டி20 உலகக் கோப்பை: வெற்றி பெற்றாலும் கடுமையாக விமர்சிக்கப்படும் மேற்கிந்தியத் தீவுகள்

பட மூலாதாரம், Getty Images
ஐசிசி ஒருநாள் போட்டியில் 2 முறை சாம்பியன், டி20 போட்டிகளில் 2 முறை சாம்பியன், உலகின் பல்வேறு டி20 லீக் போட்டிகளில் விளையாடிய அனுபவம் , சர்வதேச அனுபவம் நிறைந்த பல வீரர்கள் இருந்தும் வலிமையான மேற்கிந்தியத்தீவுகள் அணியை கடைசி ஓவர் வரை வெற்றிக்கு போராட வைத்தது அனுபவம் குறைந்த பப்புவா நியூ கினியா(பிஎன்ஜி) அணி.
மேற்கிந்தியத்தீவுகள் அணி நேற்றைய டி20 உலகக் கோப்பையின் முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், அந்த வெற்றி முன்னாள் சாம்பியன் தரத்துக்கும், தகுதியான வெற்றியாக எடுக்க முடியாது, வெட்கப்பட வேண்டும் என்று வர்ணனையாளர்கள் போட்டி முடிந்தபோதே கடும் விமர்சனத்தை முன்வைத்தனர்.
ஒரு கட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் தோற்றுவிடுமோ என்று எண்ணியபோது, தடுமாறித்தான் வெற்றிப்பாதைக்குத் திரும்பி கவுரவத்தைக் காப்பாற்றிக் கொண்டது.
கயானாவின் ப்ராவிடன்ஸ் நகரில் நேற்று நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியின் 2வது லீக் ஆட்டத்தில் பிஎன்ஜி அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது மேற்கிந்தியத்தீவுகள் அணி.
முதலில் பேட் செய்த பிஎன்ஜி அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்புக்கு 136 ரன்கள் சேர்த்தது. 137 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் களமிறங்கிய மேற்கிந்தியத்தீவுகள் அணி ஒரு ஓவர் மீதமிருக்கையில் 5 விக்கெட்டுகளை இழந்து 137 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வென்றது.
இந்த வெற்றியின் மூலம் குரூப் சி பிரிவில் இடம்பெற்று போட்டியை நடத்தும் மேற்கிந்தியத்தீவுகள் அணி 2 புள்ளிகள் பெற்றது. கடந்த 2 உலகக் கோப்பைத் தொடர்களிலும் முன்னாள் சாம்பியனான மேற்கிந்தியத்தீவுகள் அணி தகுதி பெறக்கூட இல்லை. ஆனால், இந்த முறையும் அதே சூழல் ஏற்பட்டிருக்கும் ஆனால், போட்டியை நடத்தும் நாடு என்பதால் தானாகவே வாய்ப்பைப் பெற்றது.
வாட்ஸ்ஆப்பில் பிபிசி தமிழ்
-------------------------------------
நீங்கள் மொபைல் போன் அல்லது கணிணி/ மடிக்கணிணியில் வாட்ஸ் ஆப்பை பயன்படுத்துபவராக இருந்தால் பிபிசி தமிழின் வாட்ஸ்ஆப் சேனலைப் பின்தொடர இந்த லிங்கை க்ளிக் செய்யவும். பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பட மூலாதாரம், Getty Images
பிஎன்ஜி அணிக்கு பாராட்டு
மேற்கிந்தியத்தீவுகள் கேப்டன் ரோவ்மென் பாவெல் கூறுகையில் “உண்மையில் பிஎன்ஜி அணிக்கு பாராட்டுகளைத் தெரிவிக்க வேண்டும். எளிதாக திட்டமிட்டு அதை சிறப்பாகச் செயல்படுத்தி நல்ல கிரிக்கெட் விளையாடினர். இன்னும் கூடுதலாக 15 ரன்களை பிஎன்ஜி சேர்த்திருந்தால் ஆட்டம் கடினமாக மாறியிருக்கும். பந்துவீச்சில் இன்னும் நாங்கள் முன்னேற வேண்டும். ரஸ்டன் சேஸ் பந்துவீச்சிலும் பேட்டிங்கிலும் சிறப்பாக செயல்பட்டார். நெருக்கடியான நேரத்தில் அவரின் ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தினார்” எனத் தெரிவித்தார்.
மேற்கிந்தியத்தீவுகள் அணி பந்துவீச்சில் சிறப்பாகச் செயல்பட்டாலும் பேட்டிங்கில் கோட்டைவிட்டனர். மேற்கிந்தியத்தீவுகளுக்கு வெற்றிக்கான இலக்கு எளிதாக ஓவருக்கு 7 ரன்கள் சேர்த்தாலே கிடைத்துவிடும் என்று இருந்தது. ஆனால், திட்டமிடல் இன்றி பேட்டர்கள் பொறுப்பின்றி பேட் செய்தனர். அதிலும் நடுவரிசையில் அனுபவம் வாய்ந்த ரூதர்போர்ட், கேப்டன் பாவெல், பூரன் இருந்தும் யாரும் நிலைத்து ஆடவில்லை.
ஒரு கட்டத்தில் மேற்கிந்தியத்தீவுகள் அணி வெற்றிக்கு 24 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டம் பிஎன்ஜி கரங்களுக்கு மாறியது. அனுபவமற்ற அணிபோல் பந்துவீசாமல் மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர்களை ரன்கள் சேர்க்க திணறவைக்கும் விதத்தில் பந்துவீசினர்.
61 ரன்கள்வரை ஒரு விக்கெட் மட்டும் இழந்து வலுவாக பேட் செய்திருந்த மேற்கிந்தியத்வுகள் அணி, அடுத்த 36 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தோல்வியின் பிடியில் சிக்கியது.
9-வது ஓவரில் இருந்து 15-வது ஓவர்கள் வரை மேற்கிந்தியத்தீவுகள் அணியின் ரன்ரேட்டை பிஎன்ஜி பந்துவீச்சாளர்கள் இறுக்கிப் பிடித்தனர். இந்த 6 ஓவர்களில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 37 ரன்கள் சேர்த்து 4 விக்கெட்டுகளையும் இழந்திருந்தது. இதுதான் ஆட்டத்தை கடைசி நேர பரபரப்பு வரை இழுத்துச் சென்றது.

பட மூலாதாரம், Getty Images
17-ஆவது ஓவரில் திருப்புமுனை
ஆட்டம் அனைத்துமே 17-வது ஓவர்களுக்குப்பின்புதான் திரும்பியது. அதுவரை பிஎன்ஜி அணியின் கரங்களே ஆட்டத்தில் மேலோங்கி இருந்தது. ரஸ்டன் சேஸ், ஆந்த்ரே ரஸல் இருவரும் கடைசி நேரத்தில் கேமியோ ஆடாமல் இருந்திருந்தால் மேற்கிந்தியத்தீவுகள் தோல்வி உறுதியாகியிருக்கும். 17, 18 மற்றும் 19வது ஓவர்களில் சேர்க்கப்பட்ட ரன்கள்தான் மேற்கிந்தியத்தீவுகள் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றது.
ரஸ்டன் சேஸ் தனது ஆல்ரவுண்டர் திறமையை வெளிப்படுத்தி கடைசி நேரத்தில் அதிரடியாக பேட் செய்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார். சேஸ் 27 பந்துகளில் 42 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். இதில் 2 சிக்ஸர்கள் 4 பவுண்டர்கள் அடங்கும்.
ரஸல் 9 பந்துகளில் ஒரு சிக்ஸர் உள்பட 15 ரன்களுடன் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார். பந்துவீச்சிலும் கட்டுக்கோப்பாகச் செயல்பட்டு, பேட்டிங்கிலும் அணியின்வெற்றிக்கு உதவிய ரஸ்டன் சேஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
16 வது ஓவரில் ரூதர்ஃபோர்டை 2 ரன்னில் பிஎன்ஜி கேப்டன் ஆசாத் வாலா ஆட்டமிழக்கச் செய்தபின் 7வது வீரராக ஆந்த்ரே ரஸல் களமிறங்கினார். ஐபிஎல் டி20 தொடரில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற கொல்கத்தா அணியில் இடம் பெற்றிருந்த ரஸல் களத்துக்கு வந்தபோது மேற்கிந்தியத்தீவுகள் வெற்றிக்கு 24 பந்துகளில் 40 ரன்கள் தேவைப்பட்டது. ரஸல் தான் சந்தித்த 4வது பந்தில் சிக்ஸர் விளாசி அழுத்தத்தைக் குறைத்தார்.
அதன்பின் ஆட்டத்தை சேஸ் கையில் எடுத்துக்கொண்டார். வாலா வீசிய 18-வது ஓவரில் ஒரு சிக்ஸரும், 2 பவுண்டரிகளும் அடித்து தோல்வியின் பிடியிலிருந்து தங்கள் அணியை மீட்கும்முயற்சியில் இறங்கினார். மொரியாவின் 19-வது ஓவரில் 2 பவுண்டரி அடித்து சேஸ் அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.

பட மூலாதாரம், Getty Images
மேற்கிந்தியத் தீவுகள் அணிக்கு ஏன் இந்த நிலை?
மேற்கிந்தியத்தீவுகள் அணி தற்போது எப்படி இருக்கிறது, பல்வேறு லீக் போட்டிகளில் விளையாடிய வீரர்கள் அடங்கிய அணியாக இருந்தாலும், சர்வதேச அனுபவம் நிறைந்த வீரர்கள் இருந்தாலும் உண்மையில் அந்த அணியின் நிலை, வலிமை என்ன என்பதை பிஎன்ஜி அணி முதல் போட்டியிலேயே அம்பலப்படுத்திவிட்டது.
மேற்கிந்தியத்தீவுகள் அணி உலகக் கோப்பையை வென்றபோது பயிற்சியாளராக இருந்த பில் சிம்மன்ஸ் தற்போது பிஎன்ஜி அணியின் ஆலோசகராக இருந்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
2021ம் ஆண்டு டி20 போட்டியிலிருந்து மேற்கிந்தியத்தீவுகள் அணியின் டி20 போட்டிகளை ஆய்வு செய்தால் அந்த அணி பெரும்பாலான போட்டிகளில் சேஸிங்கின்போது தடுமாறியுள்ளதும், பல போட்டிகளில் தோல்வி அடைந்ததும் இருக்கிறது என்று கிரிக்இன்போ தகவல் தெரிவித்துள்ளது.
அதிலும் 2022ம் ஆண்டு தகுதிச்சுற்றுப்போட்டிகளில் அயர்லாந்து, ஸ்காட்லாந்து, ஜிம்பாப்பே அணிகளை வெல்ல முடியாமல் மேற்கிந்தியத்தீவுகள் அணி தகுதி கூட பெறவில்லை, கடந்த 50 ஓவர்கள் உலகக் கோப்பையிலும் அந்த அணி இடம் பெறவில்லை.
இந்த நிலை இந்த உலகக் கோப்பையிலும் மேற்கிந்தியத்தீவுகள் அணியில் தொடர்ந்து வருகிறது. குறைந்த இலக்கை சேஸிங் செய்ய முயலும்போதுகூட மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர்கள் பொறுப்பின்றி விக்கெட்டை இழந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
அதிலும் பிஎன்ஜி பந்துவீச்சாளர் அலி நாவோ உலகக் கோப்பையில் தனது முதல் ஓவர் முதல் பந்தை வீசியபோது, மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர் சார்லஸ் தேவையின்றி கால்காப்பில் வாங்கி ஆட்டமிழந்தார். சார்லஸ் அடித்த ஷாட் தேவையில்லாதது, பிரண்ட்ஃபுட் வைத்து ஆட வேண்டிய ஷாட்டை கால்காப்பி்ல் வாங்கி வெளியேறினார்.
அதன்பின் ஆட்டத்தில் சிறிதுநேரம் மழைக்குறுக்கிடவே சிறிதுநேரம் ஆட்டம் 20 நிமிடங்கள் நிறுத்தப்பட்டு மீண்டும் தொடங்கியது.
அடுத்துவந்த நிகோலஸ் பூரன் தொடக்கத்தில் பேட்டிங்கில் திணறினார் அதன்பின் இயல்புக்கு வந்தார். பாவுவின் 6வது ஓவரில் பூரன் 2 சிக்ஸர், ஒருபவுண்டரி விளாசினார். பூரன் தடுமாறிய அதேநேரத்தில் பிரன்டன் சிங் பவுண்டரிகளாக விளாசி ஸ்கோரை உயர்த்தினார். பவர்ப்ளேயில் மேற்கிந்தியத்தீவுகள் அணி ஒருவிக்கெட் இழப்புக்கு 52 ரன்கள் என வலுவாகவே இருந்தது.
ஆனால், கரிக்கோ வீசிய 9-வது ஓவரில் லாங்ஆன் திசையில் பூரன் அடித்தஷாட் கேட்சாக மாற 27 ரன்களில் வெளியேறினார். அதன்பின் கேப்டன் வாலா, சுழற்பந்துவீச்சாளர்களைப் பயன்படுத்தி, மேற்கிந்தியத்தீவுகள் பேட்டர்களை திணறவிட்டார். நிலைத்து பேட் செய்துவந்த கிங்கை 34 ரன்களி்ல் வாலா தனது சுழற்பந்துவீச்சால் ஆட்டமிழக்கச் செய்தார். மேற்கிந்தியத்தீவுகள் அணி 77 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. பவர்ப்ளேவுக்குபின், 13வது ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத்தீவுகள் அணி 25 ரன்கள் மட்டுமே சேர்த்திருந்தது.

பட மூலாதாரம், Getty Images
அடுத்துவந்த கேப்டன் பாவெல் 2 பவுண்டரிகள் அடித்தநிலையில் சாட் சாப்பர் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார். ரூதர்ஃபோர்டும் 2 ரன்களில் விக்கெட் கீப்பர் டோரிகாவிடம் கேட்ச் கொடுத்து வாலா பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். 97 ரன்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்து மேற்கிந்தியத்தீவுகள் அணி தோல்வியின் பிடியில் இருந்தது. 6-வது விக்கெட்டுக்கு ஆந்த்ரே ரஸல், ரஸ்டன் சேஸ் இருவரும் இணைந்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றனர்.
பெருமையும் வருத்தமும்
பிஎன்ஜி அணியின் கேப்டன் ஆசாத் வாலா கூறுகையில் “ என்னுடைய அணியின் முயற்சிகளை நினைத்து பெருமையாக இருக்கிறது, வெற்றியை நழுவ விட்டதை நினைத்து வருத்தமாக இருக்கிறது. இன்னும் 15 ரன்கள் சேர்த்திருந்தால் ஆட்டம் மாறியிருக்கும். நாங்கள் போராடியவிதம் எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கிறது. முக்கியமான கட்டங்களில் விக்கெட்டுகளை வீழ்த்தினோம், என் வீரர்களின் செயல்பாடு முழுநிறைவு அளிக்கிறது. நாங்கள் அடுத்த கட்டத்துக்கு செல்ல இது வாய்ப்பாகவும் சவால் நிறைந்ததாகவும் உள்ள. எங்களுடைய வீரர்கள் சிறந்த அணிக்கு எதிராக சிறப்பான பங்களிப்பை அளித்தனர்” எனத் தெரிவித்தார்.
வேகப்பந்துவீச்சாளர் மோரியா, சீசே பாவு ஆகியோர் மட்டும் சிறிது கட்டுக்கோப்புடன் பந்துவீசி ரன்களைக் கட்டுப்படுத்தி இருந்தால், ஆட்டம் நிச்சயமாக பிஎன்ஜி அணியின் பக்கம் சாய்ந்ருக்கும். சீசே பாவு ஓவரில் பூரன் அடித்த 18 ரன்கள்தான் கடைசி நேரத்தில் ஆட்டத்தை தீர்மானித்தது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












