சுனாமியில் கற்ற பாடங்களை வைத்து மீனவர்களுக்கு வழிகாட்டும் பெண் ஆராய்ச்சியாளர்

மீனவச் சமுதாயம், வேல்விழி

பட மூலாதாரம், MSSRF

    • எழுதியவர், நந்தினி வெள்ளைச்சாமி
    • பதவி, பிபிசி தமிழ்

(இன்று, ஜூன் 8, உலகப் பெருங்கடல்கள் தினம். இதனை முன்னிட்டு, மீனவக் குடும்பத்திலிருந்து வந்து, தற்போது கடல்சார் ஆராய்ச்சியாளராக மீனவர்களின் மேம்பாட்டுக்காக பல்வேறு பணிகளை மேற்கொண்டு வரும் வேல்விழி தன் அனுபவங்களை இங்கே பகிர்கிறார்.)

சிறுவயதில், மீன்பிடிக்க நள்ளிரவில் கடலுக்குச் செல்லும் தன் அப்பாவுக்காக, மாலை நேரத்தில் கடற்கரையில் தன் தாயுடன் காத்திருந்த பொழுதுகள் இன்னும் வேல்விழியின் நினைவில் உள்ளன. கூடவே, புயல், மழை காலங்களில் அப்பா எப்போது வீடு திரும்புவார் என குடும்பத்தில் எல்லோரும் அச்சத்தின் பிடியில் இருந்த நாட்களையும் அவர் அடிக்கடி நினைவுகூர்வார்.

“அப்பாவுக்குச் சொந்தப் படகு கிடையாது. என் சிறுவயதில் சிறுபடகு ஒன்றில் மீனவத் தொழிலாளியாக இருந்தார் அப்பா. பின்னர் பெரிய படகு ஒன்றில் மீனவத் தொழிலாளியாக இருந்தார். கடலுக்குச் சென்றால் எப்போது வீடு திரும்புவார் என்றே தெரியாது. நாங்கள் வளர்ந்த சமயத்தில் மீனவர்களுக்கென புயல் எச்சரிக்கை கூட கிடையாது. புயல், மழை காலங்களில் ஒவ்வொரு தடவையும் முட்டி அளவுக்குத் தண்ணீர் வந்துவிடும். அவையெல்லாம் எங்களுக்குப் பழக்கமான விஷயங்கள்,” என்கிறார் வேல்விழி.

புயல், மழை காலங்களிலும், இலங்கை கடற்படையினரால் மீனவர்கள் கைது செய்யப்படும்போதும், தலைப்புச் செய்திகளில் இடம்பிடிக்கும் நாகப்பட்டினம் மாவட்டத்தின் நம்பியார்நகர் எனும் மீனவ கிராமத்தைச் சேர்ந்த வேல்விழிக்கு கடல் புதிதல்ல.

தன் தந்தை சிங்காரவேலுவிடம் இருந்து கைவரப்பெற்ற கடல் குறித்த தன் அனுபவங்களையும், தான் படித்த கடல் உயிரியல் மூலம் கிடைத்த அறிவியல் அனுபவங்களையும் இணைத்து இன்று கடல்சார் பொருளாதாரத்தில் பெண்கள் மேம்பாடு, நீடித்த கடல்சார் வாழ்வாதாரம், காலநிலை தகவமைப்பு குறித்த விழிப்புணர்வை மீனவ சமுதாயத்திற்கு ஏற்படுத்துதல் என, பல பணிகளை கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக மேற்கொண்டு வருகிறார் வேல்விழி.

நாகப்பட்டினம் மாவட்டம் பூம்புகாரில் உள்ள எம்.எஸ். சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையின் ‘ஃபிஷ் ஃபார் ஆல்’ (Fish For All Centre) மையத்தை வழிநடத்திவருகிறார்.

வேல்விழி, மீனவச் சமுதாயம்

'உயிருக்கு உத்தரவாதம் இல்லாத தொழில்'

தன் சிறுவயது அனுபவங்கள் எப்படி இந்த துறையில் கால்பதிக்க உதவியது என்பது குறித்தும் தான் மேற்கொண்டு வரும் பணிகள் குறித்தும் பிபிசி தமிழிடம் பகிர்ந்துகொண்டார் வேல்விழி.

“சிறுவயதில் அப்பா ஒரு மீனவராகப் பட்ட கஷ்டங்கள் எனக்குத் தெரியும். கடல் சீற்றம் அதிகமாக உள்ள நாட்களில், தஞ்சை மாவட்டத்தில் கடலோர கிராமமான மல்லிப்பட்டினம் சென்று அங்கு அப்பா மீன்பிடிப்பார். அங்கு சீற்றம் அவ்வளவாக இருக்காது என்பதால் 2-3 மாதம் எங்களைப் பிரிந்து அங்கு இருப்பார். மழை பெய்யும் சமயங்களில் அப்பா வரவில்லையென்றால் எல்லோரும் பயத்திலேயே இருப்போம். உயிருக்கு உத்தரவாதம் இல்லாத தொழில் இந்த மீன்பிடி தொழில்,” என்கிறார் வேல்விழி.

சிறுவயது அனுபவங்கள் தான் அவரை கடல் உயிரியல் துறையை தேர்ந்தெடுத்து படிக்க உதவியதாக கூறுகிறார் அவர். அதற்காக, சமூக-பொருளாதார ரீதியாக பல தடைகளையும் சந்தித்ததாக அவர் தெரிவிக்கிறார்.

“எங்கள் கிராமத்தில் பெண்கள் வயதுக்கு வந்தவுடனேயே திருமணம் செய்துவைத்துவிடுவார்கள். 12-ஆம் வகுப்புவரை முடிப்பது அரிது. ஆனால், அம்மா-அப்பா இருவருமே நான் படிக்க வேண்டும் என நினைத்தனர். பள்ளிப்படிப்பு முடித்தவுடன் பி.எஸ்சி விலங்கியல் படித்தேன். பின்னர், அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் கடல் உயிரியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றேன்,” என்கிறார் வேல்விழி.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

பின்னர், குடும்ப வறுமை காரணமாக எம்.பில் படிப்பை பாதியில் இடைநிறுத்தி, தான் வேலைக்குச் செல்ல வேண்டும் என்ற கட்டாயம் வேல்விழிக்கு ஏற்பட்டிருக்கிறது.

“வீட்டில் படிக்க வைப்பதற்கான சூழல் இல்லை. 2002-இல் சுவாமிநாதன் அறக்கட்டளையில் வேலைக்குச் சேர்ந்தேன். என் முதல் வேலையே ராமேஸ்வரம் மண்டபத்தில் தான்,” எனக்கூறும் வேல்விழி, அதனை தன் கிராமத்திலிருந்த பலரும் ஊக்குவிக்கவில்லை என்கிறார். அவருடைய ஊரிலிருந்து ராமேஸ்வரம் சுமார் 265 கி.மீ. தொலைவில் உள்ளது.

2016-ஆம் ஆண்டு மத்திய மீன்வளத்துறை மேற்கொண்ட கணக்கெடுப்பின்படி, இந்தியாவில் மொத்தம் சுமார் 9 லட்சம் மீனவக் குடுமபங்கள் உள்ளன. அதில், அதிகபட்சமாக தமிழ்நாட்டில் 575 மீனவ கிராமங்களில் 2,01,855 மீனவக் குடும்பங்களில் சுமார் 8 லட்சம் பேர் உள்ளனர். இதில், 1,96,784 மீனவக் குடும்பங்கள் பாரம்பரிய மீன்பிடி தொழிலில் ஈடுபட்டுள்ளனர். இவர்களுள், 1,83,683 குடும்பங்கள் வறுமைகோட்டுக்குக் கீழ் உள்ளனர்.

“வேலைக்குச் சென்றுகொண்டே தான் பின்னர் நான் கடல் உயிரியல் துறையில் முனைவர் பட்டம் (பிஹெச்.டி) முடித்தேன். இருளர் பழங்குடி மீனவ சமூகத்தினர் குறித்துதான் நான் ஆராய்ச்சி செய்து முனைவர் பட்டம் பெற்றேன். அந்தச் சமயத்தில் எங்கள் கிராமத்தில் பிஹெச்.டி வரை படித்தவர்கள் யாரும் இல்லை. மீனவச் சமூகப் பெண்கள் இப்போது படித்தாலும் மற்ற துறைகளையே தேர்ந்தெடுக்கின்றனர். அறிவியல் சார்ந்த துறைகளை அவர்கள் தேர்ந்தெடுப்பதில்லை,” என்கிறார்.

சுனாமி தந்த அனுபவங்கள்

வேல்விழி, மீனவச் சமுதாயம்

இந்தியா மட்டுமல்லாமல் அறிவியல் துறையில் பெண்களின் பங்கு குறைந்தளவிலேயே உள்ளது. 2023-ஆம் ஆண்டு, மார்ச் மாதம் இந்தியாவில் சுமார் 57,000 பெண் ஆராய்ச்சியாளர்கள் இருப்பதாகவும் இது மொத்த ஆராய்ச்சியாளர்களுள் 16.6% என்றும் அப்போதைய மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சர் ஜிதேந்திர சிங் மாநிலஙகளவையில் தெரிவித்தார். மீனவச் சமுதாயத்திலிருந்து அறிவியல் துறையில் கால்பதித்துள்ள வேல்விழிக்கு, அது பல தடைகளுடனும் புறக்கணிப்புகளுடனும் தான் வருகிறது.

“கிராமத்திலிருந்து வந்துள்ளோம் என்பதால் இந்தத் துறையில் உள்ள மற்ற ஆராய்ச்சியாளர்களுடன் பேசும்போது தாழ்வு மனப்பான்மை இருந்திருக்கிறது. ஆங்கிலத்தில் பேசும்போது நாம் சரியாக பேசுகிறோமா, நாம் பேசுவது அவர்களுக்குப் புரிகிறதா என சந்தேகங்கள் இருக்கும். மற்றவர்கள் என்னிடம் நன்றாகப் பேசினாலும் உள்ளுக்குள் தாழ்வு மனப்பான்மை இருந்தது. பல முயற்சிகள் எடுத்து அதிலிருந்து மீண்டேன்,” என்கிறார் வேல்விழி.

வேல்விழியை பொறுத்தவரை 2004-இல் ஏற்பட்ட சுனாமி ஒரு திருப்புமுனையாக இருந்திருக்கிறது. அதில் தன் குடும்பமும் மீனவ சமுதாயம் கண்ட இன்னல்களுமே அதுசார்ந்து பல அறிவியல்-தொழில்நுட்ப ரீதியான முயற்சிகளை எடுக்க உந்துசக்தியாக இருந்திருக்கிறது.

“சுனாமியின்போது, என் பெரியம்மா, பெரியப்பா என உறவினர்கள் உட்பட பலரையும் இழந்தோம். எங்கள் ஊரில் சுமார் 700 பேர் உயிரிழந்தனர். நான் அப்போது ஊரில் இல்லாததால் அம்மா-அப்பா உயிருடன் இருக்கிறார்களா என்பதுகூட தெரியாத நிலை. பின்னர், என் ஊருக்கு வந்து பார்த்தேன். என் உறவுக்கார பெண் ஒருவர் சுனாமியில் அடித்துச் செல்லப்பட்டு கழு மரத்தில் அவரது முடி சிக்கி அதில் அவர் மாட்டிக்கொண்டதால் உயிர் பிழைத்தார். அதை அவர் என்னிடம் அழுதுகொண்டே சொன்னது இன்றும் நினைவில் இருக்கிறது. ஒரு பெண்ணும் அவருடைய மூன்று குழந்தைகளும் எங்கே என்றுகூட தெரியவில்லை,” என சுனாமி ஏற்படுத்திய வடுக்களைப் பற்றிப் பகிர்ந்துகொள்கிறார் வேல்விழி.

வேல்விழி, மீனவச் சமுதாயம்

'மீனவ நண்பன்' பிறந்த கதை

சுனாமிக்குப் பிறகு பெரும்பாலான மீனவர்கள் கடலுக்குச் செல்ல பயந்ததாகக் கூறுகிறார் வேல்விழி. அதன் தாக்கத்திலிருந்து முன்னெச்சரிக்கை அமைப்புகளை மீனவர்களிடம் கொண்டு சேர்க்கும் திட்டத்தில் இணைந்து, 2007-இல் ‘மீனவ நண்பன்’ எனும் செயலியை உருவாக்குவதில் முக்கிய பங்கு வகித்தார் வேல்விழி.

“பேரிடர் காலங்களில் என்ன மாதிரியான நுணுக்கமான தகவல்களைக் கொடுத்தால் மீனவர்கள் பாதுகாப்பாக வர முடியும் என்பது எனக்குத் தெரியும். ‘ஆபத்தான பகுதிகள்’, 'இந்தியா-இலங்கை’ எல்லை குறித்த பகுதிகளை அந்த செயலியில் அளித்தோம். அலையின் உயரம் உட்பட்ட தகவல்களை வழங்கினோம். இதற்கு என்னுடைய படிப்பும் வளர்ந்த சூழலும் உதவியது. 10 ஆண்டுகள் அதில் முக்கிய கவனம் செலுத்தினேன். முன்பு அந்த மாதிரியான அமைப்புகள் இல்லை. அப்போதெல்லாம் ஃபீச்சர் போன் தான். பின்னர் ஆண்ட்ராய்டு போனுக்குக் கொண்டு சென்றோம்,” என தன் கனவுத்திட்டத்தை உருவாக்கியது குறித்து விளக்கினார்.

இந்தச் செயலி, கடல்வழிப் பயணத்தில் வழிகாட்டியாகத் திகழ்கிறது. வானிலை குறித்த நிகழ்நேர தகவல்கள், பேரிடர் முன்னெச்சரிக்கைகள் ஆகியவற்றை வழங்குகிறது. தற்போது இந்தச் செயலி ஏழு கடலோர மாநிலங்களில் 9 மொழிகளில் மீனவர்களுக்காகச் செயல்பட்டுவருகிறது. 75,000 பதிவிறக்கங்களைக் கண்டுள்ளது. புயல் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களின்போது மீனவர்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல இந்தச் செயலி துணைபுரிந்திருக்கிறது. இந்தச் செயலி பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளது.

'198 முறை கடலுக்குச் சென்றிருக்கிறேன்'

வேல்விழி, மீனவச் சமுதாயம்

இதுதவிர, மீனவப் பெண்களுக்கான பயிற்சித் திட்டங்கள், வாழ்வாதாரம் குறித்த பயிற்சிகள், கடல்சார்ந்த பல்வேறு தொழில்நுட்பங்களை மீனவர்களிடம் கொண்டு சேர்த்தல் என பல பணிகளை சுவாமிநாதன் அறக்கட்டளை மூலமாக மேற்கொண்டு வருகிறார் வேல்விழி.

“இதுவரை 198 முறை கடலுக்குச் சென்றிருக்கிறேன். மீனவர்களுக்கான பயிற்சிகளை கடலுக்குள் சென்றுதான் சொல்லித் தருவோம். ஆண்களை அழைத்துக்கொண்டு கடலுக்குச் செல்வதில் எனக்குப் பிரச்னை இல்லை,” என்கிறார்.

நீடித்த கடல்சார் வாழ்வாதாரத்திற்கு வைர வடிவிலான வலைகளை பயன்படுத்தாமல், சதுர கண்ணி வலைகளை தங்கள் இழுவை வலையில் இணைத்து மீனவர்கள் பயன்படுத்த வேண்டும் என தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார் வேல்விழி. இதனால் சிறுமீன்கள், சிறு நண்டுகள் வலைகளில் சிக்காமல் கடலிலேயே இருக்கும் என்றும் கழிவுகளும் வலையில் சிக்காது என்றும் அவர் கூறுகிறார். அதற்கான பயிற்சிகளையும் மீனவர்களுக்கு வழங்குகிறார்.

“சிறுமீன்கள், சிறுநண்டுகள், சினையான நண்டுகளைப் பிடிக்கக் கூடாது என மீனவர்களுக்கு அவர்களுக்கு புரியும் மொழியிலேயே சொல்வோம். பெண்களுக்கு மீன் சார்ந்த மதிப்புகூட்டு பொருட்களை தயாரிப்பது குறித்த பயிற்சிகளை வழங்குகிறோம்,” என்கிறார்.

இதுவரை, 23,000-க்கும் அதிகமானோருக்கு பயிற்சி அளித்துள்ளதாக கூறுகிறார். அதில் 17,000-க்கும் அதிகமானோர் பெண்கள். இவர்களுள் 100-க்கும் மேற்பட்ட பெண்கள் சிறுதொழில்முனைவோராக மாறியுள்ளதாகவும் கூறுகிறார்

இதுதவிர, காலநிலை மாற்றத்திற்கு ஏற்ப தகவமைத்துக்கொள்ளும் விதமாகப் பிச்சாவரத்தில் சதுப்புநிலங்களில் ஒருங்கிணைந்த பண்ணையம் அமைப்பதற்கு பெண்களுக்கு பயிற்சி அளித்துவருகிறார், வேல்விழி.

“சவாலான சூழல்களில் பணி செய்யும் துறையை பெண்கள் தேர்ந்தெடுக்க வேண்டும். சவால்களை சமாளிக்கும் திறனை வளர்க்க வேண்டும். என்ன பிரச்னைகள் இருந்தாலும் மீனவ மக்களிடம் பேசும்போது அவர்கள் சில தீர்வு சொல்லும்போது எல்லா பிரச்னைகளும் போய்விடும். எனக்கு மனசோர்வு என்றால் அவர்களிடம் சென்று பேசினால் சரியாகிவிடும்,” என பகிர்கிறார் வேல்விழி.

அறிவியல் - தொழில்நுட்பத்தைச் சமூகத்திற்கு கொண்டுசேர்ப்பதுதான் முதன்மையானது, சமூகத்தின் பிரச்னைகளை தீர்ப்பதுதான் அறிவியலின் வேலை என்பதுதான் அறிவியல் மீது வேல்விழி கொண்டிருக்கும் நம்பிக்கை.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)