கமலா ஹாரிஸ் யார், அவர் அமெரிக்க அதிபராக என்ன வாய்ப்பு உள்ளது?

கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அதிபர் தேர்தலில் இருந்து பைடன் விலகியிருக்கும் நிலையில், அந்தப் போட்டியில் கமலா ஹாரிஸ் இடம்பெற வாய்ப்புள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலுக்கான போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகியிருக்கும் நிலையில், தனது ஆதரவை துணை அதிபராக இருப்பவரும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸுக்கு வழங்கியுள்ளார்.

எனினும் உடனடியாக கமலா ஹாரிஸ் அதிபர் வேட்பாளராகிவிட முடியாது. ஜனநாயகக் கட்சிப் பிரதிநிதிகளின் முறையான ஆதரவு அவருக்குத் தேவைப்படும்.

கமலா ஹாரிஸுக்கு ஆதரவு (கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் சிறப்பாக பணியாற்றினார் என ஏற்றுகொண்டோரின் விகிதம்) குறைவாகவே உள்ளது.

அதிபராக தேர்ந்தெடுக்கப்படும் அளவிற்கு துணை அதிபர் பதவி காலத்தில் அவர் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறாரா என்ற சந்தேகமும் உள்ளது.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கமலா ஹாரிஸ் அரசியலுக்கு வந்தது எப்படி?

2020 அதிபர் தேர்தலுக்கு பிறகு துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹாரிஸ், இந்தப்பதவியில் அமர்ந்த முதல் பெண்மணி, முதல் கறுப்பினத்தவர் மற்றும் முதல் ஆசிய வம்சாவளியினர் உள்ளிட்ட பெருமைகளை பெற்றார்..

2021 நவம்பரில் ஜோ பைடன் மருத்துவ சிகிச்சையில் இருந்தபோது அவர் 75 நிமிடங்கள் அதிபர் பொறுப்பை வகித்தார்.

கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Kamala Harris

படக்குறிப்பு, சிறுமி கமலா தன் தாய் மற்றும் தங்கை மாயாவுடன்

கமலா ஹாரிஸ், கலிஃபோர்னியாவின் ஓக்லாண்டில், இந்தியாவில் பிறந்த தாய் மற்றும் ஜமைக்காவில் பிறந்த தந்தை ஆகிய இரு புலம்பெயர்ந்த பெற்றோருக்கு மகளாகப் பிறந்தார்.

அவருக்கு ஐந்து வயதாக இருந்தபோது பெற்றோர் விவாகரத்து செய்தனர். அதன் பிறகு கமலா முக்கியமாக அவரது தாயார் ஷியாமளா கோபாலன் ஹாரிஸால் வளர்க்கப்பட்டார். ஷியாமளா, புற்றுநோய் ஆராய்ச்சியாளர் மற்றும் சிவில் உரிமை ஆர்வலர்.

ஓக்லாண்டின் கறுப்பின சமூகத்தில் தன்னையும் தனது தங்கை மாயாவையும் தன் தாய் முழுமையாக இணைத்ததாக கமலா ஹாரிஸ் கூறுகிறார்.

"இரண்டு கறுப்பின மகள்களை தான் வளர்த்து வருவதை என் அம்மா நன்றாக புரிந்து கொண்டார்" என்று அவர் தனது சுயசரிதையான ’தி ட்ரூத்ஸ் வி ஹோல்ட்’ புத்தகத்தில் எழுதினார்.

"தாய்நாடாக தான் தேர்ந்தெடுத்த நாடு, மாயாவையும் என்னையும் கறுப்பினப் பெண்களாகப் பார்க்கும் என்பதை அவர் அறிந்திருந்தார். மேலும் நாங்கள் தன்னம்பிக்கையுள்ள, பெருமைமிக்க கறுப்பினப் பெண்களாக வளர்வதை உறுதி செய்தார்,” என்று கமலா குறிப்பிட்டுள்ளார்.

கமலா ஹாரிஸ் ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பயின்றார். இது நாட்டின் முதன்மையான மற்றும் பழமையான கறுப்பின கல்லூரிகளில் ஒன்றாகும். அங்கு அவர் தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிரான மற்றும் அமெரிக்காவில் இன உறவுகள் போன்ற அரசியல் பிரச்னைகளை எதிர்கொண்டார்.

கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கமலா ஹாரிஸ் கலிஃபோர்னியாவின் ஓக்லாண்டில் உள்ள அலமேடா கவுண்டி மாவட்ட வழக்கறிஞர் அலுவலகத்தில் தனது சட்டப்பணி வாழ்க்கையைத் தொடங்கினார்

கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஹேஸ்டிங்ஸ் கல்லூரியில் படித்து வழக்கறிஞரான அவர், கலிஃபோர்னியாவில் உள்ள பல்வேறு மாவட்ட வழக்கறிஞர் அலுவலகங்களில் பணிபுரிந்தார்.

2010 இல் கலிஃபோர்னியாவின் அட்டர்னி ஜெனரலாக உயர்ந்தார். 2016 இல் அம்மாகாணத்தின் அமெரிக்க செனட்டராக அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

2020 ஆம் ஆண்டில் கமலா ஹாரிஸ் ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராக தான் பரிந்துரைக்கப்பட வேண்டும் என்று பிரசாரம் செய்தார். ஆனால் ஆரம்ப கட்டத்திலேயே போட்டியிலிருந்து வெளியேறினார்.

இருப்பினும் அதிபர் வேட்பாளராக பரிந்துரைக்கப்பட்ட ஜோ பைடன் கமலா ஹாரிஸை துணை அதிபர் வேட்பாளராக அறிவித்தார்.

"கமலா புத்திசாலி, உறுதியானவர், அனுபவம் வாய்ந்தவர், கடுமையாக போராடக்கூடியவர்,” என்று பைடன் கமலா பற்றிக் குறிப்பிட்டார்.

இருவரும் இணைந்து அப்போதைய அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் துணை அதிபர் மைக் பென்ஸை தோற்கடித்தனர்.

பிரசாரத்தின்போது கமலா ஹாரிஸ் பைடனின் பின்னணியில் இருந்தாலும் கூட, அவர் ஒரு பெண் மற்றும் கறுப்பினத்தவர் என்ற அடையாளம் அவர்களின் வெற்றியில் பெரும் பங்கு வகித்திருக்கலாம். ஏனெனில் அவர்களுக்கு கறுப்பின பெண்களால் அளிக்கப்பட்ட 90% வாக்குகள் கிடைத்தன.

கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு,

துணை அதிபராக கமலா ஹாரிஸ் என்ன செய்தார்?

அமெரிக்க துணை அதிபர் என்ற நிலையில் கமலா ஹாரிஸ் அமெரிக்க செனட்டின் தலைவராகவும் உள்ளார். மசோதாக்களில் வாக்குகள் சமமாக இருக்கும்போது அவர் தன் வாக்கை அளிக்க முடியும்.

அமெரிக்காவின் வரலாற்றில் வேறு எந்த துணை அதிபரையும் விட அதிகமாக 32 முறை அந்த அதிகாரத்தை பயன்படுத்தி அவர் சாதனை படைத்துள்ளார்.

"அறையின் கடைசி குரலாக ஒலிக்கும் கமலா, அனுமானங்களை சவால் செய்வார் மற்றும் கடினமான கேள்விகளைக் கேட்பார்," என்று பைடன் தனது துணை அதிபர் பற்றிக் கூறினார்.

கருக்கலைப்பை அமெரிக்காவின் முழு உரிமையாக்கிய ‘ஜேன் ரோ vs ஹென்றி வேட்’ தீர்ப்பை உச்சநீதிமன்றம் ரத்து செய்ததை தொடர்ந்து, இனப்பெருக்க உரிமைகளை பாதுகாப்பதற்காக 2022 முதல் நாடு முழுவதும் அவர் சுற்றுப்பயணம் செய்தார்.

கமலா ஹாரிஸ்

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, கமலா ஹாரிஸ், மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவின் தெற்கு எல்லையை கடக்கும் குடியேறிகளின் எண்ணிக்கையை குறைக்கவில்லை

எவ்வாறாயினும் ஹாரிஸ் துணை அதிபராக இருந்த காலம் முழுவதும் அவருக்கு ஆதரவு (கருத்துக்கணிப்பில் கமலா ஹாரிஸ் சிறப்பாக பணியாற்றினார் என ஏற்றுகொண்டோரின் விகிதம்) குறைவாகவே இருந்தது.

51% அமெரிக்கர்கள் அவரது செயல்திறனை ஏற்கவில்லை எனவும் 37% பேர் மட்டுமே அவரது பணிக்கு ஒப்புதல் அளித்துள்ளனர் எனவும் 'ஃபைவ் தெர்டி எயிட்' தொகுத்த கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.

அமெரிக்க தெற்கு எல்லையில் குடியேற்றத்தை குறைப்பதே அதிபர் பைடன் துணை அதிபருக்கு வழங்கிய முக்கிய பணி என்றும், அந்த சிக்கலை சரிசெய்ய அவர் பெரும்பாலும் தவறிவிட்டார் என்றும் பிபிசியின் அமெரிக்க சிறப்பு செய்தியாளர் கேட்டி கே கூறுகிறார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)