பொது சிவில் சட்டம், ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற பாஜகவின் திட்டங்கள் என்ன ஆகும்?

பாஜக, மோதி

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜுகல் ஆர் புரோஹித்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

ஜூன் 4ஆம் தேதி வெளியான மக்களவைத் தேர்தல் முடிவுகளில் பா.ஜ.க தனிப் பெரும்பான்மை பெறவில்லை.

2014 (282 இடங்கள்) மற்றும் 2019 (303 இடங்கள்) மக்களவைத் தேர்தல் போலல்லாமல், இந்த முறை கூட்டணி ஆட்சியே அமைகிறது.

2014 மற்றும் 2024 ஆம் ஆண்டுகளுக்கு இடையில் பா.ஜ.க வலுவாக எழுப்பிய விஷயங்கள் மற்றும் அவற்றை செயல்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு இப்போது என்ன ஆகும்?

பொது சிவில் சட்டத்தை (யுசிசி) அமல்படுத்துவது, ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகியவை இதில் முக்கியமானவை.

இந்த விஷயங்கள் தொடர்பாக பாஜக தனது கூட்டணி கட்சிகளிடையே கருத்தொற்றுமையை ஏற்படுத்த முடியுமா? இந்த மாற்றங்களை முன்னெடுத்துச் செல்ல தேவையான பெரும்பான்மையை பா.ஜ.கவால் திரட்ட முடியுமா? பா.ஜ.க இவற்றை பின்னுக்குத் தள்ளாவிட்டால் இவற்றின் கூர்மையை சிறிதே குறைக்க வேண்டி வருமா?

மோதி அரசின் முந்தைய ஆட்சியின் குற்றவியல் நீதி அமைப்பு மற்றும் தரவு பாதுகாப்பு போன்ற திட்டங்களை செயல்படுத்துவதில் ஜூன் 4 ஆம் தேதி தேர்தல் முடிவுகள் தாக்கத்தை ஏற்படுத்துமா?

பொது சிவில் சட்டம் (UCC)

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது பாஜகவின் தேர்தல் அறிக்கையின் ஒரு பகுதியாக பல ஆண்டுகளாக இருந்து வருகிறது. "இந்தியா ஒரே மாதிரியான சிவில் சட்டத்தை ஏற்காத வரை பாலின சமத்துவம் இருக்க முடியாது" என்று அதன் 2024 தேர்தல் அறிக்கை கூறியது.

இந்த திசையில் பாஜக எப்போது முன்னேறும் என்பது தெளிவாகத் தெரியவில்லை. ஆயினும் உள்துறை அமைச்சர் அமித் ஷா மே 27 ஆம் தேதி பிடிஐ செய்தி முகமைக்கு அளித்த பேட்டியில், "இதற்கு ஐந்தாண்டுகள் போதும்" என்று கூறினார்.

கட்சியின் திட்டத்தை அடிக்கோடிட்டுக் காட்டிய அவர், “எங்களுடைய பெரும்பான்மை ஆட்சி இருக்கும் உத்தராகண்டில் நாங்கள் சோதனை நடத்தியுள்ளோம். ஏனெனில் இது மத்திய, மாநில அரசுகள் சம்பந்தப்பட்ட விஷயம். பொது சிவில் சட்டம் ஒரு பெரிய சமூக, சட்ட மற்றும் மத சீர்திருத்தம் என்று நான் கருதுகிறேன்,” என்று தெரிவித்தார்.

பல அரசியல் கட்சிகள், சிவில் சமூகம் மற்றும் பழங்குடி குழுக்களும் யுசிசி-யை எதிர்க்கின்றன. தங்கள் அடையாளத்தை இழந்துவிடுவோம் என்று அவை அஞ்சுகின்றன.

பிகார் முதல்வர் நிதிஷ் குமாரும் அவரது கட்சியான ஐக்கிய ஜனதா தளமும் யுசிசியை பகிரங்கமாக எதிர்த்ததாக சென்ற ஆண்டு செய்திகள் வெளியாகின. நிதிஷ் குமாரின் ஜேடியு இப்போது தேசிய ஜனநாயக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.

ஒரே நாடு ஒரே தேர்தல்

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, சித்தரிப்புப்

பொது சிவில் சட்டத்தை அமல்படுத்துவது குறித்து பிசினஸ் ஸ்டாண்டர்டின் ஆலோசனை ஆசிரியர் (consulting editor) அதிதி ஃபட்னிஸ் சந்தேகம் தெரிவித்தார்.

"அதன் செயல்பாட்டில் நிறைய சிக்கல்கள் உள்ளன. ஒருபுறம் பழங்குடி சமூகம் இதுகுறித்து மகிழ்ச்சியாக இல்லை. தங்கள் வாழ்க்கை முறை பலவீனமடையும் என்று அவர்கள் நினைக்கிறார்கள். பார்சி சமூகமும் இதே காரணங்களுக்காக யுசிசி-ஐ விரும்பவில்லை என்று நான் நம்புகிறேன். ஆந்திரா மற்றும் பிகார் முடிவு செய்யும் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் அரசு இயங்கும் என்று நான் நினைக்கிறேன்,”என்று அவர் கூறினார்.

நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற விரும்பும் யுசிசி-யின் ஒரு வரைவைக் கூட அரசு இன்னும் சமர்ப்பிக்கவில்லை என்பது இங்கு குறிப்பிடத்தக்கது.

“சமீபத்திய சூழ்நிலையில் சர்ச்சைக்குரிய இந்த சட்டத்தை நிறைவேற்ற முடியாமல் போகலாம். இப்போது கூட்டணிக்கு (என்.டி.ஏ) பெரும்பான்மை இருப்பதால் சில சட்டங்களை நிறைவேற்ற முடியும். ஆனால் நிரந்தர மாற்றங்களைச் செய்வது, குறிப்பாக அரசியலமைப்பு திருத்தங்கள் என்று வரும் போது அவை மிகவும் சவாலானதாக இருக்கும்," என்று மக்களவை முன்னாள் தலைமைச் செயலாளர் பிடிடி ஆச்சார்யா குறிப்பிட்டார்.

ஒரே நாடு ஒரே தேர்தல் (ONOE)

நரேந்திர மோதி

பட மூலாதாரம், ANI

அரசு அமைத்த உயர்மட்டக் குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து பா.ஜ.க வின் தேர்தல் அறிக்கை கூறுகிறது. அடுத்த 5 ஆண்டுகளுக்குள் இது அமல்படுத்தப்படும் என்று உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

'ஒரே நாடு ஒரே தேர்தல்' என்ற விஷயத்தை ஆராய குடியரசு முன்னாள் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையில் ஒரு குழு 2023 செப்டம்பரில் அமைக்கப்பட்டது. இந்தக் குழு இந்த ஆண்டு மார்ச் மாதம் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் தனது அறிக்கையை சமர்ப்பித்தது. அதில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்தும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

'ஒரே நாடு, ஒரே தேர்தல்' என்ற கருத்தை கடுமையாக எதிர்ப்பதாகவும், இந்த யோசனை தொடர்பான பணிகளை மேற்கொள்ளக் கூடாது என்றும் முக்கிய எதிர்க்கட்சியான காங்கிரஸ் கூறியுள்ளது.

"கமிட்டி தனது பணியை முடித்துவிட்டாலும் இந்த யோசனையை கைவிட வேண்டியிருக்கும்," என்கிறார் ஃபட்னிஸ். ஆந்திரப் பிரதேசம் அல்லது பிகார் போன்ற மாநிலங்கள் இதற்கு ஒப்புக்கொள்ளும் என்று நான் நினைக்கவில்லை,” என்றார் அவர்.

டெல்லி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் சந்தீப் யாதவ் இதனுடன் மற்றொரு அம்சத்தை சேர்க்கிறார். பிபிசியிடம் பேசிய அவர், “நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தினால் மாநிலங்களின் அரசியலமைப்பு சுயாட்சி மீறப்படலாம். இது அதிகாரத்தை மையப்படுத்துவதற்கு வழிவகுக்கும். இது இந்தியாவின் கூட்டாட்சி கட்டமைப்பிற்கு எதிரானது. இதன் கீழ் மாநிலங்களுக்கு ஆட்சி அமைப்பு மற்றும் நிர்வாக சுயாட்சி உள்ளது,” என்று தெரிவித்தார்.

‘ஒரே நாடு ஒரே தேர்தல்’ குறித்து ஆராய்ந்த அரசுக் குழு, “முதல் கட்டமாக மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களை ஒரே நேரத்தில் நடத்த வேண்டும்” என்று பரிந்துரை செய்தது. ”இரண்டாம் கட்டமாக, மக்களவை மற்றும் சட்டப் பேரவைகளின் தேர்தல் முடிந்த 100 நாட்களுக்குள் நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகளின் தேர்தல்கள் நடத்தப்படும் வகையில் அவற்றுடன் இணைக்கப்பட வேண்டும்,” என்றும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

அரசியலமைப்பு சட்ட நிபுணரும், பாட்னாவின் தேசிய சட்டப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தருமான ஃபைசான் முஸ்தஃபா சற்று வித்தியாசமாக சிந்திக்கிறார்.

“யுசிசி மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் போன்ற சட்டங்களின் எதிர்காலத்தை இப்போது மதிப்பிடுவது அவசரத்தனமாக இருக்கும். அவற்றை நாம் தனித்தனியே பார்க்க வேண்டும். அரசியலமைப்புத் திருத்தங்கள் அல்லது பதவி நீக்கப் பிரேரணைகளுக்கு மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் கலந்து கொண்டு வாக்களிக்க வேண்டும். பா.ஜ.கவின் தற்போதைய நிலையைப் பார்த்தால் இதை அடைவது கடினம் என்றே தோன்றுகிறது,” என்று அவர் தெரிவித்தார்.

”ஆனால் தனிப்பெரும்பான்மை தேவைப்படும் சட்டங்கள் எளிதாக நிறைவேற்றப்படும். சபையின் பெரும்பாலான வேலைகள் இத்தகைய சட்ட வகைகளுக்காகவே இருக்கின்றன,” என்றார் அவர்.

”தேசிய ஜனநாயக கூட்டணி ஒற்றுமையாக இல்லையன்றால் பிரச்னைகளை சந்திக்க நேரிடும். சென்ற மக்களவையில் பல விஷயங்களில் தேசிய ஜனநாயகக் கூட்டணி கட்சிகளோடு கூடவே ஆந்திராவின் ஜெகன் மோகன் மற்றும் ஒடிஷாவின் நவீன் பட்நாயக் ஆகியோரின் ஆதரவும் பா.ஜ.கவுக்கு இருந்தது. ‘இந்தியா’ கூட்டணியில் இருக்கும் சில கட்சிகளும் சில சட்டங்களை ஆதரிக்கக் கூடும்,” என்று அவர் குறிப்பிட்டார்.

நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் எல்லை மறுவரையறை

நாடாளுமன்ற தேர்தல் 2024

பட மூலாதாரம், Getty Images

நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் எல்லை மறுவரையறை செய்யப்படலாம் என்று அரசு சென்ற ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தது. மொத்த நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பதும் இதில் அடங்கும். 2026 ஆம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்படும் மக்கள்தொகை கணக்கெடுப்புக்குப் பிறகு இது செய்யப்படலாம் என்று அரசு கூறியது.

அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த நடவடிக்கை என்பதால் இதன் மீது அனைவரின் கவனமும் இருக்கும்.

"மக்கள் தொகை கணக்கெடுப்பு முடிந்ததும், எல்லை மறுநிர்ணய ஆணையம் அமைக்கப்பட வேண்டும். நாடு முழுவதிலும் இருந்து பரிந்துரைகளைப் பெறுவதற்கு நேரம் எடுக்கும். பின்னர் ஆணைக்குழுவின் பரிந்துரைகள் விவாதத்திற்குப் பிறகு ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும் என்றால், அரசியலமைப்பு திருத்தம் தேவைப்படும் என்று நான் நினைக்கிறேன். எதிர்க்கட்சிகள் உட்பட மற்ற கட்சிகளின் ஒப்புதல் இல்லாமல் இதையெல்லாம் அடைவது கடினமான காரியம்,” என்று ஆச்சார்யா தெரிவித்தார்.

2024 ஜூலை 1-க்குள் புதிய குற்றவியல் சட்ட அமைப்பு

பொது சிவில் சட்டம் மற்றும் 'ஒரே நாடு ஒரே தேர்தல்' ஆகியவற்றை இப்போதும் பாஜகவால் அமல்படுத்த முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

இந்திய நீதிச் சட்டம் 2023, இந்திய குடிமக்கள் பாதுகாப்பு சட்டம் 2023 மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் 2023 ஆகிய மூன்று சட்டங்களிலும் 2023 டிசம்பரில் குடியரசுத் தலைவர் கையெழுத்திட்டார். இந்த சட்டங்கள் 2024 ஜூலை 1 முதல் நடைமுறைக்கு வரும். இவை இந்தியாவின் குற்றவியல் நீதி அமைப்பில் பெரும் மாற்றங்களை கொண்டு வரும்.

இந்த மூன்று சட்டங்களும் முறையே இந்திய தண்டனைச் சட்டம் 1860, குற்றவியல் நடைமுறைச் சட்டம் 1973 மற்றும் இந்திய சாட்சியங்கள் சட்டம் 1872 ஆகியவற்றின் இடத்தில் கொண்டுவரப்படும்.

இந்த சட்டங்கள் கிடப்பில் போடப்படும் என்பதற்கான எந்த அறிகுறியும் தற்போது இல்லை.

இந்தியாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் ப.சிதம்பரம் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்திருந்தார். ’90-99 சதவிகித சட்டங்கள் பழையவை. ‘காப்பி’ அடிக்கப்பட்டு புதிய மசோதாவில் அவை ஒட்டப்பட்டுள்ளன’ என்று அவர் கூறியிருந்தார்.

இந்தச் சட்டங்களின் தாக்கம் குறித்து சில வழக்கறிஞர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த சட்டங்களை 'சிவில் உரிமைகளுக்கு பெரும் அச்சுறுத்தல்' என்று விவரித்த வழக்கறிஞர் சஞ்சய் ஹெக்டே, அவை தடை செய்யப்பட வேண்டும் என்றார்.

இருப்பினும், புதிய சட்டங்கள் குடிமக்களுக்கு 'பாதுகாப்பு மற்றும் நீதியை உறுதி செய்யும்' என்று அரசு வலியுறுத்துகிறது.

இதுபோலவே இந்தியாவின் டிஜிட்டல் தனிநபர் தரவுப் பாதுகாப்புச் சட்டம் 2023, குடியரசுத் தலைவரின் ஒப்புதலைப் பெற்றுள்ளது. ஆனால் விதிகளுக்கு இன்னும் இறுதிவடிவம் கொடுக்கப்படவில்லை.

மறுபரிசீலனை அல்லது ஆய்வு

அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

மறுபரிசீலனை அல்லது ஆய்வு என்பது இந்த முன்மொழியப்பட்ட சட்டங்களுக்கு மட்டுமே இருக்கும் என்று சொல்ல முடியாது.

தேசிய ஜனநாயக கூட்டணியில் மூன்றாவது பெரிய கட்சியான ஜே.டி.யு, ராணுவத்தில் வீரர்கள் சேர்ப்புக்காக நடத்தப்படும் அக்னிவீர் திட்டத்தில் சீர்திருத்தங்களைக் கோருகிறது என்று ஊடக அறிக்கைகள் தெரிவிக்கின்றன.

சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு என்பது எதிர்க்கட்சிகளின் கோரிக்கை மட்டுமல்ல. ஜேடியு மற்றும் தெலுங்கு தேச கட்சி (என்டிஏவின் இரண்டாவது பெரிய கட்சி) ஆகியவையும் அதைக் கோருகின்றன. இந்த யோசனையை தான் எதிர்க்கவில்லை என்று பாஜக தெளிவுபடுத்தியது. ஆனால் இது எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒட்டுமொத்தமாக, கடந்த கால, நிகழ்கால மற்றும் எதிர்கால திட்டங்கள் குறித்து ஆளும் கூட்டணிக்குள் விவாதிக்கப்படும் என்பது தெளிவாகிறது. உண்மையில் அவற்றில் மாற்றங்கள் செய்யப்படுகிறதா இல்லையா என்பதை நாம் கவனிக்க வேண்டும்.

இவை மறுபரிசீலனை செய்யப்படுமா என்பதையும் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)