லெஸ்டர்: இந்தியர்கள் அதிகம் வாழும் இந்த பிரிட்டன் நகரில் இந்து-முஸ்லிம் மக்களிடையே இருக்கும் ஆறாத வடு

- எழுதியவர், ராகவேந்திர ராவ்
- பதவி, பிபிசி செய்தியாளர் பிரிட்டனின் லெஸ்டரில் இருந்து
இந்திய வம்சாவளியைச்சேர்ந்த கீத் வாஸ், லெஸ்டர் தெருக்களில் வீடு வீடாகச் சென்று தேர்தல் பிரசாரம் செய்வதைப் பார்க்கும்போது, 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம், இந்து-முஸ்லிம் சமூகங்களுக்கு இடையே வன்முறை மோதல்கள் நடந்த இடம் இது என்று சொல்வது கடினம்.
கடந்த 32 ஆண்டுகளாக கிழக்கு லெஸ்டர் தொகுதியில் தொழிலாளர் (லேபர்) கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்ற கீத் வாஸ், எம்.பி-யாக இருந்து வந்துள்ளார். இந்தமுறை 'ஒன் லெஸ்டர்’ என்ற புதிய கட்சியின் வேட்பாளராக அவர் தேர்தலில் போட்டியிடுகிறார்.
லெஸ்டருடனான நீடித்த தொடர்பின் காரணமாக அவர் இங்கு நன்கு அறியப்பட்ட முகமாக இருக்கிறார். மக்களை சந்திக்கும் போது அவர்களுடைய உள்ளூர் பிரச்சனைகள் குறித்து அவர் பேசுகிறார்.
பன்முகத்தன்மைக்கு எடுத்துக்காட்டாக கருதப்பட்ட லெஸ்டர், வன்முறைத் தீயில் பற்றி எரிந்த அந்த பதற்றமான நேரத்தைப் பற்றி அவர் பேசுவதில்லை.

பட மூலாதாரம், Bbc
பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனலில் இணைய இங்கே க்ளிக் செய்யவும்.

பட மூலாதாரம், Devashish Kumar
இந்து-முஸ்லிம் மோதல்கள்
இந்து-முஸ்லிம்சமூகத்தினரிடையே நிலவிவந்த பதற்றம் 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 17-ஆம் தேதி தெருக்களை அடைந்தது.
இந்த மோதல்களில் சில போலீஸார் காயமடைந்தனர் மற்றும் டஜன் கணக்கான மக்கள் கைது செய்யப்பட்டனர்.
இதுபோன்ற பதற்றம் இந்தியா-பாகிஸ்தான் இடையே கிரிக்கெட் போட்டி நடக்கும்போது பெரும்பாலும் காணப்படுவதாக உள்ளூர் மக்கள் சிலர் கூறுகின்றனர். ஆனால் 2022-இல் நிலைமை மிகவும் மோசமடைந்தது. இரு சமூகங்களுக்கிடையில் உருவான ஆழமான இடைவெளி தெளிவாகத் தெரிந்தது.
குஜராத்தைப் பூர்வீகமாகக் கொண்ட தர்மேஷ் லக்கானி, லெஸ்டரின் வன்முறை நடந்த அதே பெல்கிரேவ் சாலையில் உணவகம் நடத்தி வருகிறார்.
அன்றைய தினத்தைப்பற்றிய நினைவுகள் அவர் மனதில் இன்னும் பசுமையாக இருக்கின்றன.
பெல்கிரேவ் சாலையில் வன்முறை நடந்த இடத்தைச் சுட்டிக்காட்டிய அவர், "அன்று நூற்றுக்கணக்கான மக்கள் இங்கு கூடியிருந்தனர், அவர்கள் கோபமாக இருந்தனர். என்ன நடக்கிறது என்று நான் பார்த்துக்கொண்டிருந்தேன். எங்கள் நகரம் பற்றி எரிவது போல எனக்குத்தோன்றியது,” என்று குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Devashish Kumar
பெல்கிரேவ் சாலையில் கார் சுத்தம் (கார் வாஷ்) செய்யும் இடத்தை சுட்டிக்காட்டிய தர்மேஷ் லக்கானி, "இந்த கார்வாஷ் காவல்துறையால் சுற்றி வளைக்கப்பட்டது. அதற்குள் சுமார் 150 முதல் 200 இந்து சமுதாய மக்கள் இருந்தனர். வட்டத்திற்கு வெளியே முஸ்லிம்கள் கூட்டம் அதிகமாக இருந்தது," என்று கூறினார்.
கார் கழுவும் இடத்திற்கு எதிரே ஒரு இந்துக் கோவில் உள்ளது.
கூட்டத்தில் இருந்த சிலர் கோயிலின் சுவரைத் தாண்டிக் குதித்து கோயிலின் கொடியை இறக்கி எரிக்க முயன்றதாக தர்மேஷ் லக்கானி தெரிவித்தார். "கொடி சற்றே எரியத்தொடங்கியபோது ஒரு முஸ்லிம் இளைஞர் தீயை அணைத்துவிட்டார். அப்படிச் செய்திருக்க்கூடாது என்று அவர் நினைத்தார். இதையெல்லாம் செய்தவர்கள் வன்முறையைத் தூண்டிவிட முயற்சித்தனர். ஆனால் அந்தக் கூட்டத்தில் இருந்த அனைவரும் இப்படிப்பட்டவர்கள் என்று சொல்லமுடியாது. நடந்தவை எதுவுமே சரி அல்ல. இரு சமூகத்தினருமே வேதனை அடைந்தனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
இந்த வன்முறையில் தேவாலயங்கள், மசூதிகள் மற்றும் கோவில்கள் குறிவைக்கப்பட்டன என்று சம்பவம் நடந்த நேரத்தில் வெளியான பிபிசி அறிக்கை தெரிவிக்கிறது.

பட மூலாதாரம், Devashish Kumar
தேர்தல் பரபரப்பு
பிரிட்டனில் ஜூலை 4-ஆம் தேதி பொதுத் தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. கிழக்கு லெஸ்டர் தொகுதியில் மொத்தம் 10 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அவர்களில் எட்டு பேர் தெற்காசிய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். செஸ்டரில் குடியேறியுள்ள தெற்காசிய மக்களின் வாக்குகளின் அடிப்படையில் இந்த தொகுதியில் வெற்றி கிடைக்கும் என்று இந்த வேட்பாளர்கள் நம்புகிறார்கள்.
ஆனால் தெற்காசிய நாடுகளில், குறிப்பாக இந்தியாவில் காணப்படும் தேர்தல் சூழலுக்கும் செஸ்டரில் உள்ள தேர்தல் சூழலுக்கும் இடையே பெரிய வித்தியாசம் உள்ளது.
இங்கு பொது இடங்களில் வேட்பாளர்களின் சுவரொட்டிகளும், பேனர்களும் மிகவும் குறைவாகவே காணப்படுகின்றன.
பெரும்பாலும் தேர்தல் பிரசாரங்கள் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்படுகின்றன. ஏனெனில், வேலைக்குச்செல்லும் மக்கள் அந்த நாட்களில்தான் வீட்டில் இருப்பார்கள். மக்களின் வீடுகள் மற்றும் கடைகளுக்குச் சென்று வேட்பாளர்கள் வாக்கு சேகரிக்கின்றனர்.
2022-ஆம் ஆண்டின் நிகழ்வுகளுக்குப் பிறகு தெற்காசிய மக்கள் எந்தக் கட்சி அல்லது வேட்பாளரின் மீது நம்பிக்கை வைக்கிறார்கள் என்பதைப் பார்ப்பது சுவாரசியமாக இருக்கும் என்பதால் கிழக்கு லெஸ்டர் தொகுதி பலராலும் உன்னிப்பாக கவனிக்கப்படுகிறது.
'பன்முகத்தன்மையின் எடுத்துக்காட்டு'
மோதல் சம்பவத்திற்கு பொதுமுடக்கம், பொருளாதார நிலைமை மற்றும் வேலையின்மை உள்ளிட்டப் பல காரணங்கள் இருந்தன என்று கீத் வாஸ் குறிப்பிட்டார்.
"இது ஒரு தீப்பொறி. இது ஒரு முறை மட்டுமே நடக்கும் சம்பவம் என்று நான் நினைக்கிறேன். இது ஏன் நடந்தது என்பதை நாம் கண்டுபிடிக்க முயற்சிக்க வேண்டும்," என்றார் அவர்.
பெல்கிரேவ் சாலை

பெல்கிரேவ் சாலைக்கு வந்தால் இந்தியாவில் இருப்பது போன்ற உணர்வு ஏற்படுகிறது. உணவகங்களாக இருந்தாலும் சரி, ஆடை மற்றும் நகைக் கடைகளாக இருந்தாலும் சரி, பெரும்பாலும் இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள்தான் அவற்றை நடத்துகிறார்கள்.
இதே பகுதியில்தான் 2022-இல் இரு சமூகத்தினருக்கும் இடையே வன்முறை மோதல்கள் நிகழ்ந்தன.
அந்த அமைதியின்மையின் தாக்கத்தை இங்குள்ள வணிகர்கள் இன்றும் உணர்கிறார்கள்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த இம்ரான் பதான் இங்கு 'திருமண ஆடைகள்’ கடையை நடத்தி வருகிறார்.
"அந்த அமைதியின்மைக்குப் பிறகு வியாபாரம் சிறிது பாதிக்கப்பட்டது. மக்கள் இங்கு வருவதற்கு முன் எல்லாம் சரியாக இருக்கிறதா என்று யோசித்து, கேட்டறிந்து பின்னர் வருகிறார்கள். சமீபத்தில் இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே 20-20 கிரிக்கெட் போட்டி நடந்தது. அன்றைய தினம் மக்கள் அதிகாலையில் போட்டி தொடங்குவதற்கு முன்பே வந்து விட்டனர். பந்தயம் தொடங்குவதற்கு முன்பு இங்கிருந்து சென்றுவிட நினைத்தனர். மக்கள் மனதில் பயம் வந்துவிட்டது. வன்முறை ஏற்படுத்திய காயங்கள் ஆறுவதற்கு சில காலம் ஆகும்,” என்றார் அவர்.

பட மூலாதாரம், Devashish Kumar
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரஞ்சு மோடா, பெல்கிரேவ் சாலையில் இம்ரானின் கடையிலிருந்து சிறிது தொலைவில் ஒரு துணிக்கடையை நடத்தி வருகிறார்.
"இதுபோன்ற ஒன்று நடக்கும் என்று நான் நினைத்தே இல்லை. இதை வணிகக் கண்ணோட்டத்தில் பார்த்தால் கடந்த இரண்டு வருடங்களாக வியாபாரம் குறைந்துவிட்டது. நகருக்கு வெளியில் இருந்து வரும் தெற்காசிய வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ஏனென்றால் இந்தச் செய்திகள் ஊடகங்கள் மூலம் அனைவராலும் பார்க்கப்பட்டன. அவர்கள் மனதில் பயம் ஏற்பட்டுவிட்டது. இதனால் வியாபாரம் பாதிக்கப்பட்டுள்ளது,” என்று அவர் குறிப்பிட்டார்.

பட மூலாதாரம், Devashish Kumar
புவியியல் ரீதியாகப் 'பிளவுபட்ட' சமூகங்கள்
தெற்காசிய சமூகத்தைச்சேர்ந்த பெரும் எண்ணிக்கையிலான மக்கள் கடந்த பல தசாப்தங்களாக லெஸ்டரில் வசித்து வருகின்றனர். இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களும் இதில் அடங்குவர்.
ஆனால் கடந்த சில ஆண்டுகளாக லெஸ்டரின் சில பகுதிகளில் இந்துக்கள் பெரும்பான்மையாகவும், சில பகுதிகளில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாகவும் வசிக்கும் நிலை உருவாகியுள்ளது.
அத்தகைய ஒரு பகுதி அவிங்டன் சாலை. இங்கு மிகப் பெரிய மசூதி ஒன்று உள்ளது.
பெல்கிரேவ் ரோடு பகுதியில் இந்து சமூகத்தை சேர்ந்தவர்கள் அதிகம் வசிக்கின்றனர், வியாபாரம் செய்கிறார்கள். அதே நேரம் ஹைஃபீல்ட்ஸ் மற்றும் அவிங்டன் ரோடு போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் அதிகமாக வாழ்கிறார்கள் என்று உள்ளூர் மக்கள் கூறுகின்றனர்.
இரு சமூகத்தினரிடையே நிலவும் பதற்ற நிலை காரணமாக ஒருவர், மற்றவரின் பெரும்பான்மை பகுதிகளுக்குச் செல்லத்தயங்குவதாக சிலர் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Devashish Kumar
முஸ்லிம் சமூகத்தினரின் மனநிலை
2022-ஆம் ஆண்டின் நிகழ்வுகளுக்கு இரு சமூகத்தினரும் ஒருவர் மற்றவர் மீது பரஸ்பரம் குற்றம் சாட்டுகின்றனர்.
லெஸ்டரில் வசிக்கும் முகமது ஓவைஸ், 'யு.கே இந்திய முஸ்லிம் கவுன்சிலில்’ இயக்குநராக உள்ளார்.
"முஸ்லிம் சமூகம் தொடர்ந்து அச்சுறுத்தலை உணர்கிறது. அவர்கள் தொடர்ந்து மன அழுத்தத்தை உணர்கிறார்கள். உலகளாவிய இந்துத்துவ இயக்கத்தின் மூலம் முஸ்லிம் மக்களை கோபப்படுத்தும் செயல்திட்டம் இங்கே இருப்பதாக நாங்கள் நம்புகிறோம்," என்று அவர் குறிப்பிட்டார்.
கலவரத்திற்கு முன்பு இங்கு சமூக சகோதரத்துவ உறவு இருந்தது என்று முகமது ஓவைஸ் கூறினார். "அந்த சூழல் திரும்பி வர வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம். லெஸ்டரில் உள்ள பெரும்பான்மையான இந்து மக்கள் அமைதியை விரும்புகிறார்கள் என்றும், முஸ்லிம்கள், சீக்கியர்கள், மற்றும் சமய நம்பிக்கையற்ற மக்களுடன் அவர்களுக்கு சகோதரத்துவ உறவு உள்ளது என்றும் நாங்கள் நம்புகிறோம். இருப்பினும் அவர்கள் குரல் எழுப்பவில்லை என்று நாங்கள் கருதுகிறோம்,” என்று அவர் கூறினார்.

பட மூலாதாரம், Devashish Kumar
'மக்கள் மறக்கவில்லை'
வன்முறையினால் ஏற்படும் பாதிப்புகளை மக்கள் பார்த்துள்ளனர். சகோதரத்துவத்துடனும் ஒற்றுமையுடனும் வாழ்வதன் மூலமே முன்னேற முடியும் என்பதை மக்கள் புரிந்து கொண்டுள்ளனர் என்று கீத் வாஸ் தெரிவித்தார்.
லெஸ்டரின் பெரும்பாலான மக்கள் 2022-இன் மோசமான நினைவுகளை மறந்துவிட்டு தங்கள் வாழ்க்கையில் நகர்ந்துவிட்டனர் என்று அவர் கருதுகிறார்.
என்ன நடந்தது என்பதைப் புரிந்து கொள்ள வேண்டுமென்றால், விலைவாசி உயர்வு, வேலைவாய்ப்பு, குழந்தைகளுக்கு நல்ல கல்வி வழங்குவது தொடர்பான மக்களின் போராட்டங்கள் மற்றும் ஏமாற்றங்களைப் புரிந்து கொள்வது அவசியம் என்று பலர் கூறுகிறார்கள்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ரீட்டா படேல், லெஸ்டர் சிட்டி கவுன்சிலில் முன்னாள் உதவி மேயராக இருந்துள்ளார். “அந்தச் சம்பவத்தை மக்கள் மறக்கவில்லை,” என்று அவர் கூறினார்.
”அந்த நிகழ்வுகள் தொடரும் அவநம்பிக்கையை விட்டுச் சென்றுள்ளன. விஷயங்கள் அமைதியாகிவிட்டதால் பிரச்னை நீங்கிவிட்டது என்று நாம் நினைப்பது தவறு. நாம் பாடம் கற்க வேண்டும். நாம் பாடங்களைக் கற்கவில்லை என்றால் அந்தத் தவறுகள் மீண்டும் மீண்டும் நிகழும் அபாயம் உள்ளது," என்று அவர் குறிப்பிட்டார்.
"நீங்கள் மக்களுடன் பேசினால் அந்த நிகழ்வுகள் மக்கள் மனதில் மிகவும் மோசமான அனுபவத்தை ஏற்படுத்தியிருப்பதை உணர்வீர்கள். மக்களுக்கு அது நிச்சயமற்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது. ஒரு தனிச்சம்பவம், ஒரு நகரை உருவாக்கவோ அல்லது உடைக்கவோ முடியாது என்று நான் நினைக்கிறேன். சிறிய பின்னடைவு ஏற்பட்டிருக்கலாம். லெஸ்டர் மக்கள் எப்பொழுதும் சிரமங்களை எதிர்கொண்டு முன்னேறியிருக்கிறார்கள் என்று நான் நினைக்கிறேன்," என்று ரீட்டா படேல் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Devashish Kumar
நீதிக்கான காத்திருப்பு
லெஸ்டரில் நடந்த வன்முறைக்கான காரணங்களை அறிய தற்போது இரண்டு விசாரணைகள் நடந்து வருகின்றன.
இந்த விசாரணைகளில் ஒன்று அரசால் நடத்தப்படுகிறது. மற்றொரு லண்டனில் உள்ள SOAS பல்கலைக்கழகம் நடத்துகிறது.
அமைதியின்மைக்கு வழிவகுத்த காரணங்களில் குறிப்பிடத்தக்க மாற்றம் ஏற்படாததால் அமைதியின்மை இன்னும் உள்ளது என்று கடந்த 60 ஆண்டுகளாக லெஸ்டரில் வசிக்கும் இந்திய வம்சாவளிப் பேராசிரியர் குர்ஹர்பால் சிங் கூறுகிறார்.
"நகரத்திற்குள் வளங்களின் பற்றாக்குறை உள்ளது. மேலும் சமூகங்கள் குடியேறியுள்ள இடங்களில் பிரதேச உரிமைகள் குறித்தும் நிறைய பதற்றம் உள்ளது. ராமர் கோவில் கும்பாபிஷேகம் மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த விழாக்களைச் சுற்றி ஒரு பதற்றமான சூழல் இருந்தது. தெற்காசியாவில் அல்லது அதைச் சுற்றியுள்ள இடங்களில் ஏற்படும் எந்தவொரு குறிப்பிடத்தக்க நிகழ்வும், மோதலை உருவாக்குவதில் ஆர்வமுள்ள சமூகங்களை அணி திரட்டக்கூடும்,” என்று பேராசிரியர் குர்ஹர்பால் சிங் கூறினார்.
நடந்த சம்பவங்கள் மற்றும் அவை கையாளப்பட்ட விதம், நிர்வாகத்தின் தோல்வியா என்று பேராசிரியர் குர்ஹர்பால் சிங்கிடம் கேட்டோம்.
"நிச்சயமாக. லெஸ்டரில் 60 ஆண்டுகளாக வாழும் ஒருவர் என்ற முறையில் என்னால் இதைச்சொல்ல முடியும். ஏற்பட்ட நெருக்கடியின் தீவிரத்தை சமாளிக்க, தேசிய அளவிலோ அல்லது உள்ளுர் நிலையிலோ பயனுள்ள நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை,” என்று அவர் பதில் அளித்தார்.
மேலோட்டமாகப் பார்த்தால் லெஸ்டரில் இயல்பு நிலை திரும்பிவிட்டதாகத் தோன்றுகிறது. ஆனால் இங்குள்ள மக்களிடம் பேசினால், 2022-இல் நடந்த வன்முறைச் சம்பவங்களின் வலி இங்குள்ள பெரும்பாலான மக்களின் மனதில் இன்னும் பசுமையாக உள்ளது என்பது புரியும்.
2022-இல் நடந்தவை லெஸ்டரின் பிம்பத்தைக் கெடுத்துவிட்டதாகவும், அந்த மோசமான நினைவுகளிலிருந்து லெஸ்டர் விடுபட வேண்டுமானால், அந்த வன்முறைக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து, குற்றவாளிகள் தண்டிக்கப்பட வேண்டும் என்றும் இங்குள்ள மக்கள் கூறுகின்றனர்.
இது நடக்கும் வரை லெஸ்டரின் காயங்கள் ஆறாது என்று பேராசிரியர் குர்ஹர்பால் சிங் குறிப்பிடுகிறார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












