மேற்கு வங்கம்: மமதாவின் மாயாஜாலத்திற்கு முன் பலிக்காமல் போன மோதியின் மேஜிக்

மேற்கு வங்கம்

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், பிரபாகர் மணி திவாரி
    • பதவி, பிபிசி இந்திக்காக, கொல்கத்தா.

மேற்கு வங்கத்தில் 2021 சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு மக்களவைத் தேர்தலில் மமதா பானர்ஜியின் மேஜிக் மீண்டும் வெற்றியைத் தந்துள்ளது.

மறுபுறம் பிரதமர் நரேந்திர மோதியின் பிரமாண்டமான தேர்தல் பிரசாரங்கள், பதினைந்துக்கும் அதிகமான பேரணிகள் மற்றும் ரோட் ஷோக்களுக்கு பிறகும் பாஜக கடந்த முறை பெற்ற இடங்களைக்கூட இந்த முறை தக்கவைத்துக்கொள்ள முடியவில்லை.

முறைகேடுகள் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகள் இருந்த போதிலும் மாநில வாக்காளர்கள் மீதான திரிணாமுல் காங்கிரஸின் பிடி தளர்வதற்குப் பதிலாக வலுப்பெற்றுள்ளது என்பதை மமதா, அபிஷேக் ஜோடி மீண்டும் நிரூபித்துள்ளது.

பாஜக முன்வைத்த மிகப்பெரிய விஷயங்களான சந்தேஷ்காலி, குடியுரிமை திருத்தச் சட்டம் ஆகியவற்றை சூழ்நிலை மாறியபோதும் தனது அரசியல் ஆதாயத்திற்காக மமதா பயன்படுத்திக் கொண்ட விதம், கட்சியின் வெற்றிக்கு முக்கியக் காரணம் என்று அரசியல் வட்டாரங்களில் பேசப்படுகிறது.

கட்சியின் மகத்தான வெற்றிக்குப் பிறகு மமதா பானர்ஜி, அபிஷேக் பானர்ஜியை தனது இல்லத்தில் சந்தித்துப் பேசினார்.

அதன்பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”வாக்காளர்கள், பாஜகவின் முதுகெலும்பை உடைத்துள்ளனர். இது மோதிக்கு எதிரான வாக்கு. பல அரசியல் கட்சிகளை மோதி உடைத்துள்ளார். இந்த முறை பொதுமக்கள் அவரது கட்சியையே உடைத்துள்ளனர். இந்த முறை மக்கள் தங்கள் வாக்குகள் மூலமாக தகுந்த பதிலடி கொடுத்துள்ளனர். மோதியும் அமித்ஷாவும் தங்கள் பதவியை ராஜினாமா செய்யவேண்டும்,” என்றார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

மோதிஜி, உங்கள் மேஜிக் முடிந்துவிட்டது: மமதா

"மோதிஜி, உங்கள் மேஜிக் முடிந்துவிட்டது. நீங்கள் ராஜினாமா செய்ய வேண்டும்" என்று மமதா பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறினார்.

தேர்தல் ஆணையத்தை விமர்சித்த மேற்கு வங்க முதல்வர், "ஆணையம் தனது தலைவரின் குரலாகச் செயல்பட்டுள்ளது. தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக்கணிப்பு நடத்தியவர்கள் மன உறுதியை உடைக்க முயன்றனர். அந்த அறிக்கைகள் அனைத்தும் பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டவை" என்று கூறினார்.

"இந்த வெற்றி சாமானிய மக்கள் மற்றும் எதிர்க்கட்சிகளின் கூட்டணியான 'இந்தியா'வின் வெற்றி. இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளுக்கு எனது ஆதரவைத் தெரிவித்துக் கொள்கிறேன். எங்களுடன் இருப்பவர்களுக்கும், சேர விரும்புபவர்களுக்கும் என் ஆதரவு உண்டு. எம்.எல்.ஏ.க்களை உடைக்க பாஜக மாபெரும் முயற்சிகளை மேற்கொண்டது. ஆனால் கடைசி வரை அது வெற்றிபெறவில்லை,” என்று திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் குறிப்பிட்டார்.

சந்தேஷ்காலி விவகாரம் குறித்த ஸ்டிங் வீடியோ, குடியுரிமை திருத்தச் சட்டம், மமதா பானர்ஜி அரசின் மக்கள் நலன் சார்ந்த திட்டங்கள் ஆகிய இந்த மூன்றும் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸின் மகத்தான வெற்றிக்கும், பாஜகவுக்கு ஏற்பட்ட பெரிய பின்னடைவுக்கும் மிகப்பெரிய காரணங்கள் என்று சொல்லப்படுகிறது.

இந்தத் தேர்தலில் திரிணாமுல் தளபதி என்று அழைக்கப்படும் எம்பி அபிஷேக் பானர்ஜி மற்றும், பாஜகவின் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர் ஷுபேந்து அதிகாரி ஆகிய இரு தலைவர்களின் நன்மதிப்பு சோதனைக்கு உள்ளானது. தேர்தல் முடிவுகள் அபிஷேக்கின் தளபதி பதவியை வலுப்படுத்தியுள்ள நிலையில், ஷூபேந்துவின் அரசியல் எதிர்காலம் குறித்து கேள்விகள் எழுந்துள்ளன.

மமதா பானர்ஜிக்கு இந்த வெற்றி எப்படி கிடைத்தது?

மேற்கு வங்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, திரிணாமுல் காங்கிரஸின் வெற்றி அதன் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.

மேற்கு வங்கத்தில் தொகுதிகளை அதிகரிக்க முயன்ற பாஜகவுக்கு இந்தத் தேர்தல் முடிவுகள் பெரும் பின்னடைவை அளித்துள்ளது. இடங்களை அதிகரிப்பது ஒருபுறம் இருக்க, கடந்த முறை பெற்ற இடங்களைக்கூட அக்கட்சியால் தக்கவைக்க முடியவில்லை.

காங்கிரஸுக்கு ஒரு இடம் கிடைத்துள்ளது. ஆனால் காங்கிரஸின் வலிமையான கோட்டையாகக் கருதப்பட்ட முர்ஷிதாபாத் மாவட்டத்தின் பஹரம்பூர் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவர் அதீர் ரஞ்சன் செளத்ரியின் தோல்வி அக்கட்சியை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

அரசியலில் காலடி எடுத்து வைத்துள்ள டிஎம்சி வேட்பாளரும் ஆல்ரவுண்ட் கிரிக்கெட் வீரருமான யூசுப் பதானிடம் அவர் தோல்வியடைந்தார்.

அதீர் இதற்கு முன் அந்தத் தொகுதியில் ஐந்து முறை வெற்றி பெற்றுள்ளார். இடதுசாரி மற்றும் மமதா அலையின்போதுகூட தனது இடத்தை அவர் காப்பாற்றி வந்தார். அதேநேரம் காங்கிரஸுடன் கூட்டணி வைத்துக்கொண்டு களமிறங்கிய சிபிஎம் கட்சிக்கு ஒரு இடம்கூடக் கிடைக்கவில்லை.

மமதா பானர்ஜியை தவிர அபிஷேக் மட்டுமே கட்சியின் தேர்தல் பிரசாரப் பொறுப்பைத் தன் தோளில் சுமந்தார். கொல்கத்தாவை ஒட்டியுள்ள டயமண்ட் ஹார்பர் தொகுதியில் அவரும் போட்டியிட்டார்.

தனது வெற்றி குறித்து அத்தனை உறுதியுடன் இருந்த அவர், மற்ற வேட்பாளர்களுக்காகத் தொடர்ந்து பிரசாரத்தில் ஈடுபட்டார். கட்சிக்குக் கிடைத்துள்ள இந்த அபார வெற்றி காரணமாக கட்சியில் வாரிசுரிமை குறித்து எழுந்துள்ள கேள்விகளும் தற்போது குறைய வாய்ப்புள்ளது.

பாஜக எழுப்பிய முக்கிய விவகாரம் ’சந்தேஷ்காலி’

மேற்கு வங்கம்
படக்குறிப்பு, தேர்தலுக்கு முன்பு அமலுக்கு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம்கூட இங்கு பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை

சந்தேஷ்காலி நிலப்பறிப்பு மற்றும் பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டு விவகாரத்தை பாஜக தனது பிரசாரத்தில் முக்கிய விஷயமாக முன்வைத்தது.

மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பே இந்த விவகாரம் தொடர்பாக தீவிர போராட்டத்தை அக்கட்சி தொடங்கியது.

பிரதமர் நரேந்திர மோதியும் தனது பாராசாத் பேரணியில் பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்தார். பின்னர் அவர்களில் ஒருவரான ரேகா பாத்ரா, பஸீர்ஹாட் நாடாளுமன்றத் தொகுதியில் வேட்பாளராக நிறுத்தப்பட்டார்.

ஆரம்பக் கட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் இந்தப் பிரச்னையால் கவலைகொண்டது. சேதத்தைக் கட்டுப்படுத்தும் முயற்சிகளை அக்கட்சி துவக்கியது. ஆனால் இந்த விஷயத்தில் பாஜகவுக்கு தெளிவான முன்னிலை காணப்பட்டது.

அதன்பிறகு திடீரென வெளிவந்த ஒரு ஸ்டிங் வீடியோ ஒட்டுமொத்த நிலைமையையும் மாற்றியது. இந்த விவகாரத்தில் பாஜகவுக்கு இருந்த முன்கை, திரிணாமுல் காங்கிரஸுக்கு சென்றுவிட்டது.

அந்த வீடியோவில் உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர், ’இந்த விவகாரம் முழுவதும் கட்டுக்கதை என்றும் இதன் பின்னணியில் ஷுபேந்து அதிகாரி இருப்பதாகவும்’ சொல்வதைக் கேட்க முடிந்தது.

அதன்பிறகு மமதா அதை வங்காளப் பெண்களின் தன்மானத்துடன் இணைத்தார். இதன்மூலம், மமதாவின் மகளிர் வாக்கு வங்கியை உடைக்க பாஜகவின் மிகப் பெரிய ஆயுதமாக இருந்திருக்க வேண்டிய விவகாரம், இந்த வாக்கு வங்கியை மேலும் வலுப்படுத்தும் மமதாவின் ஆயுதமாக மாறியது.

தேர்தலுக்கு முன்பு அமலுக்கு வந்த குடியுரிமை திருத்தச் சட்டம்கூட இங்கு பாஜகவுக்கு எதிர்பார்த்த வெற்றியைத் தரவில்லை. இதை என்ஆர்சியுடன் இணைத்த மமதா, இதன் கீழ் பலர் ஊடுருவல்காரர்களாக அறிவிக்கப்பட்டு வங்காளத்தில் இருந்து வெளியேற்றப்படுவார்கள் என்று தொடர்ந்து கூறினார்.

ஆசிரியர் பணி நியமன ஊழல் உள்ளிட்ட பல ஊழல்களும் திரிணாமுல் காங்கிரஸின் வெற்றிக்குத் தடையாக இருக்கவில்லை. மாறாக மமதா அரசின் நலன் சார்ந்த திட்டங்கள் வெற்றிக்குக் கைகொடுத்தன.

ஷூபேந்து அதிகாரியின் பங்கு பற்றிய கேள்வி

மேற்கு வங்கம்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மேற்கு வங்கத்தின் மூத்த தலைவர்கள் மத்திய தலைமையின் மீது கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

மேற்கு வங்க வெற்றியுடன் ஒருபுறம் திரிணாமுல் வாரிசுரிமை தொடர்பான அபிஷேக் பானர்ஜி பற்றிய விவாதம் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மறுபுறம் பாஜகவில் ஷூபேந்து அதிகாரியின் பொறுப்புகள் குறித்து கேள்விகள் எழுப்பப்படுகின்றன.

"மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரப் பொறுப்பை ஷூபேந்து அதிகாரியிடம் கட்சி ஒப்படைத்திருந்தது. கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் திலீப் கோஷின் தொகுதியை மாற்றியது, சந்தேஷ்காலி சம்பவத்தில் பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் ரேகா பாத்ராவுக்கு பஸீர்ஹாட் நாடாளுமன்றத் தொகுதி அளிக்கப்பட்டது உட்பட வேட்பாளர் பட்டியல் தொடர்பான மத்திய தலைமையின் எல்லா முடிவுகளும் அவரது பரிந்துரையின்படியே எடுக்கப்பட்டன,” என்று மாநில பாஜகவின் மூத்த தலைவர் ஒருவர் கூறினார்.

"இதுபோன்ற பெரும்பாலான முடிவுகள் கட்சிக்கு எதிராகச் சென்றுள்ளன என்பதை தேர்தல் முடிவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. திலீப் கோஷின் தொகுதி மாற்றத்தால் அவர் தோல்வியைச் சந்திக்க நேர்ந்தது மட்டுமல்லாமல், கடந்த முறை அவர் வென்ற மேதினிபூர் தொகுதியும் கைவிட்டுப்போய்விட்டது,” என்றார் அவர்.

இப்போது தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் மேற்கு வங்கத்தின் மூத்த தலைவர்கள் மத்திய தலைமையின் மீது கேள்விகளை எழுப்பத் தொடங்கியுள்ளனர்.

"ஷூபேந்து அதிகாரியை மட்டுமே நம்பி கட்சியின் உயர்மட்டத் தலைமை தவறு செய்தது. இது தவிர கட்சிமாறி வருபவர்களுக்கு சீட்டு கொடுத்து, உள்ளூர் கட்சிக்காரர்கள் புறக்கணிக்கப்பட்டனர்," என்று தன் பெயர் வெளியிடப்படக்கூடாது என்ற நிபந்தனையின் பெயரில் பேசிய கட்சியின் தலைவர் ஒருவர் குறிப்பிட்டார்.

"மேலும் முன்னாள் மாநில தலைவர் திலீப் கோஷின் தொகுதி மாற்றப்பட்டது. இதனால், அவர் தோல்வியைச் சந்திக்க நேரிட்டது. வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட மத்திய தலைமையின் முடிவுகள் காரணமாக கட்சியில் அதிருப்தி ஏற்பட்டது. இது தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்தியது,” என்றார் அவர்.

திட்டங்களின் பலனைப் பெற்ற டிஎம்சி

மேற்கு வங்கம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, "இந்தத் தேர்தல் மோதிக்கும் மம்தாவுக்கும் இடையே நடைபெற்றது. எனவே இந்த முடிவுகளுக்கான பொறுப்பையும் மோதிதான் ஏற்கவேண்டும்,” என்கிறார் ஷிகா முகர்ஜி.

"மமதா பானர்ஜி அரசின் தோல்விகள் மற்றும் மாநிலத்தில் பெண்களின் அவலநிலை என்று கூறப்படும் பிரச்னைகளை முன்னிறுத்தி பாஜக இந்தத் தேர்தலில் போட்டியிட்டது. மேற்குவங்கத்தில் இந்தத்தேர்தல் மோதிக்கும் மம்தாவுக்கும் இடையே நடைபெற்றது. எனவே இந்த முடிவுகளுக்கான பொறுப்பையும் மோதிதான் ஏற்கவேண்டும்,” என்று அரசியல் ஆய்வாளர் ஷிகா முகர்ஜி கூறினார்.

”மமதா பானர்ஜி மீதும் அவரது கட்சி மீதும் நம்பிக்கையை மாநில மக்கள் மீண்டும் வெளிப்படுத்தியுள்ளனர். சந்தேஷ்காலி, ஆசிரியர் பணி நியமன ஊழல், குடியுரிமை திருத்தச் சட்டம் போன்ற பாஜக முன்வைத்த விவகாரங்கள் முற்றிலும் பலனளிக்கவில்லை."

"இதுதவிர மதரீதியாகப் பிளவுபடுத்தும் முயற்சியும் முன்போலவே பலன் கொடுக்கவில்லை. மறுபுறம் மமதா அரசின் எல்லா திட்டங்களில் இருந்தும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி பயனடைந்தது,” என்று அவர் குறிப்பிட்டார்.

கடந்த 2019ஆம் ஆண்டில் பாஜகவுக்கு பெரிய வெற்றி கிடைத்தது. ஆனால் அதன் பிறகு 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் அக்கட்சியின் வாக்குகள் குறைந்தன. எதிர்பார்த்தபடி முடிவுகள் இருக்கவில்லை. இம்முறை அது மேலும் குறைந்துள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)