அதிமுக, பாஜக பிரிந்து நின்றதே திமுக கூட்டணி வெற்றி பெற காரணமா?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், சிராஜ்
- பதவி, பிபிசி தமிழ்
நடந்து முடிந்த 2024 மக்களவைத் தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் 40 இடங்களிலும் தோல்வியைத் தழுவியுள்ளது அதிமுக கூட்டணி மற்றும் பாஜக கூட்டணி.
கடந்த 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், அதிமுக தலைமையில், பாஜக, பாமக, தேமுதிக ஆகிய கட்சிகள் கூட்டணி அமைத்து களம் கண்டன. தமிழ்நாட்டில் 20 தொகுதிகளில் அதிமுகவும், 7 தொகுதிகளில் பாமகவும், 5 தொகுதிகளில் பாஜகவும், 4 தொகுதிகளில் தேமுதிகவும் போட்டியிட்டன. தேனி தொகுதியில் மட்டுமே இந்தக் கூட்டணியால் வெல்ல முடிந்தது. இருப்பினும் அனைத்து தொகுதிகளிலும் இந்தக் கூட்டணி இரண்டாம் இடத்தைப் பிடித்தது.
ஆனால், இந்த முறை தனித்தனியாக கூட்டணிகளை அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்த அதிமுக மற்றும் பாஜக கட்சிகளால், ஒரு இடத்தில் கூட வெல்லமுடியவில்லை. மேலும் தமிழ்நாட்டின் பிரதான கட்சியான அதிமுகவை சில தொகுதிகளில் பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளது பாஜக. அதுமட்டுமல்லாது 7 தொகுதிகளில் டெபாசிட் இழந்துள்ளது அதிமுக.
அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக தேர்தலைச் சந்தித்ததால் யாருக்கு பாதகம்? இத்தகைய மும்முனை போட்டியின் காரணமாக தான் திமுக கூட்டணி அனைத்து இடங்களிலும் வெற்றி பெற்றதா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், EPSTamilNadu/X
அதிமுக மற்றும் பாஜக பிரிந்ததால் தாக்கம் என்ன?
தருமபுரி தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக களம் கண்ட பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி 4,11,367 வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதே தொகுதியில் போட்டியிட்ட அதிமுக வேட்பாளர் ரா. அசோகன் 2,93,629 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டார்.
இங்கு பாமக மற்றும் அதிமுக பெற்ற மொத்த வாக்குகள் 7,04,996. இது, இங்கு போட்டியிட்டு வென்ற திமுக வேட்பாளர் மணி பெற்ற வாக்குகளை விட 2,72,329 வாக்குகள் அதிகம்.
கோயம்புத்தூர் தொகுதியில் போட்டியிட்ட தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை பெற்ற வாக்குகள் 4,50,132. மூன்றாம் இடம் பிடித்த அதிமுக வேட்பாளர் சிங்கை இராமச்சந்திரன் பெற்ற வாக்குகள் 2,36,490. இவர்கள் இருவரும் பெற்ற மொத்த வாக்குகள் 6,86,622, அதாவது முதலிடம் பிடித்த திமுக வேட்பாளர் கணபதி ராஜ்குமாரின் வாக்குகளை விட 1,18,422 வாக்குகள் அதிகம்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் போட்டியிட்ட சிதம்பரம் தொகுதியில் அவர் பெற்ற வாக்குகள் 5,05,084. ஆனால் இரண்டாம் இடத்தில் உள்ள அதிமுக வேட்பாளர் சந்திரஹாசனும், மூன்றாம் இடத்தில் உள்ள பாஜக வேட்பாளர் கார்த்தியாயினியும் பெற்ற மொத்த வாக்குகள் 5,70,023.
இதேபோல ஆரணி, விழுப்புரம், கடலூர், கிருஷ்ணகிரி, நாமக்கல், சேலம், தென்காசி, விருதுநகர் ஆகிய தொகுதிகளிலும் திமுக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற வாக்குகளை விட அதிமுக மற்றும் பாஜக கூட்டணி வேட்பாளர்கள் பெற்ற மொத்த வாக்குகள் அதிகம்.
அதிமுக மற்றும் பாஜக தனித்தனியாக கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலைச் சந்தித்ததால் தான், அவர்களால் ஒரு இடத்தை கூட பிடிக்க முடியவில்லையா? இது தான் திமுக கூட்டணிக்கு சாதகமாக அமைந்துவிட்டதா? போன்ற கேள்விகள் இங்கே எழுவதை தவிர்க்க முடியாது.
எனினும் பல தொகுதிகளில் அதிமுக மற்றும் பாஜக கூட்டணி கட்சிகள் இணைந்து பெற்ற வாக்குகளை விட திமுக கூட்டணி அதிக வாக்குகளை பெற்றிருந்தது.
வட சென்னை, மத்திய சென்னை, திண்டுக்கல், ஈரோடு, கன்னியாகுமரி, பெரம்பலூர், திருபெரும்புதூர், தூத்துக்குடி, திருச்சி, திருவள்ளூர், வேலூர், தேனி உள்ளிட்ட தொகுதிகளில் வெற்றி பெற்ற திமுக கூட்டணி வேட்பாளர்கள் 50 சதவிகிதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றிருந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
அதிமுகவின் வாக்கு வங்கி
இந்த மக்களவைத் தேர்தலில் ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை என்பதோடு மட்டுமல்லாது, தென்சென்னை, கன்னியாகுமரி, தேனி, தூத்துக்குடி, திருநெல்வேலி, வேலூர், புதுச்சேரி ஆகிய 7 தொகுதிகளில் டெபாசிட்டை இழந்துள்ளது அதிமுக.
நேற்று (5.06.2024) மாலை செய்தியாளர்களைச் சந்தித்த பாஜக தலைவர் அண்ணாமலை, “அதிமுக கோட்டையான கோவையில் சாதனை படைத்துள்ளோம், அங்கு அதிமுக நூலிழையில் டெபாசிட்டை காப்பாற்றியிருக்கிறார்கள்,” என்று கூறினார்.
அதிமுகவின் இந்த சரிவுக்கு, பாஜக தனியாக கூட்டணி அமைத்து மக்களவைத் தேர்தலில் போட்டியிட்டது தான் காரணமா என அதிமுக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணைச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமாரிடம் கேட்டோம்.
“தமிழ்நாட்டில் எப்போதுமே மும்முனைப் போட்டி இருந்துள்ளது. வைகோ மதிமுக-வை தொடங்கியபோது அல்லது தேமுதிக உருவானபோது அல்லது மக்கள் நலக் கூட்டணி உருவானபோது என சொல்லிக்கொண்டே போகலாம். ஆனால் போட்டி என்பது எப்போதும் திமுக- அதிமுக இடையே தான்,” என்று கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “2014இல் கோவையில் பாஜக போட்டியிட்டபோது, அவர்கள் வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன் பெற்ற வாக்கு சதவீதத்தை விட அண்ணாமலை குறைவாகவே பெற்றுள்ளார் . எனவே தனது சொந்த தொகுதியில் பாஜகவின் வாக்கு வங்கியை அதிகரிக்க முடியாத அண்ணாமலை, எங்கள் வேட்பாளரின் டெபாசிட்டை பற்றிப் பேசுவது வேடிக்கையாக உள்ளது” என்றார்.
2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தேமுதிக, பாமக, மதிமுக ஆகிய கட்சிகளை உள்ளடக்கிய கூட்டணியை அமைத்து போட்டியிட்டது பாஜக.
கோவையில் போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சி.பி.ராதாகிருஷ்ணன், 3,89,701 வாக்குகளைப் பெற்றார். ஆனால் 2024 தேர்தலில் அங்கு போட்டியிட்ட அண்ணாமலை மொத்தம் 4,50,132 வாக்குகளைப் பெற்றுள்ளார்.
வாக்குகள் எண்ணிக்கை கூடியிருந்தாலும் கூட, கடந்த 10 ஆண்டுகளில் கோவை தொகுதியில் அதிகரித்த வாக்காளர் எண்ணிக்கை, பதிவான வாக்குகள் ஆகியவற்றின் அடிப்படையில் பார்த்தால், மொத்தம் பதிவான வாக்குகளில் 32.79 சதவீத வாக்குகளைப் பெற்றுள்ளார் அண்ணாமலை. ஆனால், 2014-இல் கோவை தொகுதியில் மொத்தம் பதிவான வாக்குகளில் 33.6 சதவீத வாக்குகளைப் பெற்றிருந்தார் சி.பி.ராதாகிருஷ்ணன்.

பட மூலாதாரம், narayanantbjp/X
‘தமிழ்நாட்டில் மூன்றாவது பிரதான கட்சி பாஜக’
பாஜக மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதியிடம் இது குறித்து கேட்ட போது, “நாங்கள் 11 இடங்களில் இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளோம். பாஜகவால் தான் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்பட்டது அல்லது சில இடங்களில் டெபாசிட்டையே இழந்தது, அது உண்மை தானே. தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் மூன்றாம் இடத்திற்கு பாஜக வந்துவிட்டது என்று தானே அண்ணாமலை கூறினார். இதில் என்ன தவறு” என கேள்வி எழுப்புகிறார்.
மேலும், “அதிமுகவை பிரிந்ததால் தான், தமிழ்நாட்டில் எங்கள் கட்சியின் பலம் என்னவென்று எங்களுக்கு தெரிந்தது. எனவே இந்த தேர்தல் எங்களுக்கு ஒரு நல்ல அனுபவம் தான். இதை நாங்கள் தோல்வியாக கருதவில்லை. உங்கள் கட்சி நோட்டாவுக்கு கீழே என்று கேலி செய்தவர்கள் வாயை அடைத்துள்ளோம். இது அதிமுகவை விட்டு பிரிந்ததால் தான் நடந்துள்ளது,” என்று கூறுகிறார் நாராயணன் திருப்பதி.

ஆனால் பாஜகவின் தனிப்பட்ட பலத்தை நிரூபிக்கிறேன் என்ற பெயரில் அதிமுகவை விட்டுப் பிரிந்தது இரு கட்சிகளுக்குமே பாதகமாக அமைந்துவிட்டது என்று கூறுகிறார் மூத்த பத்திரிக்கையாளர் பிரியன்.
“திமுக எதிர்ப்பு வாக்குகளை அவர்கள் பிரித்துவிட்டார்கள் என்று தான் சொல்ல வேண்டும். ஒருவேளை 2019 மக்களவைத் தேர்தல் போல அதிமுக கூட்டணி அமைத்திருந்தால் நிலைமை மாறியிருக்கும். குறைந்தபட்சம் தருமபுரி, விருதுநகர் தொகுதிகளாவது இருகட்சிகளுக்கும் கிடைத்திருக்கும்” என்று கூறுகிறார் பிரியன்.
விருதுநகர் தொகுதியில் அதிமுக கூட்டணி சார்பாக போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜய பிரபாகரன், வெறும் 4379 வித்தியாசத்தில் காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரிடம் தோல்வி அடைந்தார். பாஜக வேட்பாளர் ராதிகா சரத்குமார் 1,66,271 வாக்குகள் பெற்று மூன்றாம் இடத்தைப் பிடித்தார்.

பட மூலாதாரம், Getty Images
'பாஜகவை பிரிந்ததால் கிடைத்த சிறுபான்மையினர் ஆதரவு'
தொடர்ந்து பேசிய மூத்த பத்திரிக்கையாளர் பிரியன், “கண்டிப்பாக பாஜக- அதிமுக பிரிவது திமுகவுக்கு சாதகமாக இருக்கும் என்றும், இதனால் இரு கட்சிகளின் வெற்றி வாய்ப்பும், மக்கள் ஆதரவும் பாதிக்கப்படும் என்றும் நான் இந்த தேர்தலுக்கு முன்பே கூறியிருந்தேன். அது தான் நடந்திருக்கிறது," என்றார்.
"பாஜகவின் வாக்கு சதவீதம் உயர்ந்துவிட்டது என அண்ணாமலை கூறுகிறார். ஆனால் 2019இல் 5 தொகுதிகளில் போட்டியிட்டார்கள், இப்போது 23 தொகுதிகள் என்றால் வாக்கு சதவீதம் உயரத் தான் செய்யும். எனவே அதிமுகவை பிரிந்து வந்ததால் பாஜகவுக்கும் எந்த பலனும் இல்லை. அதிமுகவின் இந்த தோல்வி 2026 சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும், அவர்கள் மேலும் பலவீனமடைவார்கள்” என்கிறார்.
ஆனால் இதை மறுக்கும் அதிமுக-வின் தகவல் தொழில்நுட்ப பிரிவின் துணைச் செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல் குமார், பாஜக தங்களை விட்டுச் சென்றதால் மக்களின் ஆதரவு பெருகியுள்ளது என்று கூறுகிறார்.
“உண்மையைச் சொன்னால், பாஜகவில் இருந்து பிரிந்து வந்ததால் தான் பல இடங்களில் சிறுபான்மையினர் ஆதரவு எங்களுக்கு கிடைத்தது. டெபாசிட் இழப்பது என்பது திமுக-வுக்கோ அல்லது அதிமுக-வுக்கோ புதிதல்ல. நாங்கள் முழு பலத்துடன் மீண்டு வருவோம்.
அதிமுகவின் மொத்த வாக்கு சதவீதம் குறைந்தது உண்மை தான், அது குறித்து ஆலோசனை நடத்தி, தீர்வுகளை நோக்கி நகர்வோம். மற்றபடி பாஜக கூட்டணியில் இல்லாததால் நிச்சயமாக எங்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை,” என்று கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












