ஒடிஷா அரசியலில் இருந்து வி.கே.பாண்டியன் விலகியது ஏன்? நவீன் பட்நாயக் கூறியது என்ன?

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன்

பட மூலாதாரம், BJD/X

படக்குறிப்பு, நவீன் பட்நாயக்குடன் வி.கே.பாண்டியன்
    • எழுதியவர், சிராஜ்
    • பதவி, பிபிசி தமிழ்

கடந்த 24 வருடங்களாக ஒடிஷாவின் முதலமைச்சராக இருந்த நவீன் பட்நாயக், முதல்முறையாக தோல்வியைச் சந்தித்துள்ளார். 147 சட்டப்பேரவை தொகுதிகளைக் கொண்ட ஒடிஷாவில் 78 இடங்களை கைப்பற்றிய பாஜக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க உள்ளது. நவீனின் பிஜு ஜனதா தளத்திற்கு (பிஜேடி) 51 இடங்களே கிடைத்தன.

பிஜேடி கட்சியின் இந்த தோல்விக்கு நவீனின் முன்னாள் தனிச் செயலாளர் வி.கே.பாண்டியனைக் குறிவைத்து பாஜக மேற்கொண்ட பிரசாரம் தான் காரணம் என பரவலாக குற்றசாட்டப்படுகிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இவர், ஐஏஎஸ் பணியில் இருந்து விலகி தீவிர அரசியலில் ஈடுபட்டார்.

தேர்தலில் பிஜு ஜனதா தளம் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, தீவிர அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார் வி.கே.பாண்டியன்.

ஒடிஷாவில் வி.கே.பாண்டியன் எடுத்த முடிவுகளால் தான் பிஜேடி கட்சி தோல்வியைச் சந்தித்ததா?

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

யார் இந்த வி.கே.பாண்டியன்?

வி. கார்த்திகேயன் பாண்டியன் மதுரை மாவட்டம் மேலூருக்கு அருகில் உள்ள கூத்தப்பன்பட்டியில் 1974இல் பிறந்தவர். ஆரம்பக் கல்வியை அழகர் கோவிலுக்கு அருகில் உள்ள வெள்ளாளபட்டி அரசுப் பள்ளியில் முடித்தார். பிறகு நெய்வேலியில் உள்ள ஸ்போர்ட்ஸ் பள்ளியில் படித்தார்.

அதன் பின், இளநிலை விவசாயப் படிப்பை மதுரையில் உள்ள விவசாயக் கல்லூரியிலும் முதுகலைப் படிப்பை இந்திய விவசாய ஆராய்ச்சி நிலையத்திலும் முடித்தார்.

இந்திய ஆட்சிப் பணி அதிகாரியாக 2000வது ஆண்டில் தேர்வுபெற்ற இவர், ஒடிஷாவில் பணியில் சேர்ந்தார். சக ஐஏஎஸ் அதிகாரியான சுஜாதா ரௌத்தை திருமணம் செய்துகொண்ட பிறகு, அவரும் ஒடிஷாவுக்கு தனது பணியை மாற்றிக் கொண்டார்.

ஒடிஷாவிலேயே மக்கள் தொகை அதிகமுள்ள கஞ்சம் மாவட்டத்தின் ஆட்சித் தலைவராகப் பொறுப்பேற்றவுடன் அங்கு மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தை மிகச் சிறப்பாகச் செயல்படுத்தினார்.

இந்த மாவட்டத்தில்தான் நவீன் பட்நாயக்கின் தொகுதியான ஹிஞ்சிலி தொகுதி அமைந்திருக்கிறது.

இங்கு அவருடைய செயல்பாடுகளைக் கவனித்த நவீன் பட்நாயக், 2011ஆம் ஆண்டில், தன்னுடைய அலுவலகத்தில் அவரை இணைத்துக் கொண்டார்.

அப்போது முதலமைச்சரின் தனிச் செயலார் பொறுப்பு அவருக்கு வழங்கப்பட்டது. மிக விரைவிலேயே நவீன் பட்நாயக்கின் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக உருவெடுத்தார் பாண்டியன்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன்

வி.கே.பாண்டியனிடம் அளிக்கப்பட்ட தேர்தல் பொறுப்பு

கடந்தாண்டு அக்டோபர் மாதம் வரை நவீன் பட்நாயக்கின் தனிச் செயலாளராக இருந்த பாண்டியன், தனது ஐஏஎஸ் பணியை ராஜினாமா செய்துவிட்டு பிஜுஜு ஜனதா தளத்தில் சேர்ந்தார். தேர்தலின் போது, ​​வேட்பாளர்களை தேர்வு செய்வது மட்டுமின்றி, கட்சி சார்பில் பிரசாரம் செய்யும் முழுப் பொறுப்பையும் ஏற்றார்.

ஒடிஷா அரசின் முக்கியமான முடிவுகள் எதுவும் இவரது ஒப்புதல் இல்லாமல் மேற்கொள்ளப்பட்டதில்லை. கட்சியிலும், ஆட்சியிலும் அவரது செல்வாக்கு அதிகரித்து வந்தது, ஒடிஷா மக்கள் மத்தியிலும் ஒரு சலசலப்பை ஏற்படுத்தியது.

இதைப் புரிந்துகொண்ட பாஜக, இதை தனது தேர்தல் பிரசார உத்தியாக மாற்றியது.

“ஒடிஷாவின் 4.5 கோடி மக்களை தனது ‘குடும்பம்’ என்று அழைக்கும் நவீன், தனது மாநில மற்றும் கட்சியின் அனைத்து தலைவர்களையும் புறக்கணித்துவிட்டு, தமிழ்நாட்டைச் சேர்ந்த ஒரு நபரிடம் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்” என்று தேர்தல் பிரசாரத்தின் போது, ​​பிரதமர் நரேந்திர மோதி உட்பட அனைத்து பாஜக தலைவர்களும், மீண்டும் மீண்டும் கூறினர்.

மேலும், “பூரி ஜெகந்நாதர் கோயிலின் பொக்கிஷ அறை சாவி தமிழ்நாட்டுக்கு சென்றுவிட்டதாக மக்கள் கூறுகின்றனர். அதைத் தமிழ்நாட்டுக்கு அனுப்பியது யார்?" என மோதி பிரசாரத்தில் கேள்வி எழுப்பினார்.

முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி வி.கே.பாண்டியன்
படக்குறிப்பு, நவீன் பட்நாயக்கின் மிகவும் நம்பிக்கைக்குரிய அதிகாரியாக இருந்தார் வி.கே.பாண்டியன்

அதேபோல, பிஜு ஜனதா தளம் மீண்டும் வெற்றி பெற்றால், நவீன் பட்நாயக்கின் உடல்நிலையை காரணம் காட்டி பாண்டியன் தான் ஒடிஷா முதலமைச்லமைச்சராக பதவியேற்பார் என்றும், அவரது உடல்நிலை மோசமடைந்ததன் பின்னணியில் சதி உள்ளது எனவும் பா.ஜ.க குற்றம்சாட்டியது.

பாஜகவின் இந்த பிரசாரம் தான் பிஜேடி கட்சிக்கு எதிராக அமைந்துவிட்டது என அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

நவீன் பட்நாயக், இது தொடர்பாக ஏஎன்ஐ-க்கு அளித்த பேட்டியில் “பாண்டியன் தனது ‘அரசியல் வாரிசு’ அல்ல” என்று கூறினார்.

தனது உடல்நிலை குறித்தும் தெளிவுபடுத்திய அவர், தான் பூரண நலமுடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

சட்டப்பேரவைத் தேர்தலில் மட்டுமல்லாது, ஒடிஷாவின் 21 மக்களவைத் தொகுதிகளுக்கான தேர்தலிலும் பிஜு ஜனதா தளம் படுதோல்வியைச் சந்தித்துள்ளது. ஒரு இடத்தைக் கூட அவர்களால் பிடிக்க முடியவில்லை, ஆனால் 20 தொகுதிகளை பாஜக கைப்பற்றியுள்ளது. ஒரு தொகுதியில் காங்கிரஸ் வெற்றி பெற்றது.

பாண்டியனின் முடிவு குறித்து நவீன் கூறியது என்ன?

பாண்டியனின் முடிவு குறித்து நவீன் கூறியது

பட மூலாதாரம், Getty Images

தேர்தல் முடிவுகள் குறித்து புவனேஸ்வரில் செய்தியாளர்களிடம் பேசிய நவீன் பட்நாயக், “தேர்தல் தோல்வியால், வி.கே.பாண்டியன் மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன. இவை துரதிருஷ்டவசமானவை. அவர் கட்சியில் எந்தப் பதவியையும் வகிக்கவில்லை. இந்த தேர்தலில் அவர் எந்தத் தொகுதியிலும் போட்டியிடவில்லை.” என்று கூறினார்.

ஒரு நேர்மையான அதிகாரியாக வி.கே.பாண்டியன் கடந்த 10 ஆண்டுகளில் ஒடிஷாவின் வெவ்வேறு துறைகளில் சிறப்பாகப் பணியாற்றியதாகவும், அதற்காகவே அவர் நினைவுகூரப்பட வேண்டும் என்றும் நவீன் கூறினார்.

ஞாயிற்றுக்கிழமை (09.06.2024) அன்று ஒரு அறிவிப்பை வெளியிட்டிருந்தார் வி.கே.பாண்டியன், அதில், “தீவிர அரசியலில் இருந்து விலகுவது என்று தீர்மானித்துள்ளேன். இந்த பயணத்தில் யாரையும் புண்படுத்தியிருந்தால் அதற்காக மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன்.” என்று கூறியிருந்தார்.

மேலும், “தேர்தலில் எனக்கு எதிராக கடைபிடிக்கப்பட்ட பிரசார உத்தியும் பிஜு ஜனதா தளத்தின் தோல்விக்கு ஒரு காரணமாக இருந்தால் அதற்காக வருந்துகிறேன்." என்று அவர் தெரிவித்திருந்தார்.

குடிமைப் பணி அதிகாரிகள் அரசியலுக்குள் வருவதை எப்படி பார்ப்பது?

பாலச்சந்திரன்
படக்குறிப்பு, ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன்

இது தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரன், “குடிமைப் பணி அதிகாரிகள் அரசியலுக்குள் நுழைவது தவறில்லை. நடிகர்கள் அரசியலுக்குள் வருவதை இயல்பாக எடுத்துக்கொள்ளும் சமூகம், நாட்டையும் நிர்வாகத்தையும் நன்கு புரிந்துகொண்ட அதிகாரிகள் வருவதை ஏன் விமர்சிக்கிறது என புரியவில்லை” என்கிறார்.

தொடர்ந்து பேசிய அவர், “பாஜகவின் யஷ்வந்த் சின்ஹா கூட ஒரு ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி. அவர் மத்திய அமைச்சராக பணியாற்றவில்லையா? எனவே வி.கே.பாண்டியன் அரசியலுக்குள் நுழைந்ததில் எந்தத் தவறும் இல்லை” என்கிறார்.

1960ஆம் ஆண்டு ஐஏஎஸ் தேர்ச்சி பெற்று பணியில் சேர்ந்த யஷ்வந்த் சின்ஹா 1984ஆம் ஆண்டு பதவியிலிருந்து விலகி அரசியலில் நுழைந்தார். 1998 முதல் 2004 வரையிலான அடல் பிகாரி வாஜ்பேயி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அமைச்சரவையில் முதலில் நிதி அமைச்சராகவும், பின்னர் வெளியுறவுத்துறை அமைச்சராகவும் பதவி வகித்தவர் சின்ஹா.

அதற்கு முன்னதாக 1990-91ஆம் ஆண்டுகளில் சந்திரசேகர் தலைமையிலான அமைச்சரவையில் நிதியமைச்சராக இவர் பதவி வகித்துள்ளார்.

“இங்கு தவறு வி.கே.பாண்டியன் மீது அல்ல, பாஜகவின் மோசமான தேர்தல் உத்தியை மக்கள் நம்பிவிட்டார்கள்” என்கிறார் பாலச்சந்திரன்.

ஏ.எஸ்.பன்னீர் செல்வன்

பட மூலாதாரம், ASPanneerselvan/X

படக்குறிப்பு, மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்

“ஜனநாயக அமைப்பின் சிறப்பே ஒரு நாட்டின் எந்தக் குடிமகனும் அரசியலுக்குள் நுழைந்து, மக்களுக்காக பணியாற்றலாம் என்பது தான். அதேபோல பாண்டியன் தமிழ்நாட்டுக்காரர் என்ற பாஜகவின் வாதமும் அர்த்தமற்றது” என்கிறார் மூத்த பத்திரிகையாளர் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

தொடர்ந்து பேசிய அவர், “குடிமைப் பணி அதிகாரிகள் பலரும் இந்திய அரசியலில் நுழைந்துள்ளார்கள். இந்தியாவின் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் ஒரு ஐஎஃப்எஸ் அதிகாரி தானே. அவரும் பாஜகவில் தானே இருக்கிறார்.

அது போல, மோதி குஜராத்தில் இருந்து வந்து வாரணாசியில் தேர்தலில் நிற்கலாம், ஆனால் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர் ஒடிஷா அரசியலில் பங்கெடுக்கக் கூடாதா?” என கேள்வி எழுப்புகிறார் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

‘ஒரே இந்தியா, ஒரே தேர்தல்’, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் செங்கோல் என பேசும் பாஜக இது போல பிரிவினைவாதம் பேசி பிரசாரம் செய்தது மிகவும் மோசமான செயல் என்று விமர்சிக்கிறார் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

இது வி.கே.பாண்டியன் மீதான போர் இல்லையென்றும், அவர் கொண்டு வந்த நலத்திட்டங்கள் மற்றும் பி ஜனதா தளம் மீதான போர் என்கிறார்.

“பெரும்பாலும் தேர்தல் பிரசாரங்களில் தனிமனித தாக்குதல் வேலை செய்யும், எனவே தான் பாஜக அதை கையில் எடுத்தது. இதற்கு தொடக்கத்திலேயே பிஜூ ஜனதா தளம் மற்றும் பாண்டியன் பதில் அளித்திருக்க வேண்டும், அவர்கள் அதைச் செய்யவில்லை” என்கிறார் ஏ.எஸ்.பன்னீர்செல்வன்.

வி.கே.பாண்டியன் எடுத்த முடிவு சரியா?

பிஜு ஜனதா தளம் மட்டுமல்லாது, மத்தியில் பாஜக கொண்டு வந்த திட்டங்களுக்கு எந்த எதிர்ப்பும் தெரிவிக்காமல், நிபந்தனையற்ற ஆதரவு அளித்த மாநில கட்சிகள் பலவும் தோல்வியைத் தான் சந்தித்துள்ளன என்கிறார் ஏ.எஸ்.பன்னீர் செல்வன்.

“ஆந்திராவில் ஓய்எஸ்ஆர் கட்சி, தமிழ்நாட்டில் அதிமுக, மற்றும் ஓபிஎஸ் அணி என பாஜக தெளிவாக திட்டமிட்டு தான் இந்தக் கட்சிகளை கலைத்தது. அப்படித்தான் பிஜு ஜனதா தளம் மீதும் அது குறிவைத்தது. 24 ஆண்டுகள் ஆட்சி செய்த கட்சி என்பதால், ஒடிஷா மக்களுக்கும் ஒருவித சலிப்பு இருந்தது.

இவை தானே காரணம் தவிர, வி.கே.பாண்டியன் அல்ல. அவரைப் போன்ற ஒரு நேர்மையான அதிகாரியை வைத்து தேவையில்லாத சர்ச்சைகளை உருவாக்கிவிட்டார்கள்" என்று கூறினார் அவர்.

வி.கே.பாண்டியனின் அரசியல் எதிர்காலம் குறித்துப் பேசிய ஏ.எஸ்.பன்னீர்செல்வன், அவர் எடுத்துள்ள முடிவு சரியானது என்கிறார்.

“அவர் அரசியலில் இருந்து விலகுவதாக அறிவித்துவிட்டதால், இனியும் ‘ஒடிஷா தமிழர் கையில்’ என்ற வாதத்தை பாஜக முன்வைக்க முடியாது. அடுத்த 5 ஆண்டுகளில் பாஜக ஒடிஷாவில் என்ன செய்யப் போகிறது என்பது மட்டுமே அடுத்த தேர்தலில் அவர்களது நிலையை தீர்மானிக்கும்” என்கிறார்.

பாண்டியனின் முடிவு

பட மூலாதாரம், ANI

ஒடிஷாவில் பணியாற்றிய அனுபவம் கொண்ட ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பாலச்சந்திரனும் இதையே கூறுகிறார்.

“பாண்டியனுக்கும் நவீனுக்கும் ஒரு நல்ல புரிதல் இருந்தது. ஒடிஷாவில் தொழிலாளர்களுக்கு நேரடியாக பணத்தை வங்கிக் கணக்கில் செலுத்தும் நடைமுறையை முதலில் தொடங்கி வைத்தது பாண்டியன் தான்.

இவ்வளவு திறமையான அதிகாரி பிஜு ஜனதா தளத்திற்கு வந்தால், ஆட்சி சிறப்பாக இருக்கும் என்பதால் தான் நவீன் அவரை அழைத்தார். ஆனால் பாஜகவின் அரசியல் உத்தி அவரை இந்த முடிவு எடுக்க வைத்துவிட்டது” என்கிறார்.

மேலும், “கண்டிப்பாக தன்னால் இதற்கு மேலும் நவீனுக்கு எந்தப் பிரச்னையும் வரக்கூடாது என்பதால் தான் இந்த முடிவை அவர் எடுத்திருப்பார். இப்படி நடப்பதால் தான் நேர்மையான அதிகாரிகள் அரசியலுக்கு வர தயங்குகிறார்கள்” என்கிறார் பாலச்சந்திரன்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)