ஹாத்ரஸ் சம்பவம்: சாமியார்கள் மீதான பக்தர்களின் விசுவாசம் பகுத்தறிவை மழுங்கடிக்கிறதா? - ஓர் அலசல்

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், பவ்தீப் காங்
- பதவி, மூத்த செய்தியாளர், பிபிசி இந்திக்காக
நம்பிக்கை அல்லது பக்திதான் பக்தர்களை 'போலே பாபா' என்ற சாமியாரின் வழிபாட்டு நிகழ்ச்சிக்கு அழைத்துச் சென்றது. பின்னர் அதுவே அவர்களின் துயர மரணத்திற்குக் காரணமாகவும் அமைந்தது.
பக்தர்களின் உடல்கள் தரையில் மிதிபட்டன. ஹாத்ரஸில் உள்ள வயல்வெளியில் பெண்கள், குழந்தைகள் உட்பட 123 பேரின் உடல்கள் சிதறிக் கிடந்தன. ஆனால் போலே பாபா மீதான பக்தர்களின் விசுவாசத்தில் குறைவு ஏற்படவில்லை.
கோவில்களிலும், சமய நிகழ்வுகளிலும் இதுபோல மீண்டும் மீண்டும் நிகழ்ந்துள்ளன. கூட்ட நெரிசலில் சிக்கி நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். பக்தியில் திளைத்த உணர்வுகள் பெரும்பாலும் பக்தர்களை பீதியடைந்த கும்பலாக மாற்றிவிடுகிறது. அவர்களின் வழியில் வரும் அனைத்தையுமே அது அழித்துவிடுகிறது.
கும்பமேளா, வைஷ்ணோ தேவி, நைனா தேவி, சபரிமலை போன்ற இடங்களில் அதீத பக்தி உற்சாகத்தால் பல பக்தர்கள் மிதிபட்டு மாண்டுள்ளனர். ஆனால் நம்பிக்கை தனது சொந்த வேகத்தில் முன்னேறி வருகிறது.
கான்ஸ்டபிளாக இருந்து பின்னர் தன்னைத்தானே சமயகுருவாக அறிவித்துக்கொண்ட போலே பாபா அல்லது நாராயண் சாகர் ஹரி என்கிற சூரஜ்பால் ஜாதவ், தன்னைப் பின்பற்றுபவர்களிடம் கவனக் குறைவாக இருக்கும் முதல் மத குரு அல்ல.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பாபாவின் 'வழிபாட்டு' நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையைவிட மூன்று மடங்கு அதிகமானோர் நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வந்ததாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கூட்ட நெரிசலுக்குக் கூறப்படும் காரணங்களில் இருந்து இரண்டு விஷயங்கள் வெளிவருகின்றன.
கூட்டத்தை வயல்வெளி வழியாகச் செல்லவிடாமல் ஏற்பாட்டாளர்கள் தடுத்தனர் அல்லது பாபாவின் தனிப்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் மக்களை அவருடைய பாதையில் வரவிடாமல் தள்ளிவிட்டனர். எனவேதான் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.
கூட்டம் சீரான முறையில் வெளியேற எந்த ஏற்பாடும் இருக்கவில்லை. கூடவே நெரிசலில் காயமடைந்தவர்களுக்கு உடனடி உதவி எதுவும் வழங்கப்படவில்லை.
இங்கு நடக்கும் எந்த ஒன்றுக்கும் சாமியார் பொறுப்பேற்கவில்லை. இந்த முழு சம்பவத்தில் இருந்தும் அவர் ஒதுங்கிவிட்டார். அவர் எங்குமே காணப்படவில்லை.
பின்பற்றுபவர்கள் ஏன் குருவைக் கேள்வி கேட்பதில்லை?

பட மூலாதாரம், FB/SAKAR VISHWA HARI
தங்கள் விதிப்படி இது நடந்துள்ளதாகவும் தாங்கள் செய்த செயல்களுக்கான பலன் கிடைத்துள்ளதாகவும் பக்தர்கள் யோசிப்பதைப் பார்க்க முடிகிறது.
இதற்கு குரு பொறுப்பல்ல. இது குருவிற்கும் அவரைப் பின்பற்றுபவர்களுக்கும் இடையிலான வலுவான உறவையும் பிரதிபலிக்கிறது: குரு கட்டளையிடுகிறார், பக்தர்கள் கீழ்ப்படிகிறார்கள். பக்தர்கள் சேவை செய்கிறார்கள், குரு அந்த சேவையை ஏற்றுக் கொள்கிறார்.
இத்தகைய சாமியார்கள் மூடநம்பிக்கையை விரும்புகிறார்கள், தங்களின் தனிப்பட்ட ஆதாயங்களுக்காக பக்தர்களைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள். குறிப்பாக பெண்கள் இந்த விஷயத்தில் பாதிக்கப்படுகின்றனர்.
பாலியல் சுரண்டல் குற்றச்சாட்டுக்கு உள்ளான மத குருக்களின் நீண்ட பட்டியல் உள்ளது.
பாலியல் வன்கொடுமை குற்றச்சாட்டுக்கு உள்ளான சாமியார்களில், குர்மீத் ராம் ரஹீம் மற்றும் ஆசாராம் பாபு போன்ற பெயர்கள் குறிப்பாக வருகின்றன.
பிரபல சாமியார் நித்யானந்த பரமஹம்சா இதுபோன்ற குற்றச்சாட்டுகளை அடுத்து தலைமறைவாக உள்ளார். ஸ்ரீ ராமச்சந்திர மடத்தின் ராகவேஷ்வர் பாரதி மீதான குற்றப்பத்திரிகை, தொழில்நுட்பக் காரணங்களால் ரத்து செய்யப்பட்டது.
இதையெல்லாம் மீறி இந்த மதகுருக்களின் சீடர்கள் அவர்களுடன் இருக்கிறார்கள். விசுவாசம் என்பது பார்வையற்றது அல்ல. ஆனால் பார்க்க விரும்புவதை மட்டுமே அது பார்க்கிறது.
’தவறாகவே இருந்தாலும் குரு செய்வதே சரி’ என்பதே இந்த நம்பிக்கையின் பொருள்.
குருவால் எந்தத் தவறும் செய்ய முடியாது என்று பக்தர்கள் நம்புகிறார்கள். இதில் இருக்கும் பகுத்தறிவின்மையானது, ’குரு ஒருபோதும் தவறு செய்ய முடியாது’ என்பதை அடிப்படையாகக் கொண்டது. எனவே அவர் எதைச் செய்தாலும் அது சரியாகவே இருக்கும் என்று அவர்கள் உறுதியாக நம்புகிறார்கள்.
குருவின் தெய்வீகத்தன்மை ஏற்றுக்கொள்ளப்பட்டவுடன் பக்தர் அவரை குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் அன்புக்கு உரியவர்களுக்கு மேலாக வைக்க ஆரம்பிக்கிறார்.
மரணங்களுக்கு யார் பொறுப்பு - குருவா அல்லது பக்தர்களா?

பட மூலாதாரம், ANI
'லவ் சார்ஜர்' குரு ராம் ரஹீம் 2017ஆம் ஆண்டு அரசையும் நீதித் துறையையும் அச்சுறுத்துவதற்காகத் தனது ஆதரவாளர்களின் கூட்டத்தைப் பயன்படுத்தினார். ராம் ரஹீம் பாலியல் வல்லுறவு குற்றச்சாட்டின் கீழ் நீதிமன்றத்திற்குக் கொண்டு வரப்பட்ட நேரம் அது.
ஆனால் இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து பக்தர்கள் கவலைப்படவில்லை. இதுதவிர ராம் ரஹீம் மீது கொலைக் குற்றச்சாட்டும் சுமத்தப்பட்டது. மேலும் 400 பக்தர்களை ஆண்மையற்றவர்களாக ஆக்கிய குற்றச்சாட்டும் அவர் மீது உள்ளது. அது குறித்த விசாரணையும் நடந்தது.
ஆனால் பக்தர்களைப் பொறுத்தவரை குரு சட்டத்திற்கு மேலானவர். ராம் ரஹீமின் பிம்பத்திற்கு எந்தக் களங்கமும் ஏற்படாமல் அவர் விடுவிக்கப்பட வேண்டும் என்று அவர்கள் விரும்பினர்.
நீதிமன்றத்தில் ’குரு’ குற்றவாளி என அறிவிக்கப்பட்டவுடன் அவர் அழுதார். அவரது கண்ணீர் பெரும் வன்முறைக்கு வழிவகுத்தது. இதில் 38 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் நூற்றுக்கணக்கானோர் காயமடைந்தனர்.
எல்லாவற்றுக்கும் மேலாக, இந்த மரணங்களுக்கு யார் காரணம் – குருவா அல்லது பக்தர்களா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
ராம் ரஹீமை போலவே, ஹரியாணாவை சேர்ந்த மற்றொரு பாபாவும் இருக்கிறார். அவர்தான் ஜகத் குரு ராம்பால் மகராஜ். அவர் தனது பக்தர்களைப் பயன்படுத்தினார்.
ராம்பால் தனது ஆசிரமத்தில் ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் பதுக்கி வைத்திருந்தார். அதுதவிர, 'கமாண்டோஸ்' என்ற தனிப்படையையும் அவர் தனக்கென உருவாக்கியிருந்தார்.
நீதிமன்றம் ராம்பால் மீது பிடிவாரன்ட் பிறப்பித்தபோது பக்தர்களைக் கண்டு போலீசார் மிகவும் பயந்தனர். ராம்பாலை கைது செய்யத் துணை ராணுவப் படையினரின் உதவியைக் கோரினர்.
பக்தர்களுக்கும் போலீசாருக்கும் இடையே நடந்த மோதலில் 4 பெண்கள் உயிரிழந்தனர். இந்த மக்கள் விசுவாசத்தின் பெயரில் தங்களை 'அர்ப்பணித்துக் கொண்டனர்'.
’குருவின் ஒழுக்கமே சிறந்தது’ என்பதே இங்கு நம்பிக்கை என்பதன் பொருள். அதுபற்றிக் கேள்விகள் எழுப்ப முடியாது.
எனவே குரு மீது பாலியல் வன்கொடுமை, கொலை, கடத்தல், சாதிவெறி, நில அபகரிப்பு அல்லது நிதிப் பரிவர்த்தனை மோசடி போன்ற குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டாலும் பக்தர் அவரைச் சுத்தமானவர் என்றே நம்புகிறார். தனது குரு சதித்திட்டங்களுக்குப் பலியாவதாக நினைக்கிறார்.
குரு முழுமையானவர் என்பதில் அவரைக் காட்டிலும் ஒரு பக்தர் அதிக நம்பிக்கை வைக்கிறார். பக்தர் நம்பிக்கை வைத்த குரு மோசடி செய்பவராக மாறினால் அந்த பக்தரும் மோசடி செய்பவர் அல்லது முட்டாள் என்று அழைக்கப்படுகிறார். அத்தகைய சூழ்நிலையில், ஒருவரின் அடையாளம் கேள்விக்குறியாக மாறுகிறது.
குருவைப் பின்பற்றுபவர்கள் தங்களுக்குள் ஒரு சமூகமாக மாறுகிறார்கள். மேலும் இந்தச் சமூகத்தில் உறுப்பினர்களாக இருப்பது அவர்களின் அடையாளத்தின் ஒரு பகுதி.
குருவைக் கேள்வி கேட்பது என்பது இந்தச் சமூகத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுவதைக் குறிக்கிறது. எனவே அத்தகைய சூழ்நிலையில் ஒருவர் விசுவாசமாக இருக்க வேண்டியுள்ளது.
விசுவாசம் மற்றும் அரசியல்

பட மூலாதாரம், ANI
பக்தர்களின் இந்த ’விசுவாசம்’ குருவுக்கு மட்டுமல்லாமல் குருவின் அரசியல் நண்பர்களுக்கும் முக்கியமானது. இதை வாக்குகளாக மாற்ற முடியும்.
பெரும்பாலான முக்கிய குருக்கள் அரசியலில் ஈடுபட விரும்புவதில்லை. ஆனால் ராம் ரஹீம் போன்ற சில மதகுருக்கள் ஏதோ ஒரு கட்சியுடன் தொடர்புடையவர்களாக உள்ளனர்.
இது குருவின் பலத்தைப் பன்மடங்கு அதிகரிக்கிறது, ஏனெனில் இது அவருக்கு அரசியல் பாதுகாப்பையும் அளிக்கிறது. அதிகாரிகளை இடமாற்றம் செய்தல், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு சீட்டு வழங்குதல் போன்ற அதிகாரங்களையும் அவர்கள் பெறுகின்றனர்.
மதத் தலைவர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் இடையிலான நெருக்கம் வெறும் வாக்குகளுக்காக மட்டுமே இருப்பதில்லை. ஏனென்றால் அரசியல்வாதிகள் மிகவும் மூடநம்பிக்கை கொண்டவர்கள். கடவுளைத் தங்களுக்குச் சாதகமாகக் கொண்டுவர அவர்கள் குருக்களின் சக்தியை நம்பியிருக்கிறார்கள்.
எல்லா கட்சிகளின் தலைவர்களும் ஆலோசனைகள், ஆசீர்வாதங்களைப் பெறுவதுடன், தங்களுக்குச் சாதகமாக முடிவுகளை உறுதிப்படுத்த தேர்தலுக்கு முன் பிரார்த்தனைகள் மற்றும் சடங்குகளை மேற்கொள்வதைக் காணலாம்.
உதாரணமாக சமாஜ்வாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ், போலே பாபாவின் வழிபாட்டு நிகழ்சியில் கலந்துகொள்வதைக் காட்டும் புகைப்படத்தையும், பாபாவை புகழும் அவரது எக்ஸ் பதிவையும் சில ஊடகங்கள் வெளியிட்டன.
முக்தி பெறுவதற்காக பக்தர்கள் ஜெகந்நாதரின் வருடாந்திர ரத யாத்திரையின்போது ரதத்தின் சக்கரங்களுக்கு அடியில் விழுவார்கள் என்று பழங்காலக் கதைகள் கூறுகின்றன.
இதற்கு நேர்மாறாக ஹாத்ரஸில் கூட்ட நெரிசலில் இறந்த பெண்கள் மற்றும் குழந்தைகள் தங்கள் தலைவிதியைத் தாங்களாகத் தேர்ந்தெடுக்கவில்லை. ஆசி பெறவும், தங்கள் விருப்பங்கள் நிறைவேற வேண்டும் என்ற ஆசையிலும் அங்கு வந்திருந்தனர்.
ஆனால் அவர்கள் அலட்சியம் மற்றும் கவன குறைவுக்கு இலக்காயினர்.
இதையெல்லாம் மீறி ’விசுவாசம்’ தன்னுடைய வேகத்தில் முன்னேறி வருகிறது.
(ஆசிரியர் இந்திய 'சாமியார்கள்' குறித்து ’ஸ்டோரீஸ் ஆஃப் இந்தியாஸ் லீடிங் பாபாஸ்' என்ற புத்தகத்தை எழுதியுள்ளார்.)
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ்(டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












