பாலியல் துன்புறுத்தல் சர்ச்சைக்குப் பிறகு ஒலிம்பிக்கில் கவனம் செலுத்தும் இந்திய மல்யுத்த வீராங்கனைகள்

வினேஷ் போகத்
படக்குறிப்பு, 2023ஆம் ஆண்டு நடந்த போராட்டத்தில் பங்கேற்ற முன்னணி மல்யுத்த வீராங்கனைகளில் ஒருவரான வினேஷ் போகத்
    • எழுதியவர், திவ்யா ஆர்யா,
    • பதவி, பிபிசி இந்தி

பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்து நடந்த போராட்டங்கள் இந்திய மல்யுத்த களத்தை உலுக்கி, ஒரு வருடம் கடந்துவிட்டது. இப்போது மல்யுத்த வீராங்கனைகள் 2024 பாரிஸ் ஒலிம்பிக் உட்பட முக்கிய போட்டிகளுக்காகத் தயாராகி வருகின்றனர். இளம் மல்யுத்த வீரர்களிடம் அவர்களின் பயணம் குறித்து பிபிசி பேசியது.

இந்திய மல்யுத்த களத்தை உலுக்கிய போராட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2023-ஆம் ஆண்டு நடைபெற்ற போராட்டங்களின்போது தலைசிறந்த விளையாட்டு வீரர்கள் தடுப்பு காவலில் வைக்கப்பட்டது உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்திய மல்யுத்த களத்தை உலுக்கிய போராட்டங்கள்

ரீத்திகா ஹூடா கிட்டத்தட்ட தேர்வாகவில்லை.

ஆனால், இறுதியில் இந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டிக்குத் தகுதி பெற்ற ஐந்து இந்திய மல்யுத்த வீராங்கனைகளில் 23 வயதான ரீத்திகா ஒருவர்.

அவரது நம்பிக்கையைத் தளர்த்திய ஒரு வருடப் பின்னடைவுக்குப் பிறகு அவருக்குக் கிடைத்துள்ள ஒரு அருமையான வாய்ப்பு இது. தன் விளையாட்டை மேம்படுத்த அதிகப்படியான பயிற்சியும் போட்டிகளும் தேவை என்பதை அவர் அறிந்துள்ளார்.

ஒரு வருடத்திற்கு முன்பு மல்யுத்தக் கூட்டமைப்பின் தலைவர் பிரிஜ் பூஷண் சிங் மீது பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டதைத் தொடர்ந்து இந்தியாவில் மல்யுத்த நடவடிக்கைகள் நின்றுபோயின.

பிரிஜ் பூஷண் சிங் இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்து வருகிறார்.

இந்தியாவின் விளையாட்டு அமைச்சகம் பிரிஜ் பூஷண் சிங்கைப் பதவி நீக்கம் செய்யவில்லை. ஆனால் பாலியல் துன்புறுத்தல் தடுப்புச்சட்டங்களைப் பின்பற்றாதது உட்பட பல குறைபாடுகளைக் கண்டறிந்த பின்னர் அது மல்யுத்த கூட்டமைப்பைக் கலைத்தது. விளையாட்டை முன்னெடுத்துச்செல்ல ஒரு தற்காலிகக் குழுவை அரசு அமைத்தது.

முன்னெப்போதும் நடந்திராத ஒன்று அரங்கேறியது. மல்யுத்தத்தில் ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஒரே இந்திய வீராங்கனை சாக்‌ஷி மாலிக் உட்பட நாட்டின் மிகவும் திறமையான மல்யுத்த வீரர்கள், பிரிஜ் பூஷண் சிங் ராஜினாமா செய்ய வேண்டும் எனக்கோரி டெல்லி சாலைகளில் முகாமிட்டதை ஹூடா நினைவு கூர்ந்தார்.

இந்திய மல்யுத்த களத்தை உலுக்கிய போராட்டங்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மல்யுத்த வீரர்கள் நடத்தப்பட்ட விதத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) கண்டித்தது

உலகின் கவனத்தை ஈர்த்தப் போராட்டம்

இந்தப் போராட்டம் உலக அளவில் தலைப்புச் செய்திகளில் இடம்பெற்றது. மல்யுத்த வீரர்கள் இந்தியாவின் புதிய நாடாளுமன்றக் கட்டிடத்திற்கு அணிவகுத்துச் செல்ல முயன்றபோது காவல்துறை அவர்களைத் தடுப்புக்காவலில் வைத்ததை தொடர்ந்து உலகின் கவனம் போராட்டத்தின் மீது திரும்பியது.

மல்யுத்த வீரர்கள் நடத்தப்பட்ட விதத்தை சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (IOC) கண்டித்தது. அவர்களது புகார்கள் மீது பாரபட்சமற்ற விசாரணைக்கும் அது அழைப்பு விடுத்தது.

"இது வருத்தத்தை அளித்தது. என்ன நடக்கிறது என்பது மட்டுமல்ல, என்ன நடக்கவில்லை என்பதும் இதற்குக் காரணம்," என்று ஹூடா கூறினார்.

சாக்‌ஷி மாலிக்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 2016 ரியோ ஒலிம்பிக்கில் சாக்‌ஷி மாலிக் 58 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் வெண்கல பதக்கம் வென்றார்

சாக்‌ஷி மாலிக்கின் முடிவு

ஒவ்வொரு ஆண்டும் சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி சில போட்டிகளை, விளையாட்டுகளுக்கான தகுதி நிகழ்வுகளாக நியமிக்கிறது. போட்டிக்குத் தகுதி பெற மல்யுத்த வீரர்கள் சோதனை ஆட்டங்களில் தரவரிசைப் புள்ளிகளைப் பெற வேண்டும். தேசியப் போட்டிகளில் வெற்றி பெற வேண்டும், மற்றும் இந்தியாவின் மல்யுத்தக் கூட்டமைப்பின் (WFI) ஒப்புதலைப் பெற வேண்டும்.

ஆனால் போட்டியிடுவதற்குப் பதிலாக ஹூடா வாரக்கணக்கில் வெற்று விளையாட்டு காலண்டரை வெறித்துப் பார்க்க வேண்டியதாயிற்று.

"நாங்கள் பயிற்சிகளை மேற்கொண்டோம். ஆனால் சோதனை போட்டிகள் எதுவும் நடக்கவில்லை. எனவே எங்களால் போட்டியிட்டு, எங்கள் குறைபாடுகளை அறிய முடியவில்லை. (ஒலிம்பிக் பந்தயத்திற்கு) நாங்கள் தயாராக இருக்க மாட்டோம் என்ற பயம் தொடர்ந்து இருந்தது," என்று அவர் கூறினார்.

ஒலிம்பிக்கில் தனிநபர் போட்டிகளில் 24 பதக்கங்களை வென்றுள்ள, அதுவும் அந்தப் பதக்கங்களில் கால் பங்கிற்கும் மேல் மல்யுத்தத்தில் வென்றுள்ள ஒரு நாட்டிற்கு இது கவலையளிக்கும் விஷயமாகும். எதிர்ப்புகள் தொடங்கி கிட்டத்தட்ட ஒரு வருடம் கழித்து இறுதியாக 2023-ஆம் ஆண்டு டிசம்பரில் இந்திய மல்யுத்தக் கூட்டமைப்புக்கான புதிய தேர்தல் நடத்தப்பட்டது.

பிரிஜ் பூஷண் சிங்குடன் தொடர்புடையவர்கள் தேர்தலில் பங்கேற்பதைத் தடுக்குமாறு மல்யுத்த வீரர்கள் இந்திய விளையாட்டு அமைச்சரிடம் கேட்டுக் கொண்டனர். ஏற்கனவே அதிகபட்சமாக மூன்று முறை இந்தப் பதவியை வகித்துள்ளதால் பிரிஜ் பூஷண் சிங் தேர்தலில் போட்டியிடவில்லை. ஆனால் அவரது நெருங்கிய உதவியாளர் சஞ்சய் சிங் அமோக வெற்றி பெற்று தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இது மல்யுத்த வீராங்கனைகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதே நாள் ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற சாக்‌ஷி மாலிக் தனது எதிர்ப்பைப் பதிவுசெய்யும் விதமாக விளையாட்டிலிருந்து விலகினார்.

"அந்தத் தருணத்தை நினைக்கும் போது இப்போது கூட நான் உணர்ச்சிவசப்படுகிறேன்," என்று மாலிக் கூறினார்.

"மல்யுத்தம் என்னைப் பெரிய உயரத்திற்கு அழைத்துச் சென்றது. அன்பையும் மரியாதையையும் பெற்றுத் தந்தது. நான் அதை இழக்க வேண்டிவந்தது," என்றார் அவர்.

2016 ரியோ ஒலிம்பிக்கில் சாக்‌ஷி மாலிக்

பட மூலாதாரம், Getty Images

'நான் மல்யுத்தத்தில் ஈடுபட சாக்‌ஷி தான் காரணம்'

இளம் மல்யுத்த வீரர்கள் மாலிக்கின் இந்த முடிவால் அதிர்ச்சி அடைந்தனர். ஆனால் விரைவில் அவர்கள் களத்திற்கு திரும்பினர்.

“நான் மல்யுத்தத்தில் ஈடுபடுவதற்கு சாக்‌ஷி மாலிக் தான் காரணம்,” என்று ஹரியாணா மாநிலத்தைச் சேர்ந்த 20 வயது மல்யுத்த வீராங்கனை தனு மாலிக் கூறுகிறார்.

"எங்களுக்காக அவர் போராடினார். அவர் அழுததைப் பார்த்தபோது, இப்போது நான் பின்வாங்க முடியாது என்று எனக்குள் நினைத்தேன்," என்று அவர் குறிப்பிட்டார்.

அன்று முதல் தனு மாலிக் கடினமாக உழைக்க முடிவு செய்தார். ஹரியாணா மாநிலத்தில் உள்ள அனைத்து மகளிர் யுத்வீர் மல்யுத்த அகாடமியில் அவரது பயிற்சி காலை நாலரை மணிக்குத் தொடங்குகிறது.

பெரிய டிரக் டயர்களைத் தூக்குவது மற்றும் மல்யுத்த நுட்பங்களைப் பயிற்சி செய்வது போன்ற கடுமையான ஐந்து மணிநேர உடற்பயிற்சியுடன் நாள் தொடங்குகிறது. உணவு மற்றும் ஓய்வுக்கான இடைவேளைக்குப் பிறகு பெண்கள் மதியம் மேலும் ஐந்து மணி நேரம் பயிற்சி செய்கிறார்கள்.

12 வயது சிறுமிகள் கூட பயிற்சியில் ஈடுபடுகிறார்கள். ஓய்வு நேரத்தில் அவர்கள் தங்கள் டயட் பற்றிப் பேசுகிறார்கள். நல்ல உடல் தகுதியுடன் இருக்க உதவும் ரெசிபிகளை பகிர்ந்து கொள்கிறார்கள்.

அகாடமிகளில் நடப்பதாகக் கூறப்படும் பாலியல் துன்புறுத்தல்கள் அல்லது மல்யுத்தக் கூட்டமைப்பின் முன்னாள் தலைவர் மீதான குற்றச்சாட்டுகள் பற்றி அவர்களில் யாரும் பேச விரும்பவில்லை. எனினும் இந்த விளையாட்டைக் கைவிடக்கூடாது என்பதில் அவர்கள் உறுதியாக உள்ளனர்.

போராட்டத்திற்குப் பிறகு எதிர்பார்ப்புகளுக்கு மாறாக அகாடமியில் பெண்களின் எண்ணிக்கை குறையவில்லை என்று பயிற்சியாளர் சீமா கராப் கூறுகிறார்.

"இந்தப் போராட்டமானது, தங்கள் குரலை உயர்த்த முடியும் என்ற தன்னம்பிக்கையை இளம் மல்யுத்த வீரர்களுக்கு ஏற்படுத்தியுள்ளது. ஆக்கபூர்வ நடவடிக்கை எடுக்கப்படலாம் என்றும் அமைப்பிற்குள் அவர்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையும் ஏற்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

ரீத்திகா ஹூடா
படக்குறிப்பு, ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்ற ஐந்து இந்திய மல்யுத்த வீராங்கனைகளில் ரீத்திகா ஹூடாவும் ஒருவர்

மல்யுத்தக் கூட்டமைப்பின் புதிய தலைவர்

பிரிஜ் பூஷண் சிங் மீது காவல் துறையினர், ’பின்தொடர்தல், துன்புறுத்தல், மிரட்டல் மற்றும் பாலியல் ரீதியிலான பேச்சு’ போன்ற குற்றச்சாட்டுகளைச் சுமத்தினர். ஆனால் நீதிமன்றம் அவருக்கு ஜாமீன் வழங்கியது.

இதற்கிடையில் புதிய கூட்டமைப்பின் தலைவரான சஞ்சய் சிங் பதவி ஏற்றார்.

முன்னாள் தலைவருடனான தனது 30 ஆண்டுகால உறவை அவர் ஒப்புக்கொண்டார். ஆனால் பிரிஜ் பூஷண் சிங்கின் குறுக்கீடு பற்றிய குற்றச்சாட்டுகளை நிராகரித்த அவர் மல்யுத்த வீரர்கள் தன்னைப் புதிய தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளதாகக் கூறினார்.

இந்த ஆண்டு தேசிய மல்யுத்தப் போட்டிகளில் பெரும் எண்ணிக்கையில் வீரர்கள் கலந்து கொண்டதில் இருந்து இது தெளிவாகிறது என்று அவர் தெரிவித்தார்.

"எந்த ஒரு வீரருக்கும் எதிராகப் பாகுபாடு காட்டப்படாது. ஒவ்வொரு மல்யுத்த வீரரும் எனக்கு மிகவும் பிடித்தவர்கள். நான் இரண்டு பெண் குழந்தைகளின் தந்தை. மகள்களுக்கு என்ன தேவை என்பதை நான் புரிந்துகொள்கிறேன்,” என்று அவர் மேலும் கூறினார்.

இருப்பினும், தனு மாலிக் போன்ற இளம் பெண்களுக்கு பயம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகிவிட்டது.

"இது எளிதானது அல்ல. என்னைத் தனியாகப் பயிற்சிக்கு அனுப்புவது பற்றி என் பெற்றோர் தொடர்ந்து கவலைப்படுகிறார்கள்," என்று அவர் கூறுகிறார். "ஆனால் அவர்கள் எங்களை நம்ப வேண்டும். இல்லையெனில் எப்படி செயல்பட முடியும்? இது போராடாமல் தோல்வியை ஏற்றுக்கொள்வது போன்றது,” என்று அவர் கூறினார்.

 சஞ்சய் சிங்
படக்குறிப்பு, மல்யுத்த கூட்டமைப்பை நல்ல விதமாக நடத்துவதாக அதன் புதிய தலைவர் சஞ்சய் சிங் கூறுகிறார்

பயிற்சியில் இடையூறு ஏற்பட்டதால் இளம் மல்யுத்த வீரர்கள் ஒரு முக்கியமான ஆண்டை இழந்துவிட்டனர் என்று ஆசிய சாம்பியன்ஷிப்பில் தங்கப் பதக்கம் வென்ற ஷிக்ஷா கராப் கூறுகிறார். ஆனால் சாக்‌ஷி மாலிக்கிற்கு எந்த வருத்தமும் இல்லை.

"போராடுவதுதான் மிக முக்கியமான விஷயம்," என்று அவர் கூறினார். "இனி எந்த விளையாட்டுக் கூட்டமைப்பிலும் யாரும் [தவறான] எதையும் செய்யத் துணிவார்கள் என்று நான் நினைக்கவில்லை. துன்புறுத்தல்கள் பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் இப்போது அறிவார்கள்," என்று அவர் சுட்டிக்காட்டினார்.

மல்யுத்தப் போட்டிகளில் உலகின் மிகப் பெரிய ஜாம்பவான்களுடன் மோதப்போவதை நினைத்தால் பதற்றமாக உள்ளது என்று தெரிவித்த ஹூடா, ஆனால் கூடவே அதை ஆவலுடன் எதிர்நோக்குவதாகவும் கூறினார்.

“வெற்றியும் தோல்வியும் முக்கியமில்லை. உங்கள் கடின உழைப்பை நம்புங்கள் என்று சாக்‌ஷி மாலிக் கூறுவார். அதைத்தான் நான் செய்யப்போகிறேன்,” என்றார் அவர்.

அவர் பயிற்சிக்குத் தயாராகும் நேரத்தில், தனது ஒலிம்பிக் பதக்கத்துடன் போஸ் கொடுக்கும் சாக்‌ஷியின் படம் அவரைப் பார்த்து புன்னகைக்கிறது.

"என் முழு கவனமும் இப்போது பதக்கம் வெல்வதில் மட்டுமே உள்ளது," என்று கூறிய அவர் "யாருக்குத்தெரியும், ஒருநாள் அவருடைய புகைப்படத்திற்கு பக்கத்தில் என் படமும் இருக்கலாம்," என்று கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)