நிலவின் வளங்களை கைப்பற்ற புதிய விண்வெளி பந்தயம் - முந்துவது யார்?

சந்திரன் யாருக்கு சொந்தம்? - சூடுபிடிக்கும் புதிய விண்வெளிப் பந்தயம்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், ரெபெக்கா மொரேல்
    • பதவி, அறிவியல் ஆசிரியர்

நாம் சந்திரனை கைப்பற்றுவதற்கான அவசர யுகத்தில் இருக்கிறோம். வளங்களுக்காகவும் விண்வெளியில் ஆதிக்கம் செலுத்தவும், சர்வதேச நாடுகள் மற்றும் விண்வெளி நிறுவனங்கள் சந்திரனின் மேற்பரப்பை குறிவைத்து செயல்பட்டு வருகின்றன. இந்த புதிய சந்திரன் சகாப்தத்தை அனுபவிக்க நீங்கள் தயாரா?

இந்த வாரம், சந்திரனில் மேற்பரப்பில் சீனாவின் கொடி விரிக்கப்பட்ட படங்கள் விண்கலத்தில் இருந்து பூமிக்கு அனுப்பி வைக்கப்பட்டு, அவை பொதுவில் பகிரப்பட்டன. சீனா தரப்பில் சந்திரனுக்கு அனுப்பப்பட்ட நான்காவது விண்கலம் இது.

சீன விண்கலம் சந்திரனின் தொலைதூரப் பகுதியிலிருந்து மாதிரிகளை சேகரித்து பூமிக்கு அனுப்பும் முதற்கட்ட பணிகளும் தொடங்கிவிட்டன.

கடந்த 12 மாதங்களில், இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகள் சந்திரனின் மேற்பரப்பில் விண்கலங்களை தரையிறக்கியுள்ளன. பிப்ரவரியில், அமெரிக்க நிறுவனமான இன்ட்யூட்டிவ் மெஷின்ஸ் ( Intuitive Machines) நிலவில் விண்கலத்தை தரையிறக்கும் முதல் தனியார் நிறுவனமாக உருவெடுத்தது. அதனை தொடர்ந்து மேலும் பல தனியார் நிறுவனங்கள் விண்கலங்களை நிலவில் தரையிறக்க தயாராகி வருகிறது.

நாசா சந்திரனுக்கு மீண்டும் மனிதர்களை அனுப்ப தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஆர்ட்டெமிஸ் (Artemis) திட்டத்தின் கீழ் விண்வெளி வீரர்கள் 2026இல் சந்திரனில் தரையிறங்க உள்ளனர். மற்றொரு புறம், 2030-க்குள் மனிதர்களை சந்திரனுக்கு அனுப்புவோம் என்று சீனா கூறுகிறது. விரைவான பயணத் திட்டத்துக்கு பதிலாக, சந்திரனில் நிரந்தர தளங்களை உருவாக்க வேண்டும் என்று சீனா திட்டமிட்டு வருகிறது.

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

இன்றைய யுகத்தில் பெரும் அதிகார அரசியல் உருவெடுத்து வரும் நிலையில், இந்த புதிய விண்வெளிப் பந்தயம் பூமியில் நிலவும் போட்டிச் சூழலை நிலவு வரை கொண்டு செல்ல வழிவகுக்கும்.

கன்சாஸ் பல்கலைக்கழகத்தின் புவியியல் நிபுணர் ஜஸ்டின் ஹோல்காம்ப் கூறுகையில், “சந்திரனுடனான நமது உறவில் மிக விரைவில் மாற்றங்கள் ஏற்பட உள்ளது. விண்வெளி ஆய்வின் வேகம் நமது சட்டதிட்டங்களை மீறுகிறது" என்று அவர் எச்சரிக்கிறார்.

1967 ஆம் ஆண்டு ஐநா உடன்படிக்கை எந்த நாடும் சந்திரனை சொந்தம் கொண்டாட முடியாது என்று கூறுகிறது. அவுட்டர் ஸ்பேஸ் உடன்படிக்கை (Outer Space Treaty) சொல்வது என்னவெனில், `சந்திரன் அனைவருக்கும் சொந்தமானது. அதில் மேற்கொள்ளப்படும் எந்த ஒரு ஆய்வும் அனைத்து மனித குலத்தின் நலனுக்காகவும் அனைத்து நாடுகளின் நலன்களுக்காகவும் மேற்கொள்ளப்பட வேண்டும்’ என்று கூறுகிறது.

சந்திரன் யாருக்கு சொந்தம்? - சூடுபிடிக்கும் புதிய விண்வெளிப் பந்தயம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சீன அரசு ஊடகம் வெளியிட்டுள்ள புகைப்படம்

இந்த உடன்படிக்கை மிகவும் அமைதியான ஒத்துழைப்பான சூழலை குறிக்கிறது. ஆனால், இந்த விண்வெளி உடன்படிக்கை ஒத்துழைப்பை ஏற்படுத்தவில்லை. மாறாக சர்வதேச பனிப்போர் அரசியலை உருவாக்கி உள்ளது.

இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு அமெரிக்காவிற்கும் சோவியத் யூனியனுக்கும் இடையே பதற்றங்கள் அதிகரித்ததால், விண்வெளி ஒரு ராணுவப் போர்க்களமாக மாறக்கூடும் என்ற அச்சம் நிலவியது. எனவே ஒப்பந்தத்தின் முக்கிய பகுதியாக எந்த அணு ஆயுதங்களையும் விண்வெளிக்கு அனுப்பக் கூடாது என்று 100க்கும் மேற்பட்ட நாடுகள் கையெழுத்திட்டன.

ஆனால் தற்போதுள்ள புதிய விண்வெளி யுகம் அன்றைய காலகட்டத்தில் இருந்ததை விட வித்தியாசமாக தோன்றுகிறது.

இந்த சந்திர யுகத்தில் ஏற்பட்டுள்ள பெரிய மாற்றம் என்னவென்றால், நவீன கால நிலவு பயணங்களை மேற்கொள்ள சர்வதேச நாடுகள் மட்டும் திட்டமிடவில்லை, தனியார் நிறுவனங்களும் திட்டங்களை வகுத்து, போட்டியிடுகின்றன.

ஜனவரியில், பெரெக்ரைன் (Peregrine) என்ற அமெரிக்க நிறுவனம் மனித சாம்பல், டிஎன்ஏ மாதிரிகள், பிராண்டிங் பெயர் கொண்ட விளையாட்டு பானம் ஆகியவற்றை சந்திரனுக்கு எடுத்துச் செல்வதாக அறிவித்தது. ஆனால் எரிபொருள் கசிவு ஏற்பட்டு வெடித்து சிதறி அத்திட்டம் தோல்வியை தழுவியது. அதன் பின்னர், தேர்ந்தெடுக்கப்பட்ட பொருள்களை சந்திரனுக்கு எடுத்து செல்ல முயற்சி செய்தது பெரும் விவாதத்தை தூண்டியது. நடைமுறையில் இருக்கும் ஒப்பந்தத்தின்படி மனித குலத்திற்கு பயனளிக்கும் ஆய்வை மட்டுமே சந்திரனில் மேற்கொள்ள வேண்டும் என்ற விவாதத்தைத் தூண்டியது.

"எங்களுக்கு திறன் இருப்பதால், சாத்தியம் என்பதால், நாங்கள் சந்திரனுக்கு பொருட்களை அனுப்ப முயற்சிக்கிறோம். இதற்கு வேறு எந்த விதமான காரணமும் இல்லை,” என்கிறார் விண்வெளி வழக்கறிஞரும், ஃபார் ஆல் மூன்கைண்டின் நிறுவனருமான மிச்செல் ஹான்லன். இந்த நிறுவனம் சந்திரனில் தரையிறங்கும் தளங்கள் மற்றும் விண்வெளிப் பயணங்களின் பொருட்கள் ஆகியவற்றை பாதுகாத்து வைக்கும் ஒரு அமைப்பாகும்.

"தற்போது சந்திரன் நாம் அணுகக்கூடிய தூரத்தில் உள்ளது, எனவே அதனை நாம் துஷ்பிரயோகம் செய்யத் தொடங்கிவிட்டோம்," என்று அவர் கூறுகிறார்.

சந்திரனுக்கு செல்ல திட்டம் வகுக்கும் தனியார் நிறுவனங்கள் அதிகரித்துக் கொண்டிருந்தாலும், தேசிய நிறுவனங்கள் தான் முக்கிய பங்கு வகிக்கின்றன.

லண்டன் இன்ஸ்டிடியூட் ஆஃப் ஸ்பேஸ் பாலிசி அண்ட் லாவின் இயக்குனர் சைத் மோஸ்தேசார் கூறுகையில், "எந்தவொரு தனியார் நிறுவனமும் சம்பந்தப்பட்ட நாட்டின் அரசால் விண்வெளிக்கு செல்ல அங்கீகரிக்கப்பட வேண்டும், இது சர்வதேச ஒப்பந்தங்களால் வரையறுக்கப்படும். ” என்கிறார்.

சந்திரன் யாருக்கு சொந்தம்? - சூடுபிடிக்கும் புதிய விண்வெளிப் பந்தயம்

பட மூலாதாரம், Reuters

நிலவில் கால் பதிக்கும் திட்டங்களால் ஒரு பெரிய கௌரவம் கிடைப்பதாக உலக நாடுகள் கருதுகிறது. இந்தியாவும் ஜப்பானும் வெற்றிகரமான விண்வெளிப் பயணங்களுக்குப் பிறகு, `உலகளாவிய விண்வெளி வீரர்கள்’ என்று பெருமையுடன் கூறிக் கொள்ளலாம்.

வெற்றிகரமான விண்வெளித் திட்டங்களை செயல்படுத்தும் ஒரு நாடு, வேலை வாய்ப்புகள் மற்றும் புதுமைகள் மூலம் பொருளாதாரத்திற்கு ஒரு பெரிய ஊக்கத்தைக் கொண்டு வர முடியும்.

அதே சமயம் இந்த `மூன் ரேஸ்’ ஒரு பெரிய பரிசையும் வழங்குகிறது. அது `அதன் எண்ணற்ற வளங்கள்’.

தற்போது சந்திரனின் நிலப்பரப்பு தரிசாகத் தோன்றினாலும், அதில் அரிதான நிலப்பரப்புகள், இரும்பு மற்றும் டைட்டானியம் போன்ற உலோகங்கள் மற்றும் ஹீலியம் உள்ளிட்ட கனிமங்கள் உள்ளன, இவை சூப்பர் கண்டக்டர்கள் முதல் மருத்துவ உபகரணங்கள் வரை அனைத்திலும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த கனிமங்களின் மதிப்பீடுகள் பில்லியன்கள் முதல் குவாட்ரில்லியன்கள் வரை பெருமளவில் வேறுபடுகின்றன. எனவே சிலர் சந்திரனை நிறைய பணம் சம்பாதிக்கும் இடமாக பார்க்கிறார்கள்.

சந்திரனின் வளங்கள் ஒரு மிக நீண்ட கால முதலீட்டாக இருக்கும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும். இந்த சந்திர வளங்களைப் பிரித்தெடுத்து பூமிக்கு கொண்டு வருவதற்கு, தேவையான தொழில்நுட்ப வழிகள் கண்டறியப்பட வேண்டும்.

1979 இல், ஒரு சர்வதேச ஒப்பந்தம் சந்திரனின் வளங்களை எந்த நாடும் அல்லது அமைப்பும் சொந்தமாகக் கோர முடியாது என்று அறிவித்தது. ஆனால் அந்த அளவுக்கு மக்கள் மத்தியில் பிரபலமடையவில்லை - 17 நாடுகள் மட்டுமே இதில் பங்கேற்கின்றன. அமெரிக்கா உட்பட சந்திரனுக்குச் சென்ற எந்த நாடுகளும் இந்த ஒப்பந்தத்தில் இல்லை.

உண்மையில், அமெரிக்கா 2015 இல் ஒரு சட்டத்தை நிறைவேற்றியது, அதன்படி அதன் குடிமக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் எந்த ஒரு விண்வெளிப் பொருளையும் பிரித்தெடுக்கவும், பயன்படுத்தவும் மற்றும் விற்கவும் அது அனுமதிக்கிறது.

"இது சர்வதேச சமூகத்தினரிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது," என்று மைக்கேல் ஹன்லோன் என்னிடம் கூறினார்.

"அமெரிக்காவை பின்பற்றி மெதுவாக, மற்ற நாடுகளும் இதே போன்ற தேசிய சட்டங்களை கொண்டு வந்தன. அதில் லக்சம்பர்க், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், ஜப்பான் மற்றும் இந்தியா ஆகியவையும் அடங்கும்.” என்றார்.

மிகவும் தேவையான ஒரு வளம்: தண்ணீர்.

"அப்பல்லோ விண்வெளி வீரர்களால் பூமிக்கு கொண்டுவரப்பட்ட முதல் சந்திரனின் பாறைகள் பகுப்பாய்வு செய்யப்பட்ட போது, அவை முற்றிலும் உலர்ந்ததாக கருதப்பட்டன" என்று இயற்கை வரலாற்று அருங்காட்சியகத்தின் கிரக அறிவியல் பேராசிரியர் சாரா ரஸ்ஸல் விளக்குகிறார்.

"ஆனால் சுமார் 10 ஆண்டுகளுக்கு முன்பு ஓர் உண்மையை நாங்கள் கண்டறிந்தோம். அந்த சந்திரப் பாறைகளில் பாஸ்பேட் படிகங்களில் சிக்கியிருக்கும் தண்ணீரின் சிறிய தடயங்கள் இருப்பதை நாங்கள் கண்டுபிடித்தோம்." என்றார்.

சந்திரனின் துருவப்பகுதிகளில், இன்னும் நிறைய தண்ணீரின் சுவடு இருக்கிறது என்று அவர் சொல்கிறார் - அதன் பள்ளங்களுக்குள் பனிக்கட்டிகள் உறைந்துக் கிடக்கின்றன.

வருங்காலத்தில் நிலவுக்கு செல்பவர்கள் அதன் தண்ணீரை குடிக்க பயன்படுத்தலாம், ஆக்ஸிஜனை உருவாக்க பயன்படுத்தலாம் மற்றும் விண்வெளி வீரர்கள் ராக்கெட் எரிபொருளை உருவாக்க பயன்படுத்தலாம், அதை ஹைட்ரஜன் மற்றும் ஆக்ஸிஜனாக பிரித்தெடுத்து அதனை சந்திரனில் இருந்து செவ்வாய் மற்றும் அதற்கு அப்பால் பயணிக்கலாம்.

சந்திரன் ஆய்வு மற்றும் சந்திர பயணங்கள் தொடர்பாக ஒரு புதிய வழிகாட்டும் கொள்கைகளை நிறுவ அமெரிக்கா முயற்சிக்கிறது.

அமெரிக்காவின் ஆர்ட்டெமிஸ் உடன்படிக்கையின்படி "சில புதிய விதிகள் தேவைப்பட்டாலும், சந்திரனில் உள்ள வளங்களைப் பிரித்தெடுத்தல் மற்றும் பயன்படுத்துவது தொடர்பாக `அவுட்டர் ஸ்பேஸ் ஒப்பந்தத்திற்கு' (Outer Space Treaty) இணங்க வேண்டும்” என்கிறது.

இதுவரை 40 க்கும் மேற்பட்ட நாடுகள் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன. ஆனால் சீனா இந்த பட்டியலில் இல்லை. சந்திர ஆய்வுக்கான புதிய விதிகள் ஒரு தனிப்பட்ட தேசத்தால் வழிநடத்தப்பட கூடாது என்று சிலர் வாதிடுகின்றனர்.

"இது உண்மையில் ஐக்கிய நாடுகள் சபையின் மூலம் வகுக்கப்பட வேண்டும், ஏனெனில் இது அனைத்து நாடுகளையும் உள்ளடக்கியது," என்று சைட் மோஷெட்டர் என்னிடம் விளக்குகிறார்.

வளங்களுக்கான அணுகல் மற்றொரு மோதலையும் ஏற்படுத்தும்.

சந்திரனில் நிறைய இடங்கள் இருந்தாலும், பனியால் நிரம்பிய பள்ளங்களுக்கு அருகில் உள்ள ‘சந்திர ரியல் எஸ்டேட்’ தளங்கள் எனும் பகுதிகளே முக்கியத்துவம் பெறும் ஆகும். அனைத்து நாடுகளும் எதிர்காலத்தில் அந்த ஒரே இடத்தைக் கைப்பற்ற விரும்பினால் என்ன நடக்கும்?

ஒரு நாடு அந்த பகுதியில் தளம் அமைத்தவுடன், மற்றொரு நாடு தங்கள் தளத்தை சற்று நெருக்கமாக நிறுவினால் என்ன நடக்கும்? அதனை தடுப்பது எப்படி?

லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸின் விண்வெளிக் கொள்கை மற்றும் சட்ட ஆராய்ச்சியாளரான ஜில் ஸ்டூவர்ட் கூறுகையில், "அண்டார்டிக்குடன் இதற்கு ஒரு சுவாரஸ்யமான ஒப்புமை இருப்பதாக நான் நினைக்கிறேன். அந்த கண்டத்தில் இருப்பதைப் போல சந்திரனிலும் ஆராய்ச்சி தளங்கள் அமைக்கப்படலாம்." என்கிறார்.

ஆனால் ஒரு புதிய சந்திர தளத்தை நிறுவுவது பற்றிய முடிவுகள் எப்படி எடுக்கப்படும் என்பது பெரிய கேள்விக்குறி. எடுத்துக்காட்டாக, சந்திரனில் அமைக்கப்படும் தளங்களின் அளவீடுகள் எப்படி இருக்கும்? இவற்றை முடிவு செய்யப்போவது முதலில் சந்திரனில் தளம் அமைக்கப் போகும் நாடு தான்.

"நிச்சயமாக சந்திரனில் தளங்கள் அமைக்கும் செயல்பாட்டில் முதல் மூன்று நாடுகளுக்கு சாதகமாக இருக்கும்," என்று ஜில் ஸ்டூவர்ட் கூறுகிறார்.

"முதலில் அங்கு சென்று முகாம் அமைக்கும் விண்வெளி நிறுவனங்களுக்கு ஒரு சிறிய சலுகை இருக்கும். அந்த நிலம் அவர்களுக்கு சொந்தம் என்று அர்த்தம் இல்லை, ஆனால் அந்த இடத்தில் சுதந்திரமாக தளம் அமைக்க முடியும்” என்கிறார் அவர்.

தற்போதைய சூழலில், அங்கு முதலில் குடியேறுபவர்கள் அமெரிக்கா அல்லது சீனாவாக இருக்கலாம், ஏற்கனவே பதற்றமான அவர்களின் உறவுக்கு மத்தியில் புதிய போட்டியைக் கொண்டு வருகிறது. அவர்கள் அங்கு தர நிலையை அமைக்க வாய்ப்புள்ளது. முதலில் அங்கு வருபவர்களால் நிறுவப்பட்ட விதிகள் காலப்போக்கில் நிரந்தர விதிகளாக மாறும்.

இவை அனைத்தும் தற்காலிகமாக தோன்றலாம். ஆனால் என்னிடம் பேசிய சில விண்வெளி நிபுணர்கள், மற்றொரு பெரிய சர்வதேச விண்வெளி ஒப்பந்தத்தை நாம் மீண்டும் காண வாய்ப்பில்லை என்று நினைக்கிறார்கள்.

சந்திரன் ஆய்வில் செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை ஆகியவற்றை புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் அல்லது புதிய நடத்தை நெறிமுறைகள் மூலம் கண்டறிவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதில் ஆபத்தும் நிறைய இருக்கிறது.

வானத்தில் பிரகாசமாக ஒளிரும் சந்திரன் தேயும் போதும் மீண்டும் முழுமையாகத் தெரியும் போதும் நமக்கு நிலையான துணையாக பார்க்கப்படுகிறது.

ஆனால் இந்தப் புதிய விண்வெளிப் பந்தயம் தொடங்கும் போது, சந்திரன் எந்த மாதிரியான இடமாக இருக்க வேண்டும் என்பதை நாம் மனதில் கொள்ள வேண்டும் - மேலும் அது பூமிக்குள் நடக்கும் போட்டிகள் அரங்கேறும் ஒரு தளமாக மாறும் அபாயம் உள்ளது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)