கல்கி 2898 AD: படம் எப்படி இருக்கிறது? - ஊடக விமர்சனம்

கல்கி 2898 ஏடி

பட மூலாதாரம், KALKI 2898 AD

அமிதாப் பச்சன், கமல்ஹாசன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பிரபல நடிகர்கள் நடித்துள்ள ‘கல்கி 2898 ஏடி’ திரைப்படம் ஜூன் 27, வியாழக்கிழமை வெளியாகியுள்ளது. ‘மகாநதி’ (நடிகையர் திலகம்) திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த நாக் அஷ்வின் இயக்கியுள்ள இப்படத்தின் டிரெய்லர் வெளியானது முதலே எதிர்பார்ப்பு அதிகமாக இருந்து வந்தது.

மகாபாரத கதையின் கருவும் கதாபாத்திரங்களும் இந்தப் படத்துக்கு அடித்தளமாக உள்ளன. எதிர்காலத்தையும் புராணக் கதைகளையும் இணைத்து, முன்னும் பின்னுமாக கதை நகர்கிறது. அதாவது மகாபாரத கதைக்கு ‘கல்கி 2898 ஏடி’ ஒரு சீக்வெல் (தொடர்ச்சி) என்று சொல்லலாம்.

குருக்ஷேத்திர போரிலிருந்து படம் தொடங்குகிறது. போர் முடிந்து 6000 ஆண்டுகளுக்குப் பிறகு என்ன நடக்கிறது என்பதை நவீன தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தப் படம் காட்சிப்படுத்தியுள்ளது.

பிபிசி தமிழ் வாட்ஸ் ஆப் சேனல்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

கல்கி படத்தின் கதை என்ன?

விஷ்ணுவின் பத்தாவது அவதாரம் என்று கூறப்படும் கல்கி, தீபிகா படுகோனின் கருவில் இருக்கும் குழந்தை. கல்கியை காப்பாற்ற அஸ்வத்தாமன் (அமிதாப் பச்சன்) போராடுகிறார். இதற்கு முட்டுக்கட்டை போடும் வில்லன் யாஸ்கின் (கமல்ஹாசன்).

உலகின் கடைசி நகரமாக காசி இருக்க, அங்கு உணவு, குடிநீர் என வாழ்வதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இவை எல்லாம், எளிய மக்கள் அணுக முடியாத ஒரு பிரமிட் போன்ற வளாகத்துக்குள் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார் யாஸ்கின் (கமல்ஹாசன்).

அதற்குள் நுழைய முயலும் பைரவா (பிரபாஸ்) அஸ்வதமன் அல்லது யாஸ்கின்- யாருக்கு சாதகமாக இருக்கப் போகிறார், இறுதியில் தீமையை நன்மை வென்றதா என்பதுதான் கதை.

பாகுபலி திரைப்படத்துக்குப் பிறகு, பிரபாஸுக்கு இந்தப் படம் கம்பேக் ஆக இருக்கும் என்று ரசிகர்கள் பலர் தெரிவிக்கின்றனர். பைரவா கதாபாத்திரம் படத்துக்கு நகைச்சுவை சேர்க்கிறது. புஜ்ஜி, பைரவாவின் செயற்கை நுண்ணறிவு திறன் கொண்ட வாகனம். இந்த புஜ்ஜிக்கு நடிகை கீர்த்தி சுரேஷ் குரல் கொடுத்துள்ளார்.

தீய சக்திகள் கொல்ல விரும்பும் விஷ்ணுவின் 10வது அவதாரமான கல்கியாகக் கருதப்படும் பிறக்காத குழந்தையின் தாயாக தீபிகா படுகோன் (சுமதி) நடிக்கிறார். கல்கி என்ற பெயர் வெளிவருவதற்கு முன்பாக, இந்தப் படம் பிராஜெக்ட் கே என்றழைக்கப்பட்டது.

'இயக்குநர்கள் கேமியோ கதைக்குப் பொருந்தவில்லை'

கல்கி 2898 ஏடி

பட மூலாதாரம், KALKI 2898 AD

“குருக்ஷேத்திர போர்க்களம், காசி, ஷம்பாலா மற்றும் (பிரமிட்)வளாகம் என இந்த உலகங்களை உருவாக்க நிறைய முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன" என்று தி இந்து ஆங்கில நாளிதழ் தனது விமர்சனத்தில் தெரிவித்துள்ளது.

"இரண்டு பிரபலமான இயக்குநர்கள் கேமியோ கதாபாத்திரமாகத் தோன்றுகிறார்கள்; இந்தப் பகுதிகள் இன்ஸ்டாகிராம் ரீல்கள் மற்றும் மீம்ஸுக்கு மிகவும் பொருத்தமாக இருந்திருக்கலாம், ஆனால் கதைக்குப் பொருத்தமில்லை. முதல் பாதியில் யாஸ்கினின் அறிமுகம், போருக்கான நேரம் வந்துவிட்டது என்று அஸ்வத்தாமன் உணரும் தருணம் ஆகியவை குறிப்பிடத்தக்க தருணங்களாக இருந்தன,” என்று தி இந்து நாளிதழ் கூறுகிறது.

அடுத்து என்ன நடக்கப் போகிறது என்று சில இடங்களில் முன் கூட்டியே தெரியும் வகையில் கதை எழுதப்பட்டுள்ளதாகவும் தி இந்து நாளிதழ் விமர்சித்துள்ளது.

இந்தப் படம் மூன்று மணிநேரம் ஒரு நிமிடம் நீளம். முதல் பாதியில் பைரவா யார் என்பது நிறுவப்படுகிறது. அதன் பிறகு வேகமெடுக்கும் காட்சிகளில், அஸ்வத்தாமன், பைரவா, சுமதி ஆகியோரைச் சுற்றி கதை நகர்கிறது. கமல் ஹாசன் சுமார் அரை மணிநேரத்துக்கு மட்டுமே திரையில் தோன்றுகிறார். எனினும் அவரது கதாப்பாத்திரம் மிகவும் சுவாரஸ்யமாக உள்ளது என படத்தைப் பார்த்த ரசிகர்கள் பிபிசி தமிழிடம் தெரிவித்தனர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இன்னொரு ஹீரோ - கிராஃபிக்ஸ் காட்சிகள்

சந்தோஷ் நாராயணனின் இசை கதையில் வலுக்கட்டாயமாகத் திணிக்கப்படாமல், கதையுடன் சேர்த்தே பயணிப்பதாக நக்கீரான் வார இதழ் பாராட்டியுள்ளது.

நக்கீரன் வார இதழ் “ஜார்ஜ் டுடோல்விக் ஒளிப்பதிவில் படம் மிக மிக பிரமாண்டமாக ஹாலிவுட் தரத்தில் படமாக்கப்பட்டு இருக்கிறது. சின்ன சின்ன விஷயங்களைக்கூட நேர்த்தியாகப் படம் பிடித்து படத்தின் பிரமாண்டத்தைத் தன் ஒளிப்பதிவால் கூட்டி இருக்கிறார்" எனவும் குறிப்பிட்குறிப்பிட்டுள்ளது.

அதேபோல், "கிராஃபிக்ஸ் காட்சிகளும் மிகச் சிறப்பாக அமைந்திருக்கிறது. அதுவே படத்திற்கு மிகப்பெரிய ப்ளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவியுள்ளது. இப்படத்தின் இன்னொரு ஹீரோவாகவும் கிராஃபிக்ஸ் காட்சிகள் இருக்கின்றன,” என்றும் தனது விமர்சனத்தில் குறிப்பிட்டுள்ளது.

கேமியோ (குறுகிய நேர) கதாபாத்திரங்களில் பிரபல இயக்குநர்கள் தோன்றுவது ஆச்சர்யமாக இருந்தது என்று ரசிகர்கள் சிலர் கூறினாலும், சிலர் தேவையற்றது என்றும் கருதினர்.

கல்கி 2898 ஏடி

பட மூலாதாரம், KALKI 2898 AD

அயர்ச்சியை அளிக்கும் காட்சிகள்

மகாபாரதக் கதையின் அடுத்த பாகமாக உருவாகியுள்ள இந்தத் திரைப்படம் மிகவும் ‘பேசிக்’கான கதைக்களத்தையே கொண்டுள்ளதாக தினமணி நாளிதழ் விமர்சித்துள்ளது.

மேலும், “இந்திய திரையுலகில் நிறைய திரைப்படங்கள், உருவாக்கத்தில் ஹாலிவுட் தரம் என்னும் இலக்கைத் தொட முயன்று ஓரளவு வெற்றியைக் கண்டுள்ளன. ஆனால், எல்லாவற்றிலும் ஒரு ‘க்’ இருக்கவே செய்யும். அந்த வரிசையை முந்தி கல்கி திரைப்படம் முதலிடத்தைத் தட்டிச் சென்றுள்ளது,” என்றும் குறிப்பிட்டுள்ளது.

எதிர்கால உலகம் எப்படியிருக்கும் என மிக நேர்த்தியான காட்சிகளை இயக்குநர் நாக் அஷ்வின் வடிவமைத்து இருப்பதாகவும் தினமணி நாளிதழ் பாராட்டியுள்ளது.

படம் முழுக்க அதற்காகப் போடப்பட்ட செட்டுகளும் கிராஃபிக்ஸ் காட்சிகளும் மிகக் கச்சிதமாக இதுவரை இந்திய சினிமா பார்த்திராத காட்சிகளைக் காட்டுகின்றன என்றும் தனது விமர்சனத்தில் தினமணி பாராட்டியுள்ளது.

இருப்பினும் உருவாக்கத்தில் உச்சத்தைத் தொட்ட கல்கியால் திரைக்கதையில் திடமாக நிற்க முடியவில்லை எனவும் விமர்சித்துள்ளது. “முதல் காட்சியைத் தவிர படத்தின் முக்கால்வாசி காட்சிகளில் எழுத்துக்கு வேலை கொடுத்ததாகவே தெரியவில்லை. ஒரு சில காட்சிகள் நன்றாக இருந்தாலும், பல காட்சிகள் அயர்ச்சியை அளிக்கின்றன.”

அதோடு, இயக்குநர் பெரும்பாலும் கதைக்குத் தேவையற்ற விஷயங்களை விவரிக்க முயன்று போரடிக்கச் செய்வதாகவும் தினமணி விமர்சித்துள்ளது.

ஆங்கில நாளிதழான இந்தியன் எக்ஸ்பிரஸ், “இந்தப் படம் முதல் விரிவான பான்-இந்திய திரைப்படமாகும். எதிர்காலத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்ட திரைப்படங்களில் இருந்தும் (மேட் மேக்ஸ், கேம் ஆஃப் த்ரோன்ஸ், ஸ்டார் வார்ஸ், லார்ட் ஆஃப் த ரிங்ஸ் மற்றும் ஆம், ஆதிபுருஷ், பாகுபலி-ஆர்.ஆர்.ஆர் ஸ்லேட், அமர் சித்ர கதா) தனது அழகியலை கடன் பெற்றுள்ளது," என்று விமர்சனம் அளித்துள்ளது.

மேலும், "பெரிய ஹீரோ-வில்லன்-மோதல்களுக்காக படத்தின் இரண்டாம் பாதி தெளிவாக ஒதுக்கப்பட்டது, ரசிகர்களை சோர்வடையவிடாமல் காப்பாற்றுகிறது. சரியான நேரத்தில், ஒரு உற்சாகமான கிளைமாக்ஸ் மூலம் தன்னை மீட்டுக் கொள்கிறது கல்கி 2898ஏடி” என்றும் குறிப்பிட்டுள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)