நடை பயணம் முதல் உ.பி. ‘கெமிஸ்ட்ரி’ வரை - காங்கிரசுக்கு ராகுல் காந்தி புத்துயிர் ஊட்டியது எப்படி?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், வினீத் கரே
- பதவி, பிபிசி செய்தியாளர்
காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் 'இந்தியா' கூட்டணிஇந்த மக்களவைத் தேர்தலில் எதிர்பார்த்ததை விட சிறப்பாகச் செயல்பட்டிருக்கிறது. முடிவுகள் வெளியான அன்று (ஜூன் 4) மதியம் ராகுல் காந்தி காங்கிரஸ் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் முகம் பிரகாசமாக இருந்தது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சோனியா காந்தி முன்னிலையில், சிவப்பு நிற அட்டை போடப்பட்ட இந்திய அரசியல் சாசனப் புத்தகத்தை கையில் பிடித்தபடி செய்தியாளர்களிடன் பேசிய ராகுல் காந்தி, "அரசமைப்புச் சட்டத்தைக் காப்பாற்றுவதற்காக தான் இந்த யுத்தம்," என்றார்.
ராகுல் காந்தி, அவரது கூட்டங்களிலும், பயணங்களிலும், தேர்தல் பிரசாரத்தின் போதும், இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பாக்கெட் அளவிலான புத்தகத்தை கூடவே வைத்திருந்தார். ராகுல் காந்தியின் இந்தச் செயல்பாடுகள் மார்ச் மாதத்தில் அவரது நிலைப்பாட்டிலிருந்து முற்றிலும் மாறுபட்டவை. அந்தச் சமயத்தில், ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், “தற்போது இந்தியாவில் ஜனநாயகம் இல்லை,” என்று மிகக் கடுமையான தொனியில் பேசினார்.
அன்றைய தினம் அவரது வங்கிக் கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளதாகவும், தேர்தலில் போட்டியிடுவது கட்சிக்கு மிகப்பெரிய சவால் என்றும் காங்கிரஸ் கட்சி தரப்பில் கூறப்பட்டது.
'ஜனநாயகம் ஆபத்தில் உள்ளது' என்ற முழக்கத்துடன் தேர்தலில் களமிறங்கிய எதிர்க்கட்சிகள் சிறப்பாக செயல்பட வாய்ப்பில்லை என்று தான் அரசியல் ஆய்வாளர்கள் நினைத்திருக்கக் கூடும். பா.ஜ.க அரசு, தொடர்ந்து அமலாக்கத்துறை, சி.பி.ஐ போன்ற ஜனநாயக அமைப்புகளைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறிவந்த எதிர்க்கட்சிகளிடம் இருந்து யாரும் இந்த முடிவினை எதிர்பார்த்திருக்க வாய்ப்பில்லை.
இந்தத் தேர்தல் எதிர்க்கட்சிகளை ‘செய் அல்லது செத்து மடி’ என்ற நிலைப்பாட்டை எடுக்க வைத்தது.
மாறும் தொனி

பட மூலாதாரம், ANI
'இந்தியா’ கூட்டணியின் பொதுக்கூட்டங்களிலும், காங்கிரஸ் அலுவலகத்திற்கு வெளியேயும், இந்திய ஒற்றுமை நியாய யாத்திரையின் (பாரத் ஜோடோ நியாய யாத்ரா) போதும் பல பத்திரிகையாளர்கள் மற்றும் 'நிபுணர்கள்' காங்கிரஸையும் ராகுல் காந்தியையும் கேலி செய்வதைக் காண முடிந்தது.
மற்ற கட்சிகளை ஒப்பிடுகையில் அதிக வளங்களைக் கொண்டிருக்கும் பா.ஜ.க மீண்டும் பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வரும் என்று உறுதியாகக் கருதப்பட்டது. ஆனால் தற்போது அந்தத் தொனி மாறிவிட்டது, கூட்டணிக் கட்சிகளுடன் சேர்ந்து ஆட்சியமைக்கும் சவாலை பிரதமர் மோதி எதிர்கொள்வது இதுவே முதல்முறை.
காங்கிரஸ் 2014 தேர்தலில் 44 தொகுதிகளையும் 2019 தேர்தலில் 52 தொகுதிகளையும் கைப்பற்றி, பின்னடைவைச் சந்தித்த நிலையில் இத்தேர்தலில் காங்கிரஸ் 99 இடங்களை வென்று, இந்தியா கூட்டணி 234 தொகுதிகளை வென்றது. இந்த எண்ணிக்கை பா.ஜ.க-வின் மொத்த இடங்களை விடக் குறைவு என்றாலும், இது எதிர்க்கட்சிகளுக்குக் கிடைத்த பெரிய வெற்றி என வர்ணிக்கப்படுகிறது. காங்கிரஸின் வாக்கு சதவீதம் சுமார் 2% அதிகரித்துள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
இந்தத் தேர்தலில் ராகுல் காந்தி, பிரச்னைகளுக்குக் களம் அமைத்துக் கொடுத்ததாகவும், அதற்கு எதிராக பா.ஜ.க தனது தேர்தல் பிரசாரத்தை மேற்கொண்டதாகவும் பல தேர்தல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
ஆரம்பத்தில் இந்த தேர்தல் பா.ஜ.க-வுக்கு சாதகமாக இருக்கும் என ஊடகங்களில் கூறப்பட்ட நிலையில், நிஜ தேர்தல் களத்தில் கதை வேறாக இருந்தது.
ராகுல் காந்தியின் நியாய யாத்திரையில் பங்கேற்ற, ஸ்வராஜ் அபியான் அமைப்புடன் தொடர்புடைய யோகேந்திர யாதவ், காங்கிரஸின் சிறந்த செயல்பாட்டிற்காக ராகுல் காந்தியைப் பாராட்டினார், "இந்துத்வா என்னும் விஷயத்தை முன்வைத்து தேர்தல் களத்தில் செயல் பட வேண்டிய சூழல் ஏற்பட்டபோது, ராகுல் காந்தி அவ்வாறு செய்யவில்லை. அவரது தனிப்பட்ட பிடிவாதம் மற்றும் உறுதியான நம்பிக்கை ஒரு பெரிய விஷயம்," என்றார்.
"ஒருவேளை காங்கிரஸுக்கு 60 இடங்கள் கிடைத்திருந்தால், எல்லாப் பழிகளும் அவர்கள் மீது சுமத்தப்பட்டிருக்கும், எனவே சிறப்பாக செயல்பட்டதற்காக அவர்களுக்கு பாராட்டுகள் கிடைக்க வேண்டும்," என்றும் அவர் கூறுகிறார்.
உத்தர பிரதேசத்தில் ஒத்துப்போன 'கெமிஸ்ட்ரி’

பட மூலாதாரம், ANI
உத்தர பிரதேசத்தில் சமாஜ்வாதி கட்சி, மகாராஷ்டிராவில் மஹா விகாஸ் அகாடி மற்றும் மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் ஆகியவை இந்தியா கூட்டணியின் இந்த '234’ என்னும் எண்ணிக்கையை எட்டுவதில் முக்கியப் பங்கு வகித்தன.
சமாஜ்வாதி கட்சி தலைவர் ஜாவேத் அலி கான் கூறுகையில், "தாழ்த்தப்பட்டோர், புறக்கணிக்கப்பட்டோர், சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோருக்கு நாங்கள் முன்னுரிமை அளிக்கிறோம். ராகுல் காந்தியும் இந்த வகுப்பினரின் நலன்களைத் தான் முன்னிறுத்திப் பேசுகிறார். ராகுல் காந்தி மற்றும் அகிலேஷ் யாதவ் இடையே எல்லாம் ஒத்துப் போகிறது,” என்றார்.
இவர்களின் 'கெமிஸ்ட்ரி'-யை உடைப்பதே பிரதமர் மோதி மற்றும் பா.ஜ.க தலைவர்களின் இலக்காக இருந்து வந்தது.
மூத்த பத்திரிக்கையாளர் சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “இந்தத் தேர்தல்களில் மோதிக்கு எதிராகக் கொடி பிடித்து ‘அங்கதன்’ (ராமாயணத்தில் வரும் கதாபாத்திரம் ) போல் உறுதியாக நின்றவர் என்றால் அது ராகுல் காந்திதான். 2014-க்குப் பிறகு முதல் முறையாக அவரை அவரே பாராட்டி கொள்ளும் அளவுக்குச் சூழல் சாதகமாக மாறியிருக்கிறது.
முன்னாள் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சஞ்சய் ஜா, தேர்தல் முடிவை மோதிக்கு எதிரான தீர்ப்பு என்று கருதுகிறார், மேலும் சமீபத்திய புள்ளிவிவரங்கள் ராகுல் காந்தியை பிரதமர் மோதிக்கு மாற்றாகவும் தீவிர போட்டியாளராகவும் மாற்றியுள்ளதாகக் கூறுகிறார்.

பட மூலாதாரம், ANI
'இது எளிதான பயணம் அல்ல'
ராகுல் காந்தியின் இந்தப் பயணம் எளிதானது அல்ல. 150 எம்.பி-க்கள் இடைநீக்கம் செய்யப்பட்டது, அரவிந்த் கேஜ்ரிவால், ஹேமந்த் சோரன் ஆகியோர் ஊழல் குற்றச்சாட்டில் சிறைக்கு அனுப்பப்பட்டது, மக்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டது, காங்கிரஸ் தேர்தல் அறிக்கை மற்றும் ராகுல் காந்தி மீது பிரதமர் மோதி உட்பட பா.ஜ.க மூத்த தலைவர்கள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வந்தது, ராகுலைக் குற்றம் சாட்டி கட்சித் தலைவர்கள் ராஜினாமா செய்தது, சில மாநிலங்களில் தேர்தல் தோல்வி - இவ்வாறு கடந்த சில மாதங்களாக எதிர்க்கட்சிகள் மற்றும் ராகுல் காந்திக்கு முன் வைக்கப்பட்டிருந்த சவால்களுக்குப் பஞ்சமில்லை. ஒருக்கட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் இருப்பு கூட கேள்விக்குறியானது.
'இந்தியா’ கூட்டணியின் ஆரம்பக்கட்டக் கூட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டதில் தாமதம் மற்றும் தொகுதி ஒதுக்கீட்டு பிரச்னைகள், கூட்டுப் பேரணிகள் நடக்காமல் இருந்தது தேர்தல் அறிக்கை வராமல் இருந்தது என பிரச்னைகள் ஒன்றன் பின் ஒன்றாக வந்தது. காங்கிரஸ் மிகப் பெரிய எதிர்க்கட்சியாக இருந்ததால், பல விமர்சனங்களின் இலக்காக இருந்தது.
மேலும், "ராகுல் காந்தி முன்னேறுவது தனது திறமையின் பலத்தால் அல்ல, 'காந்தி’ என்னும் குடும்பப்பெயரால் தான் உயர்ந்த பதவிக்கு வந்திருக்கிறார்,” என்று பா.ஜ.க சுட்டிக் காட்டி வருகிறது. 2014 மற்றும் 2019 மக்களவைத் தேர்தல்களில் காங்கிரஸின் தோல்விக்கான காரணமாக ராகுல் காந்தி மீது பழி சுமத்தப்பட்டது, இருப்பினும் பல காங்கிரஸ் ஆதரவாளர்கள் இதை ஏற்கவில்லை.
காங்கிரஸ் தலைவர் ஒருவர் பேசுகையில், "முந்தைய தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி மோசமான செயல்பாடுகளை கொண்டிருந்தாலும், ராகுல் காந்தி தனது நம்பிக்கையில் உறுதியாக இருந்தார், ஏனெனில் ஜனநாயகத்தில், சாமானிய மக்கள் தங்கள் விருப்பத்திற்கேற்ற பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்க முன்வருவார்கள் என்று அவர் நம்பினார்," என்றார்.
"ராகுலைப் பொறுத்த வரையில், அரசியல் அதிகாரம் வேண்டும் ஆனால் பொறுப்பு வேண்டாம். பொறுப்பைக் கையாள்வது அவருக்கு எளிதல்ல,” என்று ராகுலின் விமர்சகர்கள் தொடர்ந்து கூறி வருகின்றனர்.
மக்களவைத் தேர்தலைத் தவிர, பல சட்டசபைத் தேர்தல்களில் காங்கிரஸ் தோல்வி அடைந்ததால், ராகுல் காந்தியின் தலைமை குறித்து தொடர்ந்து சந்தேகம் எழுப்பப்பட்டது.
மத்தியப் பிரதேசம், ராஜஸ்தான், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், தெலங்கானா, கர்நாடகா ஆகிய மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தல்களில் அக்கட்சி சிறப்பாகச் செயல்பட்ட காலகட்டங்கள் இருந்த போதிலும், பிரதமர் மோதி தலைமையிலான பா.ஜ.க தொடர்ந்து வெற்றி பெற்றதால் ராகுல் மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டன.
பா.ஜ.க தலைவர்கள் ராகுல் காந்தியை பகடி செய்து 'பப்பு', 'இளவரசர்' போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தினர். அவர் 'தனது சொந்த டிஸ்னி உலகில் வாழும் டிஸ்னி இளவரசர் போல' என்றும் கேலி செய்யப்பட்டார்.
சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவா கூறுகையில், "இவ்வளவு அவமானங்கள் மற்றும் பல பொது ஏளனங்களுக்கு மத்தியிலும் உறுதியாக நின்றதற்காக ராகுல் 100-க்கு 200 மதிப்பெண்கள் பெற்றுள்ளார்," என்றார்.
நேற்றும் இன்றும்
தற்போது சூழல் மாறிவிட்டது, காங்கிரஸின் சமீபத்திய முன்னேற்றம் பற்றிய புள்ளிவிவரங்கள் அதன் உழைப்புக்குச் சான்றாகக் கருதப்படுகின்றன.
காங்கிரஸ் கட்சியைப் பல ஆண்டுகளாகக் கவனித்து வரும் பத்திரிக்கையாளரும் எழுத்தாளருமான ரஷீத் கித்வாய், “ராகுல் காந்தியைத் தவிர வேறு யாராக இருந்திருந்தாலும் இவ்வளவு விமர்சனங்களைப் பொறுத்துக்கொள்ள முடிந்திருக்குமா என்பது சந்தேகம் தான்,” என்கிறார்.
"ஜோதிராதித்ய சிந்தியாவை ராகுலுக்கு நான்கு வயதிலிருந்தே தெரியும். அவர் மிலிந்த் தியோரா, ஜிதின் பிரசாத் ஆகியோருடன் குடும்ப உறவு இருந்தது. ஆனால் இவர்கள் ஒருவர் பின் ஒருவராக கட்சியை விட்டு வெளியேறியது மட்டுமின்றி ராகுலை கேலியும் செய்தனர்,” என்றார்.
ராகுல் காந்தியின் பயணம்

பட மூலாதாரம், ANI
காங்கிரஸ் இம்முறை தேர்தலில் அதிக தொகுதிகள் பெற்றதற்கு ராகுல் காந்தியின் இரண்டு நீண்ட நடைபயணங்கள் தான் காரணம் என்று புகழாரம் சூட்டப்படுகிறது.
ராகுல் காந்தி 2022-23இல் மேற்கொண்ட 'இந்திய ஒற்றுமை நியாய யாத்திரை’ கட்சிக்கும் ராகுல் காந்திக்கும் நற்பெயரை தேடித்தந்தது. கன்னியாகுமரியில் இருந்து காஷ்மீர் வரையிலான இந்த பயணம் மக்கள் மத்தியில் அதிகம் பேசப்பட்டது.
இரண்டாம் கட்டமாக, ராகுல் காந்தி ஜனவரி மாதம் மணிப்பூரில் இருந்து நியாய யாத்திரையைத் தொடங்கியபோது, யாத்திரையின் நேரம் குறித்துப் பல கேள்விகள் எழுப்பப்பட்டன.
இருப்பினும், அரசியல் ஆய்வாளர் ராகுல் வர்மா, நியாய யாத்திரை 'தோல்வி' அடைந்து விட்டது என்று கருதுகிறார், ஏனெனில் "இந்தக் காலக்கட்டத்தில் அக்கட்சியின் முக்கிய கூட்டணியான நிதிஷ் குமார் போன்றவர்கள் கட்சியை விட்டு விலகினர்," என்று விளக்கினார்.
ஆனால் யாத்திரையில் பங்கேற்ற யோகேந்திர யாதவின் கூற்றுப்படி, நியாய யாத்ரா கட்சியை அதன் சமூக அடித்தளத்தை நோக்கிக் கொண்டு சென்றது, என்கிறார்.
யோகேந்திர யாதவின் கூற்றுப்படி, "காங்கிரஸ் எப்போதுமே சமூகத்தின் ஏழைப் பிரிவினரின் கட்சியாக இருந்து வருகிறது. ஆனால் அதன் கொள்கைகள் மற்றும் அதன் தலைமை இரண்டும் ஏழை சமூகத்தில் இருந்து விலகியிருந்தன. ராகுல் மேற்கொண்ட யாத்திரை மீண்டும் காங்கிரஸின் நல்ல கொள்கைகளை மக்களிடையே நிலைநாட்ட உதவியது. இந்தச் செயல்முறை இப்போதுதான் தொடங்கி உள்ளது. விரைவில் சமூகத்தின் ஏழைப்பிரிவுடன் முழுமையாக காங்கிரஸ் கைக்கோர்க்கும்," என்றார்.
ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்ற காங்கிரஸ் அதிகாரி ஒருவர் கூறுகையில், "நியாய யாத்திரை தொடங்கும் போது, பல காங்கிரஸ் தலைவர்கள் அதனை களத்தில் பணியாற்றுவது, கூட்டணி கட்சிகளுடன் பேசுவது போன்ற நடவடிக்கைகளை உள்ளடக்கியது என்று நினைத்தனர். பயணம் செய்ய வேண்டியது அல்ல என்று நினைத்தனர். ஆனால் இது ராகுல் காந்தி யாத்திரையின் முழுமையான செயல்பாடுகளில் உறுதியாக நின்றார்,” என்றார்.
அவர் மேலும் கூறுகையில், "யாத்திரையின் போது, இந்தியா கூட்டணி பிளவுபட்டது, நியாய யாத்திரை தொடங்கியபோது, எதிர்க்கட்சிகளின் திட்டமிடல் தொடங்கியது. அதே சமயம், காங்கிரஸ் மக்களிடமிருந்து யோசனைகளையும், ஆலோசனைகளையும் நேரடியாகப் பெற்றது. பெறப்பட்ட ஆலோசனைகளை ஒன்றுத் திரட்டி தேர்தல் வாக்குறுதிகள் உருவாக்கப்பட்டது," என்றார்.
காங்கிரஸின் வடகிழக்கு தேசிய ஊடக ஒருங்கிணைப்பாளர் மேத்யூ ஆண்டனி கூறுகையில், "இந்த யாத்திரையில் ராகுல் காந்தியின் முக்கிய திட்டம் என்னவென்றால், சாமானிய மக்களின் எண்ணங்களைக் கேட்பது தான். சாமானியர்களின் வார்த்தைகள் நியாய அறிக்கைகளாக உருவானது. யாத்திரையின் இரண்டாம் கட்டம், மோதி அரசின் பொய்களை அம்பலப்படுத்தியது,” என்றார்.
காங்கிரஸ், நாட்டில் நிலைநாட்ட வேண்டிய ஐந்து நீதிகளைப் பற்றி பேசி தேர்தலை சந்தித்தது. இளைஞர்கள், விவசாயிகள், பெண்கள், தொழிலாளர்கள் போன்றோருக்கு நீதி வழங்குவது குறித்து பேசப்பட்டது. இந்தப் பயணத்தின் போது பணவீக்கம், விவசாயிகள் பிரச்னைகள் மற்றும் வேலையின்மை குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து பேசினார்.
மூத்த பத்திரிக்கையாளரும் ஆய்வாளருமான ஜாவேத் அன்சாரி கூறுகையில், "ராகுல் காந்தி நாட்டில் மோதிக்கு எதிரான சூழலை உருவாக்கினார். அவரது வருகைகள் காங்கிரஸ் கட்சியினரை உற்சாகப்படுத்தியதுடன், போராட்ட குணத்தையும் தூண்டியது,” என்றார்.
அரசியல் சிந்தனையாளரும், ராகுல் காந்தியின் யாத்திரையில் பங்கேற்றவருமான யோகேந்திர யாதவ் கூறியது போல், "இது மக்களின் தேர்தல். இந்த முடிவை மக்களின் வெற்றியாக கருத வேண்டும்.”
அதே சமயம் ராகுல் காந்தியின் யாத்திரை தான் தேசத்தின் நிலைமையை மாற்றியதா அல்லது மக்கள் கொடுத்த தீர்ப்பா என்று கணிப்பது கடினம்.
இந்தத் தேர்தலில் சாதிவாரிக் கணக்கெடுப்பு குறித்து ராகுல் காந்தி தொடர்ந்து பேசினார். மக்கள் தொகைக்கு ஏற்றவாறு வளங்களின் பங்கு இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார். அவரின் இந்த முழக்கங்கள் நிச்சயமாகப் பல பிரிவுகளில் தாக்கத்தை ஏற்படுத்தியது. மற்றொரு புறம் சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு கோரிக்கைக்கு கடும் விமர்சனமும் எழுந்துள்ளது.
பிப்ரவரியில் பிபிசியிடம் பேசிய முன்னாள் அரசியல் விமர்சகரும், ஜன் சூரஜ் அபியான் அமைப்பின் ஒருங்கிணைப்பாளருமான பிரசாந்த் கிஷோர், “என்ன பிம்பம் உருவாகி உள்ளது? மோதி ஐந்து டிரில்லியன் (டாலர்) பொருளாதாரம் பற்றி பேசுகிறார், நாட்டை முன்னோக்கிக் கொண்டு செல்கிறார், முற்போக்கானவர், ஆனால் ராகுல் ஒரு பிற்போக்குத்தனமான நபரைப் போல் இருக்கிறீர்கள். ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்தபோது, சாதிவாரி மக்கள்தொகைக் கணக்கெடுப்பை செய்திருக்கலாமே?" என்றார்.
'அரசியலமைப்புச் சட்டம் ஆபத்தில் உள்ளது' என்று கூறியதன் மூலம் பிரதமர் மோதி மீது ராகுல் காந்தி கடும் விமர்சனத்தை முன்வைத்தார். பா.ஜ.க முழுப்பெரும்பான்மை பெற்றால் அரசியல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து இடஒதுக்கீட்டை முடிவுக்கு கொண்டு வரும் என்ற செய்தி தெளிவாக மக்களைச் சென்றடைந்தது.
சில பா.ஜ.க தலைவர்கள் இடஒதுக்கீடு பற்றி வெளியிட்ட அறிக்கை இந்த விஷயத்தை மேலும் தூண்டியது, ஆனால் பா.ஜ.க தேர்தல் அறிக்கையில் இடஒதுக்கீடு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை மற்றும் பா.ஜ.க தலைமையும் அதை மறுத்தது.
யோகேந்திர யாதவ் கூறுகையில், "அரசியலமைப்புச் சட்டம் என்பது முற்போக்குவாதிகளுக்கானது என்று நான் முன்பு நினைத்தேன், ஆனால் இது முக்கியமாக தலித் சமுதாயத்துக்குத் தேவையானது. ஏனெனில், ஒரு விவசாயிக்கு நிலக் குத்தகை எவ்வளவு முக்கியமோ, அதே அளவு ஒரு தலித்துக்கு இடஒதுக்கீடு முக்கியம். மக்கள் தங்கள் நிலம் பறிக்கப்படுவதாக உணர்ந்ததால் தான் விவசாயிகள் இயக்கம் தொடங்கப்பட்டது,” என்றார்.

பட மூலாதாரம், ANI
எதிர்கால சவால்கள்
காங்கிரசை விட்டு வெளியேறி மற்ற கட்சிகளுக்கு வாக்களிக்கும் பிரிவினரை எப்படி மீண்டும் தங்கள் பக்கம் கொண்டு வருவது என்பதுதான் காங்கிரஸின் முன்பு இருந்த சவாலாக இருந்தது.
காங்கிரஸ் 1991-இல் செய்த பொருளாதாரச் சீர்திருத்தங்கள் வாக்குகளைப் பெற உதவவில்லை. நரசிம்மராவ் 1996-இல் தோற்றார். மன்மோகன் சிங் 2004 முதல் 2014 வரை சீர்திருத்தங்களின் முகமாக பார்க்கப்பட்டார். ஆனால் அவர் ஏழைகளின் முகமாகச் செயல்படவில்லை. இதை உணர்ந்த ராகுல் காந்தி ஏழை மக்களின் மனதை வெல்ல கடுமையாக உழைத்தார்.
இப்போது பொருளாதாரச் சீர்திருத்தங்களின் பலனைப் பெறாத ஏழைகள் மற்றும் சமூகத்தின் தாழ்த்தப்பட்ட பிரிவினருடன் காங்கிரஸ் தொடர்பு கொள்ள முடிந்தது. அதன் பின்னர் காங்கிரஸுக்கு 'இந்தியாவில்' ஆதரவு அதிகரித்தது, ஆனால் நடுத்தர வர்க்கம் காங்கிரஸைப் புறக்கணித்தது.
வரும் நாட்களில், ஹரியாணா, மகாராஷ்டிரா மற்றும் ஜார்கண்ட் போன்ற மாநிலங்களில் சட்டசபைத் தேர்தல்கள் நடைபெறவுள்ளன, மேலும் மக்களவைத் தேர்தலுக்குப் பிறகு இந்தியா கூட்டணி மற்றும் குறிப்பாக காங்கிரஸின் செயல்பாடு எப்படி இருக்கும் என்பது அனைவரின் எதிர்பார்ப்பாக இருக்கும்.
சஞ்சீவ் ஸ்ரீவஸ்தவாவின் கூற்றுப்படி, "வரவிருக்கும் சட்டமன்ற மற்றும் 2029 மக்களவைத் தேர்தல்களில் கட்சியை வலுப்படுத்துவதற்கு ராகுல் காந்தியும் காங்கிரஸும் தொடர்ந்து களத்தில் பணியாற்றுவது முக்கியம்."
"மோதி மற்றும் பா.ஜ.க-வின் இந்துத்துவா அரசியல் தோல்வியடைந்துவிட்டதாக எதிர்க்கட்சிகள் நினைக்க வேண்டாம். அது தோல்வியடைந்திருந்தால் எண்ணிக்கை இன்னும் குறைந்திருக்கும். இன்று அது அமைதியாக்கப்பட்டுள்ளது, அவ்வளவு தான். ஆனால் அதை மீண்டும் ஊதிப் பெரிதாக்க வேண்டாம்," என்று அவர் கூறுகிறார்.
அரசியல் ஆய்வாளர் ராகுல் வர்மா கூறுகையில், "திடீரென ராகுல் காந்தியின் 'மேஜிக்' வேலை செய்யத் தொடங்கியது என்று காங்கிரஸ் நினைத்துவிடாமல் இருப்பது முக்கியம். கடுமையான உழைப்பை நிறுத்திவிடக் கூடாது," என்றார்.
"ஒடிஷா போன்ற இடங்களில் பா.ஜ.க புதிய தொகுதிகளை வென்றுள்ளது. சமீபத்திய முடிவுகளின் அடிப்படையில் முன்னேற வேண்டிய அவசியம் உள்ளது. காங்கிரஸுக்கு அரசியல் எளிதாகிவிட்டது என்று நினைக்கக்கூடாது," என்றார்.
இந்தச் சிந்தனைகள் காங்கிரஸை எந்தளவுக்கு கொண்டு செல்கிறது என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ரஷித் கித்வாய் கூறுகையில், "எவ்வளவு மாநிலங்களில் காங்கிரஸ் அரசு ஆட்சிக்கு வருகிறதோ, அந்த அளவுக்கு அவர்கள் நரேந்திர மோதி மற்றும் பா.ஜ.க மீது அதிக செல்வாக்கு செலுத்த முடியும், ஏனெனில் உண்மையான சவால்கள் இப்போதுதான் தொடங்கியுள்ளன,” என்றார்.
"புதிய மக்களவையில் ராகுல் காந்தி எதிர்க்கட்சித் தலைவராக வர வேண்டும், நாடாளுமன்றத்திலும், ஆட்சியிலும், பா.ஜ.க-வுக்கு முட்டுக்கட்டை போட வேண்டும். ராகுல் ஆரம்பத்திலேயே எதிர்க்கட்சித் தலைவராக இருந்திருந்தால், பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்," என்றார்.
"வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் ராகுல் காந்தி தனது செயல்பாட்டின் மூலம், அவரைத் தவறாகச் சித்தரித்து, 'பருவகால அரசியல்வாதி' என்ற கட்டமைக்கப்பட்ட பிம்பத்தை அவர் உடைக்க வேண்டும். அக்கட்சியின் சமீபகால சிறப்பான செயல்பாடுகள் எந்த விதத்திலும் அதிர்ஷ்டத்தால் வரவில்லை என்பதை ராகுல் காந்திக்கு நிரூபிக்க வேண்டும்,” என்றார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












