அமெரிக்க அதிபர் தேர்தல்: நேருக்கு நேர் மோதிய பைடன் - டிரம்ப் - விவாதத்தில் என்ன பேசினர்?

பட மூலாதாரம், GETTY IMAGES
அமெரிக்க அதிபர் தேர்தலை முன்னிட்டு, ஜனநாயக கட்சி வேட்பாளரும் தற்போதைய அதிபருமான ஜோ பைடன், குடியரசுக் கட்சி வேட்பாளர் டொனால்ட் டிரம்ப் இருவரும் முதன்முறையாக நேருக்கு நேர் விவாதித்தனர்.
இந்த விவாதத்தில் தனிப்பட்ட தாக்குதல்களுக்குக் குறை இல்லை. மேலும், பைடன் அவ்வப்போது கம்மிய குரலில் பேசினார். இதனால், ஜனநாயக கட்சியினர் தங்கள் வருத்தத்தை வெளிப்படுத்தியுள்ளனர். எனினும், “மெதுவாக ஆரம்பித்தாலும் வலுவாக விவாதத்தை நிறைவு செய்ததாக,” பைடனுக்கு ஆதரவாக துணை அதிபர் கமலா ஹாரிஸ் தெரிவித்துள்ளார்.
மறுபுறம், டொனால்ட் டிரம்ப், பைடனை பொருளாதாரம் மற்றும் வெளியுறவுக் கொள்கை சார்ந்து தாக்கிக்கொண்டே இருந்தார்.
அமெரிக்காவில் இந்த ஆண்டு நவம்பர் 5 அன்று அதிபர் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், போட்டியிடும் வேட்பாளர்கள் நேருக்கு நேர் விவாதித்துக்கொள்வது அமெரிக்க அதிபர் தேர்தலின் முக்கிய நிகழ்வு. அதன்படி, ஜூன் 27, வியாழக்கிழமை அன்று ஜார்ஜியாவில் உள்ள அட்லான்டாவில் முதல் விவாதம் நடைபெற்றது.
ஜோ பைடன், டொனால்ட் டிரம்ப் இருவருக்கும் இடையே 90 நிமிடங்கள் இந்த விவாதம் நீடித்தது. 2020 அதிபர் தேர்தலுக்குப் பிறகு நான்கு ஆண்டுகள் கழித்து இரு தலைவர்களும் நேருக்கு நேர் விவாதத்தில் ஈடுபட்டனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
பொருளாதாரம்
பொருளாதாரம் சார்ந்துதான் இந்த விவாதம் தொடங்கியது.
விவாதத்தில் பணவீக்கம் பிரச்னை எழுப்பப்பட்டபோது, வேலை வாய்ப்பின்மையுடன் வீழ்ச்சியடைந்த பொருளாதாரத்தையே டொனால்ட் டிரம்ப் தனக்குக் கையளித்ததாகத் தெரிவித்தார் பைடன். அப்போது, தன்னுடைய ஆட்சிக் காலத்தில் அமெரிக்க பொருளாதாரம் ‘சிறப்பாக’ இருந்ததாக டிரம்ப் தெரிவித்தார்.
டிரம்ப் ஒன்றும் செய்யவில்லை எனக் கூறிய பைடன், அவருடைய ஆட்சிக் காலத்தில் நிலைமை “மோசமாக” இருந்ததாகக் கூறினார். “எல்லாவற்றையும் சரிசெய்ய வேண்டியிருந்ததாக” பைடன் கூறினார். அப்போது, “பெருங்குழப்பம்” என்ற வார்த்தையை அடிக்கடி பைடன் உபயோகித்தார்.
“டிரம்ப் பணக்காரர்களுக்கு ஆதரவாக இருந்ததாக” பைடன் தெரிவித்தார். அப்போது டிரம்ப், தான் மக்களுக்கு முன்பு இல்லாத வகையில் வரியை குறைத்ததாகக் கூறினார்.
ஆப்கானிஸ்தான் விவகாரம்

பட மூலாதாரம், Reuters
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை திரும்பப் பெற்றுக் கொண்டது குறித்தும் கொரோனா பெருந்தொற்றுக் காலத்தில் அரசின் நடவடிக்கைகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.
டிரம்ப் ஆட்சிக் காலத்தில்தான் ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப் படைகள் சண்டையிட்டதாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார்.
ஆப்கானிஸ்தானில் இருந்து அமெரிக்கப் படைகளை கண்ணியம் மற்றும் பலத்துடன் திரும்பப் பெறத் தான் திட்டமிட்டிருந்ததாகவும் ஆனால், “அப்படைகளை (பைடன் ஆட்சிக் காலத்தில்) திரும்பப் பெற்றபோது அது அமெரிக்க வரலாற்றிலேயே மிகவும் அவமானகரமான நிகழ்வாக இருந்ததாகவும்” டிரம்ப் கூறினார்.
கொரோனா
கொரோனா பெருந்தொற்று விவகாரம் இந்த விவாதத்தில் முக்கிய இடம் பிடித்தது.
கொரோனா காலத்தை டிரம்ப் எப்படி கையாண்டார் என்பது குறித்துப் பேசிய பைடன், அச்சமயம் “பெருங்குழப்பங்களுடன் கூடியது” எனக் குறிப்பிட்டார்.
“கொரோனா பெருந்தொற்றுப் பேரிடரின்போது தேவைகளுக்கு ஏற்ப நாங்கள் பணத்தைச் செலவழித்தோம். இதனால், மிகுந்த அழுத்தத்திற்குள் நாங்கள் தள்ளப்படவில்லை. எல்லாம் மிகவும் சிறப்பாக நடைபெற்றது” என்றார் டிரம்ப்.
எல்லைகள் குறித்த பிரச்னை
அமெரிக்க எல்லைகள் சார்ந்த கொள்கைகளில் பைடனை டிரம்ப் தாக்கிப் பேசினார்.
அப்போது, சிறைவாசிகள், மனநல சிகிச்சை மையங்களில் உள்ளவர்கள் மற்றும் பயங்கரவாதிகள் எல்லைகள் வாயிலாக நாட்டுக்குள் வருவதாக டிரம்ப் கூறினார்.
ஆனால், டிரம்ப் கூறுவதை ஆதரிப்பதற்கான எவ்வித ஆதாரங்களும் இல்லை என பைடன் கூறினார்.
அமெரிக்கப் படையினர் மரணங்கள்

பட மூலாதாரம், REUTERS
கடந்த பத்து ஆண்டுகளில் உலகின் எந்தப் பகுதியிலும் அமெரிக்கப் படையினர் தன்னுடைய ஆட்சியில்தான் உயிரிழக்கவில்லை என பைடன் கூறினார்.
பிபிசி உண்மை சரிபார்ப்புக் குழுவின்படி, பைடனின் இந்தக் கூற்று தவறானது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் ஜோர்டானில் ட்ரோன் தாக்குதலில் அமெரிக்கப் படையினர் கொல்லப்பட்டனர்.
இதுதவிர, ஆகஸ்ட் 2021ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் இருந்து வெளியேறும்போது காபூல் விமான நிலையத்தில் நிகழ்ந்த தற்கொலை தாக்குதலில் அமெரிக்கப் படையினர் 13 பேர் உயிரிழந்தனர். ஐ.எஸ். அமைப்பின் ஐ.எஸ்-கே பிரிவு இந்தத் தாக்குதலுக்குப் பொறுப்பேற்றது.
போரில் உயிரிழக்கும் படையினர் குறித்த ஆய்வு அமைப்பு (Defense Casualty Analysis System) அளித்தத் தகவலின்படி, டொனால்ட் டிரம்ப் ஆட்சிக் காலத்தில் அமெரிக்கப் படைகளைச் சேர்ந்த 65 பேர் உயிரிழந்ததாகக் குறிப்பிட்டுள்ளது.
டிரம்ப் மீதான வழக்கு

பட மூலாதாரம், GETTY IMAGES
கடந்த 2006ஆம் ஆண்டு டொனால்ட் டிரம்ப்புடன் உடலுறவு கொண்டதாக ஆபாசப் பட நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் ஒரு குற்றச்சாட்டை முன்வைத்தார். அதை டிரம்ப் மறுத்தார். மேலும் 2016ஆம் ஆண்டு தேர்தலில் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு முன்னதாக இந்த விவகாரம் பற்றி வெளியே பேசாமல் இருக்கத் தனக்குப் பணம் கொடுக்கப்பட்டதாக (hush money) டேனியல்ஸ் கூறியுள்ளார்.
இந்த வழக்கில் டொனால்டு டிரம்ப் குற்றவாளி என நியூயார்க் நீதிமன்றம் சமீபத்தில் தீர்ப்பளித்தது. இதை விவாதத்தின்போது ஜோ பைடன் குறிப்பிட்டார்.
பைடன் கூறுகையில், “குற்றவாளி எனத் தீர்ப்பளிக்கப்பட்ட ஒருவர் இங்கு இருக்கிறார், அவரைத்தான் நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன்” என கூறினார்.
டிரம்ப் ஒழுக்கமான நபர் அல்ல என பைடன் கூறினார். அதேநேநேரம், பைடனின் குற்றச்சாட்டுகளை டிரம்ப் மறுத்தார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போர்

பட மூலாதாரம், REUTERS
காஸா குறித்த கேள்வி எழுகையில், முன்னாள் அதிபர் டிரம்ப் இஸ்ரேல் தன் வேலையை முடிக்க வேண்டும் எனக் கூறினார். பைடன் பாலத்தீனியராகவே மாறிவிட்டதாக டிரம்ப் கூறினார்.
மேலும், யுக்ரேனுக்கு அமெரிக்கா உதவுவது குறித்தும் டிரம்ப் எழுப்பினார். யுக்ரேனுக்கு உதவுவதில் அமெரிக்காவை விட ஐரோப்பிய நாடுகள் குறைவாக செலவழித்துள்ளன என தெரிவித்தார்.
யுக்ரேனுக்கு உதவ அதிகமாக பணம் செலவழிக்குமாறு நேட்டா (NATO) நாடுகளுக்கு பைடன் ஏன் அழுத்தம் தரவில்லை என்றும் டிரம்ப் கேள்வியெழுப்பினார்.
இஸ்ரேல்-ஹமாஸ் போரை முடிவுக்குக் கொண்டு வர என்ன செய்வீர்கள் என பைடனிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, போரை நிறுத்த ஹமாஸ் விரும்பவில்லை என பைடன் தெரிவித்தார்.
இஸ்ரேலின் உறுதியை மீண்டும் வலியுறுத்திய பைடன், ஹமாஸ் அழிக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

பட மூலாதாரம், GETTY IMAGES / REUTERS
இருவரும் எப்படி விவாதித்தனர்?
வட அமெரிக்கா குறித்து செய்தி சேகரிக்கும் பிபிசி செய்தியாளர் ஆண்டனி ஸர்ச்செர், முன்னாள் அதிபர் டிரம்ப்பின் விவாதம் கட்டுப்பாட்டுடனும் அமைதியுடனும் இருந்ததாகக் கூறினார்.
வாக்குவாதம் செய்தல், மிகைப்படுத்தப்பட்ட பதில்களைத் தருவதிலிருந்து டிரம்ப் விலகியிருந்தார்55. ஏனெனில், கடந்த தேர்தல் விவாதத்தின்போது, இந்த விஷயங்கள் அவரை பலவீனமாக்கின.
டிரம்ப்பின் சில கூற்றுகள் முழுமையான தரவுகளின் அடிப்படையில் இல்லாவிட்டாலும், அவை முழுவதும் தவறான தகவல்கள் இல்லை. எனினும், டிரம்ப்பை பைடனால் மடக்க முடியவில்லை.
உதாரணத்திற்கு கருக்கலைப்பு குறித்த விவாதம் எழுந்தபோது, டொனால்டு டிரம்ப் அதை ‘ஜனநாயக (கட்சியினரின்) தீவிரவாதம்’ எனக் குறிப்பிட்டார்.
மேலும், பைடன் கட்சியின் தலைவர்கள் குழந்தைகள் பிறந்த பிறகு, கருக்கலைப்பை ஆதரிப்பதாக, தவறான தகவலைத் தெரிவித்தார்.
இந்த விவகாரத்தில் பைடன் வெற்றி பெற்றிருக்கலாம், ஆனால் அதைச் செய்ய பைடன் தவறிவிட்டார்.
விவாதத்தின்போது பல நேரங்களில் பைடனின் குரல் கரகரப்பாக இருந்தது, இதற்கு கடந்த சில தினங்களாகவே அவருக்கு ஏற்பட்ட உடல்நலக் குறைவே காரணம் என, அவருடைய பிரசார அதிகாரிகள் தெரிவித்தனர்.
பைடன் விவாதத்தின்போது சில நேரங்களில் தடுமாறியதாகவும் அவருடைய வாதங்கள் தட்டையாக இருந்ததாகவும் பிபிசி செய்தியாளர் ஆண்டனி ஸர்ச்செர் குறிப்பிட்டுள்ளார். விவாதத்தின் ஆரம்பத்தில் அவருடைய வாதங்கள் அறிவுபூர்வமற்றதாக இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். வயதைக் கடந்து தனக்கு போதிய ஆற்றல், வலு இருப்பதாக நிரூபிக்க பைடன் தவறிவிட்டார் என ஸர்ச்செர் குறிப்பிட்டுள்ளார்.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












