சீனாவில் அருவியிலும் போலியா? குழாய் மூலம் தண்ணீர் கொட்டப்படும் வீடியோவால் சர்ச்சை

பட மூலாதாரம், Douyin
சீனாவின் மிக உயரமான நீர்வீழ்ச்சி எனப் பெயர்பெற்ற யுன்டாய் மலை நீர்வீழ்ச்சியில் குழாய் மூலம் நீர் கொட்டப்படுவது போன்ற காட்சியைக் கொண்ட சமீபத்திய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
யுன்டாய் மலை நீர்வீழ்ச்சி, சீனாவின் உயரமான தடையற்ற நீர்வீழ்ச்சியாகக் கருதப்படுகிறது. ஆனால், பாறை முகப்பில் உயரத்தில் கட்டமைக்கப்பட்ட குழாயில் இருந்து அருவியைப் போல் நீர் பாய்வதைக் காட்டும் வீடியோவை சமீபத்தில் அங்கு மலையேற்றம் செய்த நபர் ஒருவர் பதிவிட்டுள்ளார்.
திங்கள் கிழமையன்று முதன்முதலில் வெளியிடப்பட்ட இந்தக் காணொளியை 70,000 க்கும் மேற்பட்டோர் லைக் செய்துள்ளனர்.
வறட்சிக் காலங்களிலும் பார்வையாளர்கள் தங்கள் பயணத்தைப் பயனுள்ளதாக உணரவேண்டும் என்பதற்காக இத்தகைய ‘சிறிய மேம்பாட்டை’ செய்ததாக யுன்டாய் சுற்றுலா பூங்காவை பராமரிக்கும் அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
“யுன்டாய் நீர்வீழ்ச்சி உற்பத்தியாகும் இடத்தைப் பார்ப்பதற்காக எல்லா கஷ்டங்களையும் கடந்து மலையேறிய நான் பார்த்தது இந்தக் குழாயைத்தான்,” என்ற பதிவுடன் “ஃபாரிஸ்வோவ்” என்ற பயனர் இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார்.
இதைத் தொடர்ந்து “யுன்டாய் நீர்வீழ்ச்சி உற்பத்தியாவது சில குழாய்களில்” என்ற தலைப்பு சமூக ஊடகங்கள் முழுவதும் வைரலாகத் தொடங்கியது.
இது சீன சமூக ஊடகமான வெய்போவில் 1.4 கோடிக்கும் அதிகமான பார்வைகளையும், டிக்டோக்கை போன்ற சீன ஊடகமான டூயினில் கிட்டத்தட்ட ஒரு கோடி பார்வைகளையும் பெற்றது. இந்த வைரல் காணொளி தீவிர பேசுபொருளானதன் விளைவாக உள்ளூர் அரசாங்க அதிகாரிகள் இதுகுறித்து விசாரிக்க பூங்காவிற்கு அனுப்பப்பட்டனர்.
சீன உள்நாட்டு தொலைக்காட்சி சேனலான சிசிடிவியின் கூற்றுப்படி, சுற்றுலாப் பயணிகளுக்கு உண்மையில் செய்யப்பட்டுள்ள மேம்பாடுகளை விளக்குமாறு அதிகாரிகள் பூங்கா நிர்வாகத்திடம் வலியுறுத்தினர்.

பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
நீர்வீழ்ச்சி பேசுவது போலப் பதில் கொடுத்த பூங்கா நிர்வாகம்

பட மூலாதாரம், Yuntai Mountain Net
இதைத் தொடர்ந்து, “உங்கள் அனைவரையும் இப்படியொரு முறையில் சந்திப்பேன் என்று நான் எதிர்பார்க்கவில்லை. நீங்கள் என்னைப் பார்க்க வரும்போதெல்லாம், அனைத்து பருவ காலங்களிலும் நான் மிக அழகான வடிவத்திலேயே இருப்பேன் என்ற உத்தரவாதத்தை என்னால் கொடுக்க முடியாது. ஆகவே வறண்ட காலங்களுக்காக மட்டுமே எனக்கு இந்தச் 'சிறிய ஏற்பாடு' செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் எனது நண்பர்களைச் சந்திக்க நான் எப்போதும் சிறப்பாக இருப்பேன்,” என்று நீர்வீழ்ச்சி பேசுவது போல பூங்கா நிர்வாகம் பதிவிட்டுள்ளது.
மத்திய ஹெனான் மாகாணத்தில் உள்ள யுனெஸ்கோ குளோபல் ஜியோபார்க்கின் யுன்டாய் மலை பூங்காவில், 312 மீட்டர் உயரமான இந்த யுன்டாய் நீர்வீழ்ச்சி அமைந்துள்ளது.
ஒவ்வோர் ஆண்டும் லட்சக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் அங்கு பயணம் செய்கிறார்கள். நூறு கோடி ஆண்டுகளுக்கும் முன்பு உருவான மிகவும் பழமையான ஒரு நிலவியல் அமைப்பு இது.
நீர்வீழ்ச்சியில் குழாய் மூலம் கொட்டும் தண்ணீர் ஊற்று நீர் எனவும் அது அருவியின் இயற்கை நிலப்பரப்பைச் சேதப்படுத்தாது எனவும் பூங்கா அதிகாரிகள் சிசிடிவிக்கு தெரிவித்துள்ளனர்.

பட மூலாதாரம், Douyin
பல சமூக ஊடக பயனர்கள் நிலைமையைப் புரிந்துகொள்வது போல் தோன்றியது.
“இதுவொரு நல்ல விஷயம்தான் என்று நினைக்கிறேன். இல்லையெனில் அங்கு வரும் மக்கள் எதையும் பார்க்க முடியாமல் ஏமாற்றமடைவார்கள்,” என்று வெய்போவில் உள்ள ஒரு பயனர் கருத்து தெரிவித்துள்ளார்.
அதேநேரம், இதற்கு விமர்சனங்களும் எழுகின்றன.
“இது இயற்கை ஒழுங்கை மதிக்காத செயல். சுற்றுலாப் பயணிகளை அவமதிக்கும் செயல்,” என்று ஒரு வெய்போ பயனர் விமர்சித்துள்ளார்.
“இதை எப்படி நம்பர் 1 நீர்வீழ்ச்சி என்று அழைக்க முடியும்,” என்று மற்றொரு பயனர் டூயினில் கருத்து தெரிவித்துள்ளார்.
சீனாவில் இருக்கும் பிரபலமான நீர்வீழ்ச்சிகளூக்கு “உதவி” செய்ய செயற்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது புதிதல்ல.
தென்மேற்கு குய்ஷூ மாகாணத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான ஹுவாங்குஷு நீர்வீழ்ச்சியிலும், வறண்ட காலங்களில் அதன் செயல்பாட்டைத் தக்க வைக்க 2006ஆம் ஆண்டு முதல் அருகிலுள்ள அணையிலிருந்து தண்ணீரைத் திருப்பிவிடும் திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)












