உத்தரபிரதேசத்தில் பாஜக பின்னடைவுக்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் விலகி நின்றதே காரணமா?

யோகி ஆதித்யநாத் - மோதி

பட மூலாதாரம், ANI

    • எழுதியவர், நிதின் ஸ்ரீவஸ்தவா
    • பதவி, பிபிசி செய்தியாளர்

கோரக்பூர் நகரத்தின் மையப் பகுதியில் சுமார் 50 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள கோரக்நாத் மடத்தில் ஒரு பெரிய மருத்துவமனை, ஆயுர்வேத மருத்துவ மையம், சமஸ்கிருத பள்ளி மற்றும் பல நவீன தங்கும் விடுதிகள் உள்ளன.

அந்த மடத்திற்கு அருகில் ஒரு பழைய இளஞ்சிவப்பு நிற இரண்டு அடுக்கு மாடி வீடு உள்ளது. அதன் முதல் தளத்தில் உள்ள ஒரு அறையில் அந்த மடத்தின் மடாதிபதியும் எம்.பியுமான அவைத்யநாத் வசித்து வந்தார்.

அவர் மறைந்த பின்னர், யோகி ஆதித்யநாத் மடாதிபதியானார். தனது குருவின் அறைக்கு அவர் மாறிக்கொண்டார்.

கடந்த வாரம், ஜூன் 3ம் தேதி, உத்தரப் பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் வழக்கம் போல் அதிகாலையில் எழுந்து தயாராகி, தன் வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள சக்திபீட கோவிலில் வழிபட்டுவிட்டு திரும்பினார். பின்னர் அவர் தனது மாட்டுத் தொழுவத்திற்குச் சென்றார், அன்றே அவர் தலைநகர் லக்னோவுக்குத் திரும்புவது என்று முடிவு செய்யப்பட்டது.

அவர் எம்.பி.யாக இருந்த போது மக்களை அந்த அறையில் தான் சந்திப்பார். அந்த நடைமுறை இப்போதும் தொடர்கிறது.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

அந்த அறையைக் கடந்து செல்லும் போது, ​​ஒரு வயதான ஊழியர் "மகாராஜ் ஜி (யோகி ஆதித்யநாத்), பொதுத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாகின்றன. அதற்கு மறுநாள் உங்கள் பிறந்தநாள். அதன் பிறகு நாங்கள் உங்களை இங்கு காண முடியுமா?” என கேட்டார்.

யோகி ஆதித்யநாத் சிரித்துக்கொண்டே சென்றுவிட்டார். அடுத்த சில நாட்கள் எவ்வளவு ‘சவாலானதாக’ இருக்கும் என்பதை அவர் கற்பனை கூட செய்திருக்க மாட்டார்.

தேர்தல் முடிவுகள் தந்த அதிர்ச்சி

ராகுல் காந்தி - அகிலேஷ்

பட மூலாதாரம், Getty Images

ஜூன் 4ஆம் தேதி வெளியான முடிவுகள் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தின. பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சியமைக்க 272 இடங்கள் வேண்டும் என்ற நிலையில், அக்கட்சிக்கு 32 இடங்கள் குறைவாகவே கிடைத்தன.

கடந்த முறை போலவே, 80 மக்களவைத் தொகுதிகளைக் கொண்ட மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் இருந்து 60க்கும் மேற்பட்ட இடங்களில் வெல்வோம் என பாஜக எதிர்பார்த்தது. ஆனால், அக்கட்சி மோசமான பின்னடைவை சந்தித்தது. பாஜக 33 இடங்களை மட்டுமே பெற முடிந்தது. பாஜகவை விட சமாஜ்வாதி அதிக இடங்களை வென்றது,

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி 36 இடங்களையும், காங்கிரஸ்-சமாஜ்வாதி கட்சிகளை உள்ளடக்கிய எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி 43 இடங்களையும் பெற்றன.

கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 64 இடங்கள் கிடைத்ததால் இது பாஜகவுக்கு பெரும் அடியாக அமைந்தது.

கடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல்களில் யோகி ஆதித்யநாத்திற்கு வெற்றிவாவாகை சூட்டப்பட்டது. ஆனால், இந்த தேர்தல் முடிவுகள் அவரை அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

சமாஜ்வாதி கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் 37 இடங்களிலும், காங்கிரஸ் கட்சியின் ராகுல் காந்தி 6 இடங்களிலும் யோகியை தோற்கடித்துள்ளனர்.

அரசியல் ஆய்வாளரும் மூத்த பத்திரிகையாளருமான வீர் சங்வியின் கூற்றுப்படி, "மோதியின் மத்திய அரசை விட பாஜக ஆளும் மாநில அரசுகள் சிறுபான்மையினரை நேரடியாக குறிவைத்துள்ளன. குறிப்பாக, உத்தரப் பிரதேசத்தில் மாநில அரசின் அடையாளமாக புல்டோசர் மாறியுள்ளது. புதிய ராமர் கோவில் அமைந்துள்ள மாநிலத்தில் 'இந்துத்துவா அரசியலுக்கு' மிகப்பெரிய அடி கிடைத்துள்ளது." என்றார்.

முஸ்லிம்களுக்கு ஆதரவாக இருப்பதாக குற்றம் சாட்டப்பட்ட சமாஜ்வாதி, இந்துக்கள் பெரும்பான்மையாக உள்ள மாநிலத்தில் அதிக இடங்களை பெற்றுள்ளது. பாஜக தோற்ற தொகுதிகளில் அயோத்தியும் (ஃபைசாபாத் தொகுதி) ஒன்று.

2019 பொதுத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் 49.6% வாக்குகளைப் பெற்ற பாஜக, 2024-ல் 41.4% வாக்குகளை பெற்றுள்ளது என்பதே உண்மை.

தோல்விக்கு யார் பொறுப்பு?

அமித் ஷா

பட மூலாதாரம், Getty Images

லக்னோவின் ஹஸ்ரத்கஞ்சில் உள்ள பாஜக அலுவலகத்தின் காட்சிகள் 2014 முதல் மாறிவிட்டடன. பாஜக அலுவலகத்தின் உயரமான கூரைகள், பெரிய கதவுகள் கொண்ட பழைய கட்டடம், பல சிறந்த மைல்கல் தருணங்களை கண்டுள்ளது.

அந்த அலுவலகம் 1990 முதல் 2004 வரை உள்ளூர் எம்.பியும் அதன்பின் இந்திய பிரதமருமான அடல் பிஹாரி வாஜ்பேயின் மத்திய அரசாங்கத்தையும், கல்யாண் சிங் மற்றும் ராஜ்நாத் சிங் தலைமையிலான மாநில அரசாங்கங்களையும் பார்த்துள்ளது.

2004 பொதுத் தேர்தலில் 'இந்தியா ஒளிர்கிறது' என்ற முழக்கத்தின் கீழ் மீண்டும் ஆட்சியமைக்க பாஜக அரசு மேற்கொண்ட தோல்வி முயற்சியையும் அந்தப் பழைய அலுவலகம் கண்டுள்ளது.

2014-க்குப் பிறகு அமித் ஷா மாநிலத்தில் பாஜக பிரசாரப் பொறுப்பாளராகப் பொறுப்பேற்ற பிறகு இந்த அலுவலகம் புதிய பொலிவு பெற்றது.

அந்தாண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன்பு, அனைத்து வாக்குச்சாவடிகளின் தகவல்களும் அடங்கிய ‘வார் ரூம்’ ஒன்றும் இந்த புதிய அலுவலகத்தின் முதல் தளத்தில் திறக்கப்பட்டது.

அடுத்த சில ஆண்டுகளில், யோகி ஆதித்யநாத் முதலமைச்சராக பதவியேற்றதையும் இந்த புதிய அலுவலகம் கண்டது. ஆனால் இப்போது கிட்டத்தட்ட பத்தாண்டுகளுக்குப் பிறகு, ஜூன் 4, 2024 அன்று காலையில் தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கியபோது, இந்த அலுவலகம் மீண்டும் அமைதியையும் தோல்வியையும் உணர்ந்தது.

கோரக்பூரை சேர்ந்த அரசியல் அறிவியல் பேராசிரியர் மகேந்திர குமார் சிங், "பாஜகவிற்கு இத்தகைய முடிவு ஏற்பட்டதற்கு ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் தேர்தல் பணிகளில் குறைவாக பங்கேற்றதும் பாஜகவின் அடித்தட்டு நிர்வாகிகளின் மன உறுதி குறைந்ததும்தான் முக்கிய காரணம். ஏனெனில் அவர்களில் பெரும்பாலானோர், பிரதமர் மோதி மற்றும் அமித் ஷாவின் தலைமையில் கட்சியில் தாங்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தனர்” என்றார்.

கடந்த மக்களவை மற்றும் சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் வெளிவரத் தொடங்கிய போது, இந்த அலுவலகத்தில் புதிதாக ஒன்றைக் கவனிக்க ஆரம்பித்தேன். அந்த தேர்தல்களில் கட்சியின் வெற்றியைக் கொண்டாட தொண்டர்கள் புல்டோசர்களில் அலுவலகத்தின் வாயிலை அடைந்தனர்.

உத்தரபிரதேச தோல்விக்கு யார் காரணம்?

பட மூலாதாரம், Getty Images

இந்த தேர்தல் பிரசாரத்தில் கூட, முதலைமைச்சர் யோகி ஆதித்யநாத் தனது உரைகளில் 'குற்றவாளிகள் மற்றும் தவறு செய்பவர்கள் மீது புல்டோசர்களைப் பயன்படுத்த வேண்டும்' என்ற கருத்தை மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார்.

மே 23, 2024 அன்று பிகாரில் நடைபெற்ற தேர்தல் பேரணியில் உரையாற்றிய அவர், "நான் வருவதற்கு முன்பே புல்டோசர்களை நீங்கள் இங்கு கொண்டு வந்ததற்கு உங்கள் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது (புல்டோசர்) மாஃபியா மற்றும் பயங்கரவாதிகளுக்கு எதிரான மிகவும் பொருத்தமான சிகிச்சை" என்றார்.

இந்த பேரணிக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “புல்டோசர்களை எங்கே, எப்படி பயன்படுத்த வேண்டும் என்பது குறித்து, எதிர்க்கட்சியான காங்கிரஸும் சமாஜ்வாதியும் யோகி ஆதித்யநாத்திடம் கற்க வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோதி கூறியதை, தேர்தல் ஆணையம் கவனத்தில் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தார்.

நீதி விசாரணை முடியும் முன்னரே ஒருவரின் வீட்டையோ அல்லது மற்ற சொத்துகளையோ, அதிகாரத்தைப் பயன்படுத்தி புல்டோசர் மூலம் இடிப்பதை வாக்காளர்கள் நிராகரித்துள்ளனர் என்பது தேர்தல் முடிவின் மூலம் தெளிவாகிறது.

வேட்பாளர்கள் தேர்வு

நரேந்திர மோதி

பட மூலாதாரம், Getty Images

உத்தரபிரதேசத்தில் நடைபெற்ற பல தேர்தல்கள் குறித்து செய்தி சேகரித்துள்ள மூத்த பத்திரிகையாளர் நிதி ரஸ்தான் கூறுகையில், "’400 இடங்களுக்கு மேல் வெற்றி’, ‘மோதி உத்தரவாதம்’ என்ற முழக்கங்களுக்கு மத்தியில், உத்தரப் பிரதேசத்தில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் தனிமைப்படுத்தப்பட்டதாக உணர்ந்தனர்” என்றார்.

அவர் கூறும்போது, ​​"வேட்பாளர்கள் தேர்வில் இந்த முறை மத்திய தலைமையின் பங்கு, மாநில தலைமையை விட அதிகம் காணப்பட்டது, இதனால் எதிர்மறையான விளைவு ஏற்பட்டது நிரூபணமாகியுள்ளது. எதிர்காலத்தில் யோகியை மாற்றக்கூடும் என்பது போன்ற உறுதிபடுத்தப்படாத செய்திகளும் வருகின்றன. ஆனால், யோகியும் பிரதமரும் புல்டோசர் குறித்து மீண்டும்மீண்டும் பேசிவருகின்றனர்” என்றார்.

'கடுமையான முதல்வர்' யோகி ஆதித்யநாத்தின் நிர்வாகத்தால் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர் என்பது உள்ளூர் ஊடகங்களில் பொதுவாக கூறப்படுகிறது.

ஆனால், அண்டை மாநிலங்களான மத்தியப் பிரதேசம், சத்தீஸ்கர், டெல்லி, பிகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் சிறப்பாகச் செயல்பட்ட பாஜக, தனது கோட்டையான உ.பி.யில் மட்டும் ஒடுங்கியுள்ளது என்பதே நிதர்சனம்.

உத்தரப் பிரதேசத்தில் நீண்ட சுற்றுப்பயணத்திற்குப் பிறகு திரும்பிய மூத்த பத்திரிகையாளர் சபா நக்வி, "இந்த தோல்விக்கு யாரோ ஒருவர் மீது குற்றம்சாட்டப்பட வேண்டும். மௌனமான தொனியாக இருந்தாலும், இந்த சூழலில் யோகி ஆதித்யநாத் மீது உ.பியில் மோசமான செயல்பாட்டுக்கு குறை கூறப்படுகிறது” என்றார்.

உத்தரப் பிரதேசத்தில் கடந்த இரண்டு சட்டப்பேரவைத் தேர்தல்களில் பாஜக சார்பில் வெற்றி பெற்ற, பெயர் தெரிவிக்க விரும்பாத தலித் தலைவர் ஒருவர், "உ.பி.யில் உள்ள 80 இடங்களில் குறைந்தபட்சம் 25 இடங்களில் வேட்பாளர்களை மத்திய தலைமை தான் தேர்ந்தெடுத்தது. அந்த இடங்களில் வேறொருவரை களமிறக்க யோகி விரும்பினார். இந்த முறை அகிலேஷ் யாதவ் வேட்பாளர் தேர்வில் அதிக கவனம் செலுத்தி, அதில் சாணக்கியராக இருந்தார்” என்றார்.

​​முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கும், பாஜக தலைமைக்கும் இடையே, சீட் பங்கீடு தொடர்பாக, 'கருத்து வேறுபாடுகள்' இருந்த போதிலும், எதிர்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி, ‘நெருக்கமான’ பலருக்கும் சீட் மறுத்து, மற்றவர்களுக்கு வழங்கியதை மனதில் கொள்ள வேண்டும்.

எடுத்துக்காட்டாக, சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ், தன் குடும்பத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், யாதவ் சமூகத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு மட்டுமே சீட் வழங்கினார். அதேபோன்று, ஐந்து-ஆறு முஸ்லிம் வேட்பாளர்களை நிறுத்தினார் என்பது, அகிலேஷ் யாதவ் வேட்பாளர்கள் குறித்து கணக்குப் போட்டுவிட்டுதான் இதில் இறங்கினார் என்பதை தெளிவுபடுத்துகிறது.

அதாவது, ‘இந்தியா’ கூட்டணியின் சிறப்பான ஓபிசி-தலித் கணக்கீட்டை புரிந்துகொள்ள பாஜகவுக்குத் தாமதமானது.

இதுகுறித்து பெயர் வெளியிட விரும்பாத உத்தரப் பிரதேச அரசின் மூத்த செய்தித் தொடர்பாளர் கூறுகையில், “பாஜக அரசு வந்தால் அரசமைப்பு சட்டம் மாற்றப்படும், புதிய இந்தியா உருவாகும், இடஒதுக்கீடு ஒழிக்கப்படும் என எதிர்க்கட்சிகள் மக்களிடம் தொடர்ந்து கூறின” என்றார்.

இழப்பை ஈடுகட்ட முயற்சி

யோகி ஆதித்யநாத்

பட மூலாதாரம், Getty Images

ஜூன் 4 மாலையில், உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் மீதான மக்களின் நம்பிக்கை குறைந்தது தெளிவானது. ராமர் கோவில் கட்டுவது, அயோத்தி நகரத்தை ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் செலவில் புதுப்பிப்பது, புல்டோசர் மூலம் நீதி பெறுவது போன்ற பாஜகவின் வாதங்கள் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்பதும் தெரிந்தது.

இந்தப் புதிர் இப்போது முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்துக்கும் எளிதாகிவிட்டது.

ஜூன் 7 ஆம் தேதி, அவர் பிரயாக்ராஜில் உள்ள மாநில குடிமைப் பணிகள் ஆணையத்திடம் பேசி, மாநிலத்தில் எத்தனை அரசு வேலைகள் காலியாக உள்ளன என்பதைக் கண்டறிய விரும்பினார்.

ஜூன் 8 ஆம் தேதி, லக்னோவில் தனது அமைச்சரவைக் கூட்டத்தை கூட்டிய யோகி ஆதித்யநாத், "இதுவரை நடந்தது போதும். நீங்கள் விஐபி கலாசாரத்திலிருந்து விலகி இருங்கள். உங்கள் தொகுதிக்கு சென்று பொதுமக்களுடன் மீண்டும் இணையுங்கள்” என்றார்.

நிபுணர்களின் கூற்றுப்படி, உத்தரப் பிரதேசத்தின் இளைஞர்கள் மத்தியில் கீழ்மட்ட அரசு வேலைக்கான ஆட்சேர்ப்புகள் தொடர்ந்து ஒத்திவைக்கப்படுவதாகவும், இலவச ரேஷன் மற்றும் இலவச எரிவாயு போன்ற திட்டங்களிலேயே அரசாங்கம் அதிக கவனம் செலுத்துவதாகவும் கோபம் உள்ளதாக கூறுகின்றனர்.

‘இந்தியா’ கூட்டணி சாதி சமன்பாட்டின் அடிப்படையில் வேட்பாளர்களை தேர்வு செய்ததன் பலனைப் பெற்றுள்ளது என்பது தேர்தல் முடிவுகளிலிருந்து தெளிவாகிறது. இளைஞர்களும் அக்கூட்டணிக்கு அதிகளவில் வாக்களித்தனர்.

உத்தரபிரதேசத்தில், ஸ்மிருதி இரானி, சாத்வி நிரஞ்சன் ஜோதி, மகேந்திர பாண்டே, அஜய் மிஸ்ரா தேனி, சஞ்சீவ் பல்யான், கௌஷல் கிஷோர் மற்றும் பிபிஎஸ் வர்மா உட்பட பல மத்திய அமைச்சர்கள் மற்றும் யோகி அரசின் அமைச்சர்கள் தோல்வியை சந்தித்தனர்.

அதிகரித்து வரும் பணவீக்கம், அக்னிவீர் திட்டம், அரசுத் தேர்வுகளில் வினாத்தாள் கசிவு மற்றும் அரசுப் பணிகளுக்கான ஆள் சேர்ப்பில் தாமதம், இவை அனைத்தும் உத்தர பிரதேசத்தின் இளம் வாக்காளர்களை பாதித்துள்ளன.

யோகி ஆதித்யநாத்துக்கு நெருக்கமானவர்கள், "மாநிலத்தில் பாஜக தனது நம்பகத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்ப வேண்டும் என்றால், யோகியால் மட்டுமே அதைச் செய்ய முடியும், ஏனெனில் அவர் இந்துத்துவாவின் தூதுவர்." என்றனர்.

ஆனால், சில மூத்த பாஜக தலைவர்கள், "யோகி மிக விரைவாக முன்னேற முயன்றார், ஆனால் அரசியலில் எல்லாம் முழு வடிவம் பெறுவதற்கு நேரம் எடுக்கும்” என்கின்றனர்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)