மரணத்தை ஏற்படுத்தும் கள்ளச் சாராயத்தைக் கண்டுபிடிப்பது எப்படி?

பட மூலாதாரம், Getty Images
"அன்று என்னுடன் சாராயம் குடித்தவர்களில் பெரும்பாலானோர் இறந்துவிட்டார்கள்.. நானும் பிழைக்க மாட்டேன் என்று நினைத்தேன்" என்கிறார் கள்ளச்சாராயத்தை குடித்து உயிர்பிழைத்து மீண்டு வந்த இளம் பெண் சத்யா. கள்ளக்குறிச்சியில் மெத்தனால் கலந்த கள்ளச்சாராயம் குடித்ததால் உடல்நலம் பாதிக்கப்பட்டவர்களில் சத்யாவும் ஒருவர்.
அதே பகுதியை சேர்ந்த முருகன் என்பவரும் கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார்.
"நான் உயிர் பிழைத்ததற்கு மருத்துவர்கள் தான் காரணம். நான் அவர்களுக்கு கடமைப்பட்டிருக்கிறேன். நான் உயிர் பிழைப்பேன் என்று ஒருபோதும் நினைக்கவில்லை. இறந்துவிடுவேன் என்று எண்ணி பயந்தேன்" என்கிறார்.
கள்ளக்குறிச்சியில் கடந்த வாரம் மெத்தனால் கலந்த கள்ளச்சாரயத்தை உட்கொண்டதால் 55க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 219 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சத்யா மற்றும் முருகன் ஆகியோர் அடங்குவர்.

பட மூலாதாரம், BBC Tamil
பிபிசி தமிழிடம் தன் நிலையை விவரித்த முருகன் "எனக்கு 20 ஆண்டுகளாக மது அருந்தும் பழக்கம் உள்ளது. கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் இருந்த போது ஒவ்வொரு நாளை கடப்பது மிகவும் கடினமாக இருந்தது. ஒவ்வொரு நாளும் ஒரு வருடமாக இருப்பது போன்று உணர்ந்தேன். இனி கண்டிப்பாக குடிக்க மாட்டேன்" என்று கூறினார்.
கள்ளச்சாராயம் குடித்து உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் வரை குடித்தவர்களுக்கு அதில் மெத்தனால் கலக்கப்பட்டிருப்பது தெரியாது. இந்தியா மட்டுமல்ல, உலகம் முழுவதும் மெத்தனால் கலந்த மதுவை குடித்து பாதிப்புக்குள்ளாகும் நிகழ்வுகள் நடந்து கொண்டுதான் இருக்கிறது.

ரஷ்யாவில் போலி மது அருந்தி (counterfeit alcohol) ஆண்டுக்கு 900 பேர் உயிரிழப்பதாக அந்நாட்டின் தேசிய நுகர்வோர் உரிமைகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இரானில், 2020 ஆம் ஆண்டில் `விஷச் சாராயம்’ காரணமாக 44 பேர் இறந்துள்ளனர்.
இந்தோனீசியாவில் 2018 ஆம் ஆண்டு வீட்டில் காய்ச்சப்பட்ட சாராயத்தை உட்கொண்டதால் 45க்கும் மேற்பட்டோர் இறந்தனர்.

பட மூலாதாரம், Getty Images
மெத்தனால்
மதுபானத்தால் இறப்பு நேர்ந்திருக்கும் பெரும்பாலான நிகழ்வுகள் மெத்தனாலுடன் (methanol) தொடர்புடையவை - மூன்ஷைன் (moonshine) மற்றும் ஹூச் (hooch) என்று அழைக்கப்படும் சட்டவிரோத மதுபானங்களில் வழக்கமாக காணப்படும் ஒரு நச்சு ராசயனம் ஆகும்.
மெத்தனால் காய்ச்சும் முறையில் உற்பத்தி செய்யப்படுகிறது. காய்ச்சி வடித்தல் (distillation) செயல்முறை மூலம் செறிவூட்டப்படுகிறது.
வணிக ரீதியாக மது உற்பத்தி செய்பவர்கள் மெத்தனாலை மனிதர்கள் உட்கொள்வதற்கு பாதுகாப்பான நிலைகளுக்குக் குறைக்கின்றனர்.
ஆனால் சட்டத்துக்கு புறம்பாக சாராயம் காய்ச்சும் நபர்கள் மலிவான விலையில் அந்த பானங்களில் பெரும்பாலும் தொழில்துறை மெத்தனாலைச் சேர்க்கிறார்கள் - இது பெயிண்ட் மற்றும் வார்னிஷ் ஆகியவற்றில் சேர்க்கப்படும் மெத்தனால் ஆகும்.
இந்த நச்சு ரசாயனம் சிறிய அளவு உட்கொண்டால் கூட குருட்டுத்தன்மை, கல்லீரல் பாதிப்பு மற்றும் மரணத்தை ஏற்படுத்தும்.
மெத்தனால் விஷத்தன்மை பாதுகாப்பு அமைப்பின் (Methanol Poisoning Initiative -MPi) தரவுகளின்படி, 2023 ஆம் ஆண்டில் உலகளவில் மெத்தனால் தொடர்பான 60 சம்பவங்கள் பதிவாகியுள்ளன, இதன் விளைவாக 309 பேர் இறந்துள்ளனர்.
ஓஸ்லோ பல்கலைக்கழகம் மற்றும் மருத்துவர்கள் அமைப்பு ( Médecins Sans Frontières -MSF) ஆகியவற்றால் உருவாக்கப்பட்ட இந்த முயற்சி, பெரும்பாலான விஷச் சாராய சம்பவங்கள் ஆசிய நாடுகளில் பதிவாகியுள்ளன என்பதை சுட்டிக்காட்டுகிறது.

பட மூலாதாரம், Getty Images
மெத்தனால் நச்சுத்தன்மையால் பாதிக்கப்பட்டவுடன் ஏற்படும் அறிகுறிகள்
சிறிய அளவிலான தொழில்துறை மெத்தனாலைக் குடிப்பது கூட மிகவும் ஆபத்தானது.
பிரிட்டனின் பொது சுகாதார அமைப்பின் கூற்றுப்படி, மெத்தனால் நீராவிகளை உள்ளிழுப்பது அல்லது உட்கொள்வது கடுமையான உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்தலாம், அவற்றுள்:
- கோமா
- வலிப்பு
- நரம்பு மண்டலம் பாதிப்பு
- குருட்டுத்தன்மை
- இறப்பு
தமிழ்நாட்டில் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையைச் சேர்ந்த டாக்டர் ஏ முத்து, பிபிசி தமிழிடம், மெத்தனால் உட்கொள்ளும்போது உற்பத்தியாகும் அமிலம் எப்படி மக்களைக் கொல்கிறது என்பதை விளக்கினார்:
"மெத்தனால் கலந்த மதுவை உட்கொண்டதும், சிறுநீரகத்தில் அமிலம் உருவாகி, சிறுநீரின் ஓட்டத்தைத் தடுத்து, உப்பின் அளவை அதிகரித்து சிறுநீரக செயலிழப்பை ஏற்படுத்துகிறது." என்று விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images
குருட்டுத்தன்மை
சிறிய அளவிலான மெத்தனால் உட்கொள்வது கூட மத்திய நரம்பு மண்டலத்தின் சில பகுதிகளை கடுமையாக பாதித்து மீளமுடியாத குருட்டுத்தன்மைக்கு வழிவகுக்கும் என்று பிரிட்டிஷ் ஜர்னல் ஆஃப் ஆப்தமாலஜியில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு எச்சரிக்கிறது.
மிகவும் மேம்பட்ட மருத்துவ உயர் சிகிச்சை முறைகளால் கூட கள்ளச்சாராயம் அருந்திய நோயாளிகளின் பார்வையைக் காப்பாற்ற முடியாது.
குமட்டல், தலைச்சுற்றல், வாந்தி, மங்கலான பார்வை போன்ற அறிகுறிகளுடன் நோயாளிகள் சிகிச்சைப் பெற வருவதாக கவுண்டி மருத்துவமனையின் மருத்துவ ஆலோசகர் விகாஸ் சோடிவாலா 2012 இல் பிபிசியிடம் தெரிவித்தார்.
அவர்கள் கடைகளில் மற்றும் சட்டவிரோத விற்பனையாளர்களிடம் இருந்து மது பானங்களை வாங்கி குடித்ததாக அவர் கூறினார்.
"மெத்தனால் கண்ணின் பின்பகுதியில் உள்ள பார்வை நரம்பைத் தாக்கும். இது அந்த நபர் பார்வையை இழக்க வழிவகுக்கிறது. சில சமயங்களில் அவர்களை முற்றிலுமாக பார்வை இழக்க செய்கிறது" என்றார்.

பட மூலாதாரம், Getty Images
உலகளாவிய மெத்தனால் சம்பவங்கள்
மெத்தனால் விஷத்தன்மை பாதுகாப்பு அமைப்பின் (Methanol Poisoning Initiative -MPi) தரவுகளின்படி, மெத்தனால் விஷமானது உலகளவில் ஏழை மக்களை அதிகளவில் பாதித்துள்ளது. ஆனால் பெரும்பாலும் இந்த சம்பவங்கள் பற்றிய செய்திகள் வெளி வருவதில்லை.
உயர்தர மதுபானங்களின் விலை அதிகரித்து வரும் நிலையில், குறைந்த வருமானம் கொண்டவர்கள் குறைந்த விலையில் தயாரிக்கப்பட்ட மதுபானங்களால் ஈர்க்கப்படுகிறார்கள்.
இந்தியாவின் கிழக்கு மாநிலமான மேற்கு வங்கத்தில் கள்ளச்சாராயம் உட்கொண்டதால் 2011 இல் கிட்டத்தட்ட 170 பேர் இறந்தனர், அதே சமயம் 2009 இல் குஜராத்தில் 100 க்கும் மேற்பட்டோர் இறந்தனர். மும்பையில் 2015 இல் 100 பேர் இறந்தனர்.
2022 ஆம் ஆண்டில், தென்னாப்பிரிக்காவில் ஒரு இரவு விடுதியில் இறந்த 21 இளைஞர்களின் உடல்களில் மெத்தனால் தடயங்களை புலனாய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.

பட மூலாதாரம், Getty Images
மது விலக்கு
சில முஸ்லிம் நாடுகளில் மது அருந்துவது தடைசெய்யப்பட்டுள்ளது, ஏனெனில் அது ஹராம் (haram - தடைச்செய்யப்பட்டது) என்று கருதப்படுகிறது.
இரான் அல்லது இந்தோனீசியா போன்ற முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் நாடுகளில், சட்டவிரோத குடிப்பழக்கத்தால் ஏற்படும் மரணங்களைத் தடுக்க அவர்கள் எதிர்கொள்ளும் மிகப்பெரிய பிரச்னைகளில் ஒன்று மது அருந்துவதற்கு எதிரான மத ரீதியானத் தடைகள் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சட்டவிரோதமான சாராயம் குடித்து மக்கள் நோய்வாய்ப்பட்டால் வெளியே சொல்ல அவமானப்பட்டு அல்லது குற்றஞ்சாட்டப்படுவார்கள் என்ற பயத்தின் காரணமாக உதவியை நாடாமல் இறக்கின்றனர்.
கடந்த 2014-ம் ஆண்டு பாகிஸ்தானின் சிந்து பகுதியில் விஷச்சாராயம் அருந்தியதால் 40 பேர் உயிரிழந்தனர்.
மது அருந்துதல் அதிகமாக இருக்கும் வெளிநாட்டு பார்கள் மற்றும் சுற்றுலா தளங்களுக்கு செல்லும் சுற்றுலாப் பயணிகளும் மெத்தனால் கலந்த பானங்களை உட்கொள்ளும் அபாயம் உள்ளது.

பட மூலாதாரம், Getty Images
மதுபானம் போலியானது என்பதை கண்டறிவது எப்படி?
நீங்கள் எந்த நாட்டில் இருந்தாலும் சரி, சட்டவிரோத மது விற்பனையாளர்களுக்கு அறிந்தோ அறியாமலோ நாம் பலியாக வாய்ப்புகள் அதிகம்.
சர்வதேச காவல் அமைப்பான இன்டர்போல், அங்கீகரிக்கப்பட்ட விற்பனையாளர்களிடமிருந்து மது வாங்க வேண்டும் என்று மக்களுக்கு அறிவுறுத்துகிறது: "மதுபானங்கள் அதன் இயல்பான விலைக்குக் குறைவாக விற்கப்பட்டால், அல்லது மதுபானத்தின் விலைகளில் மீது சாதாரண வரிகள் சேர்க்கவில்லை என்றால், அது போலியானது என்று அர்த்தம்"
மற்ற அடையாளங்கள்: "மோசமான பேக்கேஜிங், அதில் எழுத்துப்பிழை தவறுகள் மற்றும் வழக்கத்திற்கு மாறான வடிவங்களில் பாட்டில்கள் ஆகிய அடையாளம் இருந்தால் அந்த மதுபானத்தின் தரத்தை சரிபார்க்கவும்."
சுய அறிவைப் பயன்படுத்தவும்: "கெட்ட நாற்றம் வீசும் சாராயத்தை குடிக்க கூடாது. அதில் பெயிண்ட் ஸ்ட்ரிப்பர் அல்லது நெயில் பாலிஷ் ரிமூவர் போன்ற வாசனை இருந்தால், அது அநேகமாக போலியான மதுபானமாக இருக்க வாய்ப்பிருக்கிறது!"
சில சமயங்களில் போலியான மதுபானம் என்று தெரியாமலே உயர்தர விற்பனை நிலையங்கள் விஷத்தன்மை நிறைந்த மது பானத்தை விற்கக்கூடும்.

பட மூலாதாரம், Getty Images
நைஜீரியா
நைஜீரிய உணவு விமர்சகர் ஓபியேமி ஃபமாகின் பிபிசியிடம் கூறுகையில், தலைநகர் போர்ட் ஹார்கோர்ட்டில் உள்ள ஒரு இரவு விடுதியில் வாங்கிய பிராண்டட் விஸ்கியை குடித்ததால் அவருக்கு உடல்நிலை சரியில்லாமல் போனது, அதன் பின்னர் தான் அது "போலி" என்பது தெரிய வந்தது என்கிறார்.
"அதன் சுவை வித்தியாசமாக இருந்தது, ஆனால் நான் மது விருந்தில் இருந்ததால் உற்சாக மிகுதியில் அந்த சுவையை கண்டுக்கொள்ளாமல் குடித்து விட்டேன். அதன் பின்னர் நான் ஐந்து நாட்களாக மோசமாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தேன்" என்று அவர் கூறினார்.
நைஜீரியாவின் பல நகரங்களில் போலி மதுபான விற்பனை பரவி வரும் நிலையில், தனது அனுபவத்தை சமூக வலைதளங்களில் அவர் பதிவிட்டார். பின்னர் பலர் இதுபோன்ற அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டதாக அவர் குறிப்பிட்டார்.
ஆனால் பணக்கார நாடுகளிலும் குற்றவாளிகள் இதே வழியில் செயல்படுகிறார்கள்.
கிரீஸ்

ஆகஸ்ட் 2016 இல், கிரீஸில் உள்ள ஜான்டேயில் நண்பர்களுடன் ஒரு மதுபான விடுதியில் குடித்துவிட்டு வந்தபோது, ஹன்னா பவல் ஒரு இரவு முழுவதும் உடல்நலம் பாதிக்கப்பட்டு சோர்வடைந்தார்.
ஆனால் அன்று அவர் அதிகமாக குடிக்கவில்லை. எனவே `ஹேங் ஓவர்’ நிலையில் இல்லை. இருப்பினும் அவர் மிகவும் சோர்வாக உணர்ந்தார்.
23 வயதான அந்த இளம்பெண் வோட்காவை குடித்துள்ளார், அதில் விஷத்தன்மை வாய்ந்த மெத்தனால் கலந்திருந்தது. இதனால் அவருக்கு சிறுநீரகங்கள் செயலிழந்தது. பார்வையையும் இழந்தார்.
"மாஃபியா கும்பல் அதை காட்டு பகுதிகளில் உற்பத்தி செய்து குறைந்த விலைக்கு பார்களுக்கு விற்பதாக கூறப்படுகிறது” என்று அவர் 2019 இல் பிபிசி நியூஸ்பீட்டிடம் கூறினார்.
2009 ஆம் ஆண்டில், பாலியில் (Bali) வாங்கப்பட்ட மெத்தனால் கலந்த பாம் ஒயின் (palm wine) குடித்த 25 பேர் இறந்தனர். அவர்களில் நான்கு வெளிநாட்டவர்கள்.
"சோர்வாக இருந்ததை தொடர்ந்து நான் விளக்கை ஆன் செய்ய எழுந்தேன். அப்போது தெரிந்தது விளக்கு எரிகிறது ஆனால் என் கண்களில் பார்வை இல்லை என்பது. நான் பயப்பட ஆரம்பித்தேன், என்னால் எதையும் பார்க்க முடியவில்லை." என்று அன்று நடந்ததை ஹன்னா பவல் விளக்கினார்.
ரஷ்யா

பட மூலாதாரம், Getty Images
ரஷ்யாவில் உள்ள சாதாரண விற்பனையகங்களில் கூட `கள்ள’ ஓட்கா எளிதில் கிடைக்கிறது, மேலும் 2000களின் நடுப்பகுதி வரை, பல்பொருள் அங்காடிகளில் விற்கப்பட்ட மதுபானங்களில் கிட்டத்தட்ட பாதி போலியானது.
2023 ஆம் ஆண்டில், பல்பொருள் அங்காடிகளில் சட்டப்பூர்வமாக விற்கப்பட்ட "மிஸ்டர் சைடர்" என்ற மதுபானத்தை உட்கொண்ட பின்னர் பல ரஷ்ய பிராந்தியங்களில் 30 பேர் வரை இறந்தனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், நிறுவப்பட்ட மதுபான உற்பத்தியாளர்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் என்பதை உறுதிப்படுத்த, ரஷ்ய அரசாங்கம் மதுபான உற்பத்தியாளர்களுக்கான உரிம விதிகளை கடுமையாக்கியது.

பட மூலாதாரம், Getty Images
மனிதர்கள் மட்டும் பாதிக்கப்படவில்லை விலங்குகளும் பாதிக்கப்படுகிறது
இலங்கை போன்ற சில நாடுகளில் சட்டவிரோத மதுபான உற்பத்தி சுற்றுச்சூழலையும் வனவிலங்குகளையும் பாதிக்கிறது.
2022 ஆம் ஆண்டில், வனவிலங்கு அதிகாரிகள் ஒரு யானையை மீட்டனர், அதன் தும்பிக்கை சட்டவிரோதமாக மது தயாரிக்கப் பயன்படுத்தப்படும் பேரலில் சிக்கி இருந்தது.
யானைகள் நடமாடும் காட்டுப் பகுதிகளில் சட்டவிரோத மதுபானச் செயற்பாடுகளை மேற்கொள்ள கடத்தல்காரர்கள் யானைகளைக் கொல்வதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images
மெத்தனாலுக்கும் எத்தனாலுக்கும் என்ன வித்தியாசம்?
எத்தனால் மற்றும் மெத்தனால் ஆகியவை எரிபொருளாகவும் (fuel) கரைப்பான்களாகவும் (solvents) பயன்படுத்தப்படும் ஆல்கஹால் வகைகள் ஆகும்.
விலையுயர்ந்த ரசாயனமான எத்தனால், பீர், ஒயின் மற்றும் ஸ்பிரிட் போன்ற மதுபானங்கள் உற்பத்தியில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த மது அருந்துவதால் தலைவலி மற்றும் குமட்டல் ஏற்படலாம், ஆனால் விளைவுகள் தற்காலிகமானவை.
இருப்பினும், மிதமான மது வாசனையை கொண்டிருக்கும் மெத்தனால், ஒப்பீட்டளவில் மலிவானது, மிகவும் நச்சுத்தன்மையுடையது மற்றும் உட்கொள்ள தகுதியற்றது.
வரலாற்று ரீதியாக, இந்த உறைதல் தடுப்பு (anti-freezing)ரசாயனம் மரத்திலிருந்து வடிகட்டப்பட்டது. மர ஆல்கஹால் (wood alcohol) என்றும் அழைக்கப்படுகிறது.
பிபிசி தமிழ், பிபிசி நியூஸ் ஆசியா, பிபிசி பெர்சியன், பிபிசி ஆப்பிரிக்கா, பிபிசி ரஷ்யா, பிபிசி நியூஸ்பீட், பிபிசி ஆன்லைன் ஆகியவை வழங்கிய தகவல்களை ஒருங்கிணைத்து பிபிசி உலகச் சேவை இந்தக் கட்டுரையை உருவாக்கியது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












