நரேந்திர மோதிக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்காதது பற்றி சர்வதேச ஊடகங்கள் கூறுவது என்ன?

சர்வதேச ஊடகங்கள்

பட மூலாதாரம், Getty Images

இந்திய மக்களவைத் தேர்தல் முடிவுகள் வெளியாகிவிட்டது. இரண்டு முறை தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சியில் இருந்த பாரதிய ஜனதா கட்சி இம்முறையும் ஆட்சி அமைக்கப் போகிறது. ஆனால், இந்தியா கூட்டணி 234 தொகுதிகளைக் கைப்பற்றி, பாஜக தனிப்பெரும்பான்மை பெறுவதைத் தடுத்துள்ளது.

மூன்றாவது முறையாக நரேந்திர மோதி பிரதமராகப் போகிறார். ஆனால் இதுவரை `மோதி’ என்ற பிம்பத்துக்கு இருந்த செல்வாக்கு தற்போது இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் உணர்த்தியுள்ளன.

இந்த முறை வாரணாசி தொகுதியில் போட்டியிட்ட அவர் 1.5 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 2019ஆம் ஆண்டில் சுமார் ஐந்து லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

சர்வதேச ஊடகங்கள் இந்தியாவின் மக்களவைத் தேர்தல் முடிவுகள் மீது கவனம் வைத்திருந்தன. செவ்வாய்கிழமை வெளியான தேர்தல் முடிவுகள் மோதியை பலவீனப்படுத்திவிட்டது என சர்வதேச ஊடகங்கள் கருதுகின்றன.

வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

நியூயார்க் டைம்ஸ் சொல்வது என்ன?

அமெரிக்காவின் நியூயார்க் டைம்ஸ் நாளிதழில், “நரேந்திர மோதியின் கடந்த 10 ஆண்டு ஆட்சிக்காலத்தில், ஆச்சரியம் நிறைந்த தருணங்கள் பல இருந்தன. ஆனால் செவ்வாய்க்கிழமை காலை கிடைத்த ஆச்சரியம் கடந்த 10 ஆண்டுகளில் இருந்து வேறுபட்டது. நரேந்திர மோதி மூன்றாவது முறையாக ஆட்சியைப் பிடித்தார், ஆனால் அவரது கட்சிக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை.

இந்தத் தோல்வியின் மூலம் 2014இல் இருந்து மோதி மீது கட்டமைக்கப்பட்ட ‘அவர் வெல்ல முடியாதவர்’ என்னும் பிம்பம் முதல்முறையாகப் பொய்த்துவிட்டது.

பாஜக தனித்து 240 தொகுதிகளை வென்றுள்ளது, இது பெரும்பான்மையான 272 தொகுதிகளைவிட மிகக் குறைவு. `இந்தியா’ கூட்டணி 234 இடங்களை வென்றது. மோதி கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைப்பார். ஆனால் இந்தியாவில் அவரது பிம்பம் முன்பு போல் இருக்காது.

பிரதமராக நரேந்திர மோதி அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்வதில் அதிக ஆர்வம் காட்டவில்லை. 2016இல் பணமதிப்பிழப்பு நடவடிக்கையை மேற்கொண்டபோது, அவருடைய அரசாங்கத்தின் நிதி அமைச்சருக்குக்கூட அது தெரியாது. ஜம்மு-காஷ்மீர் அரசியலமைப்பில் இருந்து 370வது பிரிவு நீக்கப்பட்டபோதும், அமித் ஷா அதை நேரடியாக நாடாளுமன்றத்தில் அறிவித்தார், எந்த விவாதமும் மேற்கொள்ளப்படாமல் இந்த நடவடிக்கை ஏற்கெனவே போடப்பட்ட ஒப்பந்தம் போல் வெளியிடப்பட்டது. ஆனால் இதுமாதிரியான சம்பவங்கள் இனி நடக்காது என்றே தோன்றுகிறது,” என்று கூறப்பட்டுள்ளது.

வாஷிங்டன் போஸ்ட் என்ன சொல்கிறது?

சர்வதேச ஊடகங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நரேந்திர மோதியின் தலைமையை இந்திய வாக்காளர்கள் பலர் நிராகரித்துள்ளனர் என்று வாஷிங்டன் போஸ்ட் தெரிவித்துள்ளது.

அமெரிக்க நாளிதழான வாஷிங்டன் போஸ்ட் கூற்றுபடி: நரேந்திர மோதியின் தலைமையை இந்திய வாக்காளர்கள் பலர் நிராகரித்துள்ளனர். இது எதிர்பாராத திருப்பம். இந்த முடிவு பல ஆண்டுகளாக வலிமையான தலைவராக முன்னிறுத்தப்பட்ட மோதியின் பிம்பத்தை உடைத்துவிட்டது, `அவர் வெல்ல முடியாதவர்’ என்னும் பிம்பத்தையும் அழித்துவிட்டது.

பாஜக தனது கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து ஆட்சி அமைக்கலாம் என்றும், ஆனால் 2014க்குப் பிறகு பாஜகவின் மிகப்பெரிய பின்னடைவு இது எனவும் வாஷிங்டன் போஸ்ட் கூறியுள்ளது.

மேலும், "கடந்த 2014ஆம் ஆண்டு, நாட்டின் வளர்ச்சி மற்றும் ஊழல் தொடர்பாக மக்களிடையே எழுந்த கோபத்தைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்த மோதி, 2019ஆம் ஆண்டு தேசியவாதம் மற்றும் பாகிஸ்தானுடனான பதற்றம் ஆகியவற்றைப் பயன்படுத்தி ஆட்சிக்கு வந்தார்.

ஆனால் இந்தத் தேர்தலில் பாஜக பெரும்பான்மைக்கு வெகுதொலைவில் உள்ளது, தனது 23 ஆண்டுக்கால அரசியல் வாழ்க்கையில் ஒருபோதும் பெரும்பான்மை பெறத் தவறாத நரேந்திர மோதி, முதல்முறையாக அத்தகைய சூழ்நிலையில் இருக்கிறார்.

மோதி மீது வலுவான தலைவர் என்ற பிம்பம் உள்ளது, இந்தத் தேர்தல் நடந்து முடிந்த பிறகு, அரசியல் அறிஞர்கள் பலர் `மோதியின் அலையில் எதிர்க்கட்சிகள் அடித்துச் செல்லப்படும்’ என்று கணித்திருந்தனர்.

இம்முறை தேர்தலின்போது, எதிர்க்கட்சிகளின் வங்கிக் கணக்குகளை நரேந்திர மோதி அரசு முடக்கியது, சில எதிர்க்கட்சித் தலைவர்கள் வரி மற்றும் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிறையில் அடைக்கப்பட்டனர்.

மோதிக்கு நெருக்கமான உரிமையாளர்கள் நடத்தும் பிரதான ஊடகங்களில் இருந்து அவர் ஒருதலைப்பட்சமாக ஆதரவு பெற்றார். இந்தச் செயல்பாடுகளால் உள்நாட்டிலிருந்தும் வெளிநாட்டிலிருந்தும் எச்சரிக்கைகள் வரத் தொடங்கின," என்றும் கூறியுள்ளது.

ஜான்ஸ் ஹாப்கின்ஸ் யுனிவர்சிட்டி ஸ்கூல் ஆஃப் அட்வான்ஸ்டு இன்டர்நேஷனல் ஸ்டடீஸின் அரசியல் விஞ்ஞானி தேவேஷ் கபூர், வாஷிங்டன் போஸ்டில் பேசியதாவது: “ஜனநாயகம் பலவீனமாக இல்லை என்பதைப் பிரதிபலிக்கும் விதமாக செவ்வாய்கிழமை தேர்தல் முடிவுகள் வெளியாகின. பொதுமக்கள் இதைச் சாத்தியப்படுத்தி உள்ளனர். வாக்காளர்கள் சுதந்திரமான மனதுடன் வாக்களிக்கிறார்கள் என்பதை இந்த முடிவு காட்டுகிறது. இல்லையெனில் பாஜகாவின் இந்த தேர் இப்படி தடைப்பட்டு நின்றிருக்காது."

டைம் இதழ் என்ன சொல்கிறது?

சர்வதேச ஊடகங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தெற்கில் பாஜக சிறப்பாகச் செயல்பட்டது. கேரளா போன்ற மாநிலங்களில் கால் பதித்துள்ளனர் என்று கூறுகிறது டைம் நாளிதழ்.

அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கையான `டைம்’ தனது செய்தி அறிக்கையில், கருத்துக் கணிப்புகளும், அரசியல் விமர்சகர்களும் மோதியின் வெற்றியைக் கணிப்பதில் கொஞ்சம் அவசரம் காட்டியுள்ளனர் என்று குறிப்பிட்டுள்ளது.

"மோதி மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பாரா, பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும் போன்ற கேள்விகள் இந்தியாவில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது.

செவ்வாய்க்கிழமை இந்தக் கேள்விகளுக்குப் பதில் கிடைத்தது. வெளியான முடிவுகளில் மோதியின் கட்சி பெரும்பான்மை பெறவில்லை. 240 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர். 2019 இல் பாஜக மட்டும் 303 இடங்களைப் பெற்றது. இம்முறை வாக்கு சதவீதம் கடந்த ஆண்டை விட மிகவும் குறைவு.

இருபது கட்சிகளின் கூட்டணியான இந்தியா கூட்டணி 234 இடங்களைப் பெற்றுள்ளது. எதிர்பார்த்ததைவிட சிறப்பாகச் செயல்பட்டு வருகின்றனர். 73 வயதான மோதி, பிரபலமான பிம்பமாகப் பார்க்கப்படுபவர். தொடர்ந்து மூன்றாவது முறையாக பிரதமராகும் நாட்டின் இரண்டாவது தலைவர். இதற்கு முன், ஜவஹர்லால் நேரு மட்டுமே அத்தகைய தலைவராக இருந்தார்.

ஆனால் இம்முறை வாக்குறுதி அளித்தபடி, மோதி தனது இந்து-தேசியவாதத்தைக் கையில் எடுத்ததும் சில பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்த போதும், பாஜக எதிர்பார்த்த தாக்கம் ஏற்படவில்லை. பலம் வாய்ந்த எதிர்க்கட்சி கூட்டணியால் முன்பைவிடக் குறைவான தொகுகளை அவர் கைப்பற்றியுள்ளார்.

கடந்த 10 ஆண்டுகளில் இதுபோன்ற பலமான எதிர்க்கட்சியை அவர் காணவில்லை. இந்த முறை பாஜக கூட்டணி கட்சிகளுடன் கனிவாகப் பேச வேண்டும், அவற்றின் ஆதரவு இல்லாமல் ஆட்சியை நடத்துவது கடினம்.

அதிக பெரும்பான்மையைப் பெற, தெற்கிலும், உ.பி. போன்ற அதன் கோட்டையிலும் பாஜக சிறப்பாகச் செயல்பட வேண்டியது அவசியம்.

தெற்கில் பாஜக சிறப்பாகச் செயல்பட்டது. கேரளா போன்ற மாநிலங்களில் கால் பதித்துள்ளனர். அதன் கூட்டணிக் கட்சிகள் ஆந்திரா, தெலங்கானாவிலும் சிறப்பாகச் செயல்பட்டன, ஆனால் உ.பி.யில் பாஜகவின் செயல்பாடு அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

முப்பது ஆண்டுக்கால ராமர் கோவில் வாக்குறுதியை பாஜக நிறைவேற்றியது. ஆனால் தேர்தலில் அது எந்தப் பலனையும் காட்டவில்லை. 2014இல் இங்கு மொத்தமுள்ள 80 இடங்களில் 71 இடங்களிலும், 2019இல் 62 இடங்களிலும் வெற்றி பெற்றிருந்த பாஜக, இம்முறை 33 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது," என்று டைம் நாளிதழ் எழுதியுள்ளது.

அல்ஜசீரா சொல்வது என்ன?

சர்வதேச ஊடகங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, “மோதி ஆட்சி அமைப்பார், ஆனால் அவரது அரசாங்கம் அவரது கூட்டணிக் கட்சிகளின் கைகளில் இருக்கும்” என்று கூறுகிறது அல்ஜசீரா.

கத்தார் ஊடகமான அல் ஜசீராவும் மோதியின் பிம்பம் சிதைந்துள்ளது எனக் குறிப்பிட்டு எழுதியுள்ளது.

அல் ஜசீராவின் செய்தி அறிக்கையில், “மோதி ஆட்சி அமைப்பார், ஆனால் அவரது அரசாங்கம் அவரது கூட்டணிக் கட்சிகளின் கைகளில் இருக்கும்.

அதுதவிர, இந்தத் தேர்தல் முடிவுகள் பாஜகவின் தேர்தல் கொள்கை மீதும் கேள்விகளை எழுப்புகிறது. பாஜக மற்றும் நரேந்திர மோதியின் பிரசாரம் வகுப்புவாத பிரிவினையில் அதிக கவனம் செலுத்தியது.

எதிர்க்கட்சிகள் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கு வளங்களை வழங்குவார்கள் என்று பிரசாரத்தில் கூறப்பட்டது. ஆனால் எதிர்க்கட்சிகளின் பிரசாரம் மோதி அரசாங்கத்தின் திட்டங்கள் மற்றும் அதன் பொருளாதார தோல்வியை அடிப்படையாகக் கொண்டது.

பாஜகவின் முழக்கம் ‘இந்த முறை 400ஐ தாண்டுவோம்’ என்றது, ஆனால் மோதியின் வாழ்க்கை வரலாற்றை எழுதிய நிலஞ்சன் முகோபாத்யாய், 'இது அதீத நம்பிக்கை கொண்ட முழக்கம்' என்று விமர்சித்தார்," என்று குறிப்பிட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)