ஹாத்ரஸ் நெரிசலில் இத்தனை பேர் உயிரிழந்தது ஏன், மருத்துவ வசதிகளுக்கு என்ன ஆனது? - பிபிசி கள ஆய்வு

ஹாத்ரஸ்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ஜுகல் ஆர் புரோஹித்
    • பதவி, பிபிசி நியூஸ், ஹாத்ரஸ்

நிரம்பி வழிந்த பக்தர்கள் கூட்டம், வழிபாட்டு கூட்டம் நடக்க இருப்பதே தெரியாமல் செயல்பட்டுக் கொண்டிருந்த அரசு மருத்துவமனைகள், நிவாரண முயற்சிகளில் இருந்து விலக்கி வைக்கப்பட்ட உள்ளூர் தனியார் மருத்துவமனைகள், முடங்கிப்போன பொது சுகாதார அமைப்பு.

ஹாத்ரஸ் கூட்ட நெரிசல் சம்பவத்திற்கு பிறகு அங்கு மருத்துவ ஏற்பாடுகளை பிபிசி ஆய்வு செய்தபோது இவைதான் தெரியவந்தன.

ஜூலை 2 ஆம் தேதி ஹாத்ரஸில் 120 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்த சம்பவத்தில் இந்த நான்கு காரணிகளும் ஆற்றிய பங்கு பற்றிய வெளிவராத கதையை இப்போது நீங்கள் படிக்க உள்ளீர்கள்.

வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இப்போது நாம் அடிப்படை தகவல்களுடன் தொடங்கலாம்.

ஜிடி நெடுஞ்சாலையை ஒட்டியுள்ள ஒரு இடத்தில் இந்தக் கூட்டத்தை நடத்த உள்ளூர் நிர்வாகம் ஒப்புதல் அளித்தது. நிகழ்ச்சியில் 80,000 பேர் கலந்து கொள்வார்கள் என்று கூறி நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் உள்ளூர் நிர்வாக உதவியை நாடியதாகவும், ஆனால் அதே நேரம் மூன்று மடங்குக்கும் அதிகமானவர்கள் வந்து சேர்ந்தனர் என்றும் காவல்துறையின் முதல் தகவல் அறிக்கை (எஃப்ஐஆர்) குறிப்பிடுகிறது. ​​

அமைப்பாளர்கள் பரிந்துரைக்கப்பட்ட நிபந்தனைகளைப் பின்பற்றவில்லை என்றும், இந்த விவகாரம் தீவிரமடைந்தபோது அவர்கள் பக்தர்களுக்கு உதவவில்லை என்றும் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

உத்தர பிரதேசம் ஹாத்ரஸ் கூட்ட நெரிசல்
படக்குறிப்பு, ஹாத்ரஸ் நெரிசலில் காயமடைந்த ஷிகா குமாரி சிகிச்சை பெற்று வருகிறார்.

இருப்பினும், போலீஸாரின் மதிப்பீட்டை தாங்கள் ஏற்கவில்லை என்று ஏற்பாட்டாளர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.

கூட்டம் நடந்த இடத்திலிருந்து 6 கிமீ தொலைவில் சிக்கந்த்ராராவில் உள்ள அரசின் சமூக சுகாதார மையம் (CHC) தான், அதற்கு மிக அருகாமையில் இருக்கும் பொது சுகாதார வசதி ஆகும். 30 படுக்கைகள் கொண்ட இந்த மருத்துவமனை, பிரதான சாலையிலிருந்து சிறிதே தள்ளி செடி கொடிகள் நிறைந்த ஒரு பகுதியில் அமைந்துள்ளது. ஊழியர்களுக்கான பல குடியிருப்புகளும் அங்கு உள்ளன. ஜூலை 2 ஆம் தேதியன்று இது மிகவும் உதவிகரமாக அமைந்தது.

அன்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் பாதிக்கப்பட்டவர்கள் முதலில் இங்குதான் வந்தனர். மருத்துவமனையின் முற்றம் இறந்தவர்கள் மற்றும் கயமடைந்தவர்களால் நிரம்பியது.

ஹாத்ரஸ் உட்பட நான்கு மாவட்டங்களில் பொது சுகாதார வசதிகளை மேற்பார்வையிடும் கூடுதல் இயக்குநர் (சுகாதாரம்) டாக்டர் மோகன் ஜாவை வெள்ளிக்கிழமை நாங்கள் சந்தித்தோம்.

"மூன்று குழந்தைகளின் உடல்களை முதலில் பார்த்த சிகந்திராராவ் டாக்டர்கள், என்ன நடந்தது என்று அறிய போலீசாரை அழைத்தனர். அப்போதுதான் போலீசார் சம்பவம் குறித்து தெரிவித்தனர். எனவே எங்கள் ஊழியர்கள் உடனடியாக நடவடிக்கை எடுத்தனர். மருத்துவர்கள், செவிலியர்கள், மற்றும் விடுப்பில் உள்ளவர்களை அழைத்தனர்,” என்று அவர் தெரிவித்தார்.

உத்தர பிரதேசம் ஹாத்ரஸ் கூட்ட நெரிசல்

மையத்தில் உள்ளவர்களுடன் பிசிசி பல மணிநேரம் பேசிக்கொண்டிருந்தது.

இந்த அனுபவம் தங்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியதாக ஊழியர்கள் தெரிவித்தனர்.

"இறந்துகிடந்த மற்றும் மயக்கத்தில் இருந்த மக்கள் கூட்டத்தின் வழியாக தொடர்ந்து நடந்து யார் சுவாசிக்கிறார்கள் என்பதைப் பார்த்து அவர்களுக்கு மருத்துவ உதவியை வழங்கவேண்டி இருந்தது." என்று ஒரு ஊழியர் கூறினார்.

ஊழியர்கள் படும் கஷ்டங்களைப்பார்த்த அருகில் இருக்கும் தனியார் மருத்துவமனைகளின் மருத்துவர்கள் அவர்களுக்கு உதவினர்.

பொது சுகாதார மையத்தில் நாங்கள் பேசிய ஏறக்குறைய அனைவருமே, இவ்வளவு பெரிய கூட்டம் நடக்க இருப்பது பற்றி தங்களுக்கு தெரியாது என்று கூறினர். தெரிந்திருந்தால் இன்னும் சிறப்பாக முன்னேற்பாடுகள் செய்திருக்க முடியும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

"நாங்கள் எங்களால் முடிந்தவரை முயற்சித்தோம். ஆனால் உண்மை என்னவென்றால், நாங்கள் இதற்கு தயாராக இருக்கவில்லை. இவ்வளவு பெரிய துயரத்தை கையாளும் அளவிற்கு எங்களிடம் வசதிகளும் இல்லை," என்று ஊழியர் ஒருவர் கூறினார்.

அந்த செவ்வாய்க்கிழமை மதியம், இந்த நிகழ்வை தன்னால் தனியாக கையாள முடியாது என்பதை உணர்ந்த பொது சுகாதார மையம், அவசர அவசரமாக அருகிலுள்ள அரசு மருத்துவமனைகளுக்கு அழைப்புகளை செய்யத் தொடங்கியது. இறந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்கள் வருகைக்காக தயாராக இருக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

உத்தர பிரதேசம் ஹாத்ரஸ் கூட்ட நெரிசல்

ஹாத்ரஸில் உள்ள மாவட்ட மருத்துவமனை உட்பட எந்த மருத்துவமனைக்கும் இவ்வளவு பெரிய கூட்டம் நடக்கப்போகும் விவரம் அதற்குமுன் சொல்லப்படவில்லை.

"எங்கள் குழுவினர் யாரும் பணியில் ஈடுபடுத்தப்படவில்லை. எங்களுக்கு எந்த முன் தகவலும் இல்லை. சம்பவம் நடந்த பிறகுதான் எங்களுக்குத் தெரிய வந்தது," என்று ஹாத்ரஸ் மாவட்ட மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் சூர்ய பிரகாஷ் கூறினார்.

காவல்துறையின் அறிக்கை வேறுவிதமாக உள்ளபோதிலும், தேவையான மருத்துவ ஆதரவு இருந்ததாக ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர். "நாங்களும் மக்களுக்கு சிகிச்சை அளித்தோம். ஆனால் பலத்த காயங்கள் இருந்தன. எனவே அவர்களை மருத்துவமனைக்கு அனுப்ப வேண்டியதாயிற்று. என்னிடம் சரியான எண்ணிக்கை இல்லை. ஆனால் எங்களிடம் மருத்துவர்களும், செவிலியர்களும் இருந்தனர்,” என்று போதனையாளர் என்று தன்னைத்தானே கூறிக்கொள்ளும் சுரல் பால் ஜாதவ் சார்பில் பேசிய ஏ.பி.சிங், கூறினார்.

இந்தக்கூட்டம் அரசியல் பேரணியாக அல்லது விஐபி வருகையாக இருந்திருந்தால் என்ன நடந்திருக்கும்? இந்த மருத்துவமனைகளுக்கு முன்கூட்டியே தெரிந்திருக்குமா, அவர்கள் முன்னேற்பாடுகளை செய்திருப்பார்களா என்று கேட்டோம். அலிகர் ஜவஹர்லால் நேரு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் மருத்துவக் கண்காணிப்பாளர் பேராசிரியர் வாசிம் ரிஸ்வி இதற்கு ’ஆம்’ என்று பதிலளித்தார்.

"இதுபோன்ற ஏதாவது நடந்தால் அண்டை மாவட்டங்களுக்கு கூட முன்னறிவிப்பு வழங்கப்படும். ஆனால் இங்கே எங்களுக்கு எந்த தகவலும் கிடைக்கவில்லை," என்றார் அவர். ஜூலை 2 ஆம் தேதி இரவு தாமதமாக அதிகாரிகள் தன்னை அழைத்ததாக அவர் கூறினார்.

"15 உடல்கள் எங்கள் பிணவறைக்கு அனுப்பப்படுவதாக எங்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. அதற்குத் தயாராகும்படி எங்களிடம் கூறப்பட்டது" என்று அவர் குறிப்பிட்டார்.

உத்தர பிரதேசம் ஹாத்ரஸ் கூட்ட நெரிசல்

கூட்டத்தைப் பற்றி உண்மையில் யாருக்குத் தெரியும்?

கூட்ட நெரிசல் ஏற்படும் வரை அந்த நிகழ்வைப் பற்றி தனக்குத் தெரியாது என்று டாக்டர் ஜா எங்களிடம் கூறினார்.

"விழா நாளில் ஓர் ஆம்புலன்ஸ் வழங்கப்பட வேண்டும் என்ற தகவல் ஹாத்ரஸ் தலைமை மருத்துவ அதிகாரியிடம் (சிஎம்ஓ) மட்டுமே இருந்தது. அவர் அதைச் செய்தார்," என்று ஜா எங்களிடம் கூறினார்.

“ஆனால் அந்தக் குழுவாலும் கூட்ட நெரிசல் நிலைமையை சமாளிக்க முடியாது. ஏனென்றால் விழாவின்போது யாராவது காயமடைந்தாலோ அல்லது நோய்வாய்ப்பட்டாலோ சிகிச்சை அளிக்கவே அந்தக்குழு அங்கு இருந்தது. வருங்காலத்தில் இதுபோன்ற கூட்டம் எங்காவது நடக்குமேயானால், சுகாதார துறை மற்றும் அருகிலுள்ள மருத்துவ வசதிகள் அதுபற்றிய தகவல் பெறுவதை உறுதி செய்வோம்,” என்று அவர் மேலும் கூறினார்.

​​மற்ற மருத்துவமனைகளுக்கு ஏன் தகவல் தெரிவிக்கப்படவில்லை என்பதைப் புரிந்து கொள்ள ஹாத்ரஸ் சிஎம்ஓ டாக்டர் மன்ஜீத் சிங்கிடம் நாங்கள் சென்றோம். அவர் எங்கள் கேள்விகளைத் தவிர்த்துவிட்டு வாகனத்தை ஓட்டிச் சென்றுவிட்டார்.

இதுபோன்ற பெரிய கூட்டங்களை ஒழுங்குபடுத்தும் ஒரு நிலையான இயக்க நெறிமுறையை (எஸ்ஓபி) உருவாக்கும் பணியைத் தொடங்கியுள்ளதாக சமீபத்தில் உத்திரபிரதேச நிர்வாகம் கூறியது.

உத்தர பிரதேசம் ஹாத்ரஸ் கூட்ட நெரிசல்
படக்குறிப்பு, பேராசிரியர் வாசிஸ் ரிஸ்வி

நான்கு மாவட்டங்களைக் கொண்ட இந்தக்கோட்டத்தில் அரசு நடத்தும் மருத்துவ மையங்களில் 2500க்கும் அதிகமான படுக்கைகள் உள்ளன. இருப்பினும் உத்திரபிரதேசத்தில் குறிப்பாக கிராமப்புற பகுதிகளில், ​​மக்கள்தொகையுடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்த மருத்துவ வசதிகளின் (சிஎச்சி மற்றும் பிற மையங்கள் போன்றவை) பற்றாக்குறை 45 சதவிகிதத்திற்கும் அதிகமாக உள்ளது. மத்திய சுகாதார அமைச்சகத்தால் வெளியிடப்பட்ட கிராமப்புற சுகாதார புள்ளிவிவரத்தின் (2021-22) சமீபத்திய பதிப்பு இவ்வாறு தெரிவிக்கிறது.

”டாக்டர்கள் பற்றாக்குறை உள்ளது. எங்களின் சில சுகாதார நிலையங்கள் இரண்டு மருத்துவர்களைக் கொண்டு மட்டுமே இயங்குகின்றன. சிக்கந்தராராவில் 5-6 டாக்டர்கள் இருந்தது எங்கள் அதிர்ஷ்டம். பணியிடங்களை நிரப்ப அரசு முயற்சிக்கிறது,” என்றார் மருத்துவர் ஜா.

இந்த குறைபாடுகளின் சுமைகளை தாங்கள் தாங்குவதாக காயமடைந்த நோயாளிகள் தெரிவித்தனர்.

ஹாத்ரஸ் மாவட்ட மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் ஷிகா குமாரி, கூட்ட நெரிசலில் தனது சுயநினைவை இழந்ததாகக் கூறினார். "சிகந்தராராவ் மையத்தில் நான் கவனிப்பாரின்றி படுத்திருந்தேன். எப்படியோ கஷ்டப்பட்டு என் சகோதரனை தொலைபேசியில் தொடர்பு கொண்டேன்," என்று அவர் மேலும் கூறினார்.

அளிக்கப்பட்ட சிகிச்சையின் தரம் அவரது சகோதரர் சுனிலை கோபப்படுத்தியது.

“உரக்க குரல் எழுப்பினால் மருத்துவர்கள் இங்கு வருகிறார்கள் இல்லையெனில் யாரும் வருவதில்லை. மறுநாள் முதல்வர் யோகி ஆதித்யநாத் வந்தபோது எல்லாவற்றையும் தயார் செய்தார்கள். அவர் கிளம்பியவுடன் மின்வெட்டு தொடங்கியது. இரவு நேரங்களில் டாக்டர்கள் தனியார் செக்யூரிட்டிகளிடம் ரத்த அழுத்தத்தை பரிசோதிக்கச் சொல்வார்கள். சீக்கிரமே இந்த இடத்தை விட்டுப்போக வேண்டும்,” என்று அவர் கூறினார்.

ஆனால் எங்கே போவீர்கள்?

"குணமாக வேண்டும் என்றால் நாங்கள் கடன் வாங்கி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற வேண்டும். வேறு எங்கே போவது?" என்றார் சுனில்.

உத்தர பிரதேசம் ஹாத்ரஸ் கூட்ட நெரிசல்
படக்குறிப்பு, காயமடைந்தவர்களுடன் பிபிசியின் ஜுகல் புரோகித் பேசினார்.

ஜூலை 2 ஆம் தேதி கூட்டநெரிசல் ஏற்பட்ட இடத்திற்கும் நோயாளிகள் சிகிச்சை பெறும் அரசு மருத்துவமனைகளுக்கும் இடையிலான தூரம் போக்குவரத்து நெரிசல் காரணமாக நீண்டது.

"போக்குவரத்து நெரிசல் காரணமாக நோயாளிகள் வந்து சேர்வதற்கு வழக்கத்தை விட அதிக நேரம் ஆனதை நாங்கள் அறிந்தோம்" என்று அலிகரின் பண்டிட் தீன் தயாள் உபாத்யாய் ஒருங்கிணைந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவக் கண்காணிப்பாளர் டாக்டர் எம்.கே. மாத்தூர் கூறினார். 300 படுக்கைகள் கொண்ட அவரது மருத்துவமனை எல்லா அவசரத் தேவைகளையும் சமாளிக்கும் வசதிகள் கொண்டது.

இருப்பினும் அத்தகைய மருத்துவமனைகளுக்கும் சம்பவம் நடந்த இத்திற்கும் இடையில், பல தனியார் நர்ஸிங் ஹோம்கள் மற்றும் மருத்துவமனைகளை நாங்கள் கண்டோம். சிக்கந்தராராவ் போன்ற இடங்களில் நோயாளிகள் நிரம்பி வழிந்த போதிலும், காயமுற்றவர்கள் அரசு சுகாதார மையங்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக நாங்கள் அறிந்தோம்.

"நோயாளி சொல்லாத வரை நாங்கள் தனியார் கிளினிக்கிற்கு ஓட்டிச் செல்ல மாட்டோம். நாங்கள் பொதுவாக அரசு சுகாதார அமைப்புகளுக்கே அழைத்துச்செல்வோம்,” என்று தனது பெயரை வெளியிட விரும்பாத ஆம்புலன்ஸ் டிரைவர் ஒருவர் பகிர்ந்து கொண்டார்.

உத்தர பிரதேசம் ஹாத்ரஸ் கூட்ட நெரிசல்

உயிரைக்காப்பாற்றும் நிலை ஏற்படும்போது நோயாளிகளை அருகில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு ஏன் அழைத்துச் செல்வதில்லை என்று டாக்டர் ஜாவிடம் கேட்டோம்.

"நீங்கள் சொல்வது சரிதான். இந்த நிகழ்வின்போது அருகில் இருந்தாலும்கூட நாங்கள் யாரையும் தனியார் மருத்துவமனைகளுக்கு அழைத்துச் செல்லவில்லை. ஆனால் எதிர்காலத்தில் அது நடந்தால் எந்தத் தீங்கும் இல்லை, ”என்று அவர் பதிலளித்தார்.

பல பாடங்கள் கற்றுக் கொள்ளப்பட்டுள்ளன என்றும் அவை செயல்படுத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மாலை நேரம். சூரியன் மறையப் போகிறது.

சம்பவம் நடந்த இடத்திலிருந்து சுமார் 30 கிமீ தொலைவில் அதே ஜிடி சாலையில், ஜஷ்ரத்பூரில், அரசால் நடத்தப்படும் மற்றொரு மருத்துவ மையத்தை நாங்கள் கண்டோம். இது சிக்கந்தரராவில் இருப்பதைப் போன்றது என்றாலும் அளவில் சிறியது.

உள்ளே டாக்டர் யாரும் இல்லை. நர்சிங் ஊழியர்கள் இருவர் மட்டுமே அங்கு இருந்தனர்.

இப்போது ஏதாவது நடந்து, மருத்துவரின் தேவை உருவானால் என்ன செய்வீர்கள் என்று நான் கேட்டேன்.

சிறிது நேரம் சிந்தித்த பிறகு அவர்களில் ஒருவர், “நாங்கள் கூப்பிடுவோம். மருத்துவர் அவருடைய வீட்டிலிருந்து வருவார். ஆனால் அதற்கு சிறிது நேரம் எடுக்கும்," என்றார்.

கூடுதல் விவரங்கள் தர்மேந்திர சிங்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)