தேர்தலில் முழு வெற்றி பெற்ற பிறகும் தி.மு.க. சந்திக்கப் போகும் சவால்கள் என்னென்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்
- பதவி, பிபிசி தமிழ்
நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளையும் வென்றிருக்கிறது தி.மு.க. தலைமையிலான கூட்டணி.
ஆனால், தேசிய அளவில் மீண்டும் பா.ஜ.க. தலைமையிலேயே ஆட்சி அமையவிருக்கும் நிலையில், தி.மு.கவுக்கும் தி.மு.க. அரசுக்கும் உள்ள சவால்கள் என்ன?
கடந்த 2021ஆம் ஆண்டில் தமிழ்நாட்டில் நடந்த சட்டமன்றத் தேர்தல்களுக்குப் பிறகு ஆட்சிக்கு வந்த தி.மு.க. மத்திய அரசிடமிருந்து, குறிப்பாக ஆளுநர் ஆர்.என். ரவி மூலமாகப் பல நெருக்கடிகளைச் சந்தித்தது.
தற்போது மத்தியில் கூட்டணி அரசு அமையும் சூழல் ஏற்பட்டிருக்கிறது. இது அரசுக்கு உள்ள நெருக்கடியைக் குறைக்குமா அல்லது அரசியல் ரீதியாக சவால்களை அதிகரிக்குமா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Getty Images
திமுகவுக்கு ஐந்தாவது தொடர் வெற்றி
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் போட்டியிட்ட 40 தொகுதிகளிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணி வெற்றி பெற்றிருக்கிறது. இதில் தி.மு.க. மட்டும் 22 தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்கிறது.
மு. கருணாநிதியின் மறைவுக்குப் பிறகு மு.க.ஸ்டாலின் தலைமையில் அந்தக் கட்சி தொடர்ச்சியாகப் பெறும் மூன்றாவது வெற்றி இது. உள்ளாட்சித் தேர்தல்களையும் கணக்கில் கொண்டால், ஐந்தாவது தொடர் வெற்றி இது.
கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில், தமிழ்நாட்டில் அனைத்துத் தொகுதிகளிலும் வெற்றி பெற்ற தி.மு.க. கூட்டணி, தேனி தொகுதியில் மட்டும் தோல்வியைத் தழுவியது. ஆனால், வாக்கு சதவீதத்தைப் பொறுத்தவரை, கடந்த முறை இந்தக் கூட்டணியின் வாக்கு சதவீதம் 53.29 சதவீதம் அளவுக்கு இருந்தது. இந்த முறை இந்த வாக்கு சதவீதம் சற்று குறைந்திருக்கிறது.
தி.மு.க. இப்படி தொடர் வெற்றிகளைப் பெற்ற போதிலும் மாநிலத்தில் இருந்த தி.மு.க. அரசு மத்திய அரசிடம் இருந்து பெரும் சவால்களையும் நெருக்கடிகளையும் எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

பட மூலாதாரம், Getty Images
ஆளுநர் உடனான சர்ச்சை
கடந்த 2021இல் தான் முதலமைச்சராகப் பதவியேற்றவுடனேயே பல்வேறு கோரிக்கைகளுடன் பிரதமர் நரேந்திர மோதியைச் சந்தித்து, அவற்றை நிறைவேற்ற வேண்டுமெனக் கோரினார் மு.க. ஸ்டாலின்.
வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறுவது, குடியுரிமைத் திருத்தச் சட்டத்தை நிறைவேற்றக்கூடாது. நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கையை அமல்படுத்தக்கூடாது, சேது சமுத்திரத் திட்டத்தை புதுப்பித்துச் செயல்படுத்துவது போன்ற கோரிக்கைகள் அதில் இடம்பெற்றிருந்தன. விவசாயிகள் போராட்டத்தால் வேளாண் சட்டம் ரத்து செய்யப்பட்டது என்பது தவிர, வேறு எதுவுமே நிறைவேற்றப்படவில்லை.
இதற்குப் பிறகு, தமிழ்நாடு ஆளுநராக இருந்த பன்வாரிலால் புரோஹித் மாற்றப்பட்டு புதிய ஆளுநராக ஆர்.என். ரவி நியமிக்கப்பட்டார். இதற்குப் பிறகு மாநில அரசுக்கான நெருக்கடிகள் பல்வேறு விதங்களில் அதிகரித்தன.
தமிழ்நாடு அரசு நிறைவேற்றி அனுப்பிய பல மசோதாக்கள் ஆளுநரால் நிறுத்தி வைக்கப்பட்டன. ராஜீவ் காந்தி கொலையில் தண்டிக்கப்பட்டவர்களை விடுதலை செய்ய மாநில அரசு முடிவு செய்தபோது, அந்த முடிவு ஆளுநரால் நிறுத்திவைக்கப்பட்டது.
துணைவேந்தர் நியமனங்களில் ஆளுநர் தரப்பு ஆட்சேபங்களை எழுப்பியதால், பல பல்கலைக்கழகங்களில் துணை வேந்தர்களை நியமனம் செய்வது தாமதமானது.

பட மூலாதாரம், TNDIPR
இடதுசாரிக் கட்சியின் மூத்த தலைவரும் சுதந்திரப் போராட்ட வீரருமான சங்கரய்யாவுக்கு டாக்டர் பட்டம் வழங்க மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முடிவெடுத்தபோது, அதில் கையெழுத்திட ஆளுநர் ஆர்.என். ரவி மறுத்தது சர்சையானது.
இதன் உச்சகட்டமாக, செந்தில் பாலாஜி அமைச்சராக இருக்கும் போது, ஒரு வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டவுடன், அவரைப் பதவிநீக்கம் செய்துவிட்டதாக ஆளுநர் அறிவித்தது மிகப்பெரிய அளவில் சர்ச்சையானது.
இதையெல்லாம் தாண்டி, சித்தாந்த ரீதியாக தி.மு.க. அரசுக்கு எதிரான நிலைப்பாடுகளைத் தொடர்ந்து முன்வைத்து வந்தார் ஆளுநர் ஆர்.என். ரவி.
இப்படி ஆளுநர் அளித்த நெருக்கடிகள் ஒருபுறமிருக்க, நிதி தொடர்பான விவகாரங்களில் மத்திய அரசு பாராமுகத்துடன் நடந்துகொள்வதாக தி.மு.க. அரசு தொடர்ந்து குற்றம் சாட்டியது. இயற்கைப் பேரிடர்கள் நிகழும்போது, மாநில அரசு கோரும் நிவாரணம் குறித்து மத்திய அரசு கண்டுகொள்வதில்லை என்ற கருத்தையும் தி.மு.க. அரசு தொடர்ந்து கூறி வருகிறது.
இதுதவிர, முக்கிய வாக்குறுதியாக நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு பெற்றுத் தருவதை சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. முக்கிய வாக்குறுதியாக முன்வைத்தது. மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாத காரணத்தால், இப்போதுவரை அதில் எந்த முன்னேற்றமும் இல்லை.

பட மூலாதாரம், Getty Images
தி.மு.கவுக்கான நெருக்கடி குறையுமா?
இந்த நாடாளுமன்றத் தேர்தலில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காத நிலையில், அடுத்ததாக அமையவிருக்கும் அரசு, பா.ஜ.க. தலைமையிலான கூட்டணி அரசாகவே இருக்கும் என்பது தெளிவாகியிருக்கிறது. அந்தச் சூழலில் தி.மு.கவுக்கான நெருக்கடி குறையுமா?
அடுத்ததாக வரும் அரசு கூட்டணி அரசாகவே இருக்கும் நிலையில், முந்தைய அளவுக்கு நெருக்கடி இருக்காது என எதிர்பார்க்கலாம் என்கிறார் மூத்த பத்திரிகையாளரான ஆழி செந்தில்நாதன்.
"பா.ஜ.க. தனிப் பெரும்பான்மை பெறாத நிலையில், ஒரு வழக்கமான அரசியல் பார்வையில் பார்த்தால், தமிழ்நாட்டில் மட்டுமல்ல இந்தியா முழுவதுமே மாநில அரசுகளுக்கு அளித்து வந்த குடைச்சல் குறையும் என்றுதான் எதிர்பார்க்க முடியும். ஒரு கூட்டணி அரசு இருக்கும்போது பழைய மாதிரியே மாநில அரசுகளை நடத்த முடியாது." என்கிறார்.
மேலும், "இந்துத்துவ செயல் திட்டத்தைப் புகுத்துவது, மாநிலங்களை ஒடுக்குவது போன்றவற்றில் பழைய மாதிரி செயல்பட முடியாது. மீண்டும் ஆட்சிக்கு வந்திருக்கும் சந்திரபாபு நாயுடு இதுபோன்ற சிக்கல்களையும், அதனால் ஏற்படும் விமர்சனங்களையும் தவிர்க்கவே விரும்புவார். பெரிய அளவில் மாநில அரசுகளுக்கு நெருக்கடி இருக்காது என்றே நம்பலாம்" என்கிறார் ஆழி செந்தில்நாதன்.
நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முந்தைய தினம், தி.மு.கவின் மறைந்த தலைவரும் முன்னாள் முதலமைச்சருமான மு. கருணாநிதியின் பிறந்தநாளின்போது, அவருடன் தான் எடுத்துக்கொண்ட புகைப்படத்துடன் அவரை நினைவுகூரும் பதிவு ஒன்றையும் வெளியிட்டார் பிரதமர் மோதி.
இந்தக் கட்டுரையில் X வழங்கிய தகவல்கள் இடம் பெற்றுள்ளன. குக்கி மற்றும் பிற தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படக்கூடும் என்பதால் எந்த ஒரு பதிவேற்றத்துக்கும் முன்னதாக உங்கள் அனுமதியைக் கோருகிறோம். அதை ஏற்றுக்கொள்வதற்கு முன்பாக, நீங்கள் X குக்கி கொள்கை மற்றும் தனியுரிமைக் கொள்கையை அறிந்துகொள்ள விரும்பலாம். இந்த தகவலைப் படிக்க, `ஏற்றுக்கொண்டு தொடரவும்' என்பதைத் தேர்வு செய்யவும்.
X பதிவின் முடிவு
'அரசியல் கூட்டாட்சி'
தேர்தல் முடிவுகள் வெளிவருவதற்கு முந்தைய நாள் வெளியிடப்பட்ட இந்தப் பதிவு அரசியல் வட்டாரங்களில் வெகுவாகக் கவனிக்கப்பட்டது.
பா.ஜ.கவுக்கு இடங்கள் சிறிதுதான் குறைந்திருக்கின்றன என்றாலும் நிலைமை வெகுவாக மாறியிருக்கிறது என்கிறார் மூத்த பத்திரிகையாளரான என். ராம். முன்பைப் போல் எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களின் அரசுகளை நெருக்கடிக்கு உள்ளாக்குவது நடக்காது என்கிறார் அவர்.
"இந்தியக் கட்டமைப்பில் அதிகாரம் தொடர்ந்து மத்திய அரசிடம் குவிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இம்மாதிரி கூட்டணி அரசு அமையும்போது, மாநிலங்களுக்குக் கூடுதல் அதிகாரம் கிடைக்கிறது. இந்தியாவில் அரசியல் சாசன ரீதியாக கூட்டாட்சி இல்லாத நிலையில், இதை அரசியல் கூட்டாட்சி என்று சொல்லலாம். இப்போது அது நடக்கும். "
பா.ஜ.க. நீண்ட காலமாக ஒரு நாடு, ஒரு தேர்தல் என்பதைப் பற்றிப் பேசி வருகிறது. சந்திரபாபு நாயுடு இப்போதுதான் முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறார். அவர் தனது பதவிக் காலத்தைக் குறைத்துக் கொண்டு, மற்ற மாநிலங்களுடன் இணைந்து தேர்தலைச் சந்திக்க ஒப்புக்கொள்வாரா? அதுபோன்ற விஷயங்களை இப்போது செய்ய முடியாது, என்கிறார் என். ராம்.

தொடர்ந்து பேசிய அவர், "தமிழ்நாட்டில் இருக்கும் ஆளுநரைப் போல இனி யாரும் நடந்துகொள்ள முடியுமா? அதையெல்லாம் செய்ய முடியாது. தே.ஜ.கூ.வுக்கு எண்கள் குறைந்திருப்பதைத் தான் பலர் பார்க்கிறார்கள். ஆனால், அந்த எண்கள் சொல்வதைவிட கூடுதல் தாக்கம் அரசில் இருக்கும். மாநில அரசுக்கு முந்தைய நெருக்கடி இருக்காது. தமிழக ஆளுநர்கூட மாற்றப்படலாம்" என்கிறார்.
தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, 2026ஆம் ஆண்டில் சட்டமன்றத் தேர்தல் நடக்கவிருக்கிறது. அப்போது பா.ஜ.க. மீண்டும் அ.தி.மு.கவுடன் கூட்டணிக்கு முயற்சி செய்யும்.
"அந்தக் கூட்டணி அமைய வாய்ப்பிருந்தால், தி.மு.க. அரசின் பெயரைக் கெடுக்கும் வகையிலான நெருக்கடியைக் கொடுக்க வாய்ப்பிருக்கிறது" என்கிறார் ஆழி செந்தில்நாதன்.
இந்த இரண்டு ஆண்டுகளில் தி.மு.க. சந்திக்கும் நெருக்கடியைவிட 2026 தேர்தலின்போது கூடுதல் நெருக்கடியை அக்கட்சி சந்திக்க வேண்டியிருக்கும் என்கிறார் செந்தில்நாதன்.
"அந்தத் தருணத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க. ஆகிய கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை எதிர்கொள்ளலாம். அதை எதிர்நோக்கி தி.மு.க. வேலை செய்ய வேண்டியதுதான் இப்போது அந்தக் கட்சி முன்பாக உள்ள சவால்," என்கிறார் அவர்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












