'விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது' - பிரேமலதா குற்றச்சாட்டின் முழு பின்னணி

'விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது' - பிரேமலதா குற்றச்சாட்டின் முழு பின்னணி

பட மூலாதாரம், Facebook

தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் விருதுநகர் நாடாளுமன்றத் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என்று கோரியுள்ளார்.

ஜூன் 4ஆம் தேதி நடைபெற்ற வாக்கு எண்ணிக்கையின் போது, மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரன், காங்கிரஸ் கட்சியின் இரு முறை நாடாளுமன்ற வேட்பாளரான மாணிக்கம் தாக்கூருக்கு கடுமையான போட்டியாக இறுதி வரை இருந்தார்.

நள்ளிரவு வரை நடந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் விஜயபிரபாகரன் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையில் பல்வேறு முறைகேடுகள் நடந்திருப்பதாகக் குற்றம் சாட்டும் பிரேமலதா விஜயகாந்த், அந்தத் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என்று தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டிருப்பதாகத் தெரிவித்தார்.

தேமுதிகவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள மாணிக்கம் தாக்கூர், குற்றச்சாட்டு இருந்தால் வாக்கு எண்ணிக்கை நடத்தும் போதே கூறியிருக்க வேண்டியது தானே என்று கூறியுள்ளார்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

நாடாளுமன்றத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை தொடங்கியபோது தமிழ்நாட்டில் உள்ள 39 தொகுதிகளில் இரண்டு தொகுதிகளில் திமுக அல்லாத வேட்பாளர்கள் முன்னிலையில் இருந்தனர்.

தருமபுரியில் பாமக வேட்பாளர் சௌமியா அன்புமணி வாக்கு எண்ணிக்கை தொடங்கிய நேரத்தில் முன்னிலையில் இருந்தார். ஆனால் இறுதியில் சுமார் 20,000 வாக்கு வித்தியாசத்தில் தோற்றார்.

விருதுநகரில், கடைசி நேரம் வரை காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூருக்கும் அதிமுக கூட்டணியில் இருக்கும் தேமுதிகவின் வேட்பாளர் விஜயபிரபாகரனுக்கும் இழுபறி நீடித்துக்கொண்டே இருந்தது.

இருமுறை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த மூத்த அரசியல்வாதியான மாணிக்கம் தாக்கூரை முதல்முறையாக தேர்தல் களத்தில் இறங்கியுள்ள இளைஞர் சவாலாக இருந்தது பலரது கவனத்தையும் விருதுநகர் ஈர்த்தது.

இறுதியில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் மாணிக்கம் தாக்கூர் 3,85,256 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.

இரண்டாவது இடத்தில் இருந்த மறைந்த தேமுதிக தலைவர் விஜயகாந்தின் மகனான விஜயபிரபாகரன் 3,80,877 வாக்குகள் பெற்று, 4,379 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றதாகவும் அறிவிக்கப்பட்டது.

மூன்றாவது இடத்தில் பாஜக வேட்பாளராக ராதிகா 1,66,271 வாக்குகள் பெற்றிருந்தார். விருதுநகரில் மொத்தம் 10.54 லட்சம் வாக்குகள் பதிவாகியிருந்தன.

'விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது' - பிரேமலதா குற்றச்சாட்டின் முழு பின்னணி

பட மூலாதாரம், Facebook

தேமுதிகத் தலைவர் விஜயகாந்த் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் மறைந்த பிறகு தேமுதிக எதிர்கொள்ளும் முதல் தேர்தல் இது. அரசியலுக்கு புதுமுகமான விஜயபிரபாகரன், தனது தந்தையின் மறைவுக்குப் பிறகு, அவரது சொந்த ஊரான விருதுநகரில் போட்டியிட்டார்.

மாணிக்கம் தாக்கூர், 2009ஆம் ஆண்டிலும் 2019ஆம் ஆண்டிலும் விருதுநகர் தொகுதியிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது மூன்றாக முறையாக நாடாளுமன்றத்தில் விருதுநகர் பிரதிநியாக நுழையப் போகிறார்.

விருதுநகர் தொகுதி வாக்கு எண்ணிக்கையின்போது, முதல் சுற்று முதலே விஜயபிரபாகரமன் முன்னிலை வகித்து வந்தார். முதல் சுற்றில் 187 வாக்குகள் முன்னிலை பெற்ற அவர், நான்காவது சுற்றில் 8 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் வித்தியாசம் பெற்றிருந்தார்.

ஏழாவது சுற்று வரை மாணிக்கம் தாக்கூர் இரண்டாவது இடத்துக்குத் தள்ளப்பட்டிருந்தார். எட்டாவது சுற்றில் மாணிக்கம் தாக்கூர் 348 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்க ஆரம்பித்தார். மீண்டும் பத்தாவது சுற்றில் விஜயபிரபாகரன் 194 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்க ஆரம்பித்தார். பின்னர் 11வது சுற்றில் முன்னிலைக்கு வந்த மாணிக்கம் தாக்கூர் இறுதியாக 24வது சுற்று வரை முன்னிலையில் இருந்தார்.

இந்நிலையில், வாக்கு எண்ணிக்கையின்போது திமுக முறைகேடுகளில் ஈடுபட்டதாகவும் அதன் காரணமாகவே விஜயபிரபாகரன் தோற்றுப் போனதாகவும் தேமுதிக பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் குற்றம் சாட்டியுள்ளார். எனவே அந்தத் தொகுதியில் மறு வாக்கு எண்ணிக்கை வேண்டும் என தேர்தல் ஆணையத்தை முறையிட்டுள்ளதாகவும் அவர் கூறுகிறார்.

'விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது' - பிரேமலதா குற்றச்சாட்டின் முழு பின்னணி

பட மூலாதாரம், X/@manickamtagore

சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்தபோது பிரேமலதா விஜயகாந்த், “விஜய பிரபாகரன் தோல்வி அடையவில்லை, சூழ்ச்சியால் தோற்கடிக்கப்பட்டுள்ளார். இதற்கான ஆதாரம் இருக்கிறது. அவர் 0.4% வாக்கு வித்தியாசத்தில் தோல்வியுற்றதாக அறிவிக்கப்பட்டது. உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி முறைகேடுகளில் ஈடுபட்டதாக எங்களுக்குத் தகவல்கள் கிடைத்துள்ளன. வாக்கு எண்ணும் மையத்தில் இருந்த மாவட்ட ஆட்சியர், தனக்கு அழுத்தம் கொடுக்கப்படுவதாகவும், அதைத் தாங்க முடியவில்லை எனவும் கூறி செல்போனை அணைக்கப் போகிறேன் என்று அனைவர் முன்னிலையிலும் கூறியுள்ளார். அவருக்கு அழுத்தம் கொடுத்தது யார்?" என்று குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும், "விருதுநகர் தொகுதியில் நள்ளிரவு வரை வாக்கு எண்ணிக்கை தொடர்ந்தது. மூன்று அமைச்சர்கள் வாக்கு எண்ணும் மையத்துக்கு வேட்பாளருடன் சென்று வெற்றி சான்றிதழைப் பெற்றுள்ளனர். மதுரையில் இருக்கும் அமைச்சர் விருதுநகர் செல்ல வேண்டிய அவசியம் என்ன?” என்று அவர் கேள்வி எழுப்பினார்.

மேலும் குற்றச்சாட்டுகளை அடுக்கிய பிரேமலதா, மதிய உணவு இடைவேளை முடிந்தபிறகு, "3 மணி முதல் 5 மணி வரை ஏன் வாக்கு எண்ணிக்கை நிறுத்தப்பட்டது?" என்றும் வினவினார்.

அதுமட்டுமின்றி, நான்கு தொகுதிகளில் வாக்கு எண்ணிக்கை முழுவதும் முடியாத நிலையில் 40 தொகுதிகளிலலும் வென்றதாக முதல்வர் அறிவித்தது ஏன் எனக் கேள்வியெழுப்பும் பிரேமலதா, முதல்வர் 40 தொகுதிகளிலும் வென்றுவிட்டோம் என்று கூறியதை உண்மையாக்க, அமைச்சர்கள் அதிகாரிகளை நிர்பந்தப்படுத்தி முறைகேடு செய்துள்ளதாகவும் குற்றஞ்சாட்டினார்.

'விருதுநகர் வாக்கு எண்ணிக்கையில் முறைகேடு நடந்துள்ளது' - பிரேமலதா குற்றச்சாட்டின் முழு பின்னணி

பட மூலாதாரம், Facebook

பதிமூன்றாவது சுற்றுக்கு பிறகே தவறுகள் நடந்துள்ளன என்றும் அவர் சுட்டிக்காட்டும் அவர், “13வது பெட்டிக்குப் பிறகு 18வது பெட்டியை எண்ணத் தொடங்கினர். தேமுதிக முகவர் எதிர்ப்பு தெரிவித்த பிறகு, மீண்டும் அந்தப் பெட்டிகள் முறையாக எண்ணப்பட்டன. மேலும் மூன்று பெட்டிகள் இயந்திரக் கோளாறு என்று ஓரமாக வைக்கப்பட்டுவிட்டன. அதை எண்ணவே இல்லை. மீண்டும் நாங்கள் முறையிட்ட பிறகு, அந்தப் பெட்டிகளைத் திறந்து, அதில் உள்ள ஒப்புகைச் சீட்டுகளைக் கொண்டு வாக்குகள் எண்ணி அறிவிக்கப்பட்டன,” என்றார்.

இதுகுறித்து வாக்கு எண்ணும் மையத்திலேயே தேமுதிக முகவர் முறையிட்டும்கூட அதிகாரிகள் செவி சாய்க்கவில்லை என்றும் காவல் அதிகாரிகளை மையத்தில் குவித்ததாகவும் கூறினார் பிரேமலதா.

மற்றொரு முரண்பாடும் இருப்பதாகக் கூறிய பிரேமலதா, “தபால் வாக்குகள் அனைத்து தொகுதிகளும் முதலில் எண்ணப்படும். ஆனால் விருதுநகரில் மட்டுமே இரவு 1 மணிக்கு எண்ணப்பட்டது. அங்கு நிச்சயமாக சூழ்ச்சி செய்யப்பட்டுள்ளது,” என்றார்.

தேர்தல் ஆணையத்திடம் மறு வாக்கு எண்ணிக்கை நடத்த வேண்டும் என்று மின்னஞ்சல் மூலமும், தபால் மூலமும் கோரியுள்ளதாகத் தெரிவித்த அவர், “நீதிமன்றத்துக்குச் சென்றால் உடனடியாகத் தீர்வு கிடைக்குமா? 45 நாட்கள் வரை மறு வாக்கு எண்ணிக்கை கேட்க உரிமை இருக்கிறது. அதைப் பயன்படுத்தியே தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டுள்ளோம்” என்றார்

“ஒரு சின்ன பையன் முதல்முறை தேர்தலில் நிற்கிறார். 50 ஆண்டுகளுக்கும் மேலாக கட்சி நடத்தும் நீங்கள், அவர் ஜெயித்தால் என்ன இழக்கப் போகிறீர்கள்? 39 தொகுதிகளில் வெற்றி பெற்றுவிட்டீர்கள். ஒரு தொகுதியில் அவர் வெற்றி பெற்றால் என்ன?” என்றும் திமுகவை தாக்கி தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார்.

இதுகுறித்துப் பேசிய விஜய பிரபாகரன், “சின்னப் பையன் என்ன செய்யப் போகிறான் என்று கேட்டார்கள். இந்த வாய்ப்பு இருந்திருந்தால் சின்ன பையன், என்ன செய்வேன் என்று காண்பித்து இருப்பேன். எனவே தேர்தல் ஆணையம் முறையாக இதைப் பரிசீலிக்க வேண்டும்” என்று பேசினார்.

இந்த விவகாரம் குறித்து தனக்கு எந்தப் புகாரும் இதுவரை கிடைக்கவில்லை என்று கூறிய தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தேர்தல் முடிவுகளில் சந்தேகம் இருந்தால், நீதிமன்றத்தையே நாட வேண்டும் என்றார்.

தேமுதிகவின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்துள்ள மாணிக்கம் தாக்கூர், குற்றச்சாட்டு இருந்தால் வாக்கு எண்ணிக்கை நடத்தும் போதே கூறியிருக்க வேண்டியது தானே என்று கூறியுள்ளார்.

மேலும், “பிரேமலதா விஜயகாந்த், பொய் புரட்டுகளை வைத்து பிரசாரம் செய்தவர். அவரது பொய்களை மக்கள் நம்ப மாட்டார்கள். மக்கள் கொடுத்த தீர்ப்பை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்."

"வாக்கு எண்ணும் மையத்தில் விஜயபிரபாகரனும் அதிமுகவின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியும் இருந்தனர். இரண்டு மணிநேரம் வாக்கு எண்ணிகை நிறுத்தப்பட்ட போதே கேட்டிருக்கலாமே. அங்கு தோல்வியை ஒப்புக்கொண்டுவிட்டு இப்போது ஏன் கேள்வி எழுப்புகிறார்கள்? தேர்தல் அதிகாரிகள் கடுமையாக உழைத்து இரவு 1 மணி வரை வாக்குகளை எண்ணி முடித்தனர். அவர்கள் மீது பொய் குற்றச்சாட்டு வைக்கக்கூடாது,” என்றார்.

வழக்கறிஞர் நாகராணி கூறும்போது, “தேர்தல் ஆணையத்துக்கு மறு வாக்கு எண்ணிக்கை நடத்துவதற்கான அதிகாரம் இருக்கிறது. அதேநேரம் தேர்தல் ஆணையம் நினைத்தால், வேட்பாளரை நீதிமன்றத்தை நாட வேண்டும் என்றும் கூற முடியும்," என்று விளக்கினார்.

"எந்த விவகாரத்தில் என்ன செய்ய வேண்டும் என்பது தேர்தல் ஆணையத்தின் முடிவு. அந்த முடிவை எடுக்கும் அதிகாரம் தேர்தல் ஆணையத்துக்கு உள்ளது. தேர்தல் ஆணையத்தால் நீதிமன்றத்துக்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டால், அந்த வேட்பாளர் அதை நீதிமன்றத்தில் தெரிவிக்க முடியும்."

தேர்தல் ஆணையத்திடம் பலரும் மறு வாக்கு எண்ணிக்கை கோரி விண்ணப்பத்திருக்கலாம் என்பதால், பொதுவாக தேர்தல் ஆணையம் மறு வாக்கு எண்ணிக்கைகளைச் சுலபமாக நடத்தி விடமாட்டார்கள் எனக் கூறுகிறார் வழக்கறிஞர் நாகராணி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)