கொங்கு மண்டலத்தில் திமுக மீண்டும் அமோக வெற்றி - பாஜகவிடம் வாக்குகளை இழந்ததா அதிமுக?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ச.பிரசாந்த்
- பதவி, பிபிசி தமிழுக்காக
கோவை, திருப்பூரை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தின் மக்களவைத் தொகுதிகளை ஒட்டுமொத்தமாக தி.மு.க வென்றுள்ளது. மறுபக்கம், பா.ஜ.க-வின் வாக்கு வங்கியும் அதிகரித்துள்ளது.
அதேநேரத்தில், கொங்கு மண்டலத்தில் கோலோச்சி வந்த அ.தி.மு.கவின் பிடி தளர்ந்துவிட்டதா?
கொங்கு மண்டலமும் அ.தி.மு.க.வும்
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் தி.மு.க-வில் இருந்து அ.தி.மு.க பிரிந்த காலத்தில் இருந்தே, தி.மு.க-விற்கு மிகவும் சவாலாக இருந்து வருவது கொங்கு மண்டலம்தான்.
கோவை, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர், சேலம், நாமக்கல் மாவட்டங்களை உள்ளடக்கிய கொங்கு மண்டலத்தில் அதிமுக 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஆதிக்கம் செலுத்தி வந்துள்ளது.

இங்கே, கிராமப்புற உள்ளாட்சி, நகர்ப்புற உள்ளாட்சி, சட்டப்பேரவை, மக்களவை எனப் பல தேர்தல்களில் அ.தி.மு.க அதிக இடம் பெற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
மக்களவைத் தேர்தலைப் பொருத்தவரை, 2014-ஆம் ஆண்டு தேர்தலில் அ.தி.மு.க கொங்கு மண்டலத்தில் உள்ள கோவை, பொள்ளாச்சி, திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கரூர் மற்றும் சேலம் ஆகிய ஏழு மக்களவைத் தொகுதிகளிலும் மாபெரும் வெற்றியைப் பதிவு செய்தது.
உதாரணமாக, கோவையை எடுத்துக் கொண்டால், 2016-ஆம் சட்டப்பேரவைத் தேர்தலில் அ.தி.மு.க ஆட்சியைக் கைப்பற்றிய நிலையில், கோவை மாவட்டத்தின் 10 சட்டப்பேரவைத் தொகுதிகளில், ஒன்பது தொகுதிகளைக் கைப்பற்றியது. மறுபக்கம் திமுக ஒரு தொகுதியில் மட்டுமே வென்றது.
முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்குப்பின் நடந்த 2021-ஆம் சட்டப்பேரவைத் தேர்தலில், திமுக தனிப்பெரும்பான்மையுடன் வென்று ஆட்சியைப் பிடித்திருந்தாலும், கோவை மாவட்டத்தில் 10-ல் 9 தொகுதிகளை அ.தி.மு.க கைப்பற்றியது. அதன் கூட்டணிக் கட்சியாக இருந்த பாஜக ஓரிடத்தில் வெற்றி பெற்றது. தி.மு.கவுக்கு ஓரிடம் கூட கிடைக்கவில்லை.

உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க-வின் வியூகம்
2021 சட்டப்பேரவைத் தேர்தல் வெற்றிக்குப் பின் கொங்கு மண்டலத்தின் மீது அதிக கவனம் செலுத்திய முதல்வர் ஸ்டாலின், அதிமுகவில் இருந்து வெளியேறி தி.மு.க-வில் இணைந்திருந்த முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியை கொங்கு மண்டலப் பொறுப்பாளராக நியமித்தார்.
கொங்கு மண்டலத்தில் ஏற்கனவே பிரபலமாக இருந்த செந்தில் பாலாஜி, மண்டலம் முழுவதும் சுற்றியதுடன், திமுகவின் அடி மட்டத்தில் நிர்வாகிகளை மாற்றம் செய்தார்.
செந்தில் பாலாஜி வரவுக்குப் பிறகு, 2021-க்குப் பின் நடந்த பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளுக்கான நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் பல ஆண்டுகள் கழித்து திமுக அதிக இடங்களைக் கைப்பற்றியது. குறிப்பாக கோவை மாநகராட்சி மற்றும் கோவை மாவட்டத்தின் நகராட்சிகள், பல பேரூராட்சிகளை கைப்பற்றியது.
மக்களவைத் தேர்தலின் நிலைமை

சட்டப்பேரவை தேர்தல்களில், கொங்கு மண்டலத்தில் தி.மு.க தோல்வியைத் தழுவியிருந்தாலும், மக்களவைத் தேர்தல்களில் திமுக கோலோச்சி வருகிறது.
2014 மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தின் ஏழு தொகுதிகளில் திமுக தோல்வியைத் தழுவியிருந்தாலும், 2019-ஆம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் இந்த ஏழு தொகுதிகளையும் தி.மு.க கைப்பற்றியது அ.தி.மு.க-வை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இந்த மக்களவைத் தேர்தல் வெற்றி மற்றும் செந்தில் பாலாஜி வரவுக்குப் பின்னான உள்ளாட்சித் தேர்தல் வெற்றிக்குப் பின், அ.தி.மு.க-வின் கொங்கு மண்டல கோட்டையை தி.மு.க தகர்த்து வருவதாக அக்கட்சியினர் தெரிவித்து வந்தனர்.
இந்த நிலையில் தான், செந்தில் பாலாஜி ஊழல் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையிலிருக்கும் நிலையில், தொழில்கள் நிறைந்த கொங்கு மண்டலத்தின் மக்களவைத் தேர்தல் பொறுப்பாளராக தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி ராஜாவை திமுக தேர்வு செய்தது.
தற்போதைய மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தின் ஏழு தொகுதிகளிலும் தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தி.மு.க வெற்றியைப் பதிவு செய்துள்ளது.
2024 தேர்தலில் கொங்கு மண்டலத்தில் வாக்கு சதவீதம் என்ன?

கோவையைப் பொறுத்தவரையில் தி.மு.க வேட்பாளர் கணபதி ராஜ்குமார், பதிவான மொத்த வாக்குகளில் 41.39% வாக்குகளைப் பெற்று வெற்றியைப் பதிவு செய்துள்ளார். அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை 32.79% வாக்குகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்த நிலையில், அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் 17.23% வாக்குகளைப் பெற்று மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
நீலகிரி தொகுதியில் ஆ.ராசா 46.44% வாக்குகள் பெற்று வெற்றி பெற்ற நிலையில், அவரை எதிர்த்துப் போட்டியிட்ட பா.ஜ.க மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் 22.83% - பெற்று இரண்டாவது இடம் பிடித்துள்ளார். கோவையைப் போன்றே இங்கும், அதிமுக வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் 21.61% வாக்குகளுடன் மூன்றாம் இடத்திற்குத் தள்ளப்பட்டுள்ளார்.
பொள்ளாச்சியில் தி.மு.க வேட்பாளர் ஈஸ்வரசாமி 47.37 சதவீதத்துடன் வெற்றி பெற்றார். 24.98 சதவீத வாக்குக்களுடன் அ.தி.மு.க வேட்பாளர் கார்த்திகேயன் இரண்டாம் இடம் பிடித்தார்.
திருப்பூரில் திமுக கூட்டணியில் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சுப்பராயன் 41.38% வாக்குகளுடன் வெற்றியும், அதிமுக வேட்பாளர் அருணாச்சலம் 30.35% வாக்குகளுடன் இரண்டாம் இடம் பெற்றார்.
ஈரோட்டில் திமுக வேட்பாளர் பிரகாஷ் 51.43 % வாக்குகளுடன் வெற்றி பெற்றதுடன், அதிமுக வேட்பாளர் ஆற்றல் அசோக்குமார் 29.79 சதவீத வாக்குகளுடன் இரண்டாம் இடம் பிடித்தார்.
சேலத்தில் திமுக வேட்பாளர் செல்வகணபதி 43.38 சதவீதத்துடன் வெற்றியும், அதிமுக வேட்பாளர் விக்னேஷ் 37.77 சதவீதத்துடன் தோல்வியைத் தழுவி இரண்டாமிடம் பிடித்துள்ளார்.
கரூரில் திமுக கூட்டணியின் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி 47.25 சதவீதத்துடன் வெற்றியும், அதிமுக வேட்பாளர் தங்கவேல் 32.52 சதவீதத்துடன் இரண்டாம் இடமும் பெற்றார்.
கோவை, நீலகிரியில் இரண்டாவது இடத்தையும், மற்ற ஐந்து தொகுதிகளிலும் பாஜக மூன்றாம் இடத்தைப் பெற்றிருந்தது. ஆனாலும், பாஜக-வுக்கும் அதிமுகவுக்குமான வாக்கு வித்தியாசம் பெரிய அளவில் இல்லை என்பதை தேர்தல் முடிவுகள் மூலம் காண முடிகிறது.
கோவையில் சட்டப்பேரவை தொகுதி வாரியாக கட்சிகள் பெற்ற வாக்கு விவரம்
கோவை மக்களவை தொகுதிக்குட்பட்டு கோவை வடக்கு, தெற்கு, சிங்காநல்லூர், கவுண்டம்பாளையம், சூலூர் மற்றும் பல்லடம் ஆகிய 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன. கோவை தொகுதியில் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக, அதிமுக, பாஜக ஆகிய மூன்று கட்சிகளும் பெற்ற வாக்குகள் என்ன என்பதை பார்க்கலாம்.
வேட்பாளர்கள் சட்டப்பேரவைத் தொகுதி வாரியாக பெற்ற வாக்குகளின் விபரம்:
தி.மு.க - கணபதி ராஜ்குமார் பெற்ற மொத்தம் வாக்குகள் 5,68,200
கோவை வடக்கு –80,963
கோவை தெற்கு –61,929
சிங்காநல்லூர் –83,369
கவுண்டம்பாளையம் – 1,29,009
சூலூர் – 96,019
பல்லடம் –1,14,139
தபால் ஓட்டுக்கள் 2772
பா.ஜ.க - அண்ணாமலை பெற்ற மொத்தம் வாக்குகள் – 4,50,132
கோவை வடக்கு –71,174
கோவை தெற்கு – 53,579
சிங்காநல்லூர் – 66,472
கவுண்டம்பாளையம் – 1,04,549
சூலூர் – 75,501
பல்லடம் – 76,333
தபால் வாக்குகள் – 2,524
அ.தி.மு.க வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரன் பெற்ற வாக்குகள் – 2,36,490
கோவை வடக்கு – 28,998
கோவை தெற்கு – 19,044
சிங்காநல்லூர் –31,229
கவுண்டம்பாளையம் – 52,110
சூலூர் – 52,962
பல்லடம் – 51,260
தபால் வாக்குகள் – 887
மேற்கண்ட விவரங்களின்படி, கோவை நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட 6 சட்டமன்ற தொகுதிகளிலும் திமுகவே அதிக வாக்குகுளைப் பெற்றுள்ளது. அதேபோல், அனைத்து சட்டப்பேரவை தொகுதிகளிலும் அதிமுகவை விட பாஜகவே அதிக வாக்குகளைப் பெற்றுள்ளது.
"அதிமுகவில் கொங்கு ஆதிக்கம்"

நம்மிடம் பேசிய மூத்த பத்திரிகையாளர் ப்ரியன், கொங்கு மண்டலத்தில் அதிமுக வாக்கு வங்கியை இழந்துள்ளதாக நம்மிடம் தெரிவிக்கிறார். கொங்கு மண்டலத்தில் சாதி ரீதியான வாக்குகள் சிதறியுள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.
பிபிசி தமிழிடம் பேசிய ப்ரியன், "கொங்கு மண்டலத்தில் கட்சிகளின் வெற்றியைத் தீர்மானிப்பதில் சாதி ரீதியிலான வாக்குகள் முக்கியப் பங்காற்றுகிறது. இங்கு, கவுண்டர் சமூக வாக்குகள் முக்கியப் பங்காற்றி இருந்தாலும், இதர சமூகத்தினர் மற்றும் சிறுபான்மை வாக்குகளையும் நாம் கணக்கில் கொள்ள வேண்டும். சமீப காலமாக அதிமுக என்றாலே அது கவுண்டர்கள் கையில் இருப்பது போன்ற தோற்றம் காணப்படுகிறது," என்கிறார் அவர்.
இதை விளக்கிய அவர், ‘‘அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, முன்னாள் அமைச்சர் வேலுமணி என அதிமுகவின் முடிவெடுக்கும் குழுக்களில் அந்த சமுதாயத்தினரே அதிகம் உள்ளனர்,’’ என்கிறார் ப்ரியன்.
‘சமூக ரீதியிலான வாக்குகள் சிதறியுள்ளது’

மேலும் தொடர்ந்த ப்ரியன், ‘‘அதிமுகவில் கவுண்டர் சமுதாயத்தினரே அதிகம் முடிவெடுக்கும் பொறுப்பில் உள்ளதால், பிற சமூகத்தினர் கவுண்டர்கள் பிடியில் அதிமுக உள்ளதோ என்று நினைத்து, வேறு மாற்றைத் தேடுகின்றனர்.”
"அதிமுக மற்றும் பாஜக தனித்துப் போட்டியிடுவதால், இத்தனை ஆண்டுகளாக அதிமுகவிற்கு ஆதரவு தெரிவித்த கவுண்டர் சமுதாயத்தைச் சேர்ந்த தொழில் முனைவோர் பலரும் மத்தியில் மீண்டும் பாஜக வர வேண்டுமென நினைத்து பாஜகவிற்கு வாக்களித்துள்ளனர்.’’ என்கிறார் அவர்.
திமுகவினர் கருத்து
திமுகவின் வெற்றி குறித்து அக்கட்சியின் கொங்கு மண்டல பொறுப்பாளர்கள் சிலரிடம் பேசினோம்.
‘‘இன்றோ நேற்றோ அல்ல, முன்னாள் முதல்வர் கருணாநிதி காலத்தில் இருந்தே திமுக கொங்கு மண்டலம் மீது அதிக கவனம் செலுத்தி வருகிறது. உதாரணமாக மதுரையில் நடத்த வேண்டிய செம்மொழி மாநாடு கோவையில் நடத்தப்பட்டதை பார்க்கலாம். ஐ.டி பூங்கா, தொழில்துறைக்கான உதவி என பலவற்றில் திமுக கொங்கு மண்டலத்திற்கு தனிக்கவனம் செலுத்தியது. தொடர்ச்சியான இந்த முயற்சி, கட்சியினரின் கடின உழைப்பால் வெற்றி சாத்தியமாகியுள்ளது,’’ என்கிறார்கள் திமுகவினர்.
மேலும், ‘‘சமீபத்திய மாநில பட்ஜெட்டில் கூட கோவையில் ரூ.1,100 கோடியில் தகவல் தொழில்நுட்பம், பொறியியல் துறைக்கான ஆராய்ச்சி மேம்பாட்டுக்கான தொழில்நுட்ப பூங்காவை 20 லட்சம் சதுர அடியில் அமைக்கப்படுமென முதல்வர் அறிவித்தார். இதுபோன்று கோவை, திருப்பூர், ஈரோடு மண்டலங்களின் வளர்ச்சிக்காக பல திட்டங்களை அறிவித்தது, மக்களிடையே வரவேற்பை பெற்றது,’’ எனவும் திமுக தேர்தல் பொறுப்பாளர்கள் தெரிவிக்கின்றனர்.
‘பாஜக வாக்கு வங்கியை வலுப்படுத்தியுள்ளது’

கொங்கு மண்டலம் மட்டுமின்றி தமிழகம் முழுவதிலும் பாஜக வாக்கு வங்கியை வலுப்படுத்தியுள்ளது என்கிறார், பா.ஜ.க மாநில துணைத் தலைவர் நாராயணன் திருப்பதி.
அவர் பிபிசி தமிழிடம் பேசியபோது, ‘‘தமிழகத்தைப் பொருத்தவரையில் தனித்துப் போட்டியிட்ட நாங்கள், கடந்த கால தேர்தல்களைவிட சிறப்பான ஒரு வாக்கு சதவீதத்தைப் பெற்று, வாக்கு வங்கியை வலுப்படுத்தியுள்ளோம். கோவையில் அண்ணாமலையின் தோல்வி ‘ஜஸ்ட் மிஸ்’ தான்.”
“குறிப்பாக கொங்கு மண்டலம் முழுவதிலும் வாக்கு சதவீதத்தை பார்த்தால், பாஜகவுக்கும் அதிமுகவிற்கும் பெரிய வித்தியாசம் இல்லை. இதைப் பார்க்கும்போதே எங்கள் வளர்ச்சியைக் காண முடியும். ஒவ்வொரு தேர்தல்தோறும் வளர்ந்து வருகிறோம், அடுத்த சட்டசபைத் தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெறுவோம்,’’ என்றார்.
நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் அதிமுகவை பல இடங்களில் பாஜக பின்னுக்குத் தள்ளியுள்ளதாகச் சொல்கிறார் நாராயணன் திருப்பதி.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
‘கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுக கோட்டைதான்’
‘கொங்கு மண்டலத்தில் அதிமுக வலுவிழந்து வருகிறதா?’ என்று அதிமுக தேர்தல் பிரிவு செயலாளரும் பொள்ளாச்சி எம்.எல்.ஏவுமான ஜெயராமனிடம் கேட்டபோது, “வெற்றி, தோல்வி என்பதெல்லாம் அரசியல் கட்சிகளுக்கு சாதாரணமானது” என்றார் அவர்.
ஜெயராமன் பிபிசி தமிழிடம் பேசிய போது, ‘‘மக்களவைத் தேர்தலில் கொங்கு மண்டலம் எப்போதும் மாறுபட்ட மனநிலையில் இருக்கும். மத்தியில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதை அறிந்து மக்களவைத் தேர்தலிலும், மாநிலத்தில் யார் ஆட்சி செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானித்து சட்டப்பேரவைத் தேர்தலிலும் வாக்கு செலுத்துவார்கள்.
அந்த வகையில், ராகுல் காந்தி தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி வர வேண்டுமென்ற முடிவில் மக்கள் திமுக கூட்டணிக்கு வாக்களித்துள்ளனர், அவ்வளவுதான். மக்களவைத் தேர்தலில் 2014இல் கொங்கு மண்டலத்தைக் கைப்பற்றினோம், பின்பு நடந்த தேர்தலில், தோல்வியடைந்தோம்,’’ என்கிறார் ஜெயராமன்.
மேலும் தொடர்ந்த ஜெயராமன், ‘‘மக்களவைத் தேர்தலில் வெற்றி பெறும் திமுக ஏன் சட்டப்பேரவைத் தேர்தலில் கொங்கு மண்டலத்தில் தோல்வியைத் தழுவுகிறது?” எனக் கேள்வியெழுப்பும் அவர், “ஏனென்றால் கொங்கு மண்டலம் அதிமுகவின் கோட்டையாக இருப்பதால்தான்” என்கிறார்.
ஒரு மக்களவைத் தேர்தலை வைத்து கோட்டையை இழந்துவிட்டதாகக் கூற முடியாது எனவும் கொங்கு மண்டலம் எப்போதும் அதிமுகவின் கோட்டைதான். எனவும் கூறும் எம்.எல்.ஏ ஜெயராமன், அதை “2026 சட்டமன்றத் தேர்தலில் காட்டுவோம்” எனத் தெரித்தார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












