தமிழ்நாடு: நல வாரியங்களில் பல லட்சம் தொழிலாளர்களின் ஆவணங்கள் மாயம் - என்ன பிரச்னை?

லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஆவணங்கள் காணவில்லை

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், சாரதா வி
    • பதவி, பிபிசி தமிழ்

தமிழ்நாட்டில் பல்வேறு நலவாரியங்களில் பதிவு செய்திருந்த லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஆவணங்கள் ஆன்லைன் பதிவேடுகளிலிருந்து காணாமல் போயுள்ளன.

இதனை பிபிசி தமிழிடம் உறுதி செய்த தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வி கணேசன், தரவுகளை நிர்வகித்து வந்த தனியார் நிறுவனம் ஆவணங்கள் அழிந்துவிட்டதாக கூறுவதாகவும், இதனால் தொழிலாளர்களுக்கு கிடைக்க வேண்டிய பணப்பயன்கள் எதுவும் நிறுத்தப்படாது என்றும் தெரிவித்தார். ஆனால் பணப்பயன்கள் பெறுவதில் தாமதம் ஏற்படுவதாக தொழிற்சங்கங்கள் குற்றம் சாட்டுகின்றன. என்ன நடக்கிறது?

பிபிசி தமிழ், வாட்ஸ்ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

தொழிலாளர்களின் ஆவணங்கள் காணவில்லை

தமிழ்நாட்டில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கான 18 நல வாரியங்கள் உள்ளன. வாரிய உறுப்பினராக பதிவு செய்துள்ள தொழிலாளர்களுக்கு, திருமண உதவி, மகப்பேறு உதவி, பிள்ளைகளுக்கான கல்வி உதவி, ஈமச் சடங்கு நிதி, ஓய்வூதியம் என பல்வேறு பணப் பயன்களை பெறலாம்.

கட்டுமானத் தொழிலாளர்கள் நலவாரியம், ஓட்டுநர்கள் நல வாரியம், தையல் தொழிலாளர்கள் நல வாரியம் என அனைத்து வாரியங்களும் இந்த பணப் பயன்களை உறுப்பினர்களுக்கு வழங்கி வருகின்றன. இதற்கான நிதி, செஸ் வரி, அரசு நிதி ஒதுக்கீடு மூலம் நல வாரியங்களுக்கு வழங்கப்படுகிறது. கொரோனா பெருந்தொற்று காலத்துக்கு பிறகு, நல வாரியத்தில் பதிவு செய்வது, பணப்பயன்களை பெறுவது ஆகிய நடவடிக்கைகள் ஆன்லைன் மூலம் செய்யப்படுகின்றன.

இந்நிலையில், இந்த வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் புகைப்படம், கையொப்பம், மற்றும் ரேஷன் அட்டை, ஆதார் உள்ளிட்ட ஆவணங்கள் நல வாரிய இணையதளத்தில் காணவில்லை.

'இறந்தவர் எப்படி புதிதாக விண்ணப்பிக்க முடியும்?'

சென்னையில் உள்ள ஆட்டோ ஓட்டுநர் பாலசுப்ரமணியன், “ஓட்டுநர்கள் நல வாரிய உறுப்பினரான எனது நண்பர் ஒருவர் சில மாதங்களுக்கு முன் இறந்துவிட்டார். அவரது ஈமச்சடங்குக்கு ரூ.50ஆயிரம் நல வாரிய நிதியிலிருந்து பெற முடியும். ஆனால் அவரது ஆவணங்கள் அழிந்துவிட்டதால், மீண்டும் புதிதாக பதிவு செய்ய வேண்டும் என்று அதிகாரிகள் கூறினர். நான் அவரது ஆவணங்களை பதிவேற்றம் செய்யும் போதுதான், பதிவு செய்பவர் நேரடியாக அமர்ந்து லைவ் புகைப்படம் எடுத்தே விண்ணப்பத்தை சமர்ப்பிக்க முடியும் என்பது தெரிந்தது. இறந்தவர் எப்படி மீண்டும் வந்து பதிவு செய்வார்?” என்று கேட்கிறார்.

இந்திய தொழிற்சங்க மையத்தின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர், திருவேட்டை, “எங்கள் தொழிற்சங்கம் மூலம் தொழிலாளர்களுக்கு கட்டணமில்லாமல் இந்த ஆவணங்களை மீண்டும் பதிவேற்றம் செய்து தருகிறோம். ஒரு தொழிலாளி தனக்கு தேவையான பணப்பயனை பெறுவதற்கு ‘கேட்பு மனு’ சமர்ப்பிக்க வேண்டும்.

உதாரணமாக உறுப்பினரின் பிள்ளை 10ம் வகுப்பு முடித்ததற்கான உதவித்தொகையை விண்ணப்பிக்க, இதற்கு முன்பு, பள்ளியிலிருந்து போனஃபைட் சான்றிதழ் மட்டும் பதிவேற்றம் செய்தால் போதும். விண்ணப்பம் பதிவாகிவிடும். ஆனால் தரவுகள் அழிந்த பிறகு, அந்த தொழிலாளி உறுப்பினராக பதியும் போது என்னென்ன ஆவணங்கள் சமர்ப்பித்தாரோ, அவை எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக மீண்டும் பதிவேற்றம் செய்ய வேண்டும்.” என்றார்.

தொழிலாளர்கள் ஆவணங்கள் காணவில்லை

பட மூலாதாரம், திருவேட்டை

படக்குறிப்பு, திருவேட்டை, மாநிலச் செயலாளர், இந்திய தொழிற்சங்க மையம்

'ஆயிரம் ரூபாய் பெற 300 ரூபாய் செலவு செய்ய வேண்டுமா?

தையல் தொழிலாளர்கள் சம்மேளனத்தின் தலைவர் ப. சுந்தரம், “பணப்பயன்களுக்கு நல வாரிய உறுப்பினர் ஆன்லைன் மூலம் விண்ணப்பித்த பிறகு, அவரது வங்கிக் கணக்குக்கு உதவித் தொகை கிடைத்து விடும். இப்போது விண்ணப்பித்தவர்கள் தங்கள் விண்ணப்பத்தின் நிலை என்னவென்று சரிபார்க்கும் போது, விண்ணப்பத்தை மீண்டும் சமர்ப்பிக்க வேண்டும் என்று இணையதளம் கூறுகிறது. கல்வியாண்டு தொடங்கும் நேரத்தில் பலர் பிள்ளைகளின் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பித்துள்ளனர். அவர்களுக்கு கிடைக்க போகும் உதவித் தொகையே ரூ.1000 தான். அதை பெறுவதற்கு கணினி மையங்களில் மீண்டும் ரூ.300 செலவு செய்து ஆவணங்கள் பதிவேற்றம் செய்ய வேண்டிய நிலை உள்ளது” என்றார்.

ஆவணங்களை பதிவேற்றம் செய்வது தொழிலாளர்களுக்கு அவ்வளவு சுலபமானது இல்லை என்கிறார் இந்திய தொழிற்சங்க மையம் மாநில பொதுச் செயலாளர் சுகுமாறன். “ஆவணங்களை மீண்டும் பதிவு செய்ய வேண்டும் என்பதை பொதுவான அறிவிப்பாக தொழிலாளர் நலத்துறை வெளியிடவில்லை. ஒரு தொழிலாளர் ஏதேனும் தேவைக்காக, தனது தரவுகளை சரிபார்க்கும் போது தான், ஆவணங்கள் இல்லை என்பது அவருக்கு தெரிய வருகிறது. ஆவணங்களை சேகரிக்க அரசு முகாம்கள் நடத்த வேண்டும்.” என்றார்.

சென்னை புரசைவாக்கத்தில் நடைபாதையில் துணிகள் விற்பவரான 60வயது சீனிவாசன் விண்ணப்பித்து ஓராண்டு ஆகியும் தனக்கு ஓய்வூதியம் கிடைக்கவில்லை என்றார். “நான் 30 ஆண்டுகளாக பனியன், கர்ச்சீஃப் உள்ளிட்ட சிறிய துணிகள் விற்று வருகிறேன். எனது மகள் பத்தாம் வகுப்பு முடித்த பிறகு ரூ.1500 உதவித்தொகை பெற்றேன். ஓய்வூதியம் மாதம் ரூ.1000 கிடைக்கும். ஆனால் இன்னும் எனக்கு கிடைக்கவில்லை” என்றார்.

“ஓய்வூதியம் கிடைத்து வந்தவர்களுக்கு தற்போது கடந்த சில மாதங்களாக கிடைக்கவில்லை. ஒவ்வொரு ஆண்டும் ஓய்வூதியதாரர் உயிருடன் இருக்கிறார் என்று சான்று வழங்கி, இணையதளத்தில் நேரடியாக அமர்ந்து புகைப்படம் எடுத்து சமர்ப்பிக்க விண்ணப்பிக்க வேண்டும். இப்போது அது முடியவில்லை” என்கிறார் திருவேட்டை.

லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஆவணங்கள் காணவில்லை

பட மூலாதாரம், கே பாலகிருஷ்ணன், மாநிலச் செயலாளர், சி பி ஐ எம்

இது குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே பாலகிருஷ்ணன், “ மாநிலம் முழுவதும் நல வாரியங்களில் ஆன்லைன் மூலம் 74 லட்சம் தொழிலாளர்கள் பதிவு செய்திருந்தனர். இவர்களின் தரவுகளும் ஆவணங்களும் அழிந்துவிட்டதாகவும், தொழிலாளர்கள் அனைவரும் மீண்டும் ஆவணங்களை ஆன்லைனில் பதிவேற்றம் செய்திட வேண்டுமெனவும் நிர்பந்திக்கப்படுகின்றனர். அனைத்தும் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ள சூழலில் தொழிலாளர் நலத்துறையின் ஆன்லைன் பதிவு மட்டும் அழிந்து விட்டது என்று கூறுவது ஏற்புடையது அல்ல. இதனால் தொழிலாளர்கள் நடைமுறையில் எந்த பலனையும் அனுபவிக்க முடியாமல் திண்டாடிக் கொண்டிருக்கும் நிலை உள்ளது.” என்று மே 21ம் தேதி எழுதிய கடிதத்தில் கூறியிருந்தார்.

இது குறித்து பிபிசி தமிழிடம் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி வி கணேசன் பேசுகையில், “நல வாரியத்தில் 74 லட்சம் தொழிலாளர்களின் தரவுகள் அழிந்தன என்பது தவறான செய்தி. நல வாரியத்தில் பதிவு செய்துள்ளவர்கள் 43 லட்சம் பேர் தான். அவர்களின் தரவுகள் உள்ளன, பதிவேற்றம் செய்த ஆவணங்கள் மட்டுமே காணவில்லை. அதையும் நாங்கள் சொல்லவில்லை. தரவுகளை நிர்வகிக்கும் தனியார் டேட்டா மையம் கூறுகிறது. இதனால் தொழிலாளர்களுக்கான பணப்பயன்கள் எதுவும் தடைபெறவில்லை. அனைவருக்கும் வழங்கப்பட்டு வருகிறது.

புதிதாக விண்ணபிப்பவர்கள் மாவட்ட தொழிலாளர் நல உதவி ஆணையர் அலுவலகத்துக்கு சென்று நேரில் விண்ணப்பிக்கலாம். தேர்தல் நடத்தை விதிகள் காரணமாக, பணப்பயன்கள் சிலருக்கு கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இந்த புகார்கள் வந்ததால், முதல்வர் கவனத்துக்கு எடுத்து செல்லப்பட்டது. துறை செயலாளர் குமார் ஜெயந்த் ஐ ஏ எஸ், தொழிலாளர் நலத் துறை ஆணையர் அதுல் ஆனந்த் ஐ ஏ எஸ், உள்ளிட்டோர் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். தேர்தல் நடத்தை விதிகள் அமலில் இருப்பதால் நான் பங்கேற்கவில்லை” என்றார்.

லட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஆவணங்கள் காணவில்லைலட்சக்கணக்கான தொழிலாளர்களின் ஆவணங்கள் காணவில்லை

பட மூலாதாரம், X/@cvganesan1

படக்குறிப்பு, சி வி கணேசன், தொழிலாளர் நலத்துறை அமைச்சர், தமிழ்நாடு

எப்படி இந்த ஆவணங்கள் தொலைந்தன என்று அமைச்சரிடம் கேட்டபோது, “தரவுகளை பராமரிக்கும் நிறுவனம் அவை காணாமல் போனதாக கூறுகிறார்கள்” என்றார்.

அந்த நிறுவனத்திடம் இது குறித்து விளக்கம் கேட்கப்பட்டதா, அந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கப்படுமா என்று கேட்டதற்கு, “அப்படி எதுவும் இல்லை” என்றார்.

“இந்த ஆவணங்களை மீண்டும் சேகரிக்க மாவட்ட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜூன் 7ம் தேதி அனைத்து தொழிற்சங்கங்களையும் அழைத்து கூட்டம் நடத்தவுள்ளோம்” என்று அமைச்சர் மேலும் தெரிவித்தார்.