மகாராஷ்டிரா: பாஜகவின் அரசியல் யுக்திகள் பலனளிக்காதது ஏன்? 5 முக்கிய காரணங்கள்

மகாராஷ்டிராவில் பாஜகவின் அரசியல் யுக்தி
    • எழுதியவர், அபிஜீத் காம்ப்ளே
    • பதவி, ஆசிரியர், பிபிசி மராத்தி

இந்திய நாட்டில் அரசியல் மாற்றத்திற்கான புயல் மகாராஷ்டிராவில் இருந்துதான் தொடங்கும் என்று கூறப்படுவதுண்டு. மக்களவைத் தேர்தல் முடிவுகளும் இதைத்தான் உணர்த்துகிறது.

மஹா விகாஸ் அகாடி எனும் அரசியல் கூட்டணி (உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, காங்கிரஸ் மற்றும் சரத் பவாரின் என்சிபி ஆகிய கட்சிகள்) மகாயுதி கூட்டணியை (பாஜக, ஏக்நாத் ஷிண்டேவின் சிவசேனா மற்றும் அஜித் பவாரின் என்சிபி ஆகிய கட்சிகள்) தோற்கடித்து, அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளனர்.

இந்த முடிவுகள் மாநில அரசியலில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும். மகாராஷ்டிராவின் அரசியலுக்குப் புதிய திசையைக் கொடுத்திருக்கும் தேர்தல் முடிவுகளுக்கு பின்னால் உள்ள காரணங்களைப் இந்தக் கட்டுரையின் மூலம் புரிந்துகொள்வோம்.

தேசிய அளவில் என்டிஏ மற்றும் இந்தியா கூட்டணிக்கு இடையேயான நேரடிப் போட்டி என்றால், மகாராஷ்டிராவில் மகாயுதி மற்றும் மகாவிகாஸ் அகாடிக்கும் இடையேயான நேரடி மோதல் என்றே கூறலாம்.

இந்தியா முழுவதிலும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 293 இடங்களிலும், இந்தியா கூட்டணி 233 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.

மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 48 மக்களவைத் தொகுதிகளில் 17 இடங்களை மஹாயுதியும், 30 இடங்களை மகாவிகாஸ் அகாடியும் கைப்பற்றியுள்ளனர்.

இந்த மாநிலத்தில் கடும் போட்டி நிலவியது. உண்மையில், இங்கு இதுபோன்ற நெருக்கமான தேர்தல் போட்டி என்பது அரிதாகவே காணப்பட்டது. இந்தத் தேர்தலில் பாஜக தலைமையிலான கூட்டணி மகாராஷ்டிராவில் சரிவைச் சந்தித்தது ஏன்?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மஹாயுதி மற்றும் மகாவிகாஸ் அகாடி இடையேயான போட்டி

மகாராஷ்டிராவில் மஹாயுதிக்கும் மகாவிகாஸ் அகாடிக்கும் இடையே நேரடி மோதல் நடந்தது. வஞ்சித் பகுஜன் அகாடி என்ற அரசியல் கட்சியும் களத்தில் இருந்தது, ஆனால் ஒரு இடத்தில்கூட அவர்களால் வெற்றி பெற முடியவில்லை.

மகாராஷ்டிராவில், விதர்பா, மராத்வாடா, மேற்கு மகாராஷ்டிரா மற்றும் மும்பையில் மகாவிகாஸ் அகாடி கூட்டணிக்கான ஆதரவு கணிசமாக விரிவடைந்துள்ளது.

மும்பையிலும், சிவசேனா (உத்தவ் தாக்கரே குழு) அதிக இடங்களை வென்றதால், அதன் தாக்கம் வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்களிலும், மாநகராட்சித் தேர்தல்களிலும் தெரியும்.

இந்தத் தேர்தலில், விதர்பாவின் கோட்டையை காங்கிரஸ் மீண்டும் கைப்பற்றியுள்ளது, அதே நேரத்தில் சரத் பவாரின் என்சிபி கட்சியாலும் மேற்கு மகாராஷ்டிராவில் தனது கோட்டையைக் காப்பாற்ற முடிந்தது.

வெளிப்படையாகச் சொல்வதென்றால், 2019 மக்களவைத் தேர்தலில் 41 இடங்களை வென்ற மகாயுதி கூட்டணி, இந்த முறை 17 இடங்கள் மூலம் மட்டுமே திருப்தி அடைய வேண்டும். மகாவிகாஸ் அகாடி கூட்டணி அபாரமாகச் செயல்பட்டு 30 இடங்களில் வெற்றி பெற்றுள்ளது.

இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவில் காணப்பட்ட முக்கிய விஷயங்களில் ஒன்று மகாயுதி கூட்டணியின் மூன்று மத்திய அமைச்சர்கள் உட்பட பல மூத்த வேட்பாளர்களின் தோல்வி.

மாநிலத்தில் பாஜகவின் பலம் குறைந்துள்ள நிலையில், காங்கிரசின் பலம் அதிகரித்துள்ளது. இந்துத்துவாவை மையமாக வைத்து இயங்கிய மகாராஷ்டிரா அரசியலில் இப்போது கூட்டணி அரசியலின் செல்வாக்கு அதிகரிக்கப் போகிறது.

சிவசேனா, காங்கிரஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுல் காந்தி மற்றும் உத்தவ் தாக்கரே

மக்களவைத் தேர்தலுக்கு முன், மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஒற்றுமையாக இருக்க போராடிக் கொண்டிருப்பது போலவும், ​​மஹாயுதி கூட்டணி பெரும் ஒற்றுமையுடன் இருப்பது போலவும் காணப்பட்டது.

ஆனால் உண்மை வேறு, மகாவிகாஸ் அகாடி கூட்டணியினர் இந்தத் தேர்தலை ஒற்றுமையாக எதிர்கொண்டார், அதேநேரம் தேர்தலுக்கு முன்பு மஹாயுதியில் நிறைய குழப்பங்கள் இருந்தன.

கடந்த 2014 மற்றும் 2019ஆம் ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிராவின் அரசியல் முற்றிலும் மாறிவிட்டது. கடந்த மக்களவைத் தேர்தலை ஒப்பிடும்போது, ​​பாரதிய ஜனதா கட்சியின் தலைமையின் கீழ் தேசிய ஜனநாயக கூட்டணியால் சிறப்பாகச் செயல்பட முடியவில்லை.

அதற்காகத்தான் காங்கிரஸின் பல பெரிய தலைவர்களை பாஜக தனது அணியில் சேர்த்தது. மகாராஷ்டிர முன்னாள் முதல்வர்கள் அசோக் சவான், மிலிந்த் தியோரா போன்றோர் தேர்தலுக்கு முன்பு பாஜகவில் இணைந்தனர். ஆனால் பாஜகவின் இந்த உத்திகள் எல்லாம் பலிக்கவில்லை.

மகாராஷ்டிர அரசியலில் மாற்றம் ஏற்பட்டதற்கான சரியான காரணங்களைத் தெரிந்து கொள்வோம்.

1. உள்ளூர் பிரச்னைகள் மற்றும் பிராந்திய அடையாளம்

உள்ளூர் பிரச்னைகள் மற்றும் பிராந்திய அடையாளம்

பட மூலாதாரம், ANI

இந்தத் தேர்தல் மோதியை மையமாக வைத்து நடத்தப்படவில்லை. 2014 மற்றும் 2019இல் மோதி அலை இருந்தது. நரேந்திர மோதி என்ற காரணியால் மட்டும் பல புதிய வேட்பாளர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். கடந்த தேர்தல்களில் மாநில பிரச்னைகள், உள்ளூர் பிரச்னைகள், உள்ளாட்சி சமன்பாடுகள் ஆகியவை எந்த வகையிலும் பலனளிக்கவில்லை.

ஆனால், இந்தத் தேர்தலில் அப்படியொரு மோதி அலை மகாராஷ்டிராவில் காணப்படவில்லை. மோதி என்ற பிராண்ட் மீதான கவர்ச்சி தென்படவில்லை.

மோதி மகாராஷ்டிராவில் சாதனைப் பேரணிகளை நடத்தினார், ஆனால் அது தேர்தல் முடிவுகளில் எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை.

மகாராஷ்டிராவில், மோதிக்கு எதிராக ராகுல் காந்தி என்ற ரீதியில்தான் தேர்தலை நடத்த பாரதிய ஜனதா கட்சி தன்னால் இயன்றவரை முயன்றது.

கோலாப்பூரில் நடைபெற்ற கூட்டத்தில் தேவேந்திர ஃபட்னாவிஸ் இதை நேரடியாகத் தெரிவித்தார். “இந்தப் பகுதியில் நடக்கும் தேர்தல் ஷாகு மகராஜ் vs சஞ்சய் மாண்ட்லிக் அல்ல, மாறாக நரேந்திர மோதி vs ராகுல் காந்தி” என்றார்.

மோதியை மையமாக வைத்து தேர்தலை நடத்த முயன்றும் பாஜக-வால் வெற்றி பெற முடியவில்லை.

2. சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே மீதான அனுதாபம்

சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே

பட மூலாதாரம், Getty Images

இரண்டாவது முக்கியமான காரணம், கட்சிகளை உடைப்பது பாஜகவுக்கு எதிராகப் போனது. சிவசேனாவில் ஏற்பட்ட பிளவாக இருந்தாலும் சரி, என்சிபியில் ஏற்பட்ட பிளவாக இருந்தாலும் சரி, இரண்டு பிளவுகளும் பாஜகவுக்கு பெரிதாக பலன் அளிக்கவில்லை.

மாறாக, இந்தப் பிரிவினை குறித்து வாக்காளர்கள் மத்தியில் அதிருப்தி காணப்பட்டது.

உத்தவ் தாக்கரேவின் சிவசேனா வலுவிழந்தது மற்றும் சரத் பவாரின் என்சிபி கட்சி நாசப்படுத்தப்பட்ட விதத்தையும் பொதுமக்கள் ஏற்கவில்லை. பொது மக்களின் அனுதாபம் உத்தவ் மற்றும் சரத் பவார் மீது இருந்தது.

தேர்தல் பிரசாரத்தின்போது, ​​மோதியே, சரத் பவார் மற்றும் உத்தவ் தாக்கரே ஆகியோரை தனிப்பட்ட முறையில் விமர்சித்தார்.

'அலையும் ஆன்மா', 'போலி குழந்தை' போன்ற வார்த்தைகளை மோதி பயன்படுத்தினார். ஆனால் இந்த விமர்சனம் பவார்-தாக்கரே மீதான அனுதாபத்தை அதிகரித்தது.

3. விவசாயிகளின் கோபம்

விவசாயிகளின் கோபம்

பட மூலாதாரம், Getty Images

மகாராஷ்டிராவில் கடந்த சில மாதங்களாக விவசாயிகளின் கோபம் தெளிவாக வெளிப்பட்டது. வட மகாராஷ்டிராவில் வெங்காயம் தொடர்பான பிரச்னை ஆதிக்கம் செலுத்தியது.

பருத்தி மற்றும் சோயாபீன் தொடர்பான பிரச்னை மராத்வாடா மற்றும் விதர்பாவில் பெரிதும் விவாதிக்கப்பட்டது. வெங்காய விவகாரம் மகாயுதி கூட்டணி மீதான நேரடித் தாக்குதலாகப் பார்க்கப்பட்டது.

ஏற்றுமதி தடைக்கும் விவசாயிகள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. விவசாயிகளின் இந்தக் கோபத்தைக் குறைப்பதில் பாஜக வெற்றி பெறவில்லை. உரங்களின் விலை உயர்வு மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளுக்குப் பெரும் பிரச்னையாக மாறியுள்ளது.

4. மராத்தா-தலித்-முஸ்லிம் ஒற்றுமை

மராத்தா-தலித்-முஸ்லிம் ஒற்றுமை

பட மூலாதாரம், ANI

மராத்தா-தலித்-முஸ்லிம் சமூக ஒற்றுமைக்கான முயற்சியிலும் மகாவிகாஸ் அகாடி கூட்டணி வெற்றி பெற்றது. இட ஒதுக்கீட்டிற்கான மராத்தா இயக்கத்தின் மூலம் மகாவிகாஸ் அகாடி கூட்டணி நேரடியாகப் பயனடைந்தது.

மஹாயுதியின் வேட்பாளர்களுக்கு எதிரான மனோஜ் ஜாரங்கேயின் (மராத்தா சமூக ஆர்வலர்) நிலைப்பாடு மகாவிகாஸ் அகாடிக்கு சாதகமாக இருந்தது.

முஸ்லீம் வாக்காளர்களைத் தன் பக்கம் ஈர்ப்பதிலும் மகாவிகாஸ் அகாடி வெற்றி பெற்றது. அரசியலமைப்புச் சட்டம் மற்றும் இடஒதுக்கீடு குறித்த விவாதம் காரணமாக, பெரும்பான்மையான தலித் வாக்காளர்களும் மகாவிகாஸ் அகாடியின் பின்னால் ஒன்றுபட்டனர்.

மஹாயுதியால் இந்த சமூகரீதியிலான அணிதிரட்டலைத் திறம்பட எதிர்கொள்ள முடியவில்லை.

5. ஒற்றுமையாக நின்ற எதிர்க்கட்சிகள்

ஒற்றுமையாக நின்ற எதிர்க்கட்சிகள்

பட மூலாதாரம், ANI

வஞ்சித் பகுஜன் அகாடி மற்றும் ஒவைசியின் ஏஎம்ஐஎம் கட்சியின் (AMIM) செல்வாக்கும் இந்தத் தேர்தலில் தென்படவில்லை. வஞ்சித் பகுஜன் அகாடி என்ற கட்சி சுயேச்சையாகப் போட்டியிட்டதால், வாக்குகள் பிரியும் சவாலையும் மகாவிகாஸ் அகாடி கூட்டணி எதிர்கொள்ள வேண்டியிருந்தது.

கடந்த 2019 தேர்தலில், வஞ்சித் பகுஜன் அகாடி மற்றும் ஏஎம்ஐஎம் பெற்ற வாக்குகளால் காங்கிரஸ் வேட்பாளர்கள் சில தொகுதிகளில் தோல்வியடைந்தனர்.

ஆனால் இந்தத் தேர்தலில் வாஞ்சித் பகுஜன் அகாடிக்கு குறிப்பிடத்தக்க வாக்குகள் கிடைக்கவில்லை. ஒவைசியின் கட்சிக்கு ஔரங்காபாத்தை தவிர வேறு எங்கும் வாக்குகள் கிடைக்கவில்லை. மகாவிகாஸ் அகாடி இதனால் பலன் அடைந்தது.

மகாவிகாஸ் அகாடி கூட்டணி ஒன்றுபட்டு நின்றதால் காங்கிரஸ்-தாக்கரே குழு மற்றும் பவார் குழுவின் வாக்குகள் சிதறாமல் இந்தக் கூட்டணிக்கு கிடைத்தது.

இந்த மக்களவைத் தேர்தல் முடிவுகள், வரும் மகாராஷ்டிரா சட்டசபை தேர்தலிலும், உள்ளாட்சித் தேர்தலிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)