ஒடிஷாவில் நவீன் பட்நாயக் தோல்விக்கு வி.கே.பாண்டியனும் ஒரு காரணமா? அரசியலில் இருந்து விலகல்

ஒடிஷா, நவீன் பட்நாயக், வி.கே.பாண்டியன்

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சந்தீப் சாஹு
    • பதவி, பிபிசி இந்திக்காக, புவனேஸ்வரில் இருந்து

ஒடிஷாவில் 5 முறை முதல்வரான நவீன் பட்நாயக்கின் நிழலாக செயல்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.பாண்டியன் தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். தொடர் வெற்றிகளைப் பெற்று வந்த நவீன் பட்நாயக் முதன் முறையாக இந்த தேர்தலில் தோற்றதற்கு இவரும் ஒரு காரணம் என்று மாநில அரசியலில் பேசப்பட்டு வரும் நிலையில், இந்த திடீர் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

"தீவிர அரசியலில் இருந்து விலகுவது என்று தீர்மானித்துள்ளேன். இந்த பயணத்தில் யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன். தேர்தலில் எனக்கு எதிராக கடைபிடிக்கப்பட்ட பிரசார உத்தியும் பிஜூ ஜனதா தளத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தால் அதற்காக வருந்துகிறேன்." என்று வி.கே.பாண்டியன் தெரிவித்துள்ளார்.

ஒடிஷாவில் தொடர்ந்து ஐந்து தேர்தல்களில் வெற்றி பெற்ற பிஜு ஜனதா தளம் (பிஜேடி) தேர்தலில் தோல்வியடையும், மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைக்கும் என்று தேர்தல் பார்வையாளர்களோ அல்லது தேர்தல் ஆய்வு அமைப்புகளோ நினைக்கவில்லை.

கடந்த முறை போலவே இம்முறையும் மாநிலத்தில் வாக்குகள் பிரியும் என்றும், இதன் மூலம் மக்களவைத் தேர்தலில் பாஜக அதிக இடங்களை கைப்பற்றும் என்றும், ஆனால் சட்டசபைத் தேர்தலில் பிஜேடி அதிக இடங்களில் வெற்றி பெறும் என்பதும் தான் அனைவரின் ஊகமாக இருந்தது.

நவீன் பட்நாயக் தொடர்ந்து ஆறாவது முறையாக ஆட்சி அமைப்பார் என்றும், அடுத்த இரண்டரை மாதங்களில் சிக்கிம் முன்னாள் முதல்வர் பவன் குமார் சாம்லிங்கின் சாதனையை முறியடித்து, இந்தியாவில் அதிக காலம் ஆட்சியில் இருந்த முதல்வராக இருப்பார் என்றும் அனைவரும் கருதினர். ஆனால் அவர் பாஜகவிடம் தோல்வியடைந்தது ஏன்? அதற்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரியான வி.கே.பாண்டியனும் ஒரு காரணமா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

திகைக்க வைத்த தேர்தல் முடிவுகள்

செவ்வாய்க்கிழமை தேர்தல் முடிவுகள் வந்தபோது, ​​அனைவரும் திகைத்துப் போனார்கள். மாநிலத்தில் உள்ள 21 மக்களவைத் தொகுதிகளில் 20 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது மட்டுமல்லாமல், சட்டமன்றத் தேர்தலில் பிஜேடி கட்சியை தோற்கடித்து, மாநிலத்தில் உள்ள 147 இடங்களில் 78 இடங்களை கைப்பற்றியது, இது அரசாங்கத்தை அமைக்க தேவையான 74 இடங்களை விட நான்கு இடங்கள் அதிகம்.

பிஜேடிக்கு 51 இடங்களும், காங்கிரசுக்கு 14 இடங்களும், சுயேச்சைகளுக்கு 3 இடங்களும், சிபிஎம் கட்சிக்கு ஒரு இடமும் கிடைத்தன.

கடந்த மக்களவைத் தேர்தலில் 12 இடங்களில் வெற்றி பெற்ற பிஜேடி, இம்முறை ஒரு இடத்தைக் கூட பிடிக்கவில்லை. கடந்த முறை போலவே இம்முறையும் கோராபுட் மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றது.

நவீனின் கட்சி தேர்தலில் படுமோசமாக தோல்வியடைந்தது மட்டுமல்லாமல், தனது 27 ஆண்டுகால வெற்றிகரமான அரசியல் வாழ்க்கையில் முதல்முறையாக தோல்வியை சந்தித்துள்ளார் நவீன்.

கடந்த முறை போலவே இம்முறையும் இரண்டு தொகுதிகளில் தேர்தலில் போட்டியிட்டார் நவீன். அவர் தனது வழக்கமான தொகுதியான ஹிஞ்சலியில் 4,636 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றாலும், கந்தபாஞ்சி தொகுதியில் பாஜகவின் வேட்பாளர் லக்ஷ்மன் பாக்கிடம் 16,344 வாக்குகள் வித்தியாசத்தில் அவர் தோல்வியடைந்தார்.

நவீன் பட்நாயக்

பட மூலாதாரம், ANI

பாண்டியன் மீதான கோபம்

எல்லாவற்றுக்கும் மேலாக, தொடர்ந்து ஐந்து முறை மாபெரும் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று, எந்தத் தேர்தலிலும் தோல்வியடையாத மாநிலத்தின் மிகப் பிரபலமான முதல்வர் நவீன் பட்நாயக் இந்த முறை தோல்வியடைந்ததற்கு என்ன காரணம்?

ஐஏஎஸ் வேலையை விட்டுவிட்டு அரசியலுக்கு வந்த முன்னாள் தனிச் செயலாளர் வி.கே.பாண்டியனிடம் கட்சியின் தலைமைப் பொறுப்பை முழுமையாக ஒப்படைத்தது தான் அவரது தோல்விக்கு மிகப்பெரிய காரணம் என அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த அக்டோபர் மாதம் வரை அவரது தனிப்பட்ட செயலாளராக இருந்த பாண்டியன், வேலையை ராஜினாமா செய்துவிட்டு பிஜேடியில் சேர்ந்தார். தேர்தலின் போது, ​​வேட்பாளர்களை தேர்வு செய்வது மட்டுமின்றி, கட்சி சார்பில் பிரசாரம் செய்யும் முழுப் பொறுப்பையும் ஏற்றார்.

அக்கட்சியின் நட்சத்திர பிரச்சாரகர்கள் பட்டியலில் 40 பேர் இடம்பெற்றுள்ளனர். ஆனால் கிட்டத்தட்ட 40 நாட்கள் நடந்த பிரச்சாரத்தில், பாண்டியன் மற்றும் நவீன் ஆகியோரைத் தவிர வேறு எந்த கட்சித் தலைவர்களும் மேடையிலோ அல்லது சாலை பேரணிகளிலோ எங்கும் காணப்படவில்லை.

தேர்தலின் போது மட்டுமல்ல, கடந்த பல மாதங்களாக எந்த பிஜேடி தலைவரோ, அமைச்சரோ, எம்எல்ஏவோ அல்லது மூத்த அரசு அதிகாரிகளோ, முதல்வர் மற்றும் பிஜேடி தலைவரான நவீன் பட்நாயக்கை சந்திக்கவோ அல்லது அவர் முன் தங்களது கருத்துகளை தெரிவிக்கவோ முடியவில்லை.

வி.கே.பாண்டியன்

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஒடிஷா கலைஞர்களுடன் புகைப்படம் எடுக்கும் வி.கே.பாண்டியன்

கட்சி மற்றும் ஆட்சியின் அனைத்து முடிவுகளையும் பாண்டியன் தான் தொடர்ந்து எடுத்து வந்தார். முதலமைச்சருக்கு சென்றடையும் கோப்புகளில் கூட அவரது டிஜிட்டல் கையொப்பம் பயன்படுத்தப்பட்டது, அதே நேரத்தில் நவீன் பொதுமக்களின் பார்வையில் இருந்து மறைந்தார்.

நவீன், கடந்த இரண்டு மூன்று ஆண்டுகளாக ‘லோக் சேவா பவன்’ (ஒடிஷா மாநில செயலகம்) செல்லவில்லை. இதனால் தான் நவீனின் உடல்நிலை குறித்தும், ஆட்சியிலும் கட்சியிலும் அவரது பங்கு குறைந்து பாண்டியனின் பங்கு அதிகரித்து வருவதாகவும் வதந்தி பரவியது. அதன் விளைவுகளை பிஜேடி கட்சி அனுபவிக்க நேர்ந்தது.

ஆட்சியிலும், ஆளுங்கட்சியிலும் பாண்டியனின் செல்வாக்கு அதிகரித்து வருவதைக் கண்டு மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள கோபத்தை உணர்ந்து, பாஜக மிக சாதுர்யமாக ‘ஒடியா அடையாளத்தை’ தனது முக்கிய தேர்தல் பிரச்னையாக மாற்றியது.

“ஒடிஷாவின் 4.5 கோடி மக்களை தனது ‘குடும்பம்’ என்று அழைக்கும் நவீன், தனது மாநில மற்றும் கட்சியின் அனைத்து தலைவர்களையும் புறக்கணித்து விட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நபரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்” என்று தேர்தல் பிரசாரத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோதி உட்பட அனைத்து பாஜக தலைவர்களும், மீண்டும் மீண்டும் கூறினர்.

கட்சி மற்றும் ஆட்சி இரண்டிலும் பாண்டியன் ஆதிக்கம் செலுத்துவதையும், கட்சி அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் மற்றும் அனைத்து அரசு அதிகாரிகளும் முற்றிலுமாக புறக்கணிக்கப்படுவதையும் கண்டதால், மக்கள் மத்தியில் இந்த பிரசார உத்தி வேலை செய்தது.

இறுதியாக பாண்டியன் மீது மக்களிடையே உள்ள கோபத்தைப் புரிந்து கொண்ட நவீன், நான்காம் கட்ட வாக்குப்பதிவுக்கு சற்று முன்பு ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில் பாண்டியன் தனது ‘அரசியல் வாரிசு’ அல்ல என்று தெளிவுபடுத்தினார்.

தனது உடல்நிலை குறித்து தெளிவுபடுத்திய அவர், தான் பூரண நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார். ஆனால் அதற்குள் நிலை கைமீறி போய்விட்டது.

'ஒடியா அடையாளம்'

'ஒடியா அடையாளம்'

பட மூலாதாரம், ANI

இந்த முறை, நன்கு திட்டமிடப்பட்ட தேர்தல் பிரசார உத்தியின் ஒரு பகுதியாக, பாஜக ‘ஒடியா அடையாளத்தை’ தனது முக்கிய தேர்தல் பிரச்னையாக மாற்றியது.

இந்த உத்தியின் ஒரு பகுதியாகவே, பாஜக தலைவர்கள் ஒவ்வொரு தேர்தல் பேரணியிலும், ஒடிஷா மாநில ஆட்சியில் ‘தமிழர்களின் ஆதிக்கம்’ என்ற வாதத்தை முன்வைத்தனர். ஆனால் ஒடியா அடையாளப் பிரச்னையில் பாஜகவின் தாக்குதல் பாண்டியனை மட்டும் பாதிக்கவில்லை.

24 ஆண்டுகள் அரசியல் பயணம் மற்றும் ஐந்து தேர்தல்களுக்குப் பிறகும், முதல்வர் நவீன் பட்நாயக்கால் ஒடியா மொழியில் பேச முடியாதது முதல்முறையாக தேர்தல் பிரச்னையாக மாறியது.

இது மட்டுமின்றி, கந்தமாலில் நடந்த தேர்தல் பேரணியின் போது, ​​பிரதமர் நரேந்திர மோதி, ‘மாநிலத்தின் 30 மாவட்டங்களின் பெயர்களையும், அவற்றின் தலைமையிடத்தையும் துண்டு காகிதத்தின் உதவியின்றி பட்டியலிடும்படி சவால் விடுத்தார்’. இது நவீனின் புகழை பாதித்தது.

அதைத் தொடர்ந்து, பலங்கிரில் நடந்த மற்றொரு பேரணியில், நவீன் போட்டியிடும் காந்தபாஞ்சி தொகுதியில் உள்ள 10 கிராமங்களின் பெயர்களைச் சொல்லுமாறு நவீனுக்கு சவால் விடுத்தார் மோதி.

கடைசிக் கட்ட வாக்குப்பதிவுக்கு சற்று முன்பு பரிபாடாவில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் மோதி பேசுகையில், அரசியல் கண்ணியத்தின் அனைத்து வரம்புகளையும் தாண்டினார்.

நவீனின் உடல்நிலை மோசமடைந்து வருவதைக் குறிப்பிட்ட அவர், மாநிலத்தில் பாஜக ஆட்சி அமைந்த பிறகு, அதன் பின்னணியில் சதி உள்ளதா என்பது குறித்து விசாரணைக் குழு அமைக்கப்படும் என்றார். தமிழகத்தில் ஜெயலலிதா மற்றும் சசிகலா விவகாரத்தில் நடந்ததை தான் மோதி குறிப்பிடுகிறார் என்பது தெளிவாகத் தெரிந்தது.

மோதி, நவீன்

பட மூலாதாரம், ANI

தேர்தலுக்கு முன்பு நவீனை தனது ‘நண்பர்’ என்று எப்போதும் புகழ்ந்து பேசி வந்த மோதியின் இந்த இரக்கமற்ற தாக்குதல் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது.

கடந்த ஐந்தாண்டுகளில், நவீன் மற்றும் அவரது கட்சியினர் ஒவ்வொரு விஷயத்திலும் மோதி அரசுக்கு நிபந்தனையற்ற ஆதரவை வழங்கியுள்ளனர். மார்ச் மாதத்தில், இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி பற்றி பேசப்பட்டது. ஆனால் பேச்சுவார்த்தை வெற்றி பெறவில்லை.

தேர்தலின் போது ஏ.என்.ஐ-க்கு அளித்த பேட்டியில் நவீன் மீதான இந்த கடுமையான தாக்குதல் குறித்து கேட்டதற்கு, ஒடிஷாவின் நலனுக்காக நவீனுடனான தனது தனிப்பட்ட உறவை ‘தியாகம்’ செய்ய தயாராக இருப்பதாக மோதி கூறினார்.

நவீனின் உடல்நிலை, ஒடிஷா மீதான நவீனின் விசுவாசம் மற்றும் மாநிலத்தைப் பற்றிய அவரது பொது அறிவு ஆகியவற்றைக் குறித்த ஒரு சந்தேகத்தை ஒடிஷா மக்களிடையே மோதியின் இந்த தனிப்பட்ட தாக்குதல் ஏற்படுத்தியது என்பதில் மாற்றுக்கருத்தில்லை.

பூரி ஜெகந்நாதர் கோவில் பொக்கிஷ அறையின் சாவி

பொக்கிஷ அறையின் சாவி

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பூரி ஜெகந்நாதர் கோவில், ஒடிஷா

பாஜகவின் ‘ஒடியா அடையாள’ உத்தியின் மற்றொரு முக்கியமான இணைப்பு, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன பூரி ஜெகநாதர் கோயிலின் பொக்கிஷ அறையின் சாவி குறித்த சர்ச்சை.

மோதி மற்றும் அனைத்து பாஜக தலைவர்களும் ஒவ்வொரு தேர்தல் கூட்டத்திலும் இந்த பிரச்னையை எழுப்பினர் மற்றும் இதன் மூலம் நவீனின் அரசை மக்களிடமிருந்து அந்நியப்படுத்தினர்.

மோதி கூட ஒரு கூட்டத்தில் “அந்த சாவி தமிழ்நாட்டுக்கு போய்விட்டதா?” என்று கேட்டார். அதேசமயம், அஸ்ஸாம் முதல்வர் ஹிமந்த பிஸ்வா சர்மா, “பாஜக கட்சி ஆட்சி அமைத்தால், பொக்கிஷ அறையின் சாவி பாதாளத்தில் இருந்தாலும் கூட கண்டுபிடித்து தருவோம்” என்று கூறினார்.

ஜெகந்நாதர் கோவிலின் பொக்கிஷ அறையின் சாவி விவகாரத்தில் பாஜக தலைவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பிஜேடி கட்சியிடம் பதில் இல்லை. கடந்த ஆறு ஆண்டுகளில், சாவியை கண்டுபிடிக்க அரசு எந்த முயற்சியும் எடுக்கவில்லை என்பது மட்டுமல்லாமல், இதுகுறித்து அமைக்கப்பட்ட விசாரணை கமிஷன் அறிக்கையையும் பகிரங்கப்படுத்தவில்லை.

இது தொடர்பாக அரசு உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நிலுவையில் உள்ளது. கோவில் சட்டப்படி, மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை பொக்கிஷ அறையின் ரத்தினங்களை எண்ணுவது கட்டாயம் என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் 1978க்குப் பிறகு பொக்கிஷ அறை திறக்கப்படவில்லை.

இதனால் பொக்கிஷ அறையில் இருந்த சில வைரங்கள் மற்றும் நகைகள் காணாமல் போயிருக்கலாம், அதை அரசு மறைக்க முயல்கிறது என்ற எண்ணம் மக்களிடையே உருவாகியது.

அரசாங்கத்தின் மீதான வெறுப்பு

ஒடிஷா

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஒடிஷாவில் உள்ள வாக்குச் சாவடிக்கு படகு மூலம் வாக்களிக்கச் சென்ற மக்கள்.

பாண்டியனைத் தவிர, பிஜேடி கட்சியின் தோல்விக்கு மற்றொரு முக்கிய காரணம், அவர்கள் தொடர்ந்து 24 ஆண்டுகள் ஆட்சியில் இருந்ததால், இயற்கையாகவே கட்சிக்கு எதிரான ஒரு மனநிலை மக்களிடையே இருந்தது. அதன் முழு பலனையும் பிரதான எதிர்க்கட்சியான பாஜக பெற்றது.

பெரும்பான்மை பலத்துடன் தொடர்ந்து 5 முறை ஆட்சியில் இருந்தும், பல பகுதிகளில் குடிநீர், சாலை, சுகாதாரம் போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்கவும், அரசுப் பள்ளிகளில் போதுமான ஆசிரியர்களை மற்றும் அரசு மருத்துவமனைகளில் போதுமான மருத்துவர்களை நியமிக்கவும் நவீன் அரசால் முடியவில்லை என்று மக்கள் மத்தியில் இருந்த கோபம், இறுதியில் பிஜேடி கட்சிக்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.

அரசின் பல மட்டங்களில் பரவிய ஊழல்களும் மக்களின் கோபத்திற்கு முக்கிய காரணமாக அமைந்தது. நவீன் பட்நாயக் அரசாங்கம் ஒவ்வொரு வகுப்பு மற்றும் வயதினருக்கும் சில இலவச திட்டங்களைச் செயல்படுத்தியுள்ளது, இது பிஜேடி கட்சியை தொடர்ச்சியாக ஐந்து முறை தேர்தல்களில் வெற்றி பெற உதவியது.

ஆனால் உள்ளூர் பிஜேடி பிரமுகர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்காமல் இந்தத் திட்டங்களின் பலன்களை மக்களால் பெற முடியாது என்ற நிலை இருந்தது, இந்த தேர்தலில் பிஜேடியின் தோல்விக்கு வித்திட்டது.

பெண்களின் ஆதரவு

பெண்களின் ஆதரவு

பட மூலாதாரம், ANI

ஒடிஷாவில் நவீனின் மிகப்பெரிய வாக்கு வங்கியாக பெண்கள் இருந்தனர். குறிப்பாக 2001ஆம் ஆண்டு அவரது அரசால் தொடங்கப்பட்ட ‘மிஷன் சக்தி’ திட்டத்தின் கீழ் சுமார் 70 லட்சம் பெண்கள் ஒருங்கிணைந்து, ஆதரவு அளித்தது அவரது தொடர்ச்சியான வெற்றிக்கு ஒரு முக்கிய காரணமாக கருதப்பட்டது.

ஆனால் இம்முறை அவருக்கு இந்தப் பெண்களின் முழு ஆதரவு கிடைக்கவில்லை என்பது தேர்தல் முடிவுகளின் மூலம் தெளிவாகிறது.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பாஜகவின் கவனம்

இந்த முறை ஒடிஷாவுக்கு பாஜக கொடுத்த முக்கியத்துவம் இதுவரை கண்டிராதது.

அமித் ஷா, ஜே.பி. நட்டா உள்ளிட்ட பாஜகவின் முக்கியத் தலைவர்கள் மீண்டும் மீண்டும் ஒடிஷாவுக்குச் சென்று தீவிரப் பிரசாரத்தில் ஈடுபட்ட அதே நேரத்தில், பிரதமர் நரேந்திர மோதியே நான்கு முறை மாநிலத்திற்குச் சென்று 10 பேரணிகள் மற்றும் இரண்டு சாலை நிகழ்ச்சிகளை நடத்தினார்.

உத்தரப் பிரதேசம், அசாம் மற்றும் சத்தீஸ்கர் மாநில முதல்வர்களும் மாநிலத்திற்கு பலமுறை விஜயம் செய்தனர், அதே நேரத்தில் பூபேந்திர யாதவ் மற்றும் சில தலைவர்கள் தேர்தல் காலம் முழுவதும் இங்கு தங்கி பிரசாரத்தை மேற்கொண்டனர்.

அதேபோல, மத்திய அமைச்சர் பூபேந்திர யாதவும் ஒடிஷாவில் தங்கி பிரசாரம் செய்தார்.

படிப்படியாக பாஜகவுக்கு பெருகிய ஆதரவு

ஆனால், கடந்த ஒன்றரை மாத பிரசாரத்தால் மட்டும் ஒடிஷாவில் பாஜகவுக்கு இந்த அபார வெற்றி கிடைக்கவில்லை. 2009இல் பிஜேடியுடன் கூட்டணியை முறித்துக் கொண்ட பிறகு, அக்கட்சி தொடர்ந்து மாநிலத்தில் தனது ஆதரவு தளத்தை அதிகரிக்க முயற்சி செய்து வந்தது.

2009 தேர்தலுக்கு முன்பு எதிர்பாராத விதமாக கூட்டணியை நவீன் உடைத்த போது, ​​பாஜக அதிர்ச்சி அடைந்தது. 2004 நாடாளுமன்ற தேர்தலில் 7 மக்களவை இடங்களையும், 32 சட்டசபை தொகுதிகளையும் வென்ற பாஜக, 2009இல் ஒரு மக்களவைத் தொகுதியில் கூட வெற்றி பெற முடியாமல் போனது. ஒடிஷா சட்டசபையிலும் அதன் எம்எல்ஏ-க்களின் எண்ணிக்கை 6 ஆக மட்டுமே இருந்தது.

மக்களவைத் தேர்தலில் அக்கட்சியின் வாக்கு சதவீதம் சுமார் 13% ஆகவும், சட்டசபை தேர்தலில் 15% ஆகவும் இருந்தது.

2014 தேர்தலில் பாஜக ஒரு மக்களவைத் தொகுதியையும், 10 சட்டசபை தொகுதிகளையும் கைப்பற்றியது. அக்கட்சியின் வாக்கு சதவீதம் 22 மற்றும் 18 சதவீதம்.

2019இல் பாஜக 8 மக்களவைத் தொகுதிகளையும் 23 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றியது. ஆனால் கடந்த (2014) தேர்தலை விட இம்முறை அக்கட்சியின் வாக்கு சதவீதம் மிகப்பெரிய அளவில் அதிகரித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

மக்களவை தேர்தலில் இந்த பங்கு 38.4% என்ற அளவை எட்டியது, இது பிஜேடி கட்சியின் 42.6% என்ற அளவை விட சற்று குறைவாக இருந்தது. இருப்பினும், சட்டமன்றத் தேர்தலில், பாஜக கட்சி 32.49% வாக்குகளைப் பெற்றது, இது பிஜேடியின் 44.71% வாக்குகளை விட மிகக் குறைவு.

ஆனால் இம்முறை (2024) பாஜக பெரும் பாய்ச்சலுடன் மக்களவைத் தேர்தலில் அதன் வாக்குப் பங்கை 45.34% ஆக அதிகரித்தது, அதே நேரத்தில் பிஜேடியின் பங்கு 37.53% ஆகக் குறைந்துள்ளது.

ஒடிஷா சட்டப்பேரவை தேர்தலில் இரு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவிய போதிலும், பாஜக-வுக்கு அதிக இடங்கள் கிடைத்தன. இந்த முறை பாஜகவின் வாக்கு சதவீதம் 40.07% ஆகவும், பிஜேடிக்கு 40.22% ஆகவும் இருந்தது.

பாஜகவின் முதல் அரசு

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, ஒடிஷாவில் பிரதமர் மோதி (கோப்பு படம்)

பாஜகவின் முதல் அரசு

ஒடிஷா மாநிலத்தில் முதல்முறையாக பாஜக ஆட்சி அமைக்கும் என்பது உறுதியாகியுள்ள நிலையில், யார் முதல்வராக பதவியேற்பார் என்பது குறித்த விவாதம் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

சில மாதங்களுக்கு முன்பு, ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் முதல்வர்கள் தேர்வில் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது பாஜக மேலிடம். இருப்பினும், ஒடிஷாவில் புதிய முதல்வர் யார் என்ற ஊகங்கள் நிற்கவில்லை.

மோதியின் விருப்பத்திற்குரிய, நாட்டின் அக்கவுண்டன்ட் ஜெனரல் (CAG- சிஏஜி) கிரிஷ் முர்முவின் பெயரும் அதிகம் பேசப்படுகிறது. குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவைப் போலவே, மயூர்பஞ்ச் மாவட்டத்தில் இருந்து வந்தவர் இவர்.

இது தவிர, மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், வைஜயந்த் பாண்டா எம்,பி, மாநில பாஜக முன்னாள் தலைவரும், முன்னாள் எம்பியுமான சுரேஷ் பூஜாரி ஆகியோரின் பெயர்களும் விவாதத்தில் உள்ளன. இம்முறை புஜாரி, பிரஜ்ராஜ் நகர் சட்டசபைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

தேர்ந்தெடுக்கப்பட்ட எம்எல்ஏக்களில் இருந்து யாரையாவது முதலமைச்சராக்க கட்சி மேலிடம் நினைத்தால், பூஜாரி பலமான போட்டியாளராக கருதப்படுவார்.

ஒடிஷா மாநிலத்தில் ஜூன் 10ஆம் தேதி பாஜக அரசின் பதவியேற்பு விழா நடைபெறும் என்று பிரதமர் நரேந்திர மோதி தேர்தல் பிரசாரத்தின் போதே அறிவித்திருந்தார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)