'சாமியாரின் காலடி மண்ணை எடுக்க போட்டி போட்ட மக்கள்' - ஹாத்ரஸ் நெரிசல் நடந்தது எப்படி?

பட மூலாதாரம், ANI
- எழுதியவர், தில்நவாஸ் பாஷா
- பதவி, பிபிசி நிருபர், ஹாத்ரஸில் இருந்து
ஆம்புலன்ஸ் வரிசையாக நிற்க, மாநில பேரிடர் மீட்புப் படையினர் விரைவாகப் பேருந்திலிருந்து இறங்குகின்றனர். மக்கள் விட்டுச் சென்ற காலணிகள் குவிந்து கிடக்கின்றன. தொலைக்காட்சி செய்தியாளர்கள், இந்த சம்பவம் குறித்து நேரலையில் செய்திகளை வழங்கிக்கொண்டிருக்கின்றனர். மக்கள் தங்களது அன்புக்குரியவர்களைத் தேடிக்கொண்டிருக்கின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஹாத்ரஸ் நகரில் சாமியாரின் சொற்பொழிவு, வழிபாட்டு நிகழ்ச்சியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலின் முழு விவரத்தையும் சொல்ல இது போதாது.
ஜூலை 2 ஆம் தேதி மாலை உத்தரப் பிரதேசத்தின் தலைமைச் செயலாளர் மனோஜ் குமார், கூட்ட நெரிசலில் சிக்கிக் குறைந்தது 116 பேர் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினார். இந்தநிலையில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 122-ஆக உயர்ந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து முதல் தகவல் அறிக்கை பதிவு செய்து முழுமையாக விசாரணை நடத்தப்படும் என தலைமைச் செயலாளர் மனோஜ் குமார் கூறியுள்ளார். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் பெண்கள்.
இந்த மத வழிபாட்டு நிகழ்ச்சியை நடத்துவதற்கான ஏற்பாடுகள் பல நாட்களாக நடந்து வந்தது. எட்டு நாட்களில் இதற்கான கூடாரம் கட்டி முடிக்கப்பட்டது.

பட மூலாதாரம், FB/SAKAR VISHWA HARI
அனுமதி கோரும் போது, சுமார் 80,000 பேர் இந்த வழிபாட்டு நிகழ்ச்சியில் பங்கேற்பார்கள் என்று ஏற்பாட்டாளர்கள் அரசு நிர்வாகத்திடம் கூறியிருந்தனர். ஆனால் அங்கு சென்றடைந்தவர்களின் எண்ணிக்கை இதை விட அதிகம்.
நிகழ்ச்சி முடிந்தபிறகு, ’போலே பாபா’ என அழைக்கப்படும் மத குருவின் கால் பாத மண்ணை சேகரிக்க மக்களிடையே ஏற்பட்ட போட்டியே இந்த கூட்ட நெரிசலுக்குக் காரணம் என விபத்தை நேரில் பார்த்தவர்களும், பக்தர்களும் கூறுகின்றனர்.
அலிகார் மற்றும் எட்டாவை இணைக்கும் தேசிய நெடுஞ்சாலை 34-இல், சிக்கந்தராவ் நகரத்திலிருந்து 4 கிமீ தொலைவில் உள்ள புல்ராய் கிராமத்தில் இந்த மத வழிபாட்டு நிகழ்ச்சி நடந்தது.
இங்கு நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலப்பரப்பில் கூடாரங்கள் அமைக்கப்பட்டிருந்தன. விபத்து நடந்தபிறகு அவை அவசர அவசரமாக அகற்றப்பட்டன.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நெரிசலில் சிக்கி கீழே விழுந்தவர்களால் எழுந்திருக்க முடியவில்லை என்றும், பகலில் பெய்த மழையால் மண் ஈரமாகவும், வழுக்கும் தன்மையுடனும் இருந்ததால் நிலைமை மேலும் கடினமாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறுகின்றனர்.
'போலே பாபா' என அழைக்கப்படும் நாராயண் சாகர் விஷ்வ ஹரி கடந்து செல்ல தனிப் பாதை அமைக்கப்பட்டது. அவரை தரிசனம் செய்வதற்காகப் பல பெண்கள் அவருக்கு அருகில் நின்றுகொண்டிருந்தனர்.
வழிபாடு, சொற்பொழிவு முடிந்தபிறகு, நிகழ்ச்சி நடந்த இடத்தை ஒட்டியுள்ள நெடுஞ்சாலையில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்தது. 'போலே பாபா' தனது வாகனத்தை நோக்கிச் சென்றபோது, அதிக கூட்டத்தால் நெரிசல் ஏற்பட்டுள்ளது.
பக்தர்கள் நெரிசலில் சிக்கியபோது, போலே பாபாவும் அவருடன் வந்தவர்களும் அங்கு நிற்காமல் சென்றுள்ளனர்.

பட மூலாதாரம், EPA
இந்த சம்பவத்திற்குப் பிறகு, அவரிடம் இருந்தோ அல்லது இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்களிடம் இருந்தோ எந்த அறிக்கையும் வரவில்லை.
பஹ்ரைச் மாவட்டத்திலிருந்து வழிபாட்டுக்கு வந்திருந்த கோமதி தேவி, கழுத்தில் நாராயண் சாகர் படம் பொறிக்கப்பட்ட டாலரை அணிந்துள்ளார்.
பேருந்தில் அவருடன் இந்த வழிபாட்டு நிகழ்ச்சிக்கு வந்த இரண்டு பயணிகளைக் காணவில்லை. இந்த விபத்துக்குப் பிறகும் கோமதிக்கு நாராயணன் மீதுள்ள நம்பிக்கை குறையவில்லை.
சில மணி நேரம் தேடியும் காணாமல் போனவர்களைக் கண்டுபிடிக்க முடியாமல் போனதால், மீதி பக்தர்களுடன் பஹ்ரைச்சுக்கு இந்த பேருந்து திரும்பியது.

சுமார் நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 'போலே பாபா'வின் பக்தராக மாறிய கோமதி தேவி, தனது கழுத்தில் தொங்கும் நாராயண் சாகரின் பட டாலரைக் காண்பித்து, "அதைக் கழுத்தில் அணிவதால் நன்மைகள் கிடைக்கும், அமைதி கிடைக்கும், நோய்கள் தீரும், குடும்ப பிரச்சனைகள் தீரும், வேலை வாய்ப்பும் கிடைக்கும்’’ என்கிறார்.
பஹ்ரைச்சில் இருந்து வந்த தினேஷ் யாதவ் கூறும்போது, “எங்கள் கிராம மக்கள் பாபாவின் படத்தை வைத்து வழிபடுவார்கள். நாங்களும் வழிபட ஆரம்பித்தோம். ஒரு வருடமாக இந்த சபையில் இருக்கிறோம். எங்களுக்கு இதுவரை எந்த அனுபவமும் இல்லை, ஆனால் நாங்கள் கடவுள் (பாபா) மீது நம்பிக்கை வைத்துள்ளோம். எங்கள் ஆசைகள் நிறைவேறும் நம்பிக்கை உள்ளது’’
இந்த விபத்துக்கு நாராயண் சாகர் பொறுப்பு இல்லை என தினேஷ் கூறுகிறார்.
கூட்ட நெரிசல் விபத்துக்குப் பிறகு என்ன நடக்குறது?
மதியம் 2.30 மணியளவில் இந்த விபத்து ஏற்பட்டது. காயமடைந்தவர்கள் உடனடியாக சிக்கந்தராவ் அவசர சிகிச்சை மையத்துக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.
அங்குச் சென்ற ஊடகவியலாளர்கள், அவசர சிகிச்சை மையத்தின் முற்றத்தில் சடலங்கள் குவியல் குவியலாக இருந்ததாகத் தெரிவிக்கின்றனர்.
ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஹாத்ரஸில் பத்திரிகையாளராக இருக்கும் பி.என் சர்மா, "நான் நான்கு மணிக்கு இங்கு வந்தேன். எங்கும் சடலங்கள் இருந்தன. ஒரு பெண் சுவாசித்துக்கொண்டிருந்தார். ஆனால் சிகிச்சை கிடைக்காததால் என் கண்முன்னே இறந்துவிட்டார்.’’ என்றார்.
சிக்கந்தராவ் நகரில் உள்ள மிகப்பெரிய மருத்துவமனை இது என்றாலும், இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான உயிரிழப்புகளைக் கையாளும் திறன் இங்கு இல்லை.
இந்த விபத்தில் 10-15 பேர் காயமடைந்துள்ளதாக முதலில் தகவல் வெளியானது. அரசு அதிகாரிகளும் நான்கு மணியளவில் மருத்துவமனைக்கு வந்தனர். மாலை 6 மணியளவில் பிபிசியிடம் பேசிய ஹத்ராஸ் காவல்துறை கண்காணிப்பாளர் நிபுன் அகர்வால், 60 பேர் இறந்ததை உறுதிப்படுத்தினார்.
ஆனால் ஒவ்வொரு மணி நேரமும் பலி எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வந்தது. இறந்தவர்களின் உடல்களை அருகிலுள்ள எட்டா, காஸ்கஞ்ச், ஆக்ரா மற்றும் அலிகார் மாவட்ட மருத்துவமனைகளுக்கு அரசு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர். காணாமல் போனவர்களை குடும்பத்தினர் தேடுவதில் இது ஒரு சிக்கலை உருவாக்கியது

குடும்பத்தினரைத் தேடும் மக்கள்
குரு கிராமில் பிளம்பராக பணிபுரியும் மதுராவை சேர்ந்த விபுல், சில நண்பர்களுடன் சேர்ந்து தனது தாயைத் தேடுவதற்காக இரவு 11 மணியளவில் சிக்கந்தராவுக்கு செல்ல ஒரு டாக்ஸியை வாடகைக்கு எடுத்தார்.
அவர் உதவி எண்கள், கட்டுப்பாட்டு மையங்கள் மற்றும் மருத்துவமனைகளுக்கு போன் செய்தும் தனது தாயைப் பற்றிய எந்த தகவலையும் பெற முடியவில்லை.
சுமார் 30 உடல்கள் கொண்டு வரப்பட்ட ஹாத்ரஸில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு விபுல் சென்றடைந்தார். ஆனால் அவரால் தனது அம்மாவைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
அவர் இரவு சுமார் 2 மணியளவில் அலிகார் ஜேஎன் மருத்துவக் கல்லூரிக்குச் சென்று, தனது தாயை தேடினார்.
"கிட்டத்தட்ட பத்தாண்டுகளாகப் பாபாவின் பக்தராக அம்மா உள்ளார். பாபா மீது அவருக்கு ஆழ்ந்த நம்பிக்கை உள்ளது. அம்மா காணாமல் போய்விட்டதாக அவருடன் வந்த பெண்கள் என்னிடம் சொன்னார்கள், அதனால் நான் உடனடியாக குரு கிராமில் இருந்து இங்கு வந்தேன்." என்கிறார் விபுல்.

பட மூலாதாரம், GETTY IMAGES
பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த பலர் தங்களது குடும்பத்தினரைக் கண்டுபிடிக்க கடுமையாக முயன்றதைக் காண முடிந்தது.
காஸ்கஞ்சிலிருந்து வந்த சிவம் குமாரின் தாயாரையும் காணவில்லை. அவர் சிக்கந்தராவ் அவசர சிகிச்சை மையத்தை அடைந்தபோது, அனைத்து உடல்களும் மற்ற மருத்துவமனைகளுக்கு அனுப்பப்பட்டன. தாயின் ஆதார் அட்டையுடன் அவர் அலைந்து கொண்டிருந்தார்.
அலிகாரில் இருந்து வந்த பண்ட்டி, சிக்கந்தராவ் அவசர சிகிச்சை மையத்தின் முற்றத்தில் தனது தாயாரின் உடல் இருப்பதை ஊடகங்களில் ஒளிபரப்பான வீடியோவில் பார்த்து அவரை தேடி வந்துள்ளார்.
தன் வயதான தாய் இப்போது இவ்வுலகில் இல்லை என்பது பண்ட்டிக்கு தெரியும். அவர் தனது தாயின் உடலை விரைவில் கண்டுபிடிக்க விரும்புகிறார்.
"நான் நேராக இங்கு வந்துள்ளேன். நான் காஸ்கஞ்ச், எட்டா, அலிகார் அல்லது ஹத்ராஸ் செல்ல வேண்டுமா என்பது தெரியவில்லை. கட்டுப்பாட்டு மையத்தின் பல எண்களை அழைத்தேன். ஆனால் எங்கிருந்தும் எந்த உறுதியான தகவலையும் பெறவில்லை. உதவி எண்ணில் பேசிய ஒருவர் அனைத்து மருத்துவமனைகளுக்கும் செல்லுமாறு அறிவுறுத்தினார்." என்கிறார் பண்ட்டி.

கண்டுபிடிப்பது எப்படி?
இச்சம்பவத்தில் உயிரிழந்த பலரை இரவு 12 மணி வரை கூட அடையாளம் காண முடியவில்லை. அடையாளம் காணப்பட்டவர்களின் பட்டியலை நிர்வாகம் வெளியிட்டுள்ளது. .
நாராயண் சாகரின் மத வழிபாட்டு நிகழ்ச்சிக்கு வருபவர்களில் பெரும்பாலானோர் பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தினர் ஆவர்.
நாராயண் சாகர் கடந்த சில ஆண்டுகளில் ஹாத்ரஸில் பல முறை மத வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்துள்ளார் என்றும், ஒவ்வொரு முறையும் மக்கள் கூட்டம் அதிகரிப்பதைப் பார்க்கும்போது இதில் சேருபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதைக் குறிக்கிறது என்றும் உள்ளூர் பத்திரிக்கையாளர்கள் கூறுகின்றனர்.
"பாபாவின் வழிபாட்டு நிகழ்ச்சியில் ஊடகங்கள் நுழைய அனுமதி இல்லை, வீடியோ எடுப்பது தடைசெய்யப்பட்டுள்ளது. பாபா ஊடகங்களிலும் அதிகம் விளம்பரம் செய்வதில்லை" என்கிறார் பத்திரிக்கையாளர் பி.என்.சர்மா.
பி.என்.சர்மா பாபாவின் மத வழிபாட்டு நிகழ்ச்சியை 'வெளியிலிருந்து' பலமுறை பார்த்திருக்கிறார்.
’’பாபாவின் ஆதரவாளர்கள் மிகவும் ஒழுக்கமானவர்கள். வழிபாட்டு அரங்கை அவர்களே சுத்தம் செய்து மற்ற பொறுப்புகளை அவர்களே கவனித்துக் கொள்வார்கள். கூட்ட மேலாண்மை முதல் போக்குவரத்து மேலாண்மை வரை அனைத்தையும் அவர்கள் கவனித்துக்கொள்வார்கள்’’ என்கிறார் பி.என்.சர்மா
நாராயண் சாகரின் பாதுகாப்பிற்காகவே, ஒரு பெரிய குழு உள்ளது. இதன் காரணமாக நாராயண் சாகாரை நெருங்குவது கடினம். மத வழிபாட்டு நிகழ்வின் போது, போலே பாபாவின் பாதங்கள் மற்றும் உடலைக் கழுவும் நீரை, எடுத்துக்கொள்வதில் பக்தர்களிடையே போட்டி நிலவுகிறது.
"பாபாவின் கால் பாத மண்ணை பக்தர்கள் ஆசீர்வாதமாகக் கருதி, பாபா செல்லும் இடமெல்லாம் மண்ணை எடுக்கின்றனர். செவ்வாய்க் கிழமை கூட்ட நெரிசல் ஏற்பட்ட போது, ஏராளமான பெண்கள் இந்த மண்ணை எடுக்கக் கீழே குனிந்தனர். இதனால்தான் நெரிசல் ஏற்பட்டது. பலருக்கு எழுந்திருக்க வாய்ப்பு கிடைக்கவில்லை." என பிஎன் ஷர்மா கூறுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












