டி20 உலகக்கோப்பை: நியூசிலாந்தை 75 ரன்களில் சுருட்டி ஆப்கானிஸ்தான் வரலாற்று வெற்றி

AFG vs NZ

பட மூலாதாரம், Getty Images

    • எழுதியவர், க.போத்திராஜ்
    • பதவி, பிபிசி தமிழுக்காக

டி20 உலகக் கோப்பை தொடங்கியதிலிருந்து எதிர்பார்த்த போட்டிகளில் இருந்து எதிர்பாராத முடிவுகள் கிடைத்து வருகின்றன. கத்துக்குட்டி அணிகள் என்று கருதப்பட்ட அணிகள் முன்னாள் சாம்பியன்களை சாய்த்து வருகின்றன.

அந்த வரிசையில் இன்று நடந்த ஆட்டத்தில் வலிமையான நியூசிலாந்து அணியை மண்ணைக் கவ்வ வைத்துள்ளது ஆப்கானிஸ்தான் அணி.

கயானாவின் பிராவிடன்ஸ் நகரில் வெள்ளிக்கிழமை நடந்த டி20 உலகக் கோப்பைப் போட்டியில் சி பிரிவில் 14-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை 84 ரன் வித்தியாசத்தில் தோற்கடித்தது ஆப்கானிஸ்தான் அணி.

டி20 கிரிக்கெட் வரலாற்றில் நியூசிலாந்து அணியை முதல்முறையாக ஆப்கானிஸ்தான் அணி வென்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ் ஆப்

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

நிதானமான தொடக்கம்

ஆப்கானிஸ்தான் முதலில் பேட் செய்தது. குர்பாஸ், இப்ராஹிம் ஜாத்ரன் இருவரும் நல்ல தொடக்கத்தை அளித்தனர். ஹென்றி வீசிய 2வது ஓவரில் குர்பாஸ் 3 பவுண்டரிகளை அடித்து அதிரடியாகத் தொடங்கினார். அதன் பின் இருவரும் ஓவருக்கு ஒரு பவுண்டரி வீதம் அடித்து பவர்ப்ளே முடிவில் விக்கெட் இழப்பின்றி 44 ரன்கள் சேர்த்தனர்.

நியூசிலாந்து பந்துவீ்ச்சு மிகுந்த கட்டுக்கோப்புடன் இருந்ததால் ஜாத்ரன், குர்பாஸால் நினைத்த ஷாட்களை ஆடமுடியவில்லை. இருவரையும் பிரிக்க நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் செய்த முயற்சியும் தோல்வி அடைந்தது. ஹென்றி வீசிய 5வது ஓவரில் இப்ராஹிம் அடித்த ஷாட்டை கேட்ச் பிடிக்காமல் ஆலன் தவறவிட்டார்.

ஆப்கன் பேட்டர்கள் திணறல்

6-வது ஓவரிலிருந்து 10-வது ஓவர் வரை நியூசிலாந்து பந்துவீச்சாளர்கள் சான்ட்னர், ஹென்றி, பெர்குஷன், கட்டுக்கோப்பாகப் பந்துவீசியதால் ஆப்கானிஸ்தான் ரன்ரேட் மந்தமாகவே இருந்தது. இந்த 4 ஓவர்களில் ஆப்கானிஸ்தான் அணி 11 ரன்கள் மட்டுமே சேர்க்க முடிந்தது. இதனால், ரன்ரேட் 5க்கும் கீழ் சரிந்தது.

AFG vs NZ

பட மூலாதாரம், Getty Images

அதிரடிக்கு மாறிய குர்பாஸ், இப்ராஹிம்

பிரேஸ்வெல் வீசிய 11வது ஓவரை குறிவைத்த குர்பாஸ், இப்ராஹிம் சிக்ஸர்களாக விளாசினர். குர்பாஸ் 2 சிக்ஸர்களும், ஜாத்ரன் ஒரு சிக்ஸரும் என 20 ரன்கள் சேர்த்தனர். பெர்குஷன் வீசிய 12வது ஓவரில் ஜாத்ரன் ஒரு சிக்ஸர் உள்பட 10 ரன்கள் சேர்த்தார். போல்ட் வீசிய 13-வது ஓவரில் குர்பாஸ் சிக்ஸர் அடித்து 40 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார்.

11வது ஓவரிலிருந்து 13வது ஓவர் வரை மூன்றே ஓவர்களில் 42 ரன்களை ஆப்கானிஸ்தான் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு ஜாத்ரன், குர்பாஸ் இருவரும் 100 ரன்களுக்கு மேல் சேர்த்தனர். இந்த உலகக் கோப்பைத் தொடரில் 2வது முறையாக முதல் விக்கெட்டுக்கு 100 ரன்கள் சேர்த்துள்ளனர்.

ஹென்றி வீசிய 15-வது ஓவரில் ஜாத்ரனின் ஹெல்மெட் மீது பந்து பட்டு நிலைகுலைந்ததால் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டது. அடுத்த பந்தில் இன்சைட் எட்ஜ் மூலம் போல்டாகி ஜாத்ரன் 44 ரன்களில் ஆட்டமிழந்தார். முதல் விக்கெட்டுக்கு இருவரும் 103 ரன்கள் சேர்த்தனர்.

அடுத்து ஓமர்ஜாய் களமிறங்கினார். சான்ட்னர் வீசிய 16-வது ஓவரில் ஓமர்சாய் பவுண்டரியுடன் 8 ரன்கள் சேர்த்தார். ஹென்றி வீசிய 17-வது ஓவரில் ஓமர்ஜாய் 2 சிக்ஸர்களை விளாசிய நிலையில் 22 ரன்கள் சேர்த்து விக்கெட்டை இழந்தார்.

விக்கெட்டுகள் சரிவு

அடுத்து முகமது நபி களமிறங்கி, குர்பாஸுடன் சேர்ந்தார். பெர்குஷன் வீசிய 18-வது ஓவரில் குர்பாஸ் 2 பவுண்டரிகளை விளாசினார். நபி சந்தித்த முதல் பந்திலேயே கேட்ச் கொடுத்து டக்அவுட்டில் வெளியேறினார். அதன்பின் வந்த ரஷித் கான் களத்துக்கு வந்தது முதல் அதிரடியாக பேட் செய்தார். முதல் பந்திலேயே ரஷித்கான் பவுண்டரி விளாசினார்.

மிட்ஷெல் வீசிய 19-வது ஓவரில் குர்பாஸ் ஒரு சிக்ஸரை விளாசினார். ரிஷித் கான் ஸட்ரைக்கில் இருந்த போது, மிட்ஷெல் வீசிய பந்து அவரின் ஹெல்மெட்டில் பட்டதால் அவருக்கும் முதலுதவி சிகிச்சை வழங்கப்பட்டு கன்கசன் பரிசோதனை செய்யப்பட்டது. இந்த ஓவரின் கடைசிப்பந்தில் குர்பாஸ் மீண்டும் ஒரு சிக்ஸரை விளாசி 16 ரன்கள் சேர்த்தார்.

AFG vs NZ

பட மூலாதாரம், Getty Images

3 ரன்களுக்கு 3 விக்கெட்

கடைசி ஓவரை டிரன்ட் போல்ட் வீசினார். முதல் பந்தில் ரஷித்கான் பீட்டன் ஆகவே விக்கெட் கீப்பரிடம் சென்றது. ஆனால், ரஷித்கான் ரன் ஓடுவதற்குள், குர்பாஸ் ஸ்ட்ரைக்கர் க்ரீஸுக்கு வந்தார். இதனால் ரஷித்கான் ரன் எடுக்க முயன்ற போது 6 ரன்னில் ரன்அவுட் செய்யப்பட்டார். அடுத்த பந்தில் குர்பாஸ் க்ளீன்போல்ட் ஆகி 56 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார்.

குல்புதீன் நயிப், கரீன் ஜனத் களத்தில் இருந்தனர். 5வது பந்தில் குல்புதீன் தூக்கி அடிக்க மிட்விக்கெட்டில் பிலிப்ஸ் கேட்ச் பிடித்தார். கடைசி ஓவரில் மட்டும் 3 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை ஆப்கானிஸ்தான் இழந்தது. டிரன்ட் போல்ட் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அருமையாகப் பந்துவீசினார். கடைசி 5 ஓவர்களில் மட்டும் ஆப்கானிஸ்தான் அணி 45 ரன்கள் சேர்த்து 5 விக்கெட்டுகளை இழந்தது. 20 ஓவர்கள் முடிவில் ஆப்கானிஸ்தான் 6 விக்கெட் இழப்புக்கு 159 ரன்கள் சேர்த்தது.

நியூசிலாந்து தரப்பில் போல்ட் 4 ஓவர்கள் வீசி 22 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்டுகளை சாய்த்தார். ஹென்றி இரு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

நியூசிலாந்து ஃபீல்டிங் மோசம்

நியூசிலாந்து அணி தொடக்கத்திலிருந்தே மோசமாக பீல்டிங் செய்தது. 4வது ஓவரில் பின் ஆலன் ஒரு கேட்சையும், அதன்பின் வில்லியம்ஸன் ஒரு கேட்சையும் கோட்டைவிட்டனர். இரு கேட்ச்களை தவறவிட்டதற்கு விலையாக ஆப்கானிஸ்தான் அணி முதல் விக்கெட்டுக்கு 100 ரன் சேர்த்தது. அது மட்டுமல்லாமல் குர்பாஸ், ஜாத்ரன் அடித்த பல ஷாட்களை கேட்ச் பிடிக்கவும் பெரிதாக நியூசிலாந்து வீரர்கள் பிடிக்கத் தவறிவிட்டனர்.

3 ரன்அவுட்களையும் நியூசிலாந்து வீரர்கள் கோட்டைவிட்டனர். பிரேஸ்வெல், ஹென்றி இருவரும் ரன்களை வாரி வழங்கினர்.

AFG vs NZ

பட மூலாதாரம், Getty Images

வாய்ப்பை தவறவிட்ட ஆப்கன்

குர்பாஸ், இப்ராஹிம் இருவரும் களத்தில் இருந்தவரை ரன்ரேட் நன்றாக உயர்ந்தது. இப்ராஹிம் ஆட்டமிழந்தபின், குர்பாஸுக்கு போதுமான சரியான பார்ட்னர்ஷிப் கிடைக்கவில்லை. இல்லாவிட்டால் ஆப்கானிஸ்தான் 170 ரன்கள் வரை சேர்த்திருக்க வாய்ப்பு இருந்தது.

கடைசி நேரத்தில் ரன்களைச் சேர்க்க ஆப்கானிஸ்தான் பேட்டர்கள் முயன்றும் முடியவில்லை. கடைசி ஓவரில் மட்டும் 3 விக்கெட்டுகளை ஆப்கான் இழந்தது. குர்பாஸ், ஜாத்ரன் அமைத்துக் கொடுத்த அடித்தளத்தில் அடுத்துவந்த பேட்டர்கள் பயன்படுத்தியிருந்தால் அந்த அணிக்கு பிரமாண்ட ஸ்கோர் கிடைத்திருக்கும்.

கோல்டன் விக்கெட்

160 ரன் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியது. பின் ஆலன், கான்வே ஆட்டத்தைத் தொடங்கினர். ஃபரூக்கி வீசிய முதல் ஓவர் முதல் பந்தில், பந்து லேசாக காற்றில் ஸ்விங் ஆகி, ஸ்டெம்ப்பை பிடுங்கி எறிந்தது. முதல் பந்திலேயே க்ளீன் போல்டாகி ஆலன் வெளியேறினார்.

அடுத்து வந்த வில்லிம்யஸன், கான்வேயுடன் சேர்ந்தார். 2வது ஓவரிலேயே முகமது நபி பந்துவீச அழைக்கப்பட்டார்.

ஃபரூக்கி வீசிய 3வது ஓவரில் 2வது பந்தில் கான்வே ஒரு பவுண்டரி அடித்த நிலையில் 3வது பந்தில் ஜாத்ரனிடம் கேட்ச் கொடுத்து 8 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். 18 ரன்களுக்கு நியூசிலாந்து 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அடுத்து மிட்ஷெல் களமிறங்கினார். ஆனால், இவரும் நிலைக்கவில்லை.

ஃபரூக்கி வீசிய 5-வது ஓவரில், அற்புதமான ஸ்விங் பந்தில் விக்கெட் கீப்பர் குர்பாஸிடம் கேட்ச் கொடுத்து மிட்ஷெல் 5 ரன்னில் ஆட்டமிழந்தார். பவர்பிளே ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து அணி 3 விக்கெட் இழப்புக்கு 33 ரன்கள் சேர்த்து தடுமாறியது.

நியூசிலாந்து விக்கெட்டுகள் சரிவு

ஆப்கானிஸ்தானுக்கு வரலாற்று வெற்றி! நியூசிலாந்தை வாரி சுருட்டிய பந்துவீச்சாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

7-வது ஓவரை ரஷித் கான் வீசினார். முதல் பந்திலேயே வில்லியம்ஸன் ஸ்லிப்பில் நயீப்பிடம் கேட்ச் கொடுத்து 9 ரன்னில் ஆட்டமிழந்தார். 33 ரன்களுக்கு நியூசிலாந்து 4வது விக்கெட்டையும் இழந்தது.

5-வது விக்கெட்டுக்கு பிலிப்ஸ், சாப்மேன் ஜோடி சேர்ந்தனர். இந்த ஜோடியையும் ரஷித்கான் தனது 2வது ஸ்பெல்லில் பிரித்தார். ரஷித்கான் வீசிய 9-வது ஓவரின் முதல் பந்தில் சாப்மேன் க்ளீன் போல்டாகி 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அடுத்துவந்த பிரேஸ்வெல் கால்காப்பில் வாங்கி டக்அவுட்டில் ஆட்டமிழந்தார். ரஷித் கானுக்கு அடுத்தடுத்து 2 விக்கெட்டுகள் கிடைத்தன.

நியூசிலாந்து அணி 43 ரன்களுக்கு 6 விக்கெட்டுகளை இழந்து தோல்வியில் பிடியில் இருந்தது. கிளென் பிலிப்ஸ், சான்ட்னர் களத்தில் இருந்தனர். 10-வது ஓவரே முகமது நபி வீசினார். இந்த ஓவரின் 4-வது பந்தில் ரஷித் கானிடம் கேட்ச் கொடுத்து பிலிப்ஸ் 18 ரன்களில் ஆட்டமிழந்தார். 10 ஓவர்கள் முடிவில் நியூசிலாந்து 54 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தோல்வியை நோக்கி நகர்ந்தது.

அடுத்து மாட் ஹென்றி களமிறங்கி, சான்ட்னருடன் சேர்ந்தார். 12வது ஓவரை நபி மீண்டும் வீசினார். இந்த ஓவரின் கடைசிப் பந்தில் சான்ட்னர் கிளீ்ன் போல்டாகி 4 ரன்னில் பெவிலியன் திரும்பினார். அதன்பின் ரஷித்கான் வீசிய 13-வது ஓவரில் அவரிடமே கேட்ச் கொடுத்து பெர்குஷன் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். பரூக்கி வீசிய 16-வது ஓவரில் ஹென்றி 12 ரன்னில் கரீமிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழக்க நியூசிலாந்து தோல்வி அடைந்தது.

15.2 ஓவர்களில் 75 ரன்களில் நியூசிலாந்து அணி ஆட்டமிழந்து, 84 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ஆப்கானிஸ்தான் தரப்பில் பரூக்கி 3.2 ஓவர்கள் வீசி 14 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளையும், ரஷித்கான் 4 ஓவர்கள் வீசி 17 ரன்கள் கொடுத்து 4 விக்கெட்டுகளை வீழ்த்தி நியூசிலாந்து சரிவுக்கு முக்கியக் காரணமாக அமைந்தனர்.

AFG vs NZ

பட மூலாதாரம், Getty Images

ஆப்கன் வெற்றிக்கான காரணங்கள்

ஆப்கானிஸ்தான் வெற்றிக்கு முக்கியக் காரணமாக இருந்தவர்கள் பேட்டிங்கில் தொடக்க ஆட்டக்கார்கள் குர்பாஸ்(80), ஜாத்ரன்(44), பந்துவீச்சில் ஃபரூக்கி, ரஷித் கான் ஆகியோர்தான். ஃபரூக்கி, கேப்டன் ரஷித் கான் இருவரும் சேர்ந்து நியூசிலாந்து பேட்டிங் முதுகெலும்பை உடைத்து 8 விக்கெட்டுகளை அள்ளினர். ஆப்கானிஸ்தானுக்கு வலுவான ஸ்கோர் கிடைக்கக் காரணமாக அமைந்த குர்பாஸ் ஆட்டநாயகனாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

நியூசிலாந்து அணிக்கு ஆப்கானிஸ்தான் வீரர்களின் பந்துவீச்சு சிம்மசொப்பனமாக இருந்தது. அதிலும் ஃபருக்கி புதிய பந்தில் இரு போட்டிகளிலும் பிரமாதமாகப் பந்துவீசியுள்ளார். இந்த ஆட்டத்தில் முதல் ஓவர், முதல் பந்தில் பின் ஆலனை போல்ட் செய்து ஸ்டெம்ப்பை பறக்கவிட்டார் ஃபருக்கி. ஆலனை ஏமாற்றி, லேசாக ஸ்விங் ஆன பந்து ஸ்டெம்ப்பை பதம் பார்த்தது ஃபரூக்கியின் சிறந்த பந்துவீச்சுக்கு உதாரணமாகும்.

இந்த அதிர்ச்சியில் இருந்து நியூசிலாந்து அணி கடைசிவரை மீளவில்லை. சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்தது. பவர்ப்ளே ஓவருக்குள் நியூசிலாந்து 3 விக்கெட்டுகளை இழந்த போதே நம்பிக்கை இழந்துவிட்டது. இதைப் பயன்படுத்திய ஆப்கானிஸ்தான் தொடர்ந்து நெருக்கடியளித்து விக்கெட்டுகளைக் கைப்பற்றியது. ரஷித்கான் வீசிய 9-வது ஓவரில் தொடர்ந்து இரு விக்கெட்டுகளை நியூசிலாந்து இழந்தபோது, தோல்வி உறுதியானது. ஆப்கானிஸ்தான் அணியை குறைத்து மதிப்பிட்டிருந்தால் அது பெரிய தவறாகும்.

நியூசிலாந்து அணியைப் பொருத்தவரை இன்றைய போட்டியில் பந்துவீச்சு, ஃபீல்டிங், பேட்டிங் அனைத்திலும் சராசரிக்கும் குறைவாகவே செயல்பட்டது. 3 எளிய கேட்சுகளை கோட்டைவிட்டனர். சில ரன்அவுட்டுகளையும் தவறவிட்டனர். பந்துவீச்சிலும் போல்ட்டைத் தவிர பெரிதாக யாரும் சிறப்பாகப் பந்துவீசவில்லை.

பேட்டிங்கில், கிளென் பிலிப்ஸ்(18), ஹென்றி(12) இருவர் மட்டும்தான் இரட்டை இலக்கத்தில் ரன் சேர்த்தனர். மற்ற பேட்டர்கள் அனைவரும் ஒற்றை இலக்க ரன்னில் ஆட்டமிழந்தனர். உதிரிகள் 3வது அதிகபட்ச ஸ்கோராக 10 இருந்தது.

AFG vs NZ

பட மூலாதாரம், Getty Images

"வெற்றி, தோல்வி முக்கியம் அல்ல"

ஆப்கானிஸ்தான் கேப்டன் ரஷித் கான் கூறுகையில், “ டி20 கிரிக்கெட்டில் மிகப்பெரிய அணிக்கு எதிராக எங்களின் சிறந்த செயல்பாடாக இதைப் பார்க்கிறோம். அணியின் மகத்தான கூட்டுழைப்பு. குர்பாஸ், இப்ராஹிம் அளித்த தொடக்கம், இந்த விக்கெட்டில் எளிதானது அல்ல. விக்கெட்டை இழக்காமல் நிதானமாக ஆடி ஸ்கோரை உயர்த்தினர். 170 ரன்கள் வரை எதிர்பார்த்தோம். ஆனால் வரவில்லை.

பந்துவீச்சிலும் வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு, சரியான லென்த்தில் துல்லியமாக பந்துவீசினர். குறிப்பாக, ஃபரூக்கியின் பந்துவீச்சு அற்புதம். எங்கள் பந்துவீச்சை எதிர்கொள்ள நியூசிலாந்து பேட்டர்கள் சிரமப்பட்டனர். ஒவ்வொரு வீரரும் ஒவ்வொரு ரன்னையும் சேமிக்க ஆவேசமாக ஃபீல்டிங் செய்தனர். வெற்றி, தோல்வி என்பது என்னைப் பொருத்தவரை முக்கியமல்ல, எப்படி தயாராகிறோம், எப்படி பங்களிப்பு செய்தோம் என்பதுதான்” எனத் தெரிவித்தார்.

சி பிரிவில் ஆப்கானிஸ்தான் முதலிடம்

இந்த வெற்றியின் மூலம், ஆப்கானிஸ்தான் அணி 2 போட்டிகளில் 2 வெற்றி என 4 புள்ளிகளுடன் சி பிரிவில் முதலிடத்தில் 5.225 நிகர ரன்ரேட்டில் வலுவாக இருக்கிறது. அடுத்து ஒரு ஆட்டத்தில் ஆப்கானிஸ்தான் வென்றாலே வலுவான நிக ரன்ரேட்டால், சூப்பர்-8 சுற்றுக்கு சென்றுவிடும்.

ஆனால், நியூசிலாந்து அணி தனது முதல் ஆட்டத்தில் அடைந்த மோசமான தோல்வியால், கடைசி இடத்தில், மைனஸ் 4.200 நிகர ரன்ரேட்டுக்கு சரிந்துவிட்டது. அடுத்துவரும் 3 ஆட்டங்களிலும் மாபெரும் வெற்றி பெற்று, நிகர ரன்ரேட்டை உயர்த்தாமல் சூப்பர்-8 சுற்றுக்கு தகுதிபெறுவது கடினமாகும்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)