன கோரிக்கைகளை முன்வைக்கக்கூடும்?
சிவசேனையின் ஏக்நாத் ஷிண்டே பிரிவும், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஒரு கட்சியாகும். ஏக்நாத் ஷிண்டே தனது கட்சிக்கு இரண்டு அமைச்சர்களை கோருவதாக ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.
இந்த மக்களவைத் தேர்தலில் சிவசேனை ஏக்நாத் ஷிண்டே பிரிவு 7 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.
மஹாராஷ்டிர முதல்வர் ஷிண்டே மத்திய அமைச்சரவையில் 1 கேபினட் மற்றும் 2 இணை அமைச்சர் பதவிகளைக்கோருவதாக விஷயமறிந்த வட்டாரங்களை மேற்கோள் காட்டி 'நவ்பாரத் டைம்ஸ்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
டெல்லியில் புதன்கிழமை நடைபெற்ற தேசிய ஜனநாயகக் கூட்டணிக் கூட்டத்தில் பங்கேற்பதற்கு முன்பு வெற்றி பெற்ற எல்லா எம்.பி-களையும் சந்தித்த ஏக்நாத் ஷிண்டே அவர்கள் அனைவரையும் கெளரவித்தார்.

பட மூலாதாரம், @AKHILESHYADAV
என்.டி.ஏ-வில் இணைந்த ஆர்.எல்.டி
ராஷ்டிரிய லோக் தளத்தின் தலைவர் ஜெயந்த் செளத்ரியும் தனது கோரிக்கைகளை முன்வைப்பதில் பெயர் பெற்றவர்.
மக்களவைத் தேர்தலுக்கு முன் தொகுதிப் பங்கீடு பற்றிய பேச்சுக்கள் நடந்துகொண்டிருந்தபோது ஜெயந்த் செளத்ரி இந்தியா கூட்டணியில் சேர இருந்தார். இது தொடர்பாக, அகிலேஷ் யாதவையும் சந்தித்தார்.
ஆனால் ஒரு நாள் கழித்து, தனது தாத்தாவும் முன்னாள் பிரதமருமான செளத்ரி சரண் சிங்குக்கு பாரத ரத்னா வழங்குவதாக பா.ஜ.க அறிவித்த பிறகு, அவர் தனது திசையை மாற்றி தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைந்தார்.
இந்தியா கூட்டணியில் அவருக்கு ஏழு இடங்கள் அளிக்கப்பட இருந்தது. ஆனால் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் ஆர்.எல்.டி-க்கு இரண்டு இடங்கள் மட்டுமே கிடைத்தன.
இந்தியா கூட்டணியில் சேராதது குறித்து தனக்கு எந்த வருத்தமும் இல்லை என்று ஜெயந்த் செளத்ரி பின்னர் கூறினார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












