கழிவறை இருக்கையை விட அதிக கிருமிகள் இருக்கும் குடிநீர் பாட்டில்; ஆய்வாளர்கள் எச்சரிப்பது என்ன?

பட மூலாதாரம், Getty Images
- எழுதியவர், ஆண்ட்ரே பர்நாத்
- பதவி, பிபிசி நியூஸ், பிரேசில்
வெளியே செல்லும்போது தண்ணீர் பாட்டிலை பையில் வைத்து கொண்டுச் செல்வதில் இரண்டு நன்மைகள் உள்ளன. ஒன்று, உடலுக்கு தேவையான நீரை அவ்வவ்போது பருகிக்கொள்ள இந்தப் பழக்கம் உதவும், ஆரோக்கியத்திற்கும் இது மிகவும் முக்கியமானது. இரண்டாவதாக, அன்றாட வாழ்வின் நுகர்வு கலாச்சாரத்தை குறைக்கிறது, சுற்றுச்சூழலின் நிலைத்தன்மைக்கும் இது உதவுகிறது.
ஆனால் அந்த தண்ணீர் பாட்டிலின் சுகாதாரத்தைப் பற்றி நீங்கள் எப்போதாவது யோசித்திருக்கிறீர்களா?
"அதை குடிநீருக்காக மட்டும் தானே பயன்படுத்துகிறோம், எனவே குடிநீரை நிரப்புவதற்கு முன்பு குழாயின் கீழ் சில நொடிகள் காட்டி, தண்ணீரால் அலசிவிட்டு பயன்படுத்தினால் போதும், பாட்டில் சுத்தமாக இருக்கும் என்று பலர் நம்புகிறார்கள்," என்று பிரேசிலிய தொற்று நோய்களுக்கான சங்கத்தின் ஆலோசகரான மருத்துவர் ரோட்ரிகோ லின்ஸ் கூறுகிறார்.
ஆனால் உண்மை அதுவல்ல என ஆராய்ச்சி காட்டுகிறது. முறையாக சுத்தம் செய்யப்படாவிட்டால், இந்த பாட்டில்களில் பாக்டீரியா மற்றும் பூஞ்சை போன்ற பல நுண்ணுயிரிகள் குவிந்து, ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பாட்டிலில் குவியும் நுண்ணுயிரிகள்
அமெரிக்காவில் நீர் தரக் கட்டுப்பாட்டில் நிபுணத்துவம் பெற்ற நிறுவனமான 'WaterFilterGuru' நடத்திய ஆய்வில், மீண்டும் பயன்படுத்தக்கூடிய ஒரு குடிநீர் பாட்டிலில் சுமார் 2.8 கோடி காலனி உருவாக்கும் அலகுகள் (CFU- சிஎப்யூ) இருக்கலாம் என்று கணக்கிட்டுள்ளது.
CFU என்பது பொதுவான ஒரு மேற்பரப்பில், ஒரு காலனியை உருவாக்கும் திறன் கொண்ட, சாத்தியமான நுண்ணுயிரிகளின் அளவைக் குறிக்கும் அளவீடு ஆகும்.
இந்த ஆய்வில், மிகவும் அழுக்காகத் தோன்றும் பிற பொருள்களுடன், ஒரு தண்ணீர் பாட்டிலின் மாசுபாட்டு அளவு ஒப்பிடப்பட்டது.
எடுத்துக்காட்டாக, கழிப்பறை இருக்கையின் மேற்பரப்பில் சராசரியாக 515 சிஎப்யூ இருப்பதை அவர்கள் கண்டறிந்தனர், அதாவது கழிப்பறை இருக்கையை விட 40,000 மடங்கு பாக்டீரியாக்கள் தண்ணீர் பாட்டிலில் இருந்தன.
செல்லப்பிராணிகளுக்கான உணவுத் தட்டுகள் அல்லது பாத்திரங்கள் (சராசரியாக 1.4 மில்லியன் சிஎப்யூ), கணினி மவுஸ் (4 மில்லியன்) மற்றும் சமையலறை சிங்க் (11 மில்லியன்) ஆகியவற்றிலும் பாட்டிலுடன் ஒப்பிடும்போது பாக்டீரியாக்கள் குறைவாகவே இருந்தது.
சீனாவில் உள்ள ஹெனான் பல்கலைக்கழகத்தின் நிபுணர்களால் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வில், இந்த பாட்டில்களில் 'மிக அதிக அளவு பாக்டீரியாக்களும், விரைவான நுண்ணுயிர் வளர்ச்சிக்கான சாத்தியமும்' இருப்பதாக முடிவு செய்துள்ளது.
ஒவ்வொரு மில்லிலிட்டர் நீரிலும் சராசரியாக 75,000 பாக்டீரியாக்கள் இருப்பதாக பல்கலைக்கழக ஆசிரியர்கள் மதிப்பிட்டுள்ளனர். மேலும் இந்த நுண்ணிய உயிரினங்கள், 24 மணிநேரத்தில் ஒரு மில்லி லிட்டருக்கு 2 மில்லியன் வரை பெருகும் எனவும் கூறுகின்றனர்.
அமெரிக்காவில் உள்ள பர்டுயு பல்கலைக்கழகத்தில் குடிநீர் பாட்டில் பயன்படுத்தும் 90 பேரிடம் நடத்தப்பட்ட மற்றொரு ஆய்வில், 15% பேர் நாளின் முடிவில் எஞ்சியிருக்கும் தண்ணீரை வெளியே கொட்டாமல், மீண்டும் தண்ணீரை நிரப்பி அப்படியே குடிக்கிறார்கள் என கண்டறியப்பட்டது.
'WaterFilterGuru' கணக்கெடுப்பில் சில சுகாதாரப் பிரச்னைகளும் கண்டறியப்பட்டுள்ளன. பதிலளித்தவர்களில் 42% பேர் ஒரு நாளைக்கு ஒரு முறையாவது தங்கள் பாட்டிலைக் கழுவுவதாகக் கூறியுள்ளனர், 25% பேர் வாரத்திற்கு ஒரு சில முறை சுத்தம் செய்வதாகக் கூறியுள்ளனர், அதே நேரத்தில் 13% பேர் ஒரு மாதத்திற்கு இரண்டு முறை மட்டுமே சுத்தம் செய்வதாக ஒப்புக்கொண்டனர்"

பட மூலாதாரம், Getty Images
சுத்தமில்லாத குடிநீர் பாட்டிலால் ஏற்படும் ஆபத்து
ஆனால் அழுக்கு பாட்டிலைப் பயன்படுத்துவதால் என்ன ஆபத்து? அதை எப்போதும் சுத்தமாக வைத்திருப்பது எப்படி?
நாம் எல்லா இடங்களிலும் பாக்டீரியாவால் சூழப்பட்டே வாழ்கிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும், அது ஒரு மோசமான விஷயம் அல்ல (நம் உயிர்வாழ பாக்டீரியாக்கள் தேவை).
இந்த நுண்ணிய உயிரினங்கள் நமது தண்ணீர் பாட்டில்களுக்குள் மிகவும் வித்தியாசமான வழிகளில் நுழையலாம்.
முதல் மற்றும் எளிதான வழி, தண்ணீரைக் குடிக்க பாட்டிலுக்கு அருகில் வாயை கொண்டு செல்லும்போது. தோல், உதடுகள், ஈறுகள், பற்கள் மற்றும் நாக்கில் இருக்கும் சில நுண்ணுயிரிகள் (ஸ்டேஃபிலோகோகி மற்றும் ஸ்ட்ரெப்டோகாக்கி போன்ற பாக்டீரியாக்கள்) பாட்டிலுக்குள் நுழைந்து, அந்த புதிய சூழலில் பெருகத் தொடங்குகின்றன.
பாட்டிலை எடுக்க நம் விரல்களைப் பயன்படுத்தும்போது அல்லது பாட்டிலின் மூடியை திறக்கும்போது இதேபோன்று நடக்கும். ஏனென்றால் பல நபர்கள் தொடும் பொருட்களை நாமும் தொடுகிறோம் (கதவுக் கைப்பிடிகள், மின்தூக்கியின் பட்டன்கள், படிக்கட்டு கைப்பிடிகள்).
பாட்டிலை எடுத்துச் செல்லும் பைகளில், பள்ளி லாக்கர்களில், வேலை செய்யும் மேஜையில், சமையலறை சின்க் போன்றவற்றிலும் பாக்டீரியாக்கள் இருக்கலாம் .
அடிக்கடி பாட்டிலை சுத்தம் செய்யாவிட்டால், இந்த நுண்ணுயிரிகள் அதில் நுழைந்து, காலனிகளை உருவாக்கி, அதிவேகமாக பெருகிவிடும். இதனால் தான் அவை வெறும் 24 மணி நேரத்தில் ஒரு மில்லிலிட்டருக்கு 75 ஆயிரம் முதல் 2 மில்லியன் வரை கூட பெருகும் என்று சீன பல்கலைக்கழக ஆய்வு கூறுகிறது.
ஈரப்பதமான, சூடான மற்றும் இருண்ட சூழல் (பிளாஸ்டிக் அல்லது அலுமினிய பாட்டில்களில்) பல பூஞ்சை இனங்களுக்கு ஒரு சிறந்த இடமாக இருக்கிறது.
மிக மோசமாக பராமரிக்கப்படும் பாட்டில்களில், இந்த நுண்ணுயிரிகளின் வேலையை வெறும் கண்ணால் கூட பார்க்க முடியும். தண்ணீரில் சில துகள்களைக் காணலாம். இது பொதுவாக பாட்டிலின் அடிப்பகுதியில் கிடக்கும் அல்லது மூடியின் மேற்பரப்பில் பச்சை அல்லது கருப்பு நிறத்தில் படிந்து இருக்கும்.

பட மூலாதாரம், Getty Images
உடலுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?
ஆனால் முக்கியமான கேள்வி என்னவென்றால், இவை ஆரோக்கியத்திற்கு ஏதேனும் ஆபத்தை ஏற்படுத்துமா?
இதற்கான பதில் பல காரணிகளைப் பொறுத்தது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
"நம் உடலில் உள்ள செல்களை விட பத்து மடங்கு அதிகமான பாக்டீரியாக்கள் உள்ளன என்பதை நாம் நினைவில் கொள்ள வேண்டும்" என்று ரியோ டி ஜெனிரோ மாநிலத்தின் தொற்று நோய்கள் சங்கத்தின் தலைவரான லின்ஸ் விளக்குகிறார்.
"உட்கொண்ட நுண்ணுயிரிகளின் அளவு மற்றும் வகைகளைப் பொறுத்து, நமது நோயெதிர்ப்பு அமைப்பு பெரிய பிரச்னைகள் இல்லாமல் இந்த தேவையை சமாளிக்க முடியும்," என்று அவர் கூறுகிறார்.
சில சந்தர்ப்பங்களில், உதாரணமாக, பாட்டிலில் உள்ள நுண்ணுயிரிகளின் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் போது, பாட்டிலை தொடர்ந்து பயன்படுத்துபவருக்கு குமட்டல் மற்றும் வாந்தி போன்ற சில லேசான அறிகுறிகள் ஏற்படலாம்.
பூஞ்சை ஒவ்வாமை உள்ளவர்களாக இருந்தால், நுண்ணுயிரிகள் நிரம்பிய பாட்டிலை பயன்படுத்தும்போது மூக்கடைப்பு, குமட்டல், தலைவலி, சோர்வு போன்ற பிற அசௌகரியங்களுடன் மேலும் எதிர்விளைவுகள் ஏற்படலாம்.
சௌ பாலோ (São Paulo) பல்கலைக்கழகத்தின் உயிரியல் மருத்துவ அறிவியல் பிரிவைச் சேர்ந்த நுண்ணுயிரியலாளர் ஜார்ஜ் டைமெனெட்ஸ்கி, "சிறு குழந்தைகள், முதியவர்கள் அல்லது பலவீனமான நோயெதிர்ப்பு அமைப்பு உள்ளவர்கள் மோசமாக பாதிக்கப்படலாம், எனவே நாம் தனிப்பட்ட முறையில் பயன்படுத்தும் பொருட்களின் சுகாதாரத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும்" என்று விளக்குகிறார்.

பட மூலாதாரம், Getty Images
எளிதாக தண்ணீர் பாட்டிலை நன்றாக சுத்தம் செய்வது எப்படி?
"நீங்கள் பயன்படுத்தும் ஒவ்வொரு முறையும் அதைக் கழுவுவதே சிறந்தது" என்று லின்ஸ் சுருக்கமாகக் கூறுகிறார்.
"நீங்கள் தினமும் வீட்டிற்கு வந்த பிறகு, ஒரு நாளைக்கு ஒரு முறை சுத்தம் செய்தால் போதும்" என்று டைம்னெட்ஸ்கியும் ஒப்புக்கொள்கிறார்.
பாக்டீரியா வளர்ச்சியைக் கட்டுப்படுத்த, உணவுப் பாத்திரங்களைக் கழுவ பயன்படுத்தும் சோப்பு மற்றும் தண்ணீரையே பயன்படுத்துங்கள்.
"கையால் நுண்ணுயிரிகளை அகற்ற ப்ரஷ்களை பயன்படுத்துவதும் முக்கியம்" என்று டைமெனெட்ஸ்கி கூறுகிறார். மீண்டும் குடிநீரை நிரப்புவதற்கு முன்னர் அதை சிறிது நேரம் காய வைப்பதும் நல்லது என்கிறார்.
பாட்டில்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டாம் என்றும் (ஒவ்வொரு நபருக்கும் சொந்த பாட்டில் இருக்க வேண்டும்) மற்றும் பழச்சாறுகள், ஆற்றல் பானங்கள் மற்றும் குளிர்பானங்கள் போன்ற பிற திரவங்களை பாட்டிலில் நிரப்ப வேண்டாம் என்றும் ஆராய்ச்சியாளர்கள் பரிந்துரைக்கின்றனர் (இத்தகைய திரவங்களில் நுண்ணுயிர் காலனிகளைத் தூண்டக்கூடிய ஊட்டச்சத்துக்கள் இருப்பதால்).
அதேபோல பாட்டில்களை உருவாக்கப் பயன்படுத்தப்படும் பொருள் மாசுபாட்டின் அளவை பாதிக்குமா? அலுமினியம், பிளாஸ்டிக் அல்லது கண்ணாடி, இதில் அதைப் பயன்படுத்தலாம்? நன்மைகள் அல்லது தீமைகள் என தனியாக உள்ளதா?
நிபுணர்களின் கூற்றுப்படி, பாட்டில் தேர்வு ஒவ்வொரு நபரின் விருப்பத்தையும் சார்ந்துள்ளது, ஏனெனில் நுண்ணிய உயிரினங்களைப் பொருத்தவரை இவை ஏறக்குறைய ஒரேமாதிரியான பண்புகளைக் கொண்டவை தான்.
ஆனால் முன்பு குறிப்பிடப்பட்ட பர்டுயு பல்கலைக்கழக ஆய்வு, அலுமினியத்தால் செய்யப்பட்ட பாட்டில்களை விட கண்ணாடி பாட்டில்களில் குறைவான நுண்ணுயிரிகள் இருப்பதைக் கண்டறிந்துள்ளது.
"கண்ணாடியோ, அலுமினியமோ, எதுவானாலும் சுத்தம் செய்ய எளிதாக இருக்கும் பாட்டில்களையே வாங்குங்கள். அதுதான் முக்கியம்" என்கிறார் லின்ஸ்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












