நீட் தேர்வில் வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்கள் ரத்து - மறு தேர்வு நடத்துவதாக நீதிமன்றத்தில் தகவல்

நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரும் மாணவர்கள் : காரணம் என்ன?

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், உமங் பொத்தார்
    • பதவி, பிபிசி செய்தியாளர்

(நீட் தேர்வு விவகாரம் தொடர்பான வழக்குகள் உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில், மறுதேர்வு நடத்துவது தொடர்பான உச்ச நீதிமன்ற உத்தரவையடுத்து, இக்கட்டுரை மறுபிரசுரம் செய்யப்படுகிறது.)

நீட் தேர்வு எழுதியவர்களில் 1500-க்கும் மேற்பட்டோருக்கு வழங்கப்பட்ட கருணை மதிப்பெண்களை ரத்து செய்வதாகவும், அதற்குப் பதிலாக மறுதேர்வு நடத்த இருப்பதாகவும் தேசியத் தேர்வு முகமை கூறியுள்ளது.

நீட் தேர்வு முடிவுகள் வெளியான நாளில் இருந்து கருணை மதிப்பெண்கள் வழங்கியது தொடர்பாகவும், தரவரிசை பட்டியல் தொடர்பாகவும் பல்வேறு சர்ச்சைகள் நீடித்து வருகிறது.

இந்நிலையில், எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கு இந்தாண்டு நடைபெற்ற நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக் கோரி மனு தாக்கல் செய்யப்பட்டது. இதே கோரிக்கையுடன் தாக்கல் செய்யப்பட்ட மனுக்களுடன் சேர்த்து வரும் ஜூலை 8 அன்று விசாரணைக்கு பட்டியலிடப்படும் என உச்ச நீதிமன்றம் கடந்த செவ்வாய்க் கிழமை தெரிவித்தது.

இந்நிலையில், நீட் தேர்வை ரத்து செய்யக் கூறியும், 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கி விவகாரத்தை விசாரிக்கவும் கூறி உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.

நீட் மறுதேர்வு

நீட் தேர்வை ரத்து செய்வது தொடர்பான அனைத்து வழக்குகளும் ஜூலை 8ஆம் தேதி விசாரிக்கப்படும் என ஏற்கெனவே உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளதால் இந்த வழக்கையும் அதனுடன் சேர்த்து விசாரிப்பதாக கூறியது.

மேலும் 1563 மாணவர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கிய விவகாரத்தில், மத்திய அரசின் சார்பாக ஆஜரான வழக்கறிஞர்கள் கருணை மதிப்பெண் வழங்கப்பட்ட மாணவர்களின் தேர்வை ரத்து செய்துவிட்டு அவர்களுக்கு மறுதேர்வு நடத்த முடிவெடுத்துள்ளதாக நீதிமன்றத்தில் குறிப்பிட்டார்.

மேலும் மறுதேர்வு விவகாரத்தில், மாணவர்கள் கருணை மதிப்பெண்களை கழித்து விட்டு பழைய மதிப்பெண்கள் பயன்படுத்த ஒப்புக் கொண்டால் அது ஏற்றுக் கொள்ளப்படும், அல்லது மறுதேர்வு எழுத மாணவர்கள் விரும்பினால் அந்த விருப்பமும் வழங்கப்படும் என தெரிவித்தார்.

இந்த மறுதேர்வு ஜூன் 23ஆம் தேதி நடத்தப்பட்டு, ஜுன் 30ஆம் தேதிக்குள் முடிவுகள் வெளியிடப்படும் என்றும் அரசு தரப்பு வழக்கறிஞர் நீதிமன்றத்தில் தெரிவித்தார்.

அதனால் ஜூலை 6ஆம் தேதி திட்டமிட்டபடியே எம்பிபிஎஸ் கலந்தாய்வை நடத்த முடியும் என தேசிய தேர்வு முகமை நீதிமன்றத்தில் தெரிவித்தது.

இதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், கருணை மதிப்பெண் பிரச்னை இதன் மூலம் சரியாகும் என்பதால் ஜூலை 8-ஆம் தேதி நீட் தேர்வை ரத்து செய்வது, வினாத்தாள் கசிந்த விவகாரம் தொடர்பான வழக்குகளை விசாரிப்பதாக கூறியது.

முன்னதாக ஜூன் 11ஆம் தேதி நடந்த விசாரணையின் போது, எம்.பி.பி.எஸ் படிப்புகளுக்கான கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்குமாறு மனுதாரரின் வழக்கறிஞர் மேத்தியூஸ் ஜே. நெடும்பாரா நீதிமன்றத்தைக் கேட்டுக்கொண்டார். ஆனால், கவுன்சிலிங்கை கலந்தாய்வை உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது.

நீட் தேர்வு

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சித்தரிப்புப் படபடம்

வழக்கின் பின்னணி என்ன?

நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களில் ஒருவராக இருந்தாலும் கூட, நாட்டின் தலைசிறந்த மருத்துவக் கல்லூரியான எய்ம்ஸ்-இல் (AIIMS) இம்முறை சேர்க்கை கிடைப்பது கொஞ்சம் கடினம் தான்.

ஏனெனில் இந்த ஆண்டு நீட் தேர்வில் முதலிடம் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 67. இப்படி நடப்பது இதுவே முதல் முறை. கடந்த ஜூன் 4-ஆம் தேதி நீட் தேர்வு முடிவுகள் வெளியான பிறகு, இம்முறை நீட் தேர்வு முறையாக நடத்தப்படவில்லை என பல குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

நீட் (NEET - National Eligibility-cum-Entrance Test) என்பது மருத்துவம் படிக்க விரும்பும் மாணவர்கள் எழுதும் தகுதித் தேர்வாகும். இதில் கிடைக்கும் மதிப்பெண் அடிப்படையில் தான் மாணவர்கள் மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கை பெறுகின்றனர்.

முதல் ரேங்க் பெற்ற 67 மாணவர்களில், ஹரியாணாவில் ஒரே தேர்வு மையத்தில் தேர்வு எழுதிய 6 பேர் இடம்பெற்றுள்ளனர்.

நீட் தேர்வின் மதிப்பெண் திட்டத்தின் படி, சில மாணவர்கள் கணித ரீதியாக சாத்தியமில்லாத மதிப்பெண்களையும் பெற்றிருக்கிறார்கள்.

நீட் தேர்வை நடத்தும் தேசிய தேர்வு முகமை (NTA - National Testing Agency) இந்தக் குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளது. நீட் தேர்வில் எந்தவிதமான மோசடியும் நடக்கவில்லை என்றும், வினாத்தாள் கசியவில்லை என்றும் கூறியுள்ளது.

சரியான நேரத்தில் வினாத்தாள் கிடைக்காத மாணவர்களுக்கு மட்டுமே கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை விளக்கம் அளித்துள்ளது.

ஆனால், இம்முறை நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என பல மாணவர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இது தொடர்பாக நாட்டின் பல்வேறு நீதிமன்றங்களிலும் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரும் மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சந்தர்ப்ப சூழலால் 1,563 மாணவர்களுக்குத் தேர்வு எழுத குறைவான நேரமே கிடைத்தது

நீட் தேர்வில் ஏற்பட்ட சர்ச்சை

இந்த ஆண்டு நீட் தேர்வு மே 5-ஆம் தேதி நடத்தப்பட்டது. இத்தேர்வில் பங்குபெற 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பதிவு செய்திருந்தனர்.

அதில் 23.33 லட்சம் மாணவர்கள் தேர்வு எழுதினர். முன்னதாக நிர்ணயிக்கப்பட்ட அட்டவணையின்படி, தேர்வு முடிவுகள் ஜூன் 14-ஆம் தேதி வெளியிடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தேர்வு முடிவுகள் பத்து நாட்களுக்கு முன்னதாக, அதாவது ஜூன் 4-ஆம் தேதி அறிவிக்கப்பட்டன.

நீட் தேர்வின் செயல்முறைகளை தொடர்ந்து கண்காணித்து வரும் நிபுணர்களின் கூற்றுப்படி, தேர்வு முடிவுகள் முன்னரே அறிவிக்கப்பட்டது, முறைகேடுகள் குறித்த சந்தேகத்தின் முதல் அறிகுறியாகும்.

இது தவிர, சில பயிற்சி நிறுவனங்களும் மாணவர்களும் நீட் தேர்வு குறித்து மேலும் பல தீவிர பிரச்னைகளை முன்வைத்துள்ளனர்.

தேர்வு முடிவுகளின் படி, 67 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர், அதாவது 720 மதிப்பெண்கள் கொண்ட தேர்வில் அவர்கள் 720 மதிப்பெண்களை முழுமையாகப் பெற்றுள்ளனர்.

இத்தனை மாணவர்கள் 100% மதிப்பெண்கள் பெற்றிருப்பது இதுவே முதல் முறை. 2023-ஆம் ஆண்டில், இரண்டு மாணவர்கள் மட்டுமே முழு மதிப்பெண் பெற்றிருந்தனர்.

2022-ஆம் ஆண்டில், நீட் தேர்வில் எந்த மாணவரும் முழு மதிப்பெண்களைப் பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அந்த ஆண்டும் நீட் தேர்வின் மொத்த மதிப்பெண்கள் 720, தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர் 715 மதிப்பெண் பெற்றிருந்தார்.

நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரும் மாணவர்கள் : காரணம் என்ன?

பட மூலாதாரம், ANI

ஒரே தேர்வு மையத்தில் 6 பேர் முழு மதிப்பெண்

இந்த முறை நீட் தேர்வில் முடிவுகள் வெளியானதும், அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது என்னவென்றால், முதலிடம் பிடித்த 67 மாணவர்களில், 6 மாணவர்கள் ஒரே தேர்வு மையத்தை சேர்ந்தவர்கள். அவர்கள் அனைவரும் ஹரியாணா மாநிலம் ஜஜ்ஜார் மாவட்டத்தில் ஒரு மையத்தில் தேர்வு எழுதினர்.

இப்படி நடப்பது மிகவும் அரிது என்று என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.

நீட் தேர்வு முடிவுகள் குறித்து மாணவர்கள் எழுப்பும் மூன்றாவது சந்தேகம் என்னவெனில், 720 மதிப்பெண்களை கொண்ட தேர்வில் சில மாணவர்கள் 718 மற்றும் 719 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். தேர்வுத் திட்டத்தின்படி, கணித ரீதியாக 718 மற்றும் 719 மதிப்பெண்கள் எடுப்பது என்பது சாத்தியமற்றது என்கின்றனர்.

ஏனெனில் நீட் தேர்வை பொருத்தவரையில் ஒரு கேள்விக்கான சரியான விடைக்கு நான்கு மதிப்பெண்கள் வழங்கப்படும், தவறான விடைக்கு ஒரு மதிப்பெண் குறைக்கப்படும் (மைனஸ் மதிப்பெண்).

எனவே, ஒரு மாணவர் அனைத்து கேள்விகளுக்கும் சரியாக பதிலளித்து ஒரு விடை மட்டும் தவறு என்றால், மதிப்பெண் விதிகளின்படி, அவர் 715 மதிப்பெண்களைப் பெற்றிருப்பார். 718 மதிப்பெண்கள், 719 மதிப்பெண்கள் எடுப்பது சாத்தியமற்றது.

வினாத்தாள் கசிந்தது என்னும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக பிகாரில் எப்.ஐ.ஆர் பதிவு செய்யப்பட்டு 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வழக்கை விசாரிக்க பிகார் காவல்துறையின் பொருளாதாரக் குற்றப்பிரிவு காவல்துறை சிறப்பு புலனாய்வுக் குழுவை (எஸ்.ஐ.டி) அமைத்துள்ளது.

மற்றொரு புறம் நீட் தேர்வில் பல மாணவர்கள் அதிக மதிப்பெண் எடுத்துள்ளதால், தகுதி மதிப்பெண் (qualifying score) கணிசமாக உயர்ந்துள்ளது.

கடந்த மூன்று ஆண்டுகளில், நீட் தேர்வின் தகுதி மதிப்பெண் 130 ஆக இருந்தது, இந்த ஆண்டு அது 164 ஆக அதிகரித்துள்ளது.

தேசியத் தேர்வு முகமை என்ன சொன்னது?

நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரும் மாணவர்கள் : காரணம் என்ன?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, தேர்வு முடிவுகளின் படி, 67 மாணவர்கள் 100% மதிப்பெண் பெற்றுள்ளனர்

நீட் தேர்வு தொடர்பான அனைத்து குற்றச்சாட்டுகளுக்கும் மறுப்புத் தெரிவித்த தேசிய தேர்வு முகமை (NTA - National Testing Agency) ஜூன் 6-ஆம் ஒரு செய்திக்குறிப்பை வெளியிட்டது.

என்.டி.ஏ, தனது பதிலில், முடிவுகளை விரைவில் அறிவிப்பது ஒரு சாதாரண நிலையான நடைமுறை என்று கூறியுள்ளது. இம்முறை என்.டி.ஏ முடிவுகள் வெளியிடும் பணியை 30 நாட்களுக்குள் செய்துள்ளது.

சந்தர்ப்ப சூழலால் 1,563 மாணவர்களுக்குத் தேர்வு எழுத குறைவான நேரமே கிடைத்தது. எனவே அவர்களுக்கு மட்டும் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாக என்.டி.ஏ தெரிவித்துள்ளது. தேர்வு மையத்தில் சரியான நேரத்தில் தேர்வைத் தொடங்க முடியவில்லை எனக்கூறி, சில தேர்வர்கள் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்த நிலையில், அந்த மையத்தின் சி.சி.டி.வி காட்சிகளைப் பார்த்து அதிகாரிகளிடம் பேசியதன் பேரில் தேர்வர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக என்.டி.ஏ கூறியுள்ளது. பொதுச் சட்ட நுழைவுத் தேர்வுக்கு (Common Law Admission Test) உச்ச நீதிமன்றத்தால் பரிந்துரைக்கப்பட்ட அதே நடைமுறை தான் இதற்கும் கடைப்பிடிக்கப்பட்டது என்று அது கூறியது.

சில மாணவர்கள் 718 போன்ற மதிப்பெண்கள் பெற்றதற்கு இதுவே காரணம். இது தவிர 720 மதிப்பெண்கள் பெற்ற ஆறு மாணவர்கள் கருணை மதிப்பெண்கள் பெற்றுள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தவிர, 720 மதிப்பெண்கள் (100 சதவீத மதிப்பெண்கள்) பெற்ற 44 மாணவர்களுக்கு இயற்பியல் பாடத்தின் ஒரு கேள்விக்கு விடையளித்ததற்காக திருத்த மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.

தேர்வுத்தாள் கசிந்ததாக வெளியான குற்றச்சாட்டையும் என்.டி.ஏ மறுத்துள்ளது. "தேர்வில் நேர்மையான செயல்முறை மட்டுமே கடைபிடிக்கப்பட்டுள்ளது,” என, என்.டி.ஏ கூறியுள்ளது. தேர்வு தொடர்பான மற்ற புகார்கள் மீது, பரிந்துரைக்கப்பட்ட நடைமுறைகளின்படி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் என்.டி.ஏ முகமை தெரிவித்துள்ளது.

மாணவர்கள் சொல்வது என்ன?

கடந்த சில நாட்களாக, மாணவர்கள் மற்றும் பயிற்சி மையங்கள் சமூக ஊடகங்களில் பல புகார்களை முன்வைத்தனர்.

'கேரியர்ஸ்-360' என்ற கல்வி இணையதளத்தின் நிறுவனர் மகேஷ்வர் பெரி, பிபிசியிடம் பேசுகையில், "நீட் தேர்வின் முழு செயல்பாடுகளிலும் சில தீவிர குறைபாடுகள் உள்ளது," என்று கூறினார்.

"இந்தியாவில் பல நுழைவுத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. பொதுவாக, ஒரு சில மாணவர்கள் நல்ல மதிப்பெண்கள் பெறுவார்கள். ஆனால் நீட் தேர்வில் 67 பேர் முழு மதிப்பெண் பெற்றிருப்பது சாத்தியமற்றது,” என்றார்.

மேலும் கருணை மதிப்பெண்கள் வழங்கும் நடைமுறை 'வெளிப்படையாக' செய்யப்படவில்லை என்றும் அவர் கூறுகிறார்.

"நீட் முடிவுகளுக்கு விடைக்குறிப்புகள் வெளியிடப்படும்போது, ​​கேள்விகளில் ஏதேனும் சிக்கலால் கூடுதல் மதிப்பெண்கள் வழங்குகிறார்களா இல்லையா என்பதை என்.டி.ஏ அல்லது பிற தேர்வு அமைப்புகள் முன்கூட்டியே தெளிவுபடுத்த வேண்டும். ஆனால் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்ட பிறகு கேள்வி எழுந்ததால் இதுகுறித்து விளக்கம் கொடுப்பது தவறு,” என்று அவர் கூறினார்.

நீட் முடிவுகள் அறிவிக்கப்பட்டதும், 718 போன்ற மதிப்பெண்கள் எப்படி வரும் என்று பலர் கேள்வி எழுப்பினர். பின்னர் கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டதாக என்டிஏ ஒரு ட்வீட் மூலம் தெளிவுபடுத்தியது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரும் மாணவர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரி இரண்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன

கட்-ஆஃப் மதிப்பெண் அதிகரிப்பு

'எக்ஸ்' சமூக ஊடகத் தளத்தில், 'ஃபிசிக்ஸ் வாலா' பயிற்சி நிறுவனத்தை நிறுவிய அலக் பாண்டே, ஒரு மாணவரின் விடைத்தாளை தாமே நேரடியாக சரிபார்த்ததாக கூறியுள்ளார். மேலும் அந்த மாணவருக்கு என்டிஏ 85 கூடுதல் மதிப்பெண்கள் வழங்கியதையும் அவர் கண்டறிந்துள்ளார். அலக் பாண்டேயின் இந்தக் கூற்றை பிபிசி சுயாதீனமாக சரிபார்க்க முடியவில்லை.

பலர் அதிக மதிப்பெண்கள் பெற்றதால் இம்முறை கட்-ஆஃப் சதவீதம் மிகவும் அதிகமாகிவிட்டது.

மோஷன் எஜுகேஷன் (Motion Education) என்ற நிறுவனத்தை நடத்தி வரும் நிதின் விஜய், எக்ஸ் தளத்தில் "இந்த முறை ஒரே கட்-ஆஃப் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மூன்று மடங்காக அதிகரித்துள்ளது. இது சாத்தியமற்றது. கடந்த ஆண்டை விட இந்த முறை வினாத்தாள் கடினமாக இருந்தது. அப்படி இருக்கையில் அதிக மாணவர்கள் அதிக கட் ஆஃப் எடுத்திருப்பது சாத்தியமற்றது. கண்டிப்பாக ஏதோ மோசடி நடந்துள்ளது. நாம் குரல் எழுப்ப வேண்டும்," என்று பதிவு செய்துள்ளார்.

இந்தச் சர்ச்சை மாணவர்களை அதிகம் பாதித்துள்ளது.

டெல்லியைச் சேர்ந்த ஆத்விகாவும் இந்த ஆண்டு நீட் தேர்வெழுதினார். ஆத்விகா கூறுகையில், ​​"பல மாணவர்கள் நீட் தேர்வின் மீது நம்பிக்கை இழந்துவிட்டனர். நான் 600 மதிப்பெண்கள் எடுத்துள்ளேன். இதன் மூலம் எனது ரேங்க் 30,000-ஆக இருக்கும் என்று எதிர்பார்த்தேன். ஆனால் என் ரேங்க் நான் 80,000-இல் உள்ளது, இது மிகக் குறைவு," என்கிறார்.

"கடந்த வருடங்களில் இந்த மதிப்பெண் எடுத்திருந்தால் ஏதாவது கல்லூரியில் அட்மிஷன் கிடைத்திருக்கும் ஆனால் இந்த வருடம் அது சாத்தியமில்லை,” என்கிறார் ஆத்விகா.

ஏதாவது ஒரு மையத்தில் உரிய நேரத்தில் தேர்வுகள் நடத்தப்படாதபோது வழங்கப்படும் கருணை மதிப்பெண்கள் முறை குறித்தும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன.

மகேஷ்வர் பெரி பேசுகையில், "ஒரு மணி நேரம் தாமதமாகத் தேர்வைத் துவங்கிய மாணவர்களுக்கு நீங்கள் 100 மதிப்பெண்கள் வழங்குகிறீர்கள், ஏனென்றால் அவர்கள் சரியான நேரத்தில் தேர்வை தொடங்கியிருந்தால் இந்த மதிப்பெண்களை பெற்றிருக்கலாம் தான், அதே சமயம் கூடுதல் நேரத்தில், அவர்கள் பலவற்றிற்கு தவறான பதில்களையும் அளித்திருக்கலாம் அல்லவா?” என்று கேள்வி எழுப்புகிறார்.

நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரும் மாணவர்கள் : காரணம் என்ன?

பட மூலாதாரம், ANI

படக்குறிப்பு, கடந்த ஆண்டை விட இந்த முறை வினாத்தாள் கடினமாக இருந்தது

மறு தேர்வு நடத்த கோரிக்கை

இந்த ஆண்டு நீட் தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என மாணவர்கள் பலர் கோரிக்கை விடுத்தனர்.

தேர்வை மீண்டும் நடத்த வேண்டும் என்று ஆத்விகா வலியுறுத்துகிறார். முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் பலர் ஒரே மையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்ற சம்பவத்தால் ​​ஏதோ தவறு இருப்பதாக உணர்வது இயற்கையானது.

நீட் தேர்வை மீண்டும் நடத்தக் கோரி இரண்டு மனுக்கள் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.

மே 17-ஆம் தேதி, அத்தகைய ஒரு மனு மீது நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் அது கோடை விடுமுறைக்குப் பிறகு விசாரிக்கப்படும் என்று நீதிமன்றம் கூறியது.

வினாத்தாள் கசிந்தது தொடர்பான குற்றச்சாட்டில், பல தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்குச் சம வாய்ப்பு கிடைக்கவில்லை என மனுவில் கூறப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரிக்க ஒவ்வொரு மாநிலத்திலும் சிறப்பு புலனாய்வுக் குழுவை அமைக்க வேண்டும் என மனுவில் கோரப்பட்டுள்ளது.

அரசியல் கட்சிகளும் இந்தப் பிரச்னையை எழுப்பியுள்ளன. நீட் தேர்வில் நடந்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று ஜூன் 7-ஆம் தேதி காங்கிரஸ் தரப்பில் செய்தியாளர்களை சந்தித்து கோரிக்கை வைத்தது.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)