பவன் கல்யாண்: ஆந்திர அரசியலைத் தலைகீழாகப் புரட்டுவதற்கு முதற்புள்ளியை வைத்தவர்

பட மூலாதாரம், JANASENA PARTY /FB
- எழுதியவர், ஸ்ரீனிவாஸ் நிம்மகத்தா
- பதவி, பிபிசி செய்தியாளர்
ஆந்திராவின் பிதாபுரம் தொகுதியில் ஜனசேனாவின் தலைவர் பவன் கல்யாண் 70,279 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். சட்டசபைக்குள் நுழைய வேண்டும் என்ற அவரது ஆசையும் நிறைவேறி உள்ளது. அவரது கட்சி சட்டப்பேரவை, மக்களவை என்று போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
அரசியலில் பொறுமை மிக அவசியம் என்பதை ஜனசேனா தனது ‘பத்தாண்டு விதி’ மூலம் நிரூபித்துள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
பிதாபுரத்தில் பவன் கல்யாண் போட்டியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டதும், அவரது வெற்றி உறுதி என ஜனசேனா அணியினர் கொண்டாடினர்.
இருப்பினும் அந்தப் பகுதியில் தெலுங்கு தேசம் கட்சியின் முக்கியப் பிரமுகரான எஸ்.வி.எஸ்.என்.வர்மாவுக்கு இருக்கும் ஆதரவு பவன் கல்யாணுக்கு கிடைக்குமா என்ற சந்தேகம் எழுந்தது.
ஆனால், வர்மாவை எம்எல்சி (சட்டசபை உறுப்பினர்) ஆக்குவதாக சந்திரபாபு உறுதியளித்தார். கூட்டணி ஆட்சிக்கு வரும்போது வர்மாவுக்கு போதிய ஆதரவை வழங்குவதாக பவன் கல்யாணும் கூறியதால், தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா கட்சியினர் இணைந்து செயல்படுவது எளிதாகிவிட்டது.
பவன் கல்யாணை தோற்கடிக்கும் நோக்கில், காப்பு சமூகத்தைச் சேர்ந்த வங்கா கீதாவை, ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சி வேட்பாளராக நிறுத்தியது. காப்பு சமூக வாக்குகள் பெருமளவில் பிரிந்து பவன் தோல்வியைச் சந்திக்க நேரிடும் என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் நினைத்ததாக ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
மறுபுறம், காப்பு சமூகத் தலைவர் முத்ரகடா பத்மநாபம் போன்றவர்கள் பவன் கல்யாணை தோற்கடிக்க வேண்டும் என்று குரல் கொடுத்ததால், ஒட்டுமொத்த மாநிலமும் பிதாபுரத்தில் கவனம் செலுத்தியது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
கூட்டணிக்கு அடித்தளமிட்ட ‘பவன் கல்யாண்’

பட மூலாதாரம், JANASENA PARTY /FB
ஜனசேனா கட்சியை நிறுவி 8 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி, குண்டூர் மாவட்டம் இப்டம் கிராமத்தில் மார்ச் 14, 2022 அன்று நடைபெற்ற எழுச்சி நாள் கூட்டத்தில், “அரசுக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க மாட்டேன்” என்று பவன் கல்யாண் அறிவித்தார்.
இந்த அறிவிப்புதான் ஆந்திர அரசியலில் வியத்தகு மாற்றத்தை ஏற்படுத்தியதாகக் கருதப்படுகிறது. ஏனெனில் அதுவரை 2019ஆம் ஆண்டு போலவே 2024 தேர்தலிலும் ஜனசேனா தனித்துப் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், பவன் அறிவிப்பால், தெலுங்கு தேசத்துடன் அக்கட்சி இணையும் என்ற பேச்சு தொடங்கியது. அரசுக்கு எதிரான வாக்குகள் தனக்கு மட்டும்தான் கிடைக்கும் எனக் கருத முடியாது என்றும், 2019 தேர்தல் அதற்குச் சிறந்த உதாரணம் என்றும் பவன் தனது தரப்பிடம் வெளிப்படையாகக் கூறியுள்ளார்.
“என் கூட்டங்களுக்கு வந்து கைதட்டினார்கள். ஆனால் வாக்களிக்காமல் என்னை விட்டுச் சென்றுவிட்டனர். ஆனால் நான் கவலைப்படவில்லை. ஏனென்றால் நான் உங்களுக்காக உழைக்கிறேன்,'' என்று பவன் தனது ஆதரவாளர்களிடம் கூறினார்.
அதேபோல, பாஜக, தெலுங்கு தேசம் மற்றும் ஜனசேனா இணைந்து கூட்டணி அமைப்பதில் முக்கியப் பங்காற்றினார் பவன் கல்யாண்.
“கூட்டணி குறித்துப் பேசப்பட்டபோது கட்சியில் எதிர்ப்பு கிளம்பியது. ஆனால் அவர் அனைவரையும் சமாதானப்படுத்தி, சம்மதிக்க வைத்தார்” என்று ஜனசேனா செய்தித் தொடர்பாளர் குசம்பூடி சீனிவாச ராவ் கூறுகிறார்.
போட்டியிட்ட அனைத்து இடங்களிலும் வெற்றி

பட மூலாதாரம், JANASENA PARTY /FB
அரசியலில் எந்த இடத்தில் வேகமாகச் செயல்பட வேண்டும், எங்கு பொறுமையாகச் செயல்பட வேண்டும் என்பதை ஒருவர் தெரிந்துகொள்ள வேண்டும் என்று பவன் கல்யாண் அடிக்கடி கூறுவார். தனது பலம், பலவீனங்களைச் சரியாக மதிப்பிட்டு, பாஜகவுடன் கூட்டணி அமைக்கும் நோக்கில் சட்டசபை தொகுதிகளையும், மக்களவைத் தொகுதிகளையும் நிர்ணயித்தார்.
இந்தக் கூட்டணியில் போட்டியிட்டதன் மூலம், ஜனசேனா 21 சட்டமன்றத் தொகுதிகளிலும், 2 மக்களவைத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றது.
தொடக்கத்தில் இருந்து பவன் மட்டுமே இந்தக் கூட்டணியை உறுதியாக நம்பினார். இப்போது அவரது நம்பிக்கை உண்மையானது மட்டுமல்லாது, அவரது கட்சியின் முழு பலமும் தெரிய வந்துள்ளது.
குறிப்பாக, ஜனசேனா போட்டியிட்ட 21 சட்டமன்றத் தொகுதிகள் மற்றும் 2 நாடாளுமன்றத் தொகுதிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் 100% வெற்றி பெற்ற கட்சியாக உருவெடுத்துள்ளது. மேலும் 8 சட்டமன்றத் தொகுதிகளில் மற்றும் 3 மக்களவைத் தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றுள்ளது.
பவன் கல்யாண் தன்னை முன்னிலைப்படுத்தாமல், கூட்டணியின் மதிப்பை உயர்த்தியிருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பவன் கல்யாணின் அரசியல் பயணம்

பட மூலாதாரம், JANASENA PARTY /FB
“எவ்வளவு நீண்ட பயணமாக இருந்தாலும் ஒரு அடியில் இருந்துதான் தொடங்கும். மாற்றத்திற்காகத்தான் அரசியலுக்கு வந்தேன். ஒரு வலுவான அரசியல் அமைப்பை உருவாக்குவேன். என்னுடன் பயணிக்க நீங்கள் தயாரா?'', ஜனசேனா இணையதளத்தைத் திறந்தால், திரையில் தோன்றும் கேள்வி இது.
கடந்த 2014ஆம் ஆண்டு பவன் கல்யாண் ஜனசேனா கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்தார்.
அப்போது பிளவுபட்ட ஆந்திர பிரதேசத்தின் வளர்ச்சிக்காகத் தனது கட்சி தேர்தலில் போட்டியிடாது என்று அறிவித்தார். வளர்ச்சிக்காக தெலுங்கு தேசம், பா.ஜ.க.வை ஆதரிப்போம் என்றார். அந்தத் தேர்தலில் சந்திரபாபு மற்றும் மோதியுடன் இணைந்து பவன் பிரசாரம் செய்தார்.

பட மூலாதாரம், JANASENA PARTY /FB
ஜனசேனாவின் மாற்றங்கள்
கடந்த 2014ஆம் ஆண்டு 2014, 2019 தேர்தல் அனுபவங்கள் என ஜனசேனாவின் அரசியல் பயணத்தில் பல மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஆந்திராவுக்கு வழங்கப்பட வேண்டிய சிறப்பு அந்தஸ்தை பாஜக கைவிடுவதாகவும், ஸ்பெஷல் பேக்கேஜ் (Special package) என்ற பெயரில் போலி இனிப்புகளை வழங்குவதாகவும் முன்னர் பவன் கல்யாண் விமர்சித்திருந்தார்.
இதன் பிறகு, 2019 தேர்தலில் இடதுசாரிகள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியுடன் கூட்டணி அமைத்து பவன் களமிறங்கினார்.
ஆந்திராவின் கஜுவாக்கா மற்றும் பீமாவரம் தொகுதிகளில் போட்டியிட்டார். ஆனால் அந்தத் தேர்தலில் ஜனசேனா படுதோல்வியைச் சந்தித்தது. போட்டியிட்ட இரண்டு இடங்களிலும் பவன் தோல்வியடைந்தார்.
ஜனசேனா ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. ராஜோலு தொகுதியில் ஜனசேனா சார்பில் போட்டியிட்ட ரபாக வரபிரசாத் மட்டுமே வெற்றி பெற்றார். பின்னர் அவரும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சிக்குத் தாவினார். அந்தத் தேர்தலில் ஜனசேனாவுக்கு 6 சதவீத வாக்குகள் கிடைத்தன.
2024 தேர்தல் கூட்டணி

பட மூலாதாரம், JANA SENA PARTY /X
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அரசுக்கு எதிரான வாக்குகளைப் பிரிக்க மாட்டோம் என பவன் கல்யாண் அறிவித்ததையடுத்து, உரிய நடவடிக்கையை நோக்கி நகர்ந்தார்.
ஆனால், ஜனசேனாவும், தெலுங்கு தேசம் கட்சியும் இணைந்து போட்டியிடுமா என்ற சந்தேகம் ஒருபுறம் இருக்க, பவன் கல்யாணால் தனித்துப் போட்டியிட முடியுமா என ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் அணியினர் மறுபுறம் சவால்விட, கூட்டணி அமைப்பதில் சிக்கல்கள் எழுந்தன.
மேலும், தற்கொலை செய்துகொண்ட விவசாயிகளின் குடும்பங்களுக்கு பவன் கல்யாண் நிதியுதவி அளித்ததாலும், வாராஹி யாத்திரையாலும் அவரது புகழ் அதிகரித்துவிட்டது என்ற நம்பிக்கை மக்களிடையே நிலவியது.
அதே நேரத்தில், 9 செப்டம்பர் 2023 அன்று, சந்திரபாபு, நந்தியாலாவில் அதிகாலை நேரத்தில் கைது செய்யப்பட்டு ராஜமுந்திரி மத்திய சிறைக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.
இதற்குப் பிறகு பவன் கல்யாண், சந்திரபாபுவை சிறையில் சந்தித்தது ஆந்திர அரசியலில் ஒரு திருப்புமுனைக்கு வித்திட்டது என்கின்றனர் அரசியல் ஆய்வாளர்கள்.
இதையடுத்து 2024 தேர்தலில் நாங்கள் இணைந்து போட்டியிடுவோம் என்று பவன் அறிவித்தார். அவர்களுடன் பாஜகவும் இணையும் என்று அறிவிக்கப்பட்டது.
தொண்டர்களின் விமர்சனம்

பட மூலாதாரம், JANA SENA PARTY /X
அரசியல் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, தேர்தல் பிரசாரத்தை வடிவமைப்பதில் பவன் கல்யாண் முக்கியப் பங்கு வகித்தார்.
ஜனவானி நிகழ்ச்சிக்காக விசாகப்பட்டினம் சென்றிருந்த பவன், ஹோட்டல் அறைக்குள் போலீசாரால் அடைத்து வைக்கப்பட்டார். ஆந்திராவில் பெண்கள் காணாமல் போனதற்கு மாநில அரசால் நியமிக்கப்பட்ட தன்னார்வலர்களே காரணம் என்று அவர் பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
“பவனின் குற்றச்சாட்டுகளைத் தொடர்ந்து, ஆந்திர பிரதேசத்தில் காணாமல் போன பெண்களைப் பற்றிய விவரங்களை மத்திய உள்துறை அமைச்சகம் மாநிலங்களவையில் சமர்ப்பித்தது. இது பொதுமக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது,” என குசம்பூடி சீனிவாச ராவ் கூறுகிறார்.
மேலும், தன்னைத் தனிப்பட்ட முறையில் விமர்சித்தவர்களிடம் தனது ஷூவை காட்டி மற்றொரு பரபரப்பை ஏற்படுத்தினார் பவன் கல்யாண்.
கூட்டணி அமைத்த பிறகு உள்கட்சி பிரச்னைகள் வெளியே வந்து விடக்கூடாது என்பதில் கவனமாக இருந்தார் பவன் கல்யாண். தற்போது சட்டசபையில் ஒரு புதிய அரசியல் பயணத்திற்குத் தயாராகி வருகிறார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












