நரேந்திர மோதி: மூன்றாவது ஆட்சியில் இந்தியாவை வல்லரசாக மாற்றுவாரா? - காத்திருக்கும் சவால்கள்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஜுபைர் அகமது
- பதவி, பிபிசி செய்திகளுக்காக
நரேந்திர மோதியும் அவரது ஆளும் பாரதிய ஜனதா கட்சியும் இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை எதிர்பார்த்தனர். இருப்பினும், `மோதி’ என்னும் பிராண்ட் எதிர்பார்த்த அளவுக்குப் பெரியளவில் வெற்றி பெறவில்லை என தேர்தல் முடிவுகள் தெரிவிக்கின்றன.
அப்படியானால், குறைவான வாக்கு சதவீதத்துடன் மோதி வெற்றி பெற்றிருப்பது உலக அரங்கில் ஏற்படுத்தப் போகும் தாக்கம் என்ன? மேலும் இனி வரும் காலங்களில், மோதி, கூட்டணிக் கட்சிகளின் பேச்சைக் கேட்க வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்.
பிரிட்டனை தளமாகக் கொண்ட பொதுக் கொள்கை சிந்தனைக் குழுவான சாத்தம் ஹவுஸில் (Chatham House) தெற்காசியாவிற்கான மூத்த ஆராய்ச்சியாளர் டாக்டர் சிட்டிஜ் பாஜ்பே கூறுகையில், "வெளியுறவுக் கொள்கையில், அவர் வலுவான கொள்கைகளுடன் வந்தாலும் பலவீனமான கொள்கைகளைக் கொண்டிருந்தாலும், வழக்கம் போல் இந்தியாவை மிகவும் கவர்ச்சிகரமான முதலீட்டு இடமாக மாற்றுவதற்கான தனது முக்கிய முன்னுரிமைகளை அவர் தொடர்ந்து பின்பற்றுவார்" என்றார்.
பாஜகவின் தேர்தல் வாக்குறுதி இந்தியாவை உலகளாவிய உற்பத்தி மையமாக மாற்றுவதைக் குறிப்பிடுகிறது, மேலும் மோதியின் அடுத்த ஐந்தாண்டுகள் அந்த இலக்கை அடைய ஒரு பெரிய முன்னெடுப்பைக் காணும் என்று பாஜ்பே கருதுகிறார்.
அதேநேரம், பாஜகவின் வெற்றி, மேற்கத்திய உலக அரங்கில் நம்பிக்கை மற்றும் எச்சரிக்கை ஆகிய இரண்டு உணர்வுகளின் கலவையைக் கொண்டு வருகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Indian Press Information Bureau / EPA
இந்துத்வா சித்தாந்தம்
மோதியின் வெளியுறவுக் கொள்கைகள் மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும் என்றும், இந்து மதத்தின் வலதுசாரி வடிவத்தை ஊக்குவிக்கும் சித்தாந்தத்தைச் சுற்றியே இருக்கும் என்றும் சிலர் நம்புகின்றனர்.
சர்வதேச அமைதிக்கான கார்னகி எண்டோமென்ட் அமைப்பின் தெற்காசிய நிகழ்வின் (Carnegie Endowment ) மூத்த உறுப்பினரும் இயக்குநருமான மிலன் வைஷ்ணவ் இந்தக் கருத்தை ஏற்கவில்லை.
"தேசிய ஜனநாயகக் கூட்டணியின் மூன்றாவது ஆட்சிக் காலத்தில் வெளியுறவுக் கொள்கையின் போக்கு கணிசமாக மாறக்கூடும் என்ற கருத்தை நான் ஏற்கவில்லை. ஏனெனில், நாம் காணும் புவிசார் அரசியல் மாற்றங்கள் இயல்பானவை. அதோடு, இந்தியா அதன் அதிகாரத்தை மறுபரிசீலனை செய்வதற்கான இடத்தையும் இது வழங்கும்.”
"வீழ்ச்சியடைந்து வரும் அமெரிக்கா, விரிவாக்கம் பெறும் சீனா, மற்றும் மறுமலர்ச்சி பெறும் ரஷ்யா (இழந்த நிலப்பரப்பை மீட்டெடுக்கும் கொள்கை) ஆகியவை கூட்டாக உலக அரங்கில் இந்தியாவின் மையத்தன்மையை உயர்த்துகிறது," என்று விளக்குகிறார்.
ஜனநாயகம் பற்றிய கவலைகள்

பட மூலாதாரம், Reuters
புவிசார் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்திய ஒரு முக்கிய நபராக விளங்கும் மோதியின் தலைமையில், இந்தியா எழுச்சியடைந்தது மறுக்க முடியாதது.
ஆய்வாளர்கள் கூற்றுபடி: சீனாவிற்கு எதிராக அமெரிக்காவுடனான அதன் கூட்டாண்மையும், பாதுகாப்பு அரணாகச் செயல்படுவதும் மோதி பதவியில் இருக்கும் அடுத்த ஐந்தாண்டுகளில் வலுப்பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
எவ்வாறாயினும், அதன் வளர்ச்சி ஜனநாயகத்தை பாதிக்கும் செயல்பாடுகள் பற்றிய கவலைகளால் மறைக்கப்பட்டுள்ளது.
இந்திய ஜனநாயகம் பாதிப்புக்கு உள்ளானது என்ற குற்றச்சாட்டுகள் இருந்தபோதிலும், உலக அரங்கில் நாட்டின் ஜனநாயக நற்சான்றிதழ்களைப் பற்றிக் குறிப்பிடாமல் தனது உலகளாவிய லட்சியங்களை அடைய முடியாது என்பதை மோதி அறிவார் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
உதாரணமாக ஓராண்டுக்கு முன்பு, நரேந்திர மோதியின் வரலாற்றுச் சிறப்புமிக்க அமெரிக்க பயணத்துக்கு முன்னதாக, அமெரிக்காவின் 70க்கும் மேற்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள் ஜோ பைடனுக்கு கடிதம் எழுதியுள்ளனர்.
ஜனநாயகத்தின் பின்னடைவு மற்றும் இந்தியாவில் பத்திரிகை சுதந்திரம் பறிக்கப்பட்டது தொடர்பான குற்றச்சாட்டுகள் குறித்து இந்திய பிரதமரிடம் கேள்வி எழுப்புமாறு அமெரிக்க அதிபரிடம் அவர்கள் வலியுறுத்தினர்.

பட மூலாதாரம், Reuters
இந்தப் பிரச்னைகள் குறித்து அதிபர் பைடன் பிரதமர் மோதியிடம் தனிப்பட்ட முறையில் தெரிவித்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆனால், பொதுவெளியில் மோதிக்கு பிரமாண்ட வரவேற்பு கிடைத்தது.
மிக முக்கியமாக, அந்தப் பயணத்தின்போது மோதி பெருமையுடன் இந்தியாவின் ஜனநாயகத்தை பற்றிப் பேசினார், இந்தியாவை "ஜனநாயகத்தின் தாயகம்" என்றுகூடக் குறிப்பிட்டார்.
இந்தியாவின் ஜனநாயக பிம்பம் அதன் உலகளாவிய காட்சிக்கு முக்கியமானது என்று மிலன் வைஷ்ணவ் நம்புகிறார்.
"இந்தியாவில் தாராளவாதம் குறைந்துவிட்டாலும், தேர்தல் நடவடிக்கைகளில் ஜனநாயகம் வலுவானதாகவே உள்ளது. இதை இந்தத் தேர்தல் தெளிவுபடுத்தி உள்ளது.
தேர்தலின் போட்டித்தன்மை, கட்சிகளுக்கு இடையில் இந்திய தலைமையை அடையும் செயல்பாடுகளுக்கு அனுமதிக்கின்றன. கட்சி பலவீனமடைந்திருந்தாலும், அடிப்படை சுதந்திரங்களின் பாதுகாப்பு குறைந்தாலும், அரசின் கட்டாயப்படுத்தும் சக்தி வளர்ந்திருந்தாலும், தேர்தல் நடவடிக்கைகளில் அவை தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.
தேர்தல் ஜனநாயகத்தின் அடிப்படை விதிகளைக் கடைபிடிப்பது பாஜகவின் நலன்களுக்கு வழிவகுக்கும்," என்று மிலன் வைஷ்ணவ் கூறுகிறார்.

பட மூலாதாரம், Reuters
எனவே கேள்வி என்னவென்றால், இந்தியாவில் சமீபத்திய வெற்றி, இந்திய ஜனநாயகத்தின் வெற்றியைக் குறிக்கிறதா, அல்லது அது நீண்ட கால சவால்களுக்கு வழிவகுக்குமா?
இந்தத் தேர்தலில் `சமத்துவமற்றக் களம்’ என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகள் மேற்குலகில் கவனிக்கப்படாமல் இல்லை.
இரண்டு எதிர்க்கட்சி முதல்வர்களின் கைது, எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகள் முடக்கம், பாஜகவுக்குச் சாதகமாக இருந்த தேர்தல் பத்திரங்கள் ஆகிய சம்பவங்கள் சமத்துவமற்ற தேர்தல் களத்தைப் பிரதிபலிக்கின்றன.
மேலும், மோதி தனது பிரசாரத்தின்போது இஸ்லாமிய வெறுப்பு கருத்துகளைப் பயன்படுத்தியதாகக் குற்றம் சாட்டப்பட்டதைத் தொடர்ந்து கடுமையான விமர்சனங்களை எதிர்கொண்டார். வைஷ்ணவ், ஒரு சமமற்ற தேர்தல் களம் இருந்தபோதிலும், எதிர்க்கட்சி சிறப்பாகச் செயல்பட்டது என்று நம்புகிறார்.
தேர்தல் நிதி, புலனாய்வு அமைப்புகளைப் பயன்படுத்தியது, ஊடகச் செல்வாக்கு, ஒப்பீட்டளவில் கடுமை காட்டாத தேர்தல் ஆணையம் போன்று பல்வேறு நடவடிக்கைகள் இந்தத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு எதிராக இருந்தது என்பதில் சந்தேகமில்லை.
"அந்த சவால்கள் இருந்தபோதிலும், எதிர்க்கட்சி அனைவரின் எதிர்பார்ப்புகளையும் விஞ்சியது," என்கிறார் வைஷ்ணவ்.
தேர்தல் ஆணையத்தின் நடுநிலைமை என்னவானது?

பட மூலாதாரம், EPA
அதிகாரப்பூர்வ தேர்தல் அமைப்பு நடுநிலைமையைப் பின்பற்றவில்லை என்ற குற்றச்சாட்டுகளை மோதி நிராகரித்தார்.
இந்தியா டுடே என்ற டிவி சேனலுக்கு பேட்டியளித்த அவர், உண்மையில் பாஜக ஆட்சியில்தான் தேர்தல் ஆணையம் சுதந்திரமாகச் செயல்பட்டது என்றார்.
மேலும் ஏஎன்ஐ செய்தி முகமைக்கு அவர் அளித்த பேட்டியில், “தேர்தல் ஆணையம் தொடர்பான சட்டங்கள் எதுவும் எனது அரசால் உருவாக்கப்படவில்லை” என்றார்.
வாக்குப்பதிவு தொடங்குவதற்கு ஒரு நாள் முன்பு, எதிர்க்கட்சிகளின் கட்சி பிரதிநிதிகள் முன்வைத்த அனைத்து கோரிக்கைகளையும் ஏற்றுக்கொண்டதாக தேர்தல் ஆணையம் கூறியது.

பட மூலாதாரம், Reuters
பாஜ்பேவும் தேர்தல் நேரத்தில் சர்ச்சைகள் ஏற்பட்டதை ஒப்புக்கொள்கிறார்.
"நிச்சயமாக, தேர்தல் நடவடிக்கைகளின் போது சர்ச்சைகள் இல்லாமல் இல்லை. ஆனால் நாம் இங்கு கவனிக்க வேண்டியது என்னவென்றால், இந்தியா முழுமையான ஜனநாயக நாடு அல்ல. ஆயினும்கூட, அது ஜனநாயகமாகவே திகழ்கிறது. நடைமுறை அளவில், இந்திய ஜனநாயகம் பெரும்பாலும் அப்படியே உள்ளது" என்கிறார் பாஜ்பே.
இருப்பினும், மோதியின் மூன்றாவது ஐந்தாண்டு பதவிக்காலத்தில் இந்தியாவில் ஜனநாயக விழுமியங்கள் சிதைக்கப்படும் என்ற அச்சம் குறித்து மேற்கத்திய நாடுகளில் உள்ள அரசியல் ஆய்வாளர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
சீனாவிடமிருந்து வரும் சவால்கள்

பட மூலாதாரம், Reuters
அமெரிக்காவும் மற்ற மேற்கத்திய அரசுகளும் மோதியின் கடந்த 10 ஆண்டுக்கால ஆட்சியின்போது, ஜனநாயகம் பலவீனமடைவதாகக் கூறப்படுவதைக் கண்டுகொள்ளாமல், மோதியை விமர்சிப்பதை அவர்களின் ஜனநாயக அமைப்புகளிடம் விட்டுவிட்டனர். இம்முறையும் இந்தச் செயல்பாடு தொடரும்.
"அமெரிக்கா போன்ற நாடுகள் ஜனநாயகம் பற்றிய கவலைகளைக் கொண்டிருந்தாலும், இந்தோ-பசிபிக் மற்றும் சீனாவை எதிர்க்கும் முக்கிய நலன்களில் இந்தியாவின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளன" என்கிறார் பாஜ்பே.
``மோதி அரசாங்கம் பலவீனமாகி இருப்பது மேற்கு நாடுகளுக்கு அதிக பலனைத் தரக்கூடும். அதேநேரம் இந்தியாவுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் ராஜதந்திர ஒத்துழைப்பு புதிய உயரங்களை எட்டும் நிலையில், மேற்கத்திய நாடுகளுக்கு இந்தியாவுக்கு சிக்கல் கொடுப்பதில் சிறிதும் விருப்பம் இல்லை" என்று கல்வியாளர் வைஷ்ணவ் கூறுகிறார்.
அமெரிக்காவின் ஜான் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகத்தின் பொருளாதாரப் பேராசிரியரும், முன்னாள் அதிபர் ரொனால்ட் ரீகனின் பொருளாதார ஆலோசகர்கள் கவுன்சிலின் முன்னாள் உறுப்பினருமான ஸ்டீவ் ஹான்கே இந்த விஷயத்தை விரிவாக விளக்குகிறார்.
"'உலகின் மிகப்பெரிய ஜனநாயகம் இந்தியா' என்ற ஒரு முழக்கத்தை வைத்து இந்தியா உலகையே விற்றுவிட்டது. ஜனநாயகத்தின் பின்னடைவு சம்பவங்கள் நிகழ்ந்த போதிலும் அவர்களின் முழக்கம் ஒலித்துக் கொண்டிருந்தது."
"சர்வதேச அளவில் இதுபோன்ற முழக்கங்கள் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. எனவே, இப்போதைக்கு இந்திய ஜனநாயகத்தின் நிலை குறித்து சர்வதேச அளவில் எந்தப் பிரச்னையும் ஏற்படப் போவதில்லை" என்றார்.
பெரும் அதிகாரம், செல்வத்துடன் வருகிறது

பட மூலாதாரம், Reuters
இந்திய ஜனநாயகத்தைப் பற்றி உலகம் அக்கறை கொண்டிருக்கும் அதே சமயத்தில், மோதியின் கீழ் ஒரு பொருளாதார சக்தியாகவும், முக்கியமான புவிசார் அரசியல் நாடாகவும் இந்தியா உருவெடுத்திருப்பதை சர்வதேச அரங்கு ரசிக்கிறது. இந்தியாவில் ஏற்பட்ட மாபெரும் முன்னேற்றங்கள் சர்வதேச அளவில் நன்மதிப்பைப் பெற்றுத் தந்தது.
கடந்த 2014ஆம் ஆண்டு மோதி முதல்முறையாக ஆட்சிக்கு வந்தபோது இந்தியா உலகின் 10வது பெரிய பொருளாதாரமாக இருந்தது. இப்போது அது ஐந்தாவது இடத்துக்கு முன்னேறிவிட்டது. இன்னும் சில ஆண்டுகளில், ஜெர்மனியையும் ஜப்பானையும் பின்னுக்குத் தள்ளி அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பொருளாதாரமாக மாறும்.
வளர்ச்சி மற்றும் எப்போதும் விரிவடையும் சந்தை உள்ளிட்ட காரணிகளால் இந்தியா மீது உலகளாவிய முதலீட்டாளர்களின் ஆர்வத்தைத் தூண்டும்.
இந்தியா பொருளாதாரத்தில் வெற்றி பெற்றாலும், அது சீனாவின் அளவில் 20% ஆகத்தான் உள்ளது. இருப்பினும் பொருளாதார தேக்கநிலையுடன் சீனா போராடி வருவதால், இந்தியாவின் பொருளாதாரம் வேகமெடுக்கும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
இந்தியாவின் 1.4 பில்லியன் மக்கள்தொகை, அதை ஒரு பெரிய உள்நாட்டு சந்தையாகவும், 7%க்கும் அதிகமான வளர்ச்சி விகிதத்தையும், இளைஞர்கள் நிறைந்த தொழில் சூழலையும் மாற்றுகிறது. இது, எதிர்காலத்தில் ஒரு பெரிய சக்தியாக மாறுவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்கிறது.

பட மூலாதாரம், Getty Images
'வளர்ந்து வரும் சக்தி'
அமெரிக்க அரசியல் ஆய்வாளர் ஜான் மியர்ஷெய்மர் சமீபத்தில், ``இந்தியா வளர்ந்து வரும் பெரிய சக்தியாக உள்ளது, ஆனால் இன்னமும் பெரிய சக்தியாக உருவெடுக்கவில்லை” என்று கூறினார்.
மோதி இந்தியாவை பெரிய வல்லரசாக மாற்றுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images
ஐ.நா பாதுகாப்பு கவுன்சிலில் இந்தியா நிரந்தர இடம் பெற முடியுமா?
சாத்தம் ஹவுஸின் சிட்டிஜ் பாஜ்பே இந்தியாவுக்கு ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் சாத்தியமாகுமா என்று சந்தேகிக்கிறார்.
"அதற்கு முக்கியத் தடையாக இருப்பது சீனாதான். அது இன்னும் இந்தியாவை எதிர்க்கிறது. இதற்கு ஐந்து நிரந்தர உறுப்பினர்களும் உடன்பட வேண்டும். இந்தியாவுக்கு சாதகமாக நான்கு உறுப்பினர்கள் உள்ளனர், ஆனால் சீனா மட்டும் அதை எதிர்க்கிறது."
யுக்ரேனுக்கு எதிரான ரஷ்ய ஆக்கிரமிப்புக்கு இந்தியா பக்கபலமாக இருக்கும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளது. ஆனாலும் இந்தியா தனது மூலோபாய நடுநிலையைக் கடைபிடித்து வருகிறது.
ஸ்டீவ் ஹான்கே கூறுகையில், “வெளிநாட்டு விவகாரங்கள் என்று வரும்போது, பிரதமர் மோதிக்கு சுப்பிரமணியம் ஜெய்சங்கர் சிறந்த வெளியுறவுத்துறை அமைச்சராக இருக்கிறார்.
மேலும் மோதி- ஜெய்சங்கர் ஜோடி திறமையாக சூழல்களைக் கையாள்கிறார்கள்," என்றார்.
ரஷ்யா மற்றும் யுக்ரேன் பிரச்னை

பட மூலாதாரம், Reuters
ரஷ்யா மற்றும் யுக்ரேன் பிரச்னையில் இந்தியாவின் நிலைப்பாடு மற்றும் யுக்ரேன் மீது படையெடுத்ததற்காக அதிபர் புதினை வெளிப்படையாகக் கண்டிக்க மறுத்தது ஆகியவை மேற்குலகில் தாக்கத்தை ஏற்படுத்தியது.
எந்தக் காலத்திலும் மோதி இந்தியாவின் பழைய நண்பரான புதினை தூக்கி எறிவார் என்பதற்கான அறிகுறிகள் தென்படவில்லை.
உலகத்தின் மீதான இந்தியாவின் கண்ணோட்டம் அதன் பண்டைய தத்துவமான விஸ்வாமித்ரா (அனைவருக்கும் நண்பர்கள்) மற்றும் விஸ்வகுரு (அனைவருக்கும் ஆசிரியர்) ஆகியவற்றின் அடிப்படையிலானது.
பாஜ்பே `இந்தியாவை மேற்கத்திய நாடுகள் போல் அல்ல, ஆனால் மேற்கு நாடுகளுக்கு எதிரானதும் அல்ல’ என்று விவரிக்கிறார்.
இந்தியா உலகளாவிய செல்வாக்கை நோக்கி முன்னேறும்போது, மோதியின் ஆட்சியில் தேசத்தின் வளர்ச்சி மூலோபாயமாகவும் நிலையானதாகவும் இருப்பதை உறுதிசெய்ய வேண்டும். அதேநேரம் மிகவும் சமநிலையான மற்றும் பிரிவினை இல்லாத உலக ஒழுங்கிற்குப் பங்களிக்க வேண்டும் என்ற கட்டாயத்துக்கு மோதி தள்ளப்படுவார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












