7 இடங்களில் டெபாசிட் காலி - அதிமுக, எடப்பாடி பழனிசாமி எதிர்காலம் என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிவக்குமார் ராஜகுலம்
- பதவி, பிபிசி தமிழ்
தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தேர்தல் கருத்துக் கணிப்புகள் அதிமுகவை பொருத்தவரை உண்மையாகியுள்ளன. அந்தக் கட்சிக்கு ஓரிடம்கூடக் கிடைக்கவில்லை.
அதையும் தாண்டி அதிமுகவின் வாக்கு வங்கியில் கடும் சரிவு ஏற்பட்டிருப்பதையும் புள்ளிவிவரம் காட்டுகிறது. அதிமுகவின் வாக்கு வங்கி சரிவும், பாஜகவின் வாக்கு வங்கி உயர்வும் உணர்த்துவது என்ன?
அதிமுகவுக்கு அச்சுறுத்தல் கொடுக்கும் அளவுக்கு பாஜக கூடுதல் வாக்குகளைப் பெற்றுள்ளதா?
நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியால் அதிமுகவில் எடப்பாடி பழனிசாமியின் தலைமைப் பதவிக்கு நெருக்கடி வருமா? அதிமுவின் எதிர்காலம் என்ன ஆகும்?
7 தொகுதிகளில் டெபாசிட்டை பறிகொடுத்த அதிமுக
ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தேர்தல்களில் தடுமாறி வரும் அதிமுகவின் போக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தல் முடிவிலும் எதிரொலித்தது. ஜெயலலிதா தலைமையில் கடைசியில் அதிமுக எதிர்கொண்ட நாடாளுமன்றத் தேர்தலில் 37 தொகுதிகள் என்ற வரலாறு காணாத வெற்றியை ருசித்த அதிமுக அடுத்த 10 ஆண்டுகளில் ஒரு தொகுதியைக்கூட வெல்ல முடியாமல் போயுள்ளது.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மொத்தமுள்ள 40 தொகுதிகளில் அதிமுக கூட்டணி ஓரிடத்தில்கூட வெற்றி பெறவில்லை. தென்சென்னை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி ஆகிய 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட்டையே பறிகொடுத்தது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
அதிமுக செல்வாக்கு பெற்ற தொகுதியாகப் பார்க்கப்படும் கோவை தொகுதியில் நூலிழையில் அதிமுக டெபாசிட்டை தக்க வைத்தது. அண்ணாமலை இரண்டாவது இடம் பிடித்த அந்தத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 2,36,490 வாக்குகள் பெற்றார். டெபாசிட் பெற 16.67 சதவீத வாக்குகளைப் பெற வேண்டும் என்ற நிலையில், அதிமுக வேட்பாளர் 17.2 சதவீத வாக்குகளைப் பெற்று டெபாசிட்டை தக்க வைத்தார்.
அதிமுக கூட்டணி 27 தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்தது. அதிமுக 24 இடங்களிலும் அதன் கூட்டணிக் கட்சியான தேமுதிக 3 இடங்களிலும் இரண்டாவது இடத்தில் வந்தன. தமிழ்நாட்டில் மற்ற 12 தொகுதிகளில் பாஜக கூட்டணி இரண்டாது இடத்தைப் பிடித்தது. கன்னியாகுமரி மற்றும் புதுச்சேரியில் அதிமுக நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டது.
திமுகவுக்கு அதிமுக கூட்டணி நெருக்கடி அளித்த தொகுதிகள்
தமிழ்நாட்டில் பெரும்பாலான தொகுதிகளில் திமுகவும் அதன் கூட்டணிக் கட்சிகளும் ஒரு லட்சத்திற்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றன.
மாநிலத்திலேயே திமுக கூட்டணிக்கு அதிமுக கூட்டணி கடும் சவால் அளித்த தொகுதி என்றால் அது விருதுநகர்தான். முன்னிலை நிலவரம் மாறி மாறி வந்த நிலையில், வாக்கு எண்ணிக்கை முடிவில் அதிமுக கூட்டணி வேட்பாளரான தேமுதிகவின் விஜயபிரபாகரனை 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் சார்பாகப் போட்டியிட்ட மாணிக்கம் தாகூர் தோற்கடித்தார்.
விருதுநகர் தவிர, கொங்கு மண்டலத்தில் சேலம், நாமக்கல் தொகுதிகளிலும் அதிமுக வேட்பாளர்கள் திமுகவுக்கு சவால் தரும் வகையில் வாக்குகளைப் பெற்றிருந்தனர்.
தென் மாவட்டங்களில் அதிமுகவுக்கு பெரும் சரிவு

பட மூலாதாரம், Getty Images
அதிமுகவை பொருத்தவரை இம்முறை தென் மாவட்டங்களில் கடும் சரிவைச் சந்தித்துள்ளது. அதிமுகவில் இருந்து விலகி பாஜகவில் சேர்ந்து எம்.எல்.ஏ.வான நயினார் நாகேந்திரன், திருநெல்வேலி தொகுதியில் பெருவாரியான வாக்குகளைப் பெற்றார். தொடக்கத்தில் முன்னிலை பெற்றிருந்த அவர், வாக்கு எண்ணிக்கையின் இரண்டாவது பாதியில் பின்தங்கி வெற்றி வாய்ப்பை இழந்தார். இந்தத் தொகுதியில் நாம் தமிழர் கட்சியை நூலிழையில் முந்தி அதிமுக மூன்றாவது இடத்தைப் பிடித்தது.
தமிழ்நாட்டில் தேசியக் கட்சிகள் அதிக செல்வாக்கு பெற்ற தொகுதியான கன்னியாகுமரியில் அதிமுகவின் நிலைமை இன்னும் மோசம். அங்கே அதிமுகவை பின்னுக்குத் தள்ளி நாம் தமிழர் கட்சி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.
அதேநேரத்தில், அதிமுகவில் இருந்து வெளியேற்றப்பட்ட ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகிய இருவரும் பாஜக கூட்டணியில் போட்டியிட்டு தத்தமது தொகுதிகளில் அதிமுகவை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். குறிப்பாக, தேனி தொகுதியில் வெற்றி பெற்ற தங்க தமிழ்ச்செல்வன், இரண்டாவது இடம் பிடித்த தினகரன் ஆகியோரும் முன்னாள் அதிமுகவினரே.
இதேபோல், மதுரை தொகுதியிலும் அதிமுக பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அங்கே பாஜக இரண்டாவது இடம் பிடிக்க, அதிமுக மூன்றாவது இடத்திற்குத் தள்ளப்பட்டது. சசிகலா, ஓ.பன்னீசெல்வம், டிடிவி தினகரன் ஆகியோரின் வெளியேற்றத்தால் அதிமுகவின் வாக்கு வங்கியாகக் கருதப்படும் முக்குலத்தோர் வாக்குகள் கணிசமாக வேறு கட்சிகளுக்கு மாறியிருப்பதைத் தேர்தல் முடிவுகள் உறுதிப்படுத்துவதாக அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலில் அதிமுக கணிசமான தொகுதிகளை வென்ற கொங்கு மண்டலத்திலும்கூட இந்த நாடாளுமன்றத் தேர்தலில் அக்கட்சியின் நிலை மிகச்சிறப்பாக இருந்ததாகக் கூற முடியாது. சேலம், நாமக்கல் தொகுதிகளில் மட்டுமே அதிமுகவால் திமுக கூட்டணிக்கு ஓரளவுக்கு சவால் கொடுக்க முடிந்தது. கோவை, திருப்பூர், பொள்ளாச்சி, நீலகிரி ஆகிய தொகுதிகளில் அதிமுக பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் பின்தங்கியிருந்தது.
விளவங்கோடு சட்டமன்ற இடைத்தேர்தலிலும் அதிமுக 4வது இடத்துக்குத் தள்ளப்பட்டது. வெறும் 5,267 வாக்குகளை மட்டுமே பெற்று அதிமுக வேட்பாளர் ராணி, டெபாசிட்டை இழந்தார்.
'அதிமுக வாக்கு வங்கியில் வரலாறு காணாத சரிவு'

பட மூலாதாரம், Getty Images
அதிமுக வாக்கு வங்கியில் ஏற்பட்டுள்ள சரிவு குறித்து கருத்து தெரிவித்த மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன், "நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளைப் பார்த்தால் அதிமுக கூட்டணி 23 சதவீதமும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 18.2 சதவீதமும் வாக்குகளைப் பெற்றுள்ளன. அதிமுக ஒரு தொகுதியைக்கூட கைப்பற்றாமல் இருப்பது ஒன்றும் புதிதல்ல. ஜெயலலிதா தலைமைப் பதவியை வகித்தபோதுகூட அது நடந்திருக்கிறது. ஆனால், அதிமுக கூட்டணி ஒருபோதும் 30 சதவீதத்திற்கும் குறைவான வாக்குகளைப் பெற்றதில்லை," என்று தெரிவிக்கிறார்.
ஆனால், "இந்த முறை அதிமுக கூட்டணி அதற்கும் கீழே 23 சதவீதமாகக் குறைந்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்றிருந்தாலும்கூட திமுக கூட்டணியும் 3 சதவீதம் வரை வாக்குகளை இழந்தே இருக்கிறது. அதேநேரத்தில், பாஜக கூட்டணி மட்டுமின்றி, நாம் தமிழர் கட்சியும் தனது வாக்கை 2 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது."
கடந்த தேர்தல்களில் திமுகவும், அதிமுகவும் ஒரு தொகுதியில்கூட வெற்றி பெறாமல் இருந்தாலும்கூட தனது அடிப்படையான வாக்கு வங்கியை அப்படியே தக்க வைத்துக் கொண்டுள்ளதாகவும் கூறுகிறார் எஸ்.பி.லட்சுமணன்.
"வாக்கு சதவீதம் 25 சதவீதத்திற்கும் கீழே குறைந்தால் அந்தச் சரிவில் இருந்து மீண்டெழுவது மிகவும் கடினம். 7 தொகுதிகளில் அதிமுக டெபாசிட்டை இழந்துள்ளது. 12 தொகுதிகளில் மூன்றாவது அல்லது நான்காவது இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளது. குமரி, புதுச்சேரி ஆகிய தொகுதிகளில் நான்காவது இடத்திற்கு அதிமுக சரிந்துள்ளது," என்று கூறினார்.
'2026 தேர்தலுக்கு பாடமும் படிப்பினையும் தந்துள்ளது'
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.
அதில், "தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், மக்களின் ஏகோபித்த எண்ணங்களை முழுமையாகப் பிரதிபலிக்கும் முடிவு அல்ல என்பதைத் தெரிவித்துக் கொள்வதோடு, அதிமுக வேட்பாளர்களுக்கும், கூட்டணிக் கட்சிகளின் வேட்பாளர்களுக்கும் வாக்களித்த வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை உரித்தாக்கிக் கொள்கிறேன்," என்று குறிப்பிட்டார்.
அதோடு, "இந்தத் தேர்தல் முடிவுகள் நம்மை சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும், படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்," என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதிமுகவை அச்சுறுத்தும் அளவுக்கு பாஜக வளர்ந்துவிட்டதா?

பட மூலாதாரம், Getty Images
நாடாளுமன்ற தேர்தல் முடிவைத் தொடர்ந்து, அதிமுகவின் எதிர்காலம், குறிப்பாக எடப்பாடி பழனிசாமி தலைமைப் பதவியில் நீடிப்பாரா என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகள் எழுந்துள்ளன.
அதுகுறித்து மூத்த பத்திரிகையாளர் குபேந்திரனிடம் பேசியபோது, "இந்த நாடாளுமன்றத் தேர்தல் தோல்வியை எடப்பாடி தலைமையில் அதிமுக பெற்ற 9வது தோல்வி என்று சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்புகிறார்கள். ஆனால், என்னைப் பொருத்தவரை இதுவொரு இடைக்காலம் மட்டுமே. 10 இடங்களில் பாஜக இரண்டாவது இடத்தைப் பிடித்துவிட்டதால் மட்டுமே அக்கட்சி வளர்ந்துவிட்டதாகக் கருத முடியாது," என்றார்.
நாம் தமிழர் கட்சி 6 இடங்களில் மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது. இதையெல்லாம் அதிமுகவுக்கு ஒரு இடைக்கால சரிவாகவே தாம் பார்ப்பதாகவும் அவர் கூறுகிறார். "தமிழ்நாட்டில் திமுக, அதிமுக ஆகிய 2 கட்சிகள்தான் பெரிய கட்சிகள். இவற்றில் ஒன்று ஆளுங்கட்சியாகவும் மற்றொன்று எதிர்க்கட்சியாகவும் மாறிமாறி வரும்."
பாஜக கூட்டணியை விட்டு அதிமுக வெளியேறியதற்காக எடப்பாடி பழனிசாமியைப் பாராட்டிய அவர், "அதிமுக ஒரு நல்ல விஷயத்திற்காக பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்திருக்கிறது. இல்லையென்றால் அந்தக் கட்சியைச் சிதைத்துவிடுவார்கள்; அழித்து விடுவார்கள். மதசார்பற்ற ஜனதா தளம், சிவசேனா, நிதிஷ்குமார் கட்சி ஆகியவற்றுக்கு என்ன நடந்தது என்பதைப் பார்த்தோம்" என்றவர், இப்படிப்பட்ட சூழலில் பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு நெருக்கடி கொடுப்பார்கள் என்பது தெரிந்தும் விலகி வந்த எடப்பாடியை பாராட்டுவதாகவும் குறிப்பிட்டார்.
அதுமட்டுமின்றி, "எதிர்க்கட்சி அந்தஸ்து பாஜகவுக்கு கிடைத்துவிட்டது என்ற குரல் வந்தால் அதை நாம் ஒதுக்கித் தள்ளிவிட வேண்டும். பாஜக கூட்டணியை விட்டு வெளியே வந்ததற்காக அதிமுக கவலைப்பட வேண்டியதில்லை. கண்டிப்பாக அதிமுகதான் தமிழ்நாட்டில் இரண்டாவது பெரிய கட்சி," என்றும் கூறுகிறார் மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்.
'எடப்பாடி பழனிசாமி உத்தியை மாற்றுவது அவசியம்'

பட மூலாதாரம், Getty Images
அதிமுகவின் எதிர்காலம் குறித்துப் பேசியபோது, "பாஜக அணியில் போட்டியிட்ட, முன்னாள் அதிமுகவினரான ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன், நயினார் நாகேந்திரன் ஆகியோர் கணிசமான வாக்குகளைப் பெற்று தத்தமது தொகுதிகளில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளனர். இதையெல்லாம் கவனத்தில் எடுத்துக்கொண்டு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது அரசியல் உத்திகளை மறுபரிசீலனை செய்ய வேண்டும். ஒற்றுமையே பலம் என்பதை அவர் உணர்ந்து கொள்ள வேண்டும்," என்று வலியுறுத்துகிறார் மூத்த பத்திரிகையாளர் எஸ்.பி.லட்சுமணன்.
நாடாளுமன்ற தேர்தல் முடிவு வெளியான பின்னர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், 'இந்த தேர்தல் முடிவு 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடத்தையும் படிப்பினையையும் தந்துள்ளது' என்று குறிப்பிட்டுள்ளார். இதுவரை எந்தவொரு அரசியல் தலைவரும் படிப்பினை என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தியதே இல்லை. ஆகவே அவர் சூழலை உணர்ந்து உத்திகளை வகுப்பார் என்று நம்பலாம் எனவும் அவர் கூறுகிறார்
"சட்டப்படி, எடப்பாடி பழனிசாமிதான் அதிமுக பொதுச் செயலாளர் என்று நீதிமன்றமே உறுதி செய்துவிட்ட நிலையில், அவரது பதவிக்கு ஆபத்து ஏதும் இல்லை. சசிகலா, ஓ.பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் பேசி, அவர்களையும் கட்சியில் இணைத்துக் கொண்டு பயணிப்பதே அதிமுகவுக்கு நன்மை தரும்."
"இல்லாவிட்டால் ஜூன் 4க்கு பிறகு அதிமுகவே இருக்காது என்ற அண்ணாமலையின் பேச்சு காலப்போக்கில் உண்மையாகிவிடும். அதற்கு சில ஆண்டுகள் ஆகலாம். ஆனால், அது நடக்கவே நடக்காது என்று புறந்தள்ளிவிட முடியாது," என்று எச்சரிக்கிறார் எஸ்.பி.லட்சுமணன்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












