புளூடூத் ஹெட்போன் எப்போது வெடிக்கும்? வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

புளூடூத் ஹெட்போன் வெடிக்குமா? அவை வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

பேசிக் கொண்டிருக்கும் போதும் சார்ஜ் செய்யும் போதும் செல்போன் வெடித்த சம்பவங்கள் குறித்து நாம் அடிக்கடி கேட்டிருப்போம். ஆனால், புளூடூத் இயர்பாட் வெடித்து முதியவர் ஒருவர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் சம்பவம் தமிழ்நாட்டில் நிகழ்ந்திருக்கிறது.

புளூடூத் இயர்பாட், ஹெட்போன்கள் வெடிப்பதற்கான காரணங்கள் என்ன, அவை வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே உள்ள மாத்துகண்மாய் எனும் கிராமத்தைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (வயது 55). இவர் வீட்டில் படுத்திருக்கும் போது புளூடூத் இயர்பாட் மூலம் பாட்டு கேட்டு உள்ளார். திடீரென்று காதில் மாட்டியிருந்த புளூடூத் இயர்பாட் வெடித்து அவருக்கு படுகாயம் ஏற்பட்டுள்ளது.

வாட்ஸ்ஆப்

வயர் இல்லாமல் செயல்படும் இத்தகைய புளூடூத் இயர்பாட், ஹெட்போன்கள் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் என்ன, அஅவை வெடிக்காமல், நம்மை பாதுகாத்துக்கொள்ள என்னென்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்பது குறித்து, அண்ணாமலை பல்கலைக்கழக மின்னணுவியல் மற்றும் தொடர்பியல் துறை பேராசிரியர் சக்திவேல் வழங்கிய தகவல்கள் இங்கு தொகுத்தளிக்கப்பட்டுள்ளன.

“புளூடூத் ஹெட்போனில் உள்ள மின்சுற்று (circuit) வெடிப்பதற்கு பெரியளவில் வாய்ப்பில்லை, மிகவும் அரிதானதே. ரீசார்ஜ் செய்து பயன்படுத்தக்கூடிய எல்லா மின்சாதன பொருட்களிலும் லித்தியம் அயன் பேட்டரிகள் இருக்கும். அத்தகைய இரு சிறிய லித்தியம் அயன் பேட்டரிகள் மூலமாகவே புளூடூத் ஹெட்போன்கள் இயங்குகின்றன. எச்சரிக்கை உணர்வுடன் இல்லாமல் ஹெட்போன்களை பயன்படுத்தும்போது அந்த பேட்டரி வெடிக்க வாய்ப்புகள் உண்டு. நீண்ட நேரம் பயன்படுத்தும்போது பேட்டரிகள் சூடாகி ஹெட்போன் வெடிக்கலாம்” என்றார்.

புளூடூத் ஹெட்போன் வெடிக்குமா? அவை வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

ஹெட்போன் வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

இதற்கு முன்னெச்சரிக்கை வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என, சில பாதுகாப்பு வழிகளை பட்டியலிடுகிறார், பேராசிரியர் சக்திவேல்.

  • லித்தியம் அயன் பேட்டரிகள் வெப்பத்தால் அதிகம் பாதிப்படையும். எனவே, நீண்ட நேரம் பயன்படுத்தும்போது அந்த பேட்டரிகள் சூடாவதற்கு வாய்ப்புண்டு என்பதால், ஹெட்போனை நீண்ட நேரத்திற்கு பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
  • தரம் குறைந்த ஹெட்போன்களை பயன்படுத்தக் கூடாது. லித்தியம் அயன் பேட்டரிக்கான மலிவான மின்சுற்றுகள் அதில் கொடுக்கப்பட்டிருக்கும். அந்த மின்சுற்று பழுதாகியிருந்தால் அதனால் வெடிக்க வாய்ப்புண்டு. அத்தகைய தரம் குறைந்த ஹெட்போன்களை 10-15 முறை பயன்படுத்திய பின்பு அதன் மின்சுற்று பழுதாக வாய்ப்புண்டு. ஹெட்போனில் லித்தியம் அயன் பேட்டரிக்கு நேராக மின்சாரம் பாயும். அப்போது, ஹெட்போன் வெடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் அதிகம். பி.ஐ.எஸ்(BSI) தர நிர்ணய சான்று உள்ள தரமான ஹெட்போன்களையே பயன்படுத்த வேண்டும்.
  • புளூடூத் ஹெட்போன்கள் கொஞ்சம் வீங்கியிருந்தால் (bulge) உடனேயே மாற்ற வேண்டும். ஏனெனில், உள்ளே உள்ள பேட்டரி வெடிக்கும் நிலையில் இருந்தால்தான் அவ்வாறு ஹெட்போன்கள் வீங்கும். எனவே, உடனடியாக அதனை மாற்றிவிட வேண்டும்.
  • புளூடூத் ஹெட்போன்களை அதிக அழுத்தத்திற்கு உட்படுத்தக் கூடாது. அதனை மிகவும் அழுத்தினாலும் அதிலுள்ள பேட்டரிகள் நசுங்குவதற்கு வாய்ப்புண்டு. எனவே, அவற்றை பயன்படுத்தாத சமயங்களில், ஹெட்போன்களுடன் கொடுக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பான கேஸ்-களை (bluetooth case) கொண்டு மூடி பாதுகாப்பாக வைக்க வேண்டும்.
  • உங்களின் புளூடூத் ஹெட்போன்களுக்காக கொடுக்கப்பட்ட சார்ஜரையே பயன்படுத்த வேண்டும். எல்லா சார்ஜர்களும் பொருந்துகிறது என்பதால் மற்றவற்றை பயன்படுத்தக் கூடாது.
புளூடூத் ஹெட்போன் வெடிக்குமா? அவை வெடிக்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

பட மூலாதாரம், Getty Images

காதுகளுக்கு என்ன ஆபத்து?

நீண்ட நேரம் ஹெட்போன்களை பயன்படுத்தும்போது நம் காதுகளுக்கு என்ன மாதிரியான குறைபாடுகள் ஏற்படும் என்பது குறித்து சென்னையை சேர்ந்த காது, மூக்கு, தொண்டை நிபுணர் மருத்துவர் அருளாளன் மதியழகனிடம் கேள்வி எழுப்பினோம்.

அதற்கு பதிலளித்த மருத்துவர் அருளாளன், “அறிவியல் ரீதியாக இவ்வளவு நேரம் தான் ஹெட்போன் பயன்படுத்த வேண்டும் என்பதற்கு எந்த அளவுகோலும் இல்லை. நீங்கள் அதை பயன்படுத்தும்போது காதுகளில் வலியோ அல்லது எரிச்சலோ ஏற்படுகிறது என்றால் அதைப் பொருத்து நாமே அதன் பயன்பாட்டை கட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்." என்கிறார்.

மேலும், "பணியிடங்கள், பொது இடங்களில் ஏற்படும் ஒலியளவுக்குத்தான் கட்டுப்பாடுகள் உண்டு. தனிநபர் பயன்பாட்டு சாதனங்களுக்கு அப்படி விதிமுறைகளை வரையறுக்க முடியாது. நீண்ட காலத்திற்கு அதிக ஒலிச் செறிவு கொண்ட சத்தத்தைக் கேட்டால், ‘சத்தத்தால் ஏற்படும் காது கேளாமை’ (sound induced hearing loss) ஏற்பட வாய்ப்புள்ளது” என்கிறார் அவர்.

பாடல்களை கேட்பது மட்டும் காதுகளின் அம்சம் அல்ல எனக்கூறும் அவர், சூழலில் நிலவும் சத்தங்களை கேட்டு நம்மை காத்துக் கொள்வதுதான் காதுகளின் தலையாய பணி என்கிறார்.

“எந்தளவுக்கு அதிகமாக ஹெட்போன்கள் பயன்படுத்துகிறோமோ அந்தளவுக்கு நம் காதுகளின் நரம்புகள் பாதிக்கப்படும் வாய்ப்புகள் அதிகம். என்ன வகையான இசையை கேட்கிறோம் என்பதும் இதில் முக்கியம். ராக் பேண்ட் போன்ற சத்தமான இசையா அல்லது மெல்லிசை கேட்கிறோமா என்பதும் முக்கியம்” என்கிறார் மருத்துவர் அருளாளன்.

தொடர்ந்து நீண்ட நேரத்திற்கு ஹெட்போன்களை பயன்படுத்தினால் காது, கேட்கும் தன்மையை இழந்துவிடும் எனக்கூறும் அவர், இது ஒரே நாளில் நிகழாமல், படிப்படியாக நடக்கும் என்றார்.

“இயல்பாகவே 60-65 வயதில் காது நரம்புகளின் இயக்கம் குறைந்துவிடும். அது முன்கூட்டியே வந்துவிடும். ஹெட்போன் பயன்பாட்டால் உள்காது பாதிக்கப்படும். உள்காதுகளில் பிரச்னை ஏற்பட்டால் அதனை சரிசெய்யவே முடியாது. ஏனெனில், அப்பகுதி மூளையுடன் நேரடி தொடர்பில் உள்ளது. அதன்பின், காது கேட்கும் கருவிதான் (hearing aid) பயன்படுத்த வேண்டும்” என்றார்.

(சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) மற்றும் யூட்யூப் பக்கங்கள் மூலம் எங்களுடன் இணைந்திருங்கள்.)