டி20 உலகக் கோப்பை: பேட்ஸ்மேன்களின் உடலை ரணமாக்கிய நியூயார்க் ஆடுகளம்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், க.போத்திராஜ்
- பதவி, பிபிசி தமிழுக்காக
குறைந்த ரன்கள், பேட்டர்களின் உடலை ரணமாக்கும் விக்கெட், சமனற்ற ஆபத்தான ஆடுகளம் ஆகியவற்றைக் கொண்ட நியூயார்க் ஆடுகளத்தில்தான் நேற்று டி20 உலகக் கோப்பைப் போட்டியின் 8-வது லீக் ஆட்டம் நடந்தது.
நியூயார்க்கில் நேற்று குரூப் ஏ பிரிவில் நடந்த டி20 உலகக் கோப்பைத் தொடரின் 8-வது ஆட்டத்தில் அயர்லாந்து அணியை 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது இந்திய அணி.
முதலில் பேட் செய்த அயர்லாந்து அணி 16 ஓவர்களில் 96 ரன்களில் சுருண்டது. 97 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் எளிய இலக்கை துரத்திய இந்திய அணி 12.2 ஓவர்களில் 2 விக்கெட் இழப்புக்கு 97 ரன்கள் சேர்த்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.
இந்திய அணி சார்பில் 3 ஓவர்கள் வீசி ஒரு மெய்டன், 6 ரன்கள் கொடுத்து 2 விக்கெட் வீழ்த்திய வேகப்பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இதே மைதானத்தில்தான் வரும் 9ம் தேதி இந்தியா-பாகிஸ்தான் ஆட்டம் நடைபெறுகிறது. ஏற்கெனவே இங்கு நடந்த இரு ஆட்டங்களும் குறைந்த ஸ்கோர் கொண்டவையாக இருந்தன. பாகிஸ்தான், இந்தியா ஆகிய இரு அணியிலும் தரமான வேகப்பந்துவீச்சாளர்கள் இருக்கும் நிலையில் இந்த ஆடுகளத்தில் நடக்கும் போட்டி வல்லவனுக்கு வல்லவன் யார் என்பதை வெளிப்படுத்தும் விதத்தில் இருக்கலாம்.
அதேநேரம், பேட்டர்களுக்கு சாதகமில்லாத வகையிலும், பேட்டர்களின் உடலை பதம் பார்க்கும் விதத்திலும் ஆடுகளம் அமைந்திருப்பது ஆபத்தானது என்ற விமர்சனங்கள் எழுந்திருக்கின்றன.
இங்கிலாந்து அணியின் முன்னாள் பயிற்சியாளர் ஆண்டி ஃபிளவர் கூறுகையில் “ நியார்க் மைதானத்தில் உள்ள ஆடுகளம் ஆபத்தின் எல்லையில் இருக்கிறது,” என்று எச்சரித்துள்ளார்.

பட மூலாதாரம், Getty Images
ஆடுகளம் எப்படி?
வெற்றிக்குப்பின் இந்திய அணியின் கேப்டன் ரோஹித் சர்மா கூறுகையில், “ புதிய மைதானம், புதிய இடம், எப்படி இருக்கும் என்பது விளையாடும்போதுதான் தெரியும். இதில் விழுந்த அடி எனக்கு லேசாக வலிக்கிறது. ஆடுகளம் செட்டில் ஆகிவிட்டது என்று நான் நினைக்கவில்லை. பந்துவீச்சாளர்களின் கைகளே ஓங்கியுள்ளது. டெஸ்ட் போட்டி பந்துவீச்சை மனதில் வைத்து பேட்டர்கள் பேட் செய்ய வேண்டும். அர்ஷ்தீப் வலதுகை பேட்டர்களுக்கு அருமையாக ஸ்விங் செய்தார்.”
“இங்கு 4 சுழற்பந்துவீச்சாளர்களுடன் விளையாடுவதை நினைத்துக்கூட பார்க்கவில்லை. சூழல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஏதுவாக இருந்தால், அவர்களுக்குத்தான் வாய்ப்பு. இந்தத் தொடரில் வேறு இடத்தில் ஆட்டம் நடக்கும்போது, சுழற்பந்துவீச்சாளர்கள் வாய்ப்புப் பெறுவார்கள். பாகிஸ்தானுக்கு எதிரான ஆட்டத்தில் நிச்சயம் மாற்றங்கள் இருக்கலாம். இந்த ஆடுகளத்துக்கு ஏற்ப எங்களை தயார் செய்ய வேண்டும். இந்த ஆட்டம் ப்ளேயிங் லெவனில் உள்ள அனைத்து வீரர்களும் ஒன்றாகச் சேர்ந்து கூட்டுப்பங்களிப்பு செய்யும் ஆட்டமாக அமைவது அவசியம். பேட் செய்ய கடினமாக இருந்தாலும் நிதானமாக ஆடினால், ரன்களைச் சேர்க்க முடியும்,” எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images
ஆடுகளத்தில் பிரச்னையா?
நியூயார்க்கில் உள்ள இஷன்ஹோவர் பார்க்கில் புதிதாக அமைக்கப்பட்ட மைதானத்தில் அமைக்கப்பட்ட விக்கெட்டில் 2-ஆவது முறையாக சர்வதேச கிரிக்கெட் போட்டி நடந்தது. இந்த மைதானத்தில் ஸ்குயர் பவுண்டரி அளவும் அதிகம் என்பதால், பேட்டர்கள் பவுண்டரி, சிக்ஸர் அடிப்பதும் சிரமம்.
அது மட்டுமல்லாமல் விக்கெட் சீராக இல்லாமல் எந்த இடத்தில் பந்து பிட்ச்சானால் எப்படி பவுன்ஸ் ஆகும் என்பது தெரியாமல் இருந்தது. இலங்கை அணிக்கு எதிரான ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் இலங்கை பேட்ஸ்மேன்கள் சிரமப்பட்டனர். அதே நிலைமை நேற்றைய ஆட்டத்திலும் அயர்லாந்து பேட்டர்கள் இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறினர்.
இந்திய அணி பேட் செய்யும்போதும், தொடக்கத்தில் ரோஹித் சர்மா ரன் சேர்க்க மிகவும் தடுமாறி 20 பந்துகள் வரை மெதுவாகவே ஆடினார். ஆனால், ஒரு கட்டத்தில் தீர்க்கமாக முடிவெடுத்து அதிரடியாக ஆடித்தான் ரன்களைச் சேர்த்தார். அதிலும் ஜோஷ்லிட்டில் வீசிய வேகப்பந்துவீச்சில் திடீரென வந்த பவுன்ஸர் ரோஹித் சர்மாவின் தோள்பட்டையை தாக்கவே, வலி தாங்க முடியாமல், ரிட்டயர்ட் ஹர்ட் ஆகினார்.
ஐசிசி சார்பில் நடக்கும் இதுபோன்ற சர்வதேச போட்டியில் ஆடுகளத்தின் தன்மையை பரிசோதிக்காமல் விட்டார்களா, இதுபோன்று தரமற்ற ஆடுகளத்தில், குழிபிட்ச்சில் போட்டி நடத்தலாமா என்ற கேள்வியை கிரிக்கெட் விமர்சகர்கள் கடுமையாக வைத்துள்ளனர்.

பட மூலாதாரம், Getty Images
அடிலெய்ட் ஆடுகள வடிவமைப்பாளர்
நியூயார்க்கில் உள்ள இந்த ஆடுகளத்தை அமைப்பதற்காகவே ஆஸ்திரேலியாவின் அடிலெய்ட் ஓவல் மைதானத்தின் தலைமை பிட்ச் வடிவமைப்பாளர் டேமியன் ஹோவ் பணிக்கு அமர்த்தப்பட்டார். ஆஸ்திரேலியாவிலிருந்து ஆடுகளத்தை வடிவமைத்து “ட்ராப்-இன் பிட்ச்” முறையை கொண்டுவந்து இங்கு ஐசிசி அமைத்தது.
இந்தியா-வங்கதேசம் இடையிலான பயிற்சிப்போட்டி நடப்பதற்கு 2 வாரங்களுக்கு முன்புதான் இந்த ஆடுகளத்தின் வடிவமைப்புப் பணியே நடந்து முடிந்துள்ளது. இன்னும் விக்கெட் இறுகி செட் ஆவதற்குள் ஆட்டம் நடப்பதுதான் கிரிக்கெட் விமர்சகர்களிடையே பல்வேறு கேள்வியை எழுப்பியுள்ளது.
அமெரிக்காவில் 16 போட்டிகளில் 8 ஆட்டங்கள் நியூயார்க் மைதானத்தில் நடக்க இருக்கின்றன. அதில் குறிப்பாக இந்தியா-பாகிஸ்தான் ஆட்டமும் இந்த விக்கெட்டில்தான் நடக்க இருக்கிறது. அனைத்து ஆட்டங்களும் பகலில் நடக்கும் ஆட்டமாக இருக்கும். இந்திய அணியும் தனது 3 லீக் ஆட்டங்களை நியூயார்க் மைதானத்தில்தான் விளையாட இருக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
"ஐபிஎல் போட்டி போன்று இருக்காது"
இந்த ஆடுகளம் குறித்து ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் கேப்டன் ரிக்கி பாண்டிங் கிரிக்இன்ஃபோ தளத்துக்கு அளித்த பேட்டியில், “ நியூயார்க்கில் நடக்கும் ஆட்டங்கள் பகலில்தான் இருக்கும், பந்து நன்றாக ஸ்விங் ஆகும், சீமிங் இருக்கும். ஆதலால் பேட்டர்கள் ஐபிஎல் போன்று 240 ரன்கள் வரை அடிக்கலாம் என்பதை மறந்துவிட்டு, இன்னிங்ஸை எவ்வாறு தொடங்கலாம், மோசமான பந்துகளை மட்டும் எவ்வாறு பெரிய ஷாட்களாக மாற்றலாம் என்பதை கணித்து ஆட வேண்டும். 240 ரன்கள் ஸ்கோர் என்பது இந்த ஆடுகளத்தில் சாத்தியமில்லை. பேட்டர்களுக்கு இங்கு நடக்கும் ஆட்டங்கள் வித்தியாசமான சவாலாக இருக்கும்,” என்றார்.
“ஆடுகளத்தை வடிவமைத்த டேமியன் ஹோவ் பேசியதை கேட்டேன். நியூயார்க் ஆடுகளம், பேட்டர்களுக்கும், பந்துவீ்ச்சாளர்களுக்கும் சமமான போட்டியை உருவாக்கும் விதத்தில் இருக்கும் எனத் தெரிவித்திருந்தார். இலங்கை, தென் ஆப்பிரிக்கா இடையிலான ஆட்டத்தில் பந்துவீச்சாளர்களுக்கு சிறிதளவு ஒத்துழைத்தது. மற்றவகையில் பேட்டர்கள் ஒவ்வொரு பந்தையும் நன்கு மனதில் வைத்து விளையாடும் விதத்தில் இருந்தது. கடந்த 2 மாதங்களாக ஐபிஎல் தொடரில் எதிர்பார்த்த ரன் திருவிழாவுக்கு நேர் எதிராகவே இந்த ஆடுகளம் இருக்கும்” எனத் தெரிவித்தார் பாண்டிங்.

பட மூலாதாரம், Getty Images
8 விக்கெட்டுகளை அள்ளிய வேகப்பந்துவீச்சாளர்கள்
நியூயார்க் ஆடுகளத்தின் தன்மையை அறிந்து இந்திய அணி நேற்று 4 வேகப்பந்துவீச்சாளர்கள், 2 சுழற்பந்து ஆல்ரவுண்டர்களுடன் களமிறங்கியது. அயர்லாந்து அணியின் 8 விக்கெட்டுகளை, இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்களே வீழ்த்தினர்.
பும்ரா 2 விக்கெட், ஹர்திக் பாண்டியா 3 விக்கெட், அர்ஷ்தீப் 2 விக்கெட், சிராஜ் ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். இந்திய வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சில் வெளிப்பட்ட சீமிங், ஸ்விங், பவுன்ஸர்கள் அயர்லாந்து பேட்டர்களை திக்குமுக்காடச் செய்தன. பேட்டிங் செய்வதற்கு கடுமையாக போராடிய அயர்லாந்து பேட்டர்கள், 16 ஓவர்களில் சுருண்டனர்.
இந்திய அணியின் பேட்டர்களும் பேட்டிங் செய்தபோது, அயர்லாந்து வேகப்பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் சிரமப்பட்டனர். ரோஹித் சர்மா தொடக்கத்தில் நிதானமாக ஆடி, பின்பு அதிரடிக்கு மாறினார். விராட் கோலி, சூர்யகுமார் யாதவ் இருவருமே சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர்.
இருப்பினும், சூழலை உணர்ந்த ரோஹித் சர்மா அதிரடியாக 3 சிக்ஸர்கள், 4 பவுண்டரிகளை விளாசி 36 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். ரோஹித் 52 ரன்கள் சேர்த்திருந்தபோது, ஜோஸ் லிட்டல் பந்துவீச்சில் தோள்பட்டையில் பந்துபட்டு வலியால் துடித்து ரிட்டயர் ஹர்ட் முறையில் வெளியேறினார். அது மட்டுமல்லாமல் டி20 போட்டிகளில் 4 ஆயிரம் ரன்களைக் கடந்த 3வது வீரர் என்ற பெருமையையும், 600-வது சிக்ஸரையும் அடித்து ரோஹித் சர்மா சாதனை படைத்தார்.

பட மூலாதாரம், Getty Images
அயர்லாந்து திணறல்
அயர்லாந்து அணி முதலில் பேட் செய்தபோது, முதல் இரு ஓவர்கள் எவ்வாறு ஆடுகளம் இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்புடனே அர்ஷ்தீப், சிராஜ் பந்துவீசினர். ஆனால், அர்ஷ்தீப் வீசிய பந்துகள் மின்னல் வேகத்தில் சென்றது, நிலையற்ற பவுன்ஸ் ஆனது, விக்கெட் கீப்பர் கைகளுக்கு செல்லும் முன்பே ஸ்விங் ஆகியதைப் பார்த்தபின், சாதகமாகப் பயன்படுத்திக்கொண்டனர்.
அர்ஷ்தீப் வீசிய 3வது ஓவரில் ஸ்விங் பந்தை அடிக்க முயன்று பால் ஸ்ட்ரிங் 2 ரன்னில் விக்கெட் கீப்பர் ரிஷப் பந்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். அதே ஓவரின் கடைசிப்பந்தில் பால்ப்ரிங் க்ளீன் போல்டாகி வெளியேறினார். பவர்ப்ளே முடிவில் அயர்லாந்து 2 விக்கெட் இழப்புக்கு 26 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.
இந்திய வேகப்பந்தை சமாளிக்க முடியாமல் அயர்லாந்து பேட்டர் ஹேரி டெக்டர் கையுறையிலும், தொடைப்பகுதியிலும் பந்தால் அடி வாங்கி பேட் செய்தார். பொறுமையிழந்த டெக்டர் 4 ரன்னில் பும்ரா வீசிய ஷார்ட் பந்துவீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
குறிப்பாக காயத்திலிருந்து மீண்டுவந்து பந்துவீசி வரும் பும்ரா பந்துவீச்சை தொடுவதற்கே அயர்லாந்து பேட்டர்கள் அஞ்சினர். துல்லியமான லென்த், இன்கட்டர், ஸ்விங் என அயர்லாந்து பேட்டர்களை பும்ரா தனது பந்துவீச்சால் மிரட்டினார். பும்ராவின் ஓவரில் ஒரு பவுண்டரி கூட அயர்லாந்து பேட்டர்கள் அடிக்கவில்லை, 3 ஓவர்களில் 6 ரன்கள் மட்டுமே சேர்த்தனர்.
அதன்பின் ஹர்திக் பாண்டியா, பும்ரா இருவரும் பந்துவீச வந்தபின் அயர்லாந்து அணி சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. அக்ஸர் படேல் பந்துவீச்சில் கூட பேரி மெக்ரத்தி விக்கெட்டை இழந்தார். 26 ரன்களுக்கு 2 விக்கெட்டை இழந்திருந்த அயர்லாந்து 50 ரன்களுக்குள் 8 விக்கெட்டுகளை இழந்தது. அயர்லாந்து அணியில் கேரத் டிலானி 14 பந்துகளில் 26 ரன்கள் சேர்த்ததுதான் அதிகபட்ச ஸ்கோராகும்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












