அழைப்பு விடுத்த ஒபிஎஸ்,சசிகலா: நிராகரித்த அதிமுக - இரு அணிகளும் ஒன்றிணைவது சாத்தியமா?

அதிமுக

பட மூலாதாரம், Getty Images/OPS/X

    • எழுதியவர், முரளிதரன் காசி விஸ்வநாதன்
    • பதவி, பிபிசி தமிழ்

நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, ஒன்றிணைந்து செயல்பட வேண்டுமென முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் விடுத்த அழைப்பை எடப்பாடி கே.பழனிச்சாமி தலைமையிலான அதிமுக நிராகரித்திருக்கிறது. என்ன நடக்கிறது?

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் அஇஅதிமுக கூட்டணி போட்டியிட்ட அனைத்துத் தொகுதிகளிலும் தோல்வியடைந்தது. அ.தி.மு.க.வில் இருந்து நீக்கப்பட்டதால், 'அ.தி.மு.க. உரிமை மீட்புக் குழு' என்ற பெயரில் செயல்பட்டு வரும் ஓ.பன்னீர்செல்வம் ராமநாதபுரம் தொகுதியில் சுயேச்சையாகப் போட்டியிட்டுத் தோல்வியடைந்தார்.

தேர்தல் முடிவுகள் வெளிவந்த பிறகு, தேர்தல் முடிவுகள் குறித்து அறிக்கை வெளியிட்ட எடப்பாடி கே.பழனிச்சாமி, "தற்போது வெளிவந்துள்ள நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள், நம்மைச் சோர்வடையச் செய்யாது. 2026 சட்டமன்றப் பொதுத் தேர்தலை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பதற்கான பாடமும் படிப்பினையும் நமக்குக் கிடைத்திருக்கிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றி பெறுவோம்," என்று மட்டும் தெரிவித்தார்.

ஆனால், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே.சசிகலாவும் ஓ.பன்னீர்செல்வமும் அ.தி.மு.கவின் பிளவை இந்தத் தோல்விக்கு ஒரு காரணமாகச் சுட்டிக்காட்டினர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இது தொடர்பாக அறிக்கை வெளியிட்ட வி.கே. சசிகலா, "இந்த அவல நிலை எதனால் ஏற்பட்டது, இதற்கு யார் காரணம் என்பதை சற்றுச் சிந்தித்துப் பாருங்கள். அனைவரும் ஒன்றிணைந்து ஒரு வலிமையான இயக்கமாக நாடாளுமன்றத் தேர்தலைச் சந்தித்திருந்தால் கழகம் இன்றைக்கு மாபெரும் வெற்றி பெற்றிருக்கும். தி.மு.க. கூட்டணி படுதோல்வி அடைந்திருக்கும்," என்று கூறியுள்ளார்.

மேலும், இதுபோன்ற தொடர் தோல்விகளை இயக்கம் எந்த நேரத்திலும் கண்டதில்லை எனக் கூறியுள்ள சசிகலா, "தனி ஆவர்த்தனம் செய்து கொண்டிருந்தால் யாருக்கும் எந்தப் பலனும் இல்லை. யாராக இருந்தாலும் சுயமாகச் சிந்தித்து அதில் வெற்றி பெற வேண்டும். இல்லையேல் அடுத்தவர்கள் சொல்வதையாவது கேட்டு தவறுகளை திருத்திக் கொள்ளவேண்டும்," எனவும் கூறியுள்ளார்.

"கட்சியின் நலன் கருதியும், தமிழக மக்களின் நலன் கருதியும் ஒற்றுமையோடு இணைந்து பணியாற்ற அனைவரும் வர வேண்டும். உங்கள் அனைவரையும் 'ஜெயலலிதா இல்லம்' அன்புடன் வரவேற்கிறது" எனக் குறிப்பிட்டுள்ளார்.

அ.தி.மு.க

பட மூலாதாரம், OPS / X

படக்குறிப்பு, ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை

இந்த நிலையில், வியாழக்கிழமையன்று காலையில் முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அந்த அறிக்கையில், "ஒற்றைக் குச்சியை ஒடிப்பது சுலபம். கத்தைக் குச்சியை முறிப்பது கடினம். இனியும் சமாதானம் சொல்லி, தோல்விக்கு தொண்டர்களைப் பழக்குவது பாவ காரியம். நமது வெற்றியை நாளை சரித்திரமாக்கிட மனமாட்சியம் மறந்து ஒன்றரைக் கோடி தொண்டர்களும் ஒன்றாகுதல் காண்போம்” என்று குறிப்பிட்டிருந்தார்.

ஆனால், அவரது இந்த அழைப்பை அ.தி.மு.க. முற்றிலுமாக நிராகரித்திருக்கிறது. கிருஷ்ணகிரியில் செய்தியாளர்களைச் சந்தித்த அ.தி.மு.கவின் முன்னாள் அமைச்சர் கே.பி. முனுசாமி ஓ.பன்னீர்செல்வத்தை கடுமையாக விமர்சித்துப் பேட்டியளித்தார்.

"இதுபோன்ற அழைப்பை விடுக்க எந்த தார்மீக உரிமையும் ஓ. பன்னீர்செல்வத்திற்கு இல்லை. அ.தி.மு.க. சோதனைகளைச் சந்தித்தபோது அதற்கு முக்கியக் காரணமாக இருந்ததோடு, மேலும் மேலும் சோதனை கொடுத்தவர் ஓபிஎஸ். பொதுக்குழு நடந்துகொண்டிருந்தபோது, அ.தி.மு.க. தலைமைக் கழகத்தை குண்டர்களை வைத்துத் தாக்கி அங்கிருந்த ஆவணங்களைத் திருடிச் சென்றவர் ஓபிஎஸ். அதற்குப் பிறகு சின்னத்தை முடக்கவும் கட்சியை உடைக்கவும் நீதிமன்றம் சென்றவர் அவர்.

நடந்து முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவுடன் கூட்டணி அமைத்து ராமநாதபுரத்தில் இரட்டை இலை சின்னத்தை எதிர்த்து நின்றார். ஜெயலலிதாவை அண்ணாமலை கடுமையாக விமர்சனம் செய்தார். மீண்டும் மீண்டும் அவற்றை ஊடகங்களிலும் முன்வைத்தார். உண்மையிலேயே ஜெயலலிதா மீது பாசமோ, பற்றோ இருந்திருந்தால் அவருடன் கூட்டணி அமைக்க ஓ.பன்னீர்செல்வத்திற்கு மனம் வருமா? தன் சுயநலத்தைப் பூர்த்திசெய்ய அண்ணாமலையை நல்லவர் எனச் சொன்னவர் அவர். அப்படிப்பட்டவர் 'ஒன்றிணைய வா' என்று சொல்வதற்கு எந்த அருகதையும் இல்லாதவர்," என்றார்.

அதேபோல, வி.கே. சசிகலாவின் அழைப்பையும் அவர் நிராகரித்தார். "சசிகலா ஜெயலலிதாவிடம் பணியாற்றச் சென்றவர். அப்படிப் பணியாற்றும்போது ஜெயலலிதாவின் பின்னால் நின்று அதிகாரத்தைச் சுவைத்தவர். ஜெயலலிதா இல்லம் என்ற தனது இல்லதிற்கு வரலாம் என்று சொல்லியருக்கிறார். அவர் அழைப்புவிடுத்து 24 மணிநேரம் ஆகிவிட்டது. அங்கே எத்தனை பேர் சென்றிருக்கிறார்கள்? இப்படியெல்லாம் பேசி குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள்" என்றார் முனுசாமி.

அ.தி.மு.க

பட மூலாதாரம், CTR.Nirmalkumar / X

படக்குறிப்பு, அ.தி.மு.க. ஐ.டி. விங் இணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார்.

வி.கே. சசிகலா, ஓ.பி.எஸ். ஆகிய இருவருக்குமே வேறு வழியில்லை என்பதால் இதுபோலத் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருப்பார்கள் என்கிறார் அ.தி.மு.க. ஐ.டி. விங்கின் இணைச் செயலாளர் சிடிஆர் நிர்மல் குமார்.

"வி.கே. சசிகலாவுடன் தொண்டர்கள் யாரும் இல்லை. முக்கியத் தலைவர்களும் இல்லை. ஓ. பன்னீர்செல்வத்துடன் இருந்தவர்களும் விலகி வந்துவிட்டார்கள். சிலர் அ.தி.மு.கவில் சேர்வதற்காகக் காத்திருக்கிறார்கள்."

"இப்படியான சூழலில் வி.கே. சசிகலாவும், ஓ. பன்னீர்செல்வமும் அ.தி.மு.கவில் தாங்கள் இருந்த பழைய இடத்தையே பெற விரும்புகிறார்கள். அது எப்படி சாத்தியம்? அவர்கள் இதுபோலத் தொடர்ந்து பேசிக்கொண்டுதான் இருப்பார்கள். இதில் வேறு எதுவும் நடக்கப்போவதில்லை" என்கிறார் நிர்மல்குமார்.

அ.தி.மு.க

பட மூலாதாரம், Getty Images

ஆனால், அ.தி.மு.கவில் வி.கே. சசிகலாவுக்கும் ஓ. பன்னீர்செல்வத்திற்கும் உரிய இடத்தைக் கொடுக்கலாம் என்கிறார் அ.தி.மு.கவின் முன்னாள் எம்.பியான கே.சி. பழனிச்சாமி.

"வி.கே. சசிகலாவைப் பொறுத்தவரை தலைமைப் பொறுப்புக்கு வர நினைக்கிறார். அவர் ஒரு தண்டிக்கப்பட்ட குற்றவாளி. ஆகவே அ.தி.மு.கவின் தலைமைப் பொறுப்புக்கு அவர் வரமுடியாது. தன் தலைமையில் எல்லோரும் இணைய வேண்டும் என அவர் அழைப்பதே தவறு," என்கிறார் அவர்.

இருப்பினும், "அ.தி.மு.கவில் அவரை இணைத்துக்கொண்டு ஒரு கௌரவமான இடத்தைத் தரவேண்டும். ஓ.பி.எஸ்-ஐ பொறுத்தவரை பா.ஜ.கவின் கைப்பள்ளையாக இருக்கிறார். பா.ஜ.கவின் மனம் கோணாமல் நடந்துகொள்ள வேண்டுமென நினைக்கிறார். ஆகவே அவரை முடிவெடுக்கும் பதவியில் வைக்க முடியாது."

"ஆகவே தலைமைப் பொறுப்பில் இல்லாமல், வேறு ஒரு கௌரவமான இடத்தில் அவர் இருக்கலாம். இப்படி எல்லோரும் இணைந்த ஒரு ஒன்றுபட்ட அதிமுகதான் வலிமையாக இருக்கும். அதற்கான பணியை வரும் ஞாயிற்றுக்கிழமையே ஆரம்பிக்கவிருக்கிறேன். எல்லோரிடமும் பேசப்போகிறேன்," என்கிறார் கே.சி. பழனிச்சாமி.

அ.தி.மு.க
படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் குபேந்திரன்

இந்த முறை பா.ஜ.க. தேசிய அளவில் பெரும் வெற்றியைப் பெற்றிருந்தால், நாடாளுமன்றத் தேர்தலில் தோல்வியடைந்தாலும் தனக்கு ஆளுநர் பதவியோ, வேறு எதாவது பதவியோ கிடைக்கும் என ஒ.பி.எஸ் எதிர்பார்த்திருந்தார். அப்படியில்லாத நிலையில், அவருக்கு இதுபோலப் பேசுவதைத் தவிர வேறு வழியில்லை என்கிறார் மூத்த பத்திரிகையாளரான குபேந்திரன்.

"அவருக்கு மாவட்ட மட்டத்தில் ஒரு பொறுப்பைக் கொடுக்கலாம்தான். ஆனால், மூன்று முறை முதல்வராக இருந்த அவரால் ஏற்க முடியுமா? மேலும் அவர் பாஜக செய்வதைச் சொல்வார் என்ற அச்சமும் அதிமுகவில் இருக்கிறது" என்கிறார் அவர்.

கடந்த 2014ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலின்போது, ஜெயலலிதா தலைமையில் போட்டியிட்ட 39 தொகுதிகளிலும் தனித்துப் போட்டியிட்ட அதிமுக 37 தொகுதிகளைக் கைப்பற்றியது. சுமார் 44 சதவீத வாக்குகளையும் பெற்றது.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு இரட்டைத் தலைமையின் கீழ் 2019 மக்களவைத் தேர்தலை அதிமுக எதிர்கொண்டது. அந்தத் தேர்தலில் 22 தொகுதிகளில் போட்டியிட்ட அ.தி.மு.க. ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றது. வாக்கு சதவீதமும் குறைந்தது. தற்போது நடந்து முடிந்த தேர்தலில் 34 இடங்களில் போட்டியிட்டு, ஒரு இடத்திலும் வெற்றி பெறவில்லை. வாக்கு சதவீதமும் 20.46 சதவீதமாகக் குறைந்திருக்கிறது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)